You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 12

Quote

12

ஹரீஷ் பாதி வழியிலேயே போதை மயக்கத்தில் உறங்கியதோடு அல்லாமல் அமிர்தா அமிர்தா என்று உளறிக் கொட்டிக் கொண்டு வந்தான்.

“எந்திருங்க சார்… எந்திருங்க… ஏர்போர்ட் வந்திருச்சு” விமான நிலையத்தை அடைந்ததும் தேவா அவனை உலுக்கி எழுப்ப அவன் கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “நாம இப்போ எங்கே இருக்கோம்?” என்று கேட்டு வைக்க,

“ஏர்போர்ட்ல கீறோம் சார்” என்றான்.

“எதுக்கு…? ஏன்…? என் அமிர்தா டார்லிங் வந்திருக்காளா?” என்று போதையில் மீண்டும் எழுந்து உளறிவிட்டு மயங்கினான்.

இப்போதைக்கு இவன் போதை தெளியாது என்று விளங்க அவன் தனியாக விமான நிலையத்திற்குள் சென்றான். அவனுக்கு ஆல்வினை பற்றித் தெரியாது.

பேந்த பேந்த விழித்தபடி கடந்து சென்ற பயணிகளை அவன் ஆராய்ச்சியுடன் பார்த்தான். எப்படி ஆல்வினை அடையாளம் கண்டுபிடிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை.

ஹரீஷின் அலைபேசியைக் கையுடன் எடுத்து வந்திருந்த போதும் கடவுச்சொல் தெரியாமல் அதனைத் திறக்க முடியவில்லை. ஆல்வினின் படத்தையும் பார்க்க முடியவில்லை.

எனினும் ஆல்வின் அவனைத் தொடர்பு கொள்ளலாம் என்று எண்ணி அவன் அந்த அலைபேசியை உற்றுப் பார்த்திருக்கும் போது அவன் எதிரே ஓர் உயர்ந்த மனிதன் வந்து நின்றான்.

அவன் தலையுயர்த்திப் பார்க்க, “தேவா ரைட்” என்று கேட்டு தம் கரங்களை நீட்டினான் அந்த நெடுநெடு மனிதன்.

“சாரு?”

“ஆல்வின்… அமராவோட அப்பா” என்று அறிமுகம் செய்து கொண்டான்.

அவன் விழிகள் வியப்புடன் ஆல்வினை நோக்கின. கருத்த மேனி. கலையான முகம். கம்பீரமான உடல் வாகு. இதெல்லாம் தாண்டி அசாத்திய உயரம் கொண்ட அந்த மனிதன் இளமையுடன் காட்சியளிக்க, அவன் தன் பார்வையை அகற்றவே இல்லை.

ஆல்வின் நீட்டிய கரத்தை இறக்காமலே, “நைஸ் டூ மீட் யூ” என்று சொல்ல அப்போதே சுயநினைவு பெற்ற தேவா அவன் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு,

“என்னைய உனக்கு தெரியுமா சார்?” என்று சந்தேகத்துடன் கேட்டு வைத்தான்.

“தெரியுமே… அமராவோட ஹஸ்பென்ட்”

அவன் வியப்பு அதிகரிக்க ஆல்வின் புன்னகையுடன், “போலாமா?” என்று கேட்டதும்,

“ஆ… ஆன்… போலாம் சார்” என்றவன் அவரிடமிருந்த பெட்டியை வாங்கிக் கொள்ள,

“இட்ஸ் ஓகே… தேவா… நானே எடுத்துட்டு வரேன்” என்ற போதும் அவன் விடாமல் ஆல்வினின் பெட்டியை வாங்கித் தள்ளிக் கொண்டு வந்தான்.

காரில் உறக்கத்திலிருந்து ஹரீஷைப் பார்த்து ஆல்வின், “இது பாலமுருகன் சாரோட ஸன்தானே” என்று விசாரிக்கவும்,

“ஆமா சார்… ஏதோ களைப்புல தூங்கிட்டாரு” என்று அவன் குடி மயக்கத்திலிருப்பதைச் சொல்லாமல் தவிர்த்துவிட்டான்.

ஆல்வின் அவன் சொன்னதை நம்பாவிட்டாலும் புன்னகையுடன் தலையசைத்து, “ஓகே… நான் பின்னாடி உட்கார்ந்துகிறேன்” என்றான்.

காரை ஓட்டிக் கொண்டு வந்த தேவா ஆச்சரியத்துடன், “என்னை எப்படி சார்… பார்த்ததும் அடையாளம் கண்டுக்குனீங்க?” என்று கேட்க,

“பாலமுருகன் சார்… உன்னைப் பத்தி… அமரா பத்தி எல்லாத்தையும் சொன்னாரு… கூடவே உங்க ஃபோட்டோஸ் எல்லாம் கூட அனுப்பிவிட்டாரு” என்று தெரிவிக்க,

“அல்லாமே னா அல்லாமே… சொன்னாரா சார்” என்றவன் ஒரு மாதிரி தயக்கத்துடன் கேட்டபடி முன் கண்ணாடி வழியாக ஆல்வின்  முகபாவத்தையும் நோட்டம்விட்டான்.

“எல்லாமே சொன்னாரு தேவா… நீயும் அமராவும் எங்க இருந்தீங்க… எங்க வளர்ந்தீங்க… என்ன தொழில் செஞ்சீங்க… எப்படி கல்யாணம் பண்ணீங்க… கடைசியா எப்படி தப்பிச்சு வந்தீங்க” என்று  உரைத்த போது அவன் கண்களில் எவ்வித சலனமும் தெரியாததில் தேவாவிற்கு ஆச்சரியம்தான்.

அதன் பின் அவன் மௌனமாக யோசித்து கொண்டே வர, “தேவா” என்று அழைத்தான் ஆல்வின்.

“சார்” என்றவன் முன் கண்ணாடியைப் பார்க்க,

“நான் உனக்கு சார் இல்ல தேவா… மாமனார்… மாமான்னே கூப்பிடு” என்றதும் அவன் வியப்பின் விளம்பிற்கே சென்றுவிட்டான்.

அமியை மகளாக ஏற்றுக் கொண்டாலும் தன்னை ஏற்றுக் கொள்வாரா என்று அவனுக்கு உள்ளுர பயமாகதான் இருந்தது. ஆனால் இத்தனை சாதாரணமாக ஆல்வின் ஏற்றுக் கொண்டு பேசியது அவன் மனதின் பயத்தைப் போக்கிவிட்டது.

அவர்கள் வீட்டில் இறங்கியதும் தேவா இறங்கி கதவைத் திறந்துவிட்டான். மேலும் அவன் பெட்டிகளைத் தூக்கிக் கொள்ள,

“இருக்கட்டும் தேவா… நான் எடுத்துக்கிறேன்” என்றான்.

“அதுக்கு இன்னா சார்… நான் தூக்கிக்கிறேன்” என,

“திரும்பியும் சாரா?” என்று அவனை முறைக்க அசட்டுத்தனமான புன்னகையுடன்,

“டக்குன்னு வரல சார்… ஆனா மாத்திகிட்டு… மாமான்னு கூப்பிட்டுப் பழகிக்கிறேன்” என்றான்.

“குட்” என்று தேவா தோளில் தட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவன் விழிகளை எதிர்பார்ப்புடன் சுழற்ற கீதா புன்னகையுடன் ஆல்வினை வரவேற்று உபசரித்தார்.

“அமரா எங்கே?” என்று ஆல்வின் கேட்கவும்,

“மேலே ரூம்ல இருக்கா… கூட்டிட்டு வரேன்” என்று திரும்பிய சமயம் பெட்டியுடன் தேவா நுழைய,

 “அமி மேலே இருக்கா… போய் கூட்டிட்டு வர்றியா ப்பா” என்றார்.

“இதோ போறேன் மா” என்றவன் செல்வதற்கு முன் காரில் குடி போதையில் மயங்கியிருக்கும் ஹரீஷின் நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டுச் சென்றான்.

“ஐயோ கடவுளே” என்று தலையிலடித்துக் கொண்ட கீதா, “ஒரு நிமிஷம்… வந்துடுறேன்” என்று ஆல்வினிடம் சொல்லிவிட்டு காருக்கு சென்று மகனின் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுப்பிவிட்டார்.

முகத்தைச் சிணுங்கியபடி விழிகளைத் திறந்தவன் கீதாவைப் பார்த்ததும், “ஏன் மா தண்ணியை ஊத்துன?” என்று கேட்க,

“நீ உள்ளே ஊத்தி இருக்க தண்ணிக்கு இதெல்லாம் பத்தாது… உன்னைத் தண்ணில தள்ளணும்… இதுல காரை ஓட்டிட்டுப் போறேன்னு சீன் வேற” என்று கடுப்புடன் பேச,

அவன் சம்பந்தா சம்பந்தமில்லாமல், “அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுமா?” என,

“அவளுக்கு கல்யாணம் ஆனா ஆகுது... ஆகாட்டி போகுது… நீ என் மானத்தை வாங்காம எழுந்து வாடா” என்று அவனை எழுப்பி வெளியே இழுத்தார்.

“வரேன் மா… இரு” என்று அவனே ஒரு வழியாக மயக்கம் தெளிந்து எழுந்து வர,

“ஒழுங்கா பின் வாசல் வழியா ரூமுக்குப் போய் படுக்கிற வழியைப் பாரு… உங்க அப்பா முன்னாடி இப்படி வந்து  நின்ன உன்னைக் கொன்னே போட்டுடுவேன்” என்று கீதா எச்சரிக்க,

“ரைட்டு விடு… வரல” என்றவன் தட்டுத் தடுமாறி பின்வாயிற்புறம் சென்றுவிட்டான். இவன் பிறந்த நாளிலிருந்து இன்று வரையில் கீதாவிற்குக் கத்தி மேல் நடப்பது போலதான் ஒவ்வொரு நாளும் கடந்தது. எது செய்தாலும் இப்படி அதிகப்படியாகச் செய்து அவர் உயிரை வாங்குவதை அவன் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தான். 

அவர் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு உள்ளே செல்லும் அதேநேரத்தில் தேவா மாடியறையில் கையைப் பிசைந்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அமியைப் பார்த்து திகைத்து,

“பார்றா புடவை எல்லாம் கட்டின்னு கீற” என்று சொல்ல அமி அவனைப் பார்த்துவிட்டு, “அவரு வந்துட்டாரா?” என்று படபடப்புடன் கேட்டாள்.

“வந்துட்டாரு… கீழேதான் கீறார்… வா” என்று தேவா அழைக்க அவள் அப்படியே நின்றுவிட,

“இன்னா அமி வா” என்றான் தேவா.

“அது இல்ல… எனக்கு ஒருமேறி இருக்கு தேவா” என்றவள் தயக்கத்துடன் சொல்ல,

“இன்னாடி… இத்தினி வருஷம் கழிச்சு அப்பாவைப் பார்க்கபோற… சந்தோஷமா இல்லாம சங்கடப்பட்டுன்னு கீற” என்றவன் வினவ,

“தெரியல டா… படபடன்னு இருக்கு… அவரான்ட இன்னா பேசறது… எப்படி பேசறதுன்னு தெரியல” என்றவள் கவலையுடன் சொல்ல,

“எனக்கும் முதல அப்படிதான் இருந்துச்சு… ஆனா அவராண்ட  பேசனதுக்கு அப்பால பயம் அல்லாம் பூடுச்சு… நல்ல மனுஷன் அமி” என்றவன் ஆல்வினுக்கு அக்மார்க் முத்திரை தந்ததோடு நிறுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வீடு வரும் வரையிலான விஷயங்களை சுருக்கமாகச் சொல்லி முடிக்க அவள் வியப்புடன்,

“மெய்யாலுமாவா” என்று கேட்டாள்.

“அது மட்டியும் இல்ல… என்னை மாமானு கூப்பிட சொல்லிக்கினாரு… தெரியுமா?” என்று சொல்ல, அவள் விழிகள் அகல விரிந்தன. அதன் பின் தேவா தாமதிக்காமல் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே சென்று ஆல்வின் முன்னிலையில் நிறுத்திவிட்டான்.

சோஃபாவில் அமர்ந்திருந்த ஆல்வின் எதிரே வந்து நின்ற அமராவைப் பார்த்து எழுந்து நின்றார். இருவருமே சில நொடிகள் மெளனமாக நிற்க அமியின் கண்கள் கலங்கிவிட்டன. ஆல்வின் விழிகளிலோ அப்படியொரு பிரகாசம். விலைமதிப்பில்லா ஒரு பொக்கிஷத்தைப் பார்த்துவிட்ட பரவசம்.

அந்தப் பரவசத்துடன் உலகத்தையே வென்ற உணர்வு. இத்தனை வருட தேடல் வெற்றிகரமாக முடிவுற்ற பெருமிதத்துடன்,

“அமரா” என்று அழைக்க,

“ப்பா” என்று அவள் அருகில் செல்லவும் அவளை அணைத்துக் கொண்டார் ஆல்வின்.

அவளுக்குள் இருந்த தயக்கம் பயமெல்லாம் ‘அமரா’ என்ற ஒற்றை அழைப்பில் நீங்கிவிட்டது. இத்தனை வருடங்களில் அவளின் சொந்த பெயரே முற்றிலும் மறந்து அடையாளம் தெரியாமல் மாறிவிட்ட அவள் வாழ்க்கையில் விதி மீண்டும் அவளை ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு சேர்த்திருக்கிறது. மீண்டும் இழந்த உறவை மீட்டுத் தந்திருக்கிறது. 

அந்த உணர்வுபூர்வமான காட்சியைப் பார்த்து கீதாவும் தேவாவும் கூட கண்கள் கலங்கிவிட்டனர்.

“உனக்காக நான் எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” என்று ஆல்வின் மகளிடம் கண் கலங்க சொல்லவும்,

அவள் பதிலுக்கு, “நானும்தான் நீங்களும் அம்மாவும் வருவீங்களா வருவீங்களான்னு காத்துன்னு கிடந்தேன் பா” என்று பதிலுரைத்தாள்.

“இட்ஸ் மை மிஸ்டேக்… நான் உன்னைக் கண்டுபிடிக்க ரொம்ப லேட் பண்ணிட்டேன்… ஐம் ஸோ சாரி” என்று கூறி உச்சி முகர்ந்தவன் அவள் அழுகையை சமாதானம் செய்யும் விதமாக,

“இட்ஸ் ஓகே டியர்” என்று அவள் முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்து அருகில் அமர்த்திக் கொண்டான். பின் தள்ளி நின்ற தேவாவையும் அருகே அழைத்து அமரச் சொன்னான்.

அவர் வேண்டாமென்று மறுக்க, “ஃபார்மலிட்டீஸ் எதுக்கு தேவா… வீ ஆர் ஃபேமிலி… கம்மான் சிட்” என்று அவன் தயக்கத்தையும் போக்கி அவனை அமர்த்திக் கொண்டு பேசினான்.

ஆல்வின் மகள் மருமகன்களிடம் நிறைய உரையாட அவர்கள் புரிந்தும் புரியாமலும்தான் கேட்டுக் கொண்டிருந்தனர். அவனது தமிழ் உச்சரிப்பில் நடத்தையில் எல்லாம் மேற்கத்திய சாயல் தெரிந்தது.

இருப்பினும் ஆல்வின் மிக சகஜமாகவும் எளிமையாகவும் பழகுவது அமி தேவா இருவருக்குள்ளும் இருந்த தயக்கத்தை நீக்கியிருந்தது. அவர்களும் சகஜமாக தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் கடந்து வந்த பாதைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது கீதா அவர்கள் எல்லோருக்கும் பழச்சாறு எடுத்து வந்து கொடுக்க ஆல்வின் அதனைப் பெற்று கொண்ட கணம் கீதாவிடமும் நலம் விசாரித்துவிட்டு, “சார் எப்போ வருவாரு?” என்று விசாரித்தான்.

“இப்போ வந்திருவாரு… இருங்க நான் உங்க எல்லோருக்கும் டின்னர் ரெடி பண்றேன்” என்று பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

சில நிமிடங்களில் பாலமுருகனும் அவர்களுடன் வந்து இணைந்து கொண்டார்.

இதற்கிடையில், “ஆமா ஹரீஷ் எங்கே?” என்று மனைவியிடம் பாலமுருகன் கேட்டு வைக்க கீதா பதறிவிட்டுப் பின் மெல்ல, 

“அவன் ஏதோ ரூம்ல பிஸியா வேலை பார்த்துட்டு இருக்கான்” என்று சமாளித்தார்.

அதன் பின் பாலமுருகனும் ஆல்வின் அமி தேவா எல்லாம் கூட்டாக மாடியில் நின்று உரையாடினர்.

 அப்போது ஆல்வின் பாலமுருகன் கையைப் பற்றிக் கொண்டு, “நீங்க இல்லனா இப்படியொரு அதிசயம் என் வாழ்க்கையில நடந்தே இருக்காது… சீரியஸ்லி யூ மேட் இட்… தேங்க் யூ ஸோ மச்” என்று நன்றியுரைத்துவிட்டு,

“நான் அமராவையும் தேவாவையும் சீக்கிரமே கனடா அழைச்சிட்டுப் போலாம்னு இருக்கேன்” என்றான்.

இதனைக் கேட்ட பாலமுருகன் தயக்கத்துடன் ஏறிட்டு, “அது” என்று பேச ஆரம்பித்தவர் அமி தேவாவைப் பார்த்து,

“டைமாயிடுச்சு இல்ல… நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குப் போங்க” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் இருவரும் உடனே தங்கள் அறைக்குச் சென்றுவிட பாலமுருகன் ஆல்வினிடம், “அவசரபடாத ஆல்வின்… எதுக்கும் ஒரு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் பண்ணிடுவோம்” என்றார்.

“அதுக்கெல்லாம் அவசியம் இல்ல சார்… எனக்கு என் மகளை நல்லாவே அடையாளம் தெரியுது… அதுவுமில்லாம அவ தொலைஞ்சு போன போது போட்டிருந்த ஸ்கர்ட் செயின் எல்லாமே பார்த்தேன்… அதேதான்… சந்தேகமே இல்ல… இவ என் பொண்ணு அமராதான்… இதுக்கு மேல டி.என்.ஏ. டெஸ்ட் எல்லாம் வேண்டாம்” என்று தீர்க்கமாக உரைக்க, அதற்கு மேல் இந்த விஷயத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை பாலமுருகன்.

“ஆனா… அவங்க இரண்டு பேருக்கும் பாஸ்போர்ட் எடுக்கிறதுல சிக்கல் இருக்கு” என்று சொல்ல,

“அவங்க கிரிமனல் ரெகார்ட்ஸ்தானே… தெரியும்… அதெல்லாம் பத்தி நானும் யோசிச்சேன்… அதுக்காகத்தான் இரண்டு பேரையும் அழைச்சிட்டு மும்பை போலாம்னு இருக்கேன்… அங்கே ஒரு முக்கியமான ஃபிரண்டு இருக்கான்… அவனுக்கு நிறைய இன்பளுயூன்ஸ் இருக்கு… ஸோ அவன் மூலமா மூவ் பண்ணி சீக்கிரம் பாஸ்போர்ட் வாங்கிடலாம்னு” என்றான் ஆல்வின்.

“ம்ம்ம்… நல்ல விஷயம்தான்”

“அப்புறம் சார்… நாங்க பெரும்பாலும் நாளைக்கே மும்பைக்கு கிளம்பிடுவோம்” என்று தெரிவிக்க பாலமுருகன் அமைதியாக தலையசைத்தார்.

இவர்களின் உரையாடல் நிகழ்ந்திருந்த அதேநேரத்தில் தயாவின் வீட்டிலும் படுதீவிரமான உரையாடல் ஒன்று நிகழ்ந்திருந்தது.

“அந்த தேவாவை எங்கடா பார்த்த?” என்று தயா சீற்றமாகக் கேட்க,

“ஏர்போர்ட்ல ண்ணா” என்று சொன்னவன், “அவன் ஓட்டினு போன காரு நேரா கமிஷனர் வூட்டுல நின்னுச்சு ண்ணா” என்று மேலும் அதிர்ச்சி கொடுத்தான்.

தயாவின் விழிகளில் கோபம் நெருப்பென தகிக்க, “தப்பிச்சு பொண்டாட்டியைக் கூட்டின்னு ஊரை விட்டு ஓடி இருப்பான்னு பார்த்தா… தே** பையன்… போலீஸ்காரன்கிட்ட போயிக்கிறானா” என்று கர்ஜிக்க,

“இப்போ என்ன அண்ணா பண்றது… அவனுக்கு வேற சரக்கு இருக்க இடமெல்லாம் தெரியும்”  என்று உடன் இருந்த ஆள் புலம்ப,

“சீக்கிரம் சரக்கு இருக்க குடோனை மாத்துங்கடா” என்று கத்தினான் தயா.

“அது அவ்வளவு ஈஸி இல்ல ண்ணா… சரக்கை வெளில எடுத்தாலே மாட்டிக்குவோம்” என்று மற்றொருவன் உரைக்க, தயாவின் முகம் இருளடர்ந்து போனது.

மிகவும் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவனின் முகத்தில் கோபத்துடன் சேர்த்து பயமும் எட்டிப் பார்த்தது.

அப்போது அவன் ஆட்களில் ஒருவன், “பேசாம ஐயா கிட்ட பேசி” என்று ஆரம்பிக்க,

“அரசியல்வாதிங்களை எல்லாம் நம்ப முடியாதுடா… அவனுங்க கழுத்துக்குக் கத்தி வந்தா… கொஞ்சம் கூட யோசிக்காம நம்மல அந்தக் கத்திக்கு பலி கொடுத்துட்டுப் போயிட்டே இருப்பானுங்க” என்று சொன்ன தயா,

“ரிஸ்க் எடுத்தாவது இன்னைக்கு இராத்திரிக்குள்ள சரக்கெல்லாம் இடம் மாத்திதான் ஆவணும்…. அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று அவனின் நம்பிக்கையான ஆட்களிடம் சொல்லிவிட்டு இறுதியாக இருவரை அழைத்து,

 “அந்த தேவாவை கண்டம் துண்டமா வெட்டி கூவத்துல வீசிடுங்க… அவன் பிணம் கூட கிடைக்கக் கூடாது” என்றான்.

இதைக் கேட்டிருந்த மாஸ் அவர்கள் யார் கண்களிலும் படாமல் இரகசியமாக சென்று தேவாவிற்கு அழைப்பு விடுத்தான். ஆனால் அவன் செல்பேசி அணைப்பில் இருந்தது.

யாருக்கும் தாங்கள் இருக்கும் இடம் தெரிய கூடாது என்று தேவா தன்னுடைய அலைபேசியை அணைத்து வைத்திருந்தான். இதனால் அவனுக்கு எப்படி தொடர்பு கொள்வதென்று மாஸிற்குத் தெரியவில்லை.

தேவாவோ தன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியைப் பற்றி அறியாமல் அமியுடன் காதல் மயக்கத்தில் இருந்தான். வெகுநாட்களுக்குப் பிறகு இருவரின் மனமும் உடலும் ஒரு சேர சங்கமித்திருந்தது.

“அப்படியே கனவுல மிதக்கிறாப்பல இருக்கு தேவா” என்று கணவனின் முத்த மழையில் கரைந்துருகியபடியே சொல்ல, அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவள் மேலும், “இதெல்லாம் உன்னாலதான் தேவா… நீ இல்லனா இது எதுவும் நடந்திருக்காது… நான் அப்பாவைப் பார்த்திருக்க மாட்டேன்… அவரும் என்னைப் பார்த்திருக்க மாட்டாரு” என்றவள் கண்கள் கலங்க உரைத்தாள். மூடியிருந்த அவள் விழிகளோரம் கண்ணீர் கசிந்து இறங்கியது.

“நல்லதுதானே நடந்துக்குது… அதுக்கேன்டி அழற” என்றவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட,

“சந்தோஷத்துல அழுறன்டா” என்றவள் விழிகளைத் திறந்து அவனைக் காதலுடன் பார்க்க  அந்தப் பார்வையில் மயக்கம் கூடியது அவனுக்கு. அவள் இதழில் தொடங்கிய அவனின் பயணம் முடிவில்லாமலோ அல்லது முடிக்க மனமில்லாமலோ இரவெல்லாம் நீடித்தது.

ஆனால் அந்த இரவிற்கு பிறகாய் அவர்கள் உறவே கேள்விகுறியாக போவதை இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

காதல் மயக்கத்தில் முயங்கி கிடந்த மான்கள் இரண்டும் வேடன் எய்திய அம்பின் குறிக்குப் பலியாகிட காத்திருந்தது போலிருந்தது அக்காட்சி!

akila.l has reacted to this post.
akila.l
Quote

Please please Deva va konnudathinga

Quote
Quote from akila.l on August 23, 2024, 7:31 AM

Please please Deva va konnudathinga

Ila deva saga elllam maten

You cannot copy content