You don't have javascript enabled
ComedyMonisha NovelsRomance

Virus Attack- 8

காதல் அட்டாக்-8

எதிர்முனையில் நாயகி அடித்துக்கொண்டிருந்த கூத்தில் மேனகா பதறியதைப் பார்த்து, ‘தாயே நீ முதல்ல போய் சேரு’ எனக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அவளை அங்கிருந்து அனுப்பினார் சந்திரமௌலி.

விட்டால் போதும் என்று அங்கிருந்து தெறித்து ஓடி வந்தவள், இல்லையில்லை அவர்கள் அனுப்பிய காரில் வந்தவள் பதட்டத்துடனே திறந்தே கிடந்த அவளுடைய வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் எதிர்பார்த்து வந்த அளவுக்கு அதிக சேதாரம் இல்லாமல், ஒரு சில கண்ணாடி குடுவைகளை மட்டும் சிதற அடித்திருந்தவள், அரள மிரள, திரு திருவென விழித்துக்கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருந்தாள் தொல்லைநாயகி.

அங்கே இங்கே நகர விடாமல் அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டு ஒய்யாரமாகப் படுத்திருந்தது ஒரு வெள்ளை எலி.

“ஹேய் மில்லி!” என அவள் அதை அழைக்க, சாவகாசமாக அவளைத் திரும்பிப் பார்த்த அந்த மில்லி எலி, மறுபடியும் நாயகியை முறைக்கும் பணியை செவ்வனே செய்தது.

மில்லியாவது போனால் போகிறதென்று  அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்தது. ஆனால், “நாயகி நீ எழுந்து வா; அது உன்னை ஒண்ணும் செய்யாது” என அவள் சொன்னதை கூட காதில் வாங்காமல் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், சிலைபோல அசையாமல் உட்கார்ந்திருந்தாள் நாயகி.

அப்பொழுதுதான் ஒன்றை உணர்ந்தாள் மேனகா.

அதாவது அந்த எலியாகட்டும் தொல்லை நாயகியாகட்டும் இருவருமே ஒரு வித மந்த நிலையில் தான் இருந்தனர்.

கீச் கீச்சென்று சத்தம்போட்டுக்கொண்டே இருக்கும் மில்லியைக் கூட ஒரு பங்கு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அந்த அளவுக்கு நல்லவளெல்லாம் இல்லை நாயகி.

அவள் சும்மா இருத்தலும் கூட அவள் வாய் கொஞ்சம் கூட சும்மாவே இருக்காது.

இந்த சில நிமிடங்களுக்குள் அவள் குறைத்து முந்நூறு வார்த்தைகளையாவது தெறிக்கவிட்டிருப்பாள்.

அவளுடைய இந்த மௌனம் மேனகாவுக்குக் கிலியைக் கொடுக்க, உடைந்து சிதறிக்கிடந்த குடுவைகளை அவள் ஆராய, கடந்த சில நாட்களாக விஸ்வாவுக்காக அவள் கண்டுபிடித்து வைத்திருக்கும் அந்த ரசாயன திரவங்களை நிரப்பி தேதிவாரியாக ஒரே ட்ரேவில் அவள் அடுக்கிவைத்திருந்த குடுவைகள்தான் அவை.

அத்தனை ரசாயனமும் ஒன்றுடன் ஒன்று கலந்து மொத்தமாக ஆவியாகி, அதை நாயகி குறைவைக்காமல் சுவாசித்திருப்பது புரிந்துபோனது அவளுக்கு.

அந்த ரசாயனத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்களை ஈர்க்கும் அந்த எதிர் திரவம் அந்த எலிக்குத் தேவையான அளவு மட்டுமே அவள் தயார் செய்துவைத்திருக்க, அதுவும் கீழே உடைந்து நொறுங்கியிருக்க, அதையும் அவர்கள் இரண்டு பேரும் சுவாசித்திருக்கவேதான் இந்த பிரமை பிடித்த நிலையிருந்தனர் நாயகி மில்லி இருவரும்.

 இதுவும் கூட ஒரு தற்காலிக நிலைதான். அவர்கள் இருவரும் தானாகவே சரியானால் உண்டு. உடனடியாக அவர்களைப் பழைய நிலைக்குத் திருப்பும் முயற்சி தேவையற்ற ஒன்று.

எனவே இப்படியே இவர்கள் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் எனப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அவர்களை அப்படியே விட்டுவிட்டாள் மேனகா.

மில்லியை தூக்கிவந்து அதன் கூண்டுக்குள் போட்டுப் பூட்டியவள், அது கண்களை உருட்டி அவளை ஒரு பரிதாப பார்வை பார்க்கவும் அதற்குப் பசி என்பதை உணர்ந்து, கேரட், கோஸ் மற்றும் குடைமிளகாயை நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் கூண்டுக்குள் வைத்தாள்.

அடுத்த நொடி சத்தம் எழுப்பாமல் அது தன் விருந்தை ஒரு கை பார்க்கத் தொடங்க, அந்த கூடத்திலேயே ஓரமாக ஒரு பாயை விரித்தவள், நாயகியை இழுத்துவந்து அதில் உட்கார வைத்துவிட்டு, காலையிலேயே நாயகி செய்துவைத்திருந்த உணவைத் தட்டில் போட்டு அவளிடம் நீட்டினாள்.

அவளும் வஞ்சனையின்றி அதைச் சாப்பிட்டு முடிக்க, “எனக்கு வேலை செய்ய உன்னை வெச்சிருந்தா; தேவையில்லாததையெல்லாம் செஞ்சு வெச்சு என்னை உனக்கு வேலை செய்ய வெக்கற; தெளிஞ்சு வா; அப்பறம் இருக்கு உனக்கு” எனக் கடுப்புடன் நாயகியைத் திட்டிக்கொண்டே அவள் சாப்பிடத் தட்டை கொண்டுபோய் சுத்தம் செய்துவிட்டு வந்தாள் மேனகா.

அதற்குள் அந்த பாயிலேயே நன்றாகக் காலை நீட்டிப் படுத்து உறங்கியும் போயிருந்தாள் நாயகி.

ஒரு பக்கம் கோபம் வந்தாலும், ‘வாலன்டியரா வந்து இந்த கெமிக்கலை தன் மேல இவ டெஸ்ட் பண்ணிட்டு இருக்கா! நீ இவளுக்கு தேங்க்ஸ்தான் சொல்லணும் மேனகா! கூல்’ என அவளது மனம் அவளைச் சமாதானப்படுத்தக் கொஞ்சம் தணிந்தாள் அவள்.

அப்படியே கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் முடிய, மில்லி இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது.

ஆனால் நாயகிக்குதான் மேலும் ஒரு நாள் தேவைப்பட்டது.

அதாவது மொத்தமாக மூன்று நாட்கள் முடித்த பிறகு, அடுத்த நாள் காலை கண்விழிக்கும்போது இயல்பு நிலைக்குத் திருப்பியிருந்தாள் நாயகி.

அவளுக்குப் பிடிக்காத கலவையான ரசாயன வாசம் நாசியை தாக்க, காலை சீக்கிரமாகக் கண் விழித்தவள், தான் மேனகாவின் வீட்டிலிருப்பதை உணர்ந்து, “மேனகாம்மா” என அந்த வீடே அதிரும்படி அலறினாள் நாயகி.

விடிய விடிய ஏதோ ஆராய்ச்சி செய்து விட்டு அப்பொழுதுதான் கண்ணயர்ந்திருந்த மேனகா அவள் போட்ட அந்த கூச்சலில் பதறியடித்து எழுந்து வந்தாள்.

மேனகாவை கண்ட நொடி என்ன நடந்தது என்பதே நினைவில் இல்லாமல் தானாக ஒன்றை நினைத்துக்கொண்டு, ‘இன்னாம்மா… நான் எப்புடி இங்க தூங்கினேன்?

என்ன வூட்டுக்கு போக உடாம எதுக்குமே என்னய புடிச்சி வெச்ச!

கலீல பொளுது விடியாங்காட்டியும்  இந்த கன்றாவி புடிச்ச நாத்தத்துல வவுத்த பொரட்டிகினு வருது” என அவள் எண்ணையில் போட்ட கடுகாக பொரிந்துதள்ளி துள்ளி குதிக்க, அவளுடைய இந்த கூச்சல் எரிச்சலை மூட்டினாலும் அவள் தெளிந்ததில் ஒரு வெற்றி களிப்பு உண்டானது  மேனகாவுக்கு.

இந்த கலவையான திரவம் மனிதர்களிடம் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு  வேலை செய்கிறது என்பது புரிந்தது மேனகாவுக்கு.

ஆகவே அவள் முன்னம் கண்டு பிடித்து வைத்திருந்த மூன்று ஃபார்முலாவையும் ஒன்றிணைத்து அதை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி ஒரு புதிய திரவத்தைக் கண்டுபிடித்திருந்தாள் அவள்.

இந்த முறை அவளுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது.

இதை மில்லியை வைத்து சோதனை செய்வதை விட நாயகியை வைத்துச் சோதித்துப் பார்த்தால் என்ன என்று எண்ணினாள் மேனகா.

எனவே நாயகியின் கூச்சலை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், “இதோ பாரு நாயகி; நீ சும்மா இல்லாம எலியை திறந்து விட்டுட்டு என்னோட லேப் பீக்கர்ஸ அஞ்சை உடைச்சு வெச்சிருக்க.

அதோட இல்லாம நான் கஷ்ட பட்டு கண்டுபிடுச்சு வெச்சிருந்த கெமிக்கல்ஸ் எல்லாத்தையும் கொட்டி, அதை இன்ஹேல் பண்ணிட்டு மூணு நாளா மயக்கத்தில் இருந்த.

நீ எனக்கு பண்ணி வச்சிருக்கிற நஷ்டத்தை பத்தி கூட கவலைப்படாம உன்னை உட்கார வச்சு நான் மூணு நாளா உனக்கு பணிவிடை செஞ்சிருக்கேன்.

சும்மா கத்திக்கிட்டு இருக்காம போயி வேலையப் பாரு” என்று நிதானமாகவே சொல்லி முடித்தாள் மேனகா.

“இன்னாது… மூணு நாளா நானு மயக்கத்துல கிடந்தனா?” இன்னாம்மா இப்படி சாவகாசமா சொல்ற!

ஐயோ போச்சே போச்சே!

புச்சா ரிலீஸ் ஆவுற தலீவர் படத்துக்கு டிக்கெட்டு எடுத்து வச்சிருந்தேனே!

பாக்க முடியாம போச்சே!” என அவள் பதறி அழ, “ச்சை… படம்தான. இன்னொருநாள் பார்த்தல் போச்சு!

அதுக்கு ஏன் இப்படி ஊர கூட்டற?” என்று கடுப்பானாள் மேனகா.

“கண்ட கருமத்தையும் கண்டு புடுச்சு; அதுவும் தட்னா தாராந்துபோற மாதிரி கண்ணாடி புட்டில ஊத்தி வெச்சுக்கினு; பல்லி மில்லின்னு சரக்கு பேரெல்லாம் வெச்சு எலியையும் பெருச்சாளியையும் வூட்டுக்குள்ள உட்டு; என்னை தொரத்த வெச்சு; இம்மா வேலை பார்த்துகுனு; சுலுவா கேக்கற கேள்வி!

தலீவர் படம் எப்பு டீயி எப்பு எச்சூ சீட்டுன்னா சுலுவா கடைக்குதா உனக்கு!” என ஒரே மூச்சில் சொல்லி ஒப்பாரியே வைத்துவிட்டாள் நாயகி.

பேசிய அவளுக்குக் கூட மூச்சடைக்கவில்லை ஆனால் கேட்ட மேனகாவுக்குத்தான் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.

“என்ன எப்பு டீயி எப்பு எச்சூ” என அவள் குழப்பத்துடன் புரியாமல் கேட்க, “ஆங்… அதா யாம்மா மொத நா மொத்த ச்சோவு” என அதற்கு விளக்கம் கொடுத்தாள் நாயகி.

‘ செய்யறதெல்லாம் நீ செஞ்சு வெச்சுட்டு என்னய்யா மிரட்டுற? உனக்கு இருக்கற கொழுப்புக்கு!

பாவம் ஏற்கனவே மூணு நாளா மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கியே; மறுபடியும் உன்னை வெச்சு டெஸ்ட் பண்ணணுமான்னு கொஞ்சம் யோசிச்சிட்டே இருந்தேன்; ஆனா அப்படி செஞ்சா தப்பே இல்லனு நினைக்க வெச்சிட்ட தொல்லை நாயகி! நாளைக்கு இருக்கு உனக்கு’ என மனதில் எண்ணிக்கொண்டு, அவளது அறைக்குள் நுழைத்து கதவைப் பூட்டிக்கொண்டாள் மேனகா!

அதன் பின் அவள் ஆழ்ந்த உறக்கத்து சென்றுவிட்டதால் நாயகி அவளை வசை மாறி பொழிந்துகொண்டே அனைத்து வலைகளையும் செய்து முடித்ததை அவள் அறிய வாய்ப்பில்லாமல் போனது.

மதியத்திற்கு மேல் அவள் உறக்கம் கலைந்து எழுத்து வர அவளுக்கான மதிய உணவு தயாராக இருக்க, வீட்டிற்குச் சென்றிருந்தாள் நாயகி.

எப்படியும் அன்று மாலை அவள் வரமாட்டாள் என்பது தெரிய அடுத்த கட்ட வேலைகளைத் திட்டமிடத் தொடங்கினாள் மேனகா.

*****

அடுத்த நாள் காலை வழக்கம் போல வேலைக்கு வந்தாள் நாயகி.

முந்தைய மாலை அவளுடைய தலைவர் படத்தைப் போய் பார்த்துவிட்டு வந்திருந்த உற்சாகத்திலிருந்ததால் வழக்கமான சிடுசிடுப்புடன் இல்லாமல் சிரித்த முகமாகவே அவள் வீட்டிற்குள் நுழைய, ஆச்சரியமாகிப்போனது மேனகாவுக்கு.

“என்ன நாயகி… உன் தலீவர் படத்தை போய் கண்டுக்கினு வன்ட்ட போல” என மேனகா அவளைக் கிண்டல் செய்ய, “ஐய… கலாய்க்காதம்மா அஆங்” என்றவள், “இன்னா படம் தெரிமா…ம்மா? தலீவர் இன்னாமா ரவுண்டு கட்டி அடிக்கிறாருன்ற!

ப்ச்.. இன்னிக்கில்லாம் பாத்துக்குனேகீலாம் அஆங்” என்றவள் தன் ஆயுதத்தைக் கையில் ஏந்தி வழக்கம்போல மேனகாவுக்கு நேராக அதை ஒரு ஆட்டு ஆட்டி, ஏதோ பாடலை கர்ணகடூரமாகப் பாடிக்கொண்டே கூடவே ஆடிக்கொண்டே வீட்டைப் பெருக்கத்தொடங்கினாள் நாயகி.

பின் சுத்தம் செய்வதற்காக மேனகாவின் படுக்கையறைக்குள் சென்றவள்,  அவளது ‘ட்ரெஸ்ஸிங் டேபிள்’ மேல் புதிதாக வீற்றிருந்த ஒரு ‘சென்ட் பாட்டில்’லை பார்த்துவிட்டு, “யம்மா… புச்சா ஜெண்டு வாங்கிகீரையா” என்றவாறு அதை எடுத்து தன் மீது ‘ஸ்ப்ரே’ செய்துகொள்ள, அது அவள் உடை மீது தெறிப்பதற்குப் பதிலாக நாயகியின் முகமெல்லாம் தாறுமாறாகத் தெறித்துச் சிதறியது.

எப்படியும் நாயகி இந்த செயலை செய்வாள் என எதிர்பார்த்து அப்படி தெறிக்குமாறு மேனகா அதைத் தயார் செய்து வைத்திருந்தாள் என்பதே உண்மை.

இருமலும் தும்மலும் தொண்டை கமறலுமாக, “யம்மா… மேனகாம்மா… இது என்னா இந்த ஜெண்டு புட்டி இப்படி தாறுமாறா அடிக்குது” எனச் சொல்லிக்கொண்டே சில நொடிகளுக்குள்ளாகவே, அந்த ரசாயனத்தின் ஆளுகைக்கு உட்பட்டாள் நாயகி.

அடுத்த நொடி அந்த வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் இருந்த மில்லியை நோக்கிப் போனாள் அவள்.

காரணம், அவளுக்குள் செலுத்தியிருக்கும் ரசாயனம் எத்தனை நாட்கள் வேலை செய்கிறதோ அத்தனை நாட்கள் வரை அவளை ஈர்க்கக்கூடிய ரசாயனத்தை மில்லிக்கு செலுத்தியிருந்தாள் நாயகி.

அதை உற்று நோக்கியவள் பின் மில்லியை திறந்துவிட அது போகும் இடத்திற்கெல்லாம் அதைப் பின்தொடர்ந்தாள் நாயகி.

மறுபடியும் மில்லியை பிடித்துவந்து கூண்டிற்குள் அடைந்தவள், நாயகிக்கு சிரிஞ்ச் மூலம் ஒரு ஊசியைச் செலுத்திவிட்டு,  சில நிமிடங்கள் பொறுத்திருந்தவள், “நாயகி… கிச்சன்ல போய் ஒரு க்ளாஸ் தண்ணி எடுத்துட்டு வா” என்று சொல்ல, அவள் ரசாயனத்தின் மயக்கத்தில் இருந்த அந்த நிலையிலும் மேனகா சொன்னது போல் உள்ளே சென்று தண்ணீரை கொண்டுவந்து அவளிடம் நீட்டினாள் நாயகி.

சந்தோஷ மிகுதியில் ‘சக்ஸஸ்’ எனக் குதூகலித்தாள் மேனகா.

******

கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்திருந்தது சுவாமி நிர்மலானந்தாவின் ஹைடெக் ஆஸ்ரமத்தின் சென்னை கிளை.

அதை ஒட்டி அமைந்திருந்த, கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல் அமரக்கூடிய மிகப் பிரமாண்டமான அந்த கருத்தரங்கு கூடம் சுவாமிஜியின் சொற்பொழிவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது.

அந்த அரங்கின் கடைசி மூலையில் உட்கார்ந்திருப்பவர்கள் கூட தெளிவாக அவரது உரையைக் கேட்க ஏதுவாக ஆங்கங்கே மிகப்பெரிய ஒளித்திரையுடன் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்க, அங்கே மக்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கியிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பே அந்த சொற்பொழிவிற்கான அனுமதிச் சீட்டுகள் இணைய வழியாக விற்பனை செய்யப்பட்டிருக்க, அதைச் சரி பார்த்த பின்னரே அனைவரையும் உள்ளே அனுமதித்தனர் அந்த ஆசிரமத்தின் பணியாளர்கள்.

அதன் முக்கிய நிர்வாகியான தர்மானந்தா ஸ்வாமிகள் அதாவது சுவாமிஜியின் அந்த குண்டு சிஷ்யர் தன் உடம்பை தூக்கிக்கொண்டு பரபரப்பாக அங்கேயும் இங்கேயுமாக ஓடிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அந்த ஆசிரமத்தின் உட்பகுதியில் அமைந்திருந்த சிவபெருமான் சன்னதியில் மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று எழுந்தருளியிருக்க, அந்த லிங்கத்துக்குப் பூஜைகள் செய்ய ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர்.

நடைபெறவிருக்கும் சொற்பொழிவிற்கு ஆண்கள் பெண்கள் எனப் பாகுபாடின்றி எல்லோரும் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இந்த பூஜையில் கலந்துகொள்ள ஆசிரம சிஷ்யர்களுக்கு மட்டுமே அனுமதி. அதுவும் முக்கியமான வெகு சிலருக்கு மட்டுமே.

அப்படி அனுமதிக்கப்பட்டவர்கள் அங்கே குழுமியிருக்க, அங்கே போடப்பட்டிருந்த சிம்மாசன பீடத்தில் நடுநாயகமாக வீற்றிருந்தார் நிர்மலானந்தா.

 பூஜை செய்வதற்காகக் கம்பீரத்துடனும் தேஜஸுடனும் அந்த சிவலிங்கத்தின் அருகில் வந்து நின்றான் விஸ்வா. அதாவது விஸ்வாமித்ரானந்தா!

பின் அவன் தன் கைகளில் மலர்களை எடுத்து, “ஓம் நமச்சிவாய!” என அட்சர சுத்தமாகப் பஞ்சாட்சர மந்திரத்தை ஓத, கீச்… கீச்… கீச்… என்று அங்கே ஒலித்த சத்தத்தில் அவனுடைய கவனம் சிதறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content