You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 1

Quote

மதிப்புக்குரியவள்

அத்தியாயம் – 1

 

‘கண்ணில் ஒரு வலி இருந்தால்...

கனவுகள் வருவதில்லை

கனவுகள் வருவதில்லை’

பிரமாண்டமான அந்த கல்லூரி அரங்கமே பேரமைதியில் ஆழ்ந்திருக்க, ஒரே ஒரு குரல் மட்டுமே அவ்விடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

சோகமும் தாபமும் கலந்து உருக்கத்துடன் ஒலித்தது.

‘பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன்’ என்று இளம் பெண்ணொருத்தி மேடையில் நின்றபடி பாடிக் கொண்டிருந்தாள்.

அந்த வசீகர குரலில், அங்கிருந்த ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் தன்னை மறந்து லயித்துக் கிடந்தனர்.

பாடி முடிக்கும் வரை சிறு சலனம் கூட எழவில்லை. முடித்த மறுகணமே கைத்தட்டல் ஒலியில் அந்த அரங்கமே அதிர, அந்தச் சத்தத்தில் முக்கிய விருந்தினராக முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ரஞ்சன் தலையை உலுக்கினான்.

ஏதோ கனவுலகத்திலிருந்து மீண்டெழுந்தவன் போலச் சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னர் அவனும் அந்த கூட்டத்துடன் சேர்ந்து கை தட்டினான்.

அவன் அருகே அமர்ந்திருந்த கல்லூரி முதல்வர் மேடையில் பாடிய மாணவியைப் பற்றி பெருமையாக அவனிடம் கூற, தலையசைத்துக் கேட்டுக் கொண்டான். இருப்பினும் அவன் கவனம் முழுமையாக இன்னும் அங்கே வந்து சேரவில்லை.  

அவன் தன்னை மறந்து அந்தப் பாடலைக் கேட்டிருந்ததற்குக் காரணம் அந்த குரல் இல்லை. அவனுக்குள் அலை அலையாக எழும்பிய அவளின் நினைவுகள்... அதே மேடையில்தான் அவனவளை முதன்முதலில் சந்தித்தது.

புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியை அவள் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தாள். அவன் இதே அரங்கத்தின் கடைசி இருக்கையில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தான்.

நண்பர்கள் என்று அவனுக்கு யாரும் இல்லை. தெரிந்த முகங்கள் கூட இல்லை. சென்னையும் அவனுக்குப் புதிது. விடுதியில் தங்கிய அனுபவமும் இல்லை. அந்த இடம், சூழ்நிலை, மனிதர்கள் எல்லாமே அவனுக்கு மிரட்சியைக் கொடுத்தது. அவள் முகம் மட்டுமே மிகவும் பழகிய முகமாகத் தெரிந்தது. ஒரு விதமான இணக்கமான உணர்வைத் தந்தது.

ஆனால் அவள் மேடையில்... அவனோ எங்கேயோ ஒரு ஓரத்தில்... அவன் அருகே அமர்ந்திருந்தவர்களுக்குக் கூட அவனைத் தெரியாது.

சுருங்கி வெளுத்திருந்த சட்டை. ஒல்லியான தேகம். எண்ணெய் வடியும் முகம் என்று பார்ப்பவர்கள் ஒதுங்கிப் போகும்படியான தோற்றமே அவனுடையது. தானாகச் சென்று பேசி பழகுமளவுக்கு அவனுக்குத் துணிச்சலும் கிடையாது. அவன் ஒரு இன்டிரோவட்.

சுற்றிலும் மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும் அவன் உலகம் ஒரு தனித்தீவுதான். யாருமே இல்லாத தனித்தீவு. அந்தத் தனித்தீவில் அப்படியே மூச்சு முட்டி தன்னந்தனியாகச் செத்து மடியப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருந்த போதுதான் அவள் மீண்டும் வந்தாள்.

அவனை மீட்டெடுத்தாள்.

அவனுடைய உலகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்டாள்.

அவனின் நடை உடை பாவனை அனைத்தையும்மாற்றினாள்.  

கோட் சூட், கண்ணாடி, நிமிர்வான தோற்றம் இதெல்லாம் அவள் கொடுத்தது. இன்று பல இளம் பெண்களின் பார்வைகள் அவன் மீது படையெடுக்கின்றன. ஆனால் அவனோ அவளையன்றி வேறு எந்த பெண்ணை குறித்தும் யோசிப்பதும் இல்லை.

அவளின் நினைவுகளில் மொத்தமாக அவன் மூழ்கிய சமயத்தில்,

‘சிறப்பு  விருந்தினர் திரு ரஞ்சன் கவிதா அவர்களை பரிசுகள் வழங்க மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்’ என்று தொகுப்பாளினி அறிவித்தாள்.

‘ரஞ்சன் கவிதா’ அதுதான் அவனின் முழுப் பெயர்.

பலருக்கும் அவனுடைய அந்தப் பெயர் வியப்பை அளித்தது.

கல்லூரி முதல்வர் கூட அவன் வந்ததுமே, ‘உங்க லாஸ்ட் நேம் கவிதா... உங்க அம்மா பெயரா?” என்று கேட்டார். அவர் மட்டும் இல்லை. எல்லோருமே அவனிடம் அப்படிதான் கேட்பார்கள்.

“இல்லை என் மனைவியோட பெயர்” என்று எப்போதும் போலச் சிறு புன்னகையுடன் பதிலளித்தவன், “இந்த காலேஜோட பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ் லிஸ்ட் எடுத்தீங்கனா அதுல கவிதா பேர்தான் முதல இருக்கும். என்னை விட இங்க சீப் கெஸ்ட்டா வந்து உட்கார தகுதி அவங்களுக்குதான் இருக்கு” என்றும் சொன்னான்.

அவனை வியப்புடன் ஏறிட்டவர், “நீங்க சொல்றது பிபிஏ டிபார்ட்மென்ட் கவிதாவா?” என்று அவர் அதிசயிக்க, அவனும் ஆமோதித்தான்.  

யாராலும் அவ்வளவு சீக்கிரம் அவளை மறக்க முடியாது. அவள் செல்லும் இடங்களில் எல்லாம் தன் தடத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்பவள் அவள்.

“நானும் இதே காலேஜ்லதான் படிச்சேன். ஆனா ஒரு வருஷம் கூட முழுசா படிக்கல.”

“அப்படியா ஏன்?”

“குடும்பச் சூழல்” என்று சுருக்கமாகச் சொன்னான்.

மேடையேறிய முதல்வர் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்று அவனைப் பெருமையாக அறிமுகம் செய்தார். அதேநேரம் அவன் படிப்பை தொடரவில்லை என்பதை மிக கவனமாக தவிர்த்துவிட்டுப் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்து ரஞ்சன் கிளம்பிய சமயத்தில், “ஆமா நீங்க எந்த வருஷ பேச்னு சொல்லவே இல்லையே” என்று கேட்க, “2017” என்றான். 

“அப்படியா” என்றவர் முகம் சட்டென்று மாறியது.

“ஆனா கவிதா 2012... இல்ல 11 மாதிரி இல்ல எனக்கு ஞாபகம் இருக்கு”

“ஆமா... நான் ஜாயின் பண்ணும் போது அதே டிபார்ட்மென்ட்ல அவங்க பிஜி பைனல் இயர்” என்றதுமே விசித்திரமாக அவனை ஒரு பார்வை பார்த்தார்.

காரில் ஏறியதும் அவரின் அந்தப் பார்வையை நினைத்து நகைத்து கொண்டவனுக்கு, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்த பதிவாளரின் பார்வை நினைவு வந்தது. அவரும் இப்படியேதான் பார்த்தார்.  

“தேதி எல்லாம் கரெக்டா இருக்கா? எந்த குழப்பமும் இல்லையே. நல்லா செக் பண்ணிட்டீங்களா” என்று அவர் திரும்பத் திரும்ப கேட்கவும் கவிதா கடுப்பாகிவிட்டாள்.

“என்ன சார் குழப்பம் உங்களுக்கு”

“இல்ல மா.. தம்பி உங்களை விட அஞ்சு வயசு கம்மி மாதிரி இருக்கே”

அவளுக்குமே அந்த விஷயம் தெரியாது. குழப்பத்துடன் சான்றிதழ்களை வாங்கிப் பார்த்தாள். நெற்றிப் பொட்டில் கை வைத்துத் தேய்த்தாள்.

பதற்றத்துடன் நின்ற அவன் முகத்தை வேறு ஒருமுறை நோக்கினாள். முறைத்தாலா அல்லது வெறும் பார்த்தாலா? சரியாகத் தெரியவில்லை.  

‘எங்கே இந்த கல்யாணம் வேண்டான்னு சொல்லிட போறாளோ?’ என்ற பயம் மட்டும்தான் அவனுக்கு.   

ஆனால் அடுத்த நொடியே பதிவாளரைப் பார்த்தவள், “அஞ்சு வயசு எல்லாம் ஒரு மேட்டரா சார், பத்து இருபது வயசு வித்தியாசத்துல எல்லாம் பண்றாங்க. ஏன் எங்க ம்மா அப்பாவுக்கு எல்லாம் பத்து வயசு வித்தியாசம்” என்றாள்.

அவன் நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொள்ள அந்த பதிவாளர், “ எது உங்க அம்மா அப்பாவுக்குமா?” என்று கேட்டு நம்ப முடியாமல் பார்த்தார்

“ஆமா எங்க அம்மாவுக்கு இருபத்து நாலு. எங்க அப்பாவுக்கு முப்பத்து மூணு” என்று அவள் சொல்ல, அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.   

“என்ன சார், அப்படி பண்ணலாம்னா இப்படியும் பண்ணலாம்தானே” என்று மேலும் கேட்டு அவரை கடுப்பாக்க, ‘கலிகாலம்’ என்று முனகலுடன்தான் அவர்களுக்குப் பதிவு திருமணத்தைச் செய்து வைத்தார்.

இன்று அந்த நாளை நினைக்கும் போது சிரிப்பு வந்தது. கூடவே கண்ணீரும்.

‘என் ஜீவன், ஓயும் முன்னே... ஓடோடி வா’

அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் அவன் செவிகளில் ஒலித்தன.

கண்ணாடிகளில் பளபளக்கும் அந்த உயரமான கட்டிடத்தின் வாயிலிற்குள் ரஞ்சனின் கார் நுழைந்தது. பல நிறுவனங்கள் அமைத்திருக்கும் கட்டிடம் அது. காரை அடித்தளத்தில் நிறுத்திவிட்டு மின்தூக்கியில் ஏறி  மூன்றாம் தளத்திற்கு வந்தான்.

‘கவி வியர்ஸ்.. ஆன்லைன் ஸ்டோர்’ என்ற வரி வாசலில் வண்ணமயமாக மின்னியது.     

ரஞ்சன் அலுவலகக் கதவுகளைத் திறந்தவுடன் படார் படாரென்று வெடிச் சத்தங்கள். அவன் மிரண்டு  விழிக்க, வண்ணத்தாள்கள் பூத்தூறல்களாக அவன் மீது சிதறின.

அந்த பெரிய ஹாலில் நின்றிருந்த அனைவரும் கொண்டாட்டமாக கைதட்டினர்.

பூங்கொத்துடன் வந்து நின்ற அஜய், “கங்ராஜுலேஷன்ஸ் ரஞ்சன்” என, “எதுக்கு?” என்று புரியாமல் கேட்டான்.

“உன்னை best enterepneur of the year தேர்வு செஞ்சிருக்காங்க.”

“என்னையா?”

“காலையிலதான் மெயில் வந்துச்சு. சர்பிரைஸா இருக்கட்டும்னுதன் மெசஜ் போடல” என்ற அந்த  ஆடவன் கூற, ரஞ்சன் முகத்தில் அதிருப்தி.

பணியாளர்களிடம் அதனை காட்டிவிட கூடாது என்று அவர்கள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு தன் அறைக்குள் புகுந்தான்.

பின்னோடு நுழைந்த அஜய், “என்ன, உன் முகத்தில சந்தோஷத்தையே காணோம்” என, “யாருண்ணா இந்த அவாடுக்கு அப்ளை பண்ணது” என்று ரஞ்சன் கேட்டான்.

“வேற யாரு, நான்தான்”

“எதுக்கு?”

“என்னடா, எதுக்குன்னு கேட்குற. உனக்குச் சந்தோஷமா இல்லையா. ஆபிஸ்ல எல்லோரும் எவ்வளவு ஹாப்பி தெரியுமா?”

ரஞ்சன் இருக்கையில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டான்.

“நான் இந்த அவாடை வாங்க மாட்டேன்.”

“வாங்க மாட்டனா புரியல”

“நான் எந்த வகையிலும் இந்த விருதை வாங்கத் தகுதியானவன் இல்ல. எனக்கு இதை வாங்க எந்த உரிமையும் இல்ல”

“என்னடா உளறிட்டு இருக்க, தகுதி உரிமைனு... நீதானேடா இந்த கம்பனியோட பாஸ். நீதான் அந்த அவாடை வாங்கணும்”

“இல்ல. இந்த அவாட் கவிதாவுக்கு சொந்தமானது. இந்த கம்பனிய உருவாக்கினது கவிதா. இதெல்லாம் அவங்க ஐடியா. அவங்க கனவு. இதெல்லாம் என்னை விட உங்களுக்கு நல்லா தெரியுமே. நான் இந்த அவாடை எப்படி வாங்க முடியும் சொல்லுங்க. அது எப்படி நியாயமாகும்?” என்று ரஞ்சன் கேட்கவும்,

“போதும் நிறுத்துடா” என்று அஜய் கத்திவிட்டான்.

“சும்மா என்னவோ கவிதா கவிதா கவிதான்னு... ஆமா  இதெல்லாம் அவ உருவாக்கினதுதான் அவளோட ஐடியாதான். ஆனா அவதான் இது எதுவும் வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போயிட்டா இல்ல.

அவ போய் முழுசா மூணு வருஷமாகிடுச்சு. இந்த மூணு வருஷத்துல நிறைய மாறிடுச்சு. நம்ம கம்பனி நிறைய வளர்ந்துடுச்சு. லோக்கல வெறும் தமிழ்நாட்டுல மட்டும் சப்ளை பண்ணிட்டு இருந்த நம்ம இன்னைக்கு இண்டர்நேஷனல் லெவல் சப்ளை பண்ணிட்டு இருக்கோம். இதெல்லாம் உன்னோட ஐடியாலதான் நடந்துச்சு

நீ இந்த இடத்துல இருக்க ஒரு வகையில கவிதா காரணம்தான். ஒத்துக்கிறேன். அதுக்காக நீ உன் பேர் பக்கத்துல அவ பேரை போட்டுக்கிட்ட. தட்ஸ் ஓகே. பைன்  

அதுக்காக எல்லா புகழும் கவிதாவுக்கேனு நீ தூக்கி கொடுக்கிறது இருக்கு பாரு. ரொம்ப டூ மச். சுத்த பைத்தியக்காரத்தனம்” என்று பொறுமிய அஜய், மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டிலை வாயில் சரித்தான்.

அவனை ஏறிட்ட ரஞ்சன், “சரி ண்ணா, நீங்க சொல்ற மாதிரி நான் அவாட் வாங்கிக்கிறேன். ஆனா கவிதா அந்த மேடையில என் பக்கத்துல நிற்கணும். அப்பதான் வாங்கிப்பேன்” என்று சொன்ன நொடி அஜய் குடித்த தண்ணீர் எல்லாம் மூக்கு வழியாக வெளியே வந்துவிட்டது.

 “பைத்தியமாடா நீ. அவ எங்கே இருக்கா என்னனு ஒரு மண்ணும் தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் மேடைல வந்து, உன் பக்கத்துல அவ நிற்பானு நினைக்குறியா?” என்று அஜய் அதிர்வுடன் கேட்க,

“அப்படினா இந்த அவாடை நீங்க வாங்கிட்டு வந்திருங்க” என்று விட்டான்.

‘இவன்  திருத்தவே மாட்டேன்’ என்றபடி அஜய் தலையிலடித்துக் கொண்டான்.

chitti.jayaraman has reacted to this post.
chitti.jayaraman
Quote

Nalla arambam hero sir pondatti name vechi iruka nalla dan Iruku ana pondatti enga kanom 

You cannot copy content