You don't have javascript enabled
தமிழ் நாவல்கள்

Virus Attack – Final(2)

19

சில மாதங்கள் கடந்திருந்த நிலையில்…

இயல்பான ஒரு விடுமுறை நாள் அது. அப்பொழுதும் கூட தன் மடிக்கணினிக்கு விடுப்பளிக்காமல், அதில் மூழ்கியிருந்தான் விஸ்வா.

ஓய்வாக ‘சோபா’வில் சாய்ந்து அமர்ந்தவாறு பழைய படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மேனகா. அதில் பொறுமையிழந்து அருகிலிருந்த ‘ரிமோட்’டை எடுத்து ‘சேனல்’லாய் மாற்றினாள், அவள் மடியில் படுத்திருந்த ரச்சனா.

“டாலி! அம்மா படம் பார்த்துட்டு இருக்கேன் இல்ல. ஏன் இப்படி சேனலை மாத்தற” என மேனகா ‘ரிமோட்’டை அவளுடைய கையிலிருந்து ‘படக்’கென்று பிடுங்க, “மா… எப்படிம்மா இந்த படத்தையெல்லாம் பாக்கற. செம்ம மொக்கையா இருக்கு” என அவள் பதிலுக்குப் பொங்க, அப்பொழுதென்று பார்த்து, அந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் அறிவித்ததற்கான செய்தி ஏதோவொரு செய்தி சேனலில் வரவும், அதைப் பார்த்தவள், “என்னோட ரிசர்ச் இன்னும் கொஞ்சம் முன்னால முடிஞ்சிருந்தா, இந்த வருஷம் எனக்குதான் இந்த நோபல் ப்ரைஸ் கிடைச்சிருக்கும்” என மேனகா பெருமையடித்துக்கொள்ள, “மா… இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல… உண்மையிலயே ஏதோ ஒரு ஃப்ளூக்ல தான் சக்கு பாட்டி பிக்ச்சர் வந்திருக்கும்” எனக் கிண்டலில் இறங்கினாள் அவளுடைய மகள்.

அதில் கொலை வெறி கொண்டவள், “நம்ம ஊர்ல, பிறந்த உடனே எவ்வளவு குழந்தைங்க காணாம போறாங்க தெரியுமா உனக்கு. அவங்கள கண்டுபிடிக்க பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படறாங்க. அப்பா அம்மாவையே அடையாளம் தெரியாத எத்தனபேர் என்னை மாதிரி அனாதையா வளரறாங்க. நீயெல்லாம் பான் வித் சில்வர் ஸ்பூன்.  உனக்கு என்ன தெரியும் அந்த கஷ்டம். என்னோட இந்த ரெசெர்ச் அவங்களுக்கு எவ்வளவு யூஸ்புல்லா இருக்கப்போகுது பார்” என மூச்சிரைக்க மேனகா சொல்லிக்கொண்டே போக, அடங்காமல் ரச்சனா பதில் கொடுக்க, இப்படி இருவருக்குள்ளும் மூண்ட சிறு போரை அடக்க வழி தெரியாமல் விழி பிதுங்கினான் விஸ்வா.

இந்த கலவரங்களுக்கிடையில் நிர்மல் என்கிற பெயர் அவர்கள் செவிகளில் விழ, பட்டென்று அனைவரின் கவனமும் தொலைக்காட்சியை நோக்கித் திரும்பியது.

‘தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட அமெரிக்க விஞ்ஞானி நிர்மலுக்கு நோபல் பரிசு. தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்’ எனச்  செய்தி தொடர்ந்துகொண்டிருக்க, அதில் காண்பித்த புகைப்படத்தைப் பார்த்து உண்மையிலேயே தலை சுற்றித்தான் போனது. மேனகாவுக்கு மட்டுமல்ல விஸ்வாவுக்குமே. திடீரென்று அம்மாவும் அப்பாவும் ஏன் இப்படி பேய் அறைந்ததுபோல் ஆனார்கள் எனப் புரியாமல் மிரட்சியுடன் அவர்களைப் பார்த்துவைத்தாள் ரச்சனா.

காரணம் கம்பீரமாக, ‘கோட்-சூட்’ அணிந்து வழுக்கைத் தலையும் கருப்பும் வெள்ளையும் கலந்த குறுந்தாடியுமாக, கருப்பு நிறத்தில் பெரியதாக ‘ஃப்ரேம்’ வைத்த கண்ணாடி அணிந்து, அறிவுக் களை முகத்தில் சொட்டச் சொட்ட அங்கே காட்சி அளித்தது சாட்சாத் நம் நிர்மலானந்தாவேதான்!

*

ரச்சனாவை சகுந்தலாவின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, இரண்டே தினங்களில் அமெரிக்காவிலிருந்தனர் விஸ்வாவும் மேனகாவும்.

வாஷிங்டன் நகரத்திலிருந்த நிர்மலின் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு அவர்கள் வெளியில் காத்திருக்க, அந்த நேரம் பார்த்து ரச்சனா கைப்பேசியில் அழைக்கவும், சற்று தள்ளிப்போய் அவளுடன் பேசத் தொடங்கினாள் மேனகா.

அப்பொழுது கதவைத் திறந்த பெண்மணியைப் பார்த்ததும் சற்று வியந்தவனாக, “நாங்க இண்டியால இருந்து வந்திருக்கோம். மிஸ்டர் நிர்மல் இருக்காறா? அவரை பார்க்க முடியுமா?” என விஸ்வா கேட்க, “ம்.. இருக்காரு… ப்ளீஸ் கம் இன்” என்றார் அந்த பெண்மணி.

பெண் வாடையையே வெறுக்கும் நிர்மலுடைய வீட்டில் இருக்கும் அந்த பேரிளம்பெண் யார் என அறிந்துகொள்ளும் உந்துதலில், “நீங்க” என அவன் இழுக்க, “ஐம் மிஸ்ஸர்ஸ் நிர்மல்” என ‘ஸ்டைல்’லான ஆங்கிலத்தில் அவர் சொல்லவும் மேனகா அங்கே வரவும் சரியாக இருந்தது.

அவரது குரலில் திடுக்கிட்டு, அந்த பெண்மணியின் முகத்தைப் பார்க்க, நிர்மல் உயிரோடு இருப்பதை அறிந்த பொழுது ஏற்பட்ட அதிர்ச்சியைக் காட்டிலும் நூறு மடங்கு அதிர்ச்சி உண்டானது மேனகாவுக்கு

ஒருமுறை கூட தொல்லை நாயகியை நேரில் பார்த்ததில்லை என்பதினால்தான்  அத்தகைய அதிர்ச்சி விஸ்வாவுக்கு ஏற்படவில்லை போலும்.

அதுவும் அவள் ஜீன்ஸ் போட்ட முனியம்மாவாக இல்லாமல் பாந்தமாகப் புடவை கட்டிக்கொண்டு, அந்த அமெரிக்காவில் எங்கே போய் வாங்கி வந்தாளோ, தலை நிறைய மல்லிகைப் பூவை சூடிக்கொண்டு, மிகமிக பதவிசாக அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் மயக்கம் வராத குறைதான் மேனகாவுக்கு.

“ஐயோ… தொ…ல்ல!” என்ற மேனகாவின் குரல் வெளியிலேயே வரவில்லை என்றால், பதிலுக்கு, “மேனகாம்மா!” என நாயகி கத்திய கத்தலில் “இன்னாமே தொல்ஸு! வெளிய  நின்னுகினே கூவின்னுகீற… வந்துருக்கறவங்கள வூட்டுக்குள்ளாற இட்டாந்து பேசர்தான” என லோக்கல் பாஷையில் குரல் கொடுத்தது, வேறு யாருமல்ல… சாட்சாத் நிர்மலேதான்.

“மச்சான்! யாரு வந்துருக்காங்கன்னு கொஞ்சம் வந்து பாரு” என அதிர்ச்சி விலகாமல் மேனகாவை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் தொல்லை நாயகி.

வயோதிகம் காரணமாக மேனகாவை சட்டென அடையாளம் தெரியவில்லை நிர்மலுக்கு. ஆனால், அவளைப் பின்தொடர்ந்து வந்த விஷ்வாவை பார்த்ததும் ஒரு நொடி ‘ஜெர்க்’ ஆனவர், பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “யாரு தொல்ஸ் இவங்க? உனக்கு தெரிஞ்சவங்களா” என இயல்பாகப் பேச முயல, ‘உலக நடிப்புடா சாமி’ என்கிற ரீதியில் அவரை பார்த்தான் விஷ்வா.

நிர்மலை எதிர்பார்த்து அங்கு வந்தவளுக்கு அவருடன் சேர்ந்து தொல்லைநாயகியும் கிடைதுவிட, அதீதமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்தாள் மேனகா.

அது புரிந்ததால் நிர்மலை தான் அடையாளம் கண்டு கொண்டதைக் காண்பித்துக் கொள்ளாமலேயே, தாங்கள் இருவரும் வந்த காரணத்தைச் சுருக்கமாக விளக்கினான் விஷ்வா, நாயகி கொண்டுவந்து கொடுத்த ‘காஃபி’யை பருகியவாறே.

நிர்மலை யார் என்று தான் கண்டுகொண்டதைப் பிரகடனப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை விஷ்வா. மற்றபடி அவனுடைய அப்பாவையே மன்னித்து ஏற்றுக்கொண்டவனுக்கு, அவரிடம் பெரிதாகப் பகைமை பாராட்ட இயலவில்லை அவ்வளவுதான்.

உண்மையிலேயே அவன் சொன்ன எதையுமே நம்ப முடியவில்லை நிர்மலால். அவருமே ஸ்தம்பித்துத் தான் போயிருந்தார்.

தொல்லை நாயகியைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை யாராலும். மேனகாவை பார்த்ததுமே தேன் குடித்த நரியின் நிலைக்கு போனவள், அவள் தன் கணவரின் மூத்த மகள், அவன் மருமகன் என அறிந்த பின் அப்படி ஒரு தடபுடல் செய்துவிட்டாள் அவர்களை வரவேற்கும் விதமாக.

பள்ளிக்குச் சென்றிருந்த அவர்களுடைய பதிமூன்று வயது மகள் பேச்சி, வீடு திரும்பவும் அவளைப் பார்த்து வாய் பிளந்தார்கள் விஸ்வா மேனகா இருவரும். காரணம் சிறுவயது மேனகாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள் அவள்.

தன் மகளுடைய வயதிலேயே இருந்த தன்னுடைய தங்கையை ஆசை தீர மேனகா கொஞ்ச, “இவங்கள அக்கான்னு கூப்பிடணுமா… இல்ல ஆன்ட்டின்னு கூப்பிடணுமா?’ என்ற குழப்பத்துடன் கேட்டாள் அவள். “பாப்பா! அக்கானு கூப்டு” என அதற்குக் கண்டிப்புடன் சொன்ன நாயகி, “மேன்காமா… பாப்பா பேரு பேச்சி. என் அத்த… அதான் உங்க ஆயா… உன் நைனாவோட அம்மா… அதோட பேரதான் இதுககு வெச்சிருக்கோம். ஆனா பாரு உன் சின்ன வயசு போட்டோலாம் பார்த்திருக்கேன்ல நானு. பாப்பா வளர வளர கண்டுக்கினா… ஜாட உன் மாறியே இருக்கங்காட்டியும், நான் சின்ன மேனகான்னுதான் கூப்புடறது” எனப் பெருமையாகச் சொன்ன நாயகி,  “ஆனா… உன் நைனாவுக்குத்தான் கோவம் பொத்துக்கினு வரும்” என்று சொல்லிவிட, சங்கடத்துடன் நெளிந்த நிர்மல், “சாரி மேனகா! அன்னைக்கு காட்டுல உன்ன அப்படியே விட்டு விட்டு வந்த பிறகு இவ ஒரே அழுக. அதனால போனா போகுதுன்னு மறுபடியும் காட்டுக்கு உன்னை தேடி வந்தோம். ஆனா அதுக்குள்ள நீ அங்கே இருந்து காணாம போயிருந்த” என அவள் எதுவும் கேட்டுவிடுவதற்கு முன்பாகவே தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல முயன்றார்.

“பரவாயில்லை விடுங்க…ம்ம்… அப்பா!” எனத் தயங்கியவாறே சொன்னவள், “அது எப்படி நாயகி! இவர் கூப்பிட்ட உடனே… வேற எதுவுமே யோசிக்காம என்னை அம்போன்னு விட்டுட்டு அன்னைக்கு இவர் பின்னாலேயே போன” என நீண்ட நாட்களாக அவள் மனதிலிருந்த சந்தேகத்தை மேனகா கேட்க, “அதுவா யமா…” என வளைந்து நெளிந்து வெட்கப்பட்ட நாயகி, “என் அத்த மகன் நிர்மல் தான் எப்பவுமே என்ன தொல்ஸுன்னு கூப்புடும். அதே மாதிரி அந்த சாமியாரு கூப்பிடவும் எனக்கு கிர்ர்ர்ன்னு ஆயிடுச்சு. மச்சான் நீ தானா அப்படின்னு நான் ஜாடையிலேயே கேட்கவும்… ஆமான்னு தலையாட்டினாரு சாமி.  நீ ஒடனே என் கூட வான்னு அவரு கண்ணடிக்கவும், ரோசன செய்யாம அவரு கூடவே போயிட்டேன்” என அதற்கு விளக்கம் கொடுத்தாள் நாயகி. “என்னாது… எங்கப்பாதான் உன்னோட அத்த மகனா” என்றாள் மேனகா மூச்சடைக்க

*

சென்னையிலிருந்த ஒரு குப்பத்தில் வசித்து வந்தவர் நிர்மல்.

அவருடைய அப்பா ‘சைக்கிள் ரிக்ஷா’ ஓடிக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் குடி போதை தலைக்கேறி ரயில் தண்டவாளத்தில் மயங்கிக்கிடக்கும் பொழுது விபத்துக்குள்ளாகி, இரண்டு கால்களும் துண்டாகிப்போக, வீட்டுடன் முடங்கிக்கிடந்தார்.

அவருடைய அம்மா வீடு வேலை செய்பவர். ஒரு மரபியல் பேராசிரியர் வீட்டில் அவர் வேலை செய்துகொண்டிருக்கும் சமயம், சிறுவனாக இருந்த நிர்மலை தினமும் தன்னுடன் அங்கே அழைத்துச் செல்வார் அவர்.

அவருடைய ஆராய்ச்சி மாணவர்கள் எல்லாம் தினமும் அங்கே வந்து செல்வதை அடிக்கடி பார்க்க நேர்ந்தது இளம் வயது நிர்மலுக்கு. மாணவர்கள் பயபக்தியுடன் அவரிடம் நடந்துகொள்வதைப் பார்த்து, அது அவருடைய கல்வியினால்தான் என்கிற புரிதல் உண்டானது அந்த சிறுவனுக்கு

மற்றவர்கள் தன்னையும் இதே மதிப்புடனும் மரியாதையுடனும் நிமிர்ந்து பார்க்கவேண்டுமென்றால் அது கல்வி ஒன்றினால் மட்டும்தான் சாத்தியப்படும் என முற்றிலும் நம்பத்தொடங்கினான் அவன்.

ஒருநாள் அவருடைய புத்தகம் ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு, அதைத் தட்டுத்தடுமாறி அவன் படித்துக்கொண்டிருக்க, அவனுடைய ஆர்வத்தைப் பார்த்தவர் அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கச் சொல்லிக்கொடுத்து அவனை ஊக்கப் படுத்தினார் அந்த பேராசிரியர்.

காலப்போக்கில் அவனுடைய அறிவு விரிவடைய, அவன் அதிக சிரத்தை எடுத்துப் படிக்கவும்,  நல்ல மதிப்பெண்களுடன் பள்ளிப்படிப்பை முடித்தான் நிர்மல்.

எனவே கல்லூரியில், அவன் விரும்பிய துறையில் அவனுக்குச் சுலபமாகக்  இடம் கிடைத்தது. பெரிய அளவில் ஆராய்ச்சி என்கிற நிலையில் அவனுடைய கனவுகளும் விரிந்தது.

கல்லூரியில் படிக்கத் தொடங்கிய பிறகு அதற்கே உண்டான மிடுக்கும் ‘ஸ்டைல்’லும் அவனிடம் தொற்றிக்கொள்ள, அவர்களுடைய சமூகத்தில் இது அரிதிலும் அரிது என்பதினால் அதுவரை அவனுடன் எதார்த்தமாகப் பழகி வந்த அவனுடைய முறைப்பெண் தொல்லைநாயகிக்கு அவன் மீது ஒரு மயக்கமே உண்டாகிப்போனது. அதுவும் அவன் கல்லூரிக்குச் செல்ல தொடங்கிய சமயம், அங்கே ஏற்பட்டிருந்த புதிய வழக்கத்தின்படி அவன் ‘தொல்ஸ்’ என்று அவளைக் கூப்பிட தொடங்கிய பிறகு அவன் மீது பித்தாகவே ஆகிப்போனாள் தொல்லைநாயகி.

ஆனால் அவனுக்கோ, அழகும் படிப்பும் ஒருசேர அமையப்பெற்ற, அவர்கள் நிலையினின்றும் ஒரு படி மேலே இருந்த சகுந்தலாவைப் பிடித்துப்போனது.  தான் யார் என்ற உண்மையை அவளிடம் சொன்னால் எங்கே அவள் தன்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டாளோ என்கிற பயத்தில், தன்னை பற்றிய உண்மையை மறைத்து தன் காதலை அவளிடம் சொன்னான் நிர்மல்.

அவளும் அதற்காகவே காத்திருந்தவள் போல உடனே அவனுடைய காதலை ஒப்புக்கொள்ளவே வானத்திலே பறக்கத் தொடங்கினான் நிர்மல் என்கிற அந்த இளைஞன்.

வெளிப்படையாக நாயகி, தன்னை மணந்துகொள்ளுமாறு அவனிடம் கேட்டபிறகும் கூட, தொல்லைநாயகி என்கிற பெண் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை அவனது பார்வையில், அவன் அன்றிருந்த மன நிலையில்.

அவன் முதுகலைப் படிப்பை முடிக்கவிருக்கும் சமயம் தொல்லைநாயகியின் மனதை அறிந்த அவனுடைய அம்மா, அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவனுக்கு நெருக்கடி கொடுக்கவும், சகுந்தலாவை பற்றி அவரிடம் சொன்னான் நிர்மல்.

அவளை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சமும் விரும்பவில்லை அவனுடைய அம்மா பேச்சி, தோற்றத்தில் கூட தன்னையே உரித்து வைத்திருக்கும் தன்னுடைய தம்பி மகள் மேல் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தினால்.

தன் தாயின் அடாவடித்தனம் அறிந்தவன் என்பதினால், வேறு வழியின்றி யாரையும் எதுவும் யோசிக்க விடாமல், அவசர அவசரமாக சகுந்தலாவைத் திருமணம் செய்துகொண்டான் நிர்மல், அவளுக்கு தன் மீது இருந்த மயக்கத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு.

சில மாதங்களிலேயே வாழ்க்கை தன் எதார்த்தத்தை இருவருக்கும் வலிக்க வலிக்கச் சொல்லிக்கொடுக்க, அதன்பின் அவர்களுடைய எதிர்காலமே தடம் புரண்டு போனது.

சிறையிலிருந்த சமயத்தில், தனிமையில் பலவற்றையும் சிந்தித்தவர், சகுந்தலாவுக்கும் உண்மையாக நடந்துகொள்ளாமல் தன் குடும்பத்துக்கும் உபயோகம் இல்லாமல் சுயநலமாகத் தான் இருந்துவிட்டதை உணர்ந்தார் அவர்.

சிறைவாசம் முடிந்து திரும்பியபிறகு பெற்றவர்களைத் தேடிப்போக, அவர்கள் உயிருடனேயே இல்லை என்பதை அறிந்து வருந்தினார். சகுந்தலாவோ நாயகியோ எங்கே போனார்கள் என்றே கண்டுபிடிக்க இயலவில்லை அவரால், அவர் அன்றிருந்த நிலைமைக்கு.

அனைத்தையும் சொன்னவர், சந்திரமௌலியால் அவர் அடைந்த துன்பங்களையும் அதற்கு அவரைப் பழிதீர்க்க விஷ்வாவை தான் உபயோகப்படுத்திக் கொண்டதையும் வெளிப்படையாகச் சொல்லி முடித்தார் நிர்மல்.

தொல்லைநாயகி அவருடைய வாழ்க்கையில் மறுபடியும் வந்த பிறகு, அவளுடைய அன்பை உணர்ந்தே இருந்த படியால் எக்காரணம் கொண்டும் மீண்டும் அவளை கை நழுவ விட விரும்பவில்லை அவர். அவளை நீங்கி அவரால் இனி வாழவே இயலாது என்கிற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்க, அந்த நேரம் பார்த்து கோர்ட் கேஸ் என அவர் சிக்கிக்கொள்ளவும், அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ முடிவெடுத்தவர், அனைத்தையும் விட்டுவிட்டு அப்படி ஒரு போலியான விபத்தை அரங்கேற்றினார் அவர் அவரது முழுமையான நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவனின் துணையுடன்.

தொல்லைநாயகியை திருமணம் செய்துகொண்டு, எதற்கும் இருக்கட்டுமென்று  ஏற்கனவே அவருடைய உண்மையான பெயரில் அமெரிக்காவில் குடியுரிமை வாங்கி வைத்திருந்ததால் அதைப் பயன்படுத்திக் கொண்டு, மனைவியுடன் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார் நிர்மல்.

அவர் தொலைத்திருந்த தன்னுடைய கல்வி சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தையும் முறைப்படி விண்ணப்பித்து வாங்கிவைத்திருந்ததால் அவற்றின் உதவியுடன், ஒரு பிரபல ஆய்வுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

ஏற்கனவே செயற்கை முறையில் இறைச்சியை உற்பத்தி செய்யும் முறையை அவர் கண்டுபிடித்து வெற்றிபெற்றிருக்க, அதை அடிப்படையாகக் கொண்டு செய்த, ‘குளோனிங்’ முறையில் விபத்தில் துண்டான உடல் பாகங்களை இயற்கையான முறையில் பழையபடி வளர வைக்கும் ஆராய்ச்சியில் அவர் வெற்றி பெற, அது மனித சமூகத்திற்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகிப்போக, அவருக்கு இந்த நோபல் பரிசும் கிடைத்தது. அனைத்தையும் சொல்லி முடித்தார் நிர்மல் என்கிற ஒரு விஞ்ஞானி பெருமையுடன்.

ஒருவர் பற்றி ஒருவர் மனதிற்குள் வளர்த்து வைத்திருந்த சிறு சிறு கசப்பும் கூட நீங்கிப்போய் மகிழ்ச்சி ததும்பியது எல்லோர் நெஞ்சிலும்.

சில நாட்கள் கொஞ்சல் குலாவல்களுடன் அங்கே களித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பும் சமயம், விஷ்வா மற்றும் நிர்மல் இருவர் முன்னிலையிலுமே கேட்க சங்கடபட்டுக்கொண்டு தயங்கியபடி ரகசியமாகத் தொல்லைநாயகியிடம், “என்னோட மில்லிய என்ன செஞ்சாரு உன்னோட தெய்வ மச்சான்” என மேனகா கேட்க, “அந்த பெர்ச்சாளிய இன்னுமா நீ நெனச்சிட்டு இருக்க?”  என வியந்தவாறு, “தெரிமா… அத க்யுப்பிட்னுதான் கூப்டுவாறு உன் நைனா” என நாயகி சொல்ல, அதில் வியப்பின் உச்சிக்கே சென்றவள், “அப்படினா அவனுக்கு ஒன்னும் ஆகல இல்ல” என மகிழ்ந்தவள், “அவன் இப்ப எங்க இருக்கான். அவனை நான் பார்க்க முடியுமா” என அவள் பரபரக்க,

“நீ உன் நைனாவாண்ட… இல்ல இல்ல நைனாவாண்ட மட்டும் இல்ல யாராண்டையும், என்னை போட்டுக் குடுக்க மாட்டேன்னு வேர்டு கொடுத்தாதான்  நான் அந்த  சீக்ரட்ட உன்னாண்ட சொல்லுவேன்” என நாயகி அவளுடைய ‘பீபி’யை ஏற்ற, “ப்ளீஸ் நாயகி! நீதான் சொன்னன்னு நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு தடவ எனக்கு மில்லிய பார்த்தால் போதும்” என மேனகா கெஞ்சவும் இல்லை இல்லை கொஞ்சவும்,

“அதுக்கு நீ நிர்மல்யாவுக்குதான் போவணும் கண்ணு” என மர்ம புன்னகை பூத்தாள் தொல்லை நாயகி.

*

20

மில்லி அங்கே இருக்கிறது என்கிற தகவலைத் தவிர வேறெதையும் சொல்லவில்லை நாயகி. சொல்லப்போனால் அவளுக்கே வேறுதுவும் தெரியாது என்பதுதான் உண்மை.

மில்லி என்றாலே அப்படி ஒரு ‘அலர்ஜி’ நாயகிக்கு. ஆனால் அதற்கு நேர்மாறாக ‘மில்லி என்றால் நிர்மலுக்கு மிகவும் ஸ்பெஷல்’ என்ற நிலையிலிருந்தது அந்த எலி.

எப்படியோ அவருடன் சண்டை பிடித்து அதை அவரிடமிருந்து பிரித்திருந்தாள் நாயகி. அவளுக்குப் பயந்துதான் மில்லியை அந்த தீவில் தீவிர பாதுகாப்புடன் வைத்துப் பராமரிக்கிறார் நிர்மல்.

அவ்வப்பொழுது நேரம் ஒதுக்கி அங்கே போய் அவர் மில்லியை கொஞ்சி விட்டு போவது வேறு கதை. அது நாயகிக்கும் கூட தெரியாத கதை.

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பிறகு மில்லியை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்று மனதிற்குள் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது மேனகாவுக்கு. ஆனால் உண்மையான காரணத்தைச் சொல்ல இயலாமல், நிர்மால்யாவை சுற்றிப் பார்க்க ஆசையாக இருப்பதாக விஸ்வாவிடம் கதை சொன்னாள் அவள்.

அவனை அடைத்து வைத்து துன்ப துயரில் மூழ்கடித்த இடம் என்பதாலோ அல்லது அவனது துறவு வாழ்க்கையை நினைவுபடுத்தியதாலோ  என்னவோ நிர்மால்யாவுக்கு செல்ல கொஞ்சம் கூட பிடிக்கவில்லை விஸ்வாவுக்கு. மேனகா அங்கே செல்வதையும் விரும்பவில்லை அவன்.

ஆனாலும் விடாப்பிடாயாக சில நாட்கள் விஸ்வாவை நச்சரித்து, நிர்மால்யா தீவுக்கு வந்திருந்தாள் மேனகா. அவனுக்கு முக்கிய ‘போர்ட் மீட்டிங்’ ஒன்று இருப்பதாகக் கூறி, ‘நீ எப்படியோ போய்த்தொலை’ என்கிற ரீதியில் அவர்களுடைய பாதுகாவலர்கள் சகிதம் அவனுக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் அவளை அங்கே அனுப்பி வைத்தான் அவன். ஆனாலும் அரைமனதாகத்தான்.

முதலில் ‘நிர்மலானந்த சிவ பீட ஆசிரமம்’ என்ற பெயரில் இயங்கிவந்த  அந்த ஆசிரமம், ‘விஜிதேந்த்ரியானந்தா சக்தி பீட ஆசிரமம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றிருப்பதையே அங்கே வந்த பிறகுதான் அறிந்தாள் மேனகா.

சில வருடங்களாகவே சற்று பிரபலமாகியிருந்த அந்த ஆசிரமத்தைப் பற்றி அவளும் கூட கேள்விப்பட்டிருக்கிறாள்தான். ஆனால் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி யோசிக்கும் அளவுக்கு அவளுக்கு நேரம் இருந்ததில்லை.

அந்த ஆசிரமத்தின் உள்ளே செல்லவேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என்கிற காரணத்தால், அங்கே இருந்த முக்கிய அலுவலகத்துக்குள் நுழைந்தாள் மேனகா தன் புடை சூழ.

அவள் அங்கே நுழைந்த நொடி, அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்த காவி உடைகள் அனைவருமே ஸ்தம்பித்துப் போனார்கள். அவளைப் பார்த்தவாறு ‘மாதாஜி’ ‘மாதாஜி’ எனக் குறிப்பிட்டு ‘ மாதாஜி இந்த டிரஸ்ல எப்படி’ என அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்ள, சில நிமிடங்கள் அங்கே கூச்சலும் குழப்பமுமாக இருக்க, அதை கேள்விப்பட்டு வேகமாக அங்கே வந்தார் தர்மானந்தா.

மேனகாவுக்கு அவரை நன்றாகவே அடையாளம் தெரியவும், “எப்படி இருக்கீங்க ஸ்வாமிஜி” என இயல்பாக அவரை பார்த்துப் புன்னகைத்தாள் அவள். அவரும் அவளை அடையாளம் கண்டுகொள்ள, பதிலுக்குப் பெரிதாகப் புன்னகைத்தவர், “நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க அவ…தாஆஆர் சிங்?!” என கிண்டலாகவே அவளை எதிர்கொண்டார் அவர்.

“ஐயோ… சூப்பர் ஸ்வாமிஜி நீங்க. இவ்வளவு வருஷத்துக்கு பிறகும் மறக்காம என்னை ஞாபகம் வெச்சிருக்கீங்க பாருங்க” என அவள் வியக்க, “மறக்க முடுயுமாம்மா அதையெல்லாம்… உன்னால பெரிய ஸ்வாமிஜி கிட்ட கொஞ்சம் நஞ்சமாவா வாங்கி கட்டிட்டேன்” என்றார் அவர் பரிதாபமாக.

பின் அங்கிருந்தவர்களை நோக்கி, “இவங்க நம்ம மாதாஜி இல்ல. யாரும் கன்ஃப்யூஸ் ஆகாதீங்க” என்று சொல்லிவிட்டு மேனகாவை தன்னுடன் அழைத்துச்சென்றார் தர்மானந்தா.

“ஏன் ஸ்வாமிஜி… எல்லாரும் என்னை அப்படி அதிர்ச்சியா பார்த்தாங்க? யாரந்த மாதாஜி” என அவள் வியப்புடன் கேட்க, “நாம இப்ப… இங்க இருக்கற தியான மண்டபத்துக்குத்தான் போறோம். அங்க வந்து பாரு. உனக்கே காரணம் புரியும்” என்றவாறே எக்கச்சக்க ஆர்வத்துடன் அவளை அங்கே அழைத்துவந்தார் அவர்.

எந்த ஆசிரமத்துக்குள் பெண்களுக்கு அனுமதியே இல்லையோ, அந்த ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தியான மண்டபம் காவி உடை அணிந்த பெண்களால் நிறைந்திருந்தது.

காவி புடவை, கழுத்துவரை மூடிய காவி ரவிக்கை, கழுத்து கைகள் என ருத்ராட்சத்தாலும் துளசி மணிகளாலும் ஆன ஆபரணங்கள் அணிந்து, தலைக்கு மேல் உயர்த்தி போடப்பட்டிருந்த கொண்டை என அங்கே நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த ஒரு பீடத்தில் இவளுக்கு முதுகு காண்பித்து உட்கார்ந்திருந்தார்(ள்) ஒரு பெண் துறவி.

அவளுடைய முகத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போக, வேகமாகப் போய் அவருக்கு முன் நின்றாள் மேனகா. கண்மூடி தியான நிலையிலிருந்த அந்த துறவியைப் பார்த்த அடுத்த நொடி மூர்ச்சையாகித்தான்போனாள் அவள். பாவம் தொடர்ச்சியாக இவ்வளவு அதிர்ச்சிகளை எப்படித் தாங்க முடியும் அவளாலும்?

சரியாக அதே நேரம், புயலென வேகமாக அங்கே நுழைந்த விஜித்தின் கரங்கள் கீழே விழாவண்ணம் அவளைத் தாங்கி பிடித்தன, அங்கே நிலவிய அமைதியை குலைக்காவண்ணம்.

*

மயக்கம் தெளிந்து அவள் கண் விழிக்கும்போது அவளுக்கு அருகில் அவளையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான் விஜித். கலவரம் பூசிய முகத்துடன்.

“அம்மாடி” என ஆசுவாச பெருமூச்சு விட்டார் அவனுக்கு அருகில் நின்றிருந்த தர்மானந்தா. காரணம், அவளுடைய பாதுகாவலர்களை உள்ளே வரவிடாமல் தடுத்துத்துவிட்டுதான் மேனகாவை தியான மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார் அவர். அவளுக்கு எதாவது ஒன்றென்றால் சும்மா விடுவானா விஸ்வா? மேனகாவை காட்டுக்குள் தனியாக கட்டி வைத்த ஒரே காரணத்திற்காக நிம்மிக்கு எதிராக அவன் ஆடிய ஆட்டத்தை முழுவதும் அறிந்தவராயிற்றே அவர்.

போதும் போதாததற்கு விஜித் வேறு அவரை வறுத்தெடுத்திருந்தான், மேனகா அங்கே வந்திருப்பதை அவனுக்குத் தெரியப்படுத்தாமல், அவளை நேரடியாக தியான மண்டபத்திற்கே அவர் அழைத்துச் சென்ற காரணத்தால்.

மயக்கம் தெளிந்த நிலையில், “இது என்ன இடம். நான் எங்க இருக்கேன்?” என்று கேட்டுக்கொண்டே திரு திருவென்று விழித்தவாறு இருவரையும் மாறி மாறி பார்த்தாள் மேனகா.

“இது நம்ம ஆஸ்ரமத்துல இருக்கற ஒரு வி.ஐ.பி சூட்தான்… பயப்படாத” என விஜித்  பதில்கொடுக்க, அவனுடைய தற்போதைய தோற்றம் வேறு அச்சு அசல் சாமியார் விஸ்வாவை அவளுக்கு நினைவுபடுத்த அரண்டுபோனவள், ஒருவேளை கெட்ட கனவோ என நினைத்து கண்களைக் கசக்கிக்கொண்டு அவனை பார்க்க, அது உண்மை என்பதால் அவனது பிம்பம் மறையாமல் அப்படியே இருக்கவும் சுற்றும் முற்றும் தேடி அருகில் மேசை மேலிருந்த அவளது கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு மறுபடியும் அவள் அவனை உற்று நோக்கவும், “உன் முன்னால நிக்கறவன் உண்மைதான் மெனு இல்யூஷன்லாம் இல்ல!” என்றான் விஜித்.

அவன் அவளை அழைத்த விதத்திலேயே அவன் விஜித் என்பதை அவள் உணர, வியப்புடன், “அடப்பாவி விஜித்தாடா நீ…” என்றவள், “நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா?” என்றே கேட்டு விட்டாள் மேனகா.

உண்மையில் நிர்மலானந்தா அவனை விட்டுவைத்திருந்தாலும் கூட அவனது மரபணுக் கோளாறுகள்  இவ்வளவு வருடங்கள் அவனை உயிருடன் விட்டு வைத்திருக்கும் எனக் கொஞ்சம் கூட எண்ணவில்லை மேனகா. அந்த கோளாறுகளை அவள் வெற்றிகொண்டதில் உண்மையாகவே மகிழ்ச்சியாக உணர்ந்தாள் அவள்.

“பின்ன… இந்த உலகத்துல சந்தோஷமா அனுபவிக்க எவ்ளோ விஷயம் இருக்கு? அதையெல்லாம் விட்டுட்டு நானாவது சாகறதாவது” என இயல்பாக பதில் கொடுத்தான் விஜித்… இல்லை… இல்லை… விஜிதேந்த்ரியானந்தா ஸ்வாமிஜி.

அப்பொழுது தியான மண்டபத்தில் பார்த்த சாமியாரினியின் நினைவு வரவும், “அடப்பாவிகளா! அப்படின்னா… உங்களோட அந்த மாதாஜியும் க்ளோனிங்கா” என ஆயாசமாகக் கேட்டாள் மேனகா.

“வேற வழி… என்னதான் நான் விஸ்வாவோட மோனோஸைக்கோடிக் க்ளோனிங்கா இருந்தாலும், எங்க ரெண்டு பேரோட நியூக்ளியை குள்ள ஒரே டி.என்.ஏ அண்ட் ஒரே ஜீன் இருந்தாலும், ஒரிஜினல் ஒரிஜினல தேடித்தான போகுது.

அதுக்காக காலம் முழுக்க உன்னையே நினைச்சு மெனு… மெனுன்னு ஏங்கிட்டே இருக்க முடியுமா சொல்லு?

ஸோ… எனக்கே எனக்குன்னு, நான் ஒரு மேனகாவ க்ளோனிங் செஞ்சு தரச் சொல்லி சக்கும்மாகிட்ட கேட்டேன்.

சில கோடிகளை வாங்கிட்டு அவங்க எனக்கு என் ரம்பாவை உருவாக்கி குடுத்தாங்க. இதுல என்ன தப்பிருக்கு?” என அவன் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு.

‘பார்த்தியா மேனகா… இந்த சக்கும்மாவ… எவ்வளவு செலிபிஷ் அண்ட் க்ரீடி இல்ல அவங்க! ச்ச… எல்லாத்தையும் சொன்னவங்க இதை பத்தி உன் கிட்ட ஒரு வார்த்தை கூட மூச்சுவிடல பாரு?’ என மனம்நொந்தவள், “என் டி.என்.ஏ சாம்பிள்ல்ஸ்லாம் எனக்கே தெரியாம எப்படிடா எடுத்தீங்க?” என மேனகா கொதிக்க, “கூல் மெனு… உன் டெலிவரி டைம்ல, உன் ஸ்டெம் செல் டொனேட் செஞ்ச இல்ல… அதைத்தான் யூஸ் பண்ணோம்” என்றான் அவன் அலுங்காமல் நலுங்காமல்.

“அவ்வளவு பணம் உனக்கு ஏதுடா?” என தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவள் கேட்கவும், “என்னை பத்தி என்ன நினைச்ச? அய்யா யாருன்னு தெரியுமா? இப்ப இந்த ஆஸ்ரமம் மொத்தமும் என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு.

நிம்மி.. என்னை அந்த காட்டுல இருந்து பத்திரமா கூட்டிட்டு போனாரே, அதுக்கு என்ன காரணம்னு நினைக்கற?

உன் விஸ்வா அங்க இல்லனா நிறைய பிரச்சனை வரும். அதனால என்னை வெச்சு அட்ஜஸ்ட் பண்ணத்தான்.

அவர் ஜெயில்ல இருந்த சமயத்துல இங்க எவ்வளவு சமாளிச்சேன் தெரியுமா. அதனால அவர் மொத்தமா என்னை நம்ப ஆரம்பிச்சார். ஆஸ்ரமம் வேண்டாம்னு அவர் டிசைட் பண்ணாலும்… இதை அம்போன்னு விட அவர் இஷ்ட படல. ஸோ… மொத்தமா என் கிட்ட ஒப்படைச்சார். நான் பதிலுக்கு கேட்டது உன்னை மட்டும்தான். அதுக்குள்ள உனக்கு விஸ்வாவோட கல்யாணமே முடிஞ்சிடுச்சு. ஸோ… இப்படி ஒரு க்ளோனிக் செய்ய வேண்டியதா போச்சு” எனச் சொல்ல, இந்த முறை தலையில் அடித்தே கொண்டாள் மேனகா.

“இவ்வளவு விஷயம் நடந்திருக்கு. நீ சக்குமா கூட காண்டக்ட்ல இருக்க. அவங்கதான் சுயநலமா என் கிட்ட இருந்து எல்லாத்தையும் மறச்சிட்டாங்க.  நீ கூடவா இப்படி? நீ ஏன்டா என்னை காண்டாக்ட் பண்ணவே இல்ல?” என அவள் வருந்த, ‘என்ன பண்ண சொல்ற மெனு. என்னை பத்தி உனக்கு தெரிய வந்தா நிம்மி உயிரோட இருக்கற விஷயமும் கூடவே வெளியில வரும். அதுவும் உனக்கு விஸ்வாவோட மேரேஜ் ஆன நிலைமையில இதை நாங்க எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்” என அவன் அவளை கேள்வி கேட்க, அதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை அவளுக்கு. கொதித்துக் கோபப்படவும் இயலவில்லை.

யாரிடமென்று கோபப்படுவாள் அவள்? இவ்வளவு வருடங்கள் கழித்து அவள் தன் மரபணுக்குள்ளேயே தேடி கண்டுபிடித்திருக்கும் அவளுடைய அம்மாவிடமா இல்லை அப்பாவிடமா? அல்லது அவளது உயிருக்கு உயிரான விஸ்வாவின்… பிரதியிடமா? வேறுவழியின்றி கோபத்தை அப்படியே விழுங்கினாள் மேனகா.

அவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே அங்கிருந்து சென்றிருந்தார் தர்மானந்தா. பிறகு அங்கேயே உணவை வரவழைத்தது அவளைச் சாப்பிட வைத்தான் விஜித். வயிறு நிறையச் சாப்பிட்டு முடித்த பிறகு, அதுவும் அவன் மிகுந்த அக்கறையுடன் அவளைப் பார்த்துப் பார்த்து உபசரிக்கவும், அவளது கோபம் ஆதங்கம் அனைத்தும் கரைந்து காணாமல் போயிருந்தது.

ஆனாலும், அவன் கொஞ்சம் கலவரமாகவே அவளைப் பார்ப்பது போல் தோன்றவும், “ஹே விஜித்! ஏதோ ஒரு அதிர்ச்சில மயக்கம் வந்துருச்சு அவ்வளவுதான்… மத்தபடி எனக்கு என்னை மாதிரியே இருக்கற என்னோட கிளோனிங்க பாக்கணும்னு ஆசையாதான் இருக்கு. என்னை அவ கிட்ட கூட்டிட்டு போ” என்ன மேனகா இயல்பாகக் சொல்ல, அவனுடைய கலவரத்துக்கு பின்னிருந்த காரணமே அதுதானே!

“என்னாதூஊஊஊ… ஹேய்… என்ன விளையாடறியா? தர்மூதான் விவரம் இல்லாம உன்னை தியானமண்டபத்துக்கு கூட்டிட்டு போயிட்டாரு. அது தெரிஞ்சு, நான் எவ்ளோ பதறி அடிச்சிட்டு அங்க ஓடி வந்தேன் தெரியுமா? உன்னை அவ கண்ணுல படாம இங்க கொண்டுவரதுக்குள்ள என் உயிர் போய் உயிர் வந்துடுச்சு. சான்ஸே இல்ல!” என படபடத்தான் விஜித்.

“ஏன்… அவ என்னோட க்ளோனிங்… நான் அவளை பார்த்தால் என்ன?” என்று கேட்டு, அவள் அவனை பார்த்து உக்கிரமாக முறைக்கவும், “சரி… சரி… நீ அவள பார்கறதுல எனக்கு ஒரு பிரச்சனையுமில்ல மெனூ! ஆனா அவளுக்கு மட்டும் உன்னை பத்தி தெரிஞ்சுது என்னை சம்காரம் செஞ்சிடுவா! என் விஷயத்துல அந்த அளவுக்கு பொஸ்ஸிவ் அவ. ஏன்னா…  நானும் இந்த தீவும்தான் அவளோட மொத்த உலகமே. அதனால உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன் தாயே… துர இருந்தே அவள பார்த்துட்டு… சைலண்டா கிளம்பிப் போயிடு… ப்ளீஸ்” என்றான் விஸ்வா கெஞ்சலாக.

அடப்பாவி, உன்னோட பொண்டாட்டிய பார்த்து இந்த பயம் பயப்படற” என அவள் கிண்டலாக கேட்க, “ஹேய்… இதை பயம்னு சொல்லாத. பதி பக்தின்னு சொல்லுவாங்க இல்ல. அது மாதிரி இது பத்தினி பக்தி” என அவன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்லவும், உண்மையிலேயே வியப்பாக இருந்தது மேனகாவுக்கு. சாப்பாட்டை கொண்டுவந்து வாயில் ஊட்டி விடும் அளவுக்கு அக்கறையாக நடந்துகொண்டாலும் கூட தன் கெத்தை கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கமாட்டான் விஸ்வா. அவனை சரிக்கட்டி அவள் இங்கே வருவதற்குள் அவள் பட்ட பாட்டை அவள்தான் அறிவாள். அப்பொழுதும் கூட அவளுடன் இங்கே வராமல் தான் நினைத்ததைத்தான் சாதித்தான் அவன்.

இவ்வளவையும் எண்ணியவாறு, “பரவாயில்ல… நீ பிழைச்சுப்ப” என்று சொல்லி சிரித்தாள் மேனகா.

நடந்தபடியே பேசியவாறு, அவனுடைய மனைவி ரம்பாவை காண்பிக்க நிர்மால்யாவை ஒட்டி இருக்கும் கடற்கரைக்கு மேனகாவை அழைத்து வந்தான் விஜித்.

அங்கே ஒரு சிறிய குடில் அமைக்கப்பட்டிருக்க, அதில் போடப்பட்டிருந்த மேடையில் அமர்ந்திருந்தாள் ரம்பா.

விரித்து விடப்பட்ட கூந்தல், காற்றில் அலையலையாக மிதக்க, கண்களை மூடி தியான நிலையில் அவள் அமர்ந்திருக்க, சற்று தொலைவிலிருந்தே அச்சு அசல் மேனகாவை போன்றே இருக்கும் அவளைக் காண்பித்தான் விஸ்வா.

“அதோ பார் அவதான்… மாதா ரம்பா  தேவி!” என்றவன், “என்ன… இவ உனக்கு மாதாவா?” என அவள் ஒரு மாதிரியாக அவனைப் பார்க்கவும், “மத்தவங்களுக்குத்தான்… எனக்கில்ல… எனக்கில்ல” என்றான் அவன் அவசரமாக.

அதில் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட, “அப்படினா உனக்கு” என அவள் கேட்க, “எனக்கு மட்டும் அவ மேனகா லைட்” என அவன் உல்லாசமாகச் சொல்லவும், “அது என்ன மேனகா லைட்” எனப் புரியாமல் கேட்டாள் அவள்.

“சொல்லுவேன்… ஆனா நீ என்னை அடிச்சாலும் அடிச்சிருவ தாயே!” என்றான் விஜித் பயப்படுபவன் போல் விஷம குரலில்

அதில் கடுப்பானாலும், கூடவே அதன் பின் இருக்கும் காரணத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமும் உண்டாகவே, “பயப்படாத… அடிக்கல்லாம் மாட்டேன்… என்னன்னு சொல்லு” என அவள் பற்களைக் கடித்தபடி சொல்ல, “உன் அளவுக்கு அதி மேதாவியெல்லாம் இல்ல அவ. அதாவது எங்கேயோ புத்தியை வெச்சுட்டு மந்திரிச்சு விட்ட மாதிரி சுத்த மட்டா. லைஃப் டைம் கோல்னு பல வருஷத்த வேஸ்ட் பண்ண மாட்டா.

உன் ரிசர்ச்க்காக, சந்திரமௌலி சொன்னாருன்னு, விஸ்வாவை கிட்னாப் பண்ண கொஞ்சம் நஞ்சமா செஞ்ச நீ? ஒரு சேட்டனோட கார்ல விஸ்வாவை கடத்தி… சிங் வேஷம் போட்டு… எங்க ஆஸ்ரமத்துக்குள்ள நுழைஞ்சு” என அவன் சொல்லி முடிக்கவில்லை, “அட சோகத்த… என்ன சொன்ன… என்ன சொன்ன… உங்க ஆஸ்ரமமா?” என அவள் எகிற, “ஆமாம்… இந்த ஆஸ்ரமம்தான் எனக்கு எல்லாம்” என அழுத்தமாகச் சொன்னவன், “சொல்ல வந்தத சொல்ல விடு… அப்பறம் கன்டிநியூட்டி விட்டு போயிடும்” என அசராமல் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்.

“ஆனா என் ரம்பா அப்படி இல்ல… அவ வெரி வெரி லைட்… என் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம, நான் என்ன சொன்னாலும் செய்வா. அதுக்கு மேல அதிகமா யோசிக்க மாட்டா. அப்படி பார்த்து பார்த்து அவ ப்ரெயின் செல்ஸ டிஸைன் செஞ்சாங்க சக்குமா” என அவன் முடிக்க, “விளங்கும்… நீ மட்டும் இல்ல உங்க ஆம்பள வர்க்கமே இப்படித்தான். பொண்ணுங்க தலையாட்டி பொம்மை மாதிரி நீங்க சொன்னதெல்லாம் கேக்கணும். அதனாலதான் எங்கப்பாவால சக்குமாவ அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியல. அவரை ஒர்ஷிப் பண்ற நாயகி கூட செட்டில் ஆகிட்டாரு” எனச் சொன்னவளுக்குக் கொஞ்சம் கூட கோபம் இல்லை. உண்மையில் மனம் நெகிழ்ந்துபோயிருந்தாள் மேனகா விஸ்வாவை நினைத்து. அவளை, அவளுடைய குறை நிறைகளுடன் அப்படியே மனதில் தாங்குபவன். அவளுக்காக தன் இயல்பை மாற்றிக்கொண்டது போல் வேஷம் போடாமல் அவனாகவே இருப்பவன்.

அவளுடைய அந்த அமைதி அவனை குழப்ப, “உண்மையை சொல்றேன்னு சொல்லி, உன்னை கழுவி கழுவி ஊத்திட்டு இருக்கேன், உனக்கு கோவமே வரலியா” என அவன் வியப்புடன் கேட்க, “நீ என்ன வேணா சொல்லிகோ. ஆனா இந்த ஃபெயிலியர் மாடலே போதும்னு ஒருத்தர் எனக்காக உருகிட்டு இருக்காரில்ல எனக்கு அதுவே போதும்” என அவள் இயல்பாக சொல்ல, “சாரி மெனு! நீ இண்டியாலேயே நம்பர் ஒன் சைன்டிஸ்ட். உன்னை யாரவது ஃபெயிலியர்னு சொல்லுவாங்களா. நீ கொஞ்சம் அட்வான்ஸ்ட் மடல். உன் விஸ்வா உன்னை தாங்குவாரு. ஆனா என்னால முடியாது” என தன் தோல்வியை ஒப்புக்கொண்டான் அவன்.

மறுபடியும் அவளுடைய கவனம் ரம்பாவிடம் சென்றது. சில நிமிடங்கள் பார்வையை அகற்றாமல் அவளையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவள்,  வியப்புடன் தன் முகத்தை கைகளால் தடவியவாறே, “பர்ஃபக்ட்… ஆயிரம் சொன்னாலும் சக்கும்மாவ அடிச்சுக்கவே முடியாதில்ல” என அவள் வியப்புடன் சொல்லிக்கொண்டிருக்க, அதையெல்லாம் காதில் வாங்காமல், சுற்றுப்புறம் மறந்தவனாக,

‘அம்மம்மா சரணம் சரணம்

உன் பாதங்கள்… அப்பப்போ தரணும் தரணும்

என் தேவைகள்…

நான் பார்க்க… வரம் கேட்க… அருள் சேர்க்க வா ஈஸ்வரி… என்கிற ரீதியில் வைத்த கண் வாங்காமல். கண்களில் காதல் வழிய ரம்பாவை பார்த்துக்கொண்டிருந்தான் விஜித்.

“அடப்பாவி… பக்தி பழம் மாதிரி நீ போட்டுட்டு இருக்கற சாமியார் வேஷத்துக்கு… ஒரு பொண்ணை… இப்படி ஒரு காம பார்வை பார்த்துட்டு இருக்க… இது உனக்கே கேவலமா இல்ல” என மேனகா அவனை ஓட்ட, “முதல் பாயிண்ட் அவ யாரோ ஒரு பொண்ணு இல்ல… என் ஒய்ஃப். ரெண்டாவது பாயிண்ட் … காமம்னு ஆபாசமா பேசக்கூடாது இது புனிதமான தெய்வீக காதல்… மூணாவது பாயிண்ட் பக்தியும் காதலும் ஒண்ணோட ஒண்ணு பின்னி பிணைஞ்ச விஷயம்… ஸோ ரெண்டையும் கன்ஃபியூஸ் பண்ணிக்கவே கூடாது…” எனத் தீவிரமாகச் சொன்னான் விஜித்.

“எப்படியோ போய் தோலை!” என்றவள், “இன்னும் ஒரே ஒரு டாஸ்க் மட்டும்தான் பெண்டிங்” என்று சொல்லிவிட்டு. “நான் இங்க வந்ததே என் மில்லிய தேடித்தான். ஆனா உன்னை இங்க பார்ப்பேன்னு நான் சத்தியமா நினைச்சு கூட பார்க்கல” என்றவள், “ரொம்ப ஹாப்பியா இருக்கு… மில்லிய மட்டும் பார்த்துட்டா நான் நிம்மதியா ஊர் போய் சேருவேன்” என்றாள் மேனகா.

“என்ன முதல்ல ரம்பா… இப்ப மில்லியா? அடங்கவே மாட்டியா நீ” எனக் கலவரமாகக் கேட்டவன், ஒரு நொடி திடுக்கிட்டு, “ஆமாம் மில்லி இங்கதான் இருக்குன்னு உனக்கு எப்படி தெரியும். யார் சொன்னாங்க?” என அவன் படபடக்க, “யாரோ சொன்னாங்க? இப்ப என்ன அதைப் பத்தி. எனக்கு உடனே மில்லியை பார்க்கணும் டாட்” என்றால் அவள் விடாப்பிடியாக.

“மில்லி இங்க ரொம்ப சேஃபா வெச்சிருக்கோம். ஆனா அதை நீ போய் பார்க்கறது உனக்குதான் அவ்வளவா சேஃப் இல்ல” என விஜித் சொல்ல அவள் அவனை ஒரு புரியாத பார்வை பார்க்கவும், “ஏன்னா மில்லி ஒரு ஸ்ட்ரேஞ் வைரசால அஃபெக்ட் ஆகியிருக்கு” என்றான் அவன்.

“அது என்ன எனக்கே தெரியாத அப்படி ஒரு ஸ்ட்ரேஞ் வைரஸ்… சொல்லு நானும் தெரிஞ்சுக்கறேன்” என அவள் ஒரு மரபியல் விஞ்ஞானியாக தன் கெத்தை காண்பிக்க, “உண்மையா மேனகா… அந்த வைரஸ் பத்தி யாருக்கும் இதுவரைக்கும் தெரியாது. அவ்வளவு சீக்ரட்டா மெயின்டைன் பண்ணிட்டு இருக்கோம். நிம்மிதான் அதுக்கு வைரஸ்-143ன்னு பேர் வெச்சார். அது கொஞ்சம் கொஞ்சம் ரேபிஸ் மாதிரி ஒரு நியூரோட்ரோபிக் வைரஸ். மில்லி யாரைவாவது கடிச்சா… கடிச்சா என்ன கடிச்சா, மில்லியோட சலைவா பட்டா கூட அந்த வைரஸ் மனுஷங்களுக்கு தொத்திக்கும். ஃபர்ஸ்ட் ஜுரம் வரும். தென் அது பிரைன்ல உண்டாக்கற மாற்றத்தால மனுஷங்களுக்குள்ள இருக்கற லவ் ஹார்மோன் தாறுமாறா வேலை செய்யும்.

அதுகிட்ட கடிவாங்கினத்தோட எபெக்ட்தான், பெண்கள்னாலே டு தி கோர் வெறுத்துட்டு, பொண்ணுங்கள இந்த அசிரமத்துக்குள்ள கூட விடமாட்டேன்னு சொல்லிட்டு இருந்த நிம்மி… நம்ம தொல்லைய கல்யாணம் செஞ்சுக்கற அளவுக்கு மாறிப்போனார்.

அவர் மட்டும் இல்ல சத்யானந்தானு ஒரு ஸ்வாமிஜி இருந்தார் இல்ல அவரும் அப்படிதான். அவரும் நம்ம மில்லி கிட்ட கடி வாங்கிட்டு… ஆஸ்ரமத்தை விட்டே ஓடி போயிட்டாரு.

ஒரு நார்மல் லைப் வாழ மில்லிதான் காரணம்னு,  நிம்மிக்கு அத ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனா நாயகிக்கு அதை எப்பவுமே பிடிக்காது இல்ல. அதனால இங்க ஒரு லேப் ரெடி பண்ணி மில்லிய ரொம்ப பத்திரமா வெச்சு காப்பாத்திட்டு இருக்கார்” என அவன் நீண்ட விளக்கம் கொடுக்க,

“இருப்பதாயிரத்து தொள்ளயிரத்து தொன்னூத்தி ஒண்ணு” என்றாள் மேனகா ஆயாசத்துடன், “என்ன?” என அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க, “இதோட எனக்கு ஏற்பட்ட ஷாக்கோட எண்ணிக்கை” என்றவள், “இப்ப என்ன… என்னால அதை பார்க்க முடியுமா? இல்ல முடியாதா?’ என அவள் கண்டிப்புடன் கேட்க, மறுக்க இயலாமல் அவன் குறிப்பிட்ட அந்த ஆராய்ச்சி கூடத்துக்கு அவளை அழைத்து வந்தான் விஜித்.

மிக மிகப் பாதுகாப்பாக, அதன் உள்ளே செல்வதற்காக சில பிரத்தியேக உடைகளை அணிந்து கொண்டு மில்லியை பத்திரமாக வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

அங்கே இருந்த கண்ணடி கூண்டின் அருகில் அவளை அழைத்துச்சென்ற விஜித் மின்சாரம் தாக்கியதுபோல், “ஐயோ” என்று பதற, அந்த பதட்டம் மேனகாவையும் தொற்றிக்கொள்ள, “என்ன அச்சு விஜித்” என்றாள் அவள்.

“கூண்டுக்குள்ள மில்லி இல்ல. அது இங்கிருந்து எஸ்… ஆயிடிச்சு? இனிமேல் இந்த வைரஸ் எங்க… எங்க… யார் யாருக்கெல்லாம் பரவப்போகுதோ?! காயா! மாயா! சிவஸ்ய சாயா!” என்றான் விஜித் உச்சபட்ச அதிர்ச்சியுடன்.

அதை சொல்லும் பொழுது குரலே வெளிவராமல் வெறும் காற்று மட்டுமே வெளிவந்தது அவனுடைய தொண்டையிலிருந்து.

மீண்டும் உண்டான அதிர்ச்சியில், உலகமே தட்டாமாலை சுற்ற அவன் மீதே மயங்கிச் சரிந்தாள் மேனகா.

(முற்றும்)

3 thoughts on “Virus Attack – Final(2)

  • Wow super story I really enjoy the story 👌👌👌👌👌

    Reply
  • Enjoyed the story from epi 1

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content