You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்

Quote

பாரதி நினைவுகள்

யுககவிஞன் பாரதியின் எழுத்துக்கள் நூறு ஆண்டுகளை கடந்தும் இவ்வுலகில் வலம் வந்து தமிழுக்கு வாகை சூடிக் கொண்டிருக்கிறது. பாரதியை பற்றி என்ன தெரியும் நமக்கு! அவரொரு நிகரற்ற கவிஞன் என்பதை தவிர வேறு என்ன தெரியும் நமக்கு! தமிழ் தாய் தத்தெடுத்த தவப்புதல்வனின் வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்களை நினைக்கையில் மனம் பதைப்பதைக்கிறது. ஒரு வேளை சோற்றுக்கே போராடிக் கொண்டிருந்தவரால் எப்படி "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று வாயில்லா ஜீவன்களுக்காக பாட முடிந்தது. பெண்ணை வீட்டிற்குள் பூட்டி பாதுகாத்த சமூகத்தில் பிறந்தவரால் எப்படி "ஆணும் பெண்ணும் நிகரென கொண்டால்" என்று பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்க முடிந்தது. இப்படி பல கேள்விகள் நம் மனதில் சிலந்தி கூடுகளாய்.

மொழிகள் பல கற்று, சரித்திரம் பல புரட்டி, வரலாறு போற்ற வாழ்ந்த முண்டாசு கவியை பற்றி, அவரோடு சமகாலத்தில் வாழ்ந்து, அவரை அருகிலிருந்து பார்த்த, அவர் பெறாத மகள் யதுகிரி அம்மாள் எழுதிய இந்த "பாரதி நினைவுகள்" புத்தகத்தின் பக்கங்கள் நம் கேள்விக்கான விடையாய் அவர் வாழ்க்கை வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது. அவரின் போராட்ட வாழ்வும், விடுதலை உணர்வும், மனிதநேய பண்பும் இந்த புத்தகத்தின் அங்கங்கள். தன்னிகரற்ற கவிஞனை தாண்டி அவர் ஒரு ஈடு இணையற்ற மனிதர் என்பதை இந்த புத்தகம் நமக்கு சொல்லாமல் சொல்லும். பாரதி என்னும் சகாப்தத்தைப் பற்றி நாம் அறியாததை அறிந்துக் கொள்ள இந்த புத்தகம் துணை நிற்கும். அவரை போல் இன்னொரு கவிஞன் உருவாக இன்னும் எத்தனை யுகம் பிடிக்கும் என்று அறியேன். வறுமையிலும் தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கென அனைத்தையும் அள்ளி கொடுத்து, அடுத்தவர் மகிழ்ச்சியில் பசி ஆறிய மகாகவி அவர். எந்த சூழ்நிலையிலும் தன் சுயத்தை இழக்காத சுதேசி அவர். வ.உ.சிக்கு விடுதலை உணர்வை ஊட்டிய பாரத புதல்வர் அவர். பாரதி என்ற பெயருக்கு நான் புரிந்துக் கொண்ட அர்த்தம் தான் எத்தனை. பாரதி என்றால் வீரம், துணிச்சல், தமிழ், கம்பீரம், தேசபக்தி, மனிதநேயம்,.. இப்படி இன்னும் எத்தனை. அத்தனையும் கற்ற வித்தகரை பற்றிய ஓர் சிறிய தொகுப்பு தான் இந்த பாரதி நினைவுகள். தமிழையும், பாரதியையும் காதலிக்கும் ஒவ்வொரு உயிரும் படிக்க வேண்டிய பொக்கிஷம் இந்த புத்தகம். அவரை காதலிக்கும் நம் மனதில் என்றும் அவர் நினைவுகள்

Review by vaishnavi

You cannot copy content