You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 21

Quote

21

அந்த அறை முழுக்கவும் மெல்லிய மின்விளக்கின் வெளிச்சம் பரவியது. காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் நுழைய கூட வழியில்லாத நிலையில் அடைப்பட்ட அந்த அறையின் ஒரு பக்கச் சுவருடன் ஒட்டியிருந்த படுக்கையில் ஓர் இளம் பெண் படுத்துக் கிடந்தாள்.

ஒற்றைக் காலில் நீண்டு தொங்கியிருந்த சங்கிலி அந்தப் படுக்கையின் கம்பியில் இணைக்கப்பட்டுப் பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையுடன் இணைந்திருந்த கழிவறை வரை அவள் செல்லக் கூடியளவுக்கு அந்தச் சங்கிலியின் நீளம் பெரிதாக இருந்தது.

சங்கிலி பிணைக்கபட்ட அந்த ஒற்றைக் காலில் சிவந்து கருத்த காயத்தின் தடம். அவளுடைய கருங்கூந்தல் அவளது முகம் தெரியாத வண்ணம்படர்ந்திருந்தன. அவளின் ஒரு கரத்தில் வென்ஃப்லான் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த அறை கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்ட நொடி அவள் உடல் குலுங்கியது.

அந்த உடலுக்கு உயிர் இருக்கிறது என்பதை அவளின் மெல்லிய அசைவுகள் மட்டுமே காட்டிக் கொடுத்ததே தவிர அவள் ஒரு உணர்வற்ற ஜடப்பொருள் போலவே கிடந்தாள்.

அந்த அறைக்குள் நுழையும் போதே ஆல்வின் தன் உயரத்திற்கு தலையைக் குனிந்து கொண்டு நுழைய வேண்டியிருந்தது. அசாத்திய உயரத்துடன் கூடிய கம்பீரம் அவன் தோற்றத்தில்.

கருப்பு நிற டீஷர்ட் ஜீன்ஸ் அணிந்திருந்தான். அவன் முகத்திலிருந்த லேசான சுருக்கங்கள்தான் அவனுடைய அனுபவங்களையும் வயதையும் நாற்பதைத் தொட்டிருப்பதாகச் சொன்னது. மற்றபடி அவனது தேக கட்டமைப்பிற்கு அவனுடைய வயதின் தாக்கம் கொஞ்சமும் இல்லை. 

“அமரா” என்று அழைத்தபடி ஆல்வின் நெருங்கவும் அவசரமாக அவளே எழ, அவள் முகமும் உடலும் ஒடுங்கிப் போய் கிடந்தன. கண்களுக்கு கீழே அழுது அழுது சிவந்த தடங்கள் அவளின் முகத்தின் அமைப்பை மொத்தமாகக் குலைத்துவிட்டிருந்தது.

“குளிச்சிட்டு சாப்பிடு” என்று அவள் அணிந்து கொள்ள வேண்டிய உடையைத் தூக்கிப் போட்டுவிட்டு அருகிலிருந்த மேஜையில் ஒரு ஹாட்பேக்கை வைத்தான்.

அப்போதுதான் அவள் உணர்வுகள் லேசாக உயிர் பெறத் தொடங்கின. எங்கிருந்து வந்து தான் இப்படியொரு இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோம் என்ற சுயபச்சாதாப உணர்வில் அவள் உள்ளம் புழுங்கியது. கண்களினோரம் கசிந்த கண்ணீர் அவள் கூந்தலையும் சேர்த்து ஈரமாக்கியது.

அவள் கரத்தைப் பற்றி ஊசி மூலமாக ஏதோ ஒரு மருந்தை ஏற்றினான். மருந்து உள்ளே செல்ல செல்ல ஜிவ்வென்ற ஒரு உணர்வு அவள் நரம்புகளின் வழியே பாய்ந்த போதும் அவள் அமைதியாக இருந்தாள். கடந்த மூன்று வாரங்களில் அவளுக்கு இதெல்லாம் பழகிப் போய்விட்டது.

அதன் பின் கதவு மூடும் சத்தம் கேட்டதும் மீண்டும் தலையணையில் சாய்ந்து கொண்டாள். அழுது அழுது கண்ணீரும் அவள் கண்களில் வற்றிவிட்டது.

அவளுக்கு இருந்த ஒரே நம்பிக்கை தேவா என்ற ஒரு மனிதன் மட்டும்தான். அவள் நேசத்திற்குரியவன். அவள் அன்பிற்குரியவன். அவன் வருவான் என்ற நம்பிக்கை மட்டுமே அவளுக்கு இருந்த ஒரே பலம். ஆனால் இப்போது அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது.

அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இந்த மர்ம இடத்திற்கு அவனால் தன்னைத் தேடிக் கண்டுபிடித்து வர முடியும்? இப்படியாக அவள் மூளை எழுப்பிய கேள்விகள் அவள் நம்பிக்கையைத் தகர்த்தெறிய முனைந்தன.

கதைகளில்தான் கதாநாயகன்கள் தேடி வந்து காப்பாற்றுவதெல்லாம். நிஜ வாழ்க்கையில் அதெல்லாம் நடக்காது என்ற எதார்த்தங்கள் மூளைக்கு உரைக்க, மெல்ல மெல்ல அவளுக்குள் இருந்த உறுதி அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மும்பைக்கு தேவாவுடன் புறப்பட்டு வந்த போது கட்டிய அழகான கற்பனை கோட்டைகள் எல்லாம் வெறும் பொய் பிம்பங்கள். ஆல்வினின் அன்பான முகம் வெறும் வெளிவேஷம்.

இதெல்லாம் புரியவே அவளுக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது.

தேவாவைத் திடீரென்று காணவில்லை. தயாவின் ஆட்கள்தான் அவனைக் கடத்திச் சென்று ஏதோ செய்துவிட்டார்கள் என்று ஆல்வின் உண்மையான பதட்டத்துடன் சொன்ன போது அவளுக்குத் துளி கூட சந்தேகம் எழவில்லை. அவனது வார்த்தைகளை முழுவதுமாக நம்பினாள்.

“நீ கவலைப்படாதே டியர்… நான் இருக்கேன்… தேவாவை எப்படியாவது நான் கண்டுபிடிச்சு உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்”

“நான் கமிஷனர் சார்கிட்ட பேசிட்டேன்… தேவா இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சான்… நீ கவலைப்படாதே” இப்படியான பசப்பு வார்த்தைகளைக் கூறி அவளை நொடிக்கு நொடி முட்டாளாக்கியதை அப்போது அவள் அறியாளே!

அந்த விமானம் எங்கே செல்கிறது என்று கூட தெரியாமல் ஏன் ஒரு கேள்வி கூட கேட்காமல்…  ஆல்வின் அழைத்த இடத்திற்கெல்லாம் சென்றாள். இத்தனை வருடமாகப் பெற்றோர்களின் அரவணைப்பிற்காக ஏங்கிய அவள் மனதிற்கு அவனின் வார்த்தைகள்… வஞ்சகம் மிகுந்தவை, போலியானவை என்பதை உணர முடியவில்லை.

அப்பா என்ற உறவின் மீதான நம்பிக்கை.

கடல் சூழ்ந்த தீவு பகுதி போல காட்சியளித்தது அவ்விடம். அமரா தான் ஏமாற்றி எங்கேயோ அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பதை அவ்விடத்தில் தேவாவைக்  காணாத போதுதான் உணர ஆரம்பித்தாள்.

“எங்க பா என்னோட தேவா?” என்றவள் அந்த பங்களா முழுக்க சுற்றும் முற்றும் பார்த்துத் தேடிவிட்டு கவலையுடன் கேட்க,

“யாரு தேவா?” என்று ஆல்வின் பதிலுக்கு அசட்டையாக தன் சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்க, அவளுக்குப் புரியவில்லை.

“பா தேவா பா… நம்ம தேவா… அவன் இங்கேதான் இருக்கான்னுதானே சொல்லிக் கூட்டின்னு வந்தீங்க”

“அப்படி சொன்னாதானே நீ என் கூட வருவ டியர்” ஆல்வின் குரலில் அப்படியொரு அலட்சியம்.

அவள் அதிர்ந்து நிற்க அவன் மேலும், “உன்னை இங்கே கூட்டிட்டு வர்றதுக்குதான் அப்படியொரு பொய்யைச் சொன்னேன்” என,

“பொய்யா… அப்போ என் தேவா?” என்றவளின் இதயத்தின் படபடப்பு கூடியது. 

“அவன் மும்பைல எந்தத் தெருவுல… சட்டையைக் கிழிச்சிட்டுப் பைத்தியம் பிடிச்சு சுத்திட்டு இருக்கானோ… வு நோஸ்?” தோள்களைக் குலுக்கிக் கொண்டு அலட்சியமாக சொன்னதில் அவள் கோபம் கட்டவிழ்த்துக் கொண்டது.

“மவனே… உன்னைக் கொன்னுடுவன்டா” என்றவன் சட்டையைப் பிடித்து உலுக்க அனாயசமாக அவளை இழுத்துக் கீழே தள்ளிவிட்டவன்,

“சும்மா இந்த மாதிரி எமோஷனல் டிராமா க்ரீயேட் பண்றதை விட்டுட்டு… நான் சொல்றபடி கேளு… அதான் உனக்கு நல்லது” என்றான் அதிகாரமாக.

“நீ என் அப்பனா இருந்துட்டு போ…இன்னாவா வேணா இருந்துட்டு போ… அதுக்காக எல்லாம் உன் பேச்சை நான் கேட்க முடியாது” என்றவள் எழுந்து அந்த முகப்பறை கதவை நோக்கி ஓட,

நொடியில் அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்து வந்து பளாரென்று அறைந்து தள்ளினான்.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டு வலியுடன் அவனை  நோக்கியவளுக்கு கண்ணீர் பெருகியது.

“நீ உண்மையிலேயே என்னைப் பெத்த அப்பனாயா? எனக்கு சந்தேகமாகீது… உஹும்… நீ வேறேதோ உள்நோக்கத்தோட என்னை இங்கே கூட்டின்னு வந்துருக்கதானே”

அவள் இவ்விதம் கேட்கவும் ஆல்வின் சற்றும் அசராமல் அவளைப் பார்த்து, “இந்தக் கேள்வியை நீ என்னைப் பார்த்த முதல் நாள் அன்னைக்கே கேட்டிருக்கணும் டியர்… இட்ஸ் டூ லேட்” என, அவளுக்கு அவன் சொல்வது விளங்கவில்லை.

ஆல்வின் மேலும், “நான் உனக்கு அப்பாவா இருக்கணும்னா என் ஜீன்ல பாதி… அதாவது அம்பது சதவீதம் உன் உடம்புல இருக்கணும்… ஆனா இல்லையே” என்றதும் அவள் விழிகள் அசைவற்று நின்றன.

“சாரி டியர்… நான் உனக்கு அப்பா இல்ல” என்றவன் சொல்ல அதிர்ச்சி மேலிட அவள் அவனைப் பார்த்த போது, “ஆனா நான்… உனக்கு அப்பா என்ற உறவுக்கு எல்லாம் மேல” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

அவளுக்கு அந்த வார்த்தைக்கான அர்த்தம் புரியவில்லை. ஆல்வின் தொடர்ந்தான்.

“நான் உனக்கு கடவுள்… உன்னைப் படைச்ச கடவுள்… நான் என்ன நினைக்கிறனோ… நான் என்ன செய்ய சொல்றனோ அதைதான் நீ செய்யணும்… காட் இட்” என்ற போது அவள் உச்சபட்ச அதிர்ச்சி நிலையில் இருந்தாள்.

இன்னும் ஆல்வின் பேசிய வார்த்தைகளின் சூட்சமம் அவளுக்கு விளங்கவில்லை. அதன் பிறகு அவளைக் கட்டாயப்படுத்தி இழுத்து வந்து இந்த தனி அறையில் அடைத்துவிட, அவள் தன்னால் இயன்ற வரை தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்தாள்.

முதல் வாரம் நிறையவே முரண்டு பிடித்தாள். கத்தினாள். ஆல்வின் அறைக்குள் நுழையும் போதெல்லாம் அவனைத் தாக்க முற்பட்டாள். ஒரு முறை அவனுடைய செல்ஃபோனை அவன் அறியாமல் திருடி மறைத்து வைத்துப் பயன்படுத்த முற்பட்டு வகையாகச் சிக்கிக் கொண்டாள்.

அவளைக் கட்டுபடுத்த முடியாமல் ஒரு நிலைக்கு மேல் சங்கிலி கொண்டு அவளைப் பிணைத்தவன்,

“இனிமே நீ என்ன பண்றன்னு நானும் பார்க்கிறேன்” என்று மிரட்டிவிட்டுச் செல்ல அவள் சோர்ந்து போனாள்.

போராடி போராடிக் களைத்துப் போனாள்.

ஆனாலும் ஆல்வின் வரும் போதெல்லாம் தன் எதிர்ப்பையும் கோபத்தையும் காட்டிக் கொண்டுதான் இருந்தாள். எந்தப் பலனுமில்லை. அவன் அவளின் கத்தலையும் கதறலையும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

இருப்பினும் அவள் உடலின் ஆரோக்கியத்தைக் காப்பது குறித்து ஆல்வின் ரொம்பவும் மெனக்கெட்டான். அவ்வப்போது அவள் உடலைச் சோதிப்பதும் அவள் நரம்புகளின் வழியாக ஏதோ ஒரு மருந்தை ஏற்றுவதும் இரத்தம் எடுப்பதும் அவனுக்கு வாடிக்கையாகிப் போனது.

அந்த மருந்து ஏற்றப்பட்ட சில நிமிடங்களில் அவளுக்கு அகோரமாய் ஒரு பசி உணர்வு ஏற்படும். அவள் உடல் உணவுக்காகக் கெஞ்சும். ஏழ்மையாக இருந்த காலத்தில் எத்தனையோ நாட்கள் அவள் பசியோடு படுத்து உறங்கி இருக்கிறாள். ஆனால் ஏனோ அவளால் தற்போதைய அந்தப் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

வேறு வழியின்றி ஆல்வின் எடுத்து வந்து வைத்த உணவை அவள் உட்கொண்டாள்.

மூன்று வாரங்கள் கழிந்து விட்ட நிலையில் இருளான அந்த அறையும் தனிமையும் அவளின் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக வேரறுக்க தொடங்கியிருந்தது. அவளை விரக்தி நிலைக்குத் தள்ளியிருந்தது.

போராடுவதற்கான மனோபலத்தை அவள் உடலும் உள்ளமும் இழக்கத் தொடங்கிவிட்ட நிலையில் அந்த இருளுக்கும் தனிமைக்கும் அவள் பழக்கப்படத் தொடங்கியிருந்தாள்.

அவ்வப்போது தேவாவின் நினைவு மட்டும் அவள் உணர்ச்சிகள் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதைப் பறைசாற்றிவிட்டுச் செல்லும். இப்போதும் கிட்டத்தட்ட அப்படிதான்.

அவள் மெல்ல எழுந்தமர்ந்தாள்.

அவன் எடுத்து வந்த உடையைப் பார்த்தாள். சிறை கைதிகள் அணிவது போன்ற பேன்ட் சட்டை அது. முதல்முறை இப்படியொரு உடையைக் கொடுத்த போது அதனை ஆல்வின் முகத்தில் தூக்கியடித்தாள்.

அவன் சற்றும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டான். இரண்டு நாட்களுக்குப் பிறகு வேறுவழியில்லாமல் குளித்துவிட்டு அவளே அதனை அணிந்து கொண்டுவிட்டாள். நாளடைவில் அந்த உடை அவனளிக்கும் உணவு பண்டங்கள் எல்லாமே அவளுக்குப் பழகிவிட்டது.

மெல்ல எழுந்து தலை குளித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டு அங்கிருந்த உணவை எடுத்து வைத்துக் கொண்டு அவள் உண்ண தொடங்கினாள். ஆனால் அதனை உண்ண இயலாமல் வாயில் வைத்ததுமே குமட்டிக் கொண்டு வந்தது.

அதனை அப்படியே மூடி வைத்துவிட்டு மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களில் கதவை திறந்து கொண்டு வந்த ஆல்வின் அவன் கொண்டு வந்து வைத்த உணவு அப்படியே இருப்பதைக் கண்டு, “ஏன் சாப்பிடல?” என்று சீறலாகக் கேட்க,

“சாப்பிட முடியல… குமட்டின்னு குமட்டின்னு வருது” என்றவள் எங்கேயோ திரும்பி கொண்டு பதில் கூற,

“அப்வியஸ்லி… அப்படிதான் இருக்கும்… நீ இப்போ பிரக்னன்டா இருக்க இல்ல டியர்” என்றான்.

அவனை வியப்புடன் ஏறிட்டவள், “இப்போ… இன்னா சொன்ன?” என்று தட்டு தடுமாறி அவள் குரல் தழுதழுக்க வெளியே வந்தது.

“யூ ஆர் பிரக்னன்ட்… உன் ப்ளடை டெஸ்ட் பண்ணி பார்த்த போது கன்ஃபார்ம் ஆச்சு” என்றவன் சாதராணமாகச் சொல்லவும் அவள் கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டன.

இந்தச் செய்தியைக் கேட்டு தான் உண்மையில் சந்தோஷம் கொள்ள வேண்டுமா இல்லை வருத்தப்பட வேண்டுமா? அவளுக்குப் புரியவில்லை.

“தேவா” என்றவள் முகத்தை மூடிக் கொண்டு கதறி அழ,

“ஏன் இவ்வளவு எமோஷன் ஆகுற… இந்தக் குழந்தையை நீ பெத்துக்கப் போறது இல்ல” என்று ஆல்வின் உணர்ச்சியற்ற பார்வையுடன் கூற அவள் கண்களில் கண்ணீர் உறைந்துவிட்டன.

அவள் கொந்தளிப்புடன், “நீ யாருடா நான் இந்தக் குழந்தையைப் பெத்துக்கணுமா வேணாமான்னு சொல்றதுக்கு” என,

“நான் யாரா… உன்கிட்ட நான்தான் முன்னாடியே சொன்னேனே… நான் உன் கடவுள்னு” என்றதும் அவள் முகம் அஷ்டகோணலாக மாறியது.

“தூ த்தேறி நீ போய் கடவுளாம்… நீ ஒரு சரியான சைக்கோ பைத்தியம்” என்றவள் பதில் கூற அவன் சத்தமாகச் சிரித்தான்.

“சைக்கோத்தனமா இருக்கிறது கூட ஒரு வகையான கடவுளோட குணம்தான் டியர்… கோடி கோடியா பணத்தைக் கொட்டிக் கொடுத்துட்டு அதை அனுபவிக்க ஒரு வாரிசு கூட கொடுக்க மாட்டான்… குப்பத்துல இருக்க ஏழைக்கு… வஞ்சனையில்லாம குழந்தைகளை ஒன்னு இரண்டு மூணுன்னு அள்ளி அள்ளிக் கொடுப்பான்…நீங்க நம்புற தி ஸோ கால்ட் கடவுள்.”

”இதுக்கு பேர் என்ன சொல்லுவ… சைக்கோத்தனம்தானே… அப்படி பார்த்தா நானுமே சைக்கோதான்” என்றவன் விளக்கம் கொடுத்துவிட்டு அந்த ஹாட்பேக்கை எடுத்துக் கொண்டு வெளியேற போனவன்,

“ஆல்ரெடி உனக்கு ஆபார்ஷனுக்கான மெடிஸனை ஏத்திட்டேன்… இன்னும் கொஞ்சம் நேரத்துல அது வேலை செய்ய ஆரம்பிச்சிடும்” என்ற போது அவள் தலையில் இடியே விழுந்துவிட்டது.

“பேமானி டேய் உன்னை நான் கொன்னுடுவேன் டா” என்றவள் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே எழுந்து அவனைத் தாக்க வர அப்போது அவள் காலில் பிணைத்திருந்த சங்கிலி சிக்கிக் கொண்டதில் அவள் தரையில் சரிந்துவிட்டாள். அதற்கு மேல் அவள் தாங்க முடியாமல் உடைந்து அழுதபடி,

“நான் உன் காலில வோணா வுழறேன்… என் குழந்தை எனக்கு வோணும்… என் குழந்தை வோணும்” என்று தரையில் மண்டியிட்டு கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்ச மீண்டும் அவள் புறம் திரும்பியவன்,

“ஸோ சாரி டியர்… அதுக்கு .0000000001 % வாய்ப்பு கூட இல்ல…” என்று இரக்கமற்ற பார்வையுடன் சொல்லிவிட்டு வெளியேறிவிட, அன்றைய இரவெல்லாம் அவள் வயிற்று வலியால் துடித்துப் போனாள்.

“தேவா… நீ எங்கடா இருக்க? எப்படா வருவ? இந்த நரகத்துல இருந்து என்னை எப்படியாவது காப்பாத்தி கூட்டின்னு போடா” என்றவள் கண்ணீருடன் புலம்பித் தீர்த்தாள். அவள் அழுகைக்கும் புலம்பலுக்கும் எவ்வித பலனுமில்லை.

அவளுடைய கருவிலிருந்த சிசு குருதியாகக் கரைந்து போனது.

அடுத்த நாள் ஆல்வின் அதே போல அவளுக்கான உடையையும் உணவையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, “இந்த மாத்திரை எல்லாம் போடு… பெயின் குறைஞ்சுடும்… இட் வில் பி ஓகே” என்று சொல்ல, சீற்றமாக அவள் கரங்கள் தலையணையை இறுகப் பற்றிக் கொண்டது. இரத்தக் குழாயில் சொருகப்பட்ட ஊசி அந்த இறுக்கமான பிடியில் நிச்சயம் வலித்திருக்க வேண்டும்.

சற்று முன்பாக உயிர் போகும் வலியை அனுபவித்தவளுக்கு அந்த வலி துச்சம்தான்.

“அமரா…” என்று ஆல்வின் அவள் தோளைத் தொடவும் நத்தை போல தன் உடலைச் சுருக்கிக் கொண்டு, “சீ… என்னை தொடாதே” என்று ஈனகுரலில் பேசினாள்.

அவளுடைய நிராகரிப்பைக் கோபத்தை எல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. “ஃபீவரிஷா இருக்கு போல” என்று அவளின் உடல் சூட்டைத் தொட்டு உணர.

“என் குழந்தையைக் கொன்னுட்டியே டா பாவி” என்று ஆக்ரோஷமாக எதிரே இருந்தவனின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

“என் குழந்தையைக் கொன்னுட்டியே… கொன்னுட்டியே” என்று திரும்ப திரும்ப வெறி வந்தவள் போல கத்தினாள்.

அலட்சியமாக அவள் கையைத் தட்டிவிட்டு விலகியவன் சட்டை பாக்கட்டிலிருந்த சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே, 

“குழந்தையைக் கொன்னுட்டேனா… ஆஃப்டிரால் அது ஒரு சின்ன சதைப் பிண்டம்… அதுல உயிர் மட்டும்தான் இருக்கும்… ஹ்ம்… உனக்காக… உன்னை விட்டுக் கொடுத்திர கூடாதுங்குறதுக்காக நான் இதுக்கு மேலயும் செஞ்சிருக்கேன் டியர்” என்றவன் அவளை நேராக பார்த்து,

“நான் காதலிச்சுக் கைப் பிடிச்சு ஐஞ்சு வருஷம் வாழ்ந்த என் மனைவி அமுதாவைக் கொன்னு இருக்கேன் தெரியுமா?” என, அவள் கண்கள் இமைக்கவும் மறந்தன.

அவள் அதிர்ச்சியில் சிலையென சமைந்திருக்க ஆல்வின் குரலையுயர்த்தி,  “ஜஸ்ட் அமுதா உன்னை டெலிவரி பண்ணா… அதுக்காக அவ உனக்கு அம்மா ஆகிடுவாளா.”

”அவளுக்கு என்ன உரிமை இருக்கு… உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப் போக… அதான் அவளை ட்ரைன்ல தள்ளிக் கொன்னேன்… அவ உடம்பு சிதிலம் சிதிலமா சிதைஞ்சுப் போறதைப் பார்த்தேன்.”

”இப்பவும் கூட என் கோபம் அடங்கல… பதினைஞ்சு வருசம் என்னை நாயா பேயா தேட வைச்சுட்டா… திரும்பியும் அவளைக் கொன்னு புதைக்கணும் போல வெறி வருது” என்றவன் தன் எதிரே இருந்த சுவரில் ஓங்கிக் குத்த, அந்த சத்தத்தில் அமராவின் உடல் அதிர்ந்தது.

 அவர் கண்களில் இருந்த வெறியைக் கண்டு அவள் வெலவெலத்துப் போக, “ஒரு விஷயத்தை நீ க்ளையரா புரிஞ்சிக்கோ… நீ எனக்கானவ… எனக்கு சொந்தாமானவ.”

”யூ நோ வாட்… அமராங்குறது உன் பேர் இல்ல… என் பிராஜெக்ட்டோட பேரு… அஃப்கோர்ஸ் அமரா இட்ஸ் மை லைஃப் டைம்… ட்ரீம்” என்று அவளைப் பார்த்து அழுத்தமாகச் சொல்லிவிட்டு இடைவெளி விட்டு அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து,

“அந்த தேவாவை உயிரோட நான் விட்டுட்டு வந்தேனா… ஏதோ ஒரு வகையில் நீ எனக்குக் கிடைச்சதுக்கு அவன் காரணமங்குறதாலதான்…

”ஒரு வேளை… உன்னைத் தேடிட்டு அவன் இங்கே வந்தான்… சாரி டியர்… அதுக்கு அப்புறம் அவன் உயிரோட இங்கிருந்து போகமாட்டான்” என்று எச்சரிக்கையாகச் சொல்லிவிட்டு அகன்றான்.

அமியின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது. அதற்கு பிறகு அவள் மனம் வைத்த ஒரே வேண்டுதல்… தான் இந்த அறைக்குள்ளேயே சமாதியானாலும் பரவாயில்லை… தேவா எக்காரணத்தைக் கொண்டும் இங்கே தன்னைத் தேடிக் கொண்டு வரவே கூடாது என்பதுதான்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content