You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakilla vithigal ‘AVAN’ – 19

19

வியாசர்பாடி சங்கர். கஞ்சா விற்பதில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவன் பின்னாளில் வடசென்னையிலேயே பெரிய ரவுடியாக உருவெடுத்தான்.

அதுவும் அவன் தற்போது நகராட்சி உறுப்பினர்(வார்ட் கவுன்சிலர்) பதவியிலிருந்தான். இதனால் அவன் செய்யும் அராஜகங்களும் அநியாயங்களும் பன்மடங்கு அதிகமாகியிருந்தன. அவனைத் தட்டி கேட்கவோ அடக்கி வைக்கவோ ஒருவருமில்லை.

சங்கருக்கு இந்த அரசியல் பதவியும் செல்வாக்கும் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. அரசியல் பிரமுகர்கள் பலருக்கு ப்ரோகர் வேலை பார்த்துத்தான் அவன் இந்த இடத்திற்கு வந்தது. அது அவனின் பிரதான தொழிலாகவே மாறிவிட்டது.

விலைமாதர்களைவிடவும் தொழிலுக்கு வராத புது பெண்களை அனுப்பி வைப்பதுதான் அவனின் தனி சிறப்பு. அதற்கு அவன் கையாளும் யுக்திகளில் ஒன்று ஆதரவற்ற பெண்களின் காப்பகங்கள் மற்றும் விடுதிகள்தான்.

யாரும் அந்த பெண்களுக்காக கேள்வி கேட்க வர மாட்டார்கள். அத்தகைய பெண்களின் சூழ்நிலையைப் பயன்படுத்தி பணத்தாசை காட்டி அவர்கள் விருப்பத்தோடே இணங்க வைத்துவிடுவான். எப்போதாவது மேலிடத்திலிருந்து காட்டும் பெண்களை கட்டாயப்படுத்தித் தூக்கிவரவும் செய்வான்.  

அப்படிதான் துர்கா சங்கரிடம் சிக்கி கொண்டது. அவளுக்காகக் கேள்வி கேட்கவும் யாருமில்லை என்பதால் அவனுக்கு அவளை தூக்குவது சுலபமான காரியமாகவே இருந்தது. காப்பகத்தின் நிர்வாக பெண்மணியை கைக்குள் போட்டு கொண்டால் மட்டும் போதும். ஆனால் அவர்கள் எதிர்பாராமல் இந்த காட்சியில் பாரதி என்ற ஒருவன் நுழைந்துவிட்டிருந்தான்.

நேராகக் காப்பகத்திற்குச் சென்ற பாரதி துர்காவை பார்த்தே தீர வேண்டுமென்று கலட்டா செய்ததில் அந்த பெண்மணி மிரண்டுவிட்டார்.

“இப்ப நீங்களா போறீங்களா இல்லை செக்யூரிட்டி வைச்சு உங்க கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள சொல்லணுமா?” என்றவர் அவனை மிரட்டி பார்க்க,

“நீங்க செக்யூரிட்டியை கூப்பிடுங்க… நான் போலிஸை  கூப்பிடுறேன்” என்றவன் சட்டமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்து எண்களை அழுத்தினான்.

படபடப்பில் அவளுக்கு முகமெல்லாம் வியர்க்க துவங்கியது. எப்படி அவனை சமாளிப்பது என்று யோசித்தவளின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த பயம் பாரதியின் சந்தேகத்தை ஊர்ஜிப்படுத்தியது.

அதற்கு பிறகு அவன் அமைதியாக அமர்ந்திருக்கவில்லை.

“இப்ப துர்கா இங்கே வந்தே ஆகணும்” என்றவன் எழுந்து நின்று கர்ஜிக்க, அந்த பெண்மணி விதிர் விதிர்த்துப் போனார்.

இனியும் இந்த பிரச்சனையை மூடி மறைக்க முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. போலிஸ் வரை விஷயம் போனால் நம் நிலைமை அவ்வளவுதான் என்று மிரண்டவள்,

“சரி… நான் துர்காவை வர சொல்றேன்… நீங்க கொஞ்ச நேரம் பக்கத்து நேரம் வெய்ட் பண்ணுங்க” என்று சொல்ல, அவன் முகம் மாறியது. கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தவன் அவர் சொன்னது போல பக்கத்து அறையில் சென்று காத்திருக்க,

அந்த பெண்மணி உடனடியாக சங்கருக்கு அழைத்து பேசினாள்.

“யாரவன்… பெரிய அப்பாட்டக்கரா… அவன் சொன்னா இவளை அனுப்பி விட்டுவிடணுமா… அதெல்லாம் முடியாது… என்னை மீறி எவனாலயும் ஒன்னும் செய்ய முடியாது… நீ டென்ஷனாகாதே”

“ஐயோ! சங்கர்…இதெல்லாம் சரிப்பட்டு வராது… நீ பேசாம அந்த பொண்ணை அனுப்பிவிட்டுடு… நான் வேணா அவளுக்கு பதிலுக்கா  கிரிஜாவை அனுப்பிவிடுறேன்” என்றவள் அவனை சமாதானம் செய்ய பார்க்க.

“அதெல்லாம் முடியவே முடியாது… அவன் போலிஸ் ஸ்டேஷன் போனாலும் சரி… எங்க போனாலும் சரி… இந்த சங்கரை ஒன்னும் பண்ண முடியாது” என்றவன் இறுமாப்பாக உரைத்தான்.

“பிரச்சனை வேண்டாம் சங்கர்… அந்த பொண்ணை அனுப்பிவிட்டுடு” என்றவள் கெஞ்சிய சமயத்தில் பாரதி அந்த அலுவலக வாயில் வந்து முறைத்தபடி நின்றவன்,

“அப்படின்னா துர்கா இங்கே இல்லையா?” என்றான் அதிர்ச்சியாக.

அந்த பெண்ணின் கையிலிருந்த தொலைபேசி தானாக நழுவி விட அந்த நொடியே உள்ளே நுழைந்து ரிசீவரை எடுத்து காதில் வைத்து,

“துர்கா இப்போ இங்க வரல… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று மிரட்டினான்.

“யாருடா நீ… பெரிய இவன் மாதிரி பேசுற… துர்கா வர மாட்டா… உன்னால என்ன கிழிக்க முடியுமோ கிழிச்சிக்கோ… போடா” என்று சங்கர் சவலாக சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

“துர்கா இப்போ எங்க இருக்கா? ஒழுங்கா சொல்லிடு” என்று அந்த பெண்ணை பாரதி மிரட்டி கேட்க, அவளை அச்சம் தொற்றி கொண்டது.

“அது வந்து… இங்க இருக்க பொண்ணுங்களை காலேஜ் சேர்க்கும் போது அதோட செலவுல முக்கால்வாசி கவர்மென்ட் ஏத்துக்கும்… அப்படிதான் துர்காவோட மார்க்ஷீட் போட்டோ டீடைல்ஸ் எல்லாம் அனுப்பி இருந்தேன்…

அந்த போட்டோ எப்படியோ அமைச்சர் கைக்கு போயிடுச்சு… அவருக்கு துர்காவை ரொம்ப பிடிச்சு போச்சு” என்றவர் சொன்ன நொடி  பாரதி ரௌதிரமாக மேஜை மீது குத்தினான்.

அந்த சத்தத்தில் அவர் அரண்டு நிற்க, “சீ… நீயெல்லாம் ஒரு பொம்பள… அவ இங்க பாதுகாப்பா இருப்பான்னுதானே இங்க சேர்த்தோம்… ஆனா என்ன காரியம் பண்ணி வைச்சு இருக்க… இந்த பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்” என்று பொங்கியவன்,

“துர்காவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்க யாரையும் உயிரோடவே விட மாட்டேன்” என்று எச்சரித்துவிட்டு வெளியே வந்தான்.

பாரதியின் மனம் எரிமலையாகக் குமுறியது.  

ஒரு நொடி அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. வீட்டை விட்டுப் புறப்படும் போது ஏக்கமாக துர்கா பார்த்து அந்த பார்வை… அவன் மனதை ஆழமாகத் துளைத்தது.

‘ப்ளீஸ் என்னை அனுப்பிடாதீங்க… நான் உங்க கூடவே இருக்கேன்’ என்று அவள் இறைஞ்சியதை இப்போது நினைக்க, அவன் உள்ளம் கலங்கி துடித்தது.

ஒரு வேளை துர்காவுக்கு ஏதாவது ஆகிவிட்டால் வாழ்நாள் முழுக்க தன்னை மன்னித்துக் கொள்ளவே முடியாது.

மறுகணமே யசோவிற்கு அழைத்துக் காவல் நிலையத்தில் தகவல் என்ன என்று விசாரித்தான்.

“எங்க பாரதி… இங்கே யாரும் கண்டுக்கவே மாட்டுறாங்க… நான் கொடுத்த கார் நம்பரை வைச்சு இவங்க விசாரிக்கிற மாதிரி தெரியல… போலிஸ்க்கு தெரியாம இங்கே எதுவும் நடக்கல… எல்லாமே தெரிஞ்சுதான் நடக்குது” என்றவன் சொன்னதும் தன்னுடன் தொலைபேசியில் பேசிய அந்த சங்கரை நினைத்து கொண்டான். அவன் மிகவும் செல்வாக்கனவன் என்று தோன்றியது.

“விட கூடாது… இவங்கள விட கூடாது” என்று அழுத்தி சொன்னவன் யசோவிடம் அடுத்து என்ன செய்வதென்று தெளிவாக விளக்கினான்.

“இப்படியெல்லாம் செஞ்சா உண்மையிலேயே துர்காவை காப்பாத்திட முடியுமா?” என்றவன் சந்தேகமாக இழுக்க,

“காப்பத்தி ஆகணும்… வேற வழியே இல்ல… ஒரு வேளை துர்காவை காப்பாத்த முடியலன்னா… நான் உயிரோடவே இருக்க மாட்டேன்… துர்காவோட இந்த நிலைமைக்கு நான்தான் காரணம்னு நினைச்சு நினைச்சு நான் செத்தே போயிடுவேன்” என்று பாரதி  உணர்ச்சி பொங்க சொன்னதை கேட்டு யசோ அதிர்ந்துவிட்டான்.

“அப்படியெல்லாம் பேசாதே பாரதி… கண்டிப்பா துர்காவை காப்பாத்திடலாம்” என்று நண்பனுக்கு தைரியம் கூற, பாரதி அடுத்தடுத்து என்ன செய்வதென்று தீவிரமாக சிந்தித்தான்.

உடனடியாக தன் நண்பன் ஜமாலுக்கு அழைத்து ஏரியா மக்கள் சிலரை ஒன்று திரட்டி காப்பகத்திற்கு அழைத்து வரச் சொன்னான்.

சில நிமிடங்களில் காப்பகத்தின் வாசலில் மக்கள் கூடிவிட்டனர். அந்த நிர்வாக பெண்மணி எப்படி நிலைமையை சமாளிப்பதென்று யோசித்திருக்கும் போது பிரச்சனை பத்திரிக்கைகளில் கசிய தொடங்கி சில சேனல்களும் அங்கே வந்துவிட்டன.

இவர்களோடு சில மகளிர் குழுக்களும் இணைந்து கொண்டன. பிரச்சனை தீவிரமானது.

சங்கரின் காதுக்கும் விஷயம் எட்டியது.

“அந்த பொண்ணை அனுப்பிடலாம் அண்ணே” என்று அடியாள் ஒருவன் சொன்ன நொடி பளாரென்று அவன் கன்னத்தில் அறை விழுந்தது.

“தலைவர்தான் போன்ல பேசுனாரு… அந்த பொண்ணை அனுப்பி விட்டுட சொல்லி” என்றவன் மீண்டும் சங்கரிடம் சொல்லும் போதே பொங்கி எழுந்தவன்,

“எவனோ ஒரு பரதேசி? அவன் கிட்ட நான் தோத்து போகனுமா? இந்த சங்கர்கிட்ட வந்த பிறகு எவளும் முழுசா திரும்பி போக கூடாது… போக முடியாது… அவளை முடிச்சுட்டு எங்கேயாவது ரோட்டோரத்துல தூக்கி போடுவோம்… வந்து அள்ளிட்டு போகட்டும்” என்று வக்கிரத்தோடு உரைத்தான்.

அவன் கண்களில் வஞ்சமும் காமமும் நெருப்பாக கொழுந்துவிட்டது.

“பாப்பா நல்லாத்தான் இருக்கு… முதல நானே போறேன்” என்று சங்கர் அவர்களிருந்த குடோனின் இருட்டறைக்குள் நுழைந்தான்.

அங்கிருந்த எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள். இப்படியொரு நிலைமையில் இது தேவையா என்றுதான் நினைத்தனர். 

ஆனால் சங்கரின் ஈகோ துர்காவை விடவும் பாரதியை பழிதீர்க்க வேண்டுமென்று எண்ணியது. இதுவரை யாரும் அவன் விஷயத்தில் தலையிட்டதில்லை. தலையிடவும் மாட்டார்கள். அப்படியிருக்க இவன் யார்? சாதாரணமானவன் இவனுக்கு பயந்து தான் எடுத்த காரியத்தை கைவிட வேண்டுமா என்ற எண்ணத்தோடு அந்த அறையின் ஓரத்தில் முடங்கியிருந்த துர்காவின் கண் கட்டை கழற்றினான்.

அவள் இதயம் படபடக்க விழிகளை திறந்தவளுக்கு சுற்றிலும் காரிருள்தான் தென்பட்டது.

துர்காவிடம் அவன் நெருக்கமாக வந்த நொடி கருந்தாடிக்குள் புதைந்திருந்த அவன் முகத்தைப் பார்த்து அவள் விதிர் விதிர்த்து போனாள். கத்தவும் முடியாமல் ஓடவும் முடியாமல் அவள் வாய் கை கால்கள் எல்லாம் கட்டப்பட்டிருந்தன.

அவன் வன்மமாக அவள் முகத்தருகில் நெருங்கி அவள் வாய் கட்டை அவிழ்க்க போன சமயத்தில் கதவு பலமாகத் தட்டப்பட, எரிச்சலாக முகத்தை சுளித்தவன், “இன்னாங்கடா?” என்ற கர்ஜனையோடு கதவை திறந்தான்.

“அண்ணே… கமிஷனர் லைன்ல” என்று பேசியை நீட்ட, அவனை எரிப்பது போல பார்த்தவன் அதனை வேண்டா வெறுப்பாக காதுக்கு கொடுக்க,

“சங்கர்… அந்த பொண்ணை பத்திரமா திருப்பி அனுப்பிடு” என்றார்.

“அதெல்லாம் முடியாது… மாசம் மாசம் பொட்டி பொட்டியா வாங்குனீங்க இல்ல… அதுவும் இல்லாம ரகம் ரகமா வகை வகையா உங்களுக்கு நான் சப்ளை பண்ணது எல்லாம் மறந்து போச்சா?” என்றவன் கடுப்பாகக் கூற,

“அந்த அக்கறையிலதான் சொல்லுறேன்… அந்த பொண்ணை அனுப்பி விட்டுடு… பிரச்சனை இங்கே பெருசாகிடுச்சு… முதலமைச்சர் ஆபீஸ்ல இருந்து போன் வந்துருச்சு… அந்த பொண்ணை இமீடியாட்டா தேடி கண்டுபிடிக்க சொல்லி” என்ற நொடி சங்கரின் முகம் வெளுத்துப் போனது. 

“இப்பவும் உன் பேர் வராம பார்த்துக்கிறோம்… பேசாம அந்த பொண்ணுக்கு மயக்கம் மருந்து கொடுத்து நான் சொல்ற இடத்துல போட்டுடு” என்றவர் சொன்னதை அவன் கேட்டே ஆக வேண்டிய நிர்பந்தம்.

மீண்டும் துர்கா இருந்த அறைக்குள் நுழைந்தவன், “உன்னை எதுவும் பண்ணாம நாங்க விட்டுடறோம்… ஆனா எங்களை பத்தி ஒரு வார்த்தை வாய் திறந்த மவளே… சங்கை அறுத்துடுவேன்” என்றவன் கழுத்தில் கத்தியை வைக்க அவள் பயபக்தியோடு சொல்ல மாட்டேன் என்று தலையசைத்தாள்.

அதன் பிறகு அவள் முகத்தில் மயக்க மருந்து கட்சீப்பை வைத்து அழுத்த அவள் மயங்கிச் சரிந்தாள். அவளை அழைத்துச் சென்று கமிஷனர் சொன்ன இடத்தில் விட்டு வந்தான். 

அடுத்த சில நொடிகள் பதட்டமாய் நகர்ந்தன.

துர்கா மயக்க நிலையில் பீச் சாலையோரத்தில் கிடப்பதாகத் தகவல் வந்தது. அவளை காவலர்கள் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்ப்பித்ததாக சேனல்களில் செய்தி வெளிவந்தன. பாரதி உடனடியாக அந்த மருத்துவமனைக்கு  விரைந்தான்.

துர்கா மயக்கம் தெளிந்து விழிகளை திறந்த போது அவளைச் சுற்றி மருத்துவர்கள் காவலர்கள் என்று ஒரு கூட்டமே இருந்தது. மிரட்சியோடு எல்லோரையும் அவள் சுற்றி சுற்றி பார்க்க, “துர்கா” என்று அழைத்தபடி பாரதி அவள் முன்னே வந்து நின்றான்.

அவனை பார்த்த மாத்திரத்தில்தான் அவளுக்கு உயிரே வந்தது. தன்னுடைய மொத்த சக்தியும் வடிந்த நிலையில் கிடந்தவள் அவனை பார்த்தவுடன் உத்வேகமத்தோடு ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே அந்த காட்சியை வித்தியாசமாகப் பார்த்தனர். ஆனால் துர்கா யாரையும் பொருட்படுத்தவில்லை. தொலைந்த பிள்ளை தம் தாய் தந்தையை பார்த்த கணத்தில் அவர்களிடம் சென்று ஒண்டி கொள்ளுமே. அப்படிதான் துர்கா பாரதியின் இரு கரங்களுக்குள் அடைக்கலம் புகுந்தாள்.

அவனைத் தவிர இந்த உலகமே அவளுக்கு அந்நியமாகத் தெரிந்தது.

அவளது இறுக்கமான அணைப்பும் கண்ணீரும் அவன் உள்ளத்தை ஏதோ செய்தது. அதற்கு பெயர்தான் காதலா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. ஆனால் அவள் தன்னிடம் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் கண்டு அவன் நெகிழ்ந்து போனான். அவன் விழிகளிலும் தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது.

அவனுடைய ஒரே உறவான அவன் அம்மா இறந்த பிறகு இனி தனக்கென்று யாரும் இல்லை என்ற மனநிலையிலிருந்தவனுக்கு மீண்டும் அத்தகையதொரு பிணைப்பை துர்கா அவனுக்குள் உருவாக்கிவிட்டிருந்தாள்.

அடுத்த நாள் அவர்கள் கட்டிபிடித்திருந்த புகைப்படம் அனைத்து செய்திதாள்களிலும் வெளிவந்தன. காதலனை பார்க்கத்தான் அந்த பெண் காப்பகத்திலிருந்து ஓடிவந்துவிட்டதாகவும் நடுவழியில் அவள் யாரோ தவறான நபர்களிடம் சிக்கிக் கொண்டதாகவும் அவர்கள் இஷ்டத்திற்குக் கதை புனைந்து எழுதியிருந்தனர்.

சங்கர் அந்த செய்தியை படித்துவிட்டு பலமாக சிரித்து கொண்டான். பின் பத்திரிக்கையிலிருந்த அவர்கள் படத்தை உற்று பார்த்தவன்,

 “காப்ப்த்திட்டேன் ரொம்ப சந்தோஷப்படாதே… அவளை உன் முன்னாடியே வைச்சு செய்றேன் டா” என்று வஞ்சமாக உரைத்தான்.

One thought on “Vilakilla vithigal ‘AVAN’ – 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content