You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 23

Quote

ஆதித்திபுரம் எல்லை

ஆதித்தபுரம் ஆதிபரமேஸ்வரி கோயில் பிராகரத்திற்குள் அந்த ஊரின் பெருந்தலைகள் எல்லாம் வட்டமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவர்களுள் நடுநாயகமாய் அமர்ந்திருந்தது வேல்முருகன்தான்.

அவர்களுக்கு இடையில் அப்போது கோயில் திருப்பணிக் குறித்த விவாதம் நிகழ்ந்துக் கொண்டிருக்க, வேல்முருகன் தன் தொண்டையைக் கணைத்தபடி,

"பேசாம இந்த ஆண்டு ஆதிபரமேஸ்வரி கோயிலுக்கு குடமுழுக்கு திருவிழா நடத்திடலாம்... எல்லோரும் என்ன சொல்றீங்க?" என்றுச் சொல்லி அங்கிருந்தவர்களின்  கருத்தைக் கேட்டார். அந்த நொடி அனைவரும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

முந்தைய முறை ஏற்பாடான குடமுழுக்கு விழா இயற்க்கை சீற்றத்தால் நடைபெறாமல் போனதும் அதற்கு பிறகு நடந்த அசாம்பாவிதங்களும் அவர்கள் கண்முன்னே நிழலாடியது.

ஆனால் வேல்முருகன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவர் தீர்க்கமாக,

"கோயில் திருப்பணி வேலையெல்லாம் கிட்டதட்ட முடிஞ்சிடுச்சு... பேசாம இந்த மாசமே நல்ல நாளா பாத்து குடமுழுக்கு விழா நடத்திடலாம்" என்றுச் சொல்ல அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு முதியவர் ,

"என்ன தம்பி சொல்றீங்க... போன தடவை நடந்ததை மறந்துட்டீங்களா?" என்றுக் கேட்டார்.

"ஏன் தெரியமா? எங்க அப்பா நடத்தனும்னு நினைச்சு... அப்புறம் நடந்த சில அசம்பாவிதங்களால நடத்த முடியாமலே போச்சு... அதை நான் என் காலத்தில நடத்தணும்னு நினைக்கிறேன்" என்று வேல்முருகன் கம்பீரமாக உரைக்க,

"நல்ல சேதிதானே... நாம நடத்துவோம்.. போன தடவை என்ன தெய்வ குத்தமாச்சோ... அப்படி நடந்துப் போச்சு... ஆனா இந்தத் தடவை அந்த மாதிரி எதுவும் நடக்காம பாத்துக்கலாம்" என்று இன்னொருவர் கூட்டத்தில் சொல்ல எல்லோரும் அதற்கு ஆமோதித்தனர்.

வேல்முருகனின் முகம் மலர்ந்தது. அவர் மனதில் என்ன எண்ணம் இருந்ததோ அதை நாம் அறியோம். அப்போது அந்தக் கோயில் குருக்கள் முன்னாடி வந்து,

"அந்த ஆதிபரமேஸ்வரியின் அருள் இருந்தால் நிச்சயம் இந்த தடவை குடமுழுக்கு விழாவை பிரசித்தியாய் நடத்திடலாம்" என்று தன் சம்மதத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினார்.

"சிவசங்கரன் இருந்திருந்தால் இதை முன்னாடியே நடத்தியிருப்பான்" என்றுக் கூட்டத்திலிருந்த தலைமைப் பொறுப்பாளர் ஒருவர் சொல்ல, அந்த நொடி எல்லோரும் சிவசங்கரனைப் பற்றிய நினைவுகளை அலச ஆரம்பித்தனர்.

ஆண்டுகள் கடந்தாலும் அவனின் மீதான நன்மதிப்பும் நினைவுகளும் பசுமையாய் எல்லோரிடத்திலும் இருந்தது. அது வேல்முருகனுக்கு ஒருவிதமான எரிச்சலைத் தோற்றுவித்தது.

"சந்தோஷமான விஷயத்தைப் பத்தி பேசிட்டிருக்கும் போது ஏன் தம்பியைப் பத்தி ஞாபகப்படுத்தி மனசு கஷ்டப்படுத்தறீங்க... அவன் அன்னைக்கு அந்த செல்வி தரித்திரத்தை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா.... எல்லாம் அவளைக் கட்டின தரித்திரம்... அல்பாயுசுல போய் சேர்ந்துட்டான்" என்று வேல்முருகன் சொல்லி தன் கண்ணீரைத் துடைக்க, மற்றவர்களும்கூட அவர் வார்த்தையை ஆமோதித்தனர்.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் சிவசங்கரன் எல்லோர் மனதிலும் மார்கண்டேயனாய் வாழ்ந்திருக்க, செல்வியோ கசந்து போன ஞாபகமாக எல்லோர் மனதிலும் பதிய வைக்கபட்டிருந்தாள்.

அவர்கள் எல்லோரின் பேச்சு வார்த்தைகள் ஒருவாறு முடிவடைந்த நிலையில் வேல்முருகனும் மற்ற எல்லோரும் கோயில்விட்டு வெளியேறிய சமயம், அங்கே மரத்தின் அடியில் அமர்ந்திருந்த அன்னம்மா அந்த கூட்டத்தினர் மேல் மண்ணை வாரி தூற்றினார்.

எல்லோரும் அதிர்ந்துவிட, "ஏ கிறுக்கு கிழவி" என்று அந்தக் கூட்டத்திலிருந்த இளைஞன் அன்னம்மாவிடம் முறைத்துக் கொண்டு போனான்.

வேல்முருகன் அவன் கரத்தைப் பற்றி "விடு மருமகனே!" என்று சொல்லி அவனை ஆசுவாசப்படுத்தினார்.

அவன் வேறு யாரும் இல்லை. மனோரஞ்சிதத்தின் முதல் மகன் மணிமாறன். வேல்முருகன் அவனை மருமகன் என்று அழைத்ததின் காரணம் தங்கை மகன் என்பதால் மட்டும் அல்ல. அவன் வேல்முருகனின் மகள் வசந்தாவை மணந்துக் கொண்டிருந்தான்.

*****

பாரதி பத்திரிக்கை அலுவலகம்.

ஆதி உள்நுழைந்து நேராக அமுதாவின் மேஜை முன் வந்து நின்று அடுக்கான தாள்களை நீட்டி,

"இது ஆதியே அந்தமாய் கதையோட தொடர்ச்சி அமுது... இதை வாரவார அத்தியாயமாய் பிரித்து பிரசுரம் செஞ்சிடு" என்றாள்.

"கதை முடிஞ்சிடுச்சா?" அமுதா ஆவல் பொங்கக் கேட்க,

"இல்ல" என்றாள் ஆதி.

"அப்போ முடிவு"

"இந்த கதையோட அந்தம்... இந்த ஆதிகிட்ட இருக்கு... அது பிரசுரம் பண்ண வேண்டிய நேரத்தில உன் கைக்கு வந்துரும்" என்றாள்.

அமுதா கொஞ்சம் குழம்பியபடி விழிக்க, ஆதி அவற்றோடு ஒரு உரை அணிவித்த கடிதத்தை அவளிடம் கொடுத்தாள்.

"என்ன ஆதி இது?"

"என்ன ஏதுன்னு கேட்காத அமுது? நாளைக்கு காலையில கருணா அங்கிள்கிட்ட மறக்காம இந்த லெட்டரைக் கொடுத்திடு" என்று ஆதி சொல்ல அமுதா மேலும் குழப்பமடைந்தாள்.

ஆதி அதன் பிறகு அவள் அறைக்குள் நுழைந்து அவசரமாய் தேங்கி கிடந்த வேலைகளை எல்லாம் முடித்தவள், பின்னர் ஜேம்ஸை அழைத்து சில பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்தாள்.

அவனும் அவள் சொல்வதை எல்லாம் உள்வாங்கி கொண்டானே ஒழிய ஏன் எதற்கு என்ற காரணம் புரியாமல் உள்ளூர அவனுமே குழம்பினான்.

நாளை விடியும் போது அவள் செயலின் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்துவிடும்.

அன்று இரவு வெகுநேரமாகியும் ஆதி அலுவலகத்தை விட்டுப் புறப்படாமல், கைப்பேசியின் மூலம் செல்லம்மாவை அழைத்து வேலை இருப்பதாக பொய்யுரைத்தாள்.

அதே நேரம் ஆதி, சரவணனை அலுவலக வாசலுக்கே வரச் செய்து, அவன் காரில் பயணமானாள். சரவணன் காரை ஓட்டியபடியே ஆதியை எத்தனை முறை திரும்பி பார்த்தானோ தெரியாது. ஆனால் ஆதி ஒருமுறை கூட அவன் புறம் பார்க்கவில்லை. அவள் வேறெதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய் அவன் புறம் திரும்பியவள்,

"ஆமா சரவணன்? முதல் தடவை என்னைப் பார்த்ததுமே எப்படி அடையாளம் கண்டுபிடிச்சீங்க?" என்று கேள்வி எழுப்ப, காரை இயக்கியபடி அவளைப் பார்த்தவன்,

"நீதான் அப்படியே அத்தை சாயலை உரிச்சி வைச்சிருக்கியே" என்றான்.

"உங்களுக்கு சின்ன வயசில அம்மாவை பார்த்த ஞாபகம் இருக்கா?"

"அது சரியா நினைவில்ல... ஆனா அத்தை மாமாவோட கல்யாண போட்டோவை அடிக்கடி எங்கம்மா கையில வைச்சிட்டு அழறதை பாத்திருக்கேன்... அதுல பார்த்த அத்தையோட முகம் என் மனசில நல்லா பதிஞ்சிருக்கு... என்ன? போட்டோல அத்தை... புடவை, மூக்குத்தி, பொட்டு எல்லாம் வைச்சிட்டு இலட்சணமா இருப்பாங்க... நீ அதெல்லாம் இல்லாம இருக்க" என்று சரவணன் சொல்ல ஆதி அந்த படத்தினை தன் மனதில் கற்பனை செய்துக் கொண்டாள்.

ஆனால் அவளின் அப்பாவின் முகம் அவளின் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளூர பொங்கியது.

"எங்க அப்பா போட்டோல எப்படி இருப்பாரு சரவணன்" என்று கேட்க,

அவளை ஒரு நொடி ஆச்சர்யமாய் பார்த்தவன், அவள் கேள்விக்கு பதிலுரைத்தான்.

"மாமா போட்டோல ரொம்ப கம்பீரமா இருப்பாரு... கட்டையா மீசை... அடர்த்தியான புருவம்... குங்குமப் பொட்டு... மாநிறம்... சிரிச்ச முகம்" என்றவன் சொல்லிப் பெருமூச்செறிந்து இறுதியாய்,

"அத்தையைக் கட்டிக்காம இருந்தா மாமா இப்படி அல்பாயுசில போயிருக்க மாட்டாரு" என்று சாலையை பார்த்தபடி அவன் சொல்ல அந்த வார்த்தை ஆதியின் இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்தது.

"சரவணன்" என்றவள் கோபமாக கத்த அவள் பார்வையில் தெரிந்த உக்கிரத்தைப் பார்த்த சரவணன் மிரட்சியுற்று,

"ஏன் கோபப்படற... இப்படியெல்லாம் நான் ஒன்னும் சொல்லல... ஊருக்குள்ள பேசிக்கிறாங்க" என்று சமாளித்தான்.

அவள் அவன் சொன்னதைக் கேட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு மௌனமாய் தன் கோபத்தையும் உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

அந்த நொடி சரவணன் அவளிடம், "ஆமா நீ என்ன... சும்மா தலையிலடிச்ச மாதிரி... பேரிட்டு சரவணன் சரவணன்னு கூப்பிடற... நான் உன்னைவிட பெரியவன்" என்று அவன் கோபம் கலந்த அதிகார தொனியில் உரைக்க,

ஆதி திகைத்தபடி, "சாரி... நான் அதை யோசிக்கல... ஆனா பேரிடாம வேறெப்படி கூப்பிடறது" என்று சந்தேகமாய் கேட்டாள்.

"நான் உனக்கு மாமன்தானே... அந்த முறையிட்டுக் கூப்பிடு" என்று சரவணன் சொல்ல,

"அகையின் சாரி... எனக்கு அப்படி கூப்பிட வராது... நான் யாரையும் அப்படி கூப்பிட்டதுமில்ல... டோன்ட் மிஸ்டேக் மீ" என்று பட்டென அவள் மறுப்பு தெரிவிக்க சரவணனுக்கு ஏமாற்றமாய் இருந்தது.

அதேநேரம் ஆதியின் பேச்சும் செயலும் அவன் பார்த்து பழகிய பெண்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்ததைப் பற்றி யோசித்தவனுக்கு அவளுடனான இந்தப் பயணம் ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்ததென்றே சொல்ல வேண்டும்.

ஆனால் இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே. பிறகு அவள் இந்த உலகிலேயே இருக்கப்போவதில்லை.

முதன்முறையாய் தன் மாமன் வேல்முருகன் மீது கோபம் ஏற்பட்டது அவனுக்கு. ஆதியைக் கொல்வதற்கான திட்டமெல்லாம் தீட்டியாகிவிட்டது. அதனைச் சரியாய் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மட்டுமே அவனிடம் இருந்தது.

அந்த நேரம் ஆதி லேசாகக் கண்ணயர்ந்து உறங்கிவிட்டிருக்க, அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு இன்னும் சில நொடிகளில் அவளுக்கு ஏற்படப் போகும் நிலையை எண்ணி பரிதாபம் உண்டானது.

இவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது ஆதியின் அலைபேசி ஒலித்து அவள் உறக்கத்தைக் கலைக்க, ஃபோனை எடுத்துப் பார்த்தவள் அழைப்பைத் துண்டித்து அதனை அணைத்து வைத்தாள்.

தன் அம்மாவிடம் சொல்லாமல் வந்தது தவறெனினும் ஆதி அதைப்பற்றி கவலைக் கொள்ளவில்லை. நிச்சயம் ஆதித்தபுரம் செல்வதற்கான அனுமதி அவளுக்குக் கிடைக்காது.

அதுமட்டுமின்றி செல்லம்மா அவளிடம் ஏதேனும் காரணம் சொல்லி போகவிடாமல் தடுத்துவிட முயற்சித்தால்,  அவள் அம்மாவின் பேச்சைத் தட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்று தோன்றவே, ஆதி தெளிவாய் ஆலோசித்து தனித்து இந்த முடிவை எடுத்தாள்.

நீண்ட நேர பயணத்திற்கு பிறகு ஆதித்தபுரம் எல்லையை கார் வேகமாய் கடந்தது. ஆதி தன் சொந்த ஊரைப் பார்த்த திருப்தியில் பெருமூச்சுவிட சரவணனுக்கு படபடப்பு அதிகமானது. நிகழப்போகும் கோரத்தை தன் கண்களால் பார்க்க நேரிடுமே என்று அவன் நெஞ்சம் வேகமாய் துடிக்க கார் சடாரென நிறுத்தப்பட்டது.

ஆதி அவன் புறம் திரும்பி, "வந்துட்டோமா?" என்று ஆவல் பொங்க கேட்டாள்.

"இல்ல இன்னும் கொஞ்ச தூரம் உள்ளே போகணும் " என்றான் சரவணன்.

"ஏன் அப்போ வண்டிய நிறுத்திட்டீங்க?"

"தெரியல... அதுவா நின்னுடுச்சு... என்னன்னு பார்க்கணும்" என்க,

"என்னைக் கூட்டிட்டு உள்ளே போக உங்களுக்கு மனசு வரலியா இல்ல உங்க காருக்கு மனசு வரலியா?!" என்று ஆதி நம்பிக்கையற்ற பார்வையோடு புன்னகை செய்தாள்.

"அய்யோ... நான் எதுவுமே பண்ணல... அதுவா நின்னுடுச்சு... இதோ பார்த்திடுறேன்" என்று சரவணன் பதறியபடி இறங்க ஆதிக்கு அவன் மீது துளிகூட நம்பிக்கை ஏற்படவில்லை.

அதேநேரம் அவளின் தைரியமும் குன்றிவிடவில்லை. எதற்கும் துணிந்தே அவள் அங்கே புறப்பட்டு வந்திருக்கும் நிலையில், நடப்பது எதுவாயினும் சமாளிக்க தயாராகவே இருந்தாள்.

நேரம் கடந்து செல்லப் பொறுமையிழந்தவளாய் ஆதி காரிலிருந்து இறங்கி நிற்க, சரவணன் சில நிமிடங்களில் தன் வேலையை முடித்து காரின் முன்பக்க மூடியை மூடிவிட்டு,

"ஸ்டார்ட் பண்ணிப் பார்க்கிறேன்" என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்தான்.

விடியலை நெருங்கிக் கொண்டிருந்த அந்த இரவில் ஆதி வெளியே நின்று தன் கைக்கடிகாரத்தை உற்றுப் பார்த்தாள். மணி நான்கை எட்டியிருந்தது.

சரவணன் காரைத் திரும்பத் திரும்ப மும்முறை ஸ்டார்ட் செய்து நிறுத்தினான். அந்த சில நொடிகள் காரின் முன்விளக்குகள் ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்தது.

அது சரவணன் யாருக்கோ தெரிவிக்கும் சிக்னலாக தோன்றியது. ஆதி எதிர்பார்த்ததைவிட வரப்போகும் ஆபத்து கொஞ்சம் பயங்கரமானதாய் இருக்கப் போகிறது.

சரவணன் கடைசியாக வண்டியைத் தொடர்ச்சியாய் ஸ்டார்ட் செய்ய, ஆதி நிமிர்ந்து பார்த்தபோது உண்மையிலேயே அவள் கண்கள் விரிய மிரண்டு போனாள்.

அந்த நொடி அவள் அப்படியே சிலையாகவே உறைந்துபோய் நின்றாள்!!!

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content