You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakkila vithigal AVAN-3

3

பாரதி கொஞ்சம் தாமதமாகச் சுதாரித்தாலும் உடனடியாக செயலாற்றினான். இமைக்கும் நொடிகளில் தலையை தாழ்த்தி அரிவாள் பிடித்திருந்தவனை எட்டி உதைத்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து வேகமெடுத்து ஓடத் தொடங்கினான்.

கொஞ்சம் தூரம் சென்று மூச்சு வாங்கி அவன் திரும்பிப் பார்த்த போது துரத்திக் கொண்டு ஓடி வந்த ரவுடிகள் யாரும் அவனை பின்தொடர்வில்லை என்பதை கண்டு குழப்பமடைந்தான்.  

‘எங்க போனாங்க?’ என்ற யோசனையோடு சுற்றும் முற்றும் பார்த்தவன் அருகிலிருந்த கடையில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு,

“பிள்ளையார் கோவில் முதல் தெரு… இப்படியே நேரா போய் வலது பக்கம் திரும்புன்னா வந்திடும் இல்ல?” என்று அவன் கடைக்காரரிடம் சந்தேகம் கேட்க,

“இல்ல தம்பி… இப்ப அந்த வழியை மூடிட்டாங்க… நீங்க இந்தப் பக்கமா போய் இடது பக்கம் திரும்புங்க” என்றார்.

துர்காவை பார்த்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையை தவிர அப்போதைக்கு அவனிடம் எதுவுமில்லை. அந்த கொலைகார கூட்டத்திடமிருந்து அவனை தப்பிக்க வைத்தது கூட அந்த நம்பிக்கைதான்.

ஆனாலும் தன்னை ஏன் அவர்கள் கொலை செய்ய வந்தார்கள் என்று யோசித்துக் கொண்டே நடந்தவன் சிறிது நேரத்தில் தான் தேடி வந்த விலாசத்தை அடைய, அவ்விடத்தை பார்த்த மறுகணம் அவன் அதிர்ந்தான்.

 அவன் வாழ்ந்த வீடும் இடமும் இருந்த தடமே தெரியாமல் மாறியிருந்தது. தீப்பெட்டிகள் போல வரிசையாக ஒண்டு குடித்தனங்கள் இருந்த இடத்தில் உயரமாக அந்த அடுக்கு மாடி குடியிருப்பு நின்றிருந்தது.

குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்வையிட்டவனுக்கு அந்த தெருவிலிருந்த வேறு சில வீடுகள் அவனுக்குப் பரிட்சியமானதாகத் தோன்றவே, இந்த வீடுதான் என்று ஊர்ஜிதம் செய்தான்.

“ஜெயில தியாகு மாமா பார்க்க வந்த போது… ஒரு தடவை கூட ஏன் வீட்டை இடிச்சு கட்டினதை பத்தி சொல்லவே இல்லை” என்ற யோசனையோடு அக்கட்டிடத்திற்குள் நுழைந்தான். 

தரைதளத்தில் இரண்டு வீடுகள் இருந்தன. அவற்றில் அவன் ஒரு வீட்டின் கதவை தட்ட,

“யாரு?” என்று கேட்டபடி பதின்பருவத்தில் ஒரு பெண் வந்து நின்றாள்.

சற்று நேரம் தயங்கிவிட்டு, “தியாகு மாமா… அவங்க போர்ஷன் எங்க இருக்கு?” என்றான்.

“யாரு தியாகு மாமா? உங்களுக்கு யாரு வேணும்?” என்ற அப்பெண் வினவ,

“தியாகு மாமா…. வசுமதி… ராஜா…” என்றவன் மேலும், “அப்புறம் துர்கா… துர்கா இங்கதானே இருக்கா?” அந்த கேள்வியில் பத்து வருட தவிப்பு, காதல், ஏக்கம் என்று அத்தனை உணர்வுகளும் ஒரு சேர பொங்கியது.   

ஆனால் அவன் உணர்வுகளை பற்றித் தெரியாத அப்பெண் மிகச் சாதாரணமாக, “நீங்க சொன்ன மத்த பேரெல்லாம் எனக்கு யாருன்னு தெரியல… ஆனா துர்கா எங்க அக்கா? அவங்க இங்கதான் இருக்காங்க” என்றாள்.

“அக்காவா?” என்றவன் குழம்பும் போதே,

“துர்கா அக்கா” என்று அழைத்தபடி அவள் உள்ளே செல்ல,

மற்றொரு இளம் பெண் நைட்டியோடு தோளில் மேல்துண்டை போர்த்தி கொண்டு வந்து அவன் முன்னே வந்து, “யாருங்க நீங்க… என்னங்க வேணும் உங்களுக்கு… என் பேரை சொன்னீங்களாம்” என்று கடுப்பாக கேட்டாள்.

“இல்ல… நான் சொன்ன துர்கா நீங்க இல்ல”

“இங்க வேற யாரும் துர்கா கிடையாது” என்று காட்டமாக பதிலளித்துவிட்டு அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன்னர் கதவை அறைந்து மூடிவிட்டாள்.

அந்த வார்த்தையும் சத்தமும் ஓங்கி அவன் பின் மண்டையில் அடித்தது போல தோன்றியது. அந்த அடி அவன் நம்பிக்கையின் மீது விழுந்த அடியாக இருந்தது.

அந்தச் சமயம் அடுத்த வீட்டின் கதவை திறந்து வந்த ஒரு வயதானவர், “யாருப்பா நீ?” என்று அடுத்த வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

தன்னை மெல்ல நிதானப்படுத்திக் கொண்டவன், “தியாகராஜன் குடும்பம் இங்க இல்லையா? இது அவங்க வீடு இல்லையா?” என்றவன் விசாரிக்க,

“இந்த வீட்டோட ஓனர் ஒரு மார்வாடிகாரர்பா… அதுவுமில்லாம நான் குடி வந்து எட்டு வருசம் ஆகுது… ஆனா யாரு தியாகராஜன் தெரியலயே” என்று சொல்லிவிட்டு அம்முதியவர் சென்றுவிட அவன் தலையில் இடியே விழுந்தார் போல சிலையாக நின்றுவிட்டான்.  

அவனுக்கு எதிரே இருந்த கதவுகள் சுழன்றன. அந்த கட்டிடம் சுழன்றன. உலகமே சுழன்றது.

 ‘எங்க போனாங்க எல்லோரும்… எங்க போயிருப்பாங்க? தியாகு மாமா இதை பத்தி ஏன் என்கிட்ட சொல்லல?’ தனக்குத்தானே கேட்டபடி தலையைப் பிடித்து கொண்டு அவன் நின்றிருக்க,

மீண்டும் வெளியே வந்த துர்கா என்ற பெண் அவன் அங்கேயே அசையாமல் நிற்பதைப் பார்த்துச் சீறினாள். 

“ஏங்க அறிவில்ல உங்களுக்கு… அதான் அப்படி யாரும் இல்லன்னு சொல்லிட்டோம் இல்ல… எதுக்கு என் வீட்டு வாசலில் நிற்குறீங்க… போங்க”

தலைவலித்தது அவனுக்கு. நெற்றியை தேய்த்துக் கொண்டு வெளியே வந்த போதும் அவனால் அங்கிருந்து போக முடியவில்லை.

“ஹலோ மிஸ்டர்… இப்ப போக போறீங்களா இல்லையா?” என்றவள் குரல் மீண்டும் அவன் செவியில் அறைந்தார் போல் கேட்க, வேறு வழியின்றி சாலையில் வந்து நின்றான்.

பழைய நினைவுகள் யாவும் அவன் நினைவுகளில் வரிசையாக அணிவகுத்தன.

தன் தோழர்களுடன் தெரு முனையில் கேரம் போர்ட் விளையாடிய காட்சி நிழலாடியது.

“ஒரு நாள் நானும் பாரதியும் நிச்சயமா ஐ ஏ எஸ் ஆவோம்” யசோதரன் சொல்ல,

“அட போங்க டா… ஐ ஏ எஸ் அதிகாரிங்க ஆகி என்ன கிழிக்க முடியும்… அரிசியல்வாதிதான்டா பவர்… அவனுங்க சொல்றபடிதான் எல்லாம் அரசாங்க அதிகாரியும் கேட்கணும்” என்று கருணா பதிலுரைத்தான்.

“இந்த அரசியல் பத்தி பேசாம உங்க யாராலையும் இருக்க முடியாதாடா?” என்று ஜாமால் கடுப்பானான்.

பாரதி எதிரே இருந்த சித்தி புத்தி விநாயகரின் ஆலயத்தை நோக்கினான். இன்னும் மாற்றமடையாமல் இருந்த அந்த ஆலயத்தின் அருகில் வந்து நின்றான்.

“சாமிகிட்ட நம்ம என்ன வேண்டிக்கணும்?” தன் தாயிடம் அவன் சிறு வயதில் கேட்ட போது,

“இந்த உலகத்தில இருக்க எல்லோரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோ செல்லம்” என்று அவர் பதில் கொடுத்தது அவன் நினைவுகளைத் தட்டி சென்றது.

இதுநாள் வரை அவன் கடவுளிடம் தன் அம்மா சொன்னதை தவிர வேறு எதையும் வேண்டிக் கொண்டதில்லை.

“நான் யாருக்கும் எந்த கெடுதலும் நினைச்சதே இல்லையே… எல்லோரும் நல்லா இருக்கணும்னுதானே நான் உன்கிட்ட எப்பவும் வேண்டிப்பேன்… ஏன்? ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்குது?”

அவன் மனம் வேதனையில் உழன்றது. விழிகளில் நீர் திரண்டன. தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. 

*******

முகுந்தன் தன் அலுவல்களை முடித்து அயர்வாக சோபாவில் அமர்ந்தான். அவன்தான் தீபச்சுடர் கட்சியின் இளம் சுடர்.

இருபத்து எட்டு வயதில் கல்வித் துறை அமைச்சர் பதவி பெற்றான். அரசியல் படலத்திற்குக் கொஞ்சம் அதிகம்தான் எனினும் அவன் மத்திய அமைச்சர் சேஷாத்திரியின் வாரிசு என்பதால் அதில் பெரிய ஆச்சரியமும் இல்லை. அதிசயமும் இல்லை.

வாரிசு அரசியல் என்பது தமிழ்நாட்டின் அரசியல் நாடி நரம்பு ரத்தத்தில் எல்லாம் ஊறிப் போன ஒன்று!

மகன்.. பேரன்… பேரனுக்கு பேரன் என்று குடும்ப அரசியல் செய்வது இங்கே எழுதப்படாத சட்டமும் கூட!

அதுவும் முகுந்தன் தமிழக முதலமைச்சர் அறிவழகனின் தங்கை மதியழகியின் மூத்த மகன்.

சேஷாத்திரி மதியழகிக்கு பிறந்த இரண்டு மகன்களில் மூத்தவன் முகுந்தன். இளையவன் கிருஷ்ணன் என்ற கிருஷ் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வருவதை தன்னுடைய முக்கிய வேலையாக பார்த்து வருகிறான்.

 இவர்கள் குடும்பத்தில் சிக்கலான உறவாக இன்னுமொருத்தி இருந்தாள்.

மதியழகியின் வாழ்கையில் வந்த சாபக்கேடு… சேஷாத்திரியின் தலைவலி… முகுந்த் க்ருஷின் பரம எதிரி!

அவள்தான் நந்தினி!

தற்சமயம் அந்தப் பெண் புயல் வீரியத்தோடும் வேகத்தோடும் அங்கே வந்துக் கொண்டிருந்தது.

முதலமைச்சர் அறிவழகனின் உடல் நிலை குன்றியிருக்கும் காரணத்தால் அவருடைய தொகுதி மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் சேர்த்து முகுந்தன்தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

இடைவிடாத அலைச்சல் வேலைகளால் அவன் அன்று ரொம்பவும் களைத்திருந்தான். 

சோர்வாக சோபாவில் சாய்ந்து கொண்டு, “விஷாலி” என்று தன் மனைவியை அழைத்தான். முதலில் மெதுவாகதான்  அழைத்தான். பின் அவன் கோபமாகக் கர்ஜிக்க பணியாள் ஏழுமலை அவன் முன்னே வந்து நின்றான்.

“அம்மா இன்னும் வரலைங்க ஐயா?” என்றவன் சொன்ன நொடி அவன் விழிகள் தீயாக மாறின.

‘வீட்டுக்கு கிளம்பி வான்னு நான் அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்கல இல்ல… இவ போய் அங்க உட்கார்ந்திருந்தா செத்த அவங்க அப்பன் உசுரோட வந்துடுவா போறான்’ என்று வாயிற்குள் அவன் கடுப்பாக முனகிக் கொண்டிருக்க ஏழுமலை அவனைப் புரியாமல் நோக்கினான்.

“என்ன என்னையே பார்த்துட்டு இருக்க… போய் சாப்பாடு எடுத்து வை” அவன் கத்திய கத்தலில் ஏழுமலை ஓடி விட, அப்போது சேஷாத்ரி அவன் முன்னே வந்து நின்றார்.

இயல்பாக மகனிடம் சில முக்கிய விசயங்களைப் பற்றிப் பேசியவர் இறுதியாக, “வேதநாயகம் உண்மையிலே தற்கொலைதான் பண்ணிக்கிட்டாராம்… ரிப்போர்ட் வந்திருக்கு” என்றார். முகுந்தன் முகம் கறுத்துவிட்டது. வேதநாயகம் அமைச்சர் மட்டுமல்ல. அவனுக்கு மாமனார்.

 திருமண பந்தம் என்ற பெயரில் நடந்த அரசியல் ஒப்பந்தம் விஷாலி முகுந்தனின் திருமணம்.

அவன் தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக அவருடைய பலமும் ஆதரவும் தேவையாக இருந்தது.

முகுந்தனால் தன் தந்தை சொன்னதை நம்பமுடியவில்லை. தீவிரமாக யோசித்தவன், “இல்ல ப்பா… இது அந்த நந்தினியோட வேலைதான்… அவதான் ஏதோ பண்ணி இருக்கா… நடக்கிற எல்லாத்துக்கும் பின்னாடி அவதான் இருக்கா… அவ பெருசா ஏதோ பிளான் பண்றா” என்றவன் சொல்லி முடிப்பதற்குள் பயங்கரமாக இடிமுழக்க சத்தம் கேட்டது.

அவர்கள் இருவரும் அதிர்ந்துவிட, “நந்தினி மேடம் வந்திருக்காங்க சார்” என்று பதறி துடித்து உள்ளே ஓடி வந்த காவலாளி, “வேகமாக வந்து உங்க காரை அவங்க இடிச்சு டேமாஜ் பண்ணிட்டாங்க” என்றான்.

“பார்த்தீங்களா ப்பா அவளோட திமிரை” என்றவன் பொறும,

“பொறுமையா இரு முகுந்த்… வரட்டும் பேசிக்கலாம்” என்றார். ஆனால் அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் உள்ளே நுழைந்ததும் மேசையிலிருந்து பூஜாடியை தூக்கிப் போட்டு நொறுக்கினாள்.

 “ஏய் ஏய்… என்னடி பண்ற…?” என்றவன் கத்தி முடிப்பதற்குள்ளாக அடுத்து அடுத்து பாரபட்சம் பார்க்காமல் அங்கிருந்த பொருட்களை எல்லாம் அவள் போட்டு உடைத்தாள்.

கடைசியாக ஒரு பெரிய நடராஜர் சிலையை அவள் தள்ளிவிட போகவும் முகுந்தன் பதட்டத்தோடு, “ஏய் ஏய் வேண்டாம் வேண்டாம்” என்றவன் அவளைத் தடுக்க முற்பட,

“நந்து வேண்டாம்” என்ற சேஷாத்ரியின் குரலைக் காதில் வாங்காமல் அந்த சிலையை தரையில் உருட்டினாள்.

பயங்கர சத்தத்தோடு விழுந்த அந்த சிலையைப் பார்த்தபடி  மாடியிலிருந்து இறங்கிய மதியழகி, “நந்தினி… ஈஈஈஈ” என்று உறுமினாள்.

அந்த சில கணங்கள் அந்த இடமே நிசப்தத்தை தழுவியது.

நந்தினி எகத்தாளமாக ஒரு பார்வை பார்த்து, “தோ வந்துட்டாங்க யா ராஜமாதா” என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“பைத்தியம் பிடிச்சு இருக்காடி உனக்கு? ஏன் டி இப்படியெல்லாம் பண்ற?” என்று மதியழகி சீற,

“நான் ஏன் இப்படி பண்றேன்னு உனக்கு தெரியாதா ப்ரோ? நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன்…. பாரதி விஷயத்துல தலையிடாதன்னு” என்றவள் முகுந்தனை பார்த்து கேட்ட மாத்திரத்தில்,

“தலையிட்டா என்னடி பண்ணுவ?” என்று வெடித்தான்.

“உன் எதிர்கால கனவை சிதைச்சுடுவேன்…” என்றவள் வெறியோடு எழுந்து நின்று உக்கிரமாக மிரட்ட, முகுந்தன் பேச்சற்று நின்றான். அவள் விழிகள் உஷ்ணமாக தகித்தது.

 “நந்து ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு” என்று சேஷாத்திரி அவள் தோளைத் தொட்டு சமாதானம் பேச.

“ஜஸ்ட் ஸ்டே அவே ஃப்ரம் மீ” என்று எரிப்பது போல் பார்த்து அவர் கரத்தை தட்டி விட்டாள்.

“நந்தினி நீ ஓவரா போயிட்டு இருக்க” என்று மதியழகி சீற்றமாக அறைய வரவும் அலட்சியமாக அவரை தள்ளிவிட்டு அவள் உள்ளே செல்ல, தடுமாறி விழப் போன தாயை முகுந்தன் தாங்கிக் கொண்டான்.

இவர்கள் விளையாடும் ஆபத்தான அரசியல் விளையாட்டில் பாதிக்கப்பட்டது பாரதி!

ஆனால் இந்த விளையாட்டில் தன் தலை பகடையாக உருள்கிறது என்பது அவன் அறிந்திருக்கக் கூட இல்லையென்பதுதான் பரிதாபம்!  

2 thoughts on “Vilakkila vithigal AVAN-3

  • அரசியல் & அதிகாரம் போட்டி போல நாவல் ., முன்பு விவசாயம் தற்போது அரசியல் , அதுவும் குடும்ப அரசியல் சிறப்பு எழுத்தாளர் .. Its interesting story very interesting .. !!

    Reply
  • Nice update
    Durga family enga irukanga
    Barathi viduthalaila mugundan pangu iruka
    Waitiing to read

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content