You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை - அம்பை

Quote

சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் இவர். சாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகங்களில் நான் படிக்கும் இரண்டாவது புத்தகம் இது. முதல் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஜெயகாந்தன் எழுதிய "சில நேரங்களில் சில மனிதர்கள்". 2021 ஆம் ஆண்டின் இறுதியில் சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டதுமே நான் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன். இதுவரை நான் படித்த புத்தகங்களில் வாசித்து முடிப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட ஒரு புத்தகம் என்றால் அது இந்த புத்தகம் தான். 167 பக்கங்களை முடிப்பதற்கு எனக்கு ஆறு நாட்கள் தேவைப்பட்டது. காரணம் இதில் வரும் கதைகளை அவ்வளவு எளிதாக என்னால் கடந்துவிட முடியவில்லை. 13 சிறுகதைகளையும் நினைத்தால் இப்போது கூட என் மனம் கனக்கிறது. சில கதைகளில் விம்மியும், சில கதைகளில் வாயடைத்தும் போயிருந்தேன்.

கதைகள் அனைத்தும் பெரும்பாலும் வட இந்தியாவை சுற்றியே அமைந்துள்ளன. சில கதைகள் வெளிநாடுகளை சுற்றியும் வலம் வருகிறது. முதல் கதையான "தொண்டை புடைத்த காகம் ஒன்று" படிக்கையில் என் தொண்டை அடைத்து தான் போனது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது போன்ற கேள்விகள் எனக்குள் புகுந்துக் கொண்டன. ஆனால் என்ன செய்வது அந்த முடிவுகள் தான் நிதர்சனம். இப்படியெல்லாம் நடக்குமா என்ற எண்ணம் தோன்றுகையில் இப்படியும் நடந்திருக்கிறது அதனால் தான் எழுதப்படுகிறது என்ற எதிர்மறை எண்ணம் குறுக்கிட்டது.

கதைகளில் பெரும்பாலும் பெண்களையும், கலைஞர்களையும் மையமாக வைத்து தான் கதைக்களம் நகர்கிறது. கதாப்பாத்திரங்கள் அனைத்துமே அவரவர் சூழ்நிலைக்கேற்ப நியாயப்படுத்தப்பட்டிருந்தன. வரலாற்று சம்பவங்களையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பற்றி சில கதைகள் விவரிக்கின்றன. சில கதைகள், நவீன காலத்திற்கேற்ப பரந்த மனப்பான்மையோடு கையாளப்பட்டுள்ளன. இதிகாசங்களும் புராணக்கதைகளும் ஆங்காங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்த கதைகள் ஆழமான கருத்துக்களை மறைமுகமாக சொல்கின்றன என்பதால் புரிந்துக் கொள்ள ஒரு மாயக் கண்ணாடி அணிய வேண்டும். அந்த கண்ணாடி மேலோட்டமாக எதையும் பார்க்காமல், நீண்டு உயர்ந்த மலைகளின் பள்ளத்தாக்குகளை துளைத்துக் கொண்டு, எந்த அடர்ந்த மரங்களின் நடுவே ஊடுருவி ஆழமாக செல்லும் வல்லமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - விடுகதையை போல் அமைந்திருக்கும் இந்த தலைப்பின் விடை: காப்பர்ஸ்மித் பார்பெட் பறவை, தமிழில் செம்மார்பு குக்குறுவான். நிஜமாகவே இந்த கதைகள் புதிர் விளையாட்டு போன்றது தான். புரிந்துக் கொள்ள மாயக் கண்ணாடி வேண்டும்.

jamunarani has reacted to this post.
jamunarani

You cannot copy content