You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 26

Quote

வெட்கமா? கோபமா?

வசந்தா எப்போதும் செவ்வாய் கிழமை ஆதிபரமேஸ்வரி ஆலயத்திற்குச் செல்வது வழக்கம். இம்முறை தானும் வருவதாகச் சொல்லி ஆதி அவளுடன் புறப்பட,

அவளின் உடை கோயிலுக்கு பொருத்தமாக இல்லை என்றுச் சொல்லி வசந்தாதான் தன்னுடைய ஆரஞ்ச் நிற சரிகையுடன் கூடிய புடவையை அணிந்து கொள்ள சொல்லி ஆதியிடம் கொடுத்திருந்தாள்.

அதன் காரணத்தினாலேயே ஆதி புடவை அணிந்துக் கொண்டிருக்க, விஷ்வாவிற்கு இந்த விஷயம் தெரியாதே.

அவள் கோயில் வாசலில் ஈஸ்வரனைத் தடவிக் கொடுத்தபடி திரும்பி நின்றிருக்க, ஆதியை ஆவலுடன் காண வந்த விஷ்வாவிற்கு அவன் பார்த்தக் காட்சி ஏமாற்றத்தை அளித்தது.

சிறுவயதிலிருந்து அவன் கண்முன்னேயே அவள் வளர்ந்திருக்கிறாள். ஒரே ஒரு முறை கூட அவள்  பெண்மையை பிரதிபலிக்கும் எந்தவித உடையையும் அணிந்து அவன் பார்த்ததேயில்லையே. எப்போதும் பேண்ட் சட்டையில் அவளைப் பார்த்துத்தான் வழக்கம். அப்படியிருக்க எப்படி அவன் கண்முன்னே நிற்பவளை ஆதியென்று நம்பக்கூடும்.

நிச்சயம் இவள் ஆதியாய் இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணமிட்டு கொண்டு அவளின் முகத்தைப் பார்க்கக்கூட முயற்சிக்காமல் பெருமூச்சுவிட்டு தன்னை தானே ஆறுதல் படுத்திக்கொண்டு விஷ்வா நிற்க,

அந்தச் சமயம் அவன் பின்னோடு வந்த வசந்தா,

"ஆதிபரமேஸ்வரி" என்று குரல் கொடுத்தாள்.

ஆதி திரும்ப, அவள் கண்ணெதிரே பார்த்தக் காட்சியை அவளாலேயே நம்ப முடியவில்லை. அங்கே விஷ்வா ஏமாற்றத்தில் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு நிற்க, 'விஷ்வா' என்று உள்ளூர முனகியவள்,

'இவன் எப்படி இங்க' என்று தனக்குள்ளேயே கேள்வி எழுப்பிக் கொண்டு அவனை நோக்கி வந்தாள்.

அவள், "விஷ்வா "என்று விளிக்க அவளின் குரல் அவன் செவியை எட்டியது.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன், எதிரே நின்றிருப்பவள் ஆதி என்று உணர்ந்து இமைகளை மூடித் திறந்து தான் காண்பதென்ன நிஜம்தானா? என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.

அவள் ஆதிதான். அதே தெளிந்த செதுக்கிய முகம். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால்  எப்போதும் பெண்மை என முத்திரை குத்தப்பட்ட அழகிற்கு அப்பாற்பட்டவளாகவே ஆதியைப் பார்த்தவனுக்கு இப்போது அவளின் இந்தத் தோற்றம் முற்றிலும் மாறுபட்டதாகத் தோன்றியது.

அவளின் உடலமைப்பை அழகாய் எடுத்துரைக்கும் புடவையும், பெண்மைக்கான குறியீடான பொட்டும் தலையில் சூடியிருந்த பூவும் என இத்தகைய அலங்கரிப்பில் பார்த்தவனுக்கு ஆச்சர்யம் பொங்கியது.

அந்த நொடி அவள் அழகில் அவன் மெய்மறந்து நிலைதடுமாறிப் போயிருக்க, ஆதியுமே அவனை அதிசியத்தபடிதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வசந்தா ஆதியின் தோளைத் தொட்டு, "யாரு இந்த தம்பி? உன்னை ரொம்ப தெரிஞ்சவருன்னு சொன்னாரு" என்று கேட்க அவள் ஒருவாறு நிலைப்பெற்றுக் கொண்டு,

"ஃப்ரண்டு க்கா" என்றாள்.

"சரி... நான் உள்ளார போய் சாமி கும்பிடுறேன் பேசிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு வசந்தா அகன்றுவிட விஷ்வா இன்னும் மெய்மறந்த நிலையில்தான் இருந்தான். விஷ்வாவின் முகத்தில் அப்போது எத்தனை ஆயிரம் வால்ட்ஸ் பலப் எரிந்திருக்கும் என்று வாசகர்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

"விஷ்வா நீ எப்படி இங்க?" என்று ஆதி கோபமாகக் கேட்க, அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்க,

"ஏ விஷ்வா" என்று அவன் முகத்திற்கு நேராய் சொடுக்கினாள்.

அவன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவன் போல, "வாட் அ ப்யூட்டி? சேன்ஸே இல்ல" என்றான்.

"என்ன சொன்ன?" அவள் சீற்றமாய் வினவ, அவள் கோபத்தை சற்றும் பொருட்படுத்தாமல்,

"யூ ஆர் லுக்கிங் கார்ஜீயஸ் டுடே... அப்படியே வடிச்சி வைச்ச சிலை மாதிரி... இத்தனை நாளா எங்க ஆதி இவ்வளவு அழகை மறைச்சி வைச்சிருந்த... ஸ்டில் ஐ கான்ட் பீலிவ் இட்" என்றவன் மேலும் தன் வர்ணனைகளைத் தொடர அவளுக்குக் கடுப்பானது.

"ஸ்டாப் இட் விஷ்வா... நான் உன்கிட்ட கேட்டக் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு... நீ எதுக்கு இங்க வந்த?" என்று அவள் படபடவென பொரிய அவன் முகம் வாட்டமுற்றது.

"உன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கேன்... நீ என்னடான்னா இப்படி முகத்திலடிச்ச மாறி பேசறியே" என்று அவன் முகத்தைத் திருப்பி கொள்ள,

"நீ எதுக்கு விஷ்வா என்னைத் தேடி வரணும்?" என்று நிறுத்தி நிதானமாகவே கேட்டாள். இப்போது விஷ்வா அவனுக்கே உரிய கோபத்திற்குச் சென்றவன்,

"நீ எதுக்கு உங்க அம்மாகிட்ட சொல்லாம வந்த" என்று எதிர் கேள்வி எழுப்பினான்.

"அது என் இஷ்டம்... நான் அவங்ககிட்ட சொல்லன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு.. பட் நீ என்னைத் தேடி வர வேண்டிய அவசியம் என்ன இருக்கு"

"உனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்ல... ஆனா என்னால அப்படி இருக்க முடியாது... உன்னைப் பத்தி எங்க அப்பா அம்மாவும், உங்க அம்மாவும் வேதனைப்பட்டுட்டு இருக்காங்க.. நீ ஃபோனை வேற ஆஃப் பண்ணி வைச்சிருக்க... சோ அவங்க மன ஆறுதலுக்காகத்தான் நீ நல்லபடியா இருக்கியான்னு தெரிஞ்சிக்க உன்னைத் தேடி வரவேண்டியதா போயிடுச்சு"

"நீ உன் இஷ்டத்துக்கு பேசாதே... எனக்கும் எல்லாரைப் பத்தியும் அக்கறை இருக்கு... பட் அதைவிட முக்கியமான வேலை எனக்கு இங்க இருக்கு"

"என்ன முக்கியமான வேலையா இருந்தாலும் நீ உங்க அம்மாகிட்ட சொல்லாம வந்தது தப்பு" என்று விஷ்வா இடித்துரைத்தான்.

"தப்புதான்... ஆனா அதைத் தவிர எனக்கு வேற வழியும் இல்லை"

"தப்பை ஒத்துக்கிட்ட வரைக்கும் சந்தோஷம்... சரி புறப்படு" என்று விஷ்வா அதிகாரமாய் அழைக்க,

"புறப்படுன்னா" கேள்வியோடு அவனைப் பார்த்தாள்.

"வீட்டுக்குக் கிளம்பு... போகலாம்"

"நோ..வே... நான் என் வேலை முடியற வரைக்கும் இங்கிருந்து வரமாட்டேன்... நீ கிளம்பு" என்று அழுத்தமாய் உரைக்க,

"நீ என் கூட வராம நானும் இங்கிருந்து கிளம்பமாட்டேன்" என்று விஷ்வா தன் முடிவைத் திட்டவட்டமாய் உரைத்தான்.

  எரிச்சலடைந்தவள், "விஷ்வா... யூ ஆர் இரிட்டேட்டிங் மீ" என்க,

"நீயும்தான்... யார்கிட்டேயும் சொல்லாம கொள்ளாம வந்து என்னை இரிட்டேட் பண்ணிட்டிருக்க"

"புரியாம பேசாத விஷ்வா... இது எங்க அம்மா அப்பாவோட சொந்த ஊர்... நான் இங்க வந்திருக்கேன்னா அது என் பெர்ஸனல்"

"ஃபைன்... அது உன் பெர்ஸனலாவே இருக்கட்டும்... ஐ டோன்ட் கேர்... ஆனா உனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் உனக்கு சப்போர்ட்டா இருக்கணும்ன்னு அப்பா என்கிட்ட சொல்லி இருக்காரு... அதை என்னால மறுத்து பேச முடியல.. சோ வாட் ஐம் ஹியர்... அதனால நீ இங்கிருந்து கிளம்பற வரைக்கும் நானும் உன் கூட இருப்பேன்" என்று விஷ்வா சொல்ல ஆதி அதிர்ச்சியானாள்.

சில நிமிடங்கள் மௌனமாய் யோசித்தவள் பின் அவனை நிமிர்ந்து நோக்கி, "நான் இங்க தங்கிறதிலயே நிறைய பிரச்சனை இருக்கும் போது... உன்னை நான் எங்க தங்க வைப்பேன்" என்று பொறுமையாய் எடுத்துரைக்க

இம்முறை  அவர்களின் பின்னோடு கோயிலைவிட்டு வெளியே வந்த வசந்தா பதிலுரைத்தாள்.

"ஒன்னும் பிரச்சனை இல்லை... நம்ம வீட்டிலயே தங்க ஏற்பாடு பண்ணலாம்" என்று விஷயம் எதுவும் தெரியாமல் வசந்தா இப்படி சொல்ல ஆதிக்குக் கடுப்பானது.

விஷ்வாவோ, "தேங்க் யூ" என்று வசந்தாவிடம் புன்னகை செய்தான்.

"சரி மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்... உள்ளே பூஜை முடிஞ்சிருச்சு... தீபாராதனை எடுத்துக்கலாம் வாங்க" என்று வசந்தா இருவரையும் அழைத்துவிட்டு உள்ளே செல்ல ஆதி குழப்பமடைந்தபடி உள்ளே சென்றாள்.

விஷ்வாவை எப்படியாவது பேசி அனுப்பிவிடலாம் என்று பார்த்தால் இப்படி வசந்தா உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டாளே என்று யோசனையோடு நடக்க

அப்போது விஷ்வா ஆதியின் அருகில் வந்தபடி, "ஆளே வேற மாதிரி இருக்க.. எதனால இந்த மாற்றம்?" என்று கேட்டவனை ஆழ்ந்து பார்த்தவள்,

"இடத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் டிரஸ்ஸிங்கை மாத்திக்கிட்டேன்... அதுவும் நானா இல்ல... அக்கா வற்புறுத்தினதாலதான்" என்றாள்.

"திரும்பியும் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே... ரியலி யூ லுக் கார்ஜியஸ் டுடே" என்றவன் மீண்டும் அவள் அழகில் மெய்மறந்து உரைக்க,

"விஷ்வா ப்ளீஸ்... திரும்பவும் என்கிட்ட இப்படிச் சொல்லாதே... என்னை யாராவது வர்ணிச்சா எனக்குச் சுத்தமா பிடிக்காது...சோ ப்ளீஸ் டோன்ட் எவர்" என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டு ஆதி அவனைக் கடந்து சென்றுவிட்டாள்.

விஷ்வா தனக்குத்தானே புன்னகைத்தபடி,

'யூஸ்வலா இப்படி சொன்னா வெட்கம் இல்ல படணும்... இவ என்னடான்னா கோபப்படறா... அப்படியே பழகிட்டா போல... உன் நிலைமை ரொம்ப பாவம் விஷ்வா' என்று சொல்லிக் கொண்டவன், ஏக்க பெருமூச்சொன்றை வெளிவிட்டு கருவறைக்குள் அலங்காரமாய் மின்னிக் கொண்டிருந்த ஆதிபரமேஸ்வரியைத் தரிசித்தான்.

அதேநேரம் அருகாமையில் நின்றிருந்த ஆதிபரமேஸ்வரியையும் அவ்வப்போது தரிசிக்க தவறவில்லை. இவர்களின் கடவுள் வழிபாடு முடிந்ததும் மூவரும் வீட்டை நோக்கி கொடிநடையாய் நடந்து செல்ல,

மனோரஞ்சிதமும் கனகவல்லியும் விஷ்வாவை பார்த்து சற்று நேரம் திகைத்தனர். ஆதி அவனின் உறவுமுறையைப் புரிய வைக்க ரொம்பவும் சிரமப்பட்டவள் கடைசியில் நண்பன் என்ற ஒற்றை வார்த்தையில் விளக்கிவிட்டாள். அந்த உறவும் கூட அவர்களுக்குக் கொஞ்சம் நெருடலாய் இருந்தது. அதுவும் மனோரஞ்சிதத்திற்கு விஷ்வாவையும் ஆதியையும் சேர்ந்து பார்த்த நொடியில்,

சரவணனுக்கு ஆதியை திருமணம் செய்விக்கும் அவரின் கனவு ஆட்டம் கண்டது. இந்த மனச்சஞ்சலத்திற்கு இடையில் விஷ்வாவை எங்கே தங்க வைப்பதென்ற விவாதம் நிகழ்ந்து அவனைப் பின்னர் சரவணன் அறையில் தங்க வைக்க முடிவு செய்தனர்.

வசந்தா விஷ்வாவிற்கு சரவணன் அறையைக் காண்பித்தாள்.

ஆதி யோசனையோடு, "சரவணன் இதுக்கு சம்மதிக்கனுமே!" என்று கேட்க,

"பேசிக்கலாம்.. நீ சங்கடப்படாதே" என்று ஆதியிடம் சொல்லிவிட்டு வசந்தா சென்றுவிட்டாள்.

விஷ்வா, சரவணன் அறையைச் சுற்றி பார்த்திருக்க ஆதி அவனிடம்,

"விஷ்வா... ப்ளீஸ்... நீ இங்க தங்கறது சரிப்பட்டு வராது... கிளம்பிடேன்" என்று கெஞ்சலாய் கேட்டுப் பார்க்க,

"நான் கிளம்பணும்னா நீயும் என் கூட வரணும்... வர்றியா?!" என்று சற்றும் இறங்கி வராமல் பதிலளித்தான்.

ஆதி கடுப்பாகி, "நான் இவ்வளவு தூரம் கெஞ்சிட்டிருக்கேன் நீ கேட்க மாட்டேன்னு அடம் பிடிக்கிற" என்று குரலையை உயர்த்த,

"நான் மட்டும்தான் அடம் பிடிக்கிறேனா?" என்று பதிலுக்கு முறைத்துக் கொண்டு நின்றான்.

"எப்படியோ இருந்து தொலை... பட் என் வேலையை டிஸ்டர்ப் பண்ணாதே" என்று சொல்லியவள் அந்த அறையைவிட்டு வெளியேற முயற்சிக்க,

"ஆதி ப்ளீஸ்... போகாதே.. இந்த ரூம் ரொம்ப டர்டியா இருக்கு... க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணு" என்று விஷ்வா கெஞ்சலாய் சொல்ல அவனை திரும்பி நோக்கியவள் கலகலவென சிரித்துவிட்டாள்.

அவனைப் பார்த்து இளக்காரமாய், "நான் சொல்ல சொல்ல கேட்கல இல்ல.. அனுபவி" என்க,

விஷ்வா பரிதாபமாய் அந்த அறையைச் சுற்றி பார்த்து  அவதியுறுவதைப் பார்க்க அவள் மனம் இறங்கிப் போனது.

"சரி ஓகே... ஹெல்ப் பண்ணித் தொலையறேன்" என்று அலுத்துக் கொண்டு அவள் சம்மதிக்க விஷ்வா நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

ஆதிக்கோ சரவணன் வந்து என்ன சொல்வானோ என்ற எண்ணம் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அந்தச் சிந்தனையை மறந்து... ஆதி விஷ்வாவுடன் சேர்ந்து அளவளாவிக் கொண்டே அந்த அறையின் பொருட்களை ஒழுங்குபடுத்துவதில் ஆர்வமானாள்.

அப்போது விஷ்வா அவளிடம், "நான் ஒரு விஷயம் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?" என்றவன் பீடிகை போட,

"இதைவிட பெட்டர் ரூமெல்லாம் கேட்காதே விஷ்வா... சேன்ஸே இல்ல" என்று அவன் முகத்தைப் பார்க்காமலே உரைத்தாள்.

"சே... அதில்ல... நான் நம்ம மேரேஜ் பத்திக் கேட்கணும்" என்க, அவள் சற்று வியப்போடு அவன் முகத்தை மௌனமாய் ஏறிட்டாள்.

"என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லாத காரணத்தினாலதான் நீ இங்க கிளம்பி வந்துட்டியா?!" என்றவன் தயக்கத்தோடு வினவ,

அவள் அலட்சியமாக, "ப்ச்... அதெல்லாம் இல்ல விஷ்வா... நான் முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு... அதனால இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு நினைக்கிறேன்" என்று தன் நிலையை விளக்கினாள்.

"அத நீ சொல்லிருக்கலாமே... நீ ஏன் மேரேஜ் அப்ளிக்கேஷனில் கையெழுத்துப் போட்ட?" இப்போது சற்றுக் கோபமாய் அவன் குரல் உயர,

"அது... நான் போடலன்னா மறுபடியும் அவங்க என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்க… தேவையில்லாத ஆர்க்கியூமன்ட்ஸ் வேணாம்னு" என்றவள் பேசி முடிப்பதற்கு முன்பாக விஷ்வா இடைமறித்து,

"அதுக்காக... இப்படி ஒரு பொய்யான சம்மதத்தைக் கொடுத்து அவங்க மனசுல ஆசையை வளர்க்கனுமா?! விருப்பமில்லைனா நீ என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே" என்று சீற்றமானான்.

"ப்ளீஸ் புரிஞ்சிக்கோ விஷ்வா... நான் விருப்பமில்லைனு சொல்லல இப்ப வேண்டாம்னுதான் சொல்றேன்" என்றவள் அமர்த்தலாகவே சொல்ல விஷ்வாவின் கோபம் சரேலென்று இறங்கியது.

"அப்போ இந்த கல்யாணத்தில உனக்கு சம்மதமா?" என ஆவல் ததும்ப கேட்க,

"எங்க அம்மாவோட டெசிஷன்தான் என்னோடதும்... ஸோ எனக்கு சம்மதம்தான்" என்றாள்.

"இந்த பதில என்னால ஒத்துக்க முடியாது... உன் டெசிஷன்தான் எனக்கு முக்கியம்" என்றவன் அழுத்தமாய் கேட்க,

"எனக்கு மேரேஜ் விஷயத்தில தனிப்பட்ட விருப்பமோ எதிர்பார்ப்போ இல்ல" என்று அலட்சியமாய் பதிலளிக்க அவனுக்கு ஏமாற்றமானது.

"அப்போ லவ் மாதிரி விஷயத்தில உனக்கு இன்டிரஸ்ட் இல்ல"

"சத்தியமா இல்ல... என்னைப் பொறுத்த வரைக்கும் கல்யாணங்கிறது யதார்த்தம்... காதல் கற்பனை... நான் கற்பனை உலகத்தில மிதக்க விரும்பல... யதார்த்தமா வாழ ஆசைப்படறேன்" என்று தீர்க்கமாய் அவள் எண்ணத்தைச் சொல்ல

விஷ்வா சிரித்து விட்டு, "இப்படி சொன்ன எத்தனையோ பேர் காதல் வயப்பட்டிருக்காங்க" என்று அவளைக் கேலியாய் ஒரு பார்வைப் பார்த்தான்.

"இஸ் இட்... பார்க்கலாமே" என்றவள் அந்த அறையை சுத்தம் செய்த திருப்தியில் விஷ்வாவைப் பார்த்து புறப்படுவதாக சைகைச் செய்துவிட்டு வெளியேற, அந்தச் சமயம் தன் அறைக்குள் நுழைய வந்த சரவணனை கவனியாமல் ஆதி அவன் மீது மோதி நின்றாள்.

சரவணன் எதிர்பார்க்காத அந்த மோதலால் திகைப்புற்றான். போதாகுறைக்கு ஆதியின் அந்த புது தோற்றம் அவனை அப்படியே மெய்மறக்கச் செய்தது.

அதேநேரம் விஷ்வா சரவணனை அடையாளம் கண்டுக் கொண்டுவிட, சரவணனுக்கோ அப்போது ஆதியைத் தவிர்த்து மற்ற யாரும் அவன் பார்வைக்குப் புலப்படவில்லை.

கனவுலகத்தில் சஞ்சரிக்கும் அவனை எப்படி நிஜ உலகத்திற்குக் கொண்டு வருவதென ஆதி தவித்துக் கொண்டிருக்க, விஷ்வாவிற்கு அவன் ஆதியைப் பார்த்த விதம் எரிச்சலை ஏற்படுத்தியது.

"இவர்தான் சரவணனா?" என்று விஷ்வா சத்தமாய் கேட்க,

சரவணனின் பார்வை அப்போதே விஷ்வாவைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content