You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 2

Quote

2

 

ஆல்வின் அனுப்பிய அமராவின் புகைப்படங்களைத் தனக்குக் கீழாகப் பணிபுரிந்த மிகவும் திறமையான போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு அனுப்பி வைத்தார் பாலமுருகன்.

மேலும் காவல்துறையில் கணினி குழுவில் கைதேர்ந்த ஜெயிடம் அந்தப் படங்களைக் கொடுத்து, “உங்க டெக்னிக்கல் டீம் கிட்ட கொடுத்து இந்த ஃபோட்டோவை… ஆதார் கார்ட் ஐடீ ஸ் கூட செக் பண்ண சொல்லுங்க… ஏதாவது மேட்ச் ஆகுதான்னு பார்க்கலாம்” என,

“கண்டிப்பா செக் பண்ணி பார்க்கலாம் சார்… ஆனா நம்ம அரசாங்க ஃபோட்டோ ஐடி ப்ரூப் லட்சணம்தான் உங்களுக்குத் தெரியுமே… அதுவும் அந்த ஃபோட்டோவை… அந்த ஐடியோட சொந்தக்காரன்கிட்ட கொடுத்து யாருன்னு கேட்டா… அவனுக்கே அடையாளம் தெரியாது… அவ்வளவு கன்றாவியா இருக்கும்” என்ற ஜெய்யின் பதிலைக் கேட்ட  பாலகுமரன் சிரித்துவிட்டு,

“எனக்கும் தெரியும் ஜெய்… இருந்தாலும் சும்மா ஒரு ட்ரைதான்… பார்க்கலாமே இந்த முயற்சிலயாவது அந்தப் பொண்ணைக் கண்டுபிடிக்க முடியுதான்னு” என்றார்.

“கண்டிப்பா சார்” என்று தலையசைத்துவிட்டுச் சென்றவன் அந்தப் புகைப்படத்தைத் திறந்து பார்த்தான். எங்கேயோ அந்த முகத்தைப் பார்த்தது போன்ற நினைவு வந்தது. ஆனால் எப்போது எங்கே என்றெல்லாம் அவன் நினைவுகளில் பதிவாகவில்லை.

இரண்டு நாட்களாகத் தேடல் தொடர்ந்து கொண்டிருந்ததே ஒழிய பெரிதாக எவ்வித முன்னேற்றமுமில்லை என்று பாலமுருகன் சலிப்புடன் மனைவியிடம் சொல்லி புலம்பும் போது கீதாவிற்குத் தொண்டையை அடைத்தது.

அவரும் கடந்து இரண்டு நாட்களாக ஹரீஷிடம் தொடர்பு கொள்ள முடியாத தவிப்பில் இருந்தார்.

‘ம்மா பிஸியா இருக்கேன்… இங்கே லொகேஷன்ல சுத்தமா சிக்னல் கிடைக்கல… நான் அப்புறம் பேசுறேன்… சாரி சாரி சாரி’ என்ற தன் குரல் பதிவை மட்டும் அனுப்பி வைத்திருந்தான்.

கீதாவிற்கு மகன் அனுப்பிய படத்தை கணவரிடம் காட்டிவிடலாம் என்று ஒரு பக்கம் உள்ளம் பரபரத்தாலும் மகனிடம் அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களைத் தெளிவாகக் கேட்டுவிட்டுச் சொல்லலாம் என்று நினைத்து தாமதித்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணின் படத்தை அனுப்பும் போது அவன் பெரிதாக எந்த விவரமும் கூறவில்லை. அப்போதிருந்த மனநிலையில் அவரும் எதுவும் கேட்கவுமில்லை.

“ம்மா… நான் இங்கே ஒரு பொண்ணைப் பார்த்தேன்… செமையா இருக்காம்மா… என்ன ஸ்டைல்… என்ன ஆட்டிட்யூட்… ப்ச்… கட்டினா அப்படியோரு பொண்ணைக் கட்டணுமா… இல்லாட்டி வாழ்க்கை பூரா பிரம்மச்சாரியா இருந்தடணும்?” என்றவன் சிலாகித்துக் கூற,

“டேய்… இந்த டைலாக்கை மாத்தவே மாட்டியா… அஞ்சாவது படிக்கிற காலத்துல இருந்து இதையேதான்டா நீ சொல்லிட்டு இருக்க… நானும் கேட்டுக் கேட்டு சலிச்சுட்டேன்” என்று கீதா கடுப்பானார்.

“ம்மா… அதெல்லாம் வெறும் இன்பாக்சுவேஷன்… இது உள்ள இருந்து வர்ற ஃபீலிங்மா… லவ்” என்று அவன் சொல்லவும்,

“லவ்வா? நீ ஏற்கனவே லவ்வு கிவ்வுன்னு காலேஜ்ல வைச்ச பஞ்சாயத்தையே… உங்க அப்பா இன்னும் விடாம சொல்லிக் குத்திக் காட்டிட்டு இருக்காரு… இதுல ஏரோப்ளேன் ஏறி போய் வேற என் மானத்தைக் காத்துல பறக்க விட்டுடாதடா… ஒழுங்கா… வேலையை முடிச்சிட்டு வீடு வந்து சேர பாரு” என்று அவர் கைப்பேசியிலேயே  காலில் விழாத குறையாகக் கெஞ்சிய போதும் ஹரீஷ் இறங்கி வரவில்லை.

“நோ வே ம்மா… அந்தப் பொண்ணுகிட்ட பிரப்போஸ் பண்ணி ஓகே பண்ணிட்டுதான் இந்தியாவே வருவேன்” என்று அவன் பிடிவாதமாகச்  சொல்ல,

“டேய் மகனே! வேண்டாம்… நாடு விட்டு நாடு போய் அடி வாங்காதே” என்று இறுதி முறையாக அவர் எச்சரித்தும் பார்த்தார்.

“அதெல்லாம் வாங்க மாட்டேன்… இந்தப் பொண்ணு எனக்கு சத்தியமா செட்டாகும்… நீ வேணா பார்த்துகிட்டே இரும்மா… உனக்கு நான் ஒரு சூப்பர் மருமகளா கொண்டு வரன்னா இல்லையான்னு மட்டும்” என்றவன் நம்பிக்கையாகக் கூற,

“ஆகட்டும்… நீ முடிவு பண்ணிட்ட… செய்… ஆனா எதுவும் பிரச்சனையை இழுத்து விட்டுடாதே… உங்க அப்பா நல்ல பேரோட ரிட்டையர் ஆகணும்னு ஆசைப்படுறாறு… அதுல பெருசா பாறாங்கல்ல தூக்கிப் போட்டுடாதே” என்று கீதா கெஞ்சுதலாகக் கேட்டார்.

“அதெல்லாம் பண்ண மாட்டேன்… நீ ரிலேக்ஸா இரு… அப்புறம் உன் மருமகளோட ஃபோட்டோவை நான் வாட்ஸப் பண்ணறேன்… பார்த்துட்டு எப்படி இருக்கான்னு மெசேஜ் பண்ணு” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

கீதாவிற்கு மயக்கம் வராத குறைதான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு பெற்று வைத்ததால் வந்த வினையோ?

ஹரீஷ்… பிறந்ததிலிருந்தே ஹைப்பர் ஆக்டிவ்… எதை எங்கே எப்போது செய்வான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. பிறந்தநாளிலிருந்து இன்று வரை கீதாவிற்கு அவன் பின்னோடு ஓடுவதுதான் வேலை.

விளையாடுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மாடி கம்பியில் தொங்கிக் கொண்டிருப்பான். படிக்கிறான் என்று விட்டால் மொத்த புத்தகத்தையும் கிழித்து வைத்திருப்பான். கீதாவிற்கு அவனைச் சாப்பிட வைப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலைத் தாண்டிவிடலாம் என்று இருக்கும்.

சில பல டிவிகள்… ஜன்னல்கள்… கண்ணாடி டம்ளர்கள் என அவன் உடைத்தவைகளின் பட்டியல்கள் ஏராளம்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. அவனுடைய அதீத முதிர்ச்சிதான் அவரை மிரள வைத்தது.

ஐந்தாவது படிக்கும் போதே உடன் படிக்கும் பெண்ணைக் காட்டி இவளைத்தான் கல்யாணம் கட்டுவேன்… என்று சொன்னவன்.

அன்று தொடங்கிய அவன் காதல் லீலைகள்… இதோ இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அப்படிதான் ஒருமுறை இவன் துரத்தித் துரத்தி காதலித்த பெண் வீட்டில் போட்டுக் கொடுத்து அது கல்லூரியில் மிகப் பெரிய பஞ்சாயத்தாக மாறிவிட, அவன் அப்பா போலீஸ் அதிகாரி என்பதால் ஓரளவு அது சமாளிக்கப்பட்டுவிட்டது.

அன்றிலிருந்து பாலமுருகனுக்கும் மகனுக்கும் இடையில் சண்டைகள் கோபங்கள் வாக்குவாதங்கள் என்று ஒரு நீண்ட இடைவெளி உருவாகிவிட்டது.

ஆனால் பாலமுருகன் ஒன்றும் கண்டிப்பான அப்பாவோ பழைய காலத்து அப்பாவோ கிடையாது… அவன் பொறியியில் படிக்க வேண்டுமென்று விரும்பிய போது அவனைச் சேர்த்துவிட்டவர் அவன் அடுத்த இரண்டு வருட படிப்பு முடியும் போது,

“எனக்கு இஞ்சினியரிங் செட்டாகல… நான் விஸ்காம் பண்ணலாம்னு இருக்கேன்” என்று சுலபமாகச் சொன்ன போதும் ஒரு வார்த்தைக் கேட்காமல் சரியென்று சேர்த்துவிட்டார்.

அவனுக்குப் பிடித்ததைப் படிக்கட்டும் என்று எண்ணும் மார்டன் அப்பாதான் என்றாலும் அவனுடைய காதல் விஷயங்கள் அவர் மனதிற்கு உவப்பாக இல்லை. அது கூட ஒரு பெண்ணாகக் காதலித்திருந்தால் சரியென்று சொல்லி இருப்பார். ஆனால் அவன் மாதத்திற்கு ஒன்று என்று மனது மாறுவதுதான் அவருக்கு மகன் மீது வெறுப்பை உண்டு பண்ணியது. ஆனால் அவன் கொஞ்சமும் அசரவில்லை.

அவனுக்குப் பிடித்துவிட்டால் உடனடியாக அவளைக் காதலிக்க வேண்டும். அதேபோல் பிடிக்காவிட்டால் காதலை முறித்துக் கொள்ள வேண்டும். கீதா எவ்வளவோ அவனுக்குப் புரிய வைக்க முயற்சி செய்து வெறுத்துப் போய்விட்டார்.

இதெல்லாம் தாண்டி அவனிடம் ஒரு நல்ல விஷயம் இருந்தது. க்ரியேட்டிவிட்டி… புதுவிதமாக யோசிப்பது. கல்லூரியில் இருந்த காலத்திலேயே அவன் எடுத்த குறும்படங்கள் பிரபலமாகப் பேசப்பட்டன.

கல்லூரி முடித்ததும் அவன் ஒரு விளம்பர நிறுவனத்திற்கு செய்து தந்த விளம்பரம் பயங்கர ஹிட்… புதுவிதமாக யோசிக்கும் அவன் திறன்தான் இப்போது அவனை இலண்டன் வரை இழுத்துச் சென்றிருக்கிறது.

ஆனால் சமீப காலமாக ஓயாத வேலைகளின் காரணத்தால் அவனுடைய காதல் கதைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டிருந்தான். பாலமுருகனுக்கும் மகன் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்திருந்தது.

ஆனால்  சினிமா படம் எடுப்பதற்காக இலண்டன் சென்ற இடத்தில் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல தன்னுடைய காதல் லீலைகளை ஆரம்பித்துவிட்டானே என்று கீதா கவலையில் இருக்க, இப்போது அந்தப் பெண்ணின் படம் வேறு புது பிரச்சனையைக் கிளப்பியிருந்தது.

அவருக்கு அப்போதிருந்த கடுப்பில் அந்தப் பெண்ணின் பெயரைக் கூட கேட்காமல் விட்டுவிட்டார். அவள் அமராவாக இருக்குமோ என்ற சிந்தனையில் கீதா தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க அவருடைய கைப்பேசிக் கிணுகிணுத்தது.

இந்த நேரத்தில் மகன்தான் அழைக்க கூடும் என்பதை அறிந்து அவசர அவசரமாக அழைப்பை ஏற்று அறையை விட்டு வெளியே வந்தவர், “ஹரீஷ்… நானே உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு நினைச்சேன்” என்று சொல்ல,

“சாரி மா… நாங்க போன ஸ்பாட்ல சுத்தமா சிக்னல் இல்ல… அதுவுமில்லாம இரண்டு நாளா சரியான வேலை” என்று அலுத்துக் கொண்டான்.

“அதெல்லாம் இருக்கட்டும்டா… அந்தப் பொண்ணு” என்றவர் ஆரம்பிக்க,

“யாரு? எந்தப் பொண்ணு” என்று கேட்டான்.

“நீ ஃபோட்டோ அனுப்புனியே அந்தப் பொண்ணு… கட்டினா அவளைத்தான் கட்டுவேன்னு சொன்னியே” என்று கீதா சொல்ல,

“அந்தப் பொண்ணா… அந்தப் பொண்ணு நமக்கு செட்டாகுதுமா… ப்ச் விட்டேன்” என்று சாதாரணமாக உரைத்தான் ஹரீஷ்.

“அடேய்” என்று கீதா கடுப்பாகக் கத்தும் போது பாலமுருகன் அங்கே வந்துவிட்டார்.  கீதா மிரண்டு விழிக்க,

“என்ன சொல்றான்… கிளம்பி வரான்னா இல்லாயாமா?” என்று கேட்டார்.

“அதாங்க… கேட்டுட்டு இருக்கேன்” என்று கீதா பதட்டத்துடன் பதில் கூற,

“சரி ஃபோனை என்கிட்ட கொடு… நான் பேசுறேன்” என, அவர் படபடப்புடன் கைப்பேசியை நீட்டினார். அப்பாவும் மகனும் என்ன பேசி கொண்டார் என்று அவருக்குத் தெரியவில்லை.

“சரி சரி… எப்போ வர்ற… ஹான் ஓகே” இப்படியான பதிலுரைகளுடன் பேசிவிட்டு அவரே அழைப்பைத் துண்டித்துவிட கீதாவின் முகம் தோய்ந்து போனது.

“அவன் இன்னும் இரண்டு நாள்ல வந்துடுறானாம்… நீ வந்து படு… நடுராத்திரில தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு” என்றவர் கீதாவின் கைப்பேசியையும் கையோடு எடுத்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.

‘போச்சா?’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டு வந்தவருக்குத் தூக்கம் எங்கே வந்தது? யார் அந்தப் பெண் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே… ஒரு வேளை அந்தப் பெண் அமராவாக இருக்கும் பட்சத்தில் இத்தனை வருட ஆல்வின் தேடலைக் கைக்கு எட்டித் தவறவிட்டுவிடுமோ?

காலை எழுந்ததும் எப்படியாவது மகனிடம் பேசி அந்தப் பெண்ணின் விவரங்களைத் தெரிந்து கொண்டுவிட வேண்டும் என்று முடிவுடன் இருந்தார் கீதா.

இந்நிலையில்தான் அடுத்த நாள் காலை பாலமுருகனுக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிட்டியது.

அவர் அலுவலகம் வந்ததும் ஜெய் அனுமதி கேட்டு உள்ளே வர, “என்ன ஜெய்… அந்தப் பொண்ணு விஷயத்துல ஏதாச்சும் க்ளூ” என்று இழுத்தார். நம்பிக்கையின்றிதான் அவர் கேட்டார்.

ஆனால் ஜெயின் பதில் அவரை ஆச்சரியப்படுத்தியது.

“க்ளூ கிடைச்சிருக்கு சார்”

“சீரியஸ்லி… ஐடி ரெகார்ட்ஸ்ல ஏதாச்சும் மேட்ச் ஆகி இருந்துதா?” என்றவர் ஆவலுடன் கேட்க,

“ரெகார்ட்ஸ்ல மேட்ச் ஆகி இருந்தது… ஆனா ஐடி ரெகார்ட்ஸ்ல இல்ல” என்றான்.

“அப்புறம்”

“போலீஸ் ரெகார்ட்ஸ்ல” என்று ஜெய் சொல்ல பாலமுருகன் அதிர்ந்து, “வாட்?” என்றார்.

“எஸ் சார்… கிரிமினல் ரெகார்ட்ஸ்ல அந்தப் பொண்ணோட டீடைல்ஸ் கிடைச்சுது… பேரு அமி… பிக் பாக்கெட் கேங்… ஒரு நாலு மாசம் முன்னாடி ஒரு செயின் திருட்டுல வகையா சிக்கி மூணு மாசம் ஜெயில இருந்திருக்கா… வண்ணாரப்பேட்டை எச் 1 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரவிதான் அந்தப் பொண்ணை அரெஸ்ட் பண்ணி இருக்காரு” என்று ஜெய் விவரங்களைக் கூறியபடி ஒரு கோப்பினை பாலமுருகனிடம் நீட்ட, அதனைப் பிரித்து பார்த்தவரின் முகம் கறுத்து போனது.

ஆல்வினின் இத்தனை வருட தேடல் இப்படியா வந்து முடிய வேண்டும். அவன் தந்தப் புகைப்படங்களில் இருந்த ஜாடை இந்தப் பெண்ணுடன் மிகக் கச்சிதமாக பொருந்தியிருந்தது.

“சார்… இன்ஸ்பெக்டர் ரவி வெளியே இருக்காரு… கூப்பிடட்டுமா?” என்று ஜெய் அனுமதி கேட்க,

“ம்ம்ம்” என்று சிரத்தையின்றி தலையசைத்தார் பாலமுருகன். ஏனோ அவருக்கு அமராவைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற மொத்த ஆவலும் அப்போது வடிந்து போனது.

ரவி உள்ளே நுழைந்து மரியாதையுடன் சல்யூட் அடிக்க, “உட்காருங்க ரவி” என்று பாலமுருகன் அவரிடம் விவரங்களைக் கேட்டார்.

“அவ பேரு அமி சார்”

“அமியா?”

“ஆமா சார்… அவ உண்மையான பேர் அமிதான்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“அவ பயங்கரமான ஆள் சார்… ஏதாவது மாநாடு கூட்டம் உள்ளே நுழைஞ்சு செயினு மோதிரம்னு மொத்தமா அபேஸ் பண்ணிடுவா… ஆனா அவ்வளவு சீக்கிரம் கையில சிக்க மாட்டா… காத்து மாதிரி காணாம போயிடுவா… எப்படி உள்ளே வர்றா… எப்படி திருடுறா… எப்படி காணாம போறான்னு ஒன்னுமே தெரியாது”

”போன தடவை கூட அந்த செயின் கேஸ்ல அவளா ஜட்ஜ் கிட்ட வந்து குற்றத்தை ஒத்துக்கிட்டா?”

“ஏன்?”

“அவ பெரிய கேடி சார்… ஜெயிலுக்குள்ள இருக்க யாருக்கோ ஏதோ இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ண போனதா தகவல்”

“அவ காசு கொடுத்தா எந்த வேலையும் இறங்கி செய்வா சார்” என்று ரவி சொல்வதை எல்லாம் கேட்ட பிறகு இந்தப் பெண் அமராவாக இருக்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டார்.

ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவள் பெயர் கூட பொருந்தி இருக்கிறது. மீண்டும் அந்தக் கோப்பைப் புரட்டிப் பார்த்து விட்டு அவரிடமிருந்த அமராவின் சிறுவயது புகைப்படத்தை அமியின் படத்துடன் பொருத்திப் பார்த்தார்.

அமராவின் புகைப்படத்திலிருந்து கள்ளங்கபடமில்லாத அழகும் சிரிப்பும் இந்த அமியிடம் இல்லை. இருக்கவும் வாய்ப்பில்லை.

காலத்தின் மாற்றங்களில் யார் யார் எப்படி எப்படி மாறி போவார்கள் என்று அவரவர்களின் வாழ்க்கை பாதைகள்தானே தீர்மானிக்கின்றன.

தொடரும்.... 

Quote

Semiyana start.. super 

You cannot copy content