You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 24

Quote

கத்தியின்றி ரத்தமின்றி

சரவணன் அங்கே அரங்கேறப் போகும் அந்தக் கோர காட்சியைப் பார்க்க சகியாமல் ஸ்டியரிங்கில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். ஆதி இதுவரையிலும் அவள் வாழ்வில் பார்த்திராத அந்தப் பயங்கர காட்சியைப் பார்த்தாள். அவளின் இமைகள் இரண்டும் அப்படியே அசையாமல் நின்றுவிட்டன.

ஆதி சிலையாய் சமைந்திருக்க, அவளின் நேரெதிரே  மிரள வைக்கும் வேகத்தோடு அதிகம்பீரம் பொருந்திய காளை அவளை நோக்கிப் பாய்ந்து வந்துக் கொண்டிருந்தது.

வெறும் வர்ணனைக்காகச் சொல்லவில்லை... அது சீறிப் பாய்ந்து வந்த காட்சியில் சிறுத்தைக்கான வேகமும், சிங்கத்தின் வெறியும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

அந்த முரட்டுத்தனமான காளை தன் கூர்மையான கொம்பினால் அவளைக் குத்தி கிழிக்கும் நோக்கில் வர தன் கையை மீறிப் போய்விட்ட விஷயத்தில் ஆதி தன் கண்களை மூடிக்கொண்டு,

"இப்படி நடக்கக் கூடாது... ஐ ஹெவ் டூ லிவ்" என்ற திடமாய் எண்ணிக் கொண்டவளால் அப்போதைக்கு வேறென்ன செய்ய முடியும்.

எந்தவொரு சக்தியாவது அவளுக்குக் கைக்கொடுத்தால் மட்டுமே உண்டு. இல்லையெனில் ஏதாவது மாயமந்திரம் நிகழ வேண்டும். ஆனால் அதெல்லாம் சாத்தியமா?

அந்த நொடிப் பொழுதில் தூக்கி வீசப்பட்டு இரத்தம் சிதறி துடித்துக் கொண்டிருக்க வேண்டியவள். ஆனால் என்ன மாயமோ? இன்னும் அவள் நின்ற இடத்திலிருந்து அசைவில்லாமல் அப்படியே நின்றிருக்க

அவளின் இதயம் அச்சத்தில் மத்தளமாய் கொட்டிக் கொண்டிருந்தது. விழிகள் மூடியிருந்தவள் தனக்கு இன்னும் எதுவும் நிகழவில்லையா என்று குழப்பத்தோடு மெல்ல அவள் தன் இமைகளைத் திறந்து பார்க்க, வியப்புற்றாள் . அவளுக்குச் சொல்ல தெரியவில்லை. ஆனால் அவள் உயிர் பிழைத்துக் கொண்டுவிட்டாள்.

மலைக்க வைக்கும் கம்பீரத்தோடு அவள் உயரத்திற்கு நிகரான அந்த காளையன் அமைதியின் சொரூபமாய் மண்டியிட்டு அவள் அருகில் அமர்ந்திருந்தான். தான் காண்பதென்ன கனவா? ஆச்சர்யமா? இல்லை அதிசயமா?  இதெப்படி நடந்தது?

சற்றுமுன்பு அத்தனை வேகத்தோடும் வெறியோடும் தன்னைத் தாக்க வந்தவனா இப்போது கனிவோடு தன் காலுக்கருகில் அமர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள், "தேங் காட்" என்று கடவுள் மீது நம்பிக்கை இல்லாத போதும் ஆபத்து விலகிய சந்தோஷத்தில் அந்தக் கண்கள் காணாத கடவுளுக்கு நன்றியுரைத்தாள்.

அதேசமயம் சரவணனும் அச்சத்தோடு நிமிர்ந்து பார்த்திருந்தான்.

அவளின் உயிரற்ற உடலைப் பார்க்க போகிறோமோ என்ற அவனின் கணிப்பு முற்றிலும் பொய்யாய் போக ஆதி பெருமூச்சுவிட்டுக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தியபடி நின்றிருந்தாள்.

காளையனோ அவள் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.

'இதென்னடா அதிசயம்... இவ ஏதாவது மாயமந்திரம் தெரிஞ்சி வைச்சிருக்காளா என்ன? அவன் சீறி வந்த வேகத்துக்கு இவ சின்னா பின்னமா போயிருப்பான்னு பார்த்தா... முழுசா நிற்கிறா’ என்றெண்ணிக் கொண்டு காரிலிருந்து இறங்கியவன் பதட்டம் நிரம்பிய குரலில்

"உனக்கு ஒன்னும் ஆகலியே ஆதி?" என்று வினவ அவள் அவனைப் புருவத்தைச் சுருக்கி சந்தேகத்தோடும் கோபத்தோடும் பார்த்தாள்.

அவனோ படபடப்பாகி அவளை எப்படி சமாளிப்பதென தத்தளிக்க,

"எனக்கு ஒன்னும் ஆகலன்னு ரொம்ப வருத்தமா இருக்கோ?" என்று கேட்டு எள்ளி நகைத்தாள். அவன் பதறியபடி,

"என்ன பேசற ஆதி நீ... இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை… ஈஸ்வரன் நம்ம கோயில் காளை... சரியா கட்டாம விட்டுட்டானுங்க போல... அதான் திடீரென வெளிச்சத்தைப் பாத்து மிரண்டுடுச்சு... ஆனா அவன் வந்த வேகத்துக்கு நீ உயிர் பிழைக்கவே மாட்டியோன்னு பயந்துட்டேன்" என்றான்.

சரவணன் கோர்வையாய் சொன்ன பொய் பொருத்தமாகவே இருந்தது. ஆனால் அதனை ஆதி நம்பவில்லை. அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவள் சட்டென்று அவனிடம்,

"என்ன பேர் சொன்னீங்க.. ஈஸ்வரனா!" என்று கேட்டாள்.

"ஆமா ஈஸ்வரன்... நம்மூர் ஜல்லிக்கட்டு காளை... இவனோட திமிலைக்கூட எவனும் தொட முடியாது... ஆனா அப்படிப்பட்டவன்... இப்படி உன்னைப் பார்த்து அடங்கி ஒடுங்கி உட்கார்ந்திருக்கான்னா?" என்று அவன் நம்பமுடியாமல் வியப்படைய,

ஆதி அவன் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஈஸ்வரன் அருகில் அமர்ந்தவாக்கில் அவன் திமிலை தடவிக் கொடுத்து, "நீ ஈஸ்வரனா?!" என்று நெகிழ்ச்சியாய் கேட்க,

ஈஸ்வரன் இப்படியும் அப்படியுமாய் தன் தலையை அசைக்க அவன் கழுத்தில் அணிந்திருந்த மணி அந்த இடத்தின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அழகாய் ரீங்காரமிட்டது. அவள் விழியில் நீர் சூழ அவன் நெற்றியைத் தடவியவள்,

"இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் கூட உனக்கு அம்மாவை நினைவு  இருக்கா ஈஸ்வரா... நான் அவங்க  முகச்சாயலிலேயே இருக்கிறதாலதான் நீ என்னை ஒன்னும் செய்யாம விட்டுட்டியா?" என்றவள் கேட்டுக் கொண்டிருக்க ஈஸ்வரனின் விழியிலும் அப்போது நீர் கசிந்திருந்தது.

பிரிவின் வேதனையை சொல்லியதோ அவன் கண்ணீர்.

"மனுஷங்களுக்கு ஆறறிவு இருந்தும் சொந்த பந்தங்கள்ன்னு கூட பார்க்காம நன்றி கெட்டத்தனமா நடந்துக்கிறாங்க... ஆனா ஐந்தறிவு ஜீவன் நீ... என்னைக்கோ எங்க அம்மா உன்னைப் பாத்துக்கிட்டதை மறக்காம அந்த அன்போடவும், நன்றியோடும் இருக்கியே" என்று ஆதி மெய்சிலிர்த்தபடி சொல்ல, ஈஸ்வரனும் அந்த நொடி தன் உடலை சிலிர்த்துக் கொண்டான்.

ஈஸ்வரனுக்கு தன் மனதில் உள்ளதை ஆதியிடம் புரியவைக்கும் பாஷைத் தெரியவில்லை என்றால் என்ன? தன் இமைகளை மூடி அன்போடு செய்த சமிக்ஞை போதாதா? அவனின் ஆழமான அன்பை உணர்த்த...

அவரவர் செய்யும் பாவ காரியங்கள் அவர்களின் சந்ததிகளைத் தொடருமென்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் நாம் செய்யும் புண்ணிய காரியங்கள்கூட நம் சந்ததிகளைக் காக்கும் என்பதற்கான அழுத்தமான உதாரணமாய் இருந்தது அந்த நிகழ்வு.

ஆதி மேலும் ஈஸ்வரனிடம், "இங்கே எனக்கு கிடைக்க போற உறவெல்லாம் உண்மையானதா இருக்குமான்னு எனக்கு தெரியல... ஆனா நீ எனக்கு கிடைச்சிருக்க... ஒரு சகோதரனா... இனிமே நான் ரொம்ப தைரியமா இருப்பேன்... நான் நினைச்சது நடக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு வந்துருச்சு... எந்தப் பிரச்சனை வந்தாலும் நீ என் கூட இருக்கணும்... சரியா?" என்றவள் அபிநயமாய் கேட்க,

  ஈஸ்வரன் தன் சம்மதத்தைத் தெரிவிக்கும் விதமாய் தலையசைக்க அவன் கழுத்தில் கட்டியிருந்த மணி மீண்டும் ரீங்காரமிட்டது. இவற்றை எல்லாம் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்த சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்ன நடக்குது ஆதி?" என்று சரவணன் கேட்க ஆதி சிரித்தபடி எழுந்து நின்று,

"நாங்க பேசிட்டிருந்தோம்" என்றாள்.

"பேசிக்கிட்டீங்களா?" என்று குழப்பத்தோடு சரவணன் கேள்வி எழுப்ப,

“ஹ்ம்ம்” என்றாள் அவள்!

அவன் புரியாத பார்வையோடு, “அப்படி என்ன பேசிக்கிட்டீங்க?” என்று கேட்டான்.

ஆதி அவனை பார்த்து சிரித்தபடி "சீக்ரெட்" என்க, அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதே நேரம் அவளின் பேச்சு, நடவடிக்கை, தைரியம், கம்பீரம் என இவை எல்லாவற்றையும் சரவணன் தன்னை அறியாமலே ரசிக்கத் தொடங்கியிருந்தான்.

ஒருவகையில் ஆதியைக் கொல்ல அவர்கள் தீட்டிய திட்டம் சுக்குநூறாய் போய்விட்டதெனினும் அது அவனுக்கு சந்தோஷமாகவே இருந்தது.

உள்ளூர அவள் உயிர்பிழைத்ததை எண்ணி அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டாலும் மாமனிடம் என்ன பதில் சொல்வது என்ற பயமும் அவனை ஆட்கொண்டிருந்தது.

சூரியனின் கடைக்கண் பார்வையினால், பூமியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த இருள் தன் ஆளுமையை விலக்கிக் கொள்ள,

அந்த விடியலை வரவேற்கும் நிலையில் செல்லம்மா இல்லை. அவர் தலைமீது கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, சாரதா அவளைச் சமாதானப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தார்.

"இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் அவகிட்ட எத பத்தியும் சொல்லி இருக்கவே மாட்டேன்" என்று செல்லம்மா வேதனையுற,

"நீ சொல்லலன்னா ஆதிக்கு எதுவும் தெரியாமலே போயிடுமா செல்லம்மா?" என்றார் கருணாகரன்.

"அந்த ஊரும் வேண்டாம்... அந்தப் பாவப்பட்ட குடும்பமும் வேண்டாம்னுதானே நானே இத்தனை வருஷமா ஒதுங்கி இருக்கேன்... இவளுக்கு என்ன அதிகபிரசங்கித்தனம்... இப்ப எதுக்கு இவ அங்க போயிருக்கா" என்று செல்லம்மா கவலையுற,  

"கவலைப்படாதே செல்லம்மா... நம்ம ஆதி தைரியசாலி அவ எல்லா பிரச்சனையையும் தனியா சமாளிச்சுப்பா" என்று ஆறுதல் கூறினார் சாரதா.

"அவ தைரியத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் அண்ணி...  அதுதான் எனக்கு இப்போ பயமே... என்னெல்லாம் பண்ணி வைக்க போறாளோ... அந்த ஊருக்கு நான் செத்தாலும் போகவே கூடாதுன்னு நினைச்சேன்... இப்போ என் தலைவிதி... நான் அங்க போய் அவமானப்படனும்னு இருக்கு"

"நீ ஊருக்கெல்லாம் போக வேண்டாம் செல்லம்மா... நான் விஷ்வாவை ஆதியைக் கூட்டிட்டு வர அனுப்பிறேன்" என்று கருணாகரன் சொல்ல அப்போதுதான் விஷ்வா சுயநினைவு அடைந்தவனாய் தன் தந்தையை நிமிர்ந்துப் பார்த்தான்.

அவர்களின் விவாதம் விஷ்வாவிற்கு புரியவில்லை என்றாலும் ஆதி திருமணத்தை தவிர்க்கவே சொல்லாமல் புறப்பட்டிருப்பாளோ என்று எண்ணிக் குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்தான்.

அதேநேரம் கருணாகரனின் முடிவு அவனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இதுவே பழைய விஷ்வாவாக இருந்திருந்தால், "நோ வே" என்றுப் பளிச்சென்று சொல்லியிருப்பான். ஆனால் இப்போது அவனால் அப்படிச் சொல்ல முடியவில்லை. பதில் பேச முடியாமல் மௌனமாய் இருக்க அப்போது செல்லம்மா,

"அவ பிடிவாதக்காரிண்ணா... யார் பேச்சையும் மதிக்கமாட்டா" என்றார்.

"சரி... அப்போ ஆதி அங்கே எதுக்கு போயிருக்காளோ அந்த வேலையை முடிக்கிற வரைக்கும் இவன் சப்போர்ட்டா கூட இருக்கட்டுமே" என்று சொல்லி விஷ்வாவின் முகத்தை கருணாகரன் பார்க்க வேறுவழியின்றி தன் தந்தையின் வாக்கிற்கு மதிப்பு கொடுத்து,

"சரிங்கப்பா... நான் போறேன்" என்று உடனடியாய் தன் சம்மதத்தைக் கொடுத்தான்.

"எனக்கென்னவோ பயமா இருக்கு?" என்று செல்லம்மா பதட்டம் கொள்ள இம்முறை சாரதா திடமாய்,

"நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைச்சதில்ல... நம்ம பிள்ளைங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது" என்றார்.

இந்த வார்த்தைகள் செல்லம்மாவிற்குள்ளும் நம்பிக்கையை விதைத்து அவரை அமைதியடையச் செய்திருந்தது. ஆனால் இப்பொழுது பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டது நம் நாயகன் விஷ்வாதான்.

அவனோ உள்ளுக்குள் ஆதியை எதிர்கொள்ளப் போகும் அந்தத் தருணத்தை எண்ணிக் கவலையுற்றிருந்தான்.

***

ஆதித்தபுரத்திலேயே அதுதான் பெரிய வீடு. அதை சிவசங்கரனின் வீடு என்று இனி நாம் உரைக்கலாகாது. அது இப்போது வேல்முருகன் ஆதிக்கம் செலுத்தும் வீடு.

கார் வீட்டு வாசலில் முன் நிற்க ஆதியும் சரவணனும் கீழிறங்க அவர்களை முதலில் பார்த்தது மனோரஞ்சிதம்தான்.

ஆதிக்கு அறிமுகமே தேவையில்லை. அவள் முகமே அவளை யாரென்று உரைக்க ரஞ்சிதத்திற்கு தம்பி மகளைப் பார்த்து சந்தோஷம் கொள்வதா? இல்லை சரவணனோடு வந்ததின் காரணம் புரியாமல் சந்தேகம் கொள்வதா? என்றுத் திகைத்து நின்றுவிட்டார்.

கார் சத்தம் கேட்டு உள்ளே இருந்து வசந்தா கிராமத்து சாயலுடன் புடவை முந்தானையைத் தூக்கி சொருகிக் கொண்டு வெளியே வந்தாள். சரவணனை எதிர்பார்த்து வந்தவள் அருகே நின்றிருந்த ஆதியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

ஆதி ஆண்கள் பாணியில் நவநாகரீகமாய் அணிந்திருந்த உடை அவள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

"யாருடா இந்தப் புள்ள?" என்று கொஞ்சம் மிரட்டலாய் சரவணணைப் பார்த்து வசந்தா கேட்க,

"அது வந்து மதனி... நம்ம சின்ன மாமா சிவசங்கரனோட மக ஆதிபரமேஸ்வேரி" என்று சரவணன் சொன்னதுதான் தாமதம்.

வசந்தா வாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சர்யமாய் ஆதியை மேலும் கீழுமாய் அளவெடுத்தாள். எல்லோருமே ஆச்சரியப்பட்டு நின்றதால் ஆதியை யாருமே உள்ளே அழைக்கவில்லை.

சரவணன் அப்போது ஆதியின் காதோரம் மனோரஞ்சதித்தை தன் அம்மா என்றும்... வசந்தாவை வேல்முருகன் மகள் மற்றும் தன் அண்ணனின் மனைவி என்று அறிமுகம் செய்ய, அவள் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து,

"என்ன அத்தை... என்னை அடையாளம் தெரியலயா?" என்று மனோரஞ்சிதத்தைப் பார்த்துக் கேட்டாள்.

அவர் சந்தோஷம் பொங்க, "என் மருமவளை எனக்கு அடையாளம் தெரியாமல் போகுமா?!" என்றவர் அவளை ஆரத்தழுவி கொண்டார்.

ஆதி அப்போது வசந்தாவை பார்த்து, "என்ன அக்கா நல்லா இருக்கீங்களா?" என்று வினவ அவள் ஆச்சர்யத்தில் வாயடைத்து தலையை மட்டும் அசைத்தாள்.

ரஞ்சிதம் ஆதியை அமர வைத்துவிட்டு சமையலறைக்கு போனவள், உள்ளே கனகவல்லியைப் பார்த்து ஆதி வந்திருக்கும் விவரத்தை உரைத்தாள்.

கனகவல்லி தான் செய்துக் கொண்டிருந்த வேலைகளை எல்லாம் போட்டபடி போட்டுவிட்டு ஓடிவந்து ஆதியைப் பார்த்து சில நொடிகள் ஸ்தம்பித்தவர்,

பின் கண்ணீர் தளும்பிய கண்களோடு அவளின் கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினார்.

ஆதி ஒன்றும் புரியாமல் ரஞ்சிதத்தை பார்க்க, "உன் பெரியம்மா" என்று உரைத்தார் அவர். அவள் புருவங்கள் சுருங்க,

"கனகவல்லி பெரியம்மாவா?" என்று  ஆச்சர்யப்பட, கனகவல்லியோ தன் அழுகையை நிறுத்தாமல் அவள் கரத்தை விழிகளில் ஒற்றிக்கொண்டார்.

ஆதிக்கு அந்த அழுகையின் அர்த்தம் ஒரளவுக்கு புரிந்தது. தான் செய்த தவறை எல்லாம் அவர் காலம் கடந்து உணர்ந்துக் கொண்டார் போல. இத்தனை ஆண்டு வாழ்க்கைப் பயணம் அவருக்கு நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கக் கூடும்.

கனகவல்லி முடிந்தவரை அழுது தீர்க்க ஆதி அவரிடம், "அழாதீங்க பெரிம்மா... பழசை எல்லாம் விடுங்க... போகட்டும்" என்று அவரை அவள் தேற்ற முற்பட,

ஆச்சர்யமாய் அவளை ஏறிட்டவர், "உங்க அம்மா உன் கூட வரலியா?" என்று தழுதழுத்த குரலில் கேட்டார். 

"இல்ல பெரியம்மா... அம்மாவுக்கு நான் இங்கே வந்ததே தெரியாது" என்றாள் ஆதி.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வுக்கு இடையில் வேல்முருகன் தன் அறைக்குள் இருந்து வெளியே வந்து,

"கனகம் டிபன் எடுத்து வை... நேரமாச்சு" என்றார்.

அப்போது அவர் அங்கே நின்றிருந்த ஆதியினைப் பார்த்து அதிர்ச்சியாகி அடுத்த நொடியே திரும்பி சரவணனைப் பார்க்க அவன் தன் இயலாமையைக் கண்களாலேயே தெரிவித்தான்.

அவனைக் கோபமாய் முறைத்துவிட்டு மீண்டும் அவள் புறம் பார்வையைத் திருப்பினார். இந்நேரம் அவள் உயிரற்றவளாய் போயிருப்பாள் என்ற அவரின் கணிப்பு பொய்யாகிவிட, அவளோ முழுதாய் அவர் முன்னே வந்து நின்று அவரை அதிர்ச்சியடையச் செய்திருந்தாள்.

செல்வியே ஆதி ரூபத்தில் நின்றுக் கொண்டிருக்க அந்தச் சந்திப்பை அவர் துளிகூட விரும்பவும் இல்லை... எதிர்பார்க்கவும் இல்லை.

அந்தச் சமயம் கனகவல்லி தன் கணவனிடம், "உங்க தம்பி மக ங்க?" என்று ஆனந்தம் பொங்க அறிமுகம் செய்தார்.

அவர் இறுக்கமான பார்வையோடு, "என் தம்பிக்கு ஏதுடி மவ... இவ யாரோ... எவனுக்கு பிறந்தவளோ? அறிவுக்கெட்டத்தனமா என் தம்பியை இவளுக்குப் போய் அப்பன்னு சொல்லி அவன் பேரை களங்கப்படுத்தற" என்று அலட்சியமாய் சொல்ல, எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தனர்.

அந்த சொற்களைக் கேட்ட ஆதிக்கோ அவளை உயிரோட நெருப்பில் தள்ளியது போல் இருந்தது. தன் தாயின் கற்பை தன் தந்தையின் தூய்மையான காதலை இதைவிட வேறு ஒரு சொல் அவமானப்படுத்திவிட முடியுமா?

ஈஸ்வரின் கூர்மையான கொம்புகள் அவளைக் குத்தி காயப்படுத்தியிருந்தால்கூட அவளுக்கு  நிச்சயம் இந்தளவுக்கு மோசமான வலி ஏற்பட்டிருக்காது.

வேல்முருகன் கத்தியின்றி ரத்தமின்றி அவளை தன் சொற்களாலேயே மரணிக்கச் செய்துவிட்டான். அந்த நொடி அவள் உயிர் நீங்கிய உடலைப் போல் நின்றிருந்தாள்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content