You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

எம். சி. ஆர் 💚 பைந்தமிழ் ( என் இனிய பைந்தமிழே நாவல்)

Quote

 அவள் மீது தான் கொண்டிருந்த காதல்தான் அவளுக்கு ஏற்பட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் என்று எண்ணியவனுக்கு அந்த  திருமண சம்பிராதயம் சடங்கு என்று எதில் மீதுமே கவனம் பதியவில்லை.

அவள் மணமேடையில் வந்து அமர்ந்ததும் அவளிடம் பேச தவியாக தவித்தவன் கிடைத்த ஒரு சிறிய சந்தர்ப்பத்தில் அவள் காதில் ரகசியமாக, “என்னை மன்னிச்சிடுறி… சத்தியமா இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல” என்று வலியோடு சொல்ல, “மன்னிக்கெல்லாம் முடியாது” சட்டென்று அவள் குரல் தீவிரமாக ஒலிக்க அவன் துணுக்குற்றான்.

அவள் உதட்டில் விநாடி நேரத்தில் ஓடி மறைந்த அந்த புன்னகையை அவன் கவனிக்க தவறிவிட, தன் மீது அவள் மிகுந்த கோபத்தில் இருக்கிறாளோ என்றவன் பதட்டத்தோடு அவள் புறம் திருப்பினான்.

அவன் தவிப்போடு அவளை பார்க்க அவள் குறும்புத்தனமாக புன்னகைத்து அவனை நக்கலாக பார்வையிட்டவள் குரலை தாழ்த்தி கொண்டு,

 “ஒன்ற தலைவிதி… நீ இந்த சென்மத்துல என்ற கிட்ட சிக்கி சின்னாபின்னாமாகோனோம்னு இருக்கு” என்றாள்.

அவளிடம் அளவில்லா கோபத்தை அல்லது வெறுப்பை குறைந்தபட்சம் விருப்பமின்மையை அவன் எதிர்பார்த்திருக்க, அவள் ஒரு சிறு புன்னகையில் அவன் மொத்த அச்சத்தையும் நீக்கிவிட்டிருந்தாள். கூடவே அவளின் கன்னத்து குழிக்குள் அவனை கொக்கி போட்டு இழுத்திருந்தாள்.

ஆழமான சுழலுக்குள் சிக்குண்டவன் போல அவன் பார்வையும் மனமும் சுற்றுபுறம் மறந்து அவளிடம் சிக்கி கொண்டுவிட, அத்தனை நேரம் அந்த திருமண நிகழ்வில் கடனே என்று ஒன்றாமல் அமர்ந்திருந்தவன் தற்போது தன்னுடைய மனம் கவரந்தவளை மணக்க போகும் மணமகன் மனநிலைக்கு வந்திருந்தான்.

அதன் பின் அவன் வானில்தான் மிதந்து கொண்டிருந்தானோ இல்லை மேகத்தில்தான் பறந்து கொண்டிருந்தானோ தெரியாது. கனவில் கூட நடக்குமா என்று எண்ணிய அந்த அழகிய தருணத்திற்காக காத்திருந்தது.

மதுசூதனனும் சகுந்தலாவும் ஊர்க்காரர்கள் மற்றும் சொந்தங்களை புன்னகை முகமாக வரவேற்ற போதும் மனதளவில் அவர்களுக்கு துளி கூட இதில் சந்தோஷம் இல்லை. ஆனால் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தவர்களை பார்த்த மறுகணம் இருவருமே வியந்து போயினர்.

அவர்களுக்குள் அப்படியொரு அழகான பொருத்தம் அமையபெற்றிருந்தது.

மங்கள் வாத்தியம் முழங்க அவன் தம் வலிய கரங்களால் அவள் கழுத்தை சுற்றி அந்த மாங்கலயத்தை கட்டிய அதேநேரம்,

 “அடியேய் கருவாச்சி… எப்பவோ ஒன்ற கன்னத்து குழில நான் சிக்கி போட்டேனேடி… புதுசா இனிமேதான் சிக்கணுமா என்ன?” என்று உணர்வு ததும்ப அவன் கேட்ட தொனியிலோ அல்லது காதோரம் உரசிய அவன் மூச்சு காற்றிலோ அல்லது அவளை தொட்டும் தொடாமல் சீண்டிய மீசை ரோமங்களிலோ அல்லது மூன்றிலுமா? அவளுக்கு தெரியவில்லை.

அவள் நாடி நரம்புகளில் சிலிர்ப்பாக ஓடி மறைந்த உணர்வுகளில் அவள் அவனிடம் மொத்தமாக வசப்பட்டாள்.

அதற்கு பிறகாய் நடந்தேறிய ஒவ்வொரு சடங்கிலும் இருவரின் பார்வையோடு உணர்வுகளும் ஒருமித்தமாக சங்கமித்து கொண்டன.  

இருவேறு மனங்கள் இணையும் அந்த திருமண மேடையில் கவித்துவமாக காதல் அவர்கள் வாழ்க்கைக்குள் அரங்கேறியது.

You cannot copy content