You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

பாரதி 💚 நந்தினி (விலக்கில்லா விதிகள் அவன்)

Quote

“ஏன்டி என்னை இந்தளவுக்கு காதலிக்குற… நான் உனக்கு எந்தவிதத்தில தகுதியானவன்… எனக்கு சத்தியமா இப்ப கூட தெரியல” என்றவன் ஆச்சரியத்துடன் வினவ, அவனை ஆழமாக பார்த்தாள்.

“காதல் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதிரி… அவங்க அவங்களுக்குன்னு காதலை பத்தி தனித்தனி டெஃபனிஷன் இருக்கும்… அன்பு அழகு இப்படி என்னவா வேணா இருக்கலாம்… ஆனா என்னை பொறுத்த வரை காதலுக்கான ஒட்டுமொத்த டெஃபனிஷனுமே நீதான்… என் பாரதிதான்” என்றவள் அழுத்தம் திருத்தமாக சொல்லி அவனை அணைத்து கொண்டு தன் மனஉணர்வுகளை எல்லாம் அவனிடம் கொட்டி தீர்த்தாள். 

“பெத்த அம்மாவாலயே வெறுக்கப்பட்ட துரதிஷ்டசாலி நான் பாரதி… எனக்கு எல்லா வசதியும் இருந்துச்சு… பெரிய வீடு… பெரிய ரூம்… ஆனா எனக்குன்னு அங்கே ஒரே ஒரு உறவு கூட இல்ல… நான் பேச… சிரிக்க… ஏன் அழுதா ஆறுதல் சொல்ல கூட எனக்கு அங்கே யாருமே இல்ல

ஒரு வேளை நான் அனாதை ஆசிரமத்துல வளர்ந்திருந்தா கூட என்னை சுத்தி ஒரு நாலு பேர் இருந்திருப்பாங்க இல்ல… பேசி இருப்பாங்க இல்ல… ஆனா அந்த வீட்டுல நான் தனியாளா வளர்ந்தேன்… ஸ்கூலில் கூட என்னவோ அதனாலயே என்னால யார்கூடயும் ஒட்ட முடியல 

நான் அந்த நரகத்துல மாட்டிகிட்டி பைத்தியம் பிடிச்சு கிடந்த போதுதான் நீ என் வாழ்க்கைல வந்த பாரதி… என் வானத்துல வந்த சூரியன் பாரதி நீ… அன்புன்னா என்ன பாசம்ன்னா என்ன நட்புன்னா என்னன்னு எனக்கு எல்லாத்தையும் காட்டினது நீதான்… எனக்காக ஆதரவா பேசுன ஒரே ஆள் நீதான்… நீ வந்த பிறகுதான் என் வாழ்க்கைல சந்தோஷமே வந்துச்சு… ஒரு வேளை நீ என் கூடவே இருந்திருந்தா நான் உன் மதிப்பை புரிஞ்சிக்கிட்டு இருந்திருப்பேனோ என்னவோ?

நீ என்னை பிரிஞ்சு போன பிறகுதான் எவ்வளவு நீ எனக்கு முக்கியம்னு புரிஞ்சுது… அன்னைக்குதான்… நீ என் மொத்த உலகமாகவே மாறி போன” என்றாள்.

அவன் வியப்படங்காமல் அவள் சொல்வதை எல்லாம் கேட்டிருந்தான். “அந்த பாட்டை கேட்டதும் எனக்கெப்படி எல்லாம் ஞாபகம் வந்திருச்சுன்னு நீ கேட்ட இல்ல?” என்றவள் அந்த கேள்விக்கான பதிலையும் கூறினாள்.

“ரொம்ப வருஷம் கழிச்சு உன்னை நான் பார்த்த போது… நீ அந்த பாட்டை மேடையில பாடிட்டு இருந்த… அப்புறம் நிறைய இடங்களில் நீ அந்த பாட்டை பாடி நான் கேட்டிருக்கேன் 

அந்த பாட்டை உன் குரலில் ரெகார்ட் பண்ணி வைச்சுட்டு பைத்தியக்காரி மாதிரி எப்பவும் கேட்டுக்கிட்டே இருப்பேன் தெரியுமா?… நீ ஜெயில இருந்த காலத்துல நீ அங்கே என்ன கஷ்டபடுவியோன்னு யோசிச்சு யோசிச்சு நைட்டெல்லாம் தூக்கம் வராம இருந்த போதெல்லாம்… இந்த பாட்டை ரீபீட் மோட்ல கேட்டுட்டே அப்படியே விடிய விடிய முழிச்சிட்டு இருந்திருக்கேன்… லட்சம் தடவை கோடி தடவை அதுக்கு மேல இருக்கலாம்… எனக்கு தெரியல

இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் நீயும் நானும் என்னைக்காவது ஒரு நாள் சேர்ந்திடுவோம்னு ஒரு நம்பிக்கை வரும்… அந்த நம்பிக்கையை பிடிச்சிக்கிட்டுதான்  இத்தனை வருஷமா நான் உனக்காக காத்திட்டு இருந்தேன்… எனக்குள்ள இருந்த காதலை உயிர்போட வைச்சு இருந்தது உன் குரலும் அந்த பாட்டும்தான் பாரதி” என்றவள் அவள் உணர்வுகளை சொல்லி அவன் முகத்தை பார்த்தாள். அந்த கண்களில் அத்தனை வலிகள். அவன் இதயத்தை யாரோ அந்த நொடி அழுத்தி பிழிவது போல ரணவேதனையாக இருந்தது.

அவன் இமைக்கவும் மறந்து அவள் கண்களை பார்த்திருந்தான். அவனுடைய மொத்த உலகமும் அவள் கருவிழிக்குள் பிரதிபலித்தது.

“என்ன பாரதி… அப்படி பார்க்குற” என்றவள் குரலில் அவன் உதடுகள் தம் மௌன கோலத்தை கலைத்தன. அந்த பாரதியின் கவிதையில் இந்த பாரதி தன் காதலை உணரப்பெற்றான்.

பல வருடங்கள் கழித்து அவன் அன்று பாடினான். அவளுக்காக பாடினான். அவளை தன் கண்ணம்மாவாக எண்ணி பாடினான். 

“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ…

வட்டக் கரிய விழி கண்ணம்மா

வானக்கருமை கொலோ…

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ…

சோலை மலரொளியோ

நினது சுந்தரப் புன்னகை தான்…  

நீலக் கடலலையே

நினது நெஞ்சின் அலைகளடீ…

கோலக் குயிலோசை

உனது குரலின் இனிமையடீ…

வாலைக் குமரியடீ கண்ணம்மா

மருவக்காதல் கொண்டேன்…

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா

சாத்திரம் ஏதுக்கடீ…  

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா

சாத்திரமுண்டோடீ…

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார்

கன்னத்து முத்தமொன்று…” பாடி முடித்து அவன் இதழ்கள் அவள்  இதழ்களிடம் சரண்புகுந்தன. பல வருட கால காதல் தாகம் தணிய தணிய இருவரும் அந்த முத்தத்திற்குள் மூழ்கி திளைத்தனர்.

அவர்கள் உதடுகள் வழியே அவர்களின் உயிர்கள் இடமாறின. உணர்வுகள் ஒன்றோடு ஒன்றாக கலந்து பல வருட காத்திருப்பின் வலிகளை மாயமாக மறைந்து போக செய்தன.

பாரதி மெல்ல அவள் உதடுகளை விட்டு பிரிய அவள் தேகமெல்லாம் சிலிர்த்து கொண்டது. 

அவன் குரலின் இனிமையில் மயங்கி இருந்தவள் அவன் முத்தத்தில் இன்னும் ஆழமாக கிறங்கி தன்னை மறந்தாள்.

You cannot copy content