You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 16

Quote

16

எட்டு பேர் வசதியாகப் பயணிக்கும் ஹாக்கர் இரக தனியார் விமானம் அது.

மேகத்தைக் கிழித்துக் கொண்டு மும்பையிலிருந்து சென்னையை நோக்கி விரையும் அந்த விமானத்தில்தான் தேவா, அமிர்தா மற்றும் ஹரீஷும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

தேவாவிற்கோ என்ன நடந்தது… என்ன நடக்கிறது என்று எதுவும் முழுவதுமாக விளங்கவில்லை. அமியுடன் மும்பை வந்த வரைதான் அவன் நினைவில் பதிவாகியிருந்தது. அதற்கு பிறகாய் என்ன நடந்தது என்று யோசித்தால் அவனுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. புரியவும் இல்லை.

ஒரு நாள் யாருமற்ற அநாதை போல நடுவீதியில் கிடந்தான். மும்பை மக்களின் பரபரப்பான ஓட்டத்தில் அவனை யாரும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அவனுக்கோ மொழி இடம் என்று எல்லாமே அந்நியமாக அர்த்தமற்றதாக இருந்தது.

அமியைத் தேட வேண்டுமென்று சிந்தனை மட்டுமே அவனுக்குள். அவளுக்கு என்னவாகிவிட்டதோ என்ற கவலை. அறிமுகம் இல்லாத தெருக்களுக்குள்ளும் நெடுஞ்சாலைகளிலும் அவளைத் தேடி ஓடி ஓடி களைத்துப் போனான்.

இலக்கில்லாத தூரங்கள் ஓடினான்.  எங்கே ஓடுகிறோம் அவளை எங்கிருந்து கண்டுபிடிக்க போகிறோம் என்ற தேடலிலேயே அவன் நாட்கள் உருண்டோடிவிட்டன. பசியும் பட்டினியுமாகக் கழிந்த நாட்களில் அவன் கிட்டத்தட்ட பித்துப் பிடித்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான்.

அவன் மனம் இனி அமியைப் பார்க்கவே முடியாது என்று நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருந்தது. அவள் ஒரு வேளை தன்னை விட்டு அவள் தந்தையுடன் சென்றிருப்பாள் என்று ஒருபுறம் எதிர்மறையாக யோசிக்க தோன்றியது. ஆனாலும் அவள் தன்னை விட்டுச் செல்ல மாட்டாள் என்று மனதினோரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த சிறு நம்பிக்கைதான் அவனை அத்தனை நாட்கள் உயிர்ப்புடன் வைத்திருந்தது.

இப்படியாகக் கடந்து சென்ற நாட்களில் அதிசயமாக நிகழ்ந்த சந்திப்புதான் அமிர்தாவினுடையது. நடக்கின்ற எந்தச் சம்பவமும் தற்செயல் அல்ல. எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரண காரியம் இருக்கின்றது. அதன் காரணமாகவே கண்டம் விட்டு கண்டம் வந்தவள் அவனை அங்கே சந்திக்க நேர்ந்தது.

‘அமி’ என்று தேவா அழைத்த போது அவளால் அதனை இயல்பாகக் கடக்க முடியவில்லை. காரணம் அவள் அம்மா அவளை அப்படித்தான் செல்லமாக அழைப்பார். வேறு யாருமே அவளை அவ்வாறு அழைத்தது கிடையாது.

அவனின் அந்த அழைப்பும் சந்திப்பும் அவளுக்கு எதையோ உணர்த்த முயல்கிறதோ என்ற எண்ணம்தான் அவனை மீண்டும் அவளைத் தேடிச் சென்று சந்திக்க வைத்தது.

அப்போதுதான் ஹரீஷ் அவனை அடையாளம் கண்டுகொண்டான். அதேநேரம் அமிர்தாவிடம் அவனைப் பற்றிய தகவல்களையும் அமராவைப் பற்றிய கதையையும் சொல்ல, அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“நிஜமாவா… அந்தப் பொண்ணு பார்க்க என்னை மாதிரியே இருந்தாளா?” என்று சந்தேகித்துக் கேட்க,

“நான் நேர்ல அந்தப் பொண்ணைப் பார்த்தேன்… அவ அப்படியே உன் ஜாடைலதான் இருந்தா தெரியுமா?” என்று சொன்னான் ஹரீஷ். அவளால் நம்பவே முடியவில்லை. அவன் தன் செல்பேசியில் காட்டிய கிராஃபிக்ஸ் புகைப்படத்தைப் பார்த்து அதிசயித்துவிட்டாள்.

“நான் இதைப் பத்தி உன்கிட்ட இலண்டன்லயே பேசணும்னு நினைச்சேன்… சூழ்நிலை பேச முடியாது போச்சு” என்றவன் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, அமிர்தாவின் எண்ணம் தேவாவைப் பற்றியும் தொலைந்த போன அமராவையும் பற்றி யோசித்தது.

என்னைப் போலவே இருக்கிறாள் எனில் யார் அவள்?

எனக்கும் அவளுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு இல்லாமல் எப்படி எங்களுக்குள் உருவ ஒற்றுமை இருக்க முடியும்?

இந்தக் கேள்வி அமிர்தாவின் மூளையைக் குடைய, “நாம உடனே தேவாவையும் அழைச்சிட்டு சென்னை போய் உங்க அப்பாவை மீட் பண்ணுவோம் ஹரீஷ்… உங்க அப்பா ஆல்வினோட தொடர்புல இருக்காரு… அவர்தான் இந்தப் பிரச்சனைக்கான சொல்யூஷனைக் கொடுக்க முடியும்” என்று பரபரத்தாள்.

“நீ சொல்றது சரி… ஆனா தேவா இருக்க நிலைமைல எப்படி நாம ஃப்ளைட்ல அழைச்சிட்டு போறது? வேணா அப்பாகிட்ட ஃபோன்ல விஷயத்தைச் சொல்லி என்ன பண்றதுன்னு கேட்கட்டுமா?” என,

“ஃபோன்ல எல்லாம் பேச வேண்டாம்… நேர்லயே போவோம்… அதுவுமில்லாம தேவாவுக்கு அங்கே போனா ஏதாச்சும் ஞாபகம் வர வாய்ப்பிருக்கு” என்றவள் உரைக்க,

“ஆனா தேவா இருக்க நிலைமைல அவனை அழைச்சிட்டுப் போறது எப்படி? அது ரிஸ்க் இல்லையா?” என்றான்.

“அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல… நான் பார்த்துக்கிறேன்” என்றவள் சொன்ன போது அவள் இப்படி ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்வாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் விமானத்தில் ஏறிய பிறகுதான் அது அவளின் சொந்த விமானம் என்றே அவனுக்குத் தெரிய வந்தது.

அவள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தனி விமானத்தில்தான் செல்வாளாம். அந்தளவுக்கு அவள் வசதி படைத்தவள் என்பது இது நாள் வரை அவன் யோசித்திருக்கக் கூட இல்லை. அவளும் கூட அவ்வாறு காட்டிக் கொண்டதில்லை. மிக எளிமையான அவள் தோற்றத்திலும் பழக்கத்திலும் அது தெரிந்ததுமில்லை.

அவள் அம்மாவிற்கு நிறைய சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்த போதும் கூட இந்தளவு அவன் எண்ணிப் பார்த்திருக்கவில்லை.

இதெல்லாம் ஒரு புறமிருந்தாலும் அவனுடைய இப்போதைய தலையாய பிரச்சனை தேவாதான். அவனோ அமி அமி என்று அமிர்தாவின் கையினை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான்.

அமரா தேவாவைக் குறித்து ஹரீஷ் அமிர்தாவிடம் சொன்னதுமே மீண்டும் மனநல மருத்துவமனைக்குள் சென்றவள் அவனைச் சென்று பார்க்க அவனோ அவளைப் பார்த்த கணம் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அமி அமி என்று கலட்டா செய்ய தொடங்கினான். அவனைக் கட்டுபடுத்தவே முடியாத நிலையில் மருத்துவர் அவனுக்கு மயக்க ஊசிக் குத்தி அமைதிப்படுத்தி இருந்தார்.

மேலும் அவர் அமிர்தாவிடம், “நீங்க அமி இல்லைங்கிற விஷயத்தை உடனே சொல்லி அவரை ஏமாத்தாதீங்க… அவரே கொஞ்ச கொஞ்சமா நார்மல் ஸ்டேட்டுக்கு வந்து புரிஞ்சு பாரு” என்று உரைத்தார்.

ஆதலால் தேவா மயக்கம் தெளிந்து எழுந்து மீண்டும் அமிர்தாவை அமி என்றே அழைக்க அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.

“என் கூட வர்றீங்களா? உங்களை ஓரிடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றவள் அழைக்கவும் அவள் கையைப் பிடித்துக் கொண்டு பின்னாடியே வந்துவிட்டான். அங்குதான் ஹரீஷிற்குக் கடுப்பேறியது.

போதாகுறைக்கு அவன் அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு,  “என்னை விட்டுப் போக மாட்ட இல்ல அமி” என்று திரும்ப திரும்ப தேய்ந்த ரெகார்ட் போல கேட்டு வைக்க, ஹரீஷ் அப்படியொரு எரிச்சல் நிலைக்குத் தள்ளப்பட்டான்.

ஆனால் அமிர்தாவோ சற்றும் தளராமல், “போக மாட்டேன் தேவா” என்று பொறுமையாகப் பதிலுரைத்தாள். அதுமட்டுமல்லாது அவன் அவளை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவும் கூட விடவில்லை. 

விமானத்திலும் அவள் அருகிலேயே அமர்ந்து அவள் கரத்தைப் பிடித்தபடி இருந்த தேவாவைத் தள்ளி அமர்ந்து பார்த்திருந்த ஹரீஷிற்கு எந்தளவுக்கு எரிச்சலாகி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

அப்படி என்ன நேற்று பார்த்தவன் மீது அப்படியொரு அக்கறை என்று அமிர்தாவின் மீதும் அவனுக்குக் கொஞ்சம் கோபம்தான். ஆனால் என்ன செய்ய எந்த உணர்வையும் காட்ட முடியாத தவிப்பில் இருந்தான்.

அந்தப் பயணம் எப்போது முடியுமென்று இருந்தது அவனுக்கு.

ஒரு வழியாக விடியற்காலையிலேயே அவர்கள் சென்னை வந்து சேர்ந்துவிட, அங்கிருந்து செல்ல ஹரீஷ் தன் நண்பன் காரை ஏற்பாடு செய்திருந்தான்.

பின்னிருக்கையில் தேவா அமிர்தா அருகில் நெருக்கமாக அமர்ந்து கொள்ள, ஹரீஷ் வேறு வழியின்றி ஓட்டுனர் அருகிலுள்ள முன்னிருக்கையில் ஏறிக் கொண்டுவிட்டான்.

பயணக் களைப்பில் தேவா அமிர்தாவின் தோள் சாய்ந்து உறங்கிவிடவும் அமிர்தா மெல்ல, “ஹரீஷ்” என்று அழைக்க,

“ஹ்ம்ம்” என்றான் அவள் புறம் திரும்பமாலே!

ஆனால் முன்கண்ணாடி வழியாக அந்தக் காட்சியைப் பார்த்து அவனுக்குச் சகிக்கவில்லை.

அவள் மேலும், “உங்க வீட்டுல நாம வரோம்னு இன்ஃபார்ம் பண்ணிட்டியா ஹரீஷ்?” என்று வினவ,

“நான் வரேன்னு சொல்லி இருக்கேன்” என்றவன் கடுப்புடன் பதிலுரைக்க,

“எதுக்கு அந்தப் பக்கமே திரும்பி பேசிக்கிட்டு இருக்க… என் முகத்தைப் பார்த்துப் பேசு” என்றதும் அவள் புறம் திரும்பியவன் கடுப்புடன்,

 “அவன்தான் தூங்கிட்டான் இல்ல… தள்ளிப் படுக்க வைய்யேன்” என்று சொல்லிவிட,

“டிஸ்டர்ப்பாயிட்டா என்ன பண்றது… இருந்துட்டு போகட்டும் விடு” என்றாள்.

அவன் முகமாற்றத்தைப் பார்த்தவள், “என்ன சாருக்கு பொஸஸிவ்னஸ்ஸா?” என்று கேட்க,

“ஏன் உனக்கு வந்ததில்ல… ஆடியோ ரிலீஸ் அன்னைக்கு அந்த தீபிகா என்னை ஃபியான்ஸின்னு சொன்னதுக்கு எவ்வளவு கடுப்பான” என்று குத்தலாகச் சொல்ல,

“அதுவும் இதுவும் ஒன்னா… தேவா மனநிலை பாதிக்கப்பட்டிருக்காரு… ஆனா அந்த தீபிகா அப்படியா ஹரீஷ்?” என்று அவள் பதிலுக்குக் கேட்டாள்.

“அதானே… பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம்… ஆம்பளைங்களுக்கு எல்லாம் ஒரு நியாயம்” என்று கடுப்படித்தபடி அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“அப்படியா என்ன?” என்றவள் அலட்டிக் கொள்ளாமல் கேட்க கண்ணாடியில் அவளை மீண்டும் பார்த்தவன்,

“ப்ளீஸ் அவனைக் கொஞ்சம் தள்ளிப் படுக்க வை… என்னால முடியல” என்று கெஞ்சுதலாகச் சொல்ல,

“சரி சரி” என்று அவளும் முயன்று அவன் தலையைத் தள்ளி வைக்க அவனோ அந்த நொடியே, “அமி… என்னை விட்டுப் போகாதே” என்றபடி அவள் மடியில் வசதியாகத் தலை சாய்த்துக் கொண்டு படுத்துவிட்டான்.

அமிர்தா இதை எதிரபார்க்கவில்லை. அவள் சங்கடமாக நெளிந்தபடி ஹரீஷைப் பார்த்து, “ஏன் டா… அவன் பாட்டுக்குப் படுத்திருந்தான்… நீ இருக்கியே” என்று திட்ட, அந்தக் காட்சியைப் பார்த்து ஹரீஷின் குட்டி நெஞ்சு படாரென்று வெடிக்காத குறைதான்.

‘எல்லா அந்த டாக்டரைச் சொல்லணும்’ என்று புலம்பிக் கொண்டே வந்த ஹரீஷிற்கு எப்போது வீடு வந்து சேர்வோம் என்றானது. அவர்கள் வீட்டை அடைந்த மறுகணமே,

“அவனை எழுப்புறியா… ஐயா அப்படியே சொகுசா படுத்திட்டு இருக்காரு” என,

“தேவா எழுந்திரீங்க… வந்துட்டோம்” என்றவன் தோள் தொட்டு உலுக்க, அவன் எழுந்து கொண்டு மெல்ல காரிலிருந்து இறங்கினான். அவன் இறங்கியதும் ஹரீஷின் வீட்டைப் பார்த்து தலையைப் பிடித்துக் கொண்டான்.

அவனுக்கு ஆல்வினை சந்தித்தது அமியுடன் சந்தோஷமாக இருந்த கணங்கள் எல்லாம் நினைவு வர, அவன் சிலையாகச் சமைந்தான்.

அவன் முகமாற்றத்தைக் கவனித்தவள், “நம்ம எங்கே வந்திருக்கோனு தெரியுதா தேவா?” என்று கேட்டாள்.

“கமிஷனர் சார் வூடுதானே இது” என்றவன் தெளிவாகப் பேச,

“கரெக்ட்…” என்றவள் மேலும், “நீ இங்கிருந்து கிளம்புன பிறகு எங்கே போன? என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா தேவா?” என்று மேலே கேட்டாள்.

அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்து, “ஞாபகம் இருக்கு… என்னை வுட்டு நீ போயிட்ட” என்று சொல்லிவிட்டு அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “இல்ல… நாம இங்கே இருக்க வோணாம்… வா போலாம்… நம்ம வூட்டுக்குப் போலாம்” என்று அவளை வெளியே இழுத்தான்.

“தேவா நான் சொல்றதை கேளு” என்று அவனை அவள் சமாளிக்க முடியாமல் போராட, அந்த நொடி ஹரீஷின் பொறுமை பறந்து போனது.

“அவ கையை விடுடா… அவ ஒன்னும் உன் அமி இல்ல… அமிர்தா” என்று தேவாவின் கையை அமிர்தாவின் கையிலிருந்து பிரித்துவிட்டான்.

“அமிர்தாவா?” என்று தேவா குழப்ப,

“ப்ச்… ஏன்… ஹரீஷ்?” என்று அமிர்தா சலிப்பாகப் பார்த்தாள்.

“அவன் ரொம்ப ஓவரா பண்றான் அமிர்தா” என்று ஹரீஷ் கடுப்பாக தேவா தன் திகைப்பிலிருந்து மீண்டு,

“இல்ல இல்ல… இது அமிதான்… அமிர்தா இல்ல… நீதான் அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு குடிச்சிட்டுப் புலம்பிட்டு இருந்த… உனக்குதான் அமிர்தா பைத்தியம் பிடிச்சிருக்கு” என்று ஹரீஷ் பக்கமே திருப்பிவிட்டான் தேவா. இப்போது குழம்புவது ஹரீஷின் முறையானது.

இதைக் கேட்ட அமிர்தாவோ சத்தமாகச் சிரித்து, “இவன்கிட்ட கூடவா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு புலம்பி வைச்ச” என்று கேட்க,

“என்ன நீ? சிரிச்சிட்டு இருக்க… அவன் எவ்வளவு தெளிவா பேசறான்னு பார்த்தியா? அவனுக்குப் பைத்தியமா இல்ல எனக்குப் பைத்தியமான்னு இப்போ எனக்கே டவுட் வருது” என்று கூற,

“ஹரீஷ் நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா?” என்று அவள் சொல்லும் போதே தேவா மீண்டும் அவள் கையைப் பிடித்துக் கொண்டு,

“நம்ம இங்கிருந்து போயிடலாம் அமி… வா அமி” என்று இழுத்தான்.

“தேவா… நான் சொல்றதைக் கேளு… நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்… சத்தியமா போக மாட்டேன்… என்னை நீ நம்பு… என் கூட வா” என்றவள் அவனுக்குப் பொறுமையாக எடுத்துரைத்து ஒருவாறு சமாதானப்படுத்தி உள்ளே அழைக்க,

“நீ என் கூடவே இருப்ப இல்ல” என்ற வாக்குறுதியோடு அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவன் நுழைய ஹரீஷிற்குத் தாங்க முடியவில்லை.

இவனைப் பற்றி எதற்கு தான் அமிர்தாவிடம் தெரிவித்தோம் என்று அப்படியொரு கோபம் அவன் மீதே அவனுக்கு வந்தது.

ஹரீஷ் வருவதைப் பார்த்து கீதா முக மலர, “பரவாயில்ல… சீக்கிரம் வந்துட்ட கண்ணா… வா வா” என்று அழைத்த அதேநேரம் பின்னோடு வந்த அமிர்தாவைப் பார்த்து, அவர் முகம் சிறுத்துப் போனது.

‘இவ எதுக்கு இவன் கூட வரா’ என்றவர் யோசித்த அதேநேரம் நிதானமாக செய்திதாளைப் புரட்டிக் கொண்டிருந்த பாலமுருகனும் ஹரீஷுடன் வந்த அமிர்தா மற்றும் தேவாவைப் பார்த்து திகைக்கலானார்.

Quote

Its main mechanism of action is thought to involve general central nervous system depression where to buy priligy usa 1 Short term effects

You cannot copy content