You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 19

Quote

அத்தியாயம் – 19

சில வருடங்களுக்கு முன்பு...

கல்லூரிக்கு வெளியே இருந்த கடையில் அஜயும் கவிதாவும் தேநீருடன் அமர்ந்து மும்முரமாக அளவளாவிக் கொண்டிருந்தனர்.

“நீ சொல்ற ஐடியா வொர்க் அவுட் ஆகும்னு நினைக்குறியா?”

“இன்னும் கொஞ்ச வருஷத்துல எல்லாமே ஆன்லைன் ஸ்டோர்ஸாதான் இருக்கும். அப்போ எல்லோரும் இந்த ஐடியாவை நோக்கி நகருவாங்க. அதனால்தான் நம்ம முந்திக்கணும்னு சொல்றேன்.”

“சரி ஒகே. வொர்க் அவுட் ஆகும்னு வைச்சுக்கிட்டா கூட... டப்புக்கு எங்க போறறதாம். அதுவும் பிஸ்னஸ் பன்றேனு சொன்னா எங்க அப்பா ஒத்த பைசா கூட கொடுக்க மாட்டாரு”

“let’s figure it out” என்றவள் அஜயிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஸ்ரீதர் சிகரெட்டுடன் வந்து எதிரே அமர்ந்தான்.

அவனைப் பார்த்ததுமே கடுப்பானவள், “அஜய் வா போலாம்” என்று எழுந்து கொள்ள, ஸ்ரீதர் அவள் கையை பிடித்தான்.

அஜய் கொதிப்புடன், “கையை விடுறா” என, “இது எனக்கும் அவளுக்கும் இடைல நீ மூடிட்டு போடா” என்றான் ஸ்ரீ.  

“என்னடா உனக்கும் அவளுக்கும்... உனக்கும் அவளுக்கும் இடைல ஒன்னும் இல்ல” என்று அஜய் அவன் சட்டையைப் பிடிக்க,

“அப்போ உனக்கும் அவளுக்கும் இடைல ஏதோ ஒன்னு இருக்கு. அப்படிதானே” என்று ஸ்ரீ எள்ளலாகக் கேட்டான்.

“டேய்” என்று அஜய் எகிறவும், “இட்ஸ் ஒகே அஜய். நான் பேசிக்கிறேன் நீ போ” என்றாள்.

 “இவன்கிட்ட எதுக்கு நீ பேசணும்” என்று அஜய் எரிச்சலுடன் மொழிய,

“நம்ம காலேஜ் லைப் இன்னையோட முடிய போகுது. கடைசியா ஒரு தடவைதானே. பேசிட்டு போறான் விடு” என்ற போதும் அஜய் நகரவில்லை.

“போ ன்னு சொன்னேன்” என்றவள் அழுத்தமாகக் கூற அஜய்  அவர்களை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.

 “உனக்கு என்கிட்ட பேசணும் அவ்வளவுதானே. பேசலாம். கையை விடு” என்று கவிதா சொல்ல, கையை விட்ட ஸ்ரீதர் எதிரே அமர அவளும் அமர்ந்தாள்.

“சரி என்ன பேசணும் உனக்கு” என்று அவள் தொடங்க,

“நான் உன்னை லவ் பண்றேன்” என்றான்.

“அதுதான் இந்த ஒட்டுமொத்த காலேஜுக்கே தெரியுமே. வேற ஏதாவது புதுசா சொல்லு”

“நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் கவி”

“என்னை யாரும் பார்த்துக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல. வாட் நெக்ஸ்ட்”

“இதே காலேஜ்ல பிஜி சேர்ந்ததுக்கு காரணம் உன்னை நான் பார்த்துக்கிட்டே இருக்கணும்னுதான்”

“அதான் பார்த்துக்கிட்டே இருந்தியே. அப்புறம் என்ன”

“வாழ்க்கை பூரா உன்னை நான் பார்த்துக்கிட்டே இருக்கனும் கவி”

“ஓகே. என்னுடைய நல்ல போட்டோவா ஒன்னு கொடுக்கிறேன். நீ அதை ப்ரேம் போட்டு உன் ரூம்ல மாட்டிக்கோ. தென் வாழ்க்கை பூரா நீ என்னை பார்த்துட்டே இருக்கலாம்”

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்”

“நானும் சீரியஸாதான் பேசிட்டு இருக்கேன். இன்னும் கேட்டா ரொம்ப சீரியஸா... எனக்கும் உனக்கும் செட்டாகாதுனு யூஜி படிக்கும் போதே உன்கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன். அப்படியும் நீ என் பின்னாடியே சுத்தி உன் டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கனா அதுக்கு நான்  ஒன்னும் பண்ண முடியாது”

“அப்போ நீ என்னை லவ் பண்ண மாட்ட”

“இப்படி திரும்ப திரும்ப கேட்க உனக்கே அசிங்கமா இல்லையா” என்றதும் அவன் கண்களில் கோபம் தெறித்தது.

“அவ்வளவு திமிரா உனக்கு. நான் பார்க்குறேன் எவனை கட்டிகிட்டு எப்படி வாழுறேனு”

“சரி பாரு” என்றவள் அலட்சியத்துடன் தோள்களை குலுக்கி சொல்லிவிட்டு எழுந்து செல்ல, “நீ அழுவடி, ஒரு நாள் என்னை மிஸ் பண்ணதுக்காக நீ அழுவ... சத்தியமா அழுவ” என்று வெறியுடன் கர்ஜித்தான்.

அந்த வழியாக போகிற அத்தனை பேரும் அவர்களை திரும்பி பார்க்க, அவள் யாரையயும் பொருட்படுத்தவில்லை.

“வெல் பார்க்கலாம்” என்று விட்டு சாதாரணமாக அவனை கடந்தவள் அஜயிடமும் மற்ற நண்பர்களிடமும், “நான் போய் அழுவேனாடா. அதுவும் அவனுக்காகப் போய்” என்று சொல்லி சொல்லி அன்று முழுக்க சிரித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவன் சொன்னது இன்று நிஜமாகிவிட்டது. அந்த மருத்துவனைச் சிகிச்சை அறை வெளியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவனுக்காக அழுது கொண்டிருந்தாள். எங்கே அவனை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் அழுது கொண்டிருந்தாள்.

மருத்துவரிடம் பேசிவிட்டு வந்த அமலா அவளைப் பார்த்ததும், “எல்லாத்தையும் பண்ணிட்டு அழறியா நீ?” என்று குத்தலாகக் கேட்க, “சாரி, நான் இப்படி எல்லாம் நடக்கும்னு சத்தியமா நினைக்கல” என்றாள்.

“நினைக்கலயா... நேத்து அந்த ரஞ்சனை ஆளை வைச்சு அடிக்கலாம்னு சொன்னதுக்கு நீ என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா உனக்கு...”

கவி மௌனமாக நிற்க, “எனக்கு அப்பவே தெரியும். உனக்கு அந்த ரஞ்சன் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு” என்றாள்.

“அமலா” என்று கவி சீற,  

“அவனுக்கும் உனக்கும் எதுவும் இல்லன்னு நீ சொல்றதல்லாம் பொய். அவன் மேல உனக்கு லவ் இருக்கு” என்றாள் மீண்டும்.  

“கிடையவே கிடையாது. எனக்கும் அவனுக்கும் இடையில ஒண்ணுமே கிடையாது.” என்று கவிதா அழுத்தமாக மறுத்தாள்.

“அப்போ இப்பவே போலிஸ் ஸ்டேஷன் போய் அந்த ரஞ்சன் உன்னைக் கொடுமை படுத்துனா அடிச்சான். அதனாலதான் அவனை நான் பிரிஞ்சு வந்தேன். அப்படியும் அவன் என்னை துரத்திட்டு வந்து டார்ச்சர் பண்ணதாலதான் ஸ்ரீ அவனை அடிச்சுட்டானு எழுதிக் கொடு. மத்தது எல்லாம் நம்ம வக்கீல் பார்த்துப்பாரு. உனக்கும் ஈஸியா டிவோர்ஸ் கிடைச்சுடும்” என்று அமலா நீட்டமாகச் சொன்னதை எல்லாம் கேட்ட கவியின் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.

 “என்னால அப்படி எல்லாம் எழுதிக் கொடுக்க முடியாது”

“என் தம்பியை அவன் அடிச்சு போட்டு இருக்கான் இப்பவும் நீ அவனை காப்பாத்தணும்னு நினைக்குற”

“உங்க தம்பியை அடிச்சதுக்குதான் நீங்க கேஸ் கொடுத்துட்டீங்க. ரஞ்சனையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அப்புறமும் ஏன் இதெல்லாம்”

“நியூஸ் பேப்பர்லயும்.. டிவிலயும் கள்ளகாதலனை அடித்த கணவன்னு வரகூடாது இல்ல அதுக்குதான்”  என்று அமலா குதர்க்கமாக சொன்னதில் கவிதாவின் தாடை இறுகியது.

“அப்படி வந்தா உன் பேரும் சேர்ந்துதான் நாறும். பரவாயில்லயா உனக்கு”

“எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்ல. ஸ்ரீ நல்லபடியா கண் முழிச்சா போதும்” என்றதுமே அமலாவின் கண்களில் கிர்ரென்று கண்ணீர் சுழன்றது.

"அவன் கண் முழிப்பானானே தெரியல. ஆக்சிஜன் லெவல் ரொம்பக் குறைஞ்சுட்டே இருக்கு... கொடுக்கிற மெடிசின்ஸ்க்கு அவன் பாடி எந்த ரியாக்ஷனும் காட்டலனு சொல்றாங்க" என்று அமலா கூற,

“இல்ல இல்ல அப்படி எல்லாம் இருக்காது. ஸ்ரீக்கு ஒன்னும் ஆகாது” என்று சொல்லும் போதே கவிதாவின் குரல் நடுங்கியது.

“அவனுக்கும் ஒன்னும் ஆகக் கூடாது. அப்படி ஏதாவது ஆச்சுன்னா...” என்று குற்றம் சாட்டும் விதமாக அமலா பார்த்தது, கவிதாவை இன்னும் குற்றவுணர்வில் தள்ளியது.

‘உண்மையை சொல்லி இருக்க கூடாது... எல்லாம் என்னாலத்தான்’ என்று நினைத்து கொண்டவள் மெதுவாக சிகிச்சை அறை கண்ணாடி வழியாக ஸ்ரீதரை கண்டாள்.

அவன் மூச்சுக் குழாய் பொருத்தப்பட்டு சுயநினைவின்றி படுத்திருப்பதை பார்க்க அவளுக்கு தாங்கவில்லை.

அன்று கல்லூரியில் அவன் பேசிவிட்டுச் சென்ற பிறகு மீண்டும் நியூயார்க்கில்தான் அவனை கண்டாள். அதுவும் மருத்துவமனையில்...

அன்று கண்ணாடிக்கு உள்ளே அவளும் வெளியே அவனும் இருந்தனர். அவள் அப்போதுதான் அம்மாவை கீமோவிற்கு அனுப்பிவிட்டு காத்திருப்பு அறையில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படிக்க திறந்தாள்.

அவள் அதனை படித்துக் கொண்டே நிமிர்ந்து போதுதான் கண்ணாடிக் கதவிற்கு அந்தப் பக்கம் ஸ்ரீதர் நின்றிருப்பதை பார்த்து திகைப்புற்றாள். உடனடியாக ஸ்ரீதர் கையசைத்தான்.

ஆனால் அவள் பதிலுக்குக் கையசைக்கவில்லை. அவனிடம் பேசவும் விரும்பவில்லை. மீண்டும் புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள். அப்போது ஒரு செவிலியர் அவளிடம் ஒரு சிறு காகிதத்தைக் கொடுத்தார்.

அதனை அவள் திறந்து பார்க்க, ‘வான்ட் டூ டாக் – ஸ்ரீதர்’ என்று எழுதி இருந்தது. அவள் மீண்டும் நிமிர அவன், “ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என்றான்.

புத்தகத்தை மூடி அங்கேயே வைத்துவிட்டு அவள் எழுந்து வெளியே வர, “ஹாய்...” என்று முகமெல்லாம் புன்னகையாக நின்றான்.

அவன் தோற்றத்தில் ஏதோ பெரிய மாற்றம் இருப்பதாகத் தோன்றியது. பழைய கம்பீரமும் முகத்தில் தெரியும் தென்வாட்டும் இல்லை.

“ஹாய் சொன்னா பதிலுக்கு நம்மளும் ஹாய் சொல்லணும்யா”

“எனக்கு உன்கிட்ட பேச விருப்பமில்லை சாரி” என்றவள் மீண்டும் அறைக்குள் செல்ல எத்தனிக்க, “லவ் பண்ண விருப்பமில்லை சரி, பேச கூடவா” என்று இறங்கிய குரலில் கேட்டான்.

அவள் யோசனையுடன் திரும்ப, “ஜஸ்ட் ஒரு காபி. ஒன்னே ஒன்னு அவ்வளவுதான்... அப்புறம் உன்னை நான் தொல்லை பண்ண மாட்டேன். ப்ச் எவ்வளவு வருஷம் கழிச்சு மீட் பண்ணி இருக்கோம். ப்ளீஸ் வாயேன்.. ஜஸ்ட் கொஞ்ச நேரம்” என்று கெஞ்ச, அவள் தயக்கத்துடன் அறைக்குள் எட்டிப்பார்த்தாள்.

“அம்மாவுக்கு கீமோ முடிய லேட்டாகும். அதுக்குள்ள வந்துடலாம்” என்றான்.

“உனக்கு எப்படி”

 “உன்னை பார்த்ததுமே நீ ஏன் வந்திருக்க என்னனு விசாரிச்சுட்டேன்”

அவள் யோசித்துவிட்டு, “ஒன் காபி. அவ்வளவுதான்” என்றாள்.

“ஷுர்”

இருவரும் அந்த மருத்துவமனையின் கேபிட்டேரியாவிற்கு வரவும், “நீ உட்காரு. நான் வாங்கிட்டு வரேன்” என்று இருவருக்கும் காபியை வாங்கிக் கொண்டு வந்தான்.

அவளுக்கான கப்பை கொடுத்துவிட்டு எதிரே அமர்ந்தவன், “எப்படி இருக்க கவி?” என்று கேட்டான்.

“நல்லா இருக்கேன்” என்று விட்டு அவள் காபியைப் பருக,

“நான் எப்படி இருக்கேன்னு கேட்க மாட்டியா?” என்றான்.

“நான் ஏன் கேட்கணும். நீ எப்படி இருந்தா எனக்கென்ன?”

“கொஞ்சம் கூட மாறவே இல்ல நீ. காலேஜ்ல பார்த்த அதே திமிரு பிடிச்ச கவிதாவாவே இருக்க” என்றதும் அவள் நக்கல் புன்னகையுடன், “”ஆமா அதே கவிதாதான். நான் மாறல. மாறவும் மாட்டேன்” என்றாள்.

“உன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமும் அதுதான்”

“எனக்கு அந்த மாதிரி உன்கிட்ட பிடிச்ச விஷயம்னு ஒன்னு கூட இல்ல”

“அது உன் தப்பு இல்ல. நான் அப்படிதான் இருந்திருக்கேன். யாரையும் மதிக்காம திமிரு பிடிச்ச ஸ்ரீதரா. ஆனா உன் திமிரு வேற. அது கெத்து. ஆனா என்னோடது அசிங்கம். அந்த ஸ்ரீதரை நினைச்சு எனக்கே அசிங்கமா அவமானமா இருக்கு” என்றவன் பேசியதை எல்லாம் கேட்டு அவள் அதிசயித்தாள்.

“என்ன அப்படி பார்க்குற... இவன் உண்மையா பேசுறானா இல்ல நடிக்குறேனானு டவுட்டா இருக்கா?”

“உன்கிட்ட நிறைய மோசமான குணம் இருக்கு. ஆனா நடிச்சு ஏமாத்துறது எல்லாம் உனக்கு வராது”

“தேங்க்ஸ் அந்தளவுக்கு என்னை நீ நம்புறதுக்கு”

“ஆமா எதனால இந்த மாற்றம்”

“வாழ்க்கை நம்மள புரட்டிப் போட்டு அடிக்கும் போது எல்லோரும் மாறித்தானே ஆகணும்”

“அப்படி என்ன? உன்னை வாழ்க்கை புரட்டிப் போட்டு அடிச்சுது”

“சொல்லவா இல்ல காட்டவா?”

“என்ன காட்ட போற”

“டேபிளுக்கு கீழே குனி. காட்டுறேன்”

“ஸ்ரீ’ என்றவள் முறைக்க, “சும்மா குனி’ என்றான்.

அவள் மெதுவாக தலையை கீழே விடவும் அவன் தன் வலது  கால் சட்டையைத் தூக்க, அவள் அதிர்ந்து விட்டாள். முட்டிக்கு கீழே அவனுக்குச் செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருந்தது.

 “ஓ மை காட்” என்றவள் நிமிர்ந்துவிட்டு, “என்னாச்சு ஸ்ரீ” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

“Osteosarcoma... எலும்புல வர புற்று நோய்”

“ஓஒ ஐம் சாரி. இதெல்லாம் தெரியாம நான் உன்கிட்ட ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன்”

“நீ இவ்வளவு எல்லாம் பீல் பண்ண தேவை இல்ல. இதெல்லாம் இரண்டு வருஷம் முன்னாடி. ட்ரீட்மென்ட் முடிஞ்சு இப்போ நான் நல்லாத்தான் இருக்கேன். ஆல் குட். இந்த காலும் எனக்கு நல்லா பழகிருச்சு. இப்ப என்னால நாரம்லா நடக்க முடியும். ஓடவும் முடியும்” என்றவன் சொன்னதை எல்லாம் கேட்ட போதும் அவள் மனம் சமாதானம் அடையவில்லை.

ஒரு மனிதனை எப்படி புற்று நோய் அணுஅணுவாக சித்ரவதை செய்து கொல்கிறதை என்பதைத்தான் அவள் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறாளே!

அவள் கண்கள் கலங்கியபடி அவனைப் பார்க்கவும், “ஏய் என்ன அழுறியா... அதான் சொன்னேன் இல்ல. ஐம் ஓகேன்னு” என்றான்.

அவள் தன் கைகுட்டை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டுவிட்டு, “ஓகேனா இப்போ நீ ஏன் ஹாஸ்பெட்டில் வந்திருக்கு” என்று கேட்டாள்.

“என் அக்கா புருஷன் ராஜேஷ் இங்கதான் ஆங்காலஜிஸ்ட்டா இருக்காரு. உனக்கும் அவரை தெரிஞ்சிருக்குமே”

“ஆமா ஆமா தெரியும்”

“ஆக்சுவலி அவர் என் அக்கா புருஷன் ஆனதே ஒரு சோக கதை”

“சோக கதையா”

“எங்க அக்காவுக்கும் எனக்கும் அம்மா அப்பா கிடையாது. என்னை பார்த்துக்கிறது பூரா என் அக்காதான். சோ எனக்காக அவர் ட்ரீட்மென்ட் பார்க்க போய்தான் எங்க அக்காவுக்கு அவரையும், அவருக்கு எங்க அக்காவையும் பிடிச்சு போச்சு. கல்யாணம் பண்ணிக்கிடட்டாங்க. சோக கதையில் ஒரு காதல் கதை” என்று அவன் சொல்லி முடித்ததும் கவியின் உதடுகள் விரிந்தன.

அவனிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

“சரி சரி டைமாகிடுச்சு. நான் போகணும். அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பங்க” என்றவள் அவசரமாக எழுந்து கொள்ளவும், “நானும் வரேன் பேசிட்டே போவோம்” என்றான்.

அவர்கள் உள்ளே வந்ததும், “ஓகே நைஸ் டாக்கிங் டூ யூ. அப்புறம் முதல கொஞ்சம் ஹார்ஷா நடந்துக்கிட்டதுக்கு சாரி” என்று அவனுக்கு கை கொடுக்க, “மீ டூ அன் இதே போல இன்னொரு நாள்... இன்னொரு காபி...” என்று அவள் கையை குலுக்கியபடியே கேட்டான்.

அவள் புன்னகை செய்துவிட்டு, “காபினா ஓகே ஆனா காதல்னா நோ” என்றாள்.

“கண்டிப்பா நோவா?”

“நீ சரிப்பட்டு வர மாட்ட” என்றவள் உள்ளே திரும்ப,

“ஓகே ஓகே நோ லவ்... ஜஸ்ட் பிரண்ட்ஸ்” என்றான்.

அவளும் சம்மதித்தாள். அதன் பிறகு அவர்கள் நிறைய முறை சந்தித்துக் கொண்டனர். நட்புடன்.

அஜய் இல்லாத குறையை ஓரளவு அவன் தீர்த்து வைத்தான். ஆனால் அம்மாவின் மரணம் அவளை புரட்டி போட்ட போது அவன்தான் சாய்ந்து அழுவதற்கு தோள் கொடுத்தான். அந்த துயரத்திலிருந்து மீண்டு வர முடியாமல் அவள் தவித்த நிலையில் அவள் தனிமைக்குத் துணையாக அவளுடனே தங்கிவிட்டான்.   

இந்த சூழ்நிலையில்தான் அமலா அவளைச் சந்திக்க வீட்டிற்கு  வந்தாள்.

“வாங்க, நீங்க ஸ்ரீ அக்காதானே, அவன் இப்பதான் வெளியே போனான். நான் கால் பண்றேன்” என்றவள் சோபாவை சரி செய்து, “நீங்க உட்காருங்க.” என்றாள்.

“இல்ல அவனுக்கு கால் பண்ண வேண்டாம். நான் உன்கிட்ட பேசத்தான் வந்தேன்”

“என்கிட்டயா?”

“ஸ்ரீ வீட்டுக்கு வந்தே பத்து நாள் மேல ஆகுது”

“நான் கொஞ்சம் டிப்ரேஷன்ல இருந்தேன். அதான் ஸ்ரீ எனக்கு ஹெல்பா இங்கேயே...”

“எனக்கு அதெல்லாம் தெரியும். உங்க அம்மா இறந்ததைப் பத்தி என் ஹஸ்பென்ட் சொன்னாரு. ஐம் சாரி”

அவள் மௌனமாக தலையசைக்க அமலா தொடர்ந்து, “ஸ்ரீயம் நீயும் லவ் பண்றீங்களா?” என்று வினவினாள்.

“இல்ல அப்படி எல்லாம் எதுவும் இல்ல. நாங்க வெறும் பிரண்ட்ஸ்தான்” என்றாள்.

“உன்னை பத்தி தெரியல. ஆனா அவன் உன்னை லவ் பண்றான் கவிதா. அவன் கப்போர்ட் நிறைய உன் ஞாபகங்களை நிரப்பி வைச்சு இருக்கான்” என்று அமலா கூறியதை கேட்டு கவிதாவின் முகம் மாறியது.

“இல்ல அதெல்லாம் காலேஜ் டேஸ்ல”

“அவன் இப்பவும் உன்னை லவ் பண்றான். அதே அளவுக்கு லவ் பண்றான்”

கவிதாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் மௌனித்துவிட, “அவனை நீ லவ் பண்ணனும் கவி” என்றாள்.

“என்ன?”

“அவன் வாழ்க்கைல நிறைய இழந்துட்டான். உன்னையும் அவன் இழக்க கூடாதுன்னு நினைக்குறேன். ப்ளீஸ்” என்றவள் கையை பிடித்துக் கெஞ்ச, அவள் பின்வாங்கினாள்.

“இல்ல... அது நான்.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு”

“தெரியும்”

“எப்படி?”

“உங்க அம்மா உன்னை பத்தி எல்லாமே ராஜேஷ்கிட்ட சொல்லி இருக்காங்க”

“தெரிஞ்சுமா என்கிட்ட கேட்குறீங்க”

“நீ செஞ்சதுக்கு பேர் கல்யாணமே இல்ல”

“இல்லன்னு சொன்னாலும் அது ரெஜிஸ்டர் ஆகி இருக்கு”

“யாருக்கு அதல்லாம் தெரிய போகுது. ஹ்ம்ம்... அதுவும் இல்லாம உன்னை ஏமாத்திட்டு போனவனை நினைச்சு ஏன் நீ உன் வாழ்க்கையை கெடுத்துகுற”

“நான் எவனை பத்தியும் நினைக்குறது இல்ல.”

“அப்போ ஸ்ரீயை பத்தி யோசி, ப்ளீஸ்...”

சில நொடி அமைதிக்குப் பின்னர், “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என, “ஆனா அவனுக்கு நிறைய டைம் இல்ல. கேன்சர் உள்ளுக்குள்ளேயே  கொஞ்சம் கொஞ்சமா அவனை அரிச்சுட்டு இருக்கு.” என, கவிதாவை அதிர்ச்சி தாக்கியது.

 “ஆனா ஸ்ரீ என்கிட்ட எல்லாமே சரியாயிடுச்சுன்னு தானே சொன்னான்” என்று கேட்க,

“அவனுக்கு ஏற்கனவே இருந்த 'ஆஸ்டியோசார்கோமா' இப்போ நுரையீரலோட ஓரத்துல சின்னச் சின்ன கட்டிகளா தெரிய ஆரம்பிச்சிருக்கு.” என்றதும் அவள் கலக்கத்துடன், “இந்த விஷயம் ஸ்ரீக்கு” என்று மேலே பேச முடியாமல் நிறுத்தினாள்.

“அவன் உன்னை பார்த்த பிறகுதான் சந்தோஷமா இருக்கான். அதை எப்படி கெடுக்குறதுனு எனக்கும் அவருக்கும் தெரியல” என்றாள்.

இதை கேட்ட கவிதாவின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அப்போது அமலா மீண்டும், “ப்ளீஸ் கவி அவன் இருக்க போற கொஞ்சகாலமாச்சும் சந்தோஷமா வாழணும். எனக்கு தெரிஞ்சு உன் கூட இருந்தாதான் அவனுக்கு அந்தச் சந்தோஷம் கிடைக்கும்” என, அவள் ஒன்றும் பேசவில்லை.

அடுத்த நாள் காலை அவள் நேரடியாக சென்று மருத்துவர் ராஜேஷை பார்த்தாள்.

“அமலா சொன்னது எல்லாம் நிஜம்தானா? ஸ்ரீக்கு மறுபடியும் கேன்சரா?”

“ஆமா அது அவன் லங்ஸ்ல பரவி இருக்கு... அதை லங் மெட்டாஸ்டாஸிஸ்-னு சொல்லுவாங்க”

“நியூயார்க் மாதிரி ஊர்ல நிச்சயமா இதுக்கு ட்ரீட்மென்ட் இருக்கணும் இல்ல." என்று கவிதா எதிர்பார்ப்புடன் கேட்க,

"கவிதா, நீ சொல்றது எல்லாம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சாத்தியம். ஆனா ஸ்ரீதரோட கேஸ் இப்போ 'அட்வான்ஸ்டு ஸ்டேஜ்'. ஆஸ்டியோசார்கோமா ஒருமுறை லங்ஸ்க்கு மெட்டாஸ்டாஸிஸ் ஆகிடுச்சுன்னா, இரத்தத்துல அந்த செல்கள் முழுசா பரவி இருக்குன்னு அர்த்தம். அங்கே ஒரு கட்டியை நீக்கினா, இங்கே இன்னொன்னு வளரும்.

இப்போதைக்கு எங்களோட நோக்கம் அவனைக் காப்பாத்துறது இல்லை... அவன் இருக்குற வரைக்கும் வலியும் வேதனையும் இல்லாம பார்த்துக்கிறதுதான். இதை 'பேலியேட்டிவ் கேர்' (Palliative Care)-னு சொல்லுவோம். இன்னும் தெளிவா சொல்லணும்னா, அவனுக்கு நாம குடுக்குறது 'குணப்படுத்துற சிகிச்சை' இல்லை, 'காலத்தை நீட்டிக்குற சிகிச்சை' மட்டும்தான். ஆனா அதுக்கும் அவன் ஒத்துழைக்கணுமே."

அவள் சிலையாக சமைந்துவிட ராஜேஷ் தொடர்ந்து, “அவன் உன்னை தவிர வேறு எதை பத்தியும் யோசிக்குறது இல்லமா. உன் கூட இருக்குற சந்தோஷத்துலதான் அவன் தனக்குள்ள இப்படியொரு மாற்றம் ஏற்பாட்டிருக்கிறதை உணராம இருக்கானு நினைக்கறேன். சில நேரங்களில் மனசு உடம்பை ஜெயிச்சுடும். இப்ப போய் அவன்கிட்ட இந்த உண்மையை சொன்னா... அவன் என்னவாவானு எனக்கு தெரியல” என்று சொல்லி முடிக்கும் போது,

“இல்ல வேண்டாம் சொல்லாதீங்க. ஸ்ரீக்கே தெரியும் போது பார்த்துக்கலாம்” என்றவள் அன்று வீடு வரும் வரை அழுது கொண்டே வந்தாள்.

அதேசமயம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வாசலில் ஸ்ரீ காத்திருப்பதை பார்த்தவள் அவசரமாக கண்களையும் முகத்தையும்  துடைத்துக் கொண்டாள்.

 “எங்கே போன நீ” என்று அவன் கேட்க, “ஆபிஸ் வேலையா” என்று அவன் முகம் பார்க்காமலே சொல்லிவிட்டு பூட்டை திறந்து அறைக்குள் சென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

என்ன முயன்றும் அவளால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

 “திரும்பவும் அம்மாவை நினைச்சுக்கிட்டியா? ஏய் கம்மான் இட்ஸ் ஓகே எல்லாம் சரியாகிடும்” என்று ஸ்ரீ கதவிற்கு வெளியே நின்று ஆறுதல் கூற, அவள் வேதனை இன்னும் அதிகரித்தது. நெஞ்சம் விம்மியது.

கதவை திறந்தவள் ஸ்ரீயை இறுக்கமாக அணைத்து கொள்ள, அவன் திகைத்துவிட்டான்.

“என்னை விட்டு போகாதே ஸ்ரீ. என் கூடவே இரு...” என்றவள் சொன்னதை அவனால் நம்ப முடியவில்லை.

“விட்டுட்டு போகாதன்னா சொன்ன”

“ஆமா போகாதே.. நீயும் என்னை விட்டுட்டு போயிடாத”

 “நீ என்னை போ போன்னு சொன்னாலே நான் போக மாட்டேன். இதுல நான் போகாதன்னு சொல்லும் போது நான் போயிடுவேனா? அதெல்லாம் போக மாட்டேன். நீ போ ன்னு சொன்னாலும் போக மாட்டேன் இனிமே” என்று சொல்லி அவள் தலையை தடவி கொடுக்க,

“லவ் யூ ஸ்ரீ” என்றாள்.

“என்ன சொன்ன திரும்ப சொல்ல”

“லவ் யூன்னு சொன்னேன்”

“இந்த லவ் யூ அன்பு.. நட்பு இந்த மாதிரி அர்த்தமா இல்ல...” என்றவன் இழுக்க, “உனக்கு எந்த அர்த்தம் வேணுமோ அந்த அர்த்தமே வைச்சுக்கோ” என்றாள்.

“அப்படினா லவ்தானே”

“ஆமாம் அதேதான்” என்றவள் ஒப்புக்கொள்ளவும் அவனுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.

“ஓ மை காட்... லவ் யூனு சொல்லிட்ட... அதுவும் என்கிட்ட...” என்று   அவன் குழந்தை போல குதிக்க, “ஸ்ரீஎன்ன பண்ற” என்றாள்.

“ஐம் ஸோ ஹாப்பி.... அன் லவ்...” என்ற போது அவனுக்கு இருமல் வந்ததுவிட்டது.

“ஏய் என்னாச்சு... இரு இரு நான் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவள் பதறி துடித்து அவனுக்கு தண்ணீர் எடுத்து வந்து தந்தாள். அதனை அவன் குடித்த பிறகும் விடாமல், “இப்போ ஓகே வா ஓகே வா?” என்று பலமுறை கேட்டுவிட்டாள்.

“சாதாரண வறட்டு இருமலுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற.”

“அதெல்லாம் இல்ல” என்றவள் சமாளிக்க,

“மாமா மாத்திரை கொடுத்து இருக்காரு. சரியாயிடும்” என்றான். அன்றிலிருந்து அவள் மனதிலுள்ளதை அவனிடம் காட்டிவிடாமல் இருக்க அவள் நிறைய பாடுப்பட்டாள்.

வாழ்க்கை எங்கே தன்னை இழுத்துப் போகிறது என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதேநேரம் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்... அந்த ஓட்டத்துடன் அவளும் கலந்து போக நேரிட்டது.

தன் உலகமே மொத்தமாக இருளில் அமிழ்ந்துவிட்டது போலிருந்தது. எதையும் அவளால் தெளிவாக யோசிக்கக் கூட முடியவில்லை.

அதன் பின் ஸ்ரீக்கும் அவளுக்கும் இடையிலிருந்த உறவு இன்னும் நெருக்கமானது. ஆரம்பத்தில் அது ஒரு தேவைக்காக என்று தொடங்கினாலும் பின்னர் எல்லாமே இயல்பாகவே நிகழ்ந்தது.

ஆனால் இந்த நிச்சய ஏற்பாடுகள் அவர்களின் கொடைக்கானல் வருகை... இது எதுவும் நிகழாமல் இருந்திருந்தால் எல்லாமே அதே இயல்புடன் இருந்திருக்கும்.

ஒருவேளை  இருந்திருக்கலாம் என்றவள் கண்ணாடி வழியாகத் தெரியும் ஸ்ரீதரின் முகத்தைப் பார்த்தபடி வருந்திக் கொண்டிருந்த சமயம், அமலா மருத்துவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதரை அவர்கள் வெளியே கொண்டு வர, கவிதா அவன் முகத்தை சரியாக பார்ப்பதற்குள் அவனைத் தள்ளிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

“என்னாச்சு. ஸ்ரீயை எங்கே கூட்டிட்டு போறீங்க”

“மதுரைல இருக்க பெரிய ஹாஸ்பெட்டிலுக்கு. ராஜேஷ் இப்பதான் போன் பண்ணாரு. ஏர் போர்ட்ல இருக்காராம். நேரா அங்கேயே ஹாஸ்பெட்டில் வந்துடுறேனு சொல்லிட்டாரு” என்று சொல்லிக் கொண்டே அவளும் ஏறிக் கொள்ள,

“நானும் உங்க கூட வரேன்” என்றாள் கவிதா.

“நீ செஞ்சதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். ஆனா இனிமே நானே என் தம்பியை பார்த்துக்கிறேன்” என்று சொல்லி முடித்த நொடி அந்தக் கதவு அறைந்து மூடப்பட்டது. விரைந்து செல்லும் அந்த வாகனத்தைப் பார்த்தபடி கவிதா உறைந்து நின்றாள்.

 

You cannot copy content