Vilakilla vithigal ‘AVAN’-26
26
வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த குடிலின் வாயிலில் லெனின் சூனியத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவன் மனதின் ரகசியங்களும் வலிகளும் அந்த அடர்ந்த வனத்தை விடவும் மிகவும் ஆழமாக இருந்தது.
சிவப்பும் மஞ்சளுமாக வண்ண ஓவியம் தீட்டியபடி சூரியன் மேலெழும்ப, ரம்மியமாக விடிந்த அந்த காலை பொழுதில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் இடுக்குகளில் தம் ஒளிக்கிரணங்களை நுழைத்த சூரியபகவானால் கூட லெனின் ஆழ்மனதில் மண்டிக்கிடக்கும் பழியுணர்வு என்ற கொடூர பேயை விரட்டியடிக்க இயலவில்லை.
‘அடித்தட்டு மக்களின் கனவுகளும் லட்சியங்களும் கனவாகவே கரைந்துவிட வேண்டுமா? அவர்கள் முயன்று முன்னேறி வந்தாலோ அல்லது தங்களின் உரிமைகளுக்காகப் போராடினாலோ அடையாளமே தெரியாமல் அவர்களை உருக்குலைத்து உருத்தெரியாமல் அழிப்பதுதான் இந்த அதிகார வர்க்கங்களின் நியாயமா?
செவ்விந்தியர்களின் இரத்த கரைகளின் மீதுதான் அமெரிக்கா என்ற நாடே உயிர்கொண்டது. இன்னும் இப்படியான குருதி படிவங்கள் பூமியின் ஒவ்வொரு தடத்திலும் கிடக்கிறது என்பதுதான் வேதனை. இத்தகைய கொடூர ஆட்சியாளர்களை யார்தான் சம்ஹாரம் செய்வது? எந்த கிருஷ்ணனும் ராமனும் இந்த கொடுங்கோலோர்களிடமிருந்து நம்மை எல்லாம் காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்ட வர போகிறார்கள்? உலகெங்குமாக படர்ந்திருக்கும் அதிகார வர்க்கங்களின் அட்டூழியங்களுக்கு முடிவுதான் என்ன?’
இந்த கேள்விகள்தான் வருடகாலமாக லெனினை உறங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. அவனை வழிமாற்றி கொண்டுவந்துவிட்டது. அகிம்சை மொழிகள் இவர்களுக்குப் புரியாது என்று புரிந்த பிறகுதான் லெனின் ஆயுதங்களை கையிலேந்தினான்.
ஸ்டெத்தேஸ்கோப் ஏந்தி உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கைகளில் துப்பாக்கியைத் தூக்கி உயிர்களைப் பறிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் யாரால்? அறிவழகன் மாதிரியான முட்டாள் ஆட்சியாளர்களால்தான்.
சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மயக்கத்திலிருந்த அறிவழகனைக் குறி வைத்தான். கொன்று விடத் துடிக்கும் பதின்மூன்று வருட கோபமும் வெறியும் அவனுக்குள் தகித்திருந்த போதும் அவன் அதைச் செய்யவில்லை.
முடமாகக் கிடக்கும் இவரைக் கொல்வதால் எந்தவித லாபமும் இல்லை. மீண்டும் துப்பாக்கியை உள்ளே வைத்துக் கொண்டான். மனதில் கனலாகத் தெறித்த கோபத்தை உள்ளடக்கிக் கொண்டு காட்டுப் பாதைக்குள் நடந்தான். அந்த அடர்ந்த வனத்தின் இயற்கை வனப்பு அவன் மனதைக் கொஞ்சமாக ஆசுவாசப்படுத்தியது.
அவன் சென்ற திசையில் ஓடையின் சலசலப்பு சத்தம் கேட்டு துணுக்குற்று மரத்தின் மறைவில் நின்று எட்டிப் பார்த்தான். கம்பீரமாக ஒரு பெண் புலி நீர் அருந்திய காட்சியைக் கண்டு அவன் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது.
புலிகள் அதிகம் நடமாடும் ஆபத்தான பகுதி என்பதால்தான் இவ்விடத்தை அவன் தேர்ந்தெடுத்தான். அதனாலேயே யாரும் இந்த பகுதிக்குள் அத்தனை சுலபத்தில் வரத் துணிய மாட்டார்கள்.
மனித ஜந்துவை விடப் புலிகள் ஒன்றும் அத்தனை ஆபத்தான மிருகமாக அவனுக்கு தோன்றவில்லை. தண்ணீர் அருந்திவிட்டு அது திரும்பி நடப்பதைப் பார்த்துவிட்டு அவனும் சத்தமின்றி தன் போக்கில் நடந்தான்.
அந்த பெண் புலியை பற்றிச் சிந்தித்த போது அவனுக்கு நந்தினிதான் நினைவு வந்தாள். அதன் கம்பீரத்திற்கும் ஆளுமையிற்கும் அவள் கொஞ்சமும் குறைந்தவள் அல்ல.
முதல் முறை நந்தினியைப் பார்க்கும் போது கூட அவன் இப்படிதான் மறைந்து நின்றிருந்தான்.
இந்தியாவின் மிக பெரிய வியாபார முதலையான ராஜீவ் சென்னையிற்கு வரும் நாளுக்காகக் காத்திருந்து அவனைக் கொல்ல திட்டம் தீட்டி வைத்திருந்தான் லெனின்.
ராஜீவ் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையின் ரகசிய வழியை அந்த வீட்டு தோட்டக்காரன் உதவியோடு அறிந்து அவனைக் கொலை செய்ய அவன் படுக்கையறையின் மூலையில் ஒளிந்திருந்த போதுதான் ராஜீவும் நந்தினியும் அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.
பலவிதமான பெண்களை தன் படுக்கையறைக்கு வரவைப்பது ராஜீவிற்கு வாடிக்கைதான். நந்தினியும் அப்படி ஒரு வகைதான் என்றவன் நினைத்திருக்க, நடந்ததோ முற்றிலும் வேறு.
ராஜீவை கொல்ல அவன் போட்ட திட்டத்தைக் கச்சிதமாக நந்தினி செய்து முடித்திருந்தாள். சிறு நடுக்கமோ தயக்கமோ இல்லாமல் திடமாக அவள் ட்ரிகரை அழுத்தியதைக் கண்டு அவன் வியப்புற்றான்.
அதன் பின் முகுந்தனுக்கும் அவளுக்கும் நடந்த காரசாரமான விவாதத்தை வைத்து அவர்கள் உறவைப் பற்றி அவனால் ஓரளவு யூகிக்க முடிந்தது.
திட்டமிட்டு தன் எதிராளியைத் தாக்கிய அவளின் புத்திசாலித்தனம் அவனை வெகுவாக கவர்ந்தது. முகுந்தன் அவளைக் கொடூரமாகத் தாக்கிய போதும் அவள் அசராமல் இருந்ததும் திட்டமிட்டு காவலர்களை வரவழைத்து அவனைக் கலங்கடித்ததும் லெனினை ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் அந்த அறையின் ஜன்னல் திரைச்சீலைக்குப் பின் துப்பாக்கியுடன் மறைந்திருந்த தானும் போலீசிடம் சிக்கி கொள்ள நேரிடுமோ என்று கவலை கொண்டான். முகுந்தன் அறையை விட்டு வெளியேறிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவனும் தப்பிக்க முற்பட்டான்.
லெனின் அப்போது நினைத்திருந்தால் தான் மட்டும் வந்த வழியே தப்பிக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் நந்தினியை அந்த நிலையில் விட்டு போக அவனுக்கு மனம் வரவில்லை. அவள் தலையில் அடிப்பட்டு மயங்கிக் கிடந்தாள்.
நிச்சயமாக முகுந்தன் தன் அரசியல் பலத்தை வைத்து இந்த கொலை வாழ்க்கை எப்படியாவது மூடி மறைத்துவிடுவான். ஆனால் அதன் பின் நந்தினியின் நிலைமை என்னவாகும்.
நொடிக்கும் குறைவான இந்த சாத்திய கூறுகளை அலசியவன் உடனடியாக நந்தினியைத் தோள் மீது கிடத்திக் கொண்டு ஜன்னல் கதவினை திறந்து பின்புறமிருந்த திண்டின் மூலமாக நகர்ந்து மேல்மாடம் வழியாக இறங்கினான்.
முகுந்தன் காவல்துறையிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தை பயன்படுத்தி தோட்டத்திலிருந்து பின் வாயிலில் தப்பிவிட்டான்.
அங்கிருந்து அவன் தான் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் வந்து ஏற… விஜ்ஜு அதிர்ச்சியானான்.
“யாரு அண்ணா இந்த பொண்ணு? தலையில் வேற இரத்தம் வடியுது” என்று வினவ,
“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்… நீ சீக்கிரம் வண்டியை எடு… போலிஸ் வந்துருச்சு” என்று லெனின் கூறவும் அவனும் வேகமாக வாகனத்தை அவ்விடம் விட்டு விரைவாக எடுத்துச் சென்றான்.
நந்தினியின் நெற்றியில் நிறுத்தாமல் இரத்தம் வழிய, லெனின் தன் சட்டையை கழற்றி அவள் முகத்தை துடைத்துவிட்டு நெற்றியில் வைத்து அழுத்தினான். அரைகுறை மயக்கத்திலும், ‘பாரதி என்னை விட்டு போயிடாதே’ என்றவள் லெனின் கைகளை அழுத்தி பற்றி கொண்டாள்.
பாரதி என்பவன் அவளுக்கு எந்தளவு முக்கியம் வாய்ந்தவன் என்று அவளுக்கு யோசிக்க தோன்றியது.
இது தெரிந்திருந்தும் நேற்று பேசும் போது நந்தினியிடம் அவள் காதலை பற்றி கருத்து சொன்னது பெரிய தவறு என்று தோன்றியது. இவ்வாறாக சிந்தித்தபடி அவன் நடந்து வந்திருக்க எதிரே மூச்சு வாங்க ஓடி வந்த விஜ்ஜு,
“எங்கே அண்ணே போயிட்ட… உன்னை எங்கெல்லாம் தேடுறது” என்று படபடத்தான்.
“இப்போ எதுக்கு நீ பதறியடிச்சு ஓடி வர… நான் எங்க போயிட போறேன்” என்றவன் சாவகாசமாகக் கூற, “இல்ல அண்ணா… அந்த ஆளுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சு போல… எழுந்து கியோ முயோன்னு கத்திட்டு இருக்கான்” என்றான்.
“தெளிஞ்சிருச்சா… அதுகுள்ளயா? சரி வா போலாம்” என்று லெனின் அவனுடன் குடிலுக்கு நடந்தான்.
********
நந்தினியின் நீலாங்கரை பங்களா.
துர்காவை வீடியோ காலில் காட்ட சொல்லி செல்பேசியில் முகுந்தனிடம் நந்தினி உரையாட அவனோ கறாராக, “அறிவு மாமாவை பாரதி பார்க்க வந்தா துர்காவை நான் நேர்லயே கொண்டு வந்து நிறுத்துறேன்… இந்த விடியோ கால் விளையாட்டு எல்லாம் எதுக்கு… ம்ம்ம்” என்று பேச்சை முடித்து இணைப்பைத் துண்டித்தான். நந்தினிக்கு கோபமேறியது.
“சத்தியமா துர்கா உயிரோட இல்ல பாரதி… இவன் உன்னை வர வைக்கத்தான் ப்ளேன் போடுறான்… நீ அவனை நம்பாதே” என்றவள் உரைக்க,
“துர்கா உயிரோட இருக்குறதுல உனக்கு பிரச்சனை?” என்றவன் பட்டென கேட்டுவிட அவளுக்குப் பக்கென்று இருந்தது.
“என்ன பேசுற பாரதி நீ… எனக்கு எ… னக்கு என்ன பிரச்சனை?” என்றவள் தடுமாற. அவள் கண்களிலிருந்த தவிப்பை அவனால் உள்வாங்க முடிந்தது.
“எது எப்படி வேணா இருக்கட்டும்… நாம அப்… அவரை போய் ஹாஸ்பெட்டில் பார்த்துட்டு வந்திருவோம்”
“யாரை… மாமாவை” என்றவள் குரல் இறங்கியது.
“ம்ம்ம்… ஆமா… இப்போவே போவோம்… நீ ரெடியாயிட்டு வா” என்று சொல்லி அவன் அங்கிருந்து அகன்றுவிட, அவளுக்கு சந்தேகமாக இருந்தது. ஒரு வேளை முகுந்தன் பாரதியிடம் ஏதாவது உளறி வைத்திருப்பானோ? பாரதியை தன்னை ஆழம் பார்க்கிறானோ என்ற எண்ணம் உதித்தது.
ஆனால் துர்காவின் பெயரை இதில் ஏன் இழுக்க வேண்டுமென்றுதான் யோசனையாக இருந்தது.
“டேய்… முகுந்தா… என்கிட்டயே உன் விளையாட்டை காட்டுறியா? இரு உனக்கு ஆப்பு வைக்கிறேன்” என்றவள் மீண்டும் முகுந்தனுக்கு அழைத்திருந்தான்.
“இப்போ உன் பக்கத்துல பாரதி இல்லைதானே” என்றவன் எள்ளல் சிரிப்போடு கேட்க அவளுக்கு எரிச்சலானது.
“என்னடா? பாரதியை எனக்கெதிரா திருப்பலாம்னு பார்க்குறியா?” என்றவள் கடுமையாகக் கேட்டாள்.
“அப்படி நான் செய்றதா இருந்தா… நீ மாமாவை கடத்துனதை நான் நேரடியா பாரதிகிட்ட சொல்லி இருப்பேன்… ஏன் துர்காவை கூட பாரதி முன்னாடி கொண்டு வந்து” என்றவன் முடிப்பதற்கு முன்பாக,
“சும்மா உளறாதே… துர்கா உயரோட இல்ல… எனக்கு தெரியும்… நீ என்னை ஏமாத்தாதே”
“அப்படியா… அப்போ நான் அனுப்புற விடியோவை பார்த்துட்டு வா… பேசுவோம்” என்றான்.
அடுத்த சில வினாடிகளில் அவள் கைப்பேசிக்கு முகுந்தன் எண்ணிலிருந்து ஒரு காணொளி வந்தது. அதனை அழுத்தியவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
“என்னை பாரதிக்கிட்ட கூட்டிட்டு போங்க… என்னை பாரதிகிட்ட கூட்டிட்டு போங்க” இந்த வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தாள் துர்கா!
சற்று முன்பு முகுந்தன் சொன்ன போது கூட துர்கா உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கை நந்தினிக்கு சுத்தமாக இல்லை. ஆனால் இந்த காணொளிப் பதிவு அவளை கலக்கமுற செய்தது.
மீண்டும் முகுந்தனுக்கு அழைத்தவள் உடனடியாக,
“துர்கா எப்படி உன்கிட்ட… அவ உயிரோட இருக்கான்னு அப்போ அன்னைக்கு கேஸ் வெடித்துச் செத்து போனது யாரு?” என்ற நந்தினி படபடப்பாக கேட்டாள்.
“அது அந்த வீட்டு ஓனரோட பொண்ணு… பேரெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல” என்றவன் அலட்சியமாகச் சொல்ல,
“வசுமதி” என்று நந்தினி அதிர்ச்சியோடு அந்த பெயரை உச்சரித்தாள்.
“ஆமா அதே பேர்தான்” என்று முகுந்தன் மேலும், “கம்மான் நந்தினி… நம்ம ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வருவோம்… எனக்கு முதலமைச்சர் பதவி வேணும்… உனக்கு பாரதி வேணும்… உனக்கு நானா எந்தவித இடைஞ்சலும் கொடுக்க மாட்டேன்… நீயும் எனக்கு எந்தவித இடைஞ்சலும் கொடுக்க கூடாது…
என்னை பழிவாங்குற எண்ணத்தை விட்டுவிட்டு பாரதியை கூட்டிட்டு போய் எங்கயாவது வெளிநாட்டுல போய் செட்டிலாயிடு… உனக்கு எனக்கு… பாரதிக்கு எல்லோருக்கும் அதான் நல்லது… என்ன சொல்ற?” என்றான்.
அவள் அவன் கேள்விக்கு பதலளிக்காமல், “நான் திரும்பவும் கூப்புடுறேன்” என்று அழைப்பை துண்டித்தவள் உதயிற்கு அழைத்தாள்.
“எனக்கு முக்கியமா ஒரு டீடைல் வேணும்”
“சொல்லுங்க மேடம்”
“தியாகுவை பத்தி டிடெக்டிவ ஏஜென்ட் அனுப்பின ரிப்போர்ட் இருக்கு இல்ல”
“ம்ம்ம் இருக்கு மேடம்… அவர் திருச்சிலதான் இருக்காரு… விசாரிச்சாச்சு”
“அவரோட பொண்ணு பத்தி ஏதாச்சும் இருக்கா?”
“அவர் பொண்ணு இறந்துட்டதா ரிப்போர்ட்ல இருந்துச்சு… அவர் பையன் துபாய்ல வொர்க் பண்ணறாங்க” என்றவன் சொன்ன நொடி நந்தினிக்கு தலை சுற்றியது. எப்படி இப்படியொரு குழப்பம் நேர்ந்ததென்று அவளுக்கு புரியவில்லை.
“மேடம் என்னாச்சு? ஏதாச்சும் பிரச்சனையா?”
“ஆமா உதய்… அந்த பொண்ணு வசு எப்போ இறந்து போனாங்குற டீடைல் விசாரிச்சு சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தவள் முகுந்தன் எண்ணிற்கு உடனடியாக ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்.
“எனக்கு துர்கா வேணும்”
“அப்படின்னா எனக்கு அறிவு மாமா வேணும்” என்றவன் பதிலுரை அனுப்ப,
“ஒகே டன்” என்றவளும் பதில் அனுப்பிவிட்டாள். அவளுக்கு பாரதியைத் தவிர வேறெதுவும் முக்கியம் இல்லை. ஆனால் லெனின் நிச்சயம் அவள் முடிவுக்குச் சம்மதிக்க மாட்டான்.
பெரிய இக்காட்டான சூழல் உருவானது.