You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakilla vithigal ‘AVAN’ -12

12  

கைதேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணரான விஸ்வநாதன் தன்னுடைய காலை வேளை நடைப் பயிற்சிகளை முடித்துவிட்டு மாடியேறி தன்னறைக்கு வந்தார்.

தமிழ்நாட்டின் மிக பிரபலமான அவரின் மருத்துவமனை சென்னையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஓய்வாகப் பின்கதவினை திறந்து நிதானமாகத் தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி பழச்சாற்றைப் பருகி கொண்டிருந்தார். தொலைவிலிருந்த மாமரக்கிளையில் அவர் கண்கள் ஏதோ ஒன்றை ஆவலாகத் தேடின.

“இன்னைக்கு ஒரு வேளை லேட்டாகிடுச்சா?” தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவரின் பார்வை மீண்டும் அம்மரக்கிளைக்கு தாவியது. கடந்த இரண்டு வாரமாகப் பார்த்துப் பழக்கப்பட்ட காட்சி.

அக்கிளையின் மீது ஒரு அழகிய வெள்ளைப் புறா தினமும் அவரை பார்க்கும்.

மூன்று நாள் முன்பு கூட தோட்டக்காரனிடம் சொல்லி அந்த மரத்தின் கீழே தானியங்களையும் தண்ணீரும் வைக்கச் சொல்லியிருந்தார். ஆனால் அந்த பறவை அவற்றைச் சீண்டியதாகக் கூட தெரியவில்லை.

அந்த புறாவைப் பார்த்த அன்று அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வு நடந்தேறியதில் அதனைத் தினமும் காலை பார்ப்பதை சுபசகுனமாக எண்ணலனார்.

 இவ்வாறாக தினமும் அந்த புறாவை அவர் மனம் தேட துவங்கியது. அந்த புறாவும் அவரை ஏமாற்றாமல் தினமும் அவருக்கு தரிசனம் தந்தது. சற்றே அதீத வெண்மை நிறத்தில் பளபளத்த அப்புறாவைத் தெய்வாதீன சக்தி கொண்டதாக அவர் நம்பினார். தொடர்ந்து அக்காட்சியைப் பார்த்து வந்தவருக்கு இன்று ஏனோ அந்த புறாவைப் பார்க்க இயலாமல் மனம் சஞ்சலப்பட்டது.

சில நிமிடம் காத்திருந்தவர் பின் ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில் தூரத்திலிருந்து அந்த வெள்ளைப் புறா பறந்து வந்ததை பார்த்து இன்புற்றார்.

ஆனால் இம்முறை அது அம்மரத்தில் நிற்காமல் நேராக அவர் நின்றிருந்த பலகணி சுவற்றில் வந்து நின்றதைப் பார்த்து அவர் மனம் பரவசம் கொண்டது.  

நெருக்கத்தில் பார்க்கச் சற்றே விசித்திரமாகத் தோற்றமளித்த அப்பறவையின் விழிகளின் சிவப்பு நிறத்தைப் பார்த்து ஆச்சரியமுற்றவரின் மூளைக்கு அது ஏதோ அபாயத்தை உணர்த்தியதாகப் பின்னரே உரைத்தது.

அப்போதே அவருக்கு அது இயந்திரத்தில் புறாவை போல  வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோட்டிக் கருவியோ என்ற சந்தேகம் எழ, அச்சமயம் அந்த விசித்திர பறவை தன் காலில் பிடித்திருந்த ஏதோ ஒன்றை அவர் காலடியில் தவறவிட்டுப் பறந்து சென்றுவிட்டது. அவர் அரண்டுவிட்டார்.

பின்னரே அது ஒரு சிறிய ரக விரலி (பென் டிரைவ்) என்பது புரிந்தது. அதில் என்ன இருக்கிறது பார்ப்போமா வேண்டாமா என்று சில நொடிகள் குழம்பியவர் பின்னர் அறைக்குள் வந்து தன்னுடைய மடிக்கணினியை இயக்கி அதனை செலுத்தினார்.

நாம் செய்யும் தவறுகள் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மைத் துரத்திக் கொண்டு வரும். அவருக்குப் புறாவின் ரூபத்தில் வந்தது. அவர் இயக்கிய அந்த விரலியில் ஒளிர்ந்த காணொளிப் பதிவைப் பார்த்து அவரின் இதயத் துடிப்பு சரசரவென உயர்ந்தது. அவரும் செவிலியர் மாளவிகாவும் இருக்கும் அந்தரங்க காட்சிகளைக் கொண்ட காணொளி அது!

மகள் வயதிலான மாளவிகாவின் ஏழ்மையான குடும்பச் சூழலைப் பயன்படுத்தி தன் இச்சைக்கு அவளை இணங்க வைத்த போது இப்படியெல்லாம் நிகழும் என்று அவர் யோசிக்கத் தவறிவிட்டார். தன் மருத்துவமனையில் அவள் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து அவள் அழகில் மனம் சபலப்பட்டதில் வயது வரம்பெல்லாம் மறந்து அவளை அடைய வேண்டுமென்ற வெறியில் அவர் மூளை மழுங்கிவிட்டதென்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த டெக்னாலஜி யுகத்தில் ஒளித்து வைக்கவும் மறைத்து வைக்கவும் யாருக்கும் எந்த ரகசியமும் மிச்சம் இருப்பதில்லை. ஏதோ ஒரு கண்கள் நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன.

விஸ்வநாதன் நெற்றியில் வியர்வை சரசரவென இறங்க அந்த காணொளியை அணைத்தவர் மேலும் அந்த விரலியிலுள்ள இருந்த தகவலை ஆராய்ந்தார்.

 ‘இம்பார்டன்ட்’ என்ற இருந்த ஒலிப்பதிவை திறந்தார். ஒரு இயந்திர குரல் அவரிடம் உரையாடியது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அவரை மிரட்டியது.

அவர் செய்ய வேண்டிய பணிகளை வரிசையாக அது விவரித்ததில் இரத்தமெல்லாம் வற்றிவிட்டது போல உறை நிலை.

கடைசியாக அக்குரல், “இன்னும் முப்பத்து நொடிகளில் இந்த பென் டிரைவ வெடித்துச் சிதறிவிடும். அதன் இணைப்பைக் கழற்றி வீசிவிடவும்.” என்ற எச்சரித்துவிட்டு அணைந்தது.

டைமர் ஒன்று திரையில் வேகமாகச் சுழல தொடங்கியது.  அவர் பதறிக் கொண்டு அதனைக் கழற்றி பலகணியில் கழற்றி வீசிவிட்டார்.

காற்றிலியே அது ஒரு சிறு பட்டாசு போல வெடித்துச் சிதறியதைக் கண்டு அவர் இதய துடிப்பு எகிறியது. கிளைகளுக்கு நடுவே மறைந்து அக்காட்சியைப் படம் பிடித்துக் கொண்ட அந்தப் புறா உடனடியாக அவ்விடம் விட்டு சீறி வானில் பறந்தது.  

*********

பாரதி தலையைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தான். தலையில் ஏதோ பெரிய பாரம் ஏறியது போன்ற உணர்வு!

ஆனால் முன்பளவுக்கு தீவிரமான தலைவலியாக இல்லை. அதிக நேரம் உறக்கத்தில் ஆழ்ந்ததினால் இருக்கலாம் என்று யோசித்தவன், இல்லை அது மயக்கம் என்று தன்னை திருத்திக் கொண்டான். எல்லாம் அவளால்தான்! அந்த ராட்சஸியால்தான்!

நடந்தவை அனைத்தும் அவன் நினைவுக்கு வர எரிச்சலும் கோபமுமாக எழுந்து அமர்ந்தான்.

 எப்படியாவது இந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். முக்கியமாக அந்த ராட்சஸியை விட்டு வெகுதூரமாக! ஆனால் அவள் யார்? எதற்காக தன்னை இங்கே அடைத்து வைத்திருக்கிறாள் என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.  

அந்த அறையை அளவெடுத்தபடி யோசனையாக நடந்தவன் அறையிலிருந்த கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தான். இரண்டே நாட்களில் என்னவோ வயது ரொம்பவும் கூடிவிட்டது போலத் தோன்றியது.  

கண்களில் கருமை அடர்ந்து உடல் தளர்ந்திருக்க, மனமும் கிட்டதட்ட ஓய்ந்து போன நிலையில்தான் இருந்தது.

சிறையிலிருந்த போது கூடத் தான் இப்படி இல்லையே. காலை விடிந்ததும் தன் பணிகளைச் செய்து கொண்டு நிம்மதியாகவும் மன ஆரோக்கியத்துடனும் இருந்தான்தான்.

துர்கா இறந்துவிட்ட தகவல் அவனை முற்றிலும் ஓய்ந்து போகச் செய்ததென்றால் நந்தினி இதில் புது தலைவலியாக வந்து சேர்ந்திருந்தாள் என்று எண்ணியபடி நடந்தவனுக்கு எதேச்சையாக விலகியிருந்த ஜன்னல் திரையில் நந்தினி தோட்டத்தின் மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது.

திரைச்சீலையை நன்றாக விலக்கிவிட்டான்.

பரந்து விரிந்த அந்த தோட்டத்தின் ஒரு புறத்திலிருந்த  அழகான புறா ஒன்று பறந்து வந்து நந்தினியின் மடியில் வந்து விழுந்தது.

ஒரு வேளை அது அவளுடைய செல்ல புறாவாக இருக்கலாம். ஆனால் அந்த புறாவை பொம்மை போல அவள் கையாண்ட விதம் சற்றே விசித்திரமாகத் தோன்றியது.

அக்காட்சியை அவன் பார்த்திருக்கும் போதே அவள் சட்டென்று தலையுயர்த்தி அவன் அறையை நிமிர்ந்து பார்த்த நொடி அவன் அவசரமாக ஜன்னல் திரையை மூடிவிட்டான். அவள் நிச்சயம் சாமான்யப்பட்டவள் அல்ல என்று தோன்றியது. இவளிடம் கோபப்படுவதும் உணர்ச்சிவசப்படுவதும் பயனளிக்காது.

இவ்வாறு அவன் யோசித்த சில நிமிடத்தில், “பாரதி” என்று கதவைத் தட்டிக் கொண்டு அவள் உள்ளே நுழைய, ‘வந்துட்டா ராட்சஸி’ என்று கடுப்பாக முனகியபடி இயல்பாக இருக்க முயன்றான்.  

“குட் மார்னிங்” அவள் உற்சாகமாக புன்னகைக்க,  

“எனக்கு இங்க எதுவும் குட்டா இல்ல” அவன் எரிச்சலாக முகம் திருப்பினான்.

“எனக்கு புரியுது… நான் நேத்து அப்படி நடந்துக்கிட்டது தப்புதான்… ஆனா நீ என்னை என்ன பன்ன சொல்ற… நீதான் சொல் பேச்சை கேட்கவே மாட்டேன்னு அடம் பிடிக்குறியே”

“இல்ல… நான் தெரியாமதான் கேட்குறேன்… உன்னை இந்த மாதிரி அடைச்சு வைச்சு சொல்றதை கேளுன்னு சொன்னா கேட்பியா?” என்று அவன் சீறவும்,

“நான் எங்க உன்னை அடைச்சு வைச்சு இருக்கேன்… உனக்கு இங்க எல்லா சுதந்திரமும்… வசதியும் இருக்கு இல்ல?” என்றாள் சாதாரணமாக!

“எனக்கு இந்த வசதியும் வேண்டாம்… ஒன்னும் வேண்டாம்…  இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்… அப்போதான் எனக்கு சுதந்திரம்” என்றான்.

“புரிஞ்சிக்கோ பாரதி… நீ இங்கிருந்த போனா உன் உயிருக்கு ஆபத்து இருக்கு… அதனாலதான் நான் உன்னை இங்க பாதுக்காப்பா தங்க வைச்சு இருக்கேன்” என்றவள் சொன்னதைக் கேட்டவனுக்கு அவள் இப்போதைக்கு தன்னை வெளியே அனுப்ப மாட்டாள் என்பது புரிந்தது.

அதற்கு அவள் சொல்லும் காரணங்களை நம்புவதா வேண்டாமா என்றுதான் புரியவில்லை. மௌனமாக சில நொடிகள் அவளை துளைத்து எடுப்பது போல ஆழமாகப் பார்த்தவன் பின் மெதுவாகப் பேசத் தொடங்கினான்.  

“ஸோ… என் உயிருக்கு ஆபத்து… அதனால என்னை நீ இங்க அடைச்சு வைச்சு இருக்க… சாரி சாரி… என்னை காப்பாத்தி பாதுக்காப்பா இங்க தங்க வைச்சு இருக்க… அப்படிதானே?” என்றவன் கேட்ட மாத்திரத்தில் அவள் ஆமாமென்று தலையசைத்தாள்.

“சரி… நான் எத்தனை நாளைக்கு இங்கே தங்கனும்”

“அது…” என்று தயங்கியவள், “எனக்கு கரெக்டா தெரியாது… ஆனா கொஞ்ச நாளைக்கு” என்றவள் இழுக்கவும் சம்மதமாகத் தலையசைத்து பெருமூச்செறிந்தான்.

“பத்து வருஷ ஜெயில் வாழ்க்கை வாழ்ந்தவன் நான்… இதெல்லாம் என்ன பெரிய விஷயம்? தங்கிக்கலாம்… ஆனா இங்க நான் தங்குற வரைக்கும் மாத்திக்க டிரஸ் வேணாமா?… ஒரு வேளை ஜெயிலில கொடுக்கிற மாதிரி நீ எனக்கு ஏதாச்சும் யுனிபார்ம் வைச்சு இருந்தா… கொடுங்க மேடம் போட்டுக்கிறேன்” என்றவன் இடக்காகக் கேட்கவும்,

“என்ன பாரதி நீ? உனக்காக எவ்வளவு கலர்ஸ்ல ப்ரெண்டட் க்ளோத்ஸ் வாங்கி வைச்சு இருக்கேன்” என்றபடி அந்த அறையிலிருந்த வார்ட்ரூப் கதவைத் திறந்து அவள் காண்பிக்க, அவற்றில் அடுக்கி வைத்திருந்த உடைகளை பார்த்து ஒரு நொடி திகைத்து மீண்டவன்,

“என் சைசூக்கு கரெக்டா இருக்குமா?” என்றான்.

“பக்கவா பிட் ஆகும் பாரதி… நீ போட்டு பாரேன்”

“ஆமா… இந்த டிரஸ் எல்லாம் எப்போ வாங்குன… என்னை காப்பத்தணும்னு முடிவு பண்ண பிறகா? இல்ல என்னை கொல்லணும்னு திட்டம் போட்ட பிறகா?”

“நான் உன்னை கொலை பண்ண திட்டம் போட்டேன்னா?” என்று அவள் அதிர,

“இல்ல… யாரோ திட்டம் போட்டாங்கன்னு சொன்ன இல்ல… அவங்க திட்டம் போட்ட பிறகு வாங்கி வைச்சியான்னு கேட்டேன்” என்று அவன் தன் வாக்கியத்திற்குத் தெளிவுரை கொடுக்க அவள் பேச்சற்று நின்றுவிட்டாள். 

“சரி போகட்டும்… நீ எப்போ டிரஸ் வாங்கி இருந்தா என்ன? டிரஸ் பிரச்சனை தீர்ந்துது… ஆனா எனக்கு வேறொரு பிரச்சனையும் இருக்கு” என்றவன் அவளை கூர்ந்து பார்க்க,

“என்ன பாரதி? சொல்லு” என்றாள்.

“என் ஃப்ரண்ட் ஜமாலை நான் பார்க்கணும்… அவன் என்னை காணாம தேடிட்டு இருப்பான்”

“ஹ்ம்ம்… பார்க்கிறது கஷ்டம்… நான் வேணா லைன் போட்டு தரட்டுமா… பேசுறியா?

“இல்ல… நான் அவனை நேர்ல பார்த்துதான் பேசணும்”

சில நொடிகள் அவனை பார்த்து யோசித்துவிட்டு,

“சரி… நான் அரேஞ் பண்றேன்” என்றாள்.

“தேங்க்ஸ்” என்றவன் அவளிடம், “ஒரு மாதிரி கசகசன்னு இருக்கு… நான் குளிக்க போறேன்… நீ இங்கேயே நிற்க போறியா இல்ல” என்றவன் பார்த்த பார்வையில் வெளியேற முற்பட்டவள் மீண்டும் திரும்பி வந்து, “ஒரு நிமிஷம்” என்றவள் நேராகச் சென்று வார்ட்ருபை சிவப்பு வண்ண சட்டையையும் அதற்கு பொருத்தமான பேன்ட்டையும் எடுத்துக் கொடுத்து,

“நான் ஆசையா இதை வாங்குனேன்… உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் பாரதி… போட்டுக்குறியா?” என்று கேட்கவும் அவளை முறைத்துப் பார்த்தாலும் வேண்டா வெறுப்பாகத் தலையசைத்தான்.

அவள் முகமெல்லாம் புன்னகை பூத்தது. அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு உண்மையில் வியப்பாக இருந்தது. பாரதி இத்தனை சகஜமாக பேசியதில் ஏதோ திட்டம் இருக்க வேண்டும். ஒரு வேளை தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிப் போக எண்ணுகிறானோ?

ம்ம்ம்… அதற்கான ஒரு சிறு சந்தர்ப்பத்தைக் கூட அவனுக்கு தந்துவிட கூடாது என்று எண்ணியவள் அந்த நொடியே காவலாளிகளையும் அழைத்து எச்சரித்தும் வைத்தாள்.

அதேநேரம் மனதிற்குள் ஒரு மெல்லிய பரவச உணர்வு ஓடி மறைந்தது. பாரதி தன்னிடம் இயல்பாகப் பேசியதில் உள்ளூர ஏற்பட்ட சந்தோஷம். மனதில் அவன் என்ன எண்ணத்தோடு வேண்டுமானாலும் பேசியிருக்கட்டும். ஆனால் அவளுக்கு அது குதுகலமான அனுபவம்தான்

இயந்திரங்களோடு பழகிப் பழகி இரத்தமும் சதையும் தவிர மனித பெண்ணிற்கு உண்டான எந்தவொரு பாவமும் அவளிடம்  இல்லாமல் போனது. எனினும் அழகும் அறிவும் செறிந்த அந்த பெண்மைதான் அவளின் பலமே!

இதற்காகவே தீராத வன்மத்தோடு வேட்டையாட சில ஓநாய் கூட்டங்கள் அவளைச் சுற்றி வருவதும் உண்டு. சமயம் சந்தர்ப்பம் பார்த்து அவைகளை இவள் வேட்டையாடிவிடுவதுதான் இவளின் சூட்சமமே. ஆனால் என்றுமே சூழ்நிலைகள் ஒருவருக்கே சாதகமாக இருந்துவிடாது. என்றாவது ஒரு நாள் அவைகளின் ஏதோ ஒன்றுக்கான கோரபசிக்கு இவள் இரையாகவும் கூடும்.

ஆனால் இன்று வரை அந்தளவு திறமை வாய்ந்த புத்திசாலியான ஓநாயை இவள் சந்திக்க நேரவில்லை.

இத்தகைய ஆபத்தான அரசியல் விளையாட்டை விளையாடி விளையாடி அவள் மனம் சிதிலமடைந்த வெறும் கூடாக உணர்ச்சிகள் வற்றிய பாலைவனமாக மாறிவிட்ட நிலையில் பாரதியின் வருகை நீரூற்றாக அவளுக்குக் குளிர்ச்சி தந்தது.

 பருவ காலத்தில் ஏற்பட வேண்டிய உணர்வுகள் எல்லாம் காலம் கடந்து உண்டாகிறதே என்றவள் மனதினோரம் சலித்து பெரு மூச்செறிந்தாலும் வேண்டாமென்று அவற்றை எல்லாம் உதறித் தள்ளவும் முடியவில்லை.

கண்களோடு கண்கள் கலந்து  கையணைப்பில் கரைந்து இதழ்களின் முத்தத்தில் நனைந்து கசிந்துருகி காதல் கொண்டு அவனுடன் ஒரே ஒரு நாளாவது காதலோடு வாழமாட்டோமா? என்ற தணியாத அவள் தொலைத்த பெண்மையின் தாகங்கள் அவை!

சட்டென்று அவள் எண்ணங்களை எல்லாம் அடித்து நொறுக்கியது போல அவள் கைப்பேசி ஒலிக்க, அப்படியே நிராதரவாக தன் காதலையும் கற்பனையையும் நிறுத்திவிட்டு அன்றைய நாளின் பரபரப்பிற்குள் புகுந்தாள்.

“சொல்லு உதய்”

“ப்ரேக்கிங் நியுஸ் பார்த்தீங்களா? நீங்க சொன்ன மாதிரி வந்திருக்கா?” என்றவன் கேட்ட மறுகணம்,

“ஆமா மறந்துட்டேனே” என்று அவள் வேகமாக தன்னறையிலிருந்த ராட்சத தொலைகாட்சி திரையை ஒளிர செய்தாள்.

தீபம் செய்தி சேனல்… நொடிக்கு ஒரு தடவை பரபரப்பைக் கூட்டிய வண்ணம் திரையில் ஒளிர்ந்து மின்னியது அந்த செய்தி!  மத்திய அமைச்சர் சேஷாத்ரியின் இளைய மகன் கிருஷ்ணன் கடத்தல்.

“இந்த நியுசை பார்த்து மதியழகி கதறி துடிச்சு இருப்பா இல்ல?” என்று நந்தினி குரூரமாக எண்ணி சிரித்தாள்.

அத்தனை நேரம் காதல் செறிந்த விழிகள் நயவஞ்சகத்தில் நிறம் மாறியது. தான் நினைத்ததை வெகுவிரைவாக சாதித்துவிட போகிறோம் என்ற பேரானந்தம் அவளுக்கு!

இனிதான் ஆட்டமே ஆரம்பம். தான் நினைத்ததை நடத்தி முடித்த பின் முகுந்தன் முகம் எப்படி மாறியிருக்கும் என்று யோசிக்கும் போதே அருவியில் குளித்தது போல உற்சாகம் பொங்கியது.

அறையிலிருந்த கடிகாரத்தை பார்த்தவள் அவசரமாக தன் படுக்கைக்குக் கீழே வைத்திருந்த பழைய ரக பேசி ஒன்றை எடுத்து சில எண்களை அழுத்தினாள்.

சில பல ரகசிய உரையாடல்களோடு அவள் மேஜையிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனை ப்ளூபிரிண்டை கையிலெடுத்து அதனை பார்த்தபடியே பேசினாள்.

“பி ப்ளாக்… வழியா போனாதான் பாதுக்காப்பு… விஸ்வநாத் நம் கேட்டது செஞ்சு கொடுப்பாரு… நீங்க சரியா டைமுக்கு உள்ளே போயிடுங்க… வேலையை முடிச்சதும் கால் பண்ணுங்க” என்றவள் பேசி கொண்டிருக்கும் போதே,

“நான் உள்ளே வரலாமா?” என்று பாரதி கதவைத் தட்டிய அதேநேரம் திறந்திருந்த கதவை தள்ளிவிட்டு அவன் உள்ளே நுழைந்து விட்டான்.

கையிலிருந்த பேசி நழுவி கீழே விழ இருந்ததை அவள் பிடித்துக் கொண்டு அந்த ப்ளூப்ரின்ட்டை தரையில் போட்டுவிட்டாள். அவன் பார்ப்பதற்கு முன்னதாக அவள் காலால் அந்த காகிதத்தை தன் கட்டிலுக்குக் கீழே தள்ளிவிட்டாள். அவன் விழிகள் அதனை கவனித்ததோ என்று தெரியவில்லை.

ஆனால் அவன் பார்வை அவள் முகத்தை மட்டும் பார்த்திருப்பது போலதான் தோன்றியது. அவளோ மிரள மிரள விழிக்க,

“என்னாச்சு? ஒ! உன் பெர்மிஷன் கேட்காம கதவை திறந்து இன்டீசன்டா உள்ளே வந்துட்டேன்னு பார்க்குறியா?” என்றவன் கேட்கவும்,  

“ச்சேச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று அவளின் இதயத் துடிப்பு மத்தளமாகக் கொட்டியது. தன் கைப்பேசியை அணைத்து ஓரமாக வைத்துவிட்டாள்.  

பொய்மையின் சக்தி என்பது நேர்மையின் விழிகளை எதிர்கொள்ளும் வரைதான். பாரதியின் முன்னே அவள் மனம் வலுவற்று போவதும் பரபரப்பதும் கூட அதனால்தான்.

அவள் தன்னைதானே ஆசுவாசப்படுத்தி இயல்பாகத் தன்னை காட்டிக் கொள்ள பெரும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அவளின் அந்த படபடப்பை பார்க்க உண்மையில் அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது.

அறைக்குள் நடந்து வந்தவன், “அக்சுவலி… கதவு திறந்து இருந்துச்சு… அதான் உள்ளே வந்துட்டேன்… வந்திருக்க கூடாதுதான்… ஆனா நீ ஒரு தடவையாச்சும் என்கிட்ட பெர்மிஷன் கேட்டியா?” என்று எகத்தாளமாகக் கேட்கவும்,

“எனக்கு நீ இங்க வந்ததுல ஒன்னும் பிரச்சனை எல்லாம் இல்ல பாரதி… நீ எப்ப வேணா வரலாம்… உனக்கு பெர்மிஷன் எல்லாம் தேவையில்ல” என்றவள் அப்போதே அவனை நன்றாக கவனித்தாள்.

அவள் எடுத்து வைத்த சிவப்பு நிற சட்டையும் பேன்ட்டையும் அணிந்திருந்தான். அவனின் உடல்வாகிற்கு மிகப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்து மெச்சுதலாகப் புருவத்தை ஏற்றியவள்,

“இந்த ரெட் ஷர்ட் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு… க்ளீன் ஷேவ் பண்ணி இருந்தா இன்னும் ஸ்மார்டா இருந்திருக்கும்” என்றவளின் புகழ்ச்சிக்கு,

“ம்ம்ம்” என்று அசட்டையாக ஒரு தலையசைப்பு மட்டுமே அவனிடமிருந்து வந்தது. ஆனால் அவன் பார்வை மிகக் கூர்மையாக அவள் அறையை அலசியது. மேஜை மீதிருந்த அந்த பழைய ரக பேசியை அவன் விசித்திரமாகப் பார்க்கவும்,  

“அது என் ஃபர்ஸ்ட் போன்… சும்மா செண்டிமெண்டா வைச்சு இருக்கேன்” என்றவள் சமாளிக்க,

“ஒ!” என்று கேட்டு கொண்டவன் அருகிலிருந்த மேஜையின் மீது ஒரு புறா பொம்மையைப் பார்த்து விழிகளை விரித்தான். அவள் உதட்டைக் கடித்துக் கொள்ள,  

அதனை அருகில் சென்று பார்த்தவன், “இது பொம்மையா… பார்க்க ரொம்ப ரியலா இருக்கு” என்றவன் அவள் புறம் பார்வையை திருப்பி கேட்க,

“அது அப்படிதான் இருக்கும்… ரொம்ப காஸ்டிலி மாடல்” என்றாள்.

“பறக்குமோ?” என்றவன் கேள்விக்கு படபடப்பாக நெற்றியில் வழிந்த வியர்வை துடைத்தபடி,  

“ரிமோட் கண்ட்ரோல்… கொஞ்ச தூரம் மட்டும் பறக்கும்” என்றவள் சொன்னது அவனுக்கு நம்பும்படி இல்லை. காலையில் தான் பார்த்த காட்சியை எண்ணும் போது அவள் சொல்வது நிச்சயம் பொய்யென்றே தோன்றியது.

“நானும் குளிச்சு ரெடியாகிட்டு வந்திடுறேன்… நம்ம இரண்டு பேரும் ஒண்ணா டிபன் சாப்பிடுவோம்” என்றவள் அவனை அறையை விட்டு அனுப்பிவிட நினைக்க, அவள் சொன்னதைக் கேட்டு தலையசைத்துவிட்டு அவனும் வெளியே போக எத்தனித்தான்.

அவள் நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டுக் கொள்ள அவனோ வாயில் அருகே சென்று மீண்டும் திரும்பினான்.

எதையோ தவறவிட்ட உணர்வு.

“என்ன பாரதி?” என்றவள் கேள்விக்கு பதிலுரைக்காமல் அந்த அறையின் இடது புற ஓரத்தில் சுவற்றில் மாட்டியிருந்த படத்தினை பார்த்தான்.

கைகளில் வீணையோடு பட்டுடுத்தி சங்கீத தாரகையாக அமர்ந்திருந்த தெய்வீக முகக்கலை பொருந்திய அந்த மங்கையின் முகத்தை பார்த்த திகைப்பிலாழ்ந்தான்.    

அவன் அம்மா வித்யாவின் படம். அவரின் படத்திற்கு மாலை அணிவித்திருந்தது.

இப்படியொரு பரிமாணத்தில் அவன் இதுவரை அவரை பார்த்ததில்லை. தங்க ஆபரணங்கள் பட்டுப் புடவை இது எதையும் அவன் விவரம் தெரிந்து காலத்திலிருந்து அவர் அணிந்ததுமில்லை.

இப்படியொரு புகைப்படம் இருப்பது பற்றிக் கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பின் இவளிடம் மட்டும் எப்படி இப்படியொரு படம்? இன்னும் இப்படி என்னென்ன ரகசியங்களை இவள் வைத்திருக்கிறாள். இல்லை தனக்கு தெரியாத என்னென்ன ரகசியங்கள் இருக்கின்றன. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவன் வியப்பும் குழப்பமுமாக  நந்தினியை நோக்க, அவளோ தன்னிடம் அவன் என்னென்ன கேள்விகள் கேட்க போகிறானோ என்ற அயர்ச்சியிலும் தவிப்பிலும் நின்றாள்.   

2 thoughts on “Vilakilla vithigal ‘AVAN’ -12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content