You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

செழியன் 💚 ஜானவி (நீ என்பதே நானாக)

Quote

ஜானவி துணுக்குற்றாள். நேற்று நடந்த சண்டையை பற்றி யோசித்து கொண்டே அவள் நிற்க, "அன்பு கூப்பிடுறான் பாரு... போம்மா" என்றார் சந்தானலட்சுமி!

"போறேன்" என்று சொல்லி கொண்டே ஜானவி அறை வாசலில் நின்று, "என்ன செழியன்? சொல்லுங்க" என்றாள்.

அவன் தன் சட்டையை இன் செய்து கொண்டே, "ஏன்? உள்ளே வந்து என்னன்னு கேட்க மாட்டீங்களோ?!" என்று கேட்க அவள் தயக்கமாக அறைக்குள் நுழைந்து,

"என்ன செழியன்?" என்றாள்.

"கதவை க்ளோஸ் பண்ணிட்டு வாங்க... பர்ஸனலா ஒரு விஷயம் பேசணும்" என்று அவன் சொல்ல,

"அத்தை மாமா பசங்க எல்லாம் வெளியே இருக்கும் போது கதவை எப்படி மூடுறது" என்றவள் தயங்கி கொண்டே அவனை பார்த்தாள்.

"எப்பவும் எப்படி மூடுவோமோ அப்படிதான் மூடணும்... போய் மூடிட்டு வாங்க" என்றவன் அலட்டி கொள்ளாமல் சொல்ல,

"எதுவா இருந்தாலும் ஈவனிங் பேசிக்கலாமே... நீங்க இன்னும் டிபன் வேற சாப்பிடல... சாப்பிடிட்டு பசங்கள வேற கூட்டிட்டு போகணும்... லேட்டாயிட போகுது" என்று அவள் படபடவென நின்ற இடத்திலிருந்தே காரணங்களை அடுக்க,

"பேசணும்னு சொன்னா என்ன ஏதுன்னு கேட்கணும்... இப்படி காரணம் சொல்லி பேச விடாம பண்ண கூடாது... நேத்தும் இதேதான் பண்ணீங்க... அதனாலதான் நமக்குள்ள தேவையில்லாம சண்டை வந்திருச்சு... பேசணுங்கிற மூடும் போச்சு" என்றவன் தீவிரமாக சொன்னான்.

"இன்னைக்கு அப்படியெல்லாம் ஆகாது... நான் சீக்கிரமா என் வொர்க்கை முடிச்சிடுறேன்... இனிமே என் லேப்டாப்பை பெட் ரூமுக்கு எடுத்துட்டு வரவே மாட்டேன்... பிராமிஸ்" என்று ஜானவி பயபக்தியோடு சொன்னாலும் அவள் மனதில் அவனிடம் எந்தவித மனத்தாங்கலும் வைத்து கொள்ள கூடாதென்ற
எண்ணமே மேலோங்கியிருந்தது.

அவள் அப்படி தன் தவறை உணர்ந்து விட்டு கொடுத்து பேசுவது செழியனுக்கு வியப்பாக இருந்தது.

இருந்தாலும் அவன் தன்னிலையிலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வராமல், "அதெல்லாம் இருக்கட்டும்... ஆனா இப்ப நான் உங்ககிட்ட பேசணும்... பேச முடியுமா முடியாதா?" என்றவன் தீவிரமாக கேட்க,

அவள் விழிகள் நேராக கடிகாரத்தை பார்த்தது.

"லேட்டாயிட போகுது" என்றவள் மீண்டும் சொல்ல கடுப்பானவன்,

"ஒரு நாள் லேட்டானாலும் ஒண்ணும் ஆகிடாது" என்று சொல்லி கொண்டே கதவை மூடிவிட அவள் திரும்பி பார்த்து உள்ளம் படபடத்தாள்.

'கதவை மூடிட்டு அப்படி என்ன பேச போறாரு' என்றவள் யோசிக்கும் போதே செழியன் அவளை நெருங்கி வரவும் ஜானவி முகம் பதட்டத்தை தத்தெடுத்து கொண்டது.

அவள் பின்னோடு விலகி செல்ல பார்க்க, "நில்லுங்க ஜானவி" என்றவன் அவள் முன்னே வந்து நின்று அவள் முகம் பார்க்க,

"என்ன பேச போறீங்க?" என்றவள் படபடப்போடு அவனை கேட்டாள்.

"பேசறது இருக்கட்டும்... அதுக்கு முன்னாடி உங்ககிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணும்"

"என்ன கேட்கணும்?"

"யார் கோபப்பட்டாலும் நான் மட்டும் உங்ககிட்ட கோபப்பட கூடாதோ" என்றவன் நகைப்போடு கேட்க,

அவள் விழிகள் பெரிதாகின.

'அய்யய்யோ நம்ம தூக்கத்தில சொன்னதை இவர் கேட்டுட்டாரா?' என்றவள் யோசிக்கும் போதே,

"நான் தூங்கிட்டு இருந்தேன்னு நினைச்சீங்களோ" என்றான் கல்மிஷமான பார்வையோடு!

பெண்ணவள் அதற்கு மேல் தன்னவனின் முகம் பார்க்க முடியாமல் நாணத்தில் தலை கவிழ்ந்து கொள்ள,

அவள் காதோரம் இறங்கி, "உங்களுக்கு மட்டுமில்ல... எனக்கும் உங்களுக்கு இருக்க மாறி அதே பீலிங்ஸ் இருக்கு" என்றதும் அவள் தலையை நிமிர்த்தி அதிர்ச்சியாக பார்த்தாள்.

"இப்படியெல்லாம் பார்த்தா நெஞ்சு படக் படக்னு அடிச்சுக்குது ஜானவி... ஷாக்கை குறைங்க" என்றவன் சொல்லி சிரிக்க, அவளும் அவனோடு சேர்ந்து புன்னகைத்தாள்.

"கடமையை மட்டும் ஷேர் பண்ணிக்கிட்டா அது கமிட்மென்ட்... காதலோட கடமையை ஷேர் பண்ணிக்கிட்டாதான் அது கல்யாணம்?" என்று அவன் சொல்ல

அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

"இந்த செழியனை நம்பி நீங்க இன்வஸ்ட் பண்ணலாம் ஜானவி... கண்டிப்பா லாஸாகாது"

"எதை?" என்று அவள் புரியாமல் கேட்க,

"காதலை... " என்றதும் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.

You cannot copy content