You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

துப்பட்டா போடுங்க தோழி - கீதா இளங்கோவன்

Quote

புத்தகம்: துப்பட்டா போடுங்க தோழி
ஆசிரியர்: கீதா இளங்கோவன்

தலைப்பில் இருந்தே சுவாரஸ்யம் பொங்கும் இந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால், என்ன இல்லை என்பதே என் பதில். அட என்னப்பா இதுவும் பெண்ணியவாதி ஒருவர் எழுதிய புத்தகம் தானே? பெண் அடிமைத்தனம் என்பதெல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் அப்படி இல்லை. பெண்கள் ஃப்ளைட் ஓட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்கள். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு பட்டப்படிப்பு முடித்துவிட்டு அனைத்து துறையிலும் தங்கள் கால்தடங்களை பதித்திருக்கிறார்கள் என்று பெண்களை பற்றி பெருமையாக பேசும் அனைவரிடமும் ஒரு கேள்வி. எத்தனை பெண்கள் அப்படி இருக்கிறார்கள்? 1954ல் முதன்முறையாக சாகித்யா அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை வெறும் 4 பெண் எழுத்தாளர் மட்டுமே அந்த விருதைப் பெற்றிருக்கின்றனர். ஏன் அந்த விருதைப் பெறும் தகுதி வெறும் நான்கு பெண் எழுத்தாளர்களுக்கு மட்டும் தான் இருந்ததா? இவ்வளவு ஏன் 1942ல் நிறுவப்பட்ட CSIRன் முதல் பெண் director general 2022ல் தான் பதவிக்கு வந்தார். ஒரு பெண் director general ஆவதற்கு எண்பது ஆண்டுகள் தேவைப்பட்டதா? இன்றும் பல வீடுகளில் வேலைக்குப் போகும் பெண்களின் ஏடிஎம் கார்டு ஆண்கள் இடம் தானே உள்ளது? கேட்டால் பெண்ணுக்கு பொருளாதாரம் பற்றியும் வங்கியின் இருப்புகளை பற்றியும் ஒன்றும் தெரியாது என்கிறார்கள். இருப்புகளை பற்றி ஒன்றும் தெரியாத பெண்கள் தான் RBIன் துணை கவர்னராக பொறுப்பேற்றிருக்கிறார்களா?

எத்தனை பெண் பிரதமர்கள் நம் நாட்டில் உள்ளார்கள்? எத்தனை பெண் முதலமைச்சர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள்? இன்றும் பெண்களுக்கான ஒதுக்கீடு வெறும் 33% தானே? பிறகு எப்படி பெண்கள் ஆண்களுக்கு நிகராக இருக்கிறார்கள் என்று நம்மால் சொல்ல முடியும்? கல்வி சுதந்திரம், ஆடை சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் அனைத்தும் பெற்றால் தான் அது பெண்‌ சுதந்திரம். அதற்கெல்லாம் மேலாக, பெண்கள் தன் உடல் மீது திணிக்கப்படும் அத்தனை கருத்தாக்கங்களில் இருந்தும் விடுபட வேண்டும் அப்போது தான் அவள் தன்சார்புமிக்க ஒரு மனுஷியாக இருக்க முடியும்.‌ பெண் உடல் மீது என்ன கட்டுப்பாடு என்று கேட்போருக்கு வாசக்டமி என்ற ஒன்று இருப்பதை நினைவுக்கூறுகிறது இந்த புத்தகம். ஆண்களுக்கென்று வாசக்டெமி என்ற ஒன்று இருக்கும் போது பெண் ஏன் கருத்தடை செய்ய வேண்டும் என்று கேட்கிறார் ஆசிரியர் கீதா. பெண்களுக்கான ட்யூபெக்டமி வலி மிகுந்ததாகவும் பக்க விளைவுகள் உடையதாகவும் இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கான வாசக்டெமியில் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை அதனால் ஆண்கள் அந்த சிகிச்சையை செய்துக் கொள்வதில் என்ன தயக்கம்? பெண்ணை மட்டும் நிர்பந்திப்பதில் என்ன நியாயம்‌ இருக்கிறது? போன்ற பல அறிவியல் சார்ந்த கேள்விகளை இந்த புத்தகம் நம் முன் வைக்கிறது.

பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். தனியாகவோ நண்பர்களுடனோ பயணங்கள் போக வேண்டும். தங்களுக்கான ஒரு நட்பு‌ வட்டாரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டி பழக வேண்டும் போன்ற பல எதார்த்தமான முற்போக்கு சிந்தனைகளையும் இந்த புத்தகம் தன்னுள் அடக்கியுள்ளது. பெண்களை இயல்பாக எந்தவித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக வாழ விடுங்கள் என்பது தான் இதன் தலையாய நோக்கம். இதை தான் பாரதி, ஆணும் பெண்ணும் நிகரென கொண்டால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்றார். இதை ஒரு பெண்ணியவாத புத்தகமாக கருதாமல் ஒரு விழிப்புணர்வு புத்தகமாக கருதுவதே சிறந்தது.

REVIEW by Vaishu 

Rathi has reacted to this post.
Rathi

You cannot copy content