You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 8

Quote

சூட்சமம்

ஆதித்தபுரம். அன்று நாம் கண்ட ஆதித்தபுரமோ பசுமை படர்ந்திருந்தது. ஆனால் இன்றைய ஆதித்தபுரமோ தன்னுடைய அழகையும் பொலிவையும் இழந்து காணப்பட்டதென்றே சொல்ல வேண்டும். வயல்வெளிகள் எல்லாம் தண்ணீர் தட்டுப்பாட்டால் பயிரிடப்படாமல் வெற்றாய் இருக்க, ஆடு, மாடு, கோழி எனக் கால்நடைகள்கூடக் கண்களுக்குச் சற்று அரிதாகவே புலப்பட்டன.

மனிதன் முன்னேற்றம் என்ற பெயரில் செய்துவரும் வேலைகள் நமக்கே கேடு விளைவிப்பதோடு இல்லாமல் மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்த்து கேடு விளைவிக்கிறது.

மனிதன்?… எல்லா உயிரினங்களுடனும் இயற்கையினுடனும் ஒன்றிணைந்து இருந்தக் காலக்கட்டத்திற்கும் இப்பொழுது நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் காலக்கட்டத்திற்கும்தான் என்னே வேறுபாடு!!! அந்த மனிதனை எதற்காக தொலைத்தோம்? எங்கே தொலைத்தோம்?

ஆதித்தபுரத்தில் விவசாயத்திற்கான அடிப்படைத் தேவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வர இன்று அந்த ஊர் மக்கள் ஒரு ரசாயன தொழிற்சாலையில் அடி மாடாய் வேலை செய்யத் தயாராகியிருந்தனர்.

ஆனால் விழிப்புணர்வு கொண்ட சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, அந்தச் சத்தம் பெருமளவில் ஒலிக்கவில்லை. இத்தகைய மோசமான மாற்றங்களுக்கிடையில் ஆதித்தபுரத்தில் உள்ள ஆதிபரமேஸ்வரி ஆலயமும் அதன் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையும் மட்டும் குன்றவே இல்லை.

வானை முட்டும் கோபுரங்கள் எல்லாம் கிடையாது. எனினும் பழமையின் பதிவில் அந்தக் கோயில் வாழ்ந்து கொண்டிருந்தது. ரொம்பவும் சிறிய அளவிலான கோயில்தான் அது. ஒற்றைக் கோபுரமும் அதன் மீது மின்னிக் கொண்டிருக்கும் செம்பு கலசமும்,

அதன் நேராகக் கீழே ஒற்றைக் காலை மடித்தபடி சிலையாய் அமர்ந்திருந்தாள் ஆதிபரமேஸ்வேரி. சுமார் இருபது வருடங்களாய் அவள் சிலையாகவே மாறிவிட்டாள் போலும். அந்த ஊரின் பசுமையும் செழிப்பும் தேய்ந்துக் கொண்டே வந்திருந்தது. ஆனால் கோயிலுக்கான பூஜைகள் மட்டும் இடைவிடாமல் நடந்துகொண்டுதான் வருகின்றன.

இருப்பினும் ஆதிபரமேஸ்வரியின் அருள் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்பதுதான் கேள்வி குறி. இப்பொழுது அந்தத் தொழிற்சாலை மட்டும் வந்துவிட்டால் அந்த மக்கள் ஆதித்தபுரத்தை மொத்தமாய் மறந்துவிட்டு அகதிகளாய் வேறு ஊரில் குடிபெயர வேண்டியதுதான்.

இப்படிப்பட்ட சூழலில் இனி ஆதிபரமேஸ்வரி மட்டுமே அந்த ஊரைக் காப்பாற்ற முடியும். ஆனால் அது எந்த ஆதிபரமேஸ்வரி?

அந்தக் கேள்விக்கான விடை இப்போதைக்கு நம்மிடம் இல்லாத பட்சத்தில், ஆதிபரமேஸ்வரி ஆலயத்தில் அம்மனைத் தரிசித்துவிட்டு கோயிலைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் அந்த சகோதரிகளைப் பின்தொடர்வோமாக...

அவர்கள் இருவரும் இறைவனை தவிர மற்ற எல்லாக் கதைகளையும் பேசியபடி ஆலயத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்க,

"ஏன் சங்கரி... அந்த ஃபேக்டிரி கட்டுகிற வேலையை நிறுத்தி வைச்சிருக்காங்க போல" என்று அவர்களில் ஒருவள் கேட்க,

"ஆமாம் க்கா... இப்போதைக்கு நிறுத்தி வைச்சிருக்காங்க" என்றாள்.

"எப்படிறி ?... அந்த சரவணன் ஊருக்குள்ள ஃபேக்டிரி வந்தே தீரும்னு கங்கனம் கட்டிக்கிட்டு திரிஞ்சான்"

சங்கரி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து ஓரமாய் இழுத்து வந்து அவள் காதோடு, "நான் இப்ப சொல்றதை மனசோட வைச்சக்கணும்" என்று சொல்ல அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த இன்னொருவள், "அப்படி என்னடி விஷயம்?" என்க,

"நான் பாரதி பத்திரிக்கைகக்கு எழுதின ஒரு லெட்டர்... அதுதான் எல்லாத்துக்கும் காரணம்" என்றாள் சங்கரி.

"என்ன லெட்டர்? என்ன பத்திரிக்கை?" என்று அந்தப் பெண் புரியாமல் கேட்டாள்.

"பேர்தான் வித்யா? மூளையே இல்ல" என்று தன் சகோதரியைப் பார்த்துச் சங்கரி கடுகடுக்க,

"நீ முதல்ல விஷயத்தைச் சொல்லு... சுத்தி வளைக்காதே" என்றாள்.

"நான்... இந்த ஃபேக்டிரி விஷயமா என்ன பன்றதுன்னு யோசிச்சேன்னா... அப்புறம் ஏன் பத்திரிக்கைக்கு எழுதிப் போடக் கூடாதுன்னு நினைச்சு... நிறைய பத்திரிக்கைக்கு எழுதிப் போட்டேன்... ஆனா பாரதி பத்திரிக்கையில்தான் இந்த விஷயத்தை விசாரிச்சு உடனே பப்ளீஷ் பண்ணிட்டாங்க... சும்மா இல்ல... எல்லாத் துறையையும் அதிரடியா கேள்வி கேட்டு ஆதி எழுதின கட்டுரை சூப்பர்... பெரிய ரீச்... அதோட விளைவுதான் எல்லாம்" என்றவள் சொல்லிக் கொண்டிருக்க,

வித்யா நம்ப முடியாமல் வாயடைத்துப் போய் நின்றாள்.

"என்ன க்கா?" என்றுக் கேட்டு அவளை அதிர்ச்சியிலிருந்து மீட்க,

"இவ்வளவு பெரிய வேலையைச் செஞ்சிட்டு கமுக்கமா இருக்க... சரி அந்த பாரதி பத்திரிக்கை ஆஃபிஸ் எங்கடி இருக்கு... எப்படி இதெல்லாம் உனக்கு தெரியும்?" என்று சந்தேகித்து கேட்கவும்,

"அந்த புக் இங்கெல்லாம் கிடைக்காதுக்கா... சென்னையிலதான்... காலேஜ் படிக்கும் போது அந்த புக்கை நான் வாங்கி படிச்சிருக்கேன்... நேர்மையா தைரியமா கருத்துக்கள் சொல்கிற பத்திரிக்கையில் இதுவும் ஒண்ணு... அதுவும் ஆதியோட எழுத்தும் புதுமையான கருத்தும்... பாராட்ட வார்த்தையே இல்லைக்கா... ஹீ இஸ் கிரேட்" என்று சொல்லி சங்கரி கனவுலகத்தில் சஞ்சரிக்க,

"பார்க்காத ஒருத்தர் மேல உனக்கு இவ்வளவு அபிப்பிராயமாடி" என்று வித்யா அவளைப் பரிகசித்தாள்.

சங்கரி அப்போது ஏக்கமாய் பெருமூச்சொன்றை வெளியேவிட்டு, "ஹி இஸ் ரியல் ஹீரோக்கா!" என்று ஆதியின் எழுத்தின் மீதான காதலில் பொங்க,

"ஹ்ம்ம்... ஹ்ம்ம்... புரியுது... புரியுது... பேசாம அந்த ஹீரோவுக்கு நீ லவ் லெட்டர் ஒன்னும் சேர்த்து போடறதானே"

"போட்டேனே.. அதுக்கு மட்டும் பதில் வரலையே" என்று சங்கரி அலுத்துக் கொள்ள, "அடிப்பாவி" என்று வித்யா அதிர்ச்சியில் வாயைப் பொத்திக் கொண்டாள்.

இப்படி அவர்கள் கதைப் பேசிக் கொண்டே கோயிலை மும்முறை வலம் வந்திருக்க, சங்கரி தன் சகோதரியிடம், "ஷ்ஷ்ஷ்... அப்பா" என்று சொல்லிச் சமிக்ஞை செய்ய, கோயில் முன்புறத்தில் கொஞ்சம் வயதான தோற்றத்தோடு ஒருவர் அமைதியே உருவமாய் அமர்ந்திருந்தார்.

அந்தப் பெண்களும் அவர் அருகில் சென்று அமர்ந்து கொள்ள, சங்கரி தன் பூஜைக்கூடையில் இருந்த தேங்காய் மூடியை உடைத்து தன் சகோதரிக்கும் தந்தைக்கும் பங்கு கொடுத்துவிட்டு தானும் உண்டாள்.

அவள் பார்வை கூர்மையாய் அந்தக் கோயில் கோபுரத்தையே நோக்க, அப்போது ஆதி கோயில்கள் பற்றி எழுதின கட்டுரை அவள் நினைவுக்கு வந்தது. அவள் உடனே தன் தந்தையின் புறம் திரும்பி,

"அப்பா... நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?" என்க,

அவரும் தன் மௌனத்தைக் கலைத்து, "கேளுமா" என்றார்.

"நம்ம கோயிலுக்குன்னு ஏதாச்சும் வரலாறு இருக்காப்பா" என்றவள் வினவ அந்தக் கேள்வி அவரின் உறங்கிக் கொண்டிருந்த நினைவுகளை எழுப்பிவிட்டது.

மூச்சை இழுத்துவிட்டவர், "இருக்கும்மா.." என்றதும் சங்கரியும் வித்யாவும் ஆவல் ததும்ப,

"சொல்லுங்கப்பா" என்றனர்.

"சொல்றேன்... ஆனா இப்ப இல்ல... வீட்டில அம்மா தேடுவா... நீங்க முதல்ல வீட்டுக்கு போங்க... நான் வந்து சொல்றேன்" என்று சொல்லி அவர்கள் இருவரையும் பார்க்க, சங்கரி ஜோராகத் தலையாட்டிவிட்டு எழுந்திருக்க வித்யாவும் புறப்பட்டாள்.

ஆனால் அவர் மட்டும் இன்னும் சிறிது நேரம் கோயிலிலிருந்துவிட்டு வருவதாகச் சொல்லி அங்கேயே அமர்ந்திருந்தார்.

அப்போது சங்கரி தன் சகோதரியிடம், "அவருக்கு அவர் ஃப்ரண்ட் ஞாபகம் வந்திருச்சு போல" என்று சொல்லியபடி இருவரும் கோயிலின் வாயிலுக்கு வர,

அங்கே ஒரு வயது முதிர்ந்த பாட்டி அழுக்கு உடையுடன் தலையெல்லாம் சிக்காகி கொம்பு ஒன்றை அருகில் வைத்துக்கொண்டு பல ஆண்டுகள் பழமையான அரச மரத்தடியில் சாய்ந்து கிடந்தாள்.

அங்கே இருந்த யாரும் அந்த வயது முதிர்ந்த பாட்டியைக் கவனிக்காத போது, சங்கரி மட்டும் அந்தப் பாட்டிக்குத் தன் கையிலிருந்த வாழைப்பழத்தைக் கொடுத்து விசாரித்தாள்.

அவர் ஊமைப் பாஷையில் ஏதோ கையசைத்து சொல்ல, அவள் அதனைப் புரிந்துகொள்ள இயலாமல் பேந்த பேந்த விழிக்க, இது எப்போதும் நடப்பதுதான்.

அந்தப் பாட்டி சொல்ல வருவது என்னவென்று அந்த ஊரில் உள்ள யாருக்கும் இதுவரை புரிந்ததில்லை. ஏதோ வயது முதிர்ந்தவள் பித்துப்பிடித்துக் கிடக்கிறாளென எண்ணியிருக்க, அவரின் ஊமையான சொற்களுக்குப் பின்னணியில் ஓர் உண்மை ஒளிந்திருப்பதை அதுவரை யாருமே அறிந்திருக்க முற்படவில்லை.

அதேநேரம் கோயிலில் அமர்ந்திருந்த சங்கரியின் அப்பாவிற்கு அவருடைய பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த தன் நண்பன் சிவசங்கரனின் நினைவு வந்தது. சிவசங்கரன் தான் வாழ்ந்த குறுகிய காலத்தில் பலரின் மாறாத நினைவுகளில் காலங்கள் தாண்டி வாழ்ந்துகொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அவர்களில் ஒருவர்தான் சங்கரியின் தந்தை சோமசுந்தரம்.

*****

சோமசுந்தரம் சிவசங்கரனின் ஒரே நெருங்கிய நண்பன். சிவசங்கரன் ஆதிபரமேஸ்வரி ஆலயத்தில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருக்க, சோமு தன் நண்பனைத் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு அங்கே வந்திருந்தான்.

"என்ன சங்கரா? உன்னை எங்கெல்லாம் தேடறது" என்றவர் கேட்டபடி சங்கரன் அருகில் அமர, அவனோ மௌனமாய் இருந்தான்.

சோமு மீண்டும், "என்னடா?! கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகுது... அதுக்குள்ள என்னடா கவலை உனக்கு?!" என்று கேட்டுவிட்டு சிவசங்கரனைப் பேசவிடாமல் பதிலையும் சோமுவே யூகித்தார்.

"எனக்கு தெரியும்... இப்ப கூட உங்க அண்ணனுங்க எல்லாம் வேலையை உன் தலையில கட்டிட்டு தப்பிச்சிக்கிறாங்க... இல்ல" என்க,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்றான் சிவசங்கரன் அலுத்தபடி!

"அப்புறம் என்னதான்டா பிரச்சனை? எவ்வளவு போராடி சண்டைப் போட்டு அந்த செல்வி புள்ளய நீ விரும்பி கட்டிகிட்ட... சந்தோஷமா இருப்பியா.. அதை விட்டுட்டு உம்முனு மூஞ்சை வைச்சிருக்க"

"நான் விரும்பிக் கட்டிக்கிட்ட மாதிரி அவ என்ன விரும்பலயே" வேதனையோடும் வலியோடும் சிவசங்கரன் சொல்லிப் பெருமூச்செறிய,

"உளறாதடா... உன்னைப் போய் எந்தப் புள்ளைக்காவது பிடிக்காம போகுமா... அதுவும் அந்த செல்வியை பத்தி ஊருக்குள்ள என்னவெல்லாம் சொன்னாங்க... பித்து பிடிச்சிடுச்சு... காத்து கருப்பு அடிச்சிடுச்சுன்னு... அவங்க பேச்சை எல்லாம் பொய்யாக்கற மாதிரி ஊரே அசந்து போக அவள நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட... செல்வி போய் உன்னைப் பிடிக்கலன்னு சொல்லுமா... நீ ஏதோ தப்பா யோசிக்கிற சங்கரா"

"என்னை பிடிக்கலன்னு என் முகத்துக்கு நேரா சொன்னாளே" என்று சங்கரன் சொல்ல சோமு அதிர்ந்தார்.

"அப்போ உண்மையிலேயே அந்தப் புள்ளைக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கணும்" என்றவர் சொன்னதுதான் தாமதம்,

சிவசங்கரன் தன் நண்பனை முறைத்து, "மூடு வாயை... அவ மனசுல இருக்கிறத வெளிப்படையா சொன்னா உடனே பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொல்லிடுவீங்களா... அவ மனசுல என்ன கஷ்டமோ... பாவம் சொல்ல முடியாம தவிக்கிறா" என்றவன் அப்போதும் செல்வியின் நிலைமையைப் பற்றி யோசித்து பரிதாபப்பட்டுக் கொண்டிருக்க,

அந்தச் சமயம் கோயிலை நோக்கி இருவர் நடந்து வந்து கொண்டிருந்தனர். சிவசங்கரன் புருவங்கள் சுருங்க அவர்களைக் குழப்பமாய் பார்த்துவிட்டுத் தன் நண்பனையும் பார்க்க சோமுவும் புரியாமல் விழித்தான்.

சிவசங்கரன் எழுந்து நின்று, "வெள்ளையப்பா... யாருடா அது? வெளியூர்காரங்கள நம்ம ஊருக்குள்ள கூட்டிட்டு வரக்கூடாதுன்னு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல" என்று மிரட்டலாய் கேட்க,

"இல்ல ண்ணே... நம்ம கோயிலைப் பத்தி ஏதோ தெரிஞ்சிக்கணும்னு சொன்னாரு" என்று வெள்ளையப்பன் பதிலுரைத்தான்.

"அதுக்காக யாரு என்னன்னு கேட்க மாட்டியா?" என்று சிவசங்கரன் அவனைக் கடிந்து கொள்ள, அப்போது உடன் வந்த அந்த புது நபர் சிவசங்கரனிடம்,

"தப்பா எடுத்துக்காதீங்க... என் பேர் மனோகர்... நான் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்... உங்க கோயில் ரொம்ப பழமையானதுன்னு கேள்விப்பட்டேன்... அதான் பாத்துட்டு கோயிலோட வரலாறு பத்தி தெரிஞ்சிட்டு போலாமேன்னு"

சிவசங்கரன் அவனை ஏறஇறங்க பார்த்துவிட்டு, "சரி சரி... பாத்துட்டு கிளம்புங்க" என்றவன் தன் நண்பனை உடன் அழைத்துக் கொண்டு அவர்களைக் கடந்து செல்ல,

அப்போது மனோகர் வெள்ளையப்பனிடம் கண்ணசைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தச் சொன்னான்.

"அண்ணே ஒரு நிமிஷம்" என்று வெள்ளையப்பன் அழைக்க,

"என்னடா? உனக்குதான் பொழப்பில்ல... எங்களுக்கு ஆயிரம் ஜோலி இருக்கு" என்று சோமு சொல்லிக் கொண்டிருக்கும் போதே மனோகரன் அருகில் வந்து,

"நீங்க இந்த கோயிலைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச வரலாற்றை சொன்னீங்கன்னா என்னோட ஆராய்ச்சிக்குக் கொஞ்சம் வசதியா இருக்கும்" என்றான்.

"அதெல்லாம் எவனுக்குத் தெரியும்.. சாமிய கும்பிட்டு போறதோட சரி" என்று சோமு சொல்ல,

இம்முறை சிவசங்கரன் கோபித்து கொள்ளாமல் அவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றான். அவன் பாட்டி அவனிடம் அந்தக் கோயிலின் வரலாற்றுக் கதைகளைச் சொன்னது அவனுக்குப் பசுமையாய் இன்றும் ஞாபகம் இருந்தது.

சிவசங்கரன் அந்த வரலாற்றைக் கதைபோல் சொல்லத் தொடங்க எல்லோரும் ஆவலாய் கேட்க ஆரம்பித்தனர்.

"நீங்க சொன்ன மாதிரி இந்தக் கோயில் ரொம்ப பழமையானதுதான்... ஆதித்தியவர்மன்னு ஒரு குறுநில மன்னன் இருந்தானாம்... அந்த மன்னனுக்கு போர் செய்து ஆட்சியை விஸ்திரம் செய்றது... இதில் எல்லாம்  நம்பிக்கை இல்லை... தேவையில்லாம மக்கள் சக்தி வீணாக்கக் கூடாதுன்னு அவனோட எண்ணம்... அவன் ஆட்சி செஞ்சிட்டிருந்தபோது பயங்கரமான காத்து புயல் மழை இடின்னு பெரிய இயற்கை சீற்றம் ஏற்பட்டுச்சு.

சுற்றியிருந்த பலநூறு கிராமங்கள் அந்தப் பெரிய இடி மழையில் ஒண்ணுமே இல்லாம போயிடுச்சு... பஞ்சம் பட்டினின்னு பெரிய பாதிப்பு ஏற்பட்டபோது ஆதித்தியவர்மன் அந்த கிராமங்களைத் திரும்பியும் தன் கருவூலத்தில் இருந்த செல்வம் எல்லாத்தையும் செலவு செஞ்சு மீட்டெடுத்தான்னு ஒரு பழைய கதை... அவன் அதோட விடல… இங்க சுத்தி இருக்கிற கிராம மக்கள் வணங்கிய, சக்தி வாய்ந்த, அந்தப் புயலில் சிதைஞ்ச பரமேசுவரி அம்மன் கோயிலையும் கட்டிக் கொடுத்தானாம்... பரமேசுவரி அம்மனை அதிலிருந்து அவன் பேரோட இணைச்சு... ஆதிபரமேஸ்வரி அம்மன் கூப்பிட ஆராம்பிச்சிட்டாங்க... அவன் பேர் வழி வழியா நிலைச்சு நிக்கனும்னு இந்தக் கிராமத்தை அவனோட பேரிலேயே மாத்திட்டாங்களாம்...

ஆதித்தியாபுரம்தான் பேச்சு வழக்கில ஆதித்தபுரம்னு மாறிடுச்சு... இந்தக் கோயிலோட அருளாலயும் சக்தினாலயும் அப்படியொரு மோசமான பாதிப்பும் இயற்கை சீற்றமும் திரும்பியும் அதுக்கப்புறம் தாக்கினதில்லைனு பாட்டி சொல்லுவாங்க" என்றவன் சொல்லிமுடிக்க ஆராய்ச்சியாளர் மனோகரன் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியது.

"உண்மையிலேயே சக்தி வாய்ந்த சாமிதான்" என்று மனோகரன் சொல்ல, அதற்குப் பின் அந்த நண்பர்கள் இருவரும் அவரவர்கள் வேலையைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றனர்.

இவ்வாறு சோமு தன் மனதின் ஆழத்தில் இருந்த பழைய ஞாபகங்களை வெளிக்கொணர, அவர் மனமெல்லாம் நண்பனின் நினைவால் வேதனையில் மூழ்கியது. இங்கே சோமுவின் நினைவலைகள் முடிந்தாலும்,

அன்று சிவசங்கரன் சொல்லிக் கொண்டிருந்த வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மனோகரனின் கண்ணோட்டமும் எண்ணமும் கொஞ்சம் வித்தியாசமாய் சிந்தித்து கொண்டிருந்ததைப் பற்றி வாசகர்களிடம் நாம் தெரிவித்தேயாக வேண்டும்.

எல்லோரும் அதைக் கோயிலாய் பார்க்க மனோகரனின் மூன்றாவது கண் அதாவது... அறிவியல் கண் அவருக்கு வேறெதையோ உணர்த்தியது.

ஆதித்தியவர்மன் கோயிலை மட்டும் புதுப்பிக்கவில்லை... அதைத்தாண்டி அங்கே அமைந்த கிராமங்கள் வளமையாய் இருக்க ஏதோ ஒரு சூட்சமத்தை வைத்திருக்கிறான். இவ்வாறு மனோகரன் எண்ணம் சற்று விபரீதமாய் பயணிக்க, அப்போதைக்கு அந்த எண்ணம் யாரும் அறியாத ரகசியமாய் அவன் மனதில் மட்டும் புதையுண்டு கிடந்தது.

Quote

Super ma 

Quote

priligy in usa To assess pro survival protein expression in cells cultured in 2D and 3D conditions, assays were prepared as described above

Quote

91 Testimony by a veterinarian confirming the consistency of the injuries with those incurred in training or fighting cost of generic cytotec

Quote

6 of direct costs 142 finax for sale com, an online analysis tool to determine breast cancer recurrence scores and hormone receptor status using microarray data 52

You cannot copy content