You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

அபிராமி ❤ராதாகிருஷ்ணன்(பிறை நாவல்)

Quote

ராதா சென்னை புறப்படுவதாக தெரிவிக்க, அவனின் தாத்தா வேண்டாமென்று முட்டுக்கட்டை போட்டார். அவன் அம்மா சகுந்தலாவும் மகனிடம் போக வேண்டுமென்று மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் அவனுக்கு போயே ஆக வேண்டும். பானுவை பார்த்தே தீர வேண்டுமென்று இருந்தது. அதுவும் அவன் தன்னிலையை விளக்கி எழுதிய கடிதங்களுக்கு எதற்குமே அவளிடமிருந்து பதில் கடிதம் வரவில்லை. என்னவோ சரியில்லை என்று பட்டது.

அவன் நிலையை உணர்ந்து கொண்ட அபிராமி, “ஒன்னும் கவலைப்பட வேண்டாம்... நாளைக்கு நீங்க மெட்ராஸ்ல இருப்பீங்க... பானுவை பார்ப்பீங்க... அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்... ஆனா போறத்துக்கு முன்ன அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடுங்க” என, அவன் சம்மதமாக தலையசைத்தான்.

அன்று இரவு அவன் பெட்டியில் தன் துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்தான். அங்கே வந்த அபிராமியும் அவனுக்கு துணிகளை மடித்து கொடுத்து உதவினாள்.

இறுதியாக அவன் தன்னுடைய டைரியை பையில் எடுத்து வைக்க தூக்கிய போது அவனும் பானுவும் சேர்ந்திருந்த புகைப்படம் வெளியே வந்த விழுந்தது.

அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தவளோ, “இவங்கதான் பானுவா? அழகா இருக்காங்க

ஆனா ஏன் என்கிட்ட நீங்க இந்த போட்டோவை காண்பிக்கவே இல்லை ராதா” என்று முகத்தை சுருக்கினாள்.

“இந்த போட்டோ டைரில இருந்ததையே நான் இப்பதான் பார்க்கிறேன் அபி” என்றவன் அதனை வாங்கி டைரிக்குள் பத்திரப்படுத்தி பெட்டியில் வைத்தான்.

“ஆமா எப்போ எடுத்த போட்டோ இது?”

“ஒரு வேலைக்காக அப்ளிக்கேஷன் பார்முல ஓட்ட ஸ்டூடியோவுக்கு போட்டோ எடுக்க போன போது... என் கூட பானுவும் வந்திருந்தா... இரண்டு பேரும் ஒண்ணா ஒரு போட்டோ எடுத்துக்கலாமானு கேட்டா... சரின்னு எடுத்துக்கிட்டோம்... இத போல இன்னொரு காபி அவகிட்டயும் இருக்கு” என்றவன் பேசி கொண்டே தன் பெட்டியை மூடினான்.

“இதுதான் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து இருக்க போற கடைசி நாள் இல்ல ராதா?” என்று ஒரு மாதிரி ஏக்கமாக கேட்டாள்.

“ஏன் அப்படி சொல்ற... இதுக்கு அப்புறம் நாம பார்க்காம பேசாம போயிடுவோமா என்ன?” அவன் பதிலுக்கு கேட்க,  

“பார்ப்போம்... பேசுவோம்... ஆனா இந்த ஒரு வாரம் இருந்த மாதிரி பேசி சிரிச்சி ஒரே ரூம்ல இருக்க முடியாது இல்ல” என்றாள். அந்த வார்த்தைகளை சொல்லும் போதே அவள் குரல் கம்மியது. அவள் சொல்வதை ஆமோதித்து அவனும் அமைதியாகிவிட்டான்.

உண்மைதான். இந்த ஒரு வாரமாக அவர்கள் இருவரும் ஒரே அறையில் சேர்ந்து கடத்திய இரவுகள்.

எதிரெதிரே அமர்ந்து தங்கள் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கதை போல பேசி பழகி சிரித்தனர். கணவன் மனைவியாக அல்லாது நட்புணர்வுடன்தான் என்றாலும் ஏதொவொரு மூலையில் ஒருவர் மீது ஒருவருக்கான ஈர்ப்புணர்வும் ஒளிந்து கொண்டுதான் இருந்தது. அதை இருவருமே பரஸ்பரம் உணர்ந்திருந்தனர்.

நேரமெல்லாம் மறந்து சிரிக்க சிரிக்க உரையாடிய அந்தச் சிறு பொழுதுகள் இனி வரவே போவதில்லை என்ற நிதர்சனம் இருவருக்குள்ளும் ஒருவித கனமான உணர்வை கடத்தியிருந்தது.

“சரி ராதா... நீங்க படுத்துக்கோங்க... காலைல சீக்கிரமா எழுந்து கிளம்பணும் வேற” என்றவள் அவனுக்காக பாயை விரிக்க முற்பட,

“நான் போட்டுகிறேன் அபி” என்றவன் வாங்கி அதனை தரையில் விரித்தான்.

அவனுக்கு தலையணையையும் போர்வையும் எடுத்து கொடுத்துவிட்டு  விளக்கை அணைத்துவிட்டு அவள் கட்டிலில் படுத்து கொண்டாள்.

கண்களை மூடியதும் இனம் புரியாத பய உணர்வு கப்பென்று அபிராமியின் நெஞ்சை அழுத்தி பிடித்து கொண்டது. அவளால் உறங்க முடியவில்லை. இப்படியும் அப்படியுமாக அவள் புரண்டு படுக்கவும் கட்டில் கிறீச்சிட்டது.  

“என்னாச்சு அபி” என்று கேட்டான் ராதா.

“தூக்கம் வர மாட்டேங்குது ராதா... என்னவோ மனசை போட்டு பிசையது” கட்டிலின் ஓரமாக வந்து படுத்தபடி அவனை குனிந்து பார்த்து பேசினாள்.

“ஏன் என்னாச்சு?”

“தெரியல... என்னவோ சரியில்லன்னு மனசுக்கு படுது”

“எதுவும் யோசிக்காதீங்க.. அமைதியா கண்ணை மூடி தூங்குங்க”

“ப்ச்... தூக்கம் வரல ராதா”

“சரி தூக்கம் வர வரைக்கும் ஏதாவது பேசிட்டு இருங்க... நான் கேட்குறேன்”

 “ஏன் உங்களுக்கும் தூக்கம் வரலையா?”

 “ஆமா வரல”

 “ஏன்?”

 “தெரியல”

“எனக்கு தெரியும்”

“என்ன?”

“பானுவை பார்க்க போறோம்னு குதூகலத்துல இருக்கீங்க”

சட்டென்று ராதாவின் குரல் இருளில் அமிழ்ந்துவிட,   

“ராதா” என்றாள்.

“அபி...” என்று அவன் மெல்லிய குரலில் அழைக்க,

“ம்ம்ம்” என்றாள்.

“உங்க மனசுக்கு பிடிச்சு... உங்களை புரிஞ்சிக்கிட்ட யாரையாச்சும் நீங்க இதுக்கப்புறம் பார்த்தா... அவரை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்... இபப்டி தனியா இருந்திர கூடாது” என்றவன் சொன்னதை கேட்டு பக்கென்று சிரித்துவிட்டாள். அந்த இருளில் அவளின் சிரிப்பொலி அறை முழுக்கவும் எதிரொலித்தது.

“ஏன் அபி சிரிக்குறீங்க.. அப்படி ஒருத்தரை உங்க வாழ்க்கைல நீங்க பார்க்க மாட்டீங்களா என்ன?”

அவள் மல்லாக்காக படுத்து கொண்டு மேலே விட்டத்தை பார்த்தபடி,

“நான் ஏற்கனவே அப்படி ஒருத்தரை பார்த்துட்டேன்... திரும்பியும் அதே போல ஒருத்தரை பார்ப்பனான்னு எனக்கு தெரியல” என, அவன் மனம் படபடத்தது.

“நீங்க யாரை சொல்றீங்க அபி?”

“உங்களுக்கு தெரியாதா ராதா? நான் உங்களைத்தான் சொல்றேன்னு” இருளில் ஒலித்த அவளின் குரல் அவன் இதயத்தை தாக்கியது.   

அவனுக்கும் தெரியும்தான். அவன் மனம் அவளிடம் ஈர்க்கப்பட்டது போல அவள் மனமும் தன்னிடம் ஈர்க்கப்பட்டதாக கொஞ்சமாக உணர்ந்தான்தான். ஆனால் இப்படி நேரடியாக சொல்லி அவனை நிலைகுலைய வைப்பாள் என்று அவன் நினைக்கவில்லை

You cannot copy content