You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 5

Quote

கலவரம்

மலேசியா விமானத்திலிருந்து கோலாலம்பூர் சென்றடைந்த செல்லம்மாவிற்கு விமான நிலையத்திலேயே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருபது ஆண்டுகளாய் வெற்றிகரமாக நூறு நாவல்களுக்கு மேல் எழுதிய செல்லம்மாவின் எழுத்து திறமையை கவுரவிக்கும் விதமாய் அந்தப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, எழுத்தாளர்கள் வாசகர்கள் எனப் பலரும் பங்கேற்று அந்த விழாவைச் சிறப்பித்தனர்.

தன் மனவேதனைகளைப் போக்கிக் கொள்ளும்  ஆயுதமாகவே எழுதுகோலைக் கைலெடுத்தவருக்கு, வெற்றியும் புகழும் அவரே அறியா வண்ணம் குவியத் தொடங்கியதுதான் பெரும் ஆச்சர்யத்துக்குரிய விஷயம்.

அவரால் இந்த புகழ், பாராட்டு என்று எதிலும் லயிக்க முடியவில்லை. அதுவும் இன்று அந்த நிகழ்ச்சி முடிந்து அறைக்கு திரும்பியதிலிருந்து மனதிற்குத் தேவையான நிம்மதியும் அமைதியும் கிடைக்கப்பெறவில்லை.

தனது இந்த வெற்றியைப் பகிர்ந்துக் கொள்ள கணவன் உடனில்லை என்ற வலியே அவருக்கு மிகப் பெரியதாய் இருந்தது. பாராட்டு விழா முடிவுற்று செல்லம்மாவிற்கு அன்று இரவு ஓய்வெடுக்க ஆடம்பரமான அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தனை பேரும் புகழும் இருந்தென்ன?

மனதிற்குத் தேவையான நிம்மதியும் அமைதியும் கிடைக்கப்பெறவில்லை. உறக்கமும் வரவில்லை. தனிமையைத் துணையாய் கொண்டிருந்தவருக்கு அப்போதைக்கான மன அமைதி எழுதுவது மட்டும்தான்.

அவர் தன் கதையினை எழுதத் தொடங்கினார் என்று சொல்வதைவிட அதற்குள்ளேயே அவர் வாழ ஆரம்பித்தார்.

****

பகலவன் அந்த சில மணிநேரப் பிரிவைக்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தன் பல்லாயிரம் கரங்களால் பூமிக் காதலியை அணைத்து இன்புறச் செய்ய, அந்த அழகான விடியலை ரசிக்கும் நிலையில் சிவசங்கரன் இல்லை.

செல்வி அவனிடம் இரவு நடந்துகொண்ட விதத்தை அவனால் இன்னமும் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அவன் மனம் அதையே எண்ணி வேதனையில் உழன்று கொண்டிருக்க, மற்றவர்கள் பார்வைக்கு தன் வேதனையைக் காட்டிக் கொள்ள விழையாமல் தன் மனதிற்குள்ளேயே அவற்றை எல்லாம்  புதைத்துக் கொண்டு இயல்பாக இருக்க முயன்று கொண்டிருந்தான்.

காலையிலேயே தலைமுழுகியவன் துண்டால் கேசத்தைத் துவட்டியபடி தன் அறைவாயில் நோக்கி செல்ல, எதிரே செல்வியின் வருகை அறியாமல் அவள் மீது மோதிவிட்டான்.

அவள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட, துண்டை விலக்கிப் பார்த்தவனுக்கு அவளின் நிலையைப் பார்த்து இரக்கம் வராமல் கோபமே தலைதூக்கியது.

"பார்த்து வரமாட்டியா?! எப்ப பாரு கீழே விழறதே உனக்கு வேலையா?" என எரிச்சலான பார்வையோடு உரைக்க,

அவள் அவனைப் பொருட்படுத்தாமல் எழுந்து செல்ல பார்த்தாள். "ஏ நில்லு" என்றவன் அவளை நிறுத்த,

அவள் மேலே செல்லாமல் தவிப்போடு நிற்கவும் அவள் முன்னே வந்து நின்றவன் நேற்று அவன் பார்த்த அந்த டாலர் இப்போது எங்கே என்று அவள் கழுத்தில் தேடலாய் பார்க்க, அவன் பார்க்கும் திசையைக் கவனித்தவளுக்கு கோபமேறியது.

"சே" என்றவள் சொல்லிவிட்டு, அவனை ஆசூயையாகப் பார்க்க அந்தப் பார்வை அவனை எரிகுழம்பில் தள்ளியது போல் எரிந்தது. அவளோ விரைவாய் அங்கிருந்து அகல, அவள் தன்னை இந்தளவுக்கு இழிவாய் நினைத்துவிட்டாளே  என அவன் உள்ளம் அவமானத்தில் குமுறியது.

உடனடியாக அவளை வீடு முழுக்கவும் தேடியவன் இறுதியாக அவள் பின்புறத்தில் மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,

"ஏ செல்வி" என்று ரௌத்திரமாய் அழைக்க, அவன் குரல் காதில் விழுந்தாலும் அவனின் அழைப்பிற்குப் பதில் பேசாமல் அவள் பாட்டுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அந்தச் செய்கையே அவனை அவமானப்படுத்த, அவளைக் கோபமாய் நெருங்கினான். அதை உணர்ந்து அவள் விலக முயல, அவன் அவள் கரத்தை அழுந்தப் பற்றினான்.

"என்னைப் பார்த்தா எப்படிறி தெரியுது உனக்கு?" என்றவன் கேட்க அவள் மிரள மிரள விழித்தாள்.

அவள் பார்வையில் இருந்த தவிப்பை உற்று நோக்கியவன், மீண்டும் அவள் கழுத்தைப் பார்த்து, "ஆமா... உன் கழுத்தில எங்க குடும்ப சாமி டாலர் இருந்ததில்ல?!" என்றவன் யோசனையாக கேட்க அவள் பதறிப் போனாள்.

இந்தக் கேள்வியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் அவன் பார்த்த பார்வைக்கான அர்த்தம் இப்போது விளங்க, அவள் தன் கழுத்தை அவசரமாய் தொட்டுப் பார்த்துவிட்டு, "இல்லையே... என் கழுத்தில அந்த மாதிரி எதுவும் இல்லையே" என்று மழுப்பிவிட்டாள்.

அவளை நம்பாமல் உற்றுப் பார்த்தவன், "இல்ல... நீ பொய் சொல்ற... உன் கழுத்தில ஆதிபரமேஸ்வேரி டாலர் இருந்தது... நான் பார்த்தேன்" என்று அழுத்தம் திருத்தமாய் உரைக்க, அவளுக்கு அச்சம் தொற்றிக் கொண்டது.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "நான் பொய்யெல்லாம் சொல்லல... நீங்கதான் ஏதோ தப்பா பார்த்திருப்பீங்க" என்றவள் சமாளிக்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.

அதேநேரம் அவன் தமக்கை மனோரஞ்சிதம், "சங்கரா" என்று அழைத்துக் கொண்டு வந்தாள். உடனே அவள் கரத்தை அவன் விடுவிக்க, அவளும் தப்பித்தால் போதும் என அவசரமாய் அங்கிருந்து அகன்றாள்.

ரஞ்சிதம் அவனைக் காலை உணவு உண்ண அழைக்க, சிவசங்கரனும் அவளோடு சென்று உணவருந்திவிட்டு தன் தந்தையோடு வயலுக்குப் புறப்பட்டவன் செல்வியிடம் சொல்லிக் கொள்ளவும் இல்லை.

புதுமணத் தம்பதிகளுக்கான அறிகுறிகள் எதுவும் அவர்கள் இருவரின் நடவடிக்கைகளில் இல்லையென்பதை  கனகவல்லி கவனித்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு இடையில் பலமான உறவு எதுவும் ஏற்படவில்லையோ என்ற சந்தேகம் உதிக்க, எப்படியாவது செல்வியை சிவசங்கரனிடம் இருந்து பிரிக்க திட்டம் தீட்டியது அவளின் வஞ்சக மனம்.

அன்று மாலை செல்வி அடுப்பங்கறையில் வேலை செய்துகொண்டிருக்க கண்ணம்மாவும் கனகவல்லியும் அவர்களுக்குள்ளேயே ஏதோ கிசுகிசுத்துவிட்டு, அவள் காதுபட அவர்கள் கொண்டு வந்த சீர்வரிசைகள் பற்றியும் நகைநட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

செல்வி அவர்கள் பேசியவற்றைக் கேட்டும் கேட்காதவளாய் இருந்தாலும் அவர்களின் குத்தலான பேச்சு அவளைப் பெரிதும் வேதனையுறச் செய்தது. அங்கே நடந்த சம்பாஷணை சிவசங்கரனின் தந்தை சண்முகவேலன் காதிலும் விழ, அவர் அந்தக் கணமே செல்வியை அழைத்தார். அவரின் அழைப்பு அவளை மிரட்சியடைய செய்தது.

அவரின் ஆஜானுபாகுவான தோற்றத்தைப் பார்த்தாலே அவளுக்குப் பயம். அவர் ஏன் தன்னை அழைக்கிறார் என்ற தவிப்போடு அவர் முன்னே வந்து நின்றவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

"என்னங்க மாமா?" என்ற நடுக்கமுற அவள் கேட்க, சண்முகவேலன் தன் கணீர் குரலில் பேசத் தொடங்கினார்.

"இத பார் செல்வி... நீ என்னதான் என் தங்கச்சி புள்ளயா இருந்தாலும் இந்த வீட்டுக்குன்னு நிறைய கெளரவமும் மரியாதையும் இருக்கு... அதுவும் இல்லாம மத்த மருமகளுங்க முன்னாடி நீயும் ஒன்னும்  இல்லாதவளா நிக்க கூடாது பாரு... அதனாலதான் சொல்றேன்... நம்ம கோயில் பக்கத்துல உங்க அம்மா பேர்ல இருக்கிற கொஞ்சம் நிலத்தை சிவங்கரன் பேர்ல மாத்தி கொடுக்கச் சொல்லு" என, அவள் அப்படியே அதிர்ந்து போனாள்.

அந்த நிலம் ஒன்றுதான், அவள் தாய் மங்களத்தின் ஒரே வாழ்வாதாரம். அப்படி இருக்க இந்த உறவுக்கான விலையாய் அவர் அதைக் கேட்பதை அவளால் ஏற்க முடியவில்லை. உள்ளம் கலங்கி கண்ணீரோடு அவள் தலைகவிழ்ந்து மௌனமாய் நிற்க,

சிவசங்கரனின் அண்ணன் வேல்முருகன் அவளை வெறுப்போடு நோக்கி, "என் தம்பி மட்டும் ஆசைபடலைன்னா... நீ எல்லாம் இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்க முடியுமா? ஏன்? கனவில கூட இப்படி ஒரு வாழ்கையை நீ நினைச்சி பார்த்திருக்க முடியுமா? போயும் போயும் அந்தத் துண்டு நிலத்துக்கா இப்படி யோசிக்கிறவ" என்று சொல்ல அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு கண்ணீர் தாரை தாரையாய் பெருகி ஊற்றியது.

புடவை முந்தானையில் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் உள்ளே ஓடிவிட,

வேல்முருகன் சீற்றத்தோடு "பார்த்தீங்களாப்பா அவ திமிரை... நாம கேட்கிறதுக்கு பதில் சொல்லாம அவ பாட்டுக்கு போறா" என்றவன் சொல்ல, சண்முகவேலனுக்கும் உள்ளூர அவள் மீது கோபம் கனலாய் ஏறியது.

சிவசங்கரனின் விருப்பத்திற்கிணங்க செல்வியை மணமுடித்து வைத்தாலும் அந்த வீட்டில் உள்ள யாருக்குமே அவளைப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்த வீடு அவளுக்கு வீடாக இல்லை. கொடிய மிருகங்கள் வாழும் காடாகவே தோன்றியது.

திருமணம் ஆகி வந்த இரண்டாம் நாளே இத்தனை மோசமான அனுபவத்தை எதிர்கொண்டது அவள் மனதை ரொம்பவும் பாதித்திருந்தது. தனிப்பட்ட முறையில் இவர்கள் ஒவ்வொருவர் மீதும் வெறுப்பும் கோபமும் அவளுக்கு இருந்த போதும் சிவசங்கரனால்தான் இந்த வீட்டில் தான் சிக்கிக் கொண்டோம் என்ற எண்ணம் அவன் மீதான வெறுப்பை இன்னும் அதிகப்படுத்தியிருந்தது.

கண்ணீர் பெருக எழுத்துக்கள் மங்கிப் போன நிலையில் செல்லம்மா எழுதுவதை நிறுத்தினாள். அவள் கடந்து வந்த துயரங்களும், இழப்புகளும் வெறும் வார்த்தைகளால் மட்டும் வடித்துவிட முடியாது. அத்தனை ஆழமான வலி அது.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தாலும் அந்த நாளும் அதனால் அவருக்குள் உண்டான காயமும் இன்னும் அதே வலியோடு அவர் மனதில் இன்னமும் கனத்துக் கொண்டிருந்தது.

***

அந்த வார பாரதி இதழ் வெளியாகியிருந்தது. அதில் ஆதித்தபுரத்தைப் பற்றி வெளியாகியிருந்த செய்தி மாநகர மக்களுக்கிடையில் பரவலாய் பேசப்பட்டு, அது மெல்ல விவாதமாகவும் கோபமாகவும் மாறத் தொடங்கியிருந்தது.

அதாவது ஆதித்தபுர கிராமத்தில் பெரிய ரசாயன தொழிற்சாலை வரப்போவதாகவும் அவர்கள் அந்த ஊர் மக்களுக்கு வேலை தருவதாகச் சொல்லி அவர்கள் வாழ்வாதாரத்தைக் குலைக்கப் போவதாகவும் ஆதி எழுதி இருந்தாள்.

அவள் எழுத்து வெறும் வார்த்தைகளாக இல்லை. தீப்பொறியாய் பரவி அது பெரும் தீப்பிழம்பாக உருவெடுத்தது. சென்னை மாநகரமே ஆதித்தபுரத்தைப் பற்றி பரபரப்பாய் பேசிக் கொண்டிருக்க, ஆதி அன்று எப்போதும் போல் அலுவலகத்திற்குப் புறப்பட்டு சென்றாள்.

அங்கேயோ பெரும் கலவரமே நிகழ்ந்து கொண்டிருந்தது. சில முகம் தெரியாத நபர்கள் பத்திரிக்கை அலுவலக வாசலில் பெரும் கூச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்க,

அலுவலகத்தின் உள்ளே ஓர் இளைஞன் எல்லோரையும் தரக்குறைவாய் பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய கேள்வி ஒன்றாக மட்டுமே இருந்தது.

"யாருடா அவன் ஆதி? என்ன தைரியமும் திமிரும் இருந்தா எங்க ஊர் விஷயத்தைப் பத்தி எழுதுவான்... அவனைக் கூப்பிடுங்க... அவன் கை காலை உடைச்சி உப்புக்கண்டம் போட்டிடுறேன்"

அவன் பேச்சு அவன் கிராமத்திலேயே வளர்ந்து வாழ்ந்து ஊறிப் போன இளைஞன் என்பதை அப்பட்டமாய் தெரிவிக்க, வரைமுறையில்லாமல் பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞனிடம் அமுதா சமாதானம் பேசி அவனை அமைதியடைய செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

"சார்... நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க... ஆதி வந்ததும் நீங்க அவங்ககிட்ட பேசலாம்"

"நான் பேச வரல... நான் அவன் கை காலை உடைக்க வந்திருக்கேன்... அவனைக் கூப்பிடுன்னு சொல்லிட்டிருக்கேன்... என்னவோ கதை பேசிட்டிருக்க?!" என்றவன் தன் வேட்டியை மடித்து எகிற,

அதற்குள் ஹரீஷ் இடையில் வந்து, "ஹெலோ... இது பத்திரிக்கை ஆஃபிஸ்... நீங்க இப்படி எல்லாம் கலட்டா பண்ணக்கூடாது... முதல்ல வெளியே போங்க... இல்லாட்டி போலீஸுக்கு கால் பண்ண வேண்டியிருக்கும்" என்றவன் மிரட்டி அந்த இளைஞன் மீது கை வைத்துத் தள்ளிவிட்டான்.

அந்த இளைஞன் உச்சபட்ச கோபத்தோடு ஹரீஷை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வர, சரியாய் அந்தச் சமயத்தில் அலுவலத்தில் நுழைந்த ஆதி ஹரீஷை அடிக்கவிடாமல் அந்த இளைஞனின் ஓங்கிய கரத்தைப் பின்புறமாகப் பிடித்துக் கொண்டாள்.

அவன் அதிர்ச்சியுற்று நிற்க அவளோ அவன் முன்னாடி வந்து நின்று,

"யார் மிஸ்டர் நீங்க? எங்க ஸ்டாஃப்ஸ் மேல ஏன் கை ஓங்கிட்டு வரீங்க?" என்று கேட்டாள். அந்த இளைஞனோ ஆதியைப் பார்த்த நொடி ஆச்சர்யத்தில் சிலையாய் மாறிப் போனான்.

"ஹெலொ மிஸ்டர்... யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?" என்று ஆதி மீண்டும் அழுத்தி கேட்க அவன் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. அவன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நிற்க, அப்போது ஆதியின் காதோரம் அமுதா,

"இவ்வளவு நேரமா அவன் ஆதி எங்கன்னு கேட்டுதான் கலட்டா பண்ணிட்டிருக்கான்" என்று உரைத்தாள்.

ஆதி தன் கரங்களைக் கட்டிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள், "நான்தான் ஆதி... என்ன வேணும் உங்களுக்கு?" என்று புருவத்தை ஏற்றினாள்.

ஏற்கனவே அவன் திகைத்துப் போயிருக்க, அவள் தான்தான் ஆதி என்று சொன்னது அவனை இன்னும் வியப்பிலாழ்த்தியது. அத்தனை நேரம் புலியாய் சீறிக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பூனையாய் மாறிப் போயிருந்தான்.

Quote

Super ma 

You cannot copy content