You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 21

Quote

இயற்கை சீற்றம்

விடியற் காலையில் சூரியனின் வரவிற்கு முன்னரே தொடங்கப் போகும் குடமுழுக்கு விழாவைக் காண மக்கள் ஆதித்தபுரத்தில் அலைஅலையாய் குவிய ஆரம்பித்தனர்.

ஆதிபரமேஸ்வரி ஆலயம். தீபங்களின் அணிவகுப்புகளில் வானின் நட்சத்திரங்களோடு போட்டிப் போட்டு மின்னிக் கொண்டிருக்க, அன்று ஆதிபரமேஸ்வரியின் ரூபத்தைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும். அத்தனை பிரமிப்புக்குரிய ஆலங்காரத்தோடு அவள் காட்சியளித்தாள்.

அவளைத் தரிசித்த கையோடு அந்த ஆலயத்தின் ஒற்றைக் கோபுரத்திற்கு மேலே தலைதூக்கி பார்த்தோமேயானால் ஓர் ஐம்பொன் கலசம் விண்ணை பார்த்தபடி கம்பீரமாய் பிரகாசித்து கொண்டிருந்தது.

அங்கேயும் தமிழன் தன் அறிவியல் அறிவை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறான். ஆனால் நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கான விடையும் அத்தனை சுலபத்தில் கிடைத்து விடுமேயானால் நம் தேடல் முடிந்துவிடுமே!

அந்தத் தேடலைத்தான் நிறுத்தாமல் மேற்கொண்டிருந்தான் மனோகரன். இம்முறை அவன் வெள்ளையப்பனோடு  பிரகாரத்தைச் சுற்றி வந்துக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்த சிவசங்கரனின் மனதில் ஓர் சந்தேகத்துளி வீழ்ந்தது.

சிவசங்கரனும் செல்வியும் கோயிலுக்கு வந்திருக்க, அவர்களுடன் மனோரஞ்சிதத்தின் மகன் சரவணனும் உடன் வந்திருந்தான்.

ஆதிபரமேஸ்வரியை தரிசிக்க வந்த பக்தர்களுக்காக கோயிலைச் சுற்றிலும் கூத்து, கச்சேரி, மற்றும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அனைத்து நிகழ்சிகளுக்கும் மக்களின் ஆதரவு குவிந்த வண்ணம் இருந்தது.

செல்வியையும் சரவணனையும் சொற்பொழிவு அரங்கில் அமர வைத்துவிட்டு சிவசங்கரன் சீக்கிரம் வந்துவிடுவதாகச் சொல்லி புறப்பட்டுச் செல்ல, செல்வி ஆர்வமே இல்லாமல்தான் அங்கே அமர்ந்திருந்தாள். ஏனோ இந்த குடமுழுக்கு விழா சில காரணங்களால் தடைப்பட போவதை அவள் மனம் அறிவுறுத்தியது.

நடைபெறப் போகும் எதையும் தடுத்து நிறுத்தும் சக்தி அவளிடம் இல்லாத பட்சத்தில் இந்த எண்ணங்களும் அறிகுறிகளும் அவளைப் பாடாய் படுத்தின.

அந்தச் சமயம் சொற்பொழிவு அரங்கில் முகத்தில் முதிர்ச்சியும் பேச்சிலும் செயலிலும் இளமை கலந்த உற்சாகம் தொனிக்க ஒருவர் இராமயணத்தை பற்றி பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.

முதலில் ஆர்வமே இல்லாமல் அந்த சொற்பொழிவைக் கேட்க தொடங்கிய செல்வி, அவரின் பேச்சு வல்லமையால் வெகுவாக ஈர்க்கப்ட்டு சுற்றுபுறம் மறந்து அந்த பிரசங்கத்தில் மூழ்கிபோனாள்.

சிவசங்கரன் அவள் தோளை தொட்ட பிறகே அவள் இயல்பு நிலைக்கு திரும்பி… அவனை நிமிர்ந்து பார்க்க, "போலாமா செல்வி" என்றழைத்தான் அவன்.

அவள் மடி மீது உறங்கிய சரவணனை சிவசங்கரன் தோள் மீது போட்டுக் கொண்டு இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.

இருவரும் ஒரே திசையில் பயணித்தாலும் அவர்களின் சிந்தனைகள் வெவ்வேறு திசையில் பயணித்தது. செல்வி அந்தப் பிரசங்கத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டு வந்தாள்.

நம்முடைய எண்ணமே நம்முடைய நலனுக்கும் தீங்குக்கும் காரணம் என்பது எத்தனை பெரிய உண்மை என்று அவள் மனம் ஆமோதிக்க, மாணிக்கத்தின் மரணம்தான் அவள் கண்முன்னே நிழலாடியது.

அதுவும் அந்தக் குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு தீமையும் அவர்களுக்கு அவர்களே விதைத்துக் கொண்டது என்று எண்ணியவளுக்குத் தானும் அதே குடும்பத்தில்தானே வாழ்கிறோம் என்ற எண்ணம் உதித்து அவளை அச்சுறுத்தியது.

அதுவும் பரமுவின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட மரணம் எல்லாம் அவளைச் சுற்றியே நடைபெற்றது. தெரிந்தோ தெரியாமலோ எல்லா இறப்புகளுக்கும் தானும் காரணியாக இருந்திருக்கிறோமோ என்ற எண்ணமும் எழுந்தது.

ஏனெனில் அந்தக் குடும்பம் அழிந்துவிட வேண்டும் என்று பலமுறை மனதளவில் திண்ணமாய் அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள்.

திருமணத்திற்கு பிறகும் கூட அவள் எண்ணம் மாறுபடவில்லை. அந்த எண்ணம்தான் வரிசையாய் தொடரும் இன்னல்களுக்குக் காரணமோ என்றவள் யோசித்தபடி நடந்து வர,

அப்போது சிவசங்கரனோ பாதையைப் பார்த்து நடவாமல் வானத்தையே உற்றுப் பார்த்து கொண்டிருந்தான். நட்சத்திரங்கள் இல்லாத வானம் வரப் போகும் ஆபத்தை முன்னமே அவனுக்குத் தெரியப்படுத்தி கொண்டிருந்தது.

குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் சீராக முடிவடைந்துவிட்ட நிலையில் நாளை வரப்போகும் ஆபத்தைப் பற்றிய யூகம் அவனைக் கவலை கொள்ளச் செய்தது. அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று அவன் மனதளவில் எண்ணிக் கொள்ள, விதியின் தீர்மானத்தை யார் எண்ணினாலும் தடுத்துவிட முடியாது.

விடிவதற்கு முன்பே தொடங்கிய காற்றும் மழையும் அந்தக் குடமுழுக்கு விழாவை எதிர்பார்த்திருந்த எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது.

புயல், மழை என்பதைக் கடந்து அது இயற்கை சீற்றமாய் உருவெடுத்துக் கொண்டிருக்க சண்முகவேலனோ மனதளவில் உடைந்து போனார். ஊரே வெள்ளக்காடாய் போனது. கூரைகள் பெயர்ந்து விழுந்தன. வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தன.

தொடர்ச்சியாய் கொட்டி தீர்த்த மழையால் ஏற்பட்ட சேதங்களோ கணக்கிலடங்கா. வயல்வெளிகள் எல்லாம் நாசமானது. மரங்கள் பல வேரோடுப் பெயர்ந்து விழுந்தன.

சிவசங்கரனின் வீட்டிலும் பாதிப்புகள் ஏற்பட்டது. கால்நடைகள் பெரிதும் அவதியுற்றன. ஆனால் ஈஸ்வரனை மட்டும் செல்வி கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தாள்.

உண்மையிலேயே ஆதித்தியவர்மன் ஆட்சியில் ஏற்பட்ட புயல் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று மக்கள் சிந்திக்குமளவுக்காய் அந்தப் புயலின் தாக்கம் அந்த ஊரையே படாதபாடுபடுத்தியிருந்தது.

ஆனால் அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஆதித்தியவர்மன் ஆட்சியின் போது ஏற்பட்ட புயலில் பரமேசுவரி கோயில் கோபுரம் சிதைந்து போனதாகவும் அதனை அந்த மன்னன் சீரமைத்து தந்தாக இன்றளவிலும் ஒரு செய்தி வலம் வந்துக் கொண்டிருக்க,

இம்முறை ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் ஆதிபரமேஸ்வரியையும் ஆதிபரமேஸ்வரி ஆலயத்தையும்  அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்பதுதான் வியப்பின் உச்சம்.

அந்தக் கோயிலின் கட்டுமானம் அத்தனை பலம் வாய்ந்ததாய் இருந்தது சிறப்புக்குரிய விஷயம். ஆனால் இந்த மோசமான சம்பவத்தினால் குடமுழுக்கு திருவிழா நடைபெறாமல் நின்று போனது. அதை மீண்டும் எடுத்து நடத்தும் தைரியமும் தெம்பும் சண்முகவேலனுக்கு இப்போதைக்கு இல்லை.

அந்த ஏமாற்றம் அவரைப் பெரிதும் பாதிப்படையச் செய்தது. உடல் நலம் குன்றி போக இனி பொறுப்புகளை மொத்தமாய் வேல்முருகன் இருக்க சிவசங்கரனிடம் கொடுத்தார் சண்முகவேலன்.

சிவசங்கரன் பிடிவாதமாய் மறுப்பு தெரிவிக்க ஊர்மக்கள் அவனையே தலைவனாக வேண்டும் என முடிவும் செய்துவிட்டனர். வேல்முருகனுக்கு அவமானமும் ஏமாற்றமும் அபரிமிதமாய் பெருகியது.

மோசமான இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பினால் சீரமைக்கும் பணி வேறு குவிந்து கிடக்க, சண்முகவேலனின் உடல்நிலை  காரணமாக பொறுப்புகள் எல்லாவற்றையும் சிவசங்கரனே தன்னந்தனியாக செய்ய வேண்டி இருந்தது.

வேல்முருகன் எதையும் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில் வீட்டில் வேலை புரியும் அன்னம்மாவின் மகன் வெள்ளையப்பனை சிவசங்கரன் அன்று கடுமையாகக் கண்டித்துக் கொண்டிருந்தான்.

"வெளியாட்கள் யாரையும் தேவையில்லாம ஊருக்குள் கேட்காம அழைச்சிட்டு வராதன்னு சொல்லிருக்கேன் இல்லடா" என்றவன் மிரட்டலாய் கேட்க, அந்த வார்த்தைகள் செல்வியின் காதுகளில் விழுந்தன.

அவனை சிவசங்கரன் வெகுநேரம் நிற்க வைத்துக் கண்டித்து அனுப்பிய பிறகு செல்வியின் அருகில் வந்தவன்,

"வேலை இருக்கு... வர நேரமாகும்... காத்திட்டிருக்க வேண்டாம்... சாப்பிட்டு படுத்துக்கோ" என்று சொல்ல,

"அதெல்லாம் முடியாது... நான் காத்திட்டிருப்பேன்" என்றாள் பிடிவாதமாக!

"காத்திட்டிரு... யார் வேண்டாம்னு சொன்னா... அப்புறம் உனக்குதான் சிரமம்" என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட  அவளுக்கு தான் கணவனிடம் எதையோ சொல்ல மறந்துவிட்டோமோ என்று எண்ணம் தோன்றி மறைந்தது. அந்த எண்ணத்தின் அர்த்தம் அவளுக்கு அப்போது புரியவில்லை.

அவன் சொல்லிவிட்டு சென்றது போலவே அன்று இரவு வெகு நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. நடுநிசியும் கடந்து போக செல்விக்கு பயவுணர்வு எச்சரிக்கை உணர்வாக மாறியது. இவை எல்லாம் நம்முடைய கற்பனை என்று எண்ணியபடி அவள் தன் அறையில் இருந்து வாசலை நோக்கி வந்தாள்.

அந்த சமயத்தில் சண்முகவேலன் தன் அறையில் மூச்சு விடமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறியவள், உடனடியாய் அவரை தண்ணீர் அருந்த செய்து ஆசுவாசப்படுத்தி நெஞ்சைத் தடவிவிட்டாள்.

சண்முகவேலன் ஒருவாறு தெளிவுப் பெற்று, செல்வியைப் பார்த்து குற்றவுணர்வோடு கண்ணீர் வடித்து அவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டார்.

"என்னாச்சு மாமா?" என்றவள் விசாரிக்க அவர் உடனே,

"உன்னை பார்த்ததும் பரமு ஞாபகம் வந்துடுச்சும்மா" என்றார்.

செல்வி நினைவுபடுத்திக் கொள்ள விரும்பாத விஷயங்கள் அவளுக்குள் அந்த நொடி தோன்றி மறைந்தன. சட்டென்று அவள் கரத்தை உருவிக் கொண்டவள் முறைப்பான பார்வையோடு,

"இப்போ அழுது என்னாகப் போகுது... உயிருக்கு துடிச்சிட்டிருந்த புள்ளய கழுத்தை மிதிச்சி கொன்ன போது யோசிச்சிருக்கணும்" என்றாள் வெகு அழுத்தமாக! அந்த சொற்களைக் கேட்ட சண்முகவேலன் அதிர்ந்து போனார்.

ஒரு நொடி அவருக்கு எதிரே செல்வியின் ரூபத்தில் நிற்பது பரமுவாக காட்சியளிக்க, அவர் கண்களைத் தேய்த்துக் கொண்டு அவளையே  உற்றுப் பார்த்தார்.

செல்வி மேலும், "நீங்க அன்னைக்கு உங்க மகளுக்கு செஞ்ச பாவம்தான் இன்னைக்கு இந்த குடும்பத்தை சுத்தி சுத்தி அடிக்குது?" என்று சொல்ல அவளின் அந்த வார்த்தைகளால் அவர் நிலைகுலைந்து போனார்.

அப்போது பெரிய மின்னலுடன் கூடிய இடிமுழக்க சத்தம் கேட்க செல்வி பதறியபடி சண்முகவேலனை கவனிக்காமல் வாசல் கதவருகே ஓடி வந்தாள்.

தன் கணவன் நல்லபடியாக வீடு திரும்பிவிட வேண்டுமே என்று அவள் கடவுள்களை எல்லாம் மனதிற்குள்ளேயே வேண்டி கொள்ள, அந்த காத்திருப்பும் வேண்டுதலும் இன்று வரையில் அவளுக்கு நிறைவேறாமலே போனதுதான் பெரும் துரதிஷ்டம்.

ஒருவிதமான பயங்கர வெளிச்சத்துடன் கூடிய புகைமூட்டம் ஆதித்தபுரத்தைச் சூழ்ந்து கொள்ள, அப்பொழுது அவள் கேட்டச் செய்தி அவளின் சப்தநாடிகளையும் ஒடுங்க செய்தது.

ஆட்களே நுழையாத அந்த அமானுஷ்ய புளியந்தோப்பில் தீடீரென பரவிய தீ அந்த வழியே வந்த சிவசங்கரனையும் பலி வாங்கியதாம். கணவனின் உடலை  பார்க்க கூட முடியாத துரதிஷ்டசாலியாய் செல்வி அதிர்ச்சியில் நினைவிழந்து போனாள்.

காத்திருக்க வேண்டாம் என்று அவன் சொல்லிவிட்டு போனதன் அர்த்தம் இப்படியா இருக்க வேண்டும்.

செல்லம்மா எழுதி கொடுத்த பக்கங்கள் யாவும் அப்போது ஆதியின் கண்ணீரால் நனைந்து போனது. தைரியத்தின் மறுவுருவமாய் இருந்த ஆதி அந்த வரிகளைப் படித்த மாத்திரத்தில் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அப்பா இல்லை என்ற ஏக்கம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அதே நேரம் அவள் மனதைப் பாதிக்கும் விஷயமாக அது என்றுமே இருந்ததில்லை. ஆனால் இன்று முதன்முதலாய் தன் அப்பாவின் அன்பை பெற முடியாத துர்பாக்கியவதியா தான் என்று எண்ணி உள்ளூர நொறுங்கி போனாள்.

இந்தக் கதையின் மூலமாக தன் அப்பாவுடன் வாழ்ந்த அந்த சில கணங்கள் அவளுக்குள் பல யுகங்கள் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவரின் இறப்பு தனக்கு எத்தனை பெரிய பேரிழப்பு என்பதை அவள் எண்ணி எண்ணி விம்ம, அவள் வேதனை துளியளவும் வடிந்தபாடில்லை.

அவள் விசும்பலோடு, 'எங்க இருக்கீங்க ப்பா... ஏன் ப்பா என்னை விட்டுட்டு போனீங்க... அப்படி என்ன நான் பாவம் செஞ்சேன்... இனிமே நான் உங்களை பார்க்கவே முடியாதா.. அப்பான்னு கூப்பிடவே முடியாதா... எதுக்கு நான் இந்தக் கதையைப் படிச்சேன்? உங்களைப் பத்தி எதுக்கு நான் தெரிஞ்சிக்கிட்டேன்? ஏன் இப்படி எல்லாம் நடந்துச்சு?" என்றவள் ஆற்றாமையால் அந்தப் பக்கங்களை எல்லாம் தூக்கிவீசினாள்.

ஆதி என்னதான் அழுது அரற்றினாலும் மாண்டவர் மீண்டு வருவதில்லையே. அப்பா என்ற உறவு அவள் வாழ்வில் எப்பொழுதுமே கானல்நீர்தான்.

அதேநேரம் சிவசங்கரனின் மரணம் அவனின் உடலுக்கு மட்டுமே. அவன், அழியாத நினைவுகளாய் எல்லோர் மனதிலும் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் என்பதில் ஐயமில்லை.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content