You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 18

Quote

அத்தியாயம் – 18

கவிதா சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த அஜய், “ரஞ்சன் போய்... உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டானா? சத்தியமா என்னால நம்ப முடியலடி” என்றான்.

“என்னாலயும் முதல நம்ப முடியலதான். ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவனே ஒத்துக்கிட்டான். எல்லாம் உண்மைத்தானு”

“அடப்பாவி... இவ்வளவு எல்லாம் பண்ணிட்டு அப்படியே அப்பாவி மாதிரி நடிச்சிருக்கான். ராஸ்கல் அவனை கொன்னா என்ன?” என்று ஆவேசமாகக் கத்திய அஜய், “ஆமா நீ எப்படிறி அவங்கள எதுவும் பண்ணாம விட்டுட்ட போன. எனக்கு புரியல. உன் கண் முன்னாடி ஒரு சின்ன தப்பு நடந்தா கூட பாஞ்சிக்கிட்டு போய் கேட்ப. ஆனா உனக்கு இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கு. ஆனா அவங்கள ஒண்ணுமே பண்ணாம நீ பாட்டுக்கு விட்டுட்டு போயிட்டங்குற” என்று  உணர்ச்சிவசப்பட, அப்போது அவனைக் கடந்து சென்ற செவிலியர் கையமர்த்தி மெதுவாகப் பேசச் சொன்னார்.

“இது ஹாஸ்பெட்டில்னுங்குறத மறந்து நான் பாட்டுக்கு கத்தி பேசிட்டு இருக்கேன்” என்று அவன் குரலைத் தாழ்த்திக் கொள்ள,

“நீ போய் ஆனந்தியோடவும் குழந்தையோடவும் இரு. நான் அப்புறம் பேசுறேன்” என்றான்.

“போனை கட் பண்ணேனா அவ்வளவுதான் உன்னை”

“அஜய்”

“எனக்கு ஒழுங்கா பதில் சொல்லு”

“என்ன சொல்லணும் உனக்கு நான்”

“எதுக்கு அவங்க இரண்டு பேரையும் சும்மா விட்டுட்டு போன”

“அவங்கள என்ன பண்ணி இருக்கணும்னு சொல்ற”

“நீ கோழை மாதிரி ஓடி போகாம இருந்திருந்தா அவங்கள நம்மை என்ன வேணா பண்ணி இருக்கலாம்”

“நான் ஒன்னும் கோழை எல்லாம் இல்ல”

“எனக்கு தெரிஞ்ச என் பிரண்ட் கவிதா கோழை இல்ல. எதையும் தைரியமா நேருக்கு நேரா நின்னு பேஸ் பண்ண கூடியவ. ஆனா நீ... நீ கோழைதான்டி. பயந்து ஓடிப் போன கோழை”

“அஜய்ய்ய்ய்ய்”

“உன்னை ஏமாத்துனவங்கள ஒன்னும் பண்ணாம விட்டுட்டு, என்கிட்ட வந்து கத்து”

“நீயாச்சும் என்னை புரிஞ்சிப்பனு பார்த்தா நீயும் என்னை ஹார்ட் பண்ற மாதிரி பேசற”

“ஹார்ட் பண்றேனா? இந்த உலகத்துலயே என்னை ஹார்ட் பண்ண கூடிய ஒரே ஆள் நான் மட்டும்தானு சொல்லுவ. யாராலயும் என்னை காயப்படுத்த முடியாதுன்னு அலட்டிக்குவ. இப்போ என்னாச்சு அந்த கவிதாவுக்கு”

“என்னாச்சு அந்த கவிதாவுக்கு...” என்று விரக்தியாக சிரித்துக் கொண்டவள், “அப்போ அப்படிதான் நினைச்சேன்... திமிரா தலைக்கனமா சுத்திட்டு இருந்தேன். எவனுமே என்னை காயப்படுத்த முடியாதுன்னு நம்பிட்டு இருந்தேன்... ஆனா ஒருத்தன்... என்னை, என் நம்பிக்கையை எல்லாத்தையும் துண்டு துண்டா உடைச்சுட்டான். நொறுக்கிட்டான். I broken into pieces அஜய்” என்றவள் குரல் உடைந்தது.

“கவி”

“you know what… I love that baastard… that fucking bastard”

“ரஞ்சனை சொல்றியா”

“வேற யாரை... அவனைத்த்த்த்த்தான் சொல்றேன்.” என்று பல்லைக் கடித்தாள்.

அஜயிற்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

 “அவன் என்னை ஏமாத்திட்டாங்குறத விட நான் அவன் வலையில சுலபமா விழுந்துட்டேங்குறதைதான் என்னால நம்பவே முடியல. அசிங்கமா அவமானமா இருந்துச்சு. உன்கிட்ட கூட சொல்லாம ஓடி போனதுக்கு காரணமும் அதுதான் அஜய். என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல

ஆனா நீ சொன்ன மாதிரி கோழைத்தனமா ஒன்னும் நான் ஓடி போகல. அந்த ரஞ்சனை அப்படிதான் தண்டிக்க முடியும்னு நான் நினைச்சேன். அவன் காதலுக்காகத்தானே என்னை ஏமாத்துனானா அதை நான் எந்த காலத்திலயும் அவனுக்கு கொடுக்கவே கூடாதுன்னு நினைச்சேன்

நான் இல்லாம... அவன் திரும்பவும் ஒன்னும் இல்லாதவனா தோத்து போயிடணும்னு நினைச்சேன். ஆனா பாரு, அவன் நல்லாதான் இருக்கான். நான்தான்... நான்தான் இங்கே தோத்து போய் நிற்குறேன்” என்றவள் தரையில் அமர்ந்து அப்படியே முகத்தை மூடி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“கவி அழாத ப்ளீஸ் அழாத.”

தொடர்ந்து அவள் அழும் சத்தம் கேட்கவும், “ஐம் சாரி கவி. நான் உன்னை கோழைன்னு சொல்லி இருக்க கூடாது. நான்தான்டி தப்பு செஞ்சுட்டேன். நான் உன்னை தேடி வந்திருக்கணும்”  என்று சொல்ல, அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பேசினாள்.

“இதுல உன் தப்பு எதுவும் இல்ல அஜய்”

“இல்ல. உனக்கு என்ன ஆச்சு நான் யோசிக்கல. உன்னை நான் சரியா தேடல”

“நீ தேடி இருந்தாலும் நான் கிடைச்சிருக்க மாட்டேன். நான் மும்பை டில்லினு நிறைய இடம் மாறிக்கிட்டே இருந்தேன். அப்புறம் நியூ யார்க் போயிட்டேன். புது நாடு புது மனுஷங்கன்னு என் வாழ்க்கையே மொத்தமா மாறி போயிடுச்சு

கொஞ்ச நாள் எல்லாம் நல்லாத்தான் போச்சு.” என்று சொல்லி பெருமூச்செறிந்தவள், “எல்லாம் அம்மாவுக்கு கேன்சர்னு தெரியுற வரைக்கும்” என்று முடிக்கவும் அஜய் அதிர்ந்தான்.

“என்ன அம்மாவுக்கு கேன்சரா?”

“லங் கேன்சர் தேர்ட் ஸ்டேஜ். காப்பாத்த முடியும்னுதான் டாக்டர்ஸ் சொன்னாங்க. அட்வான்ஸ் லெவல் ட்ரீட்மென்ட் எல்லாம் பண்னேன். தென் கீமோ கீமோ கீமோனு முடியல அஜய். ஒரு நிலைக்கு மேல அவங்களாலயும் முடியல என்னாலயும் முடியல. மூணு மாசத்துக்கு முன்னாடி...” என்றவள் குரல் உள்ளே போய்விட்டது.

“அம்மா இறந்துட்டாங்களா?” என்ற அஜய் குரலும் அமிழ்ந்து போனது.

“ஆமா அஜய். இறந்துட்டாங்க. ஆனா அவங்க கேன்ஸர்னால இறக்கல. என்னோட அலட்சியத்தால, என்னோட சுயநலத்தால இறந்துட்டாங்க”

“நீ ஏன் டி இந்த மாதிரி எல்லாம் யோசிக்குற”

“அதுதான் உண்மை அஜய். நான் என் அம்மாவை ஒழுங்கா பார்த்துக்கல. ஒரு மனுஷியா கூட அவங்கள மதிக்கல. நான் நல்லா படிச்சி பிஸ்னஸ் எல்லாம் ஆரம்பிச்சு நல்லா வளர்ந்த பிறகும்  அவங்க வாழ்க்கையை மாத்தணும்னு யோசிக்கவே இல்ல. நான் நான்னு சுயநலமா இருந்துட்டேன்

உனக்கு தெரியுமா? என் கல்யாண விஷயத்துல அவங்களுக்கு அவ்வளவு கனவு இருந்திருக்கு. எல்லாத்தையும் நான் ஒண்ணுமே இல்லாம பண்ணிட்டேன். அவங்க ஆசையை அழிச்சுட்டேன்

கடைசி வரைக்கும் வலி, வேதனை, ஏமாற்றம் இதை தவிர நான் அவங்களுக்கு எதையுமே கொடுக்கல. அவங்கள நான்தான் அஜய் சாகடிச்சுட்டேன்”

“அது உண்மை இல்ல கவி. நீ அம்மா இறந்த கில்டில பேசிட்டு இருக்க”

“தப்பு செய்றவனுக்குதானே கில்டி எல்லாம்”

“இல்ல நீ எந்த தப்பும் செய்யல. கண்டிப்பா செய்யல”

அவள் அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.

 “கவி” என்றான்.

“ம்ம்ம்”

“ஐம் சாரிடி. நீ இவ்வளவு மனகஷ்டத்துல இருப்பனு நான் நினைக்கவே இல்ல”

“இதெல்லாம் ஒன்னும் இல்ல. அம்மா செத்த போது நீ என்னை பார்த்திருக்கணும். பைத்தியக்காரி மாதிரி இருந்தேன்... அப்படியே அழுது வடிஞ்சிட்டு... என்னையே நான் வெறுத்துட்டு, அந்தளவு டிப்ரெஷன்ல இருந்த என்னை ஸ்ரீதான் கொஞ்சம் கொஞ்சமா பேசி நார்மலாக்கினான். அவன் மட்டும் இல்லனா நான் என்னவாகி இருப்பேன்னு எனக்கே தெரியல”

“ஸ்ரீதரா? ஆச்சரியமா இருக்கு. அவன் காலேஜ் டைம் ல எல்லாம் பணத்திமிரோட நடந்துக்குவான். யாரையும் மதிக்க மாட்டான்”

“இப்போ இருக்க ஸ்ரீதர் அப்படி இல்ல. ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன். அவன்தான் இப்போ எனக்கு எல்லாம்”

“நீ சொல்றதை வைச்சே அவன் எந்தளவு உனக்கு சப்போர்ட்டா இருந்திருக்கானு என்னால புரிஞ்சிக்க முடியுது”

“அவன் கூட இருக்குறதாலதான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். ஆனா அது பொறுக்கல அந்த ரஞ்சனுக்கு. தேடி வந்து என் உயிரை எடுத்துட்டுருக்கான்டா. எனக்கு தெரிஞ்சு இன்னும் அவன் வெளியேதான் நின்னுட்டு இருப்பான்.

அவன்கிட்ட எவ்வளவு பொறுமையா பேசியும் அவன் கேட்க மாட்டுறான். நீயாவது அவன்கிட்ட பேசு. என்னை விட்டு போக சொல்லு. தூரமா போக சொல்லு. நான் அவனைப் பார்க்க கூட விருப்பப்படல”

“உன்னை விட்டுட சொல்லி ஏற்கனவே அவன்கிட்ட நான் பேசிட்டேன் கவி. ஆனா அவன் கேட்க மாட்டுறான். உன் விஷயத்துல மட்டும் அவன் ரொம்ப பிடிவாதமா இருக்கான். நானு இல்ல, அவன் யார் சொல்லியும் கேட்பானு எனக்கு தோணல”

“அப்போ எப்படிதான் அவனை துரத்துறது”

“டிவோர்ஸ், அதுதான் ஒரே வழி”

“அதுக்கும்தான் அவன் ஒத்து வரமாட்டுறானே”

“அப்படினா கோர்ட்டுக்கு போகனும்”

“அதெல்லாம் பெரிய பிராசெஸ் அஜய். அதுவும் இல்லாம எனக்கும் ஸ்ரீக்கும் நாளைக்கு எங்கேஜ்மென்ட்”

 “நாளைக்கா?”

“ம்ம்ம். எல்லாம் அந்த ஸ்ரீயோட அக்கா பண்ண வேலை. கொடைக்கானல்தான் அவங்க குடும்பம் சொந்த பந்தம் எல்லாம் இருக்குனு இங்க வர வைச்ச, இப்ப பாரு”

“எனக்கு ஒரு டவுட்டு. ரஞ்சனை பத்தி... ஸ்ரீக்கு தெரியுமா?”

“ஸ்ரீக்கு தெரியாது... அவன் அக்காவுக்குத்தான் தெரியும்” என்றாள் தயக்கத்துடன்.  

“என்னடி சொல்ற, ஸ்ரீகிட்ட சொல்லாம எப்படி?”

“சொல்லணும்னு தோணல, சொல்லல... இப்போ என்னங்குற”

“நாளைக்கு விஷயம் தெரிஞ்சா உன் எங்கேஜ்மென்ட்ல பிரச்னையாகாதா?”

“இந்த ரஞ்சன் என்னை தேடி வராம இருந்திருந்தா இப்பவும் எந்த பிரச்னையும் வந்திருக்காது”

“தேடி வராம இருந்திருந்தா. ஆனா இப்போ அது ஆப்ஷன்ல இல்ல. அவன் இப்போ உன் வீட்டு வாசலில் நிற்குறான். இதுக்கு அப்புறமும் நீ உண்மையை சொல்லாம இருக்குறது சரி இல்ல. ஸ்ரீகிட்ட எல்லாத்தையும் சொல்லு” என்று அஜய் கண்டிப்புடன் சொன்னதை கேட்டு அவள் மௌனமாகிவிட்டாள்.

“என்னாச்சு? உண்மையை சொல்றதுல ஏதாவது பிரச்னையா என்ன?”

“அதெல்லாம் இல்ல. நான் காலையில அவன்கிட்ட பேசுறேன்”

“சரி ஓகே. ஆனந்தி டிசார்ஜ் ஆனதும் நான் நேர்ல வரேன். கவலைப்படாத பார்த்துக்கலாம்” என்றவன் ஆறுதலாக பேச, “சரி ஆனந்தியை கேட்டதா சொல்லு. அப்புறம் குழந்தையோட போட்டோ அனுப்பு” என்றாள்.

“ஏன்... நீ நேர்ல வந்து பார்க்க மாட்டியோ?”

“வருவேன்டா, ஆனா இப்போ பார்க்கணுமேனு கேட்டேன்”

“சரி சரி அனுப்புறேன்”

“உன்கிட்ட பேசுனது எனக்கு ரொம்ப ரிலீப்பா இருக்கு”

“சரி நீ அந்த ரஞ்சனை பத்தி கவலைப்படாம தூங்கு” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு வெகுநேரம் உறக்கமே வரவில்லை. கவிதா சொன்னதை எல்லாம் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தவன் உள்ளம் வெதும்பியது. அவளுடன் தான் இல்லாமல் போய்விட்டோமே என்ற குற்றவுணர்வு அழுத்தியது.

அதேநேரம் ரஞ்சனுக்கு அழைத்துப் பேசலாமா என்று யோசித்தவன் பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அதனால் எந்தப் பயனும் இருக்காது. ஆதலால் விடிந்ததுமே நேராக பிரகாஷ் பங்களாவிற்குச் சென்றான்.

சோபாவில் அமர்ந்து செய்தித் தாளைத் புரட்டிக் கொண்டிருந்தவர் முன்பு சென்று நின்றான். அவனை பார்த்ததுமே, “வா அஜய், ஆனந்தி நல்லா இருக்காளா? நானே இன்னைக்கு ஹாஸ்பெட்டில வந்து குழந்தையை பார்க்கலாம்னு இருந்தேன்” என்று ஆர்வத்துடன் அவனை வரவேற்றார்.

“தேவை இல்ல நீங்க என் குழந்தையை பார்க்க கூடாது. உங்கள மாதிரி ஆளுங்களோட மூச்சு காத்து கூட என் பொண்ணு மேல பட கூடாது” என்று அவன் சீற்றத்துடன் பேச, அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“என்ன அஜய் என்னாச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற நீ”

“என்ன ஆச்சா?” என்றவன் உக்கிரத்துடன் கவிதா சொன்னதை எல்லாம் சொல்லிவிட்டு அவர் முகத்தை பார்க்க, அப்படியே அவர் தலையைக் குனிந்து நின்றார்.

“கவிதா என்ன கடைல விற்குற பொம்மையா... உங்க பேரன் கேட்டானு வாங்கி கொடுக்க” என்றதும் பிரகாஷ் நிமிர்ந்து, “இல்ல அஜய் நீ நினைக்குற மாதிரி இல்ல.” என்றார்.

“வேற என்ன மாதிரி... சொல்லுங்க. வேற என்ன மாதிரி. சை உங்களை நான் எவ்வளவு நல்ல மனுஷனு நினைச்சேன். நீங்க போய் இப்படி எல்லாம் செய்வீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல” என்றவன் சத்தமாக பேசுவதை கேட்டு சாரதா வெளியே வந்தார்.

அவனை ஏறஇறங்க பார்த்துவிட்டு, “என்னாச்சு? ராஜசேகர் பையன் எதுக்கு உங்ககிட்ட கத்திட்டு இருக்கான்” என்று விசாரிக்க, அஜயின் கோபம் அதிகமானது.

“நான் எந்த ராஜசேகரன் பையனும் இல்ல. நான் கவிதாவோட பிரண்டு” என்றதும் சாரதா குழப்பத்துடன் கணவனை பார்க்க, “நீ உள்ளே போம்மா. நான் பேசிக்கிறேன்” என்றார்.

“நான் உங்ககிட்ட பேச வரல. இனிமே நீங்களும் அந்த ரஞ்சனும் என் பிரண்டோட வாழ்க்கைல தலையிடாதீங்கனு சொல்லத்தான் வந்தேன். ரஞ்சனை கூப்பிட்டு ஒழுங்கா சென்னைக்கு திரும்ப சொல்லுங்க. நான் போனேனா அப்புறம் வேற மாதிரி ஏதாவது ஆகிடும்” என்றவன் எச்சரிக்கை செய்துவிட்டு காரில் கிளம்பி மீண்டும் மருத்துவமனை வந்து இறங்கினான்.

அவன் அறைக்குள் நுழையவும் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்  ஆனந்தி, “உன்னை எங்கெல்லாம் தேடுறது அஜய்.. ஆமா எங்க போன நீ. அதுவும் போனை கூட மறந்துட்டு” என்று பதற்றத்துடன் வினவினாள்.

 “நான்...  அது நீ தூங்கிட்டு இருந்தேன். அதான் சும்மா கீழே போய் அப்படியே டீ குடிச்சிட்டு” என்று சமாளிக்க,

“உன் போன் அடிச்சுட்டே இருந்துச்சு.” என்றாள்.

 கவிதா அழைத்திருப்பாளோ என்று அவன் யோசிக்கும் போதே, “கொடைக்கானல் போலிஸ் ஸ்டேஷன்ல பேசுனாங்க” என்றாள் ஆனந்தி.

“என்ன போலிஸ் ஸ்டேஷன்ல இருந்தா... என்ன பிரச்னை”

“ரஞ்சனை அரெஸ்ட் பண்ணி இருக்காங்களாம்... அதுவும் அட்மப்ட் மர்டர் கேஸ்ல” என்று ஆனந்தி சொன்ன தகவலைக் கேட்டு அவனுக்குத் தூக்கிவாரி போட்டது.

“என்னடி சொல்ற”

“அவங்க வேற எந்த டீடைலும் சொல்லல அஜய். இதை மட்டும் சொல்லிட்டு வைச்சுட்டாங்க”

மீண்டும் அதே எண்ணிற்கு அவன் அழைக்க, அது  எடுக்கப்படவில்லை. உடனடியாக அவன் கவிதாவிற்கு அழைக்க, அவளுமே எடுக்கவில்லை.

சில மணி நேரங்களுக்கு முன்பு கொடைக்கானலில்...

செல்பேசியின் ரீங்காரச் சத்தம் கவிதாவை துயில் கலைக்க, அதனை எடுத்து காதில் வைத்தாள்.

“ஏய் கவி, இன்னுமா தூங்கிட்டு இருக்க. கீழே வா உனக்கு ஒரு சர்பிரைஸ் வச்சு இருக்கேன்” என்று ஸ்ரீயின் குரல் உற்சாகமாகக் கேட்டதும் அவள் அடித்து பிடித்து எழுந்து உட்கார்ந்தாள்.

இரவெல்லாம் சரியாக தூங்காத காரணத்தால் தலை கிறுகிறுத்தது.

தள்ளாட்டத்துடன் நடந்து சென்று ஜன்னலைத் திறந்து பார்க்க அவளுக்குப் பயங்கர அதிர்ச்சி. ரஞ்சன் அங்கிருந்து ஓரடி கூட அசையவில்லை. உறுதியாக அதே இடத்தில் நின்றிருந்தான்.

‘இவனை என்ன பண்றதுனே தெரியலயே. ஐயோ ஸ்ரீ வேற கீழே கூப்பிட்டு இருக்கானே’ என்று புலம்பியவள் அவசர அவசரமாக முகத்தை அலம்பிக் கொண்டு கீழே செல்ல, ஸ்ரீதர் முகப்பறையில் நின்றிருந்தான்.

உடன் அமலாவும் இருந்தாள். அவளிடமிருந்த அதே பதற்றமும் கவலையும் அமலா முகத்திலும் இருந்தது. என்ன செய்வது என்று இருவரும் மாறி மாறி பார்த்து கொண்ட நொடி, “சீக்கிரம் வா” என்று ஸ்ரீ அவள் கையை பிடித்து தன் அறைக்கு இழுத்து வந்துவிட்டான்.

“என்ன ஸ்ரீ பன்ற. கையை விடு. உங்க அக்கா எல்லாம் வெளியே நின்னுட்டு இருக்காங்க” என்று கையை உதற, அவன் விடவில்லை. அறைக்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, “சர்பிரைஸ்” என்று ஒரு சிறிய நகைப்பெட்டியை நீட்டினான்.

அதனை வாங்கி பார்க்காமலே, “எங்கேஜ்மென்ட் ரிங்கா?” என்று கேட்க, “ஆமா” என்று அதனைத் திறந்து காட்டினான்.

உள்ளே ஜொலித்த அந்த வைர மோதிரத்தை அவள் அசுவாரசியத்துடன் பார்க்க, “கையை நீட்டு. சைஸ் கரெக்டா இருக்கான் பார்க்கலாம்” என்றவன் ஆசையாக அவள் விரலைப் பிடித்து அணிவிக்க முயன்றான்.

“ஸ்ரீ” என்றவள் தன் கரத்தை உருவிக் கொள்ள,

“சைஸ் செக் பண்ணலாம்னுதான்” என்றான்.

“அளவெடுத்துதானே செஞ்சோம். எல்லாம் சரியாத்தான் இருக்கோம். நீ அதை உள்ளே வைய்யு”

“என்ன உன் முகத்துல எக்சைட்மென்டே இல்ல” என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவள் தலையைக் கவிழ்ந்தாள்.

“என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்க” என்றவன் அவள் தோள்களைப் பிடித்துக் கொண்டு நெருங்கி வந்து நின்றான்.

“சாரி ஸ்ரீ. நான் இப்போ எக்சைட் ஆகுற மனநிலைல இல்ல”

“ஏன், என்னாச்சு...”

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றவள் மிகுந்த தயக்கத்துடன் சொல்ல, “என்கிட்ட என்ன உனக்கு. எதுவா இருந்தாலும் சொல்லு” என்று அவள் முகத்தை நிமிர்த்தி பிடித்தான்.

அவன் கண்களை பார்த்தவள், ரஞ்சனை பதிவு  திருமணம் செய்தது தொடங்கி சென்னையை விட்டு வந்தது வரை அத்தனையும் சொல்லி முடித்து, “ஐம் சாரி. நான் உன்கிட்ட இந்த விஷயத்தை எல்லாம் மறைச்சுருக்க கூடாது” என்று வருத்தப்பட்டாள்.

 “நீ எதுக்கு இப்போ சாரி எல்லாம் கேட்குற. அதெல்லாம் ஒன்னும் அவசியம் இல்ல. இதுல உன் தப்பு எதுவுமே இல்ல” என்றவன் சொல்லிக்கொண்டேஅவளை அணைத்துக் கொண்டு, “இதை சொல்லவா நீ இவ்வளவு தயங்குன” என்றான்.

அவன் அணைப்பு அவளுக்கு அமைதியை கொடுக்கவில்லை.  இன்னும் அதிக சங்கடத்தை கொடுத்தது.

“அந்த ரஞ்சன் இங்கே கொடைக்கானல இருக்கான் ஸ்ரீ” என்று அவள் மெதுவாக கூற, அதிர்ச்சியுடன் அவள் முகம் பார்த்தவன், “ஏய் இரு இரு நேத்து பார்த்தோமே. டீ கடையில அவனா?” என்று கேட்டான்.

“ம்ம்ம் அவனேதான். இப்போ அவன் நம்ம வீட்டு வாசலில நிற்குறான்”

“வாசல யா”

“ஆமா நைட்ல இருந்து நின்னுட்டு இருக்கான். நான் எவ்வளவு சொல்லியும் போக மாட்டுறான்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், ஸ்ரீ அறையை விட்டு வேகமாக வெளியே நடந்தான்.

“அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இங்கயே வந்து உனக்குத் தொல்லை கொடுப்பான்”

 “ஸ்ரீ நில்லு”

“அவனை உண்டு இல்லன்னு பண்ணிடுறேன்”

“அதெல்லாம் வேண்டாம். நான் சொல்றதை கேளு. ஸ்ரீ நில்லு ஸ்ரீ...” என்றவள் சொல்லச் சொல்ல கேட்காமல் கேட்டிற்கு வந்தான். அந்த சமயம் பார்த்து காவலாளி அங்கே இல்லை.

“இந்த செக்யூரிட்டி எங்க போய் ஒழிஞ்சான்” என்று சுற்றி நோட்டம் விட்டவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனே கதவைத் திறந்து கொண்டான்.

“ஸ்ரீ வேணாம்” என்று கவி அவன் கையை பிடித்த தடுத்த போதும் அவனை நிறுத்த முடியவில்லை.

ரஞ்சனை பார்த்த கணமே ஸ்ரீயின் ஆக்ரோஷம் அதிகரித்தது. நேராக வந்து அவன் முகத்தில் ஓங்கி குத்திவிட்டான்.

குத்திய வேகத்தில் ரஞ்சன் பின்னே சென்று விழ, “என் கவிதாவுக்கே தொல்லை கொடுப்பியாடா நீ” என்று ஸ்ரீ அவன் மீது பாய்ந்தான். ஆனால் அவன் அடிப்பதற்குள் ரஞ்சன் அவனை இழுத்துத் தள்ளினான். அதன் பின்பு  இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்ள, 

“ஸ்ரீ ரஞ்சன் வேண்டாம்... ப்ளீஸ் நிறுத்துங்க. நிறுத்துங்கனு சொன்னேன்” என்ற கவிதா கத்தினாள். அழுதாள். தலையிலடித்துக் கொண்டாள். ஆனால் அவர்கள் இருவருமே நிறுத்தவில்லை.

ஒரு நிலைக்கு மேல் ரஞ்சன் அடித்ததில்  ஸ்ரீதர் படுகாயத்துடன் தரையில் விழுந்து மயங்கினான்.

You cannot copy content