You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 14

Quote

இம்பிரஸ்ட்

ஆதி அதிர்ச்சியிலிருந்து மீண்டு, "கரெக்ட்டா கேட்டியா? என்னையா பார்க்கணும்ன்னு சொன்னாரு?" என்றவள் சந்தேகத்தோடு அமுதாவிடம் வினவ, "ஆமா ஆதி" என்றாள். அவள் சற்று யோசித்துவிட்டு,

"பிஸியா இருக்கிறன்னு சொல்லி அவாயிட் பண்ணிடு அமுது" என்றாள். அமுதாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

"எப்படி அவாயிட் பண்றது?... சாரோட மகனாச்சே... வேணா நீயே சொல்லிடு" என்று அமுதா தயங்க, வேறு வழியில்லாமல் ஆதி அமுதாவிடம் விஷ்வாவை உள்ளே அனுப்பச் சொன்னாள்.

அவன் என்ன பேச போகிறானோ என்று அவள்  எண்ணியபடி  இருக்க, விஷ்வா அவள் அறைக்குள் நுழைந்தான். என்றுமில்லாமல் அவன் அவளைப் பார்த்து புன்னகைக்க,

'இதென்னடா உலக அதிசயம்' என்றெண்ணி கொண்டு அவனை அதிசயித்து பார்த்தவள் இருக்கையைக் காண்பித்து அமரச் சொன்னாள்.

அவனைக் குழப்பமாய் நோக்கி, "சொல்லு விஷ்வா... என்ன விஷயம்... அதுவும் அதிசயமா என்னைப் பார்க்க வந்திருக்க?" என்று கேட்க அவன் இதழ்கள் விரிந்தன.

அவளின் கண்களை நேராக நோக்கியவன், "ஐம் எக்ஸ்ட்ரீமிலி சாரி" என்றான்.

அவள் புருவங்கள் நெறிந்திட, "எதுக்கு?" என்க,

"நான் உன்கிட்ட நடந்துகிட்ட விதத்துக்காக... பேசின விதத்துக்காக... இன்னும் கேட்டா பல நேரங்களில் நான் காரணமே இல்லாம உன்கிட்ட கோபமா நடந்திட்டிருக்கேன்... வெறுப்பை காட்டிருக்கேன்... ஏன்?

நான் உன்னை தெரிஞ்சே நிறைய தடவை காயப்படுத்தற மாதிரி பேசி இருக்கேன்... அது எல்லாத்தையும் இப்போ நினைச்சா ஐம் பீஃலிங் கில்டி" என்றவன் வருத்தமுற சொல்ல அவள் அவன் பேசுவதை கேட்டு வியப்பின் உச்சிக்கே சென்றாள்.

அவள் ஸ்தம்பித்தபடி பதில் பேசாமல் அமர்ந்திருக்க,

அவன் மீண்டும், "என்னை நீ மன்னிக்கிறது கஷ்டம்தான்... பிகாஸ் நான் அந்தளவுக்கு மோசமா உன்னை ட்ரீட் பண்ணி இருக்கேன்... பட் மனசிருந்தா" என்றவன் அவளைத் தயங்கிய பார்வை பார்க்க அவளுக்கு ஒரு நொடி உலகமே நின்று சுழன்றது.

"நான் பார்க்கிறது விஷ்வாதானா... ஐ டோன்ட் பிலீவ்  இட்"

ஆதி முகத்தை ஆச்சரிய குறியோடு வைத்துக் கொண்டு இவ்விதம் கேட்க விஷ்வா சிரித்தபடி, "நோ டௌட்... நான் விஷ்வாதான்" என்றான்.

"இப்பவும் என்னால பிலீவ் பண்ண முடியல... உன் பேச்சு... செயல்... இதெல்லாம் ரொம்ப மாறி இருக்கிற மாதிரி தெரியுது" என்றவள் கேட்டு அவனை ஆழ்ந்து பார்க்க,

"நம்ம செய்றது மிஸ்டேக்ஸ்னு தெரிஞ்சா அதை நாம மாத்திக்கிறதில் தப்பில்லையே" என்றான்.

ஆதிக்கு விஷ்வாவின் கண்களை பார்க்க அதில் தெளிவும் நேர்மையும் தெரிந்தது. அவள் யோசனையோடு அமர்ந்திருக்க,

"என்ன மன்னிக்க மனசு வரலயோ?!" என்றவன் கேட்க அவனை அதிர்ச்சியாய் ஏறிட்டாள். அவன் உண்மையிலேயே தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறான் என்பதை  உணர்ந்தவள்,

"கம்மான் விஷ்வா... நமக்குள்ள நடந்த சின்ன சண்டைக்கெல்லாம் மன்னிப்புங்கிறது எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை" என்றாள்.

"இல்ல ஆதி... நான் உன்னை ரொம்ப காயப்படுத்தி இருக்கேன்" என்று சொல்லி கொண்டிருந்தவனை இடைமறித்து,

"இட்ஸ் ஓகே விஷ்வா... லீவ் இட்" என்றாள் ஆதி.

எந்த வித கேள்வியும் இன்றி இத்தனை சுலபமாய் தன் மன்னிப்பை அவள் ஏற்றுக் கொண்ட விதம் அவனுக்கு வியப்பாய் இருந்தது.

முதல்முறையாய் விஷ்வா... தான் இதுநாள்வரை ஆதியைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து அவன் குற்றவுணர்வில் மௌனமாய் அமர்ந்திருக்க,

ஆதி அவனிடம், "என்ன விஷ்வா? வேறு ஏதாவது விஷயம் சொல்லணுமா?" என்று கேட்டாள்.

அவன் அவளை தயக்கத்தோடு நோக்க, "எதுவா இருந்தாலும் பரவாயில்ல... சொல்லு" என்று அவன் மனதை உணர்ந்து அவள் கேட்க

"அதை எப்படி சொல்றது" என்றவன் யோசித்துவிட்டு, பின்னர் அவனே தொடர்ந்தான்.

"நம்ம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்குமேன்னு நம்ம பேரண்ட்ஸ் நினைக்கும் போது நாமே ஏன் ஆதி அதைப்பற்றி யோசிக்கக் கூடாது" என்று தன் மனதிலிருந்த எண்ணத்தை மின்னல் கீற்று போல் அவன் பளிச்சென்று சொல்லிவிட, ஆதிக்கு அடுத்த அதிர்ச்சி.

செல்லம்மா ஏற்கனவே அவன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகச் சொன்னது அவளுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அதுவும் விஷ்வாவே நேரடியாய் திருமணத்தை பற்றிப் பேச ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. அதுவும் அவனின் தடலடியான மாற்றத்தைச் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் நம்ப முடியாத பார்வையொன்றை அவன் மீது வீச,

"என்ன ஆதி? இன்னும் உன்னால என்னை நம்ப முடியலயா?" என்றவன் முகமலர்ச்சியோடு வினவ,

"யூ ஆர் ரைட்...  என்னால உன்னோட இந்த சேஞ்சஸை சட்டுன்னு அக்செப்ட் பண்ணிக்க முடியல... அந்த கோபமான விஷ்வாவோட முகம்தான் என் கண்ணு முன்னாடி வருது... பிகாஸ் நான் உன்னை அப்படியே பார்த்து பழகிட்டேன்" என்றாள்.

விஷ்வா சிரித்தபடி, "நான் கோபப்படமாட்டேன்னு உன்கிட்ட எப்ப சொன்னேன்... அந்த விஷ்வா அப்படியேதான் இருக்கான்... இந்த மாற்றத்துக்குக் காரணம் இதுநாள்வரை எனக்கு உன் மேல இருந்த தப்பான அபிப்பிராயம்" என்க, "அதென்ன?" என்று குழப்பமாய் கேட்டாள்.

"அது... ஐம் ஸோ ஜெலஸ் அபௌட் யூ"

"ஃபார் வாட்?" அவள் அதிர்ச்சியாகக் கேட்டு அவனைப் பார்க்க,

"அப்பாவுக்கு என்னைவிட உன் மேலதான் பாசம்னு ஒரு தாட்... அதுவும் அப்பா வார்த்தைக்கு வார்த்தை ஆதி அப்படி ஆதி இப்படின்னு சொல்லிட்டிருப்பாரா... அதை என்னால ஏனோ அக்சப்ட் பண்ணிக்க முடியல... ஆக்சுவலி இட்ஸ் அ கைன்ட் ஆஃப் பொஸஸ்ஸிவ்னஸ்... ஆனா இப்ப புரிஞ்சிக்கிட்டேன்... எங்க அப்பா என் மேல வைச்சிருந்த அன்பு எப்படிபட்டதுன்னு... இட்ஸ் ரியலி அன்கம்பேரிபில் அன் ப்யூர்" என்றவன் சொல்லி முடிக்கும் போது,

ஆதியின் முகம் வாடிப் போனது. அப்பா என்ற உறவை பெயரளவில் கூட உணர்ந்திடாத துரதிர்ஷ்டசாலி அவள். அந்த தவிப்பும் ஏக்கமும் விஷ்வாவின் வார்த்தைகளால் தலைதூக்க அந்த உணர்வை உள்ளூர மறைத்துக் கொண்டாள்.

அது அவளுக்குப் பழகி போன விஷயம்தான். விஷ்வாவை போல் அவள் தன் உணர்வுகளை அப்பட்டமாய் யாரிடமும் வெளிக்காட்ட மாட்டாள். ஆனால் அவள் விழிகளில் நிரம்பிய ஏக்கத்தை விஷ்வாவின் விழிகள் கண்டுகொண்டது.

அந்தச் சமயம் அவர்களின் உரையாடல் தடைப்படும் விதமாய் அமுதா அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள்.

"சாரி ஆதி... டிஸ்டர்ப் பண்ணிட்டேனே?" என்றவள் வினவ,

"நோ பிராப்ளம்... சொல்லு அமுது" என்றதும் அமுதா ஒரு விசிட்டிங் கார்ட்டை அவள் முன்னே மேஜை மீது வைத்தாள்.

அதனைப் பார்த்த ஆதி, "அகையின் அந்த ஃபேக்டிரி மேட்டரா?" என்றாள் கேள்வியோடு!

"ஆமாம் ஆதி... நான் எடிட்டர் சார் இல்லன்னு சொன்னேன்... பட் கேட்காம அட்லீஸ்ட் உன்னையாவது பார்க்கணும்னு சொல்லி அடமென்ட்டா வெயிட் பண்றார்"

ஆதி சற்று யோசித்துவிட்டு விஷ்வாவின் புறம் திரும்பி,

"சாரி... ஒரு பைஃவ் மினிட்ஸ்" என்றவள் சொல்ல அவன், "நோ பிராப்ளம்... நான் வெயிட் பண்றேன்" என்று இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.

"இருக்கட்டும் விஷ்வா... நீங்க இங்கயே இருக்கலாம்" என்று ஆதி சொல்லி அவனை அங்கேயே அமரச் சொன்னாள்.

பின்னர் அமுதாவிடம் திரும்பி அந்த நபரை உள்ளே அனுப்பச் சொல்ல, அந்த நபர் அவளின் அறைக்குள் நுழைந்தான். அவன் உடையும் தோரணையும் பார்த்தவள் அவனை அமரச் சொல்லி விட்டு, அவனைப் பற்றிய விவரங்களை விசாரித்தாள்.

அவன் தன்னை அரவிந்த் என்றும் ஆதித்தபுரத்தில் வரப் போகும் கெமிக்கல் இன்டஸ்டிரீஸின் பொறுப்பாளர் பதவியில் இருப்பதாகவும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"சொல்லுங்க மிஸ்டர் அரவிந்த்... இப்ப நீங்க எதுக்கு வந்திருக்கீங்க?" என்றவள் நிமிர்வாய் அமர்ந்து கொண்டு கேள்வி எழுப்ப,

"நீங்க தேவையில்லாம உங்க பத்திரிக்கையோட பரபரப்புக்காக ஏற்படுத்தின வதந்தியால எங்க இன்டஸ்டீரீஸோட பேரே கெட்டுப் போச்சு...  எங்க ப்ராஜெக்ட் ஸ்டாப்பாகி நிக்குது" என்றவன் கோபமாய் சொல்லி முடித்தான்.

"அது என்னோட தப்பில்ல... உங்களோட ஃபால்ட்... அப்புறம் ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சிக்கணும்... நாங்க பரபரப்புக்காக செய்திகளை உருவாக்கிறதில்லை, நாங்க எழுதிறதினால்தான் செய்திகள் பரபரப்பாகுது" என்றவள் அலட்டிக் கொள்ளாமல் பதிலுரைக்க,

"இப்ப அது முக்கியமில்லை மிஸ் ஆதி... நீங்க இனிமே அந்த ஆதித்தபுரம் ஃபேக்டிரியைப் பத்தி எழுதாம இருந்தா நல்லா இருக்கும்" என்றான்.

"நீங்க சொல்றதை நான் செய்யணும்ன்னா அந்த ஊர்ல இருக்கிற மக்களுக்கு உங்க ஃபேக்டிரினால எந்தப் பாதிப்பும் ஏற்படாதுன்னு உங்க எம்.டியால உறுதி கொடுக்க முடியுமா?!"

"இத பாருங்க... நாங்க ஆல்ரெடி எல்லா துறையிலும் அனுமதி வாங்கிதான் பண்ணிட்டிருக்கோம்... உங்களுக்கு சந்தேகமா இருந்தா அந்த ரெகாட்ஸ் எல்லாத்தையும் நாங்க காண்பிக்கிறோம்"

"குட்... இந்த ரெகட்ஸ் வைச்சு நான் எழுதின நீயூஸ் தப்புன்னு உங்க கம்பெனி சார்பா என் பேரில ஒரு கேஸ் ஃபைல் பண்ணுங்களேன்" என்று அவள் சொல்ல அந்த நபர் திகைத்து போனான். அந்த நொடி விஷ்வாவும் கூட கொஞ்சம் பிரம்மிப்பாகவே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இதைப் பெரிசாக்க எங்க எம்.டிக்கு விருப்பமில்லை மேடம்" என்றவன் சொல்ல,

"ஆனா இந்த விஷயத்தை நான் பெரிசாக்கியே தீருவேன்னு உங்க எம்.டிக்கிட்ட சொல்லுங்க" என்றாள் திமிரோடு!

"நீங்க செய்சிற காரியம் உங்களுக்கே எதிராக முடிஞ்சிடும் மிஸ் ஆதி" என்றவன் இறுதியாய் மிரட்டும் தொனியில் சொல்ல,

அத்தனை நேரம் அவர்களின் உரையாடலில் தலையிடாமல் இருந்த விஷ்வா கோபமாய், "என்ன மிஸ்டர்... மிரட்டிறீங்களா?!" என்று கேட்டபடி எழுந்து கொண்டான்.

"விடுங்க விஷ்வா... இதெல்லாம் சகஜம்தான்" என்று அவனை சமாதானம் செய்து உட்கார சொன்னாள்.

பின் அவளே அந்த நபரிடம், "என்ன நடந்தாலும் நான் அதை ஃபேஸ் பண்ண தயாராய் இருக்கேன்னு உங்க பாஸ்கிட்ட சொல்லுங்க...

அன் ஒன் மோர் திங்... இந்த விஷயத்தைப் பத்தி பேச இனிமே எங்க பத்திரிக்கைக்கு யாரையும் அனுப்ப வேண்டாம்னு சொல்லுங்க... இட்ஸ் வேஸ்ட் ஆஃப் டைம்" என்று அவள் தீர்க்கமாய் சொல்ல அந்த நபர் கோபமாய் அவளை முறைத்துவிட்டு எழுந்து சென்றான்.

ஆதி அதன் பிறகு விஷ்வாவின் புறம் திரும்பி, "சாரி விஷ்வா... ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைச்சுட்டேனா?" என்க,

"பரவாயில்ல ஆதி" என்றான் விஷ்வா புன்முறுவலோடு!

ஆதி அப்போது அவனை தீர்க்கமாய் நோக்கி, "அப்புறம் நீங்க மேரெஜ் பத்தி சொன்னீங்க இல்ல" என்று கேட்க,

"ஹ்ம்ம் சொன்னேன்... உனக்கு அதுல" என்று கேட்பதற்கு முன்னாடி அவனைத் தடை செய்தவள்,

"சாரி விஷ்வா... எனக்கென்னவோ நமக்குள் அந்த ரிலேஷன்ஷிப் வொர்க் அவுட் ஆகும்னு தோணல... அதுவும் இல்லாம அம்மா அப்பா சொல்றாங்கனு இப்போ ஓகே சொல்லிட்டு நாளைக்கு பிரேக்அப் ஆயிட்டா... அவங்களுக்கும் மன வருத்தம்தானே" என்று தன் பதிலை இயல்பாக அவள் சொல்லி முடிக்க,

"ஏன் இவ்வளவு நெகட்டிவா யோசிக்கிற... எல்லா கணவன் மனைவிகளும் ஒரே மாதிரி வேவ் லென்த்தோடதான் இருக்கணுமா.. ஏன்? மாறுபட்ட குணாதிசயம் இருந்தா அந்த உறவு நிலைக்காதுன்னு ஏதாவது இருக்கா?" என்றவன் கேட்க அவள் ஆச்சரியமுற்றாள்.

அவள் எப்படியாவது நிராகரிக்க முயற்சி செய்ய விஷ்வா நேருக்கு மாறாய் பேசி அவளை சங்கடத்தில் தள்ளினான்.

ஆதி என்ன பேசுவதென்று புரியாமல் திகைக்க மேலும் விஷ்வாவே பேசினான்.

"நான் உன்னை கம்பெல் பண்ணல... கடைசி முடிவு உன்னுடையதுதான்... பட் லாஸ்ட்டா ஒரு விஷயம்... அப்பாவுக்காகதான் நான் இந்த கல்யாணத்துக்காக ஒத்துக்கிட்டேன்... பட் நவ்... இங்க நடந்த விஷயமும்... நீ பேசின விதமும்... உன்னைப் பத்தி எனக்கு இருந்த தவறான கண்ணோட்டத்தை மொத்தமா மாத்திடுச்சுன்னுதான் சொல்லணும்... நீ ரொம்ப திமிரு பிடிச்சவ யாருக்கும் அடங்க மாட்டன்னு நினைச்சிட்டிருந்தேன்"

"அது உண்மைதானே விஷ்வா... நான் திமிரு பிடிச்சவதான்... யாருக்கும் அடங்க மாட்டேன்தான்"

விஷ்வா மலைப்பாக பார்க்க அவளே மேலும், "ஏன்னா நான் அப்படிதான் இருந்தாகணும்... அப்பா இல்லாத பொண்ணுன்னு யாரும் என்னை ஈஸியா நினைச்சிர கூடாது... ஸோ எனக்காகவும் என் ஸேஃப்டிகாகவும் நான் கொஞ்சம் டஃபா இருக்கேன்... தட்ஸ் இட்" என்று சொல்லியவளை விழி எடுக்காமல் பார்த்திருந்தான்.

அவள் விஷ்வா என்றழைத்த பின்னரே வியப்பிலிருந்து மீண்டவன் ஆதியை நோக்கி, "ஐம் இம்ப்பிரெஸ்ட்" என்றதும் ஆதி புரியாத பார்வையோடு,

"என்ன சொன்னீங்க?" என்றவள் சந்தேகித்து கேட்டாள்.

"ஐம் இம்பிரஸ்ட்னு சொன்னேன்... உன் தைரியம், பொறுமை, தெளிவு, அப்புறம் உன்னோட நியாயமான கோபம்...  எல்லாத்தையும் பார்த்து நான் ரொம்ப இம்பிரஸாயிட்டேன்... முக்கியமாக உன்னோட இந்த திமிரு... அதுதான் உன்னோட அழகு...

அன் இப்போ சொல்றேன்... நம்ம பேரன்ட்ஸ்க்காக சொல்லல... எனக்கு மேரேஜுக்கு ஓகே... பட் நான் உனக்கு பொருத்தமானவனான்னு நீதான் யோசிச்சு முடிவு பண்ணனும்... அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன்" என்றவன் சொல்ல அவள் விழிகள் அவனிடம் நிலைகுத்தி நின்றன. அதன் பின்னர் புறப்படுவதாக அவன் சொல்லிவிட்டு வெளியேற, அவன் பேசிய வசீகரமான சில சொற்கள் மட்டும் அவள் மனதோடு ஆழமாய் நின்றுவிட்டன.

ஆதிக்கு விஷ்வாவின் நினைவிலிருந்து மீண்டு வர ரொம்பவும் சிரமமாயிருந்தது. வேலைகளில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் அவள் வீட்டிற்கு வர, அங்கே செல்லம்மா கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்.

ஆதி செல்லம்மாவை சமாதானப்படுத்த, அவர் ஆதியிடம் மீண்டும் பழையபடி திருமணத்தைப் பற்றியே பேசினார்.

ஆதி இம்முறை சற்று மனமாற்றத்தோடு, "எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்" என்று சொல்ல

  செல்லம்மாவுக்கு உண்மையில் அந்த வார்த்தை கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இங்கே ஆதி செல்லம்மாவிடம் சொன்னது போலவே சாரதாவிடம் விஷ்வா,

"இந்த கல்யாண விஷயத்தில் அவசர பட வேண்டாம்... ஆதி யோசிச்சு முடிவு எடுக்கட்டும்" என்றான்.

இதைக் கேட்ட கருணாகரனுக்கு ஆதியின் விருப்பத்திற்கு விஷ்வா கொடுக்கும் மதிப்பு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியது.

அதேநேரம் விஷ்வாவின் மீது ஆதிக்கு இருந்த தவறான அபிப்பிராயம் அபிமானமாய் மாறியிருந்தது. அன்று இரவு ஆதி முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்து,

"ஆதி நோ... விஷ்வாவை பத்தி யோசிக்காதே" என்று அவளிடம் அவளே சொல்லிக் கொண்டாள். ஏனெனில் அவன் பேசிவிட்டு சென்றதிலிருந்து அவள் மனம் ஓயாமல் அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

அதுவும் விஷ்வாவை போல் எந்த ஆண்மகனுமே நேரடியாய் அவளிடம் அப்படி பேசியதில்லை. அதற்கான காரணமும் அவளுக்கு இதுவரை தெரியாது.

அந்த உணர்வு அவளுக்குப் புதிதாய் தோன்றியது. இங்கே இவள் விஷ்வாவைப் பற்றி சிந்தித்தபடி இருக்க, அங்கே அவனும் ஆதியை சந்தித்த அந்த சில நிமிடங்களை நினைத்து ரசித்துக் கொண்டிருந்தான்.

மாலதி அழகின் பால் அவன் ஈர்க்கப்பட்டது காதல் எனில், இப்பொழுது ஆதியின் பேச்சும், செயலும்,  அதிலிருந்த கம்பீரமான அழகைப் பார்த்து தனக்கு ஏற்பட்ட பிரமிப்பும், அதனால் உண்டான இனம் புரியாத உணர்வும் என்னவென்று அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

விஷ்வாவின் இந்தத் தேடலுக்கான விடையை அவனேதான் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இப்போதைக்கு ஆதித்தபுரத்தில் ஆதிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் சூழ்ச்சியைக் காண வேண்டியிருக்கிறது.

சிவசங்கரனின் வீடு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டிருந்தது. பக்கத்திலே நீண்டு உயர்ந்த அரசமரம் வீட்டின் உயர்த்திற்கு போட்டிப் போட்டு நின்று கொண்டிருந்தது.

பின்பக்கமாய் இருந்த கிணறு தென்படவில்லை. மாட்டுக் கொட்டகையில் திமிலோடு கம்பீரமாய் வீரத்தை பறைசாற்றும் காளைகள் நின்றுக் கொண்டிருந்தன.

அந்த வீட்டின் மாடியில் நாம் ஏற்கனவே சந்தித்த சரவணன் தன் மாமன் மீது கொண்ட மரியாதை நிமித்தமாய் நின்று கொண்டிக்க, இருக்கையில் கால் மீது கால் போட்டபடி அமர்ந்திருந்த அந்த நபரை நம் வாசகர்கள் கணித்திருக்கக் கூடும்.

இருப்பினும் அவர் சிவசங்கரனின் மூத்த தமையன் வேல்முருகன் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறோம்.

"அந்த செல்வியோட பொண்ணு இந்த ஃபேக்டிரி விஷயத்தில தலையிட்டு நம்மள தொந்தரவு செய்யறா... அவள அடக்கினாதான் நமக்கு நிம்மதி" என்றார் வேல்முருகன்.

"அந்த புள்ளய பார்த்ததை வைச்சு சொல்றேன் மாமா... அது நிச்சயம் அடங்காத குதிரை... நம்ம மிரட்டலுக்கு எல்லாம் படியாது" என்றான் சரவணன்.

"மிரட்டி படியலன்னா... அவளைக் கொன்னுடுவோம்" என்று வேல்முருகன் இறுக்கமாய் உரைக்க,

சரவணன் முகத்தில் அதிர்ச்சி தென்பட்டது. ஆதியை முதல் தடவை பார்த்ததில் அவனுக்குள் ஏற்பட்ட தடுமாற்றமும் ஈர்ப்புமே அந்த அதிர்ச்சிக்குக் காரணம். அவனின் முகபாவத்தை வேல்முருகனும் கவனித்தார்.

"என்னடா? உனக்கு அந்தப் புள்ள மேல கிறக்கமா... அந்த அடங்காத குதிரையைக் கட்டிக்கிட்டு நீ அடக்க போறியாக்கும்"

"சேச்சே... இல்ல மாமா"

"பின்ன ஏன் மூஞ்செல்லாம் மாறுது... என் தம்பி அடம்பிடிச்சி செல்வியைக் கட்டிக்கின கதை தெரியும்ல. அப்புறம் உன் கதியும் அல்பாயுசுதான்" என்றதும் சரவணன் அதிர்ச்சியாக... அவர் மேலும்,

"அதுவும் இல்லாம அந்தப் புள்ள எங்கேயோ இருந்துகிட்டு நமக்கு கொடச்சல் கொடுக்குது... ஊருக்கு வந்து தப்பி தவறி அந்த ஃபேக்டிரி  இடம் நம்ம குடும்ப சொத்துன்னு தெரிஞ்சிது... அப்புறம் அவன் அப்பனோட பங்கைக் கேட்டுப் பிரச்சனைப் பண்ணுவா... அதனால்தான் சொல்றேன் அவளை உயிரோட விடக்கூடாது" என்று தீர்க்கமாய் உரைத்தார்.

"நீங்க சொன்னா சரிதான் மாமா... ஆனா அவ பத்திரிகைக்காரி... நீங்க சொன்ன மாறி அவளை சிட்டிக்குள்ள வைச்சு நாம எது பண்ணாலும் சிக்கிடுவோம்" என்றான்

"வாஸ்தவம்தான்... அப்ப என்னடா சரவணா பண்றது?"

"நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்து யாருக்கும் தெரியாம கதைய முடிச்சிடுவோம்... நம்ம ஊருக்குள்ள நம்மள எவனும் கேள்வி கேட்கமாட்டான்... ஏற்கனவே அத்தையைப் பத்தி தப்பு தப்பான வதந்தி பரவிகிடக்கு... அந்த பாவம்தான் பொண்ணுக்கு இப்படி ஆயிடுச்சுன்னு புரளிய கிளப்பிவிட்டிருவோம்"

"பைத்தியமாடா நீ... அவள இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தா என்ன பிரச்சனை வரும்னு இப்பதானே சொன்னேன்"

"பிரச்சனை பண்ணதான் அவ உயிரோட இருக்க மாட்டாளே... அப்புறம் என்ன?" என்று சரவணன் சொல்ல வேல்முருகன் அந்த யோசனையை ஒருவாறு ஆமோதித்தார்.

இருவருமே ஆதியை கொல்ல திட்டம் தீட்டி கொண்டிருந்த அதே சமயத்தில் ஆதி தன் அம்மாவின் வாழ்க்கையை முழுமையாய் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த நடுநிசியில் கதையைப் படிக்கத் தொடங்கினாள்.

அதனை முழுமையாய் முடிக்கும் வரை அவளுக்கு நிச்சயம் உறக்கம் வராது.

Quote

Super ma 

You cannot copy content