You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 17

Quote

காதலின் காத்திருப்பு

செல்விக்கு உண்மைகளைப் புரிய வைத்த மனோரஞ்சிதம் அவளை ஒருவாறு சமதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தாள். செல்வியின் வருகை சிவசங்கரனை ஆச்சரியப்படுத்திய அதேநேரம், கனகவல்லிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவள் வந்தது சிவசங்கரன் மனதிற்கு நிம்மதியாய் இருந்தாலும், அவள் மனம்மாறி இருப்பாள் என்பதில் அவனுக்கு துளிகூட நம்பிக்கை இல்லை. அதனால் அவன் அவளிடம் இருந்து விலகியே நின்றான்.

செல்விக்கோ இனி தன் வாழ்கை முழுவதும் இந்த வீட்டில்தான் என்ற உண்மையை ஏற்று கொள்வது கடினமாய் இருப்பினும் அவளுக்கும் வேறு வழியில்லை.

சிவசங்கரன் மீதான எண்ணம் மாறிய போதும் கணவன் என்ற உறவாய் அவனை ஏற்று கொள்ள அவளுக்கு தயக்கமும் பயமும் இருந்தது.

காலங்கள் கடந்து போக காயங்களும் ஆறிப் போகும்.  நாட்கள் கடந்து செல்ல, செல்வியின் மனநிலை சிவசங்கரனிடம் பழகும் விதம் எல்லாமே மாறிப் போனது.

ஆனால் செல்வி சிவசங்கரனை மனதளவில் நேசிக்க தொடங்கிய போதும் அதை அவனிடம் வெளிப்படுத்த முடியாமல் அவள் பெண்மையும் நாணமும் தடையாய் நின்றது.

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள, அவர்களுக்கிடையில் தனிமைக்கான சந்தர்ப்பம் அமைவதே அசாத்தியமாய் இருந்தது.

வயல் வேலைகள், தோப்பில் காய்களைக் கணக்கிடுவது, அவற்றை விற்பது, லாப நஷ்ட கணக்கு பார்ப்பது என எல்லா வேலைகளும் சிவசங்கரன் ஒருவனையே நம்பி இருந்தது.

இதற்கிடையில் செல்வியும் வீட்டு வேலைகளில் மும்மரமாகி விடுகிறாள். இரவு நேரங்களில் கண்ணம்மாவின் மகன் முருகன் செல்வியோடு படுத்துக் கொள்வதாக அடம்பிடிக்க, அவர்களின் இரவும் தவிப்பில் கரைந்து போனது.

சிவசங்கரன் அன்று விடிந்ததும் எப்போதும் போல் வயலுக்குப் புறப்பட்டான். சிவசங்கரனிடம் பேச ஒரு சந்தர்ப்பமாய் அவனுக்கான மதிய உணவை எடுத்துச் செல்ல தயார்படுத்திக் கொண்டிருந்தாள் செல்வி.

வேலையாட்களைக் கணக்கு விசாரித்துக் கொண்டிருக்கும் போது சிவசங்கரன் முதுகை யாரோ தட்ட அவன் திரும்பி பார்த்தபோது அவன் நண்பன் நின்று கொண்டிருந்தான்.

ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தவன், "என்னடா சோமு? ரொம்ப நாளா ஆளயே காணோம்" என்று கேட்க,

"என் மனைவியோட ஊருக்கு போயிருந்தேன்" என்றான் சோமு.

"அவங்க மாசமா இருந்தாங்கன்னு சொன்னியே... குழந்தை பிறந்துடுச்சா?"

"ஹ்ம்ம்" என்றான் சோமு சிரத்தையே இல்லாமல்!

"என்னடா சந்தோஷமான விஷயத்தை இப்படி சாதாரணமா சொல்ற?"

"என்னத்தை சந்தோஷம்... மூணாவதும் பொம்பள புள்ளயா பிறந்திடுச்சு" என்று சொல்லி சோமு சலித்து கொள்ள,

"போடா பைத்தியக்காரா... பொண்ணு பிறந்துட்டா அவ்வளவு பெரிய குத்தமா?" என்று சிவசங்கரன் வினவ, அவன் நண்பனின் முகம் வாடியது.

"அதான்  வீட்டில ஏற்கனவே இரண்டு இருக்கு இல்ல... இதுல மூணாவதும் பொண்ணு"

"அதைத்தான் நானும் கேட்கிறேன்... ஏற்கனவே வீட்டில இரண்டு புள்ள இருக்கு... அப்புறம் என்னத்துக்கு மூணாவது... பிரசவ வேதனையை அனுபவிச்சாதான்டா உனக்கு கஷ்டம் தெரியும்... பாவம் உன் மனைவி"

"நீ என்னவோ என் பொண்டாட்டி மாறி ரொம்ப அலுத்துக்கிற" என்று சோமு சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவசங்கரன் சிரித்துவிட்டான்.

நண்பர்கள் இருவரும் பேசி கொண்டிருக்க அப்போது செல்வி மதிய உணவு எடுத்துக்கொண்டு வந்து நின்றாள்.

  செல்வி அந்த நேரத்தில் அங்கு வந்தது சிவசங்கரனுக்கு வியப்பாய் இருந்தது. சோமுவும் அப்போது அவள் வருகையைக் கவனித்து

"என்னமா தங்கச்சி… எப்படி இருக்க?" என்று விசாரித்தான்.

"நல்லா இருக்கேண்ணே" என்று செல்வி இயல்பாய் சோமுவிடம் பதில் சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்தாள். முதலில் சோமு மறுக்கப் பின் சிவசங்கரன் அவனை நிர்ப்பந்தித்து அழைத்து வந்தான்.

சோமு தனக்கு குழந்தை பிறந்ததைப் பற்றி செல்வியிடம் சொல்லிப் பெயர் என்ன வைப்பது என்று விவாதிக்க ஆரம்பித்தான்.

சிவசங்கரன் உடனே, "ஆதிபரமேஸ்வரினு நம்ம சாமி பேர் வைச்சிரு" என்க,

"அவ்வளவு பெரிசா வேண்டாமே" என்று சோமு தயங்க,

"ஏன்? பெரிசா இருந்தா என்ன? நம்ம ஊரையே காக்கிற தெய்வம்டா" என்றான் சிவசங்கரன்.

அவன் அம்மன் ஆதிபரமேஸ்வரியின் மீது அத்தனை நம்பிக்கை மிகுந்தவனாய் இருந்தான்.

"அது சரிதான் சங்கரா... ஆனா அந்த பெயரிட்டு அதட்ட கூட முடியாதே... ஆம்பளயா பிறந்தா உன் பெயர் வைக்கலாம்னு யோசிச்சேன்... இப்ப பொம்பள புள்ளயா பிறந்துடுச்சே" என்று சோமு வருத்தப்பட அத்தனை நேரம் அமைதியாய் அவர்களின் பேச்சைக் கேட்டு பரிமாறிக் கொண்டிருந்த செல்வி உடனே,

"அப்படின்னா சிவசங்கரின்னு வைங்களே... ண்ணே " என்று சொல்லியவள் சட்டென்று தன் கணவன் முன்னிலையில் அவன் பெயரை சொன்னதற்காக உதட்டைக் கடித்து கொண்டாள்.

அதை சிவசங்கரனும் மறைமுகமாகக் கவனித்து முகம் மலர ஆனந்தப்பட்டு கொள்ள, சோமுவுக்கு அந்தப் பெயரே ரொம்பவும் பிடித்துப் போனது.

"ரொம்ப நல்லாயிருக்கும்மா... அந்த பெயரையே வச்சிடலாம்" களிப்போடு செல்வியை பாராட்டினான். சிறிது நேரத்தில் சோமு அவர்களிடம் பேசி முடித்துவிட்டுப் புறப்பட்டுவிட,

செல்வியும் தன் கணவனிடம், "நானும் கிளம்புறேங்க" என்று சொல்லி ஏக்கமாய் பார்த்தாள்.

சிவசங்கரனுக்கு ஏனோ அவளைத் தனியாக அனுப்ப மனமில்லாமல், "நானும் உன் கூட வீடு வரைக்கும் வர்றேன்" என்றவன் சொல்ல,

"பரவாயில்ல... நான் போயிக்கிறேன்" என்று அவனை நிமிர்ந்து பார்க்காமலே பதிலுரைத்தாள். ஆனாலும் அது அவள் உதட்டிலிருந்து வந்த சொல் மட்டும்தான் என்பதை உணர்ந்தவன்,

"இருக்கட்டும் பரவாயில்லை... நானும் வர்றேன்" என்று அவளோடு துணையாக சென்றான்.

"ஏன் செல்வி? இந்த உச்சி வெயில்ல நீதான் சாப்பாடு எடுத்துட்டு வரணுமா?" என்று சிவசங்கரன் அவளிடம் நடந்தபடி கேட்க,

செல்வி அவனைப் பார்க்க வந்ததாக வெளிப்படையாகச் சொல்ல தயங்கிக் கொண்டு, "வீட்டில சாப்பாடு கொடுத்தனுப்ப ஆளில்ல" என்றாள்.

"அதுக்காக போய் தனியா இவ்வளவு தொலைவு நடந்து வரணுமா?!" என்றவன்  கேட்க, செல்வி அவள் வந்ததன் காரணத்தை அவனுக்குப் புரிய வைக்க முடியாமல் மௌனமாகவே நடந்தாள்.

அதன் பிறகு பாதி தூரம் இருவரும் மௌனமாகவே நடந்துவர, சிவசங்கரன் வேகமாய் அந்தப் புளியந்தோப்பிற்குள் நுழையச் செல்வி தயங்கி நின்றாள்.

சில கசப்பான ஞாபகங்கள் அவளை அந்தத் தோப்பிற்குள் பிரவேசிக்க விடாமல் தடுத்தது.

"ஏன் நிக்கிற... வா" என்று அவன் செல்வியை அழைக்க,

"இந்த வழியா போக வேண்டாமே" என்றவள் மிரட்சியாய் அவனைப் பார்த்தாள்.

"அந்த பக்கமாய் போனா சுத்து செல்வி... நேரமாகிடும்... இப்படி போனா வீட்டுக்கு சீக்கிரம் போயிடலாம்" என்றவன் சொல்லி அவளை அழைக்க

செல்வி பிடிவாதமாய், "இல்ல நான் வர மாட்டேன்... எனக்கு பயமா இருக்கு" என்று உணர்ச்சிவசப்பட அவள் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

அவளின் மனநிலையை உணர்ந்தவன் அதற்கு மேல் அவளைக் கட்டாயப்படுத்த விரும்பாமல், "சரி வேண்டாம்" என்றுரைத்து அவள் பின்னோடு நடந்தான்.

மீண்டும் மீண்டும் அந்த மோசமான நினைவுகளை அவள் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை. இன்றளவும் மாணிக்கத்தை பார்க்கும் போதெல்லாம் ஒருவித அருவருக்கத்தக்க உணர்வு அவளை ஆட்கொள்ள, அவனை முடிந்தளவு தவிர்த்துவிட்டு ஒதுங்கி நின்றாள்.

இவற்றை எல்லாம் சிவசங்கரனிடம் சொல்வதும் சாத்தியமற்ற ஒன்று என்பதால் அவன் கேள்விக்கு பயமாக இருக்கிறது என்று ஒற்றை சொல்லில் பதில் சொல்லி தப்பிக்கொண்டாள்.

அவள் மனவோட்டம் ஒருவித அச்சநிலையில் பயணித்திருக்க, சிவசங்கரன் அவர்களுக்கு இடையில் நிலுவிய மௌனத்தை உடைத்தான்.

"ஊருக்கெல்லாம் பேய் பயம் காட்டிட்டு இப்போ அந்த வழியா போக உனக்கே பயமா இருக்கா?" என்றவன் கிண்டலாய் கேட்க, அவள் மௌனமாகத் தலைகுனிந்தபடியே நடந்துவந்தாள்.

அவனே மேலும், "நீ பயந்துட்டன்னா என்னால நம்பவே முடியல... இந்த ஊரு பொண்ணுங்களிலேயே நீதான் தைரியசாலியானவன்னு நினைச்சேன்" என்று அவன் சொன்ன மறுகணமே கணவனை அவள் திகைப்பாய் பார்க்க,

"ஏன்டி அப்படி பாக்கிற? உண்மையதானே சொல்றேன்" என்றவன் சொல்லி மேலே அவனே தொடர்ந்தான்.

"நினைவு இருக்கா செல்வி? அன்னைக்கு மரக்கிளையை வெட்டும் போது கீழே விழ இருந்த அந்தக் கூட்டில இருக்கிற பறவைகளை உயிரே போகிற ஆபத்துன்னு தெரிஞ்சும் காப்பாத்தினியே... அதுக்கு பேர் தைரியம் இல்லயா?! புருஷனைப் பாத்து நேருக்கு நேராய் பேசவே பொண்ணுங்க பயப்படுவாங்க... நீ என் முகத்துக்கு நேரா பாத்து உன்னை எனக்கு பிடிக்கலன்னு சொன்னியே... அது தைரியம் இல்லயா?! சரி அதைவிடு.. என் கூட வாழ விருப்பமில்லைனா பிறந்த வீட்டுக்கு போன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா... நீ பாட்டுக்கு கிளம்பிட்டியே, ரொம்ப தாண்டி நெஞ்சழுத்தம் உனக்கு" என்று சொல்லி அவளை விழியிடுங்க பார்த்தான்.

அவள் புரியாத பார்வையோடு, "தைரியசாலின்னு பாராட்டுறீங்களா இல்ல இதுதான் சந்தர்ப்பம்னு குத்திக் காட்டுறீங்களா?" என்றுக் கேட்க,

"நான் குத்தி பேசல... மனசுல பட்டதைத்தான் சொன்னேன்" என்றான்.

"இன்னும் உங்க மனசுல அந்தப் பழைய விஷயமெல்லாம் அப்படியேதான் இருக்கா?!" என்றவள் ஏக்கமுற கேட்க,

"புதுசா யோசிச்சு பாக்க நமக்குள்ள ஏதாவது இருக்கா என்ன?" என்று சிவசங்கரன் சொல்லி முடிக்கும்போது அவர்கள் இருவரும் வீட்டின் பின்புற வாசலை அடைந்தனர்.

மறைமுகமாகவே தங்கள் மனதில் நினைத்ததை இருவரும் வெளிப்படுத்திக் கொண்ட பின்பும் அதை அவர்கள் முகங்கள் காட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது,

சாப்பிட அடம் பிடித்துக்கொண்டிருந்த முருகன் தன் தாய் கண்ணம்மாவினை விடுத்து செல்வியின் கால்களைக் கட்டிக் கொண்டான்.

முருகன் தன் அம்மாவைவிட செல்வியின் மீதே அதிக பாசமாக இருந்தான். கண்ணம்மா முணுமுணுத்துக் கொண்டே சாப்பாடு கிண்ணத்தை வேறுவழியின்றி அவளிடம் கொடுத்துவிட்டுப் போனாள்.

சிவசங்கரனுக்கு செல்வியின் மாற்றமும் தயக்கமும் புரியாமல் இல்லை. அதை அவளாக வெளிப்படுத்த மாட்டாளா என்று காத்திருந்தவனுக்கு இன்று அவள் கண்களில் மின்னிக் கொண்டிருந்த நாணம் அதை அவனுக்கு  உணர்த்தியது.

அந்தச் சமயத்தில் சிவசங்கரனை வீட்டில் பார்த்த அவனின் தந்தை சண்முகவேலன்  சில வேலை காரணமாக உடனே அவனை அழைத்துச் செல்ல, இரவு வெகு நேரம் கழிந்தும் இருவரும் வீடு திரும்பவில்லை.

செல்வி அவர்களின் வருகைக்காகத் தனியே காத்திருக்க அவளின் மனம் மீண்டும் புரியாத சோகத்தில் திளைத்தது.  மீண்டும் அதேபோன்ற உணர்வு.

பரமுவையும் அவள் அம்மாவையும் இழப்பதற்கு முன் ஏற்பட்ட அதே உணர்வு இம்முறை யாருடைய மரணத்தின் அறிகுறியாய் உணர்த்துகிறது என்று அவளால் கணிக்க முடியவில்லை.

இப்போதைக்கு அவளின் ஒரே துணையும் ஆறுதலும் சிவசங்கரன் என்ற நிலையில் அந்த மோசமான எண்ணம் அவனுக்கு ஆபத்தை விளைவிக்குமோ என்று கலக்கமுற்றாள்.

நீண்டுக் கொண்டிருந்த அந்த இரவு அவளின் தைரியத்தை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.

******

கரம் பற்றினான்

இருளின் ஆதிக்கம் மறைந்த நிலையில் சிவசங்கரன் வீடு மட்டும் சோக இருளில் மூழ்கியிருந்தது. எல்லோரின் முகத்திலும்  கவலை படர்ந்திருக்க, கனகவல்லி கூட ரொம்பவும் கலக்கமுற்றாள்.

இரவு சண்முகவேலனுடன் சென்ற சிவசங்கரன் காலையில் அவன் மட்டும் தனியாகவே வீட்டிற்குத் திரும்பினான். பரபரப்பாய் இருக்கும் அவன் வீடு ஒருவிதமான நிசப்தத்தோடு அவனை வரவேற்றது.

ஒன்றும் புரியாமல் நேராக அவன் அறைக்குச் சென்று பார்த்த போது, செல்வி தன் வேதனையை அழுகையாய் மாற்றிக் கொண்டிருந்தாள். என்ன நேர்ந்திருக்கும் என்பதை சிவசங்கரனால் யூகிக்க முடியவில்லை.

அவள் தரையில் அமர்ந்து தலையை கவிழ்ந்தபடி அழுதிருக்க, கொஞ்சம் தயக்கத்தோடே அவள் தோளினை தொட்டான்.

கண்ணீரால் சிவந்து வீங்கியிருந்த கண்களோடு அவனை அவள் நிமிர்ந்து பார்க்க,

"என்னாச்சு செல்வி?" என்று பதட்டமானான்.

அழுது விம்மிக் கொண்டிருந்த செல்வி பதில் சொல்ல வார்த்தைகள் வராமல் தடுமாற, அவளைச் சமாதானம் செய்ய சிவசங்கரன் தரையில் அவள் அருகிலேயே அமர்ந்து தேற்ற முயற்சித்தான்.

ஆனால் அவளோ வெதும்பியபடியே இருக்க, "அழாம என்னாச்சுன்னு சொல்லு" என்றவன் அழுத்தி கேட்க,

செல்வி கண்களை துடைத்தபடி பேசத் தொடங்கினாள்.

"நம்ம லட்சுமி இருக்கு இல்ல" என்றவள் ஆரம்பிக்க,

"ஆமாம்... சினையா இருந்துச்சே... அதுக்கென்ன?" என்று கேட்க, அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

சிவசங்கரன் அவள் கரத்தை பற்றித் தேற்ற முயன்று கொண்டிருக்க, அவளோ ஆதரவாய் அவன் தோள் மீது சாய்ந்தழவும் அவன் திகைத்து போனான்.

மெல்ல அவள் தலையை தடவிக் கொடுத்தவன், "செல்வி" என்றழைக்க,

அவள் விசும்பலோடு, "நம்ம லட்..ச்சுமி... கண்ணு... போட்ட கொஞ்ச நேரத்தில... அப்படியே தரையில விழுந்து இறந்துடுச்சு" என்று சொல்லி முடிக்கும் போது மீண்டும் அவள் கண்களில் நீர்த் தாரை தாரையாய் வழிந்தது.

இதைக் கேட்ட மாத்திரத்தில் சிவசங்கரன் அதிர்ந்து தன் மனைவியின் முகத்தை நிமிர்த்த அவள் அழுது வெதும்பியபடியே இருந்தாள்.

விருட்டென எழுந்தவன், மாட்டுக் கொட்டகையை நோக்கி விறுவிறுவென நடந்தான். அங்கே லட்சுமி உயிரற்ற நிலையில் வீழ்ந்து கிடந்த காட்சி அவன் மனதையும் உலுக்கிவிட்டது.

அதன் அருகில் சென்று அந்த உடலைத் தடவி கண்ணீர் துளிகளை சிந்தியவன் தன் மனவுணர்வை உணர்வற்று கிடந்த அந்த ஜீவனிடம் புரிய வைக்க முடியாமல்  தவிப்புற்றான்.

இம்முறை செல்வியின் எண்ணம் லட்சுமியின் மரணத்திற்கான அறிகுறிதான் என்பது புரியும் போது, மீண்டும் அந்த எண்ணம் வரக்கூடாதே என அவள் கடவுள்களை எல்லாம் வேண்டிக் கொண்டாள்.

இனி நிகழப் போகும் மரணங்களை எந்த வேண்டுதல்களாலும் நிறுத்திவிட முடியாது.

சிவசங்கரன் வீட்டில் உள்ள எல்லோரின் வருத்தத்திற்கும் லட்சுமியின் இறப்பே காரணம். கடவுளுக்கு நிகராய் கருதப்படும் பசுமாடு திடீரென்று மரணித்தால் அது அந்த வீட்டிற்கு கேடு விளைவிக்கும் என்பது ஆழமான நம்பிக்கை.

அப்படி இருக்க அந்தச் சுயநலமான எண்ணமே அந்த வீட்டில் உள்ளோர்களை கலக்கமடையச் செய்திருந்தது. ஆனால் செல்வியும் சிவசங்கரனும் லட்சுமியின் மீது கொண்ட உண்மையான அன்பின் காரணமாகவே வருத்தமுற்றனர்.

சிவசங்கரன் லட்சுமியின்  உயிரற்ற உடலைப் பார்த்துவிட்டு கொட்டகையில் இருந்து மீண்டும் தன் அறைக்கு திரும்பினான்.

அங்கே அழுது வெதும்பிக் கொண்டிருந்த செல்வியிடம், "என் கூட கொஞ்சம் வா" என்றழைக்க,

எங்கே என்பது போல் தன் அழுகை உறைந்த நிலையில் கேட்டாள்.

"மாட்டு தொழுவத்துக்கு" என்றான்.

"இல்ல நான் வரமாட்டேன்" என்றவள் அச்சப்பட்டு மறுக்க,

"ப்ச் வா" என்றவள்  கரம் பற்றிக் கட்டாயப்படுத்தி மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்றான்.

அவள் லட்சிமியை பார்த்துத் தேம்பி அழ,

அப்போது சிவசங்கரன் அவளிடம், "லட்சுமி செத்து போச்சுன்னு அழுதுட்டிருக்க சரி... ஆனா இன்னைக்கு பிறந்த கன்னுக் குட்டிக்காகக் கொஞ்சம் கூடச் சந்தோஷப் படமாட்டியா?" என்று அன்று பிறந்த கன்றுக்குட்டியை சுட்டிக்காட்டினான்.

சட்டென்று தன் அழுகையை நிறுத்தியவள் அவன் முகத்தை ஒருமுறை பார்த்து விட்டு, பின்னர் படுத்து கிடந்த அந்தக் கன்று குட்டியினைப் பார்த்தாள்.

அது அநாதரவாய் படுத்துக் கிடக்க வேதனையுற்றவள் அந்த நொடியே அதன் அருகில் அமர்ந்து தடவிக் கொடுத்தாள். அதன் மென்மையான சரீரம் அவளை மெய்சிலிர்க்க வைத்தது.

"பாவம்... பிறந்த உடனயே அம்மாவை இழந்துட்டான்" என்று விழியில் நீர் கசிய அவள் வருத்தமுற,

"நீ தான் இருக்கியே... அவன் அம்மாவுக்கு மேலா நீ பாத்துக்க மாட்டியா?" என்று உரைத்தான் சங்கரன்.

"எப்படிங்க அம்மா இல்லாம..." என்று வெகுளித்தனமாய் செல்வி கேட்க,

"பிறக்கிற எல்லா உயிருக்கும்... அம்மாவோட அரவணைப்பு கிடைக்கிறதில்ல... இருந்தும் அந்த உயிர்கள் வாழாம போயிடுமா? நம்ம நல்லா பாத்துக்கிட்டா நல்லா இருப்பான்.. சரி... சோமு பொண்ணுக்கு ஒரு பேர் வைச்சியே… அந்த மாதிரி இவனுக்கும் ஒரு பேர் வையேன் பார்ப்போம்" என்றான்.

சிவசங்கரன் பேசி கொண்டிருந்ததைக் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவள், அவன் சொன்னது போல் ஒரு பெயரை கன்றுக் குட்டியை தடவியபடி யோசிக்கத் தொடங்கினாள். பின்பு சிவசங்கரனை ஏறிட்டு நோக்கி, "ஈஸ்வரன்" என்றாள்.

அவன் வியப்போடு, "மருது... காளையன்... இப்படி வைக்கலாம் அதென்ன ஈஸ்வரன்?" என்று கேட்க,

"அழிக்கிற கடவுள் ஈஸ்வரன்னு சொல்வாங்க... இவன் தன்னோட அம்மா மரணத்திலிருந்து மீண்டு பிறந்திருக்கான் இல்ல... அதனால இவன் பேரு ஈஸ்வரன்... நல்லா இருக்கு இல்ல" என்று செல்வி சொல்லி முடிக்க சிவசங்கரன் அவளின் சிந்திக்கும் திறனை எண்ணி பிரமிப்புற்றான்.

"என்ன ஈஸ்வரா? நான்தான் உன் அம்மா... எங்க கூப்பிடு?" என்று செல்வி அந்தக் கன்றினை தடவ,

அத்தனை நேரம் அசைவற்று இருந்த ஈஸ்வரன் ஒரு தாயின் அரவணைப்பை உணர்ந்தவனாய் தம் மெல்லிய காதுகளை லேசாக அசைத்தான்.

சிவசங்கரன் செல்வியின் பேச்சோடு இயைந்திருந்த வெகுளித்தனத்தை ரசித்தபடி மெய் மறந்து நிற்க, அப்போது வேல்முருகன் சிவசங்கரனின் தோளினை தொட்டு அவனை அழைத்தான். தன் தமையனை நோக்கியவன்,

"சொல்லுங்கண்ணே" என்று கேட்க,

"எங்கடா அப்பா? உன் கூடத்தானே வந்தாரு" என்றான் வேல்முருகன்.

"அது... நம்ம கோயில் கோடாங்கி நம்ம குடும்பத்துக்கு ஏதோ கெடுதல் வரப்போகுதுன்னு சொன்னாராம். அதான் நம்ம கோவில் குருக்களை பாக்கலாம்னு கூட்டிட்டு போனாரு... அவரு அங்க இல்லை... கரிசல் பட்டி போயிருக்காராம் வர நாளாகுமாம்... சரி அங்கயே போய் பாத்துருவோம்னு நானும் அப்பாவும் போனோம்... அங்க போனா அவரு நம்ம ஆதிபரமேஸ்வரி கோவிலுக்கு குடமுழக்கு விழா நடத்தனும்னு சொல்லிட்டாரு... அது விஷயமா குருக்களும் அப்பாவும் வேற யாரோ ஒரு சாமியாரை பாத்து பேசணுமாம்...அதனால என்னை வீட்டுக்கு கிளம்புன்னு அனுப்பிவிட்டாரு" என்று விரிவாய் சிவசங்கரன் சொல்ல வேல்முருகனுக்கு அதிர்ச்சியும் பயமும் ஒரு சேர உண்டானது.

“கோடாங்கி சொன்ன மாதிரியே ஏதோ கெடுதல் நடக்க போகுதோ... அதுக்கு அறிகுறியாதான் லட்சுமி செத்து போச்சோ?!" என்று வேல்முருகன் தம்பியிடம் கவலையுற,

"அப்படி எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒரு கெட்டதும் வராதுண்ணே...  நம்ம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்?" என்று சிவசங்கரன் நம்பிக்கையோடு சொல்ல,

வேல்முருகன் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியானான். லட்சுமியின் மரணத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு அன்று இரவு எல்லோரும் இயல்பான நிலைக்குத் திரும்பினர்.

ஈஸ்வரனை பார்த்து கொள்வதில் செல்வி ஆர்வமாய் இருந்ததால் அவளும் ஒருவாறு இயல்பான நிலைக்குத் திரும்பியிருந்தாள். அவள் அன்று இரவுக்கான உணவைச் சமைத்து முடித்து எல்லோரையும் உணவு உண்ண அழைத்தவள்,

சிவசங்கரன் திண்ணையில் அமர்ந்து விளக்கு வெளிச்சத்தில் கணக்கு பார்த்துக் கொண்டிருக்க,

"நேரமாயிடுச்சு... சாப்பிட வாங்களேன்" என்று அவனையும் சாப்பிட அழைக்க வந்தாள்.

"ஹ்ம்ம்... வர்றேன்" என்றான் தலையை கூட நிமிராமல்.

இவர்கள் இருவரின் நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருந்தது. இத்தனை நாள் அவளின் கடைகண் பார்வைக்காக சிவசங்கரன் காத்து கொண்டிருந்த நிலை மாறி இப்போது அவனின் கடைக்கண் பார்வைக்காக இப்போது அவள் காத்திருந்தாள்.

செல்வி போகாமல் அங்கேயே அவனை ஏக்கமாய் பார்த்தபடி தயங்கி நிற்க, சிவசங்கரன் அவள் நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.

அந்த நொடி அவளின் கண்களில் தெரிந்த தவிப்பு அவனுடைய கணக்கை எல்லாம் மறக்கடித்தது. சிவசங்கரன் தன் கணக்கு வழக்குகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவளை அருகில் அமரச் சொல்லி சமிக்ஞை செய்ய

அவள் நாணியபடி, "உம்ஹும்" என்பது போல் தலையாட்டினாள்.

புருவங்களை உயர்த்தி ஏன் என்று அவன் கேட்க, செல்வி இதழ்களைப் பிரிக்காமல் கண்களை இடதுபுறம் திருப்பி உள்ளே இருப்பவர்களைக் காண்பித்தாள்.

மௌன மொழியில் இருவரும் பேசி கொண்டிருக்க சிவசங்கரன் ஆசையாய் அவள் கரத்தை பற்றினான். அதனை விடுவிக்கும் முயற்சி செய்யாமல் அவள் நாணத்தோடு தலையை கவிழ்ந்து கொள்ள,

தன் கரத்தின் பிடியை மட்டுமல்ல. தன் காதலையும் அவள் மனதார ஏற்றுக் கொண்டாள் என்பதை அறிந்து  சொல்லவொண்ணாத ஆனந்தத்தில் திளைத்தான்.

அவன் கைப்பிடிக்குள் இருந்த அவள் கரத்தை தன் இதழ் அருகில் அவன் எடுத்துச் செல்ல, அவள் படாரென உருவிக்கொண்டாள்.

"இப்படியே நீ என்னை ஏமாத்திட்டே இருக்க" என்றவன் லேசான கோபத்தொனியில் சொல்ல,

"இனிமே மாட்டேன்" என்று தன் குரலைத் தாழ்த்தி உரைத்தாள் அவள்.

அந்த வார்த்தையில் அவன் தேகமெல்லாம் புல்லரிப்பான உணர்வு.

"நிஜமாத்தான் சொல்றியா?"

அவன் நம்பாமல் கேட்க அவள் தலையை மட்டும் அசைத்தாள். அவளை அப்போதே அள்ளி அணைத்துக் கொள்ள பரபரத்த தன் கரத்தை பெரும்பாடுபட்டு கட்டுக்குள் கொண்டு வர,

அவள் மெல்ல அவனை நிமிர்ந்து நோக்கி, "பசிக்கலயா உங்களுக்கு... சாப்பிட வரலாம்ல" என்று கேட்டாள்.

"பசிக்காதா பின்ன... ரொம்ப நாளா நீதான் என்னை ஏங்க வைச்சி பட்டினி போட்டுட்டிருக்கியே" கல்மிஷமாய் அவளைப் பார்த்தபடி அவன் கிசுகிசுத்த குரலில் சொல்ல, அவள் உணர்வுகளெல்லாம் சிலாகித்துக் கொண்டன. அவனை அவள் திகைப்பாய் பார்க்க, ஒரு குரல் கொஞ்சம் மிரட்டலாய் "செல்வி” என்று ஓங்காரமாய் அழைத்தது.

அது வேல்முருகனின் குரல்தான். செல்வி பதறியபடி  என்னவென்று புரியாமல் வீட்டிற்குள் விரைய, சிவசங்கரன் பின்னோடு நடந்து வந்தான்.

"செல்வி" என்று மீண்டும் வேல்முருகன் கத்த, அவள் அவன் முன்னே வந்து நின்றாள். சாப்பாடெல்லாம் கீழே சிதறிக் கிடந்தது.

"நீதான் சமைச்சியா?" என்றவன் அதட்டலாய் கேட்டு அவளை முறைக்க செல்வி படபடப்பாய் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள்.

"வாம்மா மகாராணி... என்ன நினைப்பில சமையல் செஞ்சீங்க" என்று வேல்முருகன் கேட்க, அவள் பதில் பேசாமல் மௌனமாய் நின்றாள்.

அவன் மேலும், "சாப்பாட்ட வாயில வைக்க முடியல… இப்படித்தான் உப்பை அள்ளி கொட்டுவாங்களா?" என்றான்

"இல்ல மாமா.. நான் சரியாதான் போட்டேன்" என்றவள் பதட்டத்தோடு சொல்ல,

இந்த சாதாரண விஷயத்திற்காக செல்வியை குற்றவாளியை போல் நிற்க வைத்திருப்பது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இருந்தும் அந்த நேரத்தில் அவனும் கோபமாய் பேசினால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமைதியாய் நின்றான்.

வேல்முருகன் மிரட்டியதில் செல்விக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பிக்க, அதை கவனித்த சிவசங்கரன் அவளின் கைகளை அழுத்தி பிடித்து கொண்டு அவனிருப்பதாக அவளுக்கு உணர்த்தினான். அவனின் கரம் செல்விக்கு தைரியம் புகட்டியது.

கனகவல்லி உடனே, "உங்க இரண்டு பேருக்கும் ரோஷம் வரனும்னு கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டுட்டா போல" என்று மாணிக்கத்தையும் வேல்முருகனை நோக்கி உரைத்தாள்.

"அய்யோ அப்படி எல்லாம் இல்லக்கா" என்று பதறினாள் செல்வி.

"பின்ன வேறெப்படி... உன் புருஷன்தான் வீட்டையே தாங்குறான்னு உனக்கு நினைப்புடி.. அதான் இப்படி எல்லாம் நீ பண்ணிகிட்டு திரியற இல்ல" என்று கனகவல்லி தன் எண்ணத்தை செல்வியின் மீது குற்றமாய் திணித்தாள்.

"என்ன கனகம் சொல்ற?" என்று வேல்முருகன் திரும்பி பார்த்து கேட்க, செல்விக்கு கனகவல்லியின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சிவசங்கரனுக்கு நடப்பது என்னவென்று தெள்ளத்தெளிவாக புரிந்தது.

கனகவல்லி செல்வியின் மீது வசை மாறிப் பொழிய செல்வி அந்தப் பேச்சை நிறுத்த, "நீங்க நினைக்கிற மாதிரி எண்ணம் எனக்கில்லக்கா… நான் இதோ, புதுசா சமைச்சிட்டு வந்துடுறேன்" என்று அடுப்பங்கறைக்குள் போக இருந்தவளின் கைகளை சிவசங்கரன் விடாமல் இன்னும் அழுத்தமாய் பிடித்து கொள்ள அவளால் அங்கிருந்து நகர முடியவில்லை.

இவ்வளவு நேரம் அமைதியாயிருந்த சிவசங்கரன் கொஞ்சம் உரக்க கனகவல்லியை நோக்கி,

"இத பாருங்க மதினி… நான் இந்த பொறுப்பை எல்லாம் பாத்துக்கிறது உங்களுக்கு சங்கடமாயிருந்தா… நான் ஒதுங்கிக்கிறேன்… இனிமே பெரிய அண்ணனும் சின்ன அண்ணனும் எல்லா பொறுப்பையும் முன்னிருந்து பாத்துக்கட்டுமே… எனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்ல... அதை விட்டுட்டு இந்த விஷயத்தை காரணம் காட்டி செல்வியை கரிச்சு கொட்டறத  இதோட நிறுத்துங்க" என்றான்.

"என்னடா மதனிக்கிட்ட கொஞ்சங் கூட மரியாதை இல்லாம" என்று வேல்முருகன் சிவசங்கரனை பார்த்து ஆவேசமாய் கேட்டான்.

சிவசங்கரன் உடனே, "அதே மரியாதை செல்விக்கு இருக்கு இல்ல… அவ கடைசி மருமக என்கிற ஒரே காரணத்துக்காக எல்லோரும் அவள காலில் போட்டு மிதிக்கனுமா என்ன?" என்று ஆக்ரோஷமாய் கேட்க,  வேல்முருகனும் மாணிக்கமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

இம்முறை மாணிக்கம் முன்னே வந்து, "இந்த ஒன்றும் இல்லாதவளுக்காக அண்ணனையே தூக்கி எரிஞ்சு பேசறியா சிவசங்கரா… அப்போ அவதான் உனக்கு முக்கியமா போச்சு" என்று முடிவாய் கேட்டான்.

சிவசங்கரன் லேசாய் சிரித்துவிட்டு, "உங்க பொண்டாட்டிங்க உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ எனக்கும் என் பொண்டாட்டி அவ்வளவு முக்கியம்" என்று சொல்லிவிட்டு அவன் அந்த பேச்சை மேலும் வளர்க்க விரும்பாமல் செல்வியின் கரத்தைப் பற்றியபடி அவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான்

Quote

Super ma 

You cannot copy content