You don't have javascript enabled
Monisha NovelsRomantic thrillerThriller

Vilakilla vithigal Avan – 10

                                 10

‘நான்தான் துர்கா’ என்றவளின் வாசகம் அவன் செவிகளின் வழியே நுழைந்து உள்ளத்தைத் துளையிட்டது. அவள் விழிகளில் துளிர்த்த கண்ணீர் அவனது மனவுணர்வுகளைத் தூண்டியது. அந்த நொடி நந்தினி அச்சு அசல் துர்காவாகவே அவனுக்கு காட்சிதந்தாள்.

“துர்கா” என்று அவன் உணர்ச்சி பொங்க அழைத்த நொடியில் நந்தினி சத்தமாகச் சிரித்துவிட்டாள். பாரதியின் கற்பனைகள் யாவும் சிதில் சிதிலாக நொறுங்கிப் போனது.

துர்காவின் மரணம் அவனுக்குச் செவிவழி செய்திதான். ஆதலால் அவள் இறந்துவிட்டாள் என்பதை அவன் மூளை நம்ப மறுத்த நிலையில் அந்தச் சில நொடிகளில் நந்தினி துர்காவின் ரூபத்தில் நின்றதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

உயிருக்கு உயிராக நேசிப்பவளை மீண்டும் பார்த்துவிட மாட்டோமா என்ற அவன் மன ஏக்கத்தின் வெளிப்பாடு.

ஆனால் நந்தினி அவன் வலிகளைக் குத்திக் கிளறி வேதனையுறுவதை பார்த்து ரசித்தாள். நெருப்பிலிட்ட புழு போல அவன் உள்ளூர துடிதுடிக்க  அவளோ கொஞ்சமும் இரக்கமே இல்லாமல்,

“துர்கா… அந்த பேர்ல உனக்கு அப்படி ஒரு அட்டச்மென்டா பாரதி! அந்த பேரை கேட்டதும் அப்படியே உருகற… கரையுற? அந்தளவு லவ்வாக்கும்” என்று ஏளனமாக உதட்டைப் பிதுக்க, அவனுக்குக் கடுங்கோபம் மூண்டது.

“ஏன் இப்படி ஒரு பொய்யைச் சொன்ன?” அவன் எரிமலையாகக் குமுறினான்.

“நான்தான் துர்கான்னு சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி… எனக்கும் துர்காவுக்கும் ஏழு வித்தியாசம்… ம்ஹும் ஏழு ஒத்துமை கண்டுபிடிக்க முடியுமா?

ம்ம்ம்… சான்சே இல்ல ஒன்னு கூட கண்டுபிடிக்க முடியாது… ஆனா நான்தான் துர்கான்னு சொன்னதும் உன்னால எப்படி பாரதி நம்ப முடிஞ்சுது… காதல் என்ன? மூளையை மொத்தமா மழுங்கடிச்சிடுமா?” அவள் கேலி செய்து நகைக்க, பாரதி கொதித்து விட்டான்.

காட்டாற்று வெள்ளமாகப் பெருகிய அவன் கோபத்தில் பொறுமை தம் கரையை உடைத்துக் கொண்டது.

நந்தினி கன்னத்தில் அவன் கரம் இடியாக இறங்கியது.

அவள் அதிர்ந்து நிமிர, “என் வலியும் வேதனையும் உனக்குச் சிரிப்பா இருக்கா… இன்னொரு தடவை என்கிட்ட இப்படி விளையாடுனா… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று அழுத்தமாக எச்சரித்துவிட்டு அவன் அவளை கடந்து சென்றான்.

“பாரதி போகாதே… உனக்கு வெளிய பாதுகாப்பு இல்லடா” என்று அவள் பதறுவதை அவன் காதிலும் வாங்கவில்லை.

 அவன் வாயிலை அடைந்த போது தலையே வெடித்துவிடுமளவுக்கு ஒரு வலி!

கதவைப் பிடித்துக் கொண்டு அவன் தடுமாற அதனைக் கவனித்தவள், “என்னாச்சு பாரதி?” என்று பதட்டப்பட, அவன் அவளைப் பொருட்டாகவும் மதிக்கவில்லை. பதிலும் கூறவில்லை.

அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றுவிட்டான்.

 “தலைவலிக்குதா பாரதி?” என்று அவன் கரம் பிடித்து வினவினாள்.

“விடு எனக்கு என்ன வந்தா உனக்கு என்ன?” என்றவன் அவள் கையை தட்டிவிட்ட போதும் அவன் கோபத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவள் வேகமாக உள்ளே ஓடி சென்று மாத்திரையும் தண்ணீரும் எடுத்து வந்தாள்.

 “பாரதி இந்தா… இந்த மாத்திரையைப் போடு… சரியாகிடும்”

அவளை முறைத்துப் பார்த்துவிட்டு அவன் முன்னேறிச் செல்ல பார்க்க அவன் முன்னே வந்து வழிமறித்து நின்றாள்.

“நீ இங்கிருந்து எங்கயும் போக முடியாது பாரதி… ஒழுங்கா இந்த மாத்திரையைப் போடு” என்று அவள் அதிகாரமாக உரைக்க,

“நான் ஏன் போக முடியாது… நான் போவேன்” என்று அவனும் பிடிவாதமாக நின்றான். அதுமட்டுமல்லாது அவள் கரத்திலிருந்து மாத்திரையை அனாயாசமாக தட்டிவிட்டு அவன் வெளியேற, நந்தினி ஆவேசமாக கத்த தொடங்கினாள்.

“சரண்… வினய்” என்றவள் குரலுக்கு திடகாத்திரமாக இருவர்  பாதுகாவலர் சீருடையில் வந்து நின்றனர். அவள் ஏவலுக்குப் பணிந்து அவனைப் போக விடாமல் தடுத்து நிறுத்தனர்.

“என்னை போக விடுங்க” என்றவன் ஆக்ரோஷமாக அவர்களை உதறித் தள்ளிய போதும் ஒரு நிலைக்கு மேல் தலைவலியின் தீவிரம் அதிகரிக்க, அவர்களிடம் அவனால் போராட முடியவில்லை.

சுருக்கென்று ஊசி குத்தியது போல ஒரு வலி. அதன் பின் காட்சிகள் யாவும் மங்கி போனது. தலைவலி மட்டும் குறையவில்லை.

வலியின் வேதனை மட்டும் மிச்சம் இருந்தது. சுயநினைவை இழக்க அவன் கண்கள் சொருக தொடங்கின.

“பாரதி… ஐம் சாரி” அவள் குரல் மட்டும் தீனமாக ஒலித்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் மன்னிப்பு வேண்டுகிறாளா? ராட்சஸி!

தன் கன்னங்களைத் தீண்டிய அவளின் மிருதுவான கரத்தை அவனால் உணர முடிந்தது. அருவருப்பாக உணர்ந்தான். தன்னை விட்டு அவளை இழுத்துத் தள்ளிவிட வேண்டுமென்று தோன்றியது

உடலுக்குத்தான் மயக்கம் எல்லாம். மனதிற்கு இல்லை! மனம் விழித்திருந்தது.

கண்களைத் திறக்க முயன்றான். இமைகள் அவனுக்கு ஒத்துழைக்க மறுத்தன. ஆனாலும் பிராயத்தனபட்டு அவன் கண்களை ஒருமுறை திறக்க கண்ணீரோடு ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. 

ஆனால் அது அந்த ராட்சஸியின் உருவம் அல்லவே. அவன் காதல் தேவதையின் உருவம்.

அவன் மனதில் சஞ்சரிப்பவள். அவனின் ஒவ்வொரு செல்களிலும் கள்ளமில்லாத அவள் பிம்பங்கள். அவள் நினைவுகள்!  

அவன் மனம் நந்தினியையும் துர்காவையும் ஒப்பிட்டு பார்த்தது. 

இருவரும் எதிரெதிர் துருவங்கள்.

துர்கா மென்மையானவள். அன்பானவள். அவன் அகராதியில் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்தவள்.

 ஆரம்பக் காலத்தில் துர்கா அவனைப் புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளால் விஷத்தைக் கக்கினாலும் விரைவில் அவள் சூதுவாது தெரியாத அப்பாவி பெண் என்பதை அறிந்து கொண்டான். 

இயல்பில் அவள் பயந்த சுபாவம். உலகம் அறியா பேதை. நிச்சயம் நந்தினியோடு அவளை இணைத்து யோசிக்கக் கூட முடியாதுதான்.

ஆனாலும் என்ன காரணங்களினாலோ நந்தினியின் விழிகளில் கசிந்த கண்ணீர் துர்காவை அவனுக்கு நினைவுப்படுத்தியது. 

ஆழியின் ஆழம் போல ஒவ்வொரு பார்வையிலும் துர்கா அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்து கொண்டாள்.   

 அப்படிதான் அவளிடம் அவன் தொலைந்து போனதும்! 

பாரதி எப்போது யோசித்து பார்த்தாலும் அந்த இரவின் மங்கிய நிலவொளியில் துர்கா கண்ணீரோடு நின்றிருந்த அக்காட்சி அவன் நினைவுகளில் உயிர்த்தெழும்!

அவன் கண் முன்னே தோன்றியிருக்கும் அந்த அழகிய கனவு களைந்துவிடக் கூடாது என்று எண்ணினானோ என்னவோ? இமைக்கவும் மறந்து அப்பெண்ணோவியத்தை பார்த்திருந்தான்… அவள் கண்ணீர் தன் நெற்றிப் பொட்டில் பட்டுத் தெறிக்கவும்தான் தன் முன்னே நிற்பவள் கனவல்ல என்று உரைத்தது.

மறுகணம் அவள் மீதிருந்த கோபம் நினைவுக்கு வர, பார்வையைச் சட்டென்று வேறு புறம் திருப்பிக் கொண்டு,

“எதுக்கு இங்க நிற்குற? ஒ! உனக்கு ட்ரைன்ல குதிக்கணும் இல்ல என்று சாவகாசமாகத் தலைக்குக் கையை கொடுத்தபடி எள்ளல் தொனியில் கேட்டவன்,

“போ… இந்த டைமுக்கு ஒரு எக்ஸ்பர்ஸ் வரும்… போய் குதிச்சுடு… ஒரு எலும்பு தேறாது… அப்படியே தரையோடு தரையா ஸ்மேஷ் ஆகிடுவ என்று அவன் சொன்ன விதத்தில் அவள் தொண்டைக்கு வயிற்றுக்கும் இடையில் ஏதோ உருண்டது.

“இல்ல… நான் ஒன்னும் அதுக்காக வரல என்றவள் இறங்கிய குரலில் கூற,

“பின்ன எதுக்கு வந்த? மதியம் பேசுனதுல ஏதாச்சும் மிச்சம் மீதி வைச்சு இருக்கியா? புறம்போக்கு பன்னாடை இப்படி ஏதாவது திட்டனுமா?” என்றவன் கேட்ட தொனியில் அவள் குற்றவுணர்வோடு தலையை தாழ்த்தியபடி,

“உஹும் இல்ல என்றவள் தலையசைத்து மறுத்தாள்.

“வேற என்ன? எதுக்கு இங்க நிற்குற? என் தலையில ஏதாச்சும் கல்லை தூக்கி போட போறியா?”

“ஏன் இப்படி பேசுறீங்க? என்னை பார்த்தா அப்படியா தெரியுது?” அவள் கண்களில் நீர் வழியக் கேட்கவும்,

“அப்போ அந்த இஞ்சினயரை மூணாவது மாடியில இருந்து தள்ளி விட்டது யாரு?” என்றவன் கேள்வியாக அவளை நிமிர்ந்து பார்த்த நொடி அவள் பதறிவிட்டாள்.

“ஐயோ… சாமி சத்தியமா நான் அவனை தள்ளி விடல அவனாதான் தடுக்கிட்டு போய் விழுந்தான்”

“அப்புறம் ஏங்க மேடம் நீங்க இப்படி பயப்படுறீங்க?”

“பயமா இருக்கே… யாராச்சும் நான்தான் கொலை செஞ்சேன்னு சொல்லிட்டாங்கன்னா”

“நீ பயந்தாதான் எல்லோரும் அப்படி சொல்லுவாங்க எனக்கே நீ பயப்படுற பார்த்து உன் மேல சந்தேகம் வந்துது”

அவன் அருகே அமர்ந்த வாக்கில் கெஞ்சலாக, “நம்புங்க… நான் செய்யல என்றாள்.

“அப்போ ஏன் பயப்படுற தைரியமா இரு”

“இல்ல… அந்த மேஸ்திரி கண்டிப்பா என் பேரை சொல்லி இருப்பான்… நான் கொலை செஞ்சிட்டு தப்பிச்சு வந்துட்டேன்னு புரளியை கிளப்பி விட்டுடுவான்” என்றவள் சொல்லிவிட்டுச் சிறு பிள்ளைத்தனமாக அழ,

“அழுகையை நிறுத்து முதல என்றவன் எழுந்து அதட்ட, அப்போதும் அவள் அழுகையை நிறுத்தியபாடில்லை.

“நீயா உன் இஷ்டத்துக்கு கற்பனை செய்யாதே… உன்கிட்ட தப்பா நடந்துக்க வந்த அந்த ஆளை நீ தள்ளி விட்டு கொன்னு இருந்தா கூட தப்பு இல்லன்னுதான் நான் சொல்லுவேன்” என்றவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அவள் கண்ணீரும் உறைந்துவிட்டது.

“நீ கற்பனை பண்ணிக்கிட்ட மாதிரி எதுவும் இல்ல அந்த கேசை ஆக்ஸிடென்ட்னுதான் பதிவு பண்ணி இருக்காங்க இருந்தாலும் அவர் இறந்த அன்னைக்கு நீ மிஸ் ஆனதால போலிஸ் உன்னை பத்தி விசாரிச்சாங்க

அவன் சொன்னதைக் கேட்டு அவளை மீண்டும் பய உணர்வு தொற்றிக் கொள்ள,

“அப்போ என்னை போலிஸ் பிடிச்சிட்டு போயிடுவாங்களா?” என்று அவள் மீண்டும் சத்தமாக அழ,

“ஏ!! சீ அழுகையை நிறுத்து… நடு சாமத்துல நீ இப்படி என் பக்கத்துல உட்கார்ந்து அழறதை யாராச்சும் பார்த்தா என்னை நினைப்பாங்க என்றவன் அதட்டவும் அவள் அச்சத்தில் அழுகையை விழுங்கி கொள்ள,

“இப்பதானே சொன்னேன்… இப்படி உன் இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிக்காதேன்னு… அதுவும் நீ எந்த தப்பும் செய்யலன்னும் போது ஏன் பயப்படுற? பிரச்சனைகளைப் பார்த்துப் பயந்து ஓடுறதுனால எதுவும் மாறிடாது… அதை நாம தைரியமா எதிர்கொள்ளணும்” என்றான்.

“இல்ல… போலிஸ் என்னை பிடிச்சிடுவாங்க என்று அவள் கிளிப்பிள்ளை போலச் சொன்னதையே சொல்ல அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

“இவ்வளவு நேரம் நான் சொன்னது எதுவும் உன் காதுல ஏறவே இல்லையா?”

“இல்ல… எனக்கு பயமா இருக்கு” என்றவள் அதே பாடத்தைத் திரும்பப் திரும்ப  ஒப்புவிக்க, அவன் தலையிலடித்து கொண்டான்.

“இவ்வளவு பயப்படுறவ எதுக்கு அன்னைக்கு ட்ரைன்ல குதிக்க போறேன்னு ஓடுனே? சும்மா சீன் போட்டியா?”

“நான் ஒன்னும் சீனெல்லாம் போடல என்றவள் மீண்டும் அழுவதற்குத் தயாராக,

“ஏய் ஏய்… திரும்பவும் உன் வார்டர் பால்சை ஸ்டார்ட் பண்ணிடாதே தாயே… அம்மா எழுந்து வந்திர போறாங்க உள்ளே போய் படு… இந்த கேஸ்ல உனக்கு எந்த பிரச்சனையும் வராமநான் பார்த்துக்கிறேன்” என்று அவன் உறுதி கொடுக்க,

“நிஜமாவா?” என்றபடி அவள் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

“மேடம்… என்னை நம்புனீங்கன்னா சரி… நம்பலன்னா அப்புறம் உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு அவன் படுத்துக் கொண்டு போர்வையால் முகத்தை மூடிக் கொண்டான்.

மௌனமாக வீட்டிற்குள் வந்து படுத்துக் கொண்டவளுக்கு மனதில் ஏதேதோ யோசனைகள்!பாரதியை நம்புவதில் அவளுக்கு அப்போதும் கொஞ்சம் நெருடல் இருக்கவே செய்தது.

2 thoughts on “Vilakilla vithigal Avan – 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content