You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - இறுதி அத்தியாயம்

Quote

அத்தியாயம் – 27

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குள் அவர்கள் கார் நுழைந்ததோ அல்லது நின்றதோ எதுவுமே கவிதாவின் கவனத்தில் பதியவில்லை. அவள் பார்வை எங்கோ சூனியத்தில் லயித்திருந்தது.

“கவிதா... கவிதா...” என்று ரஞ்சன் இருமுறை அழைக்கவும், ஏதோ ஒரு கனவிலிருந்து விடுபட்டவளாய் உணர்ச்சியற்றுத் திரும்பினாள்.

“என்ன?”

“வந்துட்டோம்.”

“அதுக்குள்ளயா?” என்றவள் சுற்றிலும் பார்த்த போது, ஒரு சிறிய இனம் புரியாத மிரட்சி அவள் கண்களில் எட்டிப்பார்த்தது. சோர்வுடன் தன் தோள் பையை எடுக்க முயல, “இருங்க... அஜய் அண்ணாவும் வந்திரட்டும், அப்புறம் உள்ளே போலாம்” என்றான் ரஞ்சன்.

மீண்டும் ஒரு சிறிய ஆசுவாசம் அவள் மனதிற்குள் பரவியது. சம்மதமாகத் தலையசைக்க, “நீங்க பாஸ்போர்ட், போன் எல்லாம் எடுத்து வைச்சுட்டீங்கதானே?” என்று அவன் சாதாரணமாகக் கேட்க, “ஐயோ! போன் எங்கே?” எனப் பதறியவள், உடனடியாகத் தன் பையைத் துழாவ ஆரம்பித்தாள்.

“உள்ளேதான் இருக்கும், பொறுமையா தேடுங்க.”

தேடியும் கிடைக்கவில்லை.

“இருங்க நான் கால் பண்றேன்” என்றவன் தன் செல்பேசியிலிருந்து அழைக்கத் தொடங்கினான்.

“ரிங் அடிக்குது... ஆனா சத்தம் கேட்கலையே?”

“மறந்து வைச்சுட்டேனோ?” என்று அவள் பதற்றம் கொண்ட அதே நொடி, பைக்குள் செல்பேசி ஒளிர்வதை ரஞ்சன் கவனித்தான்.

“உள்ளேதாங்க இருக்கு... இப்படி கொடுங்க” என்றவன் தேடி எடுத்த போது, பையின் அடியிலிருந்த பாஸ்போர்ட்டும் அவனது புகைப்படம் வந்த அந்த ஆங்கில நாளிதழும் கீழே விழுந்தன.

ரஞ்சன் அதை நிதானமாக எடுத்துவிட்டு, அவளை ஆழமாகப் பார்த்தான். “அன்னைக்கு என் கண்ணு முன்னாடிதான் இதைத் தூக்கி விசிறிட்டுப் போனீங்க...”

சங்கடத்துடன் அவனைப் பார்த்தவள், “ஆமா, ஆனா அப்புறமா வாங்கி படிச்சேன்” என்றாள். அவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

நாளிதழை அவளிடம் நீட்டியவன், “லேட்டாகுது... அண்ணா எங்கே வராங்கனு கேட்டுட்டு வரேன்” என்று காரை விட்டு இறங்கினான். அவள் அந்தப் நாளிதழிலிருந்த அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். பின்னர் அதைப் பைக்குள் திணித்துவிட்டு, அவளும் வெளியே வந்து நின்றாள்.

“பக்கத்துல வந்துட்டாராம்... வெயிட் பண்ணலாமா இல்ல உள்ளே போலாமா? இம்மிக்ரேஷன் பார்மாலிட்டிஸ் எல்லாம் வேற இருக்கும்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கவிதா அவனை இடைமறித்தாள்.

“எனக்கு உன்கிட்ட பேசணும்.”

ஒரு நொடி அவளை உற்றுப் பார்த்துவிட்டு, “சொல்லுங்க” என்றான் ரஞ்சன்.

“நான் பொய் சொல்லிட்டேன்.”

“என்ன பொய்?”

அவள் சற்று இடைவெளிவிட்டு பேசினாள்.

“உன் வெற்றியைப் பார்த்து நான் பெருமைப்படலன்னு சொன்னது பொய்... உன்னைக் காதலிச்சதுக்காக அசிங்கப்படுறேன்னு சொன்னது பொய்... எல்லாத்துக்கும் மேல, உன் வயசைச் சுட்டிக்காட்டிப் பேசுனது உன் மேல இருக்க ஈர்ப்பை மறைக்க எனக்கு நானே சொல்லிக்கிட்ட ஒரு பெரிய பொய்”

“அவ்வளவுதானா?” என்றவன் குரலில் மெல்லிய எள்ளல் இழையோடியது.

“ஐம் சாரி... ஐம் சோ சாரி” என்று அவள் வலியுடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அஜய் வந்துவிட்டான்.

“சாரி சாரி... லேட்டாகிடுச்சு.”

“இல்ல அண்ணா, இன்னும் டைம் இருக்கு” என்ற ரஞ்சன், “டாக்குமெண்ட் எடுத்துட்டு வந்தீங்களா?” என்று கேட்டான். அஜய் ஒரு கோப்பினை நீட்ட, ரஞ்சன் அதை வாங்கிச் சரிபார்த்தான்.

“என்னது அது?” கவிதா கேட்க, “டிவோர்ஸ் நோட்டீஸ்” என்றான் ரஞ்சன் ஒற்றை வரியில். அவள் முகம் சட்டென வெளிறிப் போனதை அஜய் கவனித்தான்.

ஆனால் ரஞ்சனோ எதையும் உணராதவன் போலத் தன் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து, அதில் கையெழுத்திட்டுவிட்டு, “நாம ஆல்ரெடி மூணு வருஷம் பிரிஞ்சு இருந்திருக்கோம். சோ, ஒண்ணு ரெண்டு மாசத்துலயே நமக்கு டிவோர்ஸ் கிடைச்சிரும். மத்த பார்மாலிட்டிஸ் எல்லாம் நானே பார்த்துக்கிறேன். நீங்க கையெழுத்து மட்டும் போட்டா போதும்” என்று கோப்பையும் பேனாவையும் நீட்டினான்.

அதை வாங்கும் போது கவிதாவின் கைகள் நடுங்கின.

‘அன்னைக்கு போட மாட்டேன்னு சொன்னான்... இன்னைக்கு சாதாரணமா போட்டு கொடுத்துட்டான்’ என்று அவள் சிந்தனையில் ஆழ்ந்துவிட, “கவிதா” என்றான்.

தன்னைச் சமன்படுத்திக் கொண்டு கையெழுத்திடப் போனவள், அங்கே ‘ரஞ்சன் கவிதா’ என்று அவனுடைய கையெழுத்தைக் கண்டதும் கண்கள் கலங்கிப் போனாள். எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன.

“லேட்டாகுது” என்று அவன் அவசரப்படுத்த, கண்களைத் துடைத்துக்கொண்டு, பேனாவை அழுத்திப் பிடித்துத் தன் கையெழுத்தைப் போட்டாள்.

அந்தக் கோப்பினை வாங்கிய ரஞ்சன், அஜயைப் பார்த்துச் சைகை செய்தான்.

“கவி வியர்ஸ் நிறுவனத்தோட 30% ஷேரை உன் பேர்ல மாத்துறதுன்னு நானும் ரஞ்சனும் முடிவு பண்ணியிருக்கோம்” என்றான் அஜய்.

“அதெல்லாம் வேண்டாம் அஜய்.”

“நம்ம பிரண்ட்ஷிப் உண்மைனா, இதுக்கு நீ ஒத்துக்கிட்டுதான் ஆகணும்” என்று அஜய் பிடிவாதம் பிடிக்க, அவள் ரஞ்சனைப் பார்த்தாள். அவன் முகத்தில் எந்தவிதமான உணர்வையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதுதான் அவளை இன்னும் கடுப்பாக்கியது.

“என்னவோ செய்யுங்க” என்றவள் தன் பையைத் தூக்கிக் கொள்ள, “பார்த்துப் போயிட்டு வாங்க” என்று ரஞ்சன் அங்கேயே நின்று விட்டான்.

“அவன் வரலையா?” என்று அஜயிடம் மெதுவான குரலில் கேட்டாள். “வரலன்னு சொல்லிட்டான்” என்றான் அஜய்.

அவள் மெதுவாக நடக்கத் தொடங்கினாள். உள்ளே செல்லும் முன் ஓரிரு முறை திரும்பிப் பார்த்தாள். அவன் அசையாமல் அங்கேயே நின்றான். அவர்களுக்கிடையிலான தூரம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இன்னும் சில நிமிடங்களில் இது எட்ட முடியாத தூரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் அவளை நெருக்கியது.

மூச்சு முட்டுவது போல ஒரு தவிப்பு. அவளின் நிலையை உணர்ந்த அஜய், “இப்போ கூட உனக்கு போக வேணாம்னு தோணுச்சுன்னா போகாத கவி” என்றான்.

“எனக்கு அப்படியெல்லாம் தோணல” என்று பொய்க்குரலில் சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

“கவிதா ஒரு நிமிஷம்” என்று ரஞ்சனின் குரல் அவளை நிறுத்திப் பிடித்தது. அந்த ஒரு அழைப்பிற்காகவே காத்திருந்தது போல அவள் ஆர்வத்துடன் திரும்பினாள்.

அவன், “ஐ லவ் யூ” என்றான்.

அவள் விழிகள் வியப்பில் விரிய, “இதை கடைசியா ஸ்ரீதர் உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு” என்று அவன் முடிக்க... கவிதாவின் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம்.

“ஸ்ரீதர் சொல்லச் சொன்னானா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“ஆமா... ஆனா முன்னாடியே சொல்லச் சரியான சூழல் அமையல.”

“ஓகே... தேங்க் யூ” என்று ஒட்டாமல் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள். அதற்குப் பிறகு அவள் எங்கும் நிற்கவில்லை. அனைத்துச் சோதனைகளையும் முடித்து, போர்டிங் பாஸைப் பெற்றுக்கொண்டு உள்ளே நுழைய இருந்தவள், “பை அஜய்... ஆனந்தியையும் குட்டி கவிதாவையும் நல்லாப் பார்த்துக்கோ” என்றாள்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நியூயார்க் போனதும் ஒழுங்கா கால் பண்ணு. அப்படியே அப்ஸ்காண்ட் ஆனா உன்னைக் கொன்னுடுவேன்” என, “மாட்டேன்... கண்டிப்பா கால் பண்றேன்” என்றவள் பார்வை மீண்டும் ஒருமுறை பின்னோக்கித் தேடியது.

“என்ன கவி?”

“ஒன்னும் இல்ல... கிளம்புறேன். பை.”

அவள் உள்ளே மறைந்ததும் அஜயால் தாங்க முடியவில்லை. கார் பார்க்கிங்கிற்கு வந்து ரஞ்சனைச் சாடினான். “ஏண்டா அவளைப் போக விட்ட?”

“நான் ஒன்னும் அவங்களைப் போகச் சொல்லலையே.”

“டேய்! கடைசி வரைக்கும் நீ வருவியான்னு அவ தேடிட்டு இருந்தா தெரியுமா உனக்கு?”

“அப்படியா?” ரஞ்சன் முகத்தில் ஆச்சரியம்.

“ஆமாண்டா! நீ போகாதன்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அவ போயிருக்க மாட்டா. சத்தியமா போயிருக்க மாட்டா!” என்று அஜய் அழுத்தமாகச் சொல்ல, ரஞ்சன் ஒரு பெருமூச்சுடன் தன் கண்ணீரை மறைக்க முயன்றான்.

“இல்ல அண்ணா... போகணுமா வேண்டாமாங்குறது அவங்களோட முடிவு. இட்ஸ் நாட் மை டெசிஷன்” என்றான் ரஞ்சன்.

“போங்கடா நீங்களும் உங்க காதலும்!” என்று திட்டிவிட்டு அஜய் நகர்ந்தான்.

காரில் அமர்ந்த ரஞ்சனால் அதற்கு மேல் நடிக்க முடியவில்லை. அணை உடைந்ததைப்போல உணர்ச்சிகள் அழுகையாய் வெடித்துச் சிதறியது. ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு காரை இயக்க முனைந்த கணத்தில், அவன் செல்பேசி சிணுங்கியது.

எடுத்து பார்க்க கவிதாவின் குறுந்தகவல்.

‘ஐ டோன்ட் வான்ட் டூ லீவ் யூ’

அடுத்த நொடி, காரிலிருந்து இறங்கி வெறிபிடித்தவன் போல் ஓடினான். அங்கே அவனுக்கு எதிரே கவிதா நின்றிருந்தாள்.

“கவிதா” என்று மூச்சிரைக்க அருகில் சென்றவனிடம், “You fucking bastard” என்று கத்திவிட்டு, அவன் கன்னத்தில் சுரீலென்று ஒரு அறை விட்டாள்.

“ஆ...” என்று அவன் அதிர்ந்து விழிக்க, “ஏண்டா... போ போன்னு நான் சொல்லும் போதெல்லாம் போக மாட்டேன்னு பிடிவாதமா நின்னுட்டு, இப்போ நீ பாட்டுக்கு என்னை விட்டுட்டுக் கிளம்பிட்ட?”

“நான்தான் போகலையே...”

“நீ போகணும்னு முடிவு பண்ணிட்ட இல்ல?”

“போகணும்னு முடிவு பண்ணது நானா இல்ல நீங்களா?” ரஞ்சன் புருவத்தை உயர்த்தினான்.

“ஆமா நான்தான் முடிவு பண்ணேன். அப்போ அப்படித்தான் தோணுச்சு. எல்லாத்தையும் விட்டுத் தூரமா ஓடிப் போயிடணும்னு தோணுச்சு”.

“அடிக்கடி உங்களுக்கு அப்படித்தான் தோணுது.”

“எல்லாம் உன்னாலதான்! யூ...” என்று மீண்டும் கையை ஓங்கியவள், பின் அடிக்காமல் கையைத் தளர்த்தி இறக்கிவிட்டு, “முதல்ல என்னை நேரா வந்து நீ பார்த்து இருக்கணும், பேசி இருக்கணும், பழகிப் புரிஞ்சிக்கிட்டு இருக்கணும், அப்புறமா காதலைச் சொல்லி கல்யாணம் பண்ணி இருக்கணும். நீ என்னடான்னா முதல்ல இருக்க ஸ்டெப்ஸ் எல்லாம் ஸ்கிப் பண்ணிட்டு நேரா கல்யாணத்துல வந்து நிறுத்தி இருக்க” என்று உணர்ச்சிவசப்பட்டாள்.

ரஞ்சன் மெலிதாகப் புன்னகைத்தான். “வேணாம்... இப்ப திரும்பவும் முதல்ல இருந்து தொடங்குவோமா?”

அவள் கடுப்பாகப் பார்க்க, “இல்லங்க, சீரியஸா கேட்குறேன். பேசிப் பழகிப் புரிஞ்சிக்கிட்டு அப்புறமா காதல் பண்ணுவோம்.”

அவன் வார்த்தைகளில் அவள் கோபம் இறங்கிவிட,“ஒரு வேளை ஒத்துப்போகலன்னா?” என்று நக்கலாக கேட்டாள்.

“அதான் டிவோர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்துப் போட்டுட்டோமே, அப்ளை பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்” என்று அவன் கிண்டலாகச் சொன்னதுமே, அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது.

பேசிக்கொண்டே காரின் அருகில் வந்தனர். பெட்டிகளை மீண்டும் ஏற்றினான். ரஞ்சன் காரில் ஏறி அமரவும், கவிதா அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“நான் உன்னை விட்டு விலகி ஓடுனதுக்குக் காரணம், ஸ்ரீதரோட காதலுக்கு உண்மையா இல்லையோங்குற குற்றவுணர்வுதான்.”

“அதுக்கெல்லாம் அவசியமே இல்லைங்க. உங்க காதல் எவ்வளவு உண்மைன்னு ஸ்ரீதருக்குத் தெரியும்.”

“அப்போ நான் உன் மேல வைச்சு இருக்க காதல்?”

“அதுவும் உண்மையானதுதான். இன்னும் கேட்டா, இரண்டும் வெவ்வேறு சூழலில் உங்களுக்குள்ள உருவானது. இரண்டையும் நீங்க கம்பேர் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. காதலுக்கு அளவுகோல்னு எதுவும் இல்லங்க” என்று ரஞ்சன் சொன்ன விதத்தில் அவள் மனம் லேசானது. அப்படியே அவன் கையை எடுத்துத் தன் உதட்டில் ஒற்றிக்கொண்டாள்.

அவளை ஒரு குறும்பான பார்வையுடன் பார்த்தவன், “இங்கே...” என்று தன் உதட்டின் மீது கை வைத்துக் காட்டினான்.

“நாம இன்னும் நிறைய ஸ்டெப்ஸ் போக வேண்டியிருக்கு தம்பி!”

“எது... தம்பியா?” என்று அவன் கண்களை உருட்டவும், “சும்மா” என்று அவள் கண்ணடித்தாள்.

யூ டர்ன் அடித்து அவர்கள் பயணம் மீண்டும் தொடங்கியது.

சில நாட்களுக்குப் பிறகு...

சென்னை மாநகரின் அந்தப் புகழ்பெற்ற அரங்கம் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. 'ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர்' (Best Entrepreneur of the Year) விருது வழங்கும் விழா அது.

ரஞ்சன் கோட் சூட் அணிந்து கம்பீரமாக அமர்ந்திருக்க, அவனருகே கவிதா நீல நிறப் புடவையில் தேவதையாய் அமர்ந்திருந்தாள். முன்னிருக்கையில் அஜய், பிரகாஷ் மற்றும் ஆனந்தி என அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

"இந்த ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருதினைப் பெறுபவர்... ரஞ்சன் கவிதா" என்று அறிவிப்பு வர, அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

விருதை வாங்கிய ரஞ்சன், "இந்த விருது என்னோடது மட்டும் இல்ல. 'கவி வியர்ஸ்' உருவாகக் காரணமான என் மனைவி கவிதாவும் அவங்க நண்பர் குழுவும்தான். எல்லோரும் இங்க என் கூட மேடையில் நிற்கணும்” என்று அத்தனை பெயரையும் வாசித்து மேடை ஏற்றினான்.

கவிதாவை மட்டும் தன் அருகே நிறுத்திக் கொண்டு, “இதோ இவங்கதான் கவிதா... இந்த ரஞ்சனை உருவாக்கிய கவிதா... இவங்க இல்லன்னா ரஞ்சன் என்கிற ஒருவன் இந்த இடத்துல இல்லை. இந்த வெற்றி இவங்களுக்குதான் சொந்தம்!" என்று மண்டியிட்டு காதலை சொல்வது போல அந்த விருதை அவள் கைகளில் கொடுத்தான்.

“ரஞ்சன் என்ன இது எழுந்திரு” என்ற போது, “இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற காதல்” என்றான்.

அதனை பெற்றுக் கொண்ட கவிதாவின் கண்கள் பெருமையில் பனித்தன. அஜய் ஆனந்தி மற்றும் அவர்கள் நண்பர்கள் குழு மேடையில் கோஷமிட்டனர். அவர்கள் காதலை பலரும் தங்கள் செல்பேசிகளில் காணொளிகளால் பதிவு செய்து கொண்டனர்.

பிரகாஷ் நெகிழ்ந்தூற்றிய கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டார்.

விழா முடிந்து அவர்கள் வீட்டிற்கு வரும்போது, வானம் தன் மகிழ்ச்சியை மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. கார் நின்றதும், கவிதா உற்சாகமாக மழையில் இறங்கி ஓடினாள்.

"கவிதா... நனையாதீங்க... உடம்பு சரியில்லாம போயிடப்போகுது" என்று ரஞ்சன் குடையுடன் அவளை நோக்கி ஓடினான்.

"இன்னைக்கு இந்த மழை என் மனசுல இருக்கிற பாரத்தை எல்லாம் கரைச்சிடுச்சு" என்று மழையில் நனைந்தபடியே சொன்னாள்.

ரஞ்சன் அவள் நனைவதை மகிழ்வுடன் பார்த்திருந்தான். என்னதான் அவள் திரும்பி வந்தாலும் ஸ்ரீதரின் இழப்பிலிருந்து அவள் முழுவதுமாக மீண்டு வரவில்லை. எதையோ இழந்தது போலவே எப்போதும் இருந்தாள். இன்றுதான் பழைய உற்சாகமான கவிதாவை அவன் காண்கிறான்.

பூரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்து வடிந்த அவள் வதனத்தை நீரால் மழை ஆராதித்து கொண்டிருக்க, அந்த காட்சியை கண்களின் வழியாக ரஞ்சன் தன் மனதிற்குள் நிறைத்து கொண்டான். மழை மெது மெதுவாகக் குறைந்தது. “போதும் கவி” என்று அவளை மென்மையாக அணைத்து, குடையின் கீழ் கொண்டு வந்தான்.

இருவரும் மின்தூக்கியில் ஏறியதும் அவள் உடல் நடுங்கியது. தன் கோட்டைக் கழற்றி அணைப்பாகப் போட்டுவிட்டதில் இருவரின் பார்வையும் ஒன்றெனக் கலந்தது. இதழ்களும் நெருங்கி வந்த கணம் கதவு திறந்து கொண்டது.

ஒரே வீட்டில் இருந்தாலும் வெவ்வேறு அறைகளில்தான் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவசரமாகத் தன் அறைக்குள் புகுந்து கொள்ள எத்தனித்தவளை, அவன் கரங்கள் வளைத்துச் சுற்றின. அவளின் ஈரக்கூந்தலை விலக்கிவிட்டு காதுமடலில் முத்தம் பதித்தான். அவள் வெட்கத்துடன் தள்ளினாள்.

“ப்ளீஸ்” என்றவன் மோகம் தளும்பிய குரலில், “இந்த ஸ்டெப் மட்டும் ஸ்கிப் பண்ணிக்கலாமே” என்றான்.

நக்கல் புன்னகையுடன் அவனை நோக்கியவள், “முடியாது தம்பி” என்று சொன்னதுதான் தாமதம்.

“எதே... தம்பியா?” என்றவன் வேகமெடுத்து அவளை நெருங்கி வரவும், அவள் விலகி ஓடினாள். ஆனால் அதற்கான் வாய்ப்பை அவன் தரவில்லை.

அவள் இதழ்களை வன்மத்துடன் பார்த்தவன், “தம்பியா... ம்ம்ம்ம் தம்பியா” என்று விட்டு மூர்க்கமாகத் தம் இதழ்களைக் கொண்டு முத்தமிட்டான்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்த அதே இரவில், ரஞ்சன் கவிதாவின் வாழ்வில் நீண்ட நாட்களாகக் காத்திருந்த வசந்தமும் பொழிந்துக் கொண்டிருந்தது.

- நிறைவு -

 

You cannot copy content