You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 13

Quote

சிவசங்கரனின் ஏமாற்றம்

ஆதி எப்போதுமே ஒரு முடிவைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் எடுக்கக் கூடியவள். அவள் தான் எடுத்த முடிவில் உறுதியோடு இருக்கும் அதேநேரம், உணர்ச்சிகளுக்கு அடிமையாகித் தளர்ந்து போக மாட்டாள் என்பது செல்லம்மா நன்கு அறிந்ததே. ஆதலால் செல்லம்மாவின் வேதனை நிரம்பிய முகம் ஆதியின் பிடிவாதத்தைக் கரைக்கவில்லை.

செல்லம்மாவும் ஆதியும் பேசிக் கொள்ளாமல் இருக்க, ஆதி சொன்ன இரண்டு நாள் கெடுவும் முடிவடைந்தது.

மறுநாள் காலையில் தனக்கான கேள்விகளுக்கான விடை இன்று தன் அம்மாவிடமிருந்து கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கையோடு இருந்த ஆதி வீடு முழுக்க செல்லம்மாவை காணாமல் பதறினாள்.

சமையலறையில் வேலையில் மூழ்கியிருந்த தீபாவிடம், "அம்மா எங்கே காணோம்?" என்றவள் வினவ,

"அவங்க காலையிலேயே கோயிலுக்கு போயிட்டாங்கம்மா" என்றாள் தீபா.

ஆதியின் மனம் ஒருபுறம் நிம்மதி அடைந்தபோதும் மறுபுறத்தில் தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்கவே அம்மா கோயிலுக்கு போயிருப்பாங்ளோ என்ற எண்ணம் தோன்றிட கோபம் ஏற்பட்டது.

இருந்தும் தன் சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றடைந்தவள் எப்பொழுதும் போல் தன் இருக்கையில் அமர்ந்து வேலைகளைச் செய்ய தொடங்கினாள். எதேச்சையாய் அவள் தன்னுடைய பேகை திறக்க... உள்ளே சில தாள்கள் கட்டாய் இருந்ததை அவள் பார்க்க நேர்ந்தது.

அவற்றின் மேல் செல்லம்மா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அதனை ஆர்வமாய் அவள் பிரித்துப் படிக்க,

அன்பிற்குரிய ஆதி,

நீ என்னிடம் கேட்ட கேள்விக்கான பதிலை உன்னிடம் நேரடியாய் சொல்லும் தைரியம் எனக்கில்லை. அதைத் தெரிந்துகொள்ளும் அவசியமும் உரிமையும் உனக்கு இருப்பதாக நீ நினைக்கும் பட்சத்தில் நான் அந்த உண்மையை இனி உன்னிடம் மறைக்க விரும்பவில்லை. நீ கேட்க எண்ணிய எல்லாக் கேள்விக்கான விடைகளும் இந்தக் கதையில் இருக்கிறது." என்று எழுதியிருந்தது.

ஆதி ஆர்வமாய் அந்தக் கடிதத்தோடு இணைந்த பக்கங்களை புரட்டினாள். அம்மா தன் சொந்த கதையைத்தான் தொடர் கதையாய் எழுதுகிறார் என்பதை ஏற்கனவே ஆதி யூகித்திருக்க அவளிடம் இருந்த மற்ற முதல் சில அத்தியாயங்களைச் சேர்த்து ஆவலோடு படிக்க தொடங்கினாள்.

தன் அம்மா புதிதாய் எழுதிய மற்ற அத்தியாயங்களை அவள் பிரித்து படித்துக் கொண்டிருக்க...

***

இருதலைக் கொள்ளி எறும்பாய் செல்வி தவித்துக் கொண்டிருக்க கனகவல்லி அப்போது செல்வியை மேலும் காயப்படுத்தும் விதமாய்,

"உடம்பு சரியில்லன்னு சும்மாவே படுத்துகிடக்கிற... வீட்டு வேலை பாக்கிறதுக்கு பயந்துகிட்டு பொய் சொல்லிட்டு திரிஞ்சிட்டிருக்கியா?!" என்று கேட்டாள்.

"இல்லக்கா.. உண்மையிலேயே உடம்புக்கு முடியல" என்று வலியோடு சொல்ல,

"ஆஹா.. .நல்லா நடிக்கிறடி... இப்படி நடிச்சுதான் புருஷனை மயக்கி வைச்சிருக்கியோ?!" என்றாள் கனகம்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி செல்விக்கு உள்ளூர பற்றி எரிந்தது. இருந்தும் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மௌனமாய் இருந்துவிட,

அந்தச் சமயம் பார்த்து செல்வியின் அம்மா மங்களம் அவளைப் பார்க்க வந்திருந்தார். செல்வியோ உடல் மெலிந்த நிலையில் ரொம்பவும் சோர்ந்து காணப்பட, மங்களத்தின் மனம் பதைபதைத்து போனது.

அவர் விழிகளில் நீர் கோர்த்திருக்க, செல்வியும் தன் தாயை இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தாள். வார்த்தைகளால் சொல்ல முடியாதளவுக்கு அவள் மனதில் கொண்ட துயரெல்லாம் தன் தாயை காணுகையில் லேசாய் கரைந்துருகி போயிருந்தது.

மகளின் அணைப்பில் வெறும் பிரிவின் வேதனை மட்டும் இருப்பதாக அவருக்கு தோன்றவில்லை. அதைத் தாண்டி அவளுக்குள் ஏதோ ஆழமான வலியும் தவிப்பும் இருக்குமோ என்றவர் எண்ணி அவளை அரவணைத்துக் கொண்டபடி,

"மாப்பிள்ளைதான் உனக்கு உடம்பு முடியலன்னு ஆளைவிட்டு சொல்லி அனுப்பினாரு" என்றவர் சொல்லவும் அவளுக்கு தன் கணவனின் வார்த்தைகள் காதில் ஒலித்தன.

'இந்த வீட்டில நீ இருக்கிறதா இருந்தா எனக்கு பொண்டாட்டியா இருக்கணும்... இல்லன்னா நீ உங்க அம்மாவோடே போயிடு'

இதனை எண்ணி கொண்டவள் ரொம்பவும் பதட்டமடைய,

"என்னாச்சு செல்லம்மா... இன்னுமா உனக்கு காய்ச்சல் அடிக்குது?" என்று அவளின் நெற்றியையும் கழுத்தையும் தொட்டுபார்த்தபடி மங்களம் கேட்டார். கனகவல்லி அப்போது முந்திக் கொண்டு,

"ஆமா ஆமா காய்ச்சல்தான் அடிக்குது... என்ன பொண்ணு வளர்த்து வைச்சிருக்கீங்க... சீக்காளியாட்டும்... கிணத்தடியில் மயங்கி விழுந்துட்டா... சின்ன சின்ன வேலை செஞ்சுட்டு சோர்ந்து போய் உட்கார்ந்துக்கிறா... பெரிசா எந்த வேலையும்  செய்யறதில்ல" என்று வரிசையாய் செல்வியைப்பற்றி குறை சொல்ல மங்களத்தின் முகம் வாடிப் போனது.

"கோச்சிக்காதீங்க... நிறைய வேலை செஞ்சு பழக்கமில்லாத பொண்ணு" என்றார் மங்களம்.

"நான் கூடதான் எங்க வீட்டில வேலையே செஞ்சதே இல்ல... என் நேரம்... இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா வந்து மாட்டிக்கிட்டேன்... இப்போ எல்லா பொறுப்பும் என் தலையில... நான் செய்ற வேலையில பாதி செய்வாளா உங்க பொண்ணு" என்று கனகவல்லி செல்வியின் மீது நிறுத்தாமல் குற்ற பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருக்க,

அந்த சமயம் பார்த்து சிவசங்கரன் கனகவல்லியின் மகளை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

"ஏம்மா... பொய் சொல்ற.... சித்திதானே வீட்டு வேலை எல்லாத்தையும் செய்யுது.. நீ சும்மாதானே இருக்க" என்று கனகவல்லியின் மகள் வசந்தா உண்மையைப் போட்டு உடைத்தாள்.

இப்படி சொன்னதுமே கனகவல்லியின் முகம் சுருங்கிப் போனது. அவள் வசந்தாவின் மீது கை ஓங்க சிவசங்கரன் தடுத்தபடி வசந்தாவை மறைத்துக் கொண்டான்.

பிறகு கனகவல்லி அங்கே நிற்காமல் வசந்தாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வெளியேறினாள். அதேநேரம் மங்களம் சிவசங்கரனை பார்த்ததும் மரியாதையோடு ஓரமாய் நின்று கொள்ள,

சிவசங்கரன் செல்வியின் முகத்தைப் பார்த்தபடி மங்களத்திடம்,

"அத்தை... செல்விக்கு உடம்பு தேறற வரைக்கும் நீங்க கூட்டிட்டு போய் வைச்சுக்கோங்களேன்" என்றான்.

அவன் பார்வைக்கும் வார்த்தைக்குமான அர்த்தம் அவளுக்குத் தெளிவாய் புரிந்தது. மங்களம் உடனே, "சரிங்க தம்பி... ஆனா நீங்களும் செல்வியோட வந்து இரண்டு நாள் தங்கிட்டு போன்ன்ன்னா" என்றவர் இழுக்க,

"இருக்கட்டும் அத்தை... எனக்கு இப்போ கொஞ்சம் வேலை நிறைய இருக்கு...  நீங்க உங்க பொண்ண மட்டும் கூட்டிட்டு போங்க...  அவ உடம்பு மனசு எல்லாம் தெளிவான பிறகு சொல்லி அனுப்புங்க... நானே அவளை அழைச்சிட்டு போக வர்றேன்... அப்போ வேணா நீங்க சொன்னபடி இரண்டு நாள் வந்திருக்கேன்" என்றவன் சொல்லிவிட்டு

செல்வியை பார்த்து, "என்ன செல்வி? நான் சொல்றது சரிதானே" என்று கேட்க, அவள் தவிப்போடு அவனை ஏறிட்டாள்.

'போக மாட்டேன்னு சொல்லுடி' என்று சிவசங்கரனின்  மனக்குரல் அவளிடம் கெஞ்ச,

அவள் முகத்தைத் துடைத்து கொண்டு, "அவர் சொல்றது சரிதாம்மா... அவர் வேலையெல்லாம் முடிச்சிட்டு... என்னை வந்து கூட்டிட்டு போவாரு" என்று தன் தாயிடம் சொல்லிக் கொண்டிருக்க சிவசங்கரன் உள்ளூர நொறுங்கிப் போனான்.

எட்டிப் பார்த்த கண்ணீரை அவன் வெளிவரவிடாமல் துடைத்து கொள்ள, அவளோ அவன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் புறப்பட தயாரானாள்.

செல்வி வீட்டில் உள்ள எல்லோரிடமும் புறப்படுவதாக சொல்ல, அவளைத் தடுத்து நிறுத்தவோ அல்லது வருத்தப்படவோ அங்கே ஒருவரும் இல்லை.

கனகவல்லிக்கு மட்டும் வீட்டு வேலை செய்ய ஆளில்லாமல் போய் விடுமோ என்ற கவலை. செல்வி மங்களத்தோடு புறப்படும் சமயத்தில் மனோரஞ்சிதம் உள்ளே நுழைந்தாள்.

நேராய் அவள் செல்வியை அணுகி, "மயங்கி விழுந்திட்டியாமே... அன்னம்மா சொல்லிச்சு... அப்படியா?!" என்று ஆர்வமாய் கேட்க,

"ஆமாம் மதினி" என்றாள் செல்வி.

"ஏதாச்சும் விசேஷமா?!" எல்லோர் முன்னிலையிலும் மனோரஞ்சிதம் வெளிப்படையாக அந்தக் கேள்வியை கேட்டு வைக்க, செல்வியின் முகம் சுருங்கி போனது. அவள் பதில் சொல்ல முடியாமல் தவிப்போடு நின்றிருக்க,

கனகவல்லிக்கு அப்படி ஒன்று இருக்குமோ என்று சந்தேகம் எழுந்து அதிர்ச்சியைக் கிளப்பியது. மங்களத்திற்கும் அந்தக் கேள்வி மனதில் ஏற்கனவே இருக்க, தன் மகள் என்ன சொல்லப் போகிறாளோ என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தார்.

செல்வி சங்கடமான பார்வையோடு தலைகவிழ்ந்து நின்றிருக்க, இவர்களின் சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்யும் விதமாகவும் தன் மனைவியின் தவிப்பை போக்க சிவசங்கரன் முன்வந்து,

"அறிவில்லக்கா உனக்கு... எதை எப்படி கேட்கணும்ன்னு விவஸ்தையே இல்ல... அப்படி ஏதாச்சும் விஷயம் இருந்தா நானே உன்கிட்ட சொல்ல மாட்டேனா என்ன?" என்று தன் தமக்கையைக் கோபமாக கடிந்து கொண்டான்.

அவன் பதிலில் எல்லோர் மனதிலிருந்த  சந்தேகமும் தீர்ந்து போனது. மங்களத்தின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாய் முடிந்தது. ரஞ்சிதா அப்போது தன் தம்பியிடம்,

"கோச்சிக்காத சங்கரா... ஏதோ உனக்கு ஒரு பொண்ணு பிறந்தா என் இளைய மவன் சரவணனுக்கு கட்டி வைக்கிற ஆசையில கேட்டேன்.. அது தப்பா?" என்று தன் மனதில் உள்ளதை அப்படியே சொன்னாள்.

அந்தப் பேச்சு அதோடு நின்றுவிட, செல்வியை வழியனுப்ப சிவசங்கரன் வாசல் வரை வந்தான். அவள் கடைசி நொடியிலாவது போக மாட்டேன் என்று நின்றுவிடுவாளா என்று ஏக்கத்தோடு அவன் எதிர்பார்த்திருக்க,

அப்போது மங்களம் செல்வியிடம், "போய் அவர்கிட்ட சொல்லிட்டு வா புள்ள" என்றார்.

செல்வி வேண்டா வெறுப்பாய் அவன் புறம் திரும்பி, "நான் போயிட்டு வர்றேன்" என்று நிராகரித்த பார்வையோடு சொல்ல,

"அப்போ வாழவெட்டியா வாழனும்ன்னு முடிவு பண்ணிட்ட... இல்ல?!" என்று அவள் காதில் மட்டும் விழும்படி மெலிதாய் கேட்டான்.

"என் தலையில அப்படிதான்னு எழுதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்" என்றவள் தீர்க்கமாய் சொல்லிவிட்டு அவனை ஏறிட்டும் பார்க்காமல் திரும்பி நடக்க அவன் மனமுடைந்து போனான்.

அவன் அப்படி அவளிடம் சொன்னதே அவள் தன் மனதில் உள்ள குழப்பத்தை வெளிப்படுத்துவாள் என்று எதிர்பார்த்துதான். ஆனால் அவன் நினைத்தது எதுவும் நடவாமல் அவளிடமிருந்து அவனுக்கு ஏமாற்றமே மிச்சமானது. அவளின் இந்த அழுத்தம் அவனைப் பெரிதும் வேதனைக்குள்ளாக்க வாசலில் நின்றபடி அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

***

அந்த நொடி ஆதியின் மேஜை மீதிருந்த தொலைப்பேசி ஒலிக்க, அவள் கதையிலிருந்து மீண்டு வந்தாள்.

முகத்தைத் துடைத்து கொண்டு ஆதி அந்த அழைப்பை ஏற்க, "விஷ்வா சார் உங்களை பார்க்கணும்னு வந்திருக்காரு ஆதி" என்றாள் அமுதா. இதைக் கேட்ட நொடி ஆதி வியப்பானாள்.

Quote

Super ma 

You cannot copy content