You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மாயன் ❤ கன்னிகை (பருவமெய்தி நாவல்)

Quote

கனி தன் தந்தையின் சிதைக்குத் தீ மூட்டினாள். தீ நாக்குகள் அவரின் தேகத்தை முழுவதுமாக விழுங்கும் வரை அவ்விடத்தை விட்டு அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள்.

ஆக்ரோஷமாகக் கொழுந்து விட்டு எரியும் அந்த நெருப்பில் அவருக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்களும் சேர்ந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

இன்னும் இன்னும் தீச் சீற்றமாக வான் நோக்கி விஸ்பரூபம் எடுக்க, அந்த உஷ்ண காற்றில் பறந்த தீ ஜ்வாலைகள் அவள் புறம் வீசியது. எதையும் உணராத மனநிலையுடன் அவள் அப்படியே நிற்க,

“கனி… தள்ளி வா” என்று அவள் கரங்களைப் பற்றித் தள்ளி நிறுத்திவிட்டு, 

“முதல நீ வீட்டுக்குப் போ” என்றான்.

அவள் இல்லை என்பது போல தலையசைத்துவிட்டு அங்கேயே ஓரமாக இருந்த பிணம் எரிக்கும் மேடையில் அமர்ந்து கொண்டாள்.

“கனி எங்க உட்கார்ந்திருக்க... எழுந்து வா” என்று அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் அங்கிருந்து நகர்வதாக இல்லை.

தன் தந்தையின் சிதை எரிவதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்து தன்னுடைய கடைசி காலம் வரை சுடுகாட்டில் வெட்டியானாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து அவ்விடத்திலேயே சாம்பலாகிப் போன கன்னியப்பன்களின் கதைகளை இந்தச் சமுதாயம் ஒரு நாளும் நினைவுக்கூற போவதில்லை. அவ்வளவுதான். அவ்வுடல் மொத்தமாக எரிந்தடங்கிப் புகை வெளியேறி கொண்டிருக்க,

“கனி எழுந்திரு… வீட்டுக்குப் போகலாம்” என்று மாயன் அழைக்க,

“எரிஞ்சு முடிஞ்சு போச்சு… அவ்வளவுதான் இல்ல” என்று உணர்வற்ற பார்வையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“இந்த மனுஷன் என்ன வாழக்கையை வாழ்ந்தாரு… என்ன சந்தோஷத்தை கண்டாரு… இன்னைக்கு செத்தும் போயிட்டாரு… அவ்வளவுதானா மாயா நம்ம வாழ்க்கை எல்லாம்” என்று கேட்டாள்.

அவள் அருகில் அமர்ந்தவன், “மாமா அவர் வாழ்ந்த வாழ்க்கைல எவ்வளவு தூரம் திருப்தியா இருந்தாருன்னு எல்லாம் எனக்கு தெரியல கனி… ஆனா அவரோட சாவு எல்லா விதத்தலயும் நல்ல சாவுதான்.

படுத்தப் படுக்கையா நொந்து போய் கிடந்த மனுஷன் உன்னை இந்த நிலைமைல பார்த்த பிறகு மனசால எவ்வளவு சந்தோஷப்பட்டாரு தெரியுமா… உங்க அப்பாவுக்காகதான் இந்த விதியே உன்னை திரும்பியும் இந்த ஊருக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கு.

மகளைப் பார்த்த பெருமையோடதான் அவர் தான் வாழ்க்கையை முடிச்சிக்கிட்டாரு… நீ உங்க அப்பாவுக்குப் பெருமையைக் கொடுத்திருக்க… சந்தோஷத்தைக் கொடுத்திருக்க… கடைசியா ஒரு மகளா அவருக்குக் கொல்லி வைச்சு… அவர் ஆத்மாவுக்கு அமைதியும் கொடுத்திருக்க… நீ வருத்தப்பட கூடாது” என்று ஆறுதலாகப் பேச,

“என் வருத்தமெல்லாம் நான் அவர்கிட்ட கடைசியா சொல்லணும்னு நினைச்சது அவர் கேட்காமலே போனதுதான்… ஒரு வேளை அவர் அதை கேட்டிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பாரு” என்று சொல்லி அவள் கண்ணீர் உதிர்க்க,

“இப்போ கூட என்ன… அவரோட ஆத்மா இங்க நின்னு உன்னைப் பார்த்திட்டு இருக்கலாம்… நீ இங்கேயே அவர்கிட்ட சொல்ல நினைச்சதைச் சொல்லு… அது அவரைப் போய் சேரும்” என்றான்.

“அப்படியா சொல்ற”

“ஆமா சொல்லு”

காற்றோடு கலந்து கொண்டிருந்த புகையின் மீது பார்வையைப்  பதித்தவள், “அப்பா… நான்” என்று நிறுத்திவிட்டு தொண்டைக்குள் எழுந்த விம்மலை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு வார்த்தைகளைக்  கொணர்ந்து,

“நான் மாயனை கல்யாணம் செஞ்சுக்க விருப்பப்படுறேன் பா” என, மாயன் அதிர்ந்துவிட்டான்.

அவன் மௌனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், “அப்பா நான் சொன்னதைக் கேட்டிருப்பாரு இல்ல மாயா… அவர் ஆத்மா சந்தோஷப்பட்டிருக்கும் இல்ல” என்றாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த திடீர் அதிர்ச்சியிலிருந்து சுதாரித்து எழுந்து நின்றவன், “இல்ல சந்தோஷப்பட்டிருக்காது… இப்போ இருக்க நிலைமைல என்னை நீ கட்டிகிறத மாமா நிச்சயம் விரும்ப மாட்டாரு… நான் எந்த வகையிலும் உனக்குத் தகுதியானவன் இல்ல கனி… உன் படிப்பு வேலை இப்படி எதுக்கும் நான் தகுதியானவன் இல்ல… உனக்கு இந்தச் சுடுகாட்டு வாழ்க்கை வேணாம்… நீ எழுந்து வீட்டுக்குப் போ” என்று தீர்மானமாகச் சொல்ல,

“முடியாது உன்கிட்ட பேசணும்” என்றாள்.

“கனி” என்றவள் அவன் புறம் திரும்ப அவனைப் பேசவிடாமல் அவள் தொடர்ந்தாள்.

“இந்தச் சுடுகாட்டு வாழ்க்கை எனக்கு வேணாம்னு…  நானும் என் சின்ன வயசுலயே முடிவு பண்ணதுதான்… உன்னை வேணாம்னு சொன்னதுக்கும் அதுதான் காரணம்… அதான் சந்தர்ப்பம் கிடைச்சதும் இங்க இருந்து ஓடிப் போயிட்டேன்… ஒரு நாள் கூட எனக்கு இங்க திரும்பி வரணும்னு தோணினதே இல்ல… ஆனா இந்த நிமிஷம் சொல்றேன்.

நீ எங்க இருக்கியோ அங்கதான் என் வாழ்க்கை உலகம் எல்லாம்… உன்னை விட்டுட்டு இனி நான் எங்கயும் போறதா இல்ல” என்றவள் தீர்க்கமாக உரைத்தாள்.

“புரியாம பேசாதே… என்னை நீ கட்டிக்கிட்டா… ஸ்கூல உன்னை வேலை செய்ய கூட விடமாட்டாங்க… நீ கஷ்டப்பட்டுப் படிச்சு இந்த இடத்துக்கு வந்திருக்க… அதை இல்லாம பண்ணிடுவாங்க” என்றவன் தெளிவாக யோசித்து பேச,

“அப்படி ஏதாவது பிரச்சனை வந்தா சமாளிக்கலாம்… நீதானே  சொன்ன… என்ன நடந்தாலும் போராடணும் பயப்பட கூடாதுன்னு” என்றாள்.

“இல்ல கனி… வேண்டாம்” என்றவன் மறுப்பாகச் சொல்லிவிட்டு திரும்பி நடக்க,

“என் கண்ணைப் பார்த்து என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லன்னு சொல்லிட்டுப் போ பார்ப்போம்” என்றவள் அவனை வழிமறித்துக் கொண்டு நின்றாள். அவள் கண்களைப் பார்க்க முடியாமல் அவன் தலையைத் திருப்பிக் கொள்ள,

“உன்னால அப்படி சொல்ல முடியாது மாயா… நீ என்னை அந்தளவுக்கு நேசிக்கிற” என,

“ஆமான்டி நேசிக்கிறேன்… ஆனா நமக்குள்ள எந்த உறவும் வேண்டாம்… அது உன் வாழ்க்கைக்கு நல்லது இல்ல” என்றவன் ஆவேசமாகப் பேச, அவளும் அதே ஆவேசத்துடன் பதில் பேசினாள்.

“என் வாழ்க்கையைப் பத்தி என் வேலையைப் பத்தி இவ்வளவு வியாக்கியானம் பேசுற நீ… ஏன் உன்னைப் பத்தி யோசிக்கல… என்னைக் கோவில அடிச்சவன் கை வெட்டிட்டு நீ ஏன்டா ஜெயிலுக்குப் போன… உன் வாழ்க்கையை ஏன் டா கெடுத்துக்கிட்ட” என்றதும் அவன் அதிர,

“அது மட்டுமா செஞ்சிருக்க… என் மானத்தைக் காப்பாத்த உன் உயிரையே பணயம் வைச்சு… அந்தப் பாம்பைப் பிடிச்சு தூக்கிப் போட்டிருக்க இல்ல?” என்றதும் அவன் விழிகள் ஸ்தம்பித்தன.

“கனி உனக்கு எப்படி?”

“உன் டைரியைப் படிச்சேன்… படிச்சு முடிச்சதும் முடிவு பண்ணிட்டேன்… ஒன்னு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட வாழணும் இல்லயா… உன் காலடில விழுந்து அப்படியே உயிரை வுட்டுடணும்” என்றவள் அடுத்த கணம் அவன் பாதத்தில் சரிய போகவும், “கனி என்ன காரியம் பண்ற?” என்று அவள் தோளைப் பற்றி தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

மரணங்களை மட்டுமே கண்ட அந்த மயான பூமி முதல் முறையாக இரு மனங்களின் இணைவைக் கண்டது.

You cannot copy content