You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 3

Quote

4

விந்தையிலும் விந்தை

சென்னை பன்னாட்டு விமானநிலையம்

மலேசியா செல்வதற்காக விமான நிலையத்தில் யாருடைய கண்ணையும், கருத்தையும் கவராத மிக எளிமையான தோற்றத்தில் கையிலிருந்த நூலில் மூழ்கியபடி அமர்ந்திருந்தார் செல்லம்மா!

சில மணித்துளிகளில் மலேசியா செல்வதற்கான விமானத்தைப் பற்றிய அறிவிப்பு வர, விமானத்தில் ஏறப் புறப்பட்ட பல்வேறு நபர்களோடு செல்லம்மாவும் எழுந்து சென்றார். அப்போது  ஒரு சிறுவன் விமானத்தில் ஏறப் போகும் ஆர்வத்தில் அந்தப் பளிங்கு  தரையில் ஓடிச் சென்று கால்கள் இடறி கீழே விழுந்தான்.

செல்லம்மா பதறிக் கொண்டு முதல் ஆளாய் அவனைத் தூக்கி நிறுத்தி கை, கால்களை நீவி விட்டார். பின்னோடு வந்த அந்தச் சிறுவனின் தாய்,

"என்ன வருண் நீ? கொஞ்சம் பாத்து போகமாட்டியா... கை காலில அடிப்பட்டா?" என்று அதட்டி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவள், செல்லம்மாவைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்து நன்றி சொல்லிவிட்டு முன்னேறிச் சொல்ல, அந்த பெண் மகனிடம் சொன்ன வார்த்தை அவர் ஆழ்மனதில் புதைந்திருந்த நினைவுகளை எழுப்பிவிட்டது.

செல்லம்மா உட்பட பயணிகள் அனைவரும் தங்கள் தங்கள் இருக்கைகளைத் தேடி அமர, சில விநாடிகளில் விமானம் இடிமுழக்க சத்தத்துடன் வானில் உயர உயர பறக்க தொடங்கியது. அந்த சிலமணி நேரப் பயணத்தில் செல்லம்மா தம்முடைய பழைய நினைவுகளோடு வெகுதூரம் கடந்து போனார்.

***

ஆதித்தபுரத்தின் உள்ள அந்தச் சிறிய குடிலின் வாசலில் சாணத்தை உருட்டி வட்டமாய் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்தார் மங்களம். பெயரளவில் மட்டுமே அவர் மங்களம்.

கணவனை இழந்து பல ஆண்டுகள் கடந்து போக, அவரின்  மகள் செல்வி மட்டுமே அவருடைய ஒரே ஆதரவு. வானின் மேல் சூரியன் எழும்பி நின்று உச்சி வேளையைத் தொட்டு உஷ்ணம் ஏறியிருந்த அந்தச் சமயத்தில் செல்வி தன் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே புறப்பட்டாள்.

"ஏ செல்லம்மா! எங்கடி போறவ?" என்று மங்களத்தின் குரல் அழைக்கவும், அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு, "செல்லம்மான்னு கூப்பிடாதே ம்மா... செல்வின்னு கூப்பிடு" என்றாள்.

"ஆமாம் வேற வேலை வெட்டி இல்ல... முதலில் எங்க போற... அதைச்  சொல்லு புள்ள" என்றவர் கேட்க,

"பரமுவைப் பாத்துட்டு வர்றேன்" என்றாள் அவள்.

"சரி சரி போ... ஆனா உள்ளே கஞ்சி வைச்சிருக்கேன்... குடிச்சிட்டு போ" என்றார்.

"எல்லாம் வந்து குடிக்கிறேன்" என்றவள் ஒரே ஓட்டமாய் ஓட, மங்களம் தலையிலடித்துக் கொண்டார். ஓடிச் சென்றவளோ மூச்சிறைக்க, சிவசங்கரன் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் ஒளிந்துக் கொண்டாள்.

ஏனோ அவளைக் கண்டு அங்கே இருந்த மாடுகள் எதுவும் மிரளவில்லை. இது எப்போதும் அவளுக்கு வழக்கம் போல.

அவள் உடனடியாய் கீழே கிடந்த சிறு கல்லைக் கரத்தில் எடுத்துக் குறிப்பார்த்து, வீட்டின் சாளரத்தில் அடிக்க பரமு என்கிற பரமேசுவரி உள்ளே இருந்து எட்டிப் பார்த்தாள்.

சிறிது நேரக் காத்திருப்புக்கு பிறகு பரமு உள்ளே இருந்து வெளியே வர, அந்த இரு தோழிகளும் ரகசியமாய் எதையோ பேசிக் கொண்டனர்.

அதற்குள், "பரமுமுமுமுமு" என்று வீட்டினுள் இருந்து கனகவல்லி உச்சஸ்தாயில் அழைக்க, மிரட்சியுற்ற பரமு... செல்வியின் கையைப் பற்றி தரதரவென இழுத்தபடி அங்கிருந்து ஓடத்தொடங்கினாள்.

அவர்களின் அதிவேகமான ஓட்டம் அந்த அடர்ந்த புளியந்தோப்பில் வந்து முடிய, சூரிய ஒளி கூட அத்தனை சீக்கிரத்தில் நுழையச் சாத்தியமில்லாத இடம் அது.

செல்வி மூச்சிறைத்தபடி தன் தோழியிடம் "ஏ! பரமு... உன் மதனி கூப்பிட்டுச்சே... உன் காதில விழல" என்று கேட்டாள்.

"நல்லா விழுந்தது... அதான் மாட்டிக்கப் போறோமேன்னு தலைதெறிக்க உன்னை இழுத்துட்டு ஓடியாந்தேன்" என்று சொன்னவளுக்கு இன்னும் மூச்சிறைத்துக் கொண்டிருக்க,

"தேட போறாங்கடி" என்றாள் செல்வி.

"அடி போடி... அப்படியே அவங்க என்னைத் தேடிட்டாலும்... எனக்கு வாச்சதெல்லாம் மதனிங்க இல்ல... மாமியா" என்று சலிப்புற்றவள்,  அங்கிருந்த மரத்தில் கட்டியிருந்த பலகை ஊஞ்சலில் ஏறிக் கொள்ள, செல்வியும் அவளருகில் அமர்ந்தாள்.

இருவரும் தங்கள் பாதங்களைக் கொண்டு தரையில் தட்டிதட்டி வேக வேகமாய் அந்த ஊஞ்சலை ஆட்ட, உள்ளம் களிப்புற்று அந்தத் தோழிகள் சிரித்து மகிழ்ந்தனர்.

பரமுவும் செல்வியும் பதினேழு வயது நிரம்பிய கன்னிகைகள். செல்வி வெள்ளை நிறத்தில் கருமை நிற பூப்போட்ட பாவாடையும் கருப்பு நிற தாவணியும் அணிந்து கொண்டிருக்க, அவள் கழுத்தில் ஒரு கருப்பு நிற சுவாமி டாலர்.

அதோடு அவள் தன்  நீண்டு தொங்கும் கூந்தலை மடித்துக் கட்டியிருக்க, அது அவளின் இடை வரை நீண்டிருந்தது. தோற்றத்தில் அவள் ஏழ்மை நிலை விளங்க, பரமேசுவரியோ வடித்து வைத்த அம்மன் சிலைக்கு நிகராய் பட்டு பாவாடைகள் நகைகள் பூட்டி முற்றிலும் செல்வியின் தோற்றத்திற்கு நேர்மாறாய் இருந்தாள்.

இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கான வித்தியாசம் எனினும் அந்தத் தோழிகளின் மனதில் ஏற்றத்தாழ்வு என்பது இம்மியளவு கூட இல்லை. ஊஞ்சல் அதன்போக்கில் ஆட பரமு தன் ஒற்றைக் காலை தூக்கி மேலே வைத்துக் கொண்டு, "ஏன் செல்வி ? நான் ஒண்ணு சொன்னா கேட்பியா?!" என்றாள்.

"என்னடி?" என்று ஒய்யாரமாய் கால்களை வீசி ஆடிக்கொண்டே செல்வி கேட்க,

"நீ பேசாம எங்க சின்ன அண்ணன் சிவசங்கரனை கல்யாணம் பண்ணி… எனக்கு மதனியா வந்துட்டா என்ன?" அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி செல்விக்கு பகீரென்றது.

அதிர்ச்சியோடு தன் தோழியை ஏறிட்டவள், "போடி அறிவுகெட்டவளே... உங்க வசதி என்ன? எங்க நிலைமை என்ன? எல்லாம் கனவுதான்" என்றாள்.

"அதெல்லாம் பரவாயில்ல... நான் சொன்னா எங்க அண்ணன் கேட்கும்"

"உங்க அண்ணன் ஒத்துக்கிட்டாலும் நான் சம்மதிக்கமாட்டேன்... அவர பார்த்தாலே எனக்கு கிலி பிடிக்குதாக்கும்" என்று சொல்லியவளின் குரலில் லேசாய் நடுக்கம் எட்டிப்பார்க்க, பரமு சத்தமாய் சிரிக்கத் தொடங்கினாள்.

"அடி போடி பைத்தியக்காரி... ஊருக்குள்ள எங்க சங்கரன் அண்ணனை கட்டிகிட அவ அவ தவம் கிடக்கா... நீ என்னடான்னா?!" என்று சொல்லி அவள் முகவாயில் குத்தினாள்.

"ம்க்கும்... கிடக்கட்டுமே எனக்கென்ன? எது நடந்தாலும் சரி.. அந்த வீட்டுக்கு மருமவளா நான் வரமாட்டேன் பா" என்றாள் தீர்க்கமாக!

"ஏன்டி அப்படி சொல்றவ?"

"பின்ன... நீ எவனையாவது கட்டிக்கிட்டு போயிடுவ... அப்புறம் காலம் பூரா உங்க மதனிங்கிட்ட மாட்டிக்கிட்டு யார் கஷ்டபடறதாம்?"

"நீ சொல்றதும் சரிதான்... ஆனா எங்கண்ணா உன்னை நல்லா பாத்துக்கும்டி" என்று பரமு தன் தோழியிடம் தன் ஆசையை சொல்லிக் கொண்டிருக்க அந்தச் சமயம் அங்கே கிடந்த சருகுகளை யாரோ மிதிக்கும் ஓசை கேட்டு இருவரும் துணுக்குற்று ஊஞ்சலை நிறுத்தினர்.

தோப்பிற்குள் யாரோ நுழைகிறார்கள் என்பதை உணர்ந்த மறுகணமே அந்தத் தோழிகள் இருவரும் கள்ளத்தனமாய் புன்னகைத்துவிட்டு அவசரமாய் ஓர் கம்பீரமான மரத்தின் வேர் இடுக்குகளில் ஒளிந்து நின்று கொள்ள,

எவனோ மிரட்சியான முகத்தோடு வியர்த்துவடிய அந்தத் தோப்பிற்குள் நுழைந்தான். அந்தத் தோப்பில் பேய் உலாவுவதாக ஊருக்குள் உள்ளோரெல்லாம் ஒரு வதந்தியைக் கிளப்பியிருக்க, அந்தப் பாதையை யாரும் அதிகமாய் உபயோகப்படுத்துவதே கிடையாது.

அவன் கதிகலங்கிய நிலையில் அந்த இடத்திற்குள் நுழைய, அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் காலியாய் ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலைப் பார்த்தவனுக்கு உடம்பெல்லாம் உதறலெடுத்தது.

அதோடு அல்லாமல் பரமேசுவரியின் கொலுசு சத்தம் அந்த இடத்தின் நிசப்தத்தை கலைத்து அவனை மிரட்ட, அவ்வளவுதான்.

வந்த வழியே அவன் வேட்டியைத் தூக்கி கொண்டு தலைதெறிக்க ஓடினான். அந்த இரு தோழிகளும் அவன் ஒட்டத்தைப் பார்த்து குலுங்கிக் குலுங்கி சிரிக்க, இப்படியான சேட்டைகள் செய்வது அந்தத் தோழிகளுக்கு  வாடிக்கைதான். 

அந்தத் தோப்பிற்குள் யார் நுழைந்தாலும் அவர்களுக்குப் பேய் பயம் காட்டி இந்தத் தோழிகள் விரட்டியடிக்க, அதன் காரணத்தினாலேயே அந்த ஊர்மக்கள் அனைவரும் தோப்பில் பேய் நடமாட்டம் இருப்பதாக ஆழமாய் நம்பத் தொடங்கியிருந்தனர்.

பல நேரங்களில் நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை நாம் அறிவதேயில்லை. அப்படிதான் அந்தத் தோழிகள் இருவரும் பெரும் ஆபத்திற்கான விதையை அங்கே விதைத்துக் கொண்டிருந்தனர்.

செல்வி மீண்டும் ஊஞ்சலில் ஏறி அமர அந்த நொடி பரமேசுவரி யாரையோ தூரமாய் பார்த்துக் கையசைத்துவிட்டு,

"இருடி... இதோ வந்திடுறேன்" என்று சொல்லி அவளின் கொலுசு சத்தம் கிணுகிணுக்க ஓடிவிட்டாள்.

செல்வி அச்சத்தோடு, "வேண்டான்டி பரமு.. ஏதாவது பிரச்சனை வந்துர போவுது... போகாதே" என்றவள் தன் குரலின் மொத்த பலத்தையும் திரட்டிக் கத்த, பரமு அவள் அழைப்பிற்குக் கொஞ்சமும் செவி சாய்க்காமல் சென்றுவிட்டாள்.

வேறுவழியின்றி தன்னந்தனியே செல்வி ஊஞ்சலில் உயர உயர ஆடிக் கொண்டிருக்க, அப்போது பார்த்து சிவசங்கரன் அந்தத் தோப்பிற்குள் நுழைந்தான்.

அவனைப் பார்த்தவளுக்கு நடுக்கம் ஏற்பட, உயரமாய் ஆடிக் கொண்டிருக்கும் அந்த ஊஞ்சலை அவசரமாய் நிறுத்தி கீழே இறங்க எத்தனித்தவள் அதன் வேகத்தை நிறுத்த முடியாமல் தடுமாறி தரையில் விழுந்தாள். அந்தக் காட்சியைத் தூரத்திலிருந்த பார்த்த சிவசங்கரனின் புருவங்கள் நெறிந்தன. பதறியபடி அவளை நெருங்கி வந்தவன்.

"அறிவில்ல உனக்கு... வயசு புள்ள இப்படியா இறங்கி கீழே விழுவ... கை கால் உடைஞ்சுதுனா?" என்று மிரட்ட, அவள் சிரமப்பட்டு தன் முட்டியைப் பிடித்தபடி எழுந்து நின்றாள்.

அவள் நிற்கத் தடுமாறுவதை உணர்ந்தவன் உடனடியாய் அவளைத் தாங்கி கொள்ள வர, சுதாரித்தவள் அவன் தொடுகைக்கு வழி வகுக்காமல் அருகில் இருந்த மரத்தினைப் பிடித்துக் கொண்டாள்.

"அடி ஏதாச்சும் பலமா பட்டிருச்சா?!" என்று கரிசனத்தோடு அவளைப் பார்த்து சிவசங்கரன் கேட்க, இல்லை என அவன் கண்களை ஏறிட்டுப் பார்க்காமலே தலையாட்டினாள்.

அவன் யோசனையோடு அவளை நோக்கி, "ஆமா... நீ இங்க தனியாவா இருக்க?" என்றவன் கேட்க அவள் இதயம் அதிவேகமாய் படபடத்தது. அதனைக் காட்டி கொள்ளாமல், "ஆமா" என்றவள் அப்பட்டமாய் பொய்யுரைத்தாள்.

"நீ சொல்றது ஒன்னும் நம்புற மாதிரி இல்லையே" என்றவன் அவளை ஏற இறங்கப் பார்த்து கேட்கவும், அவள் முகத்தில் அச்சத்தில் சாயல் படர்ந்தது.

அவன் மேலும், "நீயும் அந்த பரமுவும் பண்ற  சேட்டையெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டிருக்கீங்களா?" என்றவன் சொல்ல அவள் எச்சிலை விழுங்கிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வையும் கம்பீரமும் அவளை மிரட்ட அவனோ சீற்றத்தோடு,

 "ஆமா... தோப்புக்குள்ள வர்றவைங்களை எல்லாம் பயமுறுத்தறது நீங்கதானா?" என்று கேட்டான். அவள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போக அவன் அதோடு விடாமல்,

"எங்கடி உன் கூட்டு களவாணி? என்னைப் பார்த்ததும் ஒளிஞ்சிக்கிட்டாளா?!" என்று மிரட்டலாய் கேட்க அவள் சுற்றும் முற்றும் தேடலாய் தன் பார்வையைச் சுழற்றினாள். அதற்கு மேல் அவனைச் சமாளிக்க முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை.

அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவள் அவன் எதிர்பாராத வண்ணம்  அங்கிருந்து ஓட்டம் பிடிக்க சிவசங்கரன் புரியாத பார்வையோடு,

"ஏ...  செல்வி நில்லு" என்றவன் கத்த, அதைக் காதில் வாங்காமல் ஓரே ஓட்டமாய் ஓடிவிட்டாள்.

***

செல்லம்மா கிட்டதட்ட மூன்று நான்கு மணிநேரம் இளம் வயது செல்வியாய் வாழ... அவர் கண் விழித்தபோது மீண்டும் பெரும் சத்தத்தை எழுப்பியபடி அந்த விமானம் தரையிறங்கியது.

எத்தனைக் காத தூரங்களையும் சுலபத்தில் கடந்து விடும் விமானம் விந்தை எனில், நொடிப் பொழுதில் காலங்கள் கடந்து நினைவுகளைக் கண் முன்னே நிறுத்தும் மனிதனின் எண்ணங்கள் விந்தையிலும் விந்தை அல்லவா?

Quote

Super ma 

You cannot copy content