En iniya pynthamizhe-2
2
கடந்த பத்து வருடங்களில் அந்த கிராமத்திலிருந்த வீடுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாடி வீடுகளாக மாறியிருந்தன. தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் கூரை வேய்ந்த வீடுகளையே பார்க்க முடிந்தது. அவ்வகை கூரை வீடுதான் மதுசூதனின் வீடும்.
கூரை வீடாக இருந்தாலும் உள்ளே சுவரெல்லாம் வைத்து வசதியாக சமையலறை, படுக்கையறை என்று தனித்தனியாக அறைகளும் சகுந்தலாவின் தேநீர் கடைக்கு முன்புறம் தனியாக தடுப்பு வைத்து சுவரும் வைத்து கட்டப்பட்டிருந்தது, எனினும் மேல் தளத்திற்கு பதிலாக கூரை வேயப்பட்டு இருந்தது. வெயில் காலங்களில் வீட்டில் உஷ்ணம் தெரியதிருக்கவே தளம் அமைக்கவில்லை என்று மதுசூதனன் சமாளித்தாலும் அதற்கு உண்மையான காரணம் குழந்தைகளுக்கான படிப்பு செலவிற்கு சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் காசை செலவழித்து வீட்டை கட்டுவதில் அவருக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை என்பதுதான்.
அதேநேரம் அவர்கள் வீட்டில் அழகிற்கும் வசதிக்கும் எந்த குறைவுமில்லை. தொலைக்காட்சி, குளிர்சாதனபெட்டி என சாதாரண நடுத்தர குடிக்களின் வீட்டிலிருக்கும் அனைத்து மின்சாதன உபகரணங்களும் அவர்கள் வீட்டிலும் இருந்தன.
பின்புறம் மாட்டு கொட்டகை, கிணறு, விறகடுப்பு வைத்த தனி கைச்சாளை(சமையலறை) கூடவே தென்னை, வேப்பம், அரசம் என்ற மரவகைகளும் மற்றும் கிழங்கு காய்கறி வகைகளும் என கிடைத்த இடங்களில் எல்லாம் வஞ்சனை இல்லாமல் பயிரிட்டிருந்தனர். அதேநேரம் அந்த செடிகளுக்கு அவர்கள் குளிக்கும் தண்ணீரே பாய்வது போல கழிவறைகள் வெளியேவே அமைக்கப்பட்டிருந்தன.
இதெல்லாவற்றையும் தாண்டி கிராமப்புற வீடுகளுக்கே உரித்தான திண்ணைகள் மதுசூதனின் வீட்டிலும் நீட்டமாக அதுவும் ஒரேநேரத்தில் பத்து பதினைந்து பேர் அமர்ந்து அரட்டை அடிக்குமளவுக்காய் இருந்தது. தற்போது அந்த பெரிய திண்ணையில் அரசன் மட்டுமே தனியே பரிதாபகரமாக அமர்ந்திருந்தான்.
உள்ளே அவன் சகோதிரிகள் செய்யும் அலும்புகள் தாங்க முடியாமல்தான் அவன் அங்கே வந்து அமர்ந்தது.
“யக்கா… செத்த நேரம்… நான் சீவிக்கிறேனே” என்று செல்வி கெஞ்ச,
“நான் முடிச்ச புறவுதான் தருவேன்” என்றாள் தமிழ் திட்டவட்டமாக!
அதற்குள் சகுந்தலா வந்து, “தமிழு… செல்வி… வேன் வந்து காத்திட்டு கிடக்குல… வெரசா கிளம்பி வாங்க… நேரத்தோடு மண்டபத்துக்கு போவோணும் இல்ல” என்று குரல் கொடுக்கவும்,
“நாங்க பஸ்ல வந்துக்கிடுறோம்…. நீங்க அரசனை அழைச்சு போட்டு கிளம்புங்க ம்மா” என்று தமிழ் உள்ளிருந்தபடி குரல் கொடுக்க,
“ம்க்கும்… உம்பட ரெண்டு பேரையும் நம்பி வூட்டை வுட்டு போனா அம்புட்டுதான்” என்று கடுப்பான சகுந்தலா மேலும், “இப்ப உள்ற வந்தேன்னு வை… இரண்டு பேரையும் தோளையும் உரிச்சு தொங்க வுட்ருவேனாக்கும்… சீக்கிரம் கிளம்பி வாங்கடி“ என்று மிரட்டவும்,
“இதோ அஞ்சே நிமிஷங்க ம்மா” என்று இருவரும் அடித்து பிடித்து தயாராகி வந்து நின்றனர்.
கிளி பச்சை நிறத்தில் தமிழ் அழகாக பட்டு புடவை உடுத்தியும், செல்வி சிவப்பு வண்ணத்தில் பட்டுபாவடை தாவணியும் அணிந்து ஒப்பனைகளோடு பொன்னும் பூவும் சூட்டி அம்சமாக அலங்கரித்தபடி வந்து நிற்க,
“எத்தனை வெசை கூப்புடுறது? இரண்டு பெரும் வராளுங்க பாரு… ஆடி அசைஞ்சு திருவாரூர் தேராட்டும்” என்று சகுந்தலா கடுகடுத்த அதேநேரம் புடவையில் பெரிய மனுஷி போல வந்து நின்ற மூத்தவளை பார்த்து அவருக்கு மனம் நெருடியது. தற்போதுதான் அவள் பன்னிரெண்டாவது தேர்வே எழுதி முடித்திருந்தாள்.
அதற்குள் இத்தனை முதிர்ச்சியாக தெரிகிறாளே என்று தாயிற்கே உண்டான தவிப்பும் மனகலக்கமும் அவரை சூழ்ந்து கொண்டது.
அவர் இப்படி யோசித்திருக்க அரசன் இடைபுகுந்து, “உங்க இரண்டு பேரோட அழகுக்கு முன்னாடி திரிஷாவும் நயன்தாராவுமே பிச்சை வாங்கோனுங்க க்கா” என்று கிண்டல் செய்தவன் வடிவேல் பாணியில், “ஒரேடியா எம்புட்டு மேக் அப்ப்ப்ப்ப்பூ” என்று இருவரையும் சேர்த்தே வார, அவன் சொன்ன விதத்தில் அத்தனை நேரமிருந்த கவலை முழுவதும் மறைந்து சகுந்தலா கொல்லென்று சிரித்துவிட்டார்.
ஆனால் தமிழ் கடுப்பாகி, “என்றா நக்கலா?” என்று தம்பியை முறைக்க உடனடியாக சகுந்தலா, “அவன் சொன்னதுல என்னங்கடி தப்பு… இரண்டு பேரும் சீவி சிங்காரிச்சு வர்றதுக்குள்ளார அங்கன கண்ணாலமே நடந்து முடிஞ்சி போடும்” என்று மகனுக்கு பரிந்து பேசினார்.
இருசகோதிரிகளும் தம்பியை வஞ்சமாக பார்த்து, “மவனே! நீ தனியா சிக்குவ இல்லடி” என்று சமிஞ்சை செய்ய,
அரசனோ தன் சகோதிரிகளுக்கு பழுப்பு காட்டிவிட்டு, “சிக்குனாதானே” என்று தன் அம்மாவின் கையை பற்றி கொண்டு முன்னேறி சென்றுவிட்டான்.
அவர்கள் கிராமத்திலிருந்து புறபட்ட அந்த வேன் மண்டபத்தை வந்தடைய ஒருமணிநேரத்திற்கு மேலானது.
அவர்கள் ஜில்லாவிலேயே இருக்கும் பிரமாண்டமான திருமண மண்டபம் அதுதான்.
அதன் பிரமிப்பான தோற்றத்தையும் ஆடம்பரமான அலங்காரத்தையும் ஆச்சரியமாக பார்த்து கொண்டே தமிழ் உள்ளே வந்தாள்.
இதுவரையில் அவள் சொந்தங்களில் யாருக்கும் இப்படியொரு மண்டபத்தில் திருமணம் நடந்ததே இல்லை. அதுவும் அவர்களின் பெரும்பாலான உறவுகளும் சாதாரண விவசாய குடும்பங்கள் என்பதால் இது போன்ற மண்டபங்களில் திருமணம் நடைபெறுவதற்கெல்லாம் சாத்தியமும் இல்லை.
மண்டபத்தின் நுழைவு வாயிலில் பூவலங்காரங்களோடு, “ரவீந்திரன் வெட்ஸ் அனிதா லக்ஷ்மி” என்று மணமக்கள் பெயர் பொறிக்கப்பட்டிருந்த பலகையை தமிழ் வெகுஆர்வமாக பார்த்தபடியே கடந்து சென்றாள்.
“என்ன க்கா பார்க்கிற?” என்று செல்வி கேட்க,
அவளின் கண்களிலிருந்து பொங்கிய ஆவல் பலகையிலிருந்த பெயரை பார்த்து அல்ல. பீ இ என்ற மணமக்களின் பெயருக்கு அருகிலிருந்த பட்டத்தை பார்த்துதான்!
அவள் அதனை தன் தங்கையிடம் சுட்டிக்காட்டியபடி, “எனக்கு இஞ்சினியர் காலேஜ்ல சீட்டு கிடைச்சு போடும்லடி” என்று ஏக்கமாக கேட்க,
“உனக்கு கிடைக்காம வேற யாருக்கு க்கா… இந்த ஜில்லாவில நீதான் முத மார்க் எடுக்க போறியாக்கும் பார்த்துக்கிட்டே இரு” என்று தமக்கை மீதிருந்த நம்பிக்கையை தங்கை பறைசாற்ற தமிழின் விழிகளில் நீர் ஒதுங்கியது.
இன்றைய காலகட்டத்தில் பொறியியல் படிப்பு என்பது பெரிய விஷயமாக இல்லாவிட்டாலும் தமிழை போன்ற ஒரு சாதாரண விவசாயின் மகளுக்கு அது பெரிய கனவுதான்.
அந்த கனவிற்கு எந்த வகையிலாவது பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் அவளுக்கு எப்போதும் உண்டு.
அப்போது சகுந்தலா அவர்களை நேராக மணமகன் அறைக்கு அழைத்து செல்ல, “வாங்க சித்தி… வா தமிழு செல்வி” என்று மணமகன் ரவி அவர்களை ஆர்வமாக வரவேற்றான்
“வாங்க கண்ணுங்களா?” என்று அவனின் தாயும் அவர்களை பாசமாக அழைத்த அதேநேரம் தன் ஒரகத்தி சகுந்தலாவிடம், “ஏன் சக்கு… செத்த சீக்கிரமா வந்திருக்கலாம்ல” என்று கேட்டு கொண்டே திருமண வேலைகளில் அவரையும் சேர்த்து இணைத்து கொண்டார்.
“எப்படி இருக்கீங்க ண்ணா? இப்ப எல்லாம் நீங்க ஊரு பக்கமே வர்றது இல்ல” என்று தமிழ் ரவியை விசாரித்து கொண்டிருக்க,
“எங்க ம்மா வர்றது… வேலையே சரியா இருக்கு” என்றான்.
“ஆமா நீ போர்ட் எக்ஸாம் முடிச்சிருக்க இல்ல… மேலே என்ன படிக்க போற?” என்றவன் அவளிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பெரியவர் அவனிடம் பேச்சு கொடுத்தார்.
“ஊர்ல இருக்க விவசாய நிலத்தை எல்லாம் வித்து போட்டியாட்டமா இருக்கு” என்றவர் கேட்க,
“ஆமா மாமா… அதை வைச்சிக்கிட்டு நான் என்னத்த செய்ய.. என்னால விவசாயம் எல்லாம் பார்க்க முடியாது… அப்பாவும் இப்ப இருக்க நிலைமையில விவசாயம் பார்க்கிறது கஷ்டம்தான்” என்றான் அவன்.
“என்னவே அப்படி சொல்லி போட்ட… பூர்விக நிலத்தை வித்து போட்டன்னா சொந்த ஊரு கூட உனக்கு சொந்தமில்லாம போயிடுமாக்கும்” என்றவர் வருத்தமாக அதேநேரம் கோபமாகவும் சொல்லிவிட்டு செல்ல அவன் காதை குடைந்தபடி, “கடுப்படிக்கிறாங்க… சொந்த ஊரு… பூர்விகம்… விவாசயம்னு சொல்லிக்கிட்டு” என்றவன் தமிழ் புறம் திரும்பி,
“ஏன் தமிழு… நான் படிச்ச படிப்புக்கு இந்த ஊர்ல என்னத்த செய்ய முடியும்… அதுவுமில்லாம பி இ முடிச்சு நான் ஐ டி கம்பெனி ல பிளேசான பிறகுதான் இன்னைக்கு இந்தளவு வசதியா இருக்கேன்… சென்னையில ஒரு தனி பிளேட் வாங்கிவிட்டிருக்கேன்…
ஆனா இவங்க சொல்லற மாதிரி சொந்த ஊரு விவசாயம்னு இருந்தா இதெல்லாம் சாத்தியமா யோசிச்சு பாரு… நம்ம தாத்தா உன் அப்பா என் அப்பா எல்லோரும் விவசாயம் பண்ணாங்க அப்படி என்னத்த சேர்த்து வைச்சுட்டாங்க… விவசாயம் பண்ணாம ஒரு வேளை ஆளுகொரு பொட்டி கடை வைச்சு இருந்தலாவது இன்னைக்கு அது பெரிய சூப்பர் மார்கெட்டாவாச்சும் மாறியிருக்கும்” என்றவன் சொன்னதை கேட்டு அவளுக்கு சுருக்கென்று இருந்தது. ஏனோ தன் அப்பாவின் வேலையை பற்றி அவன் அத்தனை கீழாக பேசுவது மனதிற்கு வருத்தமாக இருந்த போதும் ஒரு வகையில் அது ஏற்று கொள்ள வேண்டிய கசப்பான உண்மைதான் என்றும் தோன்றியது.
“நீயும் என்னை மாதிரி படிச்சு உன் குடும்பத்தை ஒசத்த பாரு” என்றவன் சொன்ன நொடி,
“நானும் பி இ கம்புயுட்டர் சைன்ஸ் தானுங்கண்ணா படிக்கலாம்னுட்டு இருக்கேன்” என்றவள் சொன்ன நொடி அவன் முகத்தில் அத்தனை பிரகாசம்.
“சூப்பர் தமிழ்… கேம்பெஸ் இண்டர்வியூ வர நல்ல காலேஜா பார்த்து சேரு… அதுதான் ரொம்ப முக்கியம்… அப்பத்தான் படிப்பை முடிச்ச கையோட பெரிய கம்பனில நமக்கு வேலை கிடைக்கும்… பெட்டர் நீ சென்னையில இருக்க காலேஜ் கிடைச்சா சேர்ந்துடு… நம்ம வீட்டுல இருந்தே காலேஜ் போயிட்டு வரலாம்” என்றவன் சொல்லி கொண்டிருக்கும் போது,
“டே மாப்பிளை” என்று ரவியின் தோழர்கள் அனைவரும் உள்ளே நுழையவும் தமிழ் அதற்கு மேல் அங்கே இருப்பது உசிதமில்லை என்று எண்ணி வெளியே வந்துவிட்டாள்.
“எங்கே இந்த செல்வி புள்ள? நம்ம கூடத்தானே இருந்துச்சு” என்று அவள் தன் தங்கையை தேடி கொண்டு மண்டபத்திற்கு பின்புறமாக வந்துவிட,
“ஏடி கருவாச்சி!” என்ற அழைப்பில் அவளுக்கு திக்கென்றது. அதேநேரம் தாறுமாறாக கோபம் ஏறியது.
“இந்த பக்கி எங்க இங்கன வந்துச்சு” என்று அவள் கடுப்பாக திரும்ப சந்திரன் பின்னிருந்து அவளை பார்த்து எள்ளலாக நகைக்கவும், “யாரை பார்த்துடா கருவாச்சின்னு சொன்ன எருமை?” என்றவள் சீற,
“உன்னைய பார்த்துதான்டி சொன்னேன் என் கருவாச்சி” என்றவன் மீண்டும் அழுத்தி சொல்லவும்,
“மறுக்கா அப்படி சொன்னா ஒன்ற வாயை கிழிச்சு போடுவேனாக்கும்” என்றவள் கொந்தளிக்க,
“அதுக்கு முன்ன நான் ஒன்ற பல்லை தட்டி கையில கொடுத்து போடுவேனாக்கும்” என்றவன் பதிலுக்கு அவளிடம் மல்லுக்கு நின்றான்.
இவர்கள் சண்டையினூடே, “எம். சி. ஆரு” என்ற பேச்சி கிழவி அழைத்து கொண்டே அங்கே வர, “அம்மத்தா” என்றான் அவன்.
“ஏய்யய்யா ராசா… எங்கயா போன… உன்னைய எங்கனய எல்லாம் தேடி போட்டு வரேன் தெரியுமா?” என்றவர் பாசமாக உருக,
“ஷப்பா முடியல” என்று தமிழ் தலையிலடித்து கொண்டதோடு அல்லாமல் பேச்சியை பார்த்து, “ஏ! கெழவி… ஒன்ற பேரனை நீ இடுப்பில வைச்சு கூட கொஞ்சிக்கோ… ஆனா எம்,ஜி.ஆருன்னு மட்டும் கூப்பிட்டு அந்த நல்ல மனுஷனோட பேரை நாரடிக்காதே” என்றவள் கடுப்பிலும் கடுப்பாக உரைக்க,
“அடியேய்” என்று பொங்கினான் சந்திரன்.
அப்போதுதான் பேச்சி அவளை உற்று பார்த்து யாரென்று அடையாளம் தெரியாமல், “ஆரு டி அவ… எம். சி. ஆரை கேவலமா பேசறது” என்று கேட்டு வைத்தார்.
“ஏ செவிட்டு கெழிவி… நான் ஒன்னும் எம். சி. ஆரை சொல்லல… ஒன்ற உருப்படாத பேரனைத்தான் சொன்னேன்”
“எடுபட்ட சிறுக்கி… என்ற பேரனை பத்தி நீ யாருடி பேச?” என்றவர் முறைக்க,
“நான் ஒன்னும் பேசல… ஒன்ற பேரன்தான் என்னைய தேடிக்கிட்டு வந்து வம்பு வளர்க்கான்”
“ஐயோ! அம்மத்தா ஒன்ற மேல சத்தியமா இல்ல… இவதான் என்கிட்ட பேசி வம்பு வளக்கா” என்றவன் பாட்டி தலையில் கை வைத்து அப்படியே பிளேட்டை தலை கீழாக திருப்ப,
“அட! பக்கி பயபுள்ள” என்றவள் அதிர்ச்சியாகும் போதே பேச்சிக்கு சுறுசுறுவென கோபமேற,
“ஊரெல்ல்லாம் இப்படிதான் என்ற பேரனை பார்த்து புளுகிட்டு திரியிரியாடி கொழப்பெடுத்த சிறுக்கி… நீ அவனை வம்பு இழுத்து போட்டு அவன் ஒன்றகிட்ட வம்பு இழுத்தான் புளுகுதியா… கேட்கிறவன் கேனயனா இருந்தா கேப்பையில நெய் வடியுதும்பாங்களாம்…“ என்று திருமணம் மண்டபம் என்றும் பாராமல் பேச்சி கிழவி தன் திருவாயை திறக்கவும், இனி ஒரு நிமிடம் கூட அங்கே நிற்க கூடாது. அதுதான் தனக்கும் தன் காதுக்கும் நல்லது என்று அவள் ஓட்டம் பிடிக்க செல்வி அவளை வழிமறித்து, “யக்கா… எங்க அவசரமா ஓடுற” என்று வினவ,
“உன்னைய தேடிக்கிட்டு போய் அந்த லூசு கெழவி கிட்டயும் அது பேரன்கிட்டயும் மாட்டிக்கிட்டேன் புள்ள” என்றாள்.
அதேநேரம் சந்திரன் மூச்சு விடாமல் பேசிய தன் பாட்டியிடம், “போதும் வுடு அம்மத்தா” என்று சொல்ல,
“ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவ தோலை உரிச்சு போட்டு உப்பு கண்டம் போடல என்ற பேர் பேச்சியம்மா இல்ல” என்று ஆவேசமாக அவர் சபதம் வேறு எடுக்க,
“ஆமா அம்மத்தா… செய்யோணும்… அந்த வாயாடியை ஏதாச்சும் செய்யோணும்” என்றவன் சொன்ன தொனியில் பழிவாங்கலோ அல்லது கோபமோ துளி கூட இல்லை. அதற்கு மாறாய் வேறு ஒரு அர்த்தம் ஒளிந்திருந்ததை பேச்சி கிழவியின் வயதிற்கு அவரால் நிச்சயம் புரிந்து கொள்ள இயலாது.
to comment please click here
***********
மாடிதோட்டம் – குறிப்பு1
குப்பையிலிருந்து…
மாடிதோட்டம் அமைக்க முதல் படி நம் வீட்டு குப்பைகளை பிரிப்பதுதான். மக்கும் குப்பை மக்காத குப்பை என்று குப்பைகளை பிரிக்க சொல்லி மாநகராட்சியின் கொண்டு வந்த திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் நடைமுறையில் அதை எத்தனை பேர் சாத்தியப்படுத்தி கொண்டிருக்கிறோம்.
ட்ரெண்டியான் செல்போன் டிவி என்று புதிபுதிதாக வந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பத்திற்கு தாவி கொண்டே இருக்கிறோம். வளர்ச்சி, முன்னேற்றம் என்று நாம் சொல்லி கொண்டாலும் இனி வரும் காலங்களில் இந்த மாதிரியான எலெக்ட்ரானிக் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளின் நிலைமை என்ன என்று யோசித்தால் நம்மிடம் அதற்கு நிச்சயம் பதிலில்லை.
ஆனால் மக்கும் குப்பை… அதன் மூலம் என்ன செய்யலாம் என்பதற்கு என்னிடம் பதிலிருக்கிறது. சமீபமாக என் வீட்டில் பின்புறம் மக்கும் குப்பைகளை கொட்டும் தொட்டி ஒன்றை அமைத்திருக்கிறேன்.
சமையலறை கழிவுகளான வெங்காய தோல் பூண்டு தோல் காய்கறி மற்றும் பழ தோல்கள் வீட்டை சுற்றி கொட்டும் காய்ந்த சருகுகள் சாப்பிட்ட வாழ இலைகள் என எல்லாமே அந்த தொட்டிக்கு போய்விடும். அதனுடன் கூடவே கொஞ்சமாக மண் மற்றும் மோர் ஊற்றி அவ்வப்போது கிளறிவிட்டால் அந்த கழிவுகள் அதுவாக மக்கி மண்ணாகிவிடும். அதிகபடசம் ஒருமாதம். நான் பல மாதமாக நாதா தொட்டியை வைத்திருக்கிறேன். இதனால் வரை அதிலிருந்து துர்நாற்றம் வீசியதே இல்லை.
ஆதலால் இவ்வாறு செய்வதால் எந்த பாதிப்பும் கிடையாது. முடிந்தவரை இரண்டு தொட்டிகளை வைத்து கொண்டு ஒன்று நிரம்பியதும் மற்றொன்று என்று நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
அது ஒரு காலகட்டத்தில் அழுகி கருப்பாக மண் போன்றே மாறிவிடும். அதாவது அந்த குப்பையில் உருவாகும் கிருமிகள் அந்த கழிவுகளை தின்று வெளியேற்றும் கழிவுகள்தான் அந்த கருப்பு மண் போன்றிருப்பது. அதாவது compost
நாம் உருவாக்க போகும் மாடித்தோட்டதிற்கு சுலபமாக ரசாயனம் இன்றி நாமே தயாரித்த உரம்தான் இந்த compost என்பது. செடி வைக்கும் போது மண் மற்றும் இந்த கழிவான compost கலந்து செடி அல்லது விதையிடுவது நல்லது.
Compost தயாரிக்கும் முறை என்று youtubeல் தேடி பார்த்தால் ஏகப்பட்ட விடியோஸ் வரும்.
மாடிதோட்டம் வைக்கத்தான் இதை செய்ய வேண்டுமென்று இல்லை. குப்பைகளை பிரித்து கொட்டுவதன் மூலம் நமக்கும் நம் பூமிக்கும் நாளைய நம் சந்ததிகளுக்கும் கூட நல்லதுதானே!
to comment please click here