You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 26

Quote

26

இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் பேசப்படும் கடலோர நன்னீர் நிலைகளையும் வனங்களையும் இக்காலக்கட்ட தமிழக நிலங்களில் பார்க்கவே முடியாது. அதுவும் பெரும்பாலான கடலோர மாவட்டங்கள் வறண்ட நிலங்களாகவே காட்சியளிக்கின்றன. அதற்கு காரணம் ஏற்றுமதி இறக்குமதி விவசாயம் நகரமயமாக்கல் என்பது போன்ற சுயநல தேவைகளுக்காக நம் முன்னோர்களுக்கு முன்னோர்களே கடலோர வனங்களைச் சீராக அழித்துவிட்டிருந்தனர்.

இது ஒன்றும் புதிதல்ல. தினம் தினம் வளர்ச்சி என்ற பெயரால் நாகரிக மனிதன் உலகின் பல்வேறு பகுதியில் உள்ள காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறான். அதுவும் ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நூறு ஏக்கர் மழை காடுகள் நிர்மூலமாக்கப்படுகின்றன. இப்படியே போனால் அதிகபட்சம் நூறு வருடத்திற்குள்ளாக வனங்களற்ற வெறும் பாலைவனங்களாக நம் பூமி மாறிவிடலாம். அதன் பின் நாம் எல்லோரும் வெற்றிகரமாக ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து கொண்டு உயிர் வாழலாம்.

அதற்கான பழக்கத்தைத்தான் நமக்கு கொரோனா முன்கூட்டியே கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

ஆனால் இன்னும் அந்த நிலை நமக்கு வராததற்கு காரணம் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பழங்குடியினர். அவர்கள் தாங்கள் வசிக்கும் வனங்களை அதே வனப்புடன் காப்பாற்றி வருகின்றனர். அதற்கான சான்றுதான் அந்தமானில் இன்னும் மிச்சம் மீதியாக இருக்கும் பசுமையான கடல் வனங்கள்!

பளிங்கு போல தெரிகிற கடல் தரையும் வனங்களுக்கு இடையே அமைந்துள்ள தென்னந்தோப்புக்களும் இயற்கை எழுதிய கவிதை தொகுப்பு.

அதுதான் அந்தமான் தீவுகள். அதிலுள்ள 538 தீவுகளில் ஆறு தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். 

இன்றும் கடலுக்கு அருகில் அத்தகைய அடர்ந்த வனப்பகுதியைக் காண முடிகிறதென்றால் அதற்கு காரணம் பழங்குடியினர்கள்தான். உலகில் பட்டியிலடப்பட்ட 125 வனப் பழங்குடியினங்களில் கிட்டத்தட்ட ஆறு இனங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழ்கிறார்கள்.

அப்படியொரு பூர்வகுடியினர் இனம்தான் சென்ட்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசி குழுக்கள். அவர்களின் பூர்விகம் 60,000 வருடம் பழமையானது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

அவர்கள் பெரும்பாலும் கடல் மீன்களையும் தேங்காய்களையும் மரங்களில் கிடைக்கும் பழங்களையும் உணவாக உட்கொள்ளும் அதேநேரம் தேவைக்கு அதிகமான எதையும் இயற்கையிடமிருந்து பிடுங்கிக் கொள்வதில்லை. அவர்கள் இயற்கையுடன் ஒன்றெனக் கலந்து வாழ்கிறார்கள்.

அவர்களை ஆதிவாசிகள் காட்டுவாசிகள் நாகரிகமற்றவர்கள் என்று நாகரிகத்தில் முன்னேறிய தற்கால மனிதன் அவர்களுக்கு முத்திரை குத்தினாலும் அவர்கள்தான் உண்மையான பூமிவாசிகள். பல்லாயிரம் ஆண்டு காலமாக இயற்கையைப் பாதுகாத்து நிற்கும் காவல் தெய்வங்கள் என்று கூட சொல்லலாம்.

சென்ட்டினல் தீவில் வசிக்கும் பூர்வகுடியினரும் கூட அப்படியொரு வகைதான். வெறும் அறுபது சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சிறிய தீவுதான் எனினும் அங்குள்ள பெரும்பாலான இடங்கள் அடர்ந்த மரங்களால் படர்ந்திருந்தன.

அத்தீவிற்குள் நாகரிக மனிதர்கள் நுழைய முற்பட்டால் அவர்களின் எலும்புக்கூடுகள் கரையில் மிதக்கும். சில நேரங்களில் அவர்களின் உயிரற்ற உடல்களை மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். யாரும் உள்ளே வரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன்!

அந்தளவு அவர்கள் நாகரிக மனிதர்களை வெறுத்ததாகவும் அதற்கு காராணம் இருநூறு வருடங்களுக்கு முன்பான ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அந்தத் தீவினைக் கைப்பற்ற எண்ணிய ஆங்கிலேயர் இருவர் அத்தீவு மக்கள் சிலரைக் கடத்திச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்றன.

இதனால் அந்தத் தீவினை வெளியாட்கள் யார் நெருங்க முயற்சித்தாலும் ஈவு இரக்கமின்றி அவர்களைக் கொடூரமாகக் கொன்று தூக்கி வீசிவிடுங்கின்றனர் செனட்டில் தீவில் வசிக்கும் பூர்வகுடியினர்.

யாரும் அதன் பின் அந்தத் தீவினை எட்டிப் பார்க்கவும் துணியவில்லை.

இந்தளவு நாகரிக மனிதர்களை வெறுக்கும் சென்டினல் மக்கள் இன்றும் கற்கால முறையில் வாழ்கிறார்கள். பெரும்பாலும் கற்களைக் கொண்டே தங்களின் ஆயுதங்களையும் தயார் செய்கிறார்கள்.

இதெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் அவர்கள் நெருப்பினை கூட பயன்படுத்த அறியாதவர்கள் என்பதுதான்.

அவர்களைப் பற்றி இத்தனையும் அறிந்து கொண்ட பின்னரே அமுதா அந்தத் தீவிற்குள் காலடி எடுத்து வைத்தாள். கருகருவென்ற மேனியும் கட்டுடலான தேக அமைப்பும் அரை நிர்வாண தோற்றமும் அவளுக்கு அவர்களின் வாழ்வியலை அப்பட்டமாக எடுத்துரைத்தது. இதெல்லாம் தாண்டி ஐந்து வயது பெண் குழந்தை கூட துல்லியமாக அம்பு எய்தும் திறனைக் கற்றிருப்பது அவளை வியப்புக்குள்ளாக்கியது.

அதுவும் அந்தச் சிறுமி மட்டும் இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திலிருந்து சற்றே விசித்திரமாக தோற்றமளித்தாள். அவளின் நிமிர்ந்த நடை உடையெல்லாம் தாண்டி அவளின் மாநிறம் அவர்களிடமிருந்து அந்தச் சிறுமியைப் பிரித்துக் காட்டியது. கால் வரை நீண்டிருந்த அவள் கருங்கூந்தல் மேலும் அதிசயிக்க வைத்தது.

எதனால் இந்தப் பெண் மட்டும் வித்தியாசமாக இருக்கிறாள் என்று கேள்வி அமுதாவின் மூளையைக் குடைந்த அதேசமயம் அந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் அவள் கையை இறுக்கமான கொடியில் பிணைத்துக் கட்டி இழுத்துச் சென்றான்.

மீண்டும் அவளைப் பயம் பற்றிக் கொள்ள ஒரு வேளை இவர்கள் தன்னை வெட்டி உணவாக உண்ணப் போகிறார்களோ என்ற பயங்கர கற்பனை அவளைப் பதறடித்தது.

அவர்கள் நரமாமிசம் சாப்பிட கூடியவர்கள் என்ற தகவலும் பரவலாக இருந்ததால் அதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று எண்ணியவளின் நாடி நரம்புகள் எல்லாம் நடுக்கமுற்றன.

சில அடி தூரங்கள் அந்தக் காட்டிற்குள் நடந்து சென்றதும் சிறு சிறு குடிசை வீடுகள் தென்ப்பட்டன. அங்கு வசிக்கும் பெரும்பாலான மனிதர்கள் அவ்விடத்தில் ஒட்டுமொத்தமாகக் குழுமியிருந்தனர்.

மிகச் சாதாரணமாக அவர்கள் நிர்வாண கோலத்தில் திரிந்தனர். சிலர் மட்டும் இலைதழைகளைக் கொண்டு தங்கள் உடலில் சிற்சில பகுதிகளை அரைகுறையாக மறைத்திருந்தனர்.

எல்லோரும் அவளைச் சூழத் தொடங்க அவர்களின் தோற்றத்தின் கருமையும் கொடூரமும் கடுமையான பார்வையும் அவளின் இதய துடிப்பைச் சரமாறியாக ஏற்றியது. 

அங்கு குழுமியிருந்த ஆதிவாசிகள் விசித்திரமான ஒலியை நேரடியாக அவர்கள் தொண்டைக் குழியின் வழியாக வெளியேற்ற,  அவர்கள் தன்னை ஒரு உணவு பண்டமாக எண்ணிக் கொண்டாடி களிக்கிறார்கள் போலும் என்று அவளாக ஒரு கற்பனை செய்து பயந்து கொண்டிருந்தாள்.  

சற்று முன்பு ஆபந்பாந்தவனாக அவளைக் காப்பாற்றிய சிறுமி அங்கிருந்த குடிசைக்குள் சென்று மறைந்துவிட்டிருந்தாள்.

கண்களை மூடி கொண்டு தன் இறப்பை ஏற்க அமுதா தயராகிவிட்ட நொடி யாரோ அவள் தோளைப் பலமாக உலுக்கிவிட அவள் பயத்தில், “என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… நான் ஓடிப் போயிடுறேன்” என்று அலற தொடங்க,

“நீங்க தமிழா?” என்று நெருக்கமாக ஒரு பெண் குரல் கேட்டது. அமுதாவிற்கு அது அபய குரலாக ஒலிக்க அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். அந்த கூட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத அதேநேரம் அவர்களைப் போன்றே அரைநிர்வாண உடையில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.

வியப்புடன் அப்பெண்ணை ஏறிட்ட அமுதா தட்டுத்தடுமாறி, “ஆமா… நீங்க… நீங்களும் தமிழா… இங்கே இந்தக் கூட்டத்தில நீங்க” என்று பதட்டமாகப் பேச அப்பெண் அழகாய் ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

அந்தப் பெண்ணின் கால்களைப் பற்றிக் கொண்டு நின்றிருந்தாள் அச்சிறுமி. இருவரும் நிச்சயம் அம்மா மகளாக இருக்க கூடும் என்று அவர்கள் தோற்ற ஒற்றுமை சொன்னது. அதேநேரம் அப்பெண் யார் என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் கேள்விக்கான பதில் கிடைக்க தான் உயிருடன் இருக்க வேண்டுமே! வேறு வழியின்றி அப்பெண்ணின் கையைப் பற்றிக் கொண்ட அமுதா, “என்னைக் காப்பாத்துங்க” என்று கெஞ்சத் தொடங்க,

“அது முடியாது” என்று ஒரே வரியில் அவள் மறுத்துவிட்டாள்.

அமுதா அச்சத்துடன் அவள் கைகளை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டு, “நீங்க இந்தக் கூட்டத்தில இருக்கவங்க மாதிரி ட்ரஸ் பண்ணி இருக்கிறதைப் பார்த்தா நிச்சயமா நீங்க சொன்னா கேட்பாங்க… என்னைக் கொன்னுட வேண்டாம்னு சொல்லுங்க” என்றவள் கெஞ்ச அப்பெண் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு,

“உங்க பேர் என்ன?” என்று கேட்க,

அவள், “அமுதா” என்றாள்.

ஒரு நிமிடம் அமைதியாக யோசித்தவள், “சரி உங்களைக் காப்பாத்துறேன்… ஆனா நீங்க இந்தத் தீவிலேயேதான் தங்கி இருக்கணும்… திரும்பிப் போக முடியாது” என, அமுதா அதிர்ந்துவிட்டாள்.

தன்னை சூழ்ந்திருந்த அந்த இடத்தையும் அந்த தீவு மக்களையும் பார்த்தவளுக்கு மரணத்தை விட இது மிகப் பெரிய தண்டனை என்று தோன்றியது.

அவள் கண்ட இலட்சிய கனவுகள் எல்லாம் சுக்குநூறாகச் சிதைந்து போனது போல ஒரு கற்பனை உருவானது. அவள் அச்சத்துடன் முகத்தை மூடி அழத் தொடங்க அந்த விசித்திர பெண்ணிற்கு அவள் மீது இரக்கம் பிறக்க,

உடனடியாக சூழ்ந்திருந்தவர்களைப் பார்த்து அவர்கள் மொழியில் ஏதோ பேசினாள். அதன் பின் அவள் தன் கையிலிருந்து கத்திப் போன்ற கூர்மையான கல்லைக் கொண்டு அமுதாவின் கைக் கட்டை அறுத்து ஒரு சிறிய குடிசைக்குள் அழைத்துச் சென்றாள்.

அமுதா எதுவுமே பேசவில்லை. மனமோ அங்கிருந்த தப்பிக்கும் உபாயம் ஏதாவது கிட்டுகிறதா என்று யோசிக்க சொல்ல மூளையோ  இந்தத் தீவு மக்களைப் பற்றிய தகவல்களை எப்படியாவது பெற்றுவிட முடியுமா என்று யோசிக்க சொன்னது.

“நீங்க எங்கிருந்து வர்றீங்க?” அந்த  விசித்திர பெண்ணே பேச்சைத் தொடங்கினாள்.

“நான் சென்னைல இருந்து வர்றேன்”

“உங்களுக்கு இந்தத் தீவைப் பற்றியும் இந்த மக்களையும் பற்றி எதுவும் தெரியாதா?”

அப்பெண்ணின் நேரடியான கேள்விக்கு உண்மையைச் சொல்வதா அல்லது பொய் சொல்வதா என்று கண நேரத்தில் யோசித்தவள்,

“தெரியாது… தெரியாமதான் உள்ளே வந்து மாட்டிக்கிட்டேன்” நாகரிக மனிதனின் முதல் பால பாடமே பொய் சொல்வதுதான்.

அப்பெண் அவளை ஆழ்ந்து நோக்கினாள்.

“உண்மையிலேயே தெரியாதுங்க… நான் சும்மா பக்கத்துல இருக்க தீவை எல்லாம் சுத்திப் பார்க்கலாம்னு வந்து இங்கே மாட்டிக்கிட்டேன்”

“அப்படியெல்லாம் இங்கே வர முடியாதே” சந்தேக பார்வையுடன் அப்பெண் கேட்க,

“உண்மையாதாங்க சொல்றேன்” என்றாள் அமுதா.

அப்போதும் நம்ப முடியவில்லை என்பது போல்தான் அந்தப் பெண்ணின் பார்வை இருந்தது. அதற்குள்ளாக உள்ளே நுழைந்த சிறுமி அந்தப் பெண்ணிடம் ஏதோ பரபரப்புடன் தெரிவித்தாள்.

அவள் பேசும் மொழி புரியாவிட்டாலும் அவளின் கேள்வி தன்னைப் பற்றியது என்பதை அமுதா ஒருவாறு கணித்துக் கொண்டாள்.

பின்னர் அப்பெண் அமுதாவின் புறம் திரும்பி, “வெளியே இருக்க எல்லோரும் உங்களைக் கொல்ல சொல்லிக் கத்திட்டு இருக்காங்க” என, அப்போதுதான் வெளியிலிருந்து எழுந்த பயங்கர சத்தம் அமுதாவின் செவியை எட்டியது.

அமுதாவின் கண்களில் கண்ணீர் பெருகிவிட அப்பெண் அவள் தோளைத் தட்டி சமாதானம் செய்துவிட்டு வெளியே சென்றாள். பின்னர் மெல்ல மெல்ல வெளியே கேட்டிருந்த கூச்சலும் குழப்பங்களும் அடங்கிவிட்டன.

இருப்பினும் தான் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்று அமுதா நம்பவில்லை.

மீண்டும் அப்பெண் குடிசைக்குள் நுழைந்து, “இப்போதைக்கு உங்க உயிருக்கு ஆபத்தில்லை” என்றதும் ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்ட அமுதா எதிரே நின்றவளின் கைகளைப் பற்றிக் கொண்டு நன்றியுடன் பார்க்க, அவள் புன்னகைத்தாள்.

அரிதாரமில்லாத அழகான புன்னகை அவளுடையது.

அதன் பின் அமுதா அந்தக் குடிசையை விட்டு வெளியே வரவில்லை. அப்பெண்தான் உள்ளே வந்து அவளின் பையைக் கொடுத்து,

“சாப்பிடுற பொருளெல்லாம் எடுத்து வந்திருக்கீங்க இல்ல… பசிச்சா சாப்பிடுங்க… ஆனா எக்காரணத்தை கொண்டும் நான் இல்லாம வெளியே போக வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அகன்றாள்.

சுற்றிலும் குப்பென்று மீன் நாற்றமும் இறைச்சி நாற்றமும் வீசிக் கொண்டே இருந்ததில் அவளால் எதுவும் உண்ண முடியவில்லை. குமட்டிக் கொண்டே இருந்தது. இரண்டு நாள் இங்கே வசிப்பதே அவளுக்கு பிரம்ம பிராயத்தனமாய் இருந்தது. வாழ்க்கையே வெறுத்துவிடும் போல் ஒரு உணர்வு.

இதற்கிடையில் ஆத்திர அவசத்திற்குத் தப்பித்தவறி வெளியே வந்தால் நிறைய கண்கள் அவளைக் கொலைவெறியுடன் வேட்டையாட காத்திருந்தன.

உயிருடன் தப்பிப்போம் என்ற நம்பிக்கையே அவளுக்கு அற்றுப் போனது. அப்போது அந்த விசித்திரபெண் அமுதாவிற்கு சிறிய இலையில் உணவு கொண்டு வந்தாள்.

அதில் பழங்களும் தேங்காய் துண்டுகளும் இருந்தன. உடலிற்கு சக்தி வேண்டுமென்றால் இதையாவது தான் சாப்பிட வேண்டும் என்று அதனை வாங்கி உண்ணத் தொடங்க,

“இரண்டு நாள் கூட உங்களால் இங்கே தாக்குப் பிடிக்க முடியல இல்ல” என்று கேட்டாள் அப்பெண்!

அமுதா கவலையுடன் ஆமோதிக்க அவள் புன்னகைத்துவிட்டு, “இயற்கையோட வாழ்றதுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு இல்ல” என்றாள்.

நியாயமான கேள்வி. ஆனால் தான் பழக்கப்பட்ட வாழ்க்கை வேறு.

கற்கால மனிதன் கூட நாகரிகம் கற்கலாம். ஆனால் நாகரிகத்தைத் தொட்ட மனிதன் கற்கால மனிதனாக நிர்வாணம் கோலம் பூண முடியுமா?

அப்பெண்ணின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

அவள் அமுதாவின் மனதைப் புரிந்தவள் போல தலையசைத்து, “எனக்கும் இங்க வந்த புதுசில இப்படிதான் இருந்துச்சு… ஆனா இவங்க கூட வாழ்ந்து பழகின பிறகு நாகரிகத்தோட உண்மையான அடையாளமே இவங்கதான்னு தோணுச்சு” என, அமுதா அவளை வியப்புடன் நோக்கினாள்.

“என் பேரு ராஜி… நான் உங்களை மாதிரி சிட்டில வளர்ந்த பொண்ணுதான்…  கடந்த வந்த மோசமான சூழ்நிலைகள்… சுயநலமான மனிதர்களால சில வருடங்களுக்கு முன்னாடி கடலில குதிச்சு தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சேன்… ஒரு ட்ரஜிக் என்ட் அப்படின்னு நினைச்சிட்டிருந்த என் வாழ்க்கை புதுசா ஆரம்பிக்குது… என் விதி என்னை இங்கே கொண்டு வந்து கரை ஒதுக்கிடுச்சு.”

”சென்ட்டினல் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன்… அன்னைக்குதான் இவங்களை நேரடியா பார்த்தேன். முரட்டுத்தனமா கொடூரமா பயங்கரமா இன்னும் வேறெப்படி சொல்றது… எனக்கு தெரியல… பார்க்க அப்படி எல்லாம் இருந்தாங்க… ஆனா அவங்கதான் என் உயிரைக் காப்பாத்தினாங்க” என்றதும் அமுதாவின் விழிகள் பெரிதானது.

“அவங்க மொழி எனக்கு புரியாம இருக்கலாம்… ஆனா அவங்க அன்பு எனக்கு புரிஞ்சுது.

நாகரிக மனுஷங்க காட்டுற அன்பு பெரும்பாலும் சுயநல காரணங்களுக்காகதான்… ஆனா இந்த மக்களோட அன்பு கடல் மாதிரி… நதி மாதிரி… மழை மாதிரி… எதிர்பார்ப்பில்லாம இயற்கை நமக்கு வாரி வழங்குற வரம் போல அவங்க அன்பு காட்டினாங்க… உடைஞ்ச என் காலுக்கு வைத்தியம் பார்த்தாங்க… ஒரு வகையில என் மனசுக்கும்” என்று சொல்ல,

“எனக்கு புரியல… அவங்க உங்களை கொல்ல ட்ரை பண்ணலயா?” என்று கேட்டாள் அமுதா.

“நான் காயம்பட்டு இருந்ததால் என்னை அவங்க கொல்ல முயற்சி செய்யல… என்னைக்குமே இயலாமையில இருக்கவங்கள இந்த மக்கள் கொல்லவும் மாட்டாங்க.”

”இங்க வந்து செத்து போன எல்லோருமே பேராசைக்காக இந்த இடத்தை ஆக்கிரமிக்க வந்தவங்க… அதனாலதான் அவங்களைக் கொன்னாங்க.”

”இவங்க பார்க்கத்தான் காட்டு மிராண்டி மாதிரி இருப்பாங்க… ஆனா பழகுனா அவ்வளவு அன்பானவாங்க”

“ஓ” என்று ஆச்சரியத்துடன் கேட்ட அமுதா மேலும்,

“நீங்க அப்புறமா இங்கேயே தங்கிட்டீங்களா?” என்று வினவ,

“என்னை இந்தத் தீவோட தலைவர் மொலாஸா போக சொன்னாரு… ஆனா நான்தான் போகல… எனக்கு இந்தத் தீவு தாண்டிய உலகத்துல எதுவும் இல்லன்னு தோணுச்சு… அதான் நான் இங்கேயே தங்கிட்டேன்… மொலாஸாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

”ஆக்சுவலி அது கல்யாணம் இல்ல… அவங்க வே ஆப் ரிலேஷன்ஷிப் பில்டிங்… அப்புறம்… எனக்கும் மொலஸாவுக்கும் பிறந்தவதான் அமி… என் பொண்ணு” என்றவள் வாசலில் ஓரமாகக் கதவின் புறம் மறைந்து நின்றிருந்த தன் மகளை இழுத்து அணைத்தபடி கூற அமுதாவால் நம்பவே முடியவில்லை.

ராஜி மேலும், “அவளுக்கு நான் தமிழ்ல வைச்ச பேரு என்ன தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, “அமிர்தா” என்றவள்,

“அவ பேர் மாதிரியே உங்க பேரும் இருக்கிறதால உங்களைக் காப்பாத்தணும்னு எனக்கு தோணுச்சு… ஆனா அமிக்கு உங்களைக் காப்பாத்தணும்னு தோனினதுதான் ஆச்சரியம்” என்றாள்.

அமுதா இன்னும் அவள் சொன்ன முதல் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவில்லை. “இங்க இருக்க ஒருத்தரை எப்படி நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?” என்று கேட்க,

“இங்க நான் இருக்கணும்னா மொலாஸாவை கல்யாணம் பண்ணிக்கனும்… எனக்கு ஒன்னும் அது தப்பா தெரியல… பண்ணிக்கிட்டேன்” என்றவள் சாதாரணமாகச் சொல்லிவிட்டு,

“சரி நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க… நான் கிளம்புறேன்” என்று  வெளியேறிவிட அமுதாவிற்கு தலை மேலும் கீழுமாகச் சுழன்றது.

இங்கிருந்து தப்பிக்காவிட்டால் இவர்கள் கூட்டத்தில் உள்ள ஒருரை கல்யாணம் செய்து கொள்ள நேரிடுமோ?

 இப்போது உயிர் பிழைத்திருப்பது கூட ஆபத்து என்ற எண்ணம் பயமுறுத்தியது அவளுக்கு. அடுத்த நாள் வந்த சூரிய உதயத்தில் அமுதா மிகவும் சோர்வுடன் படுத்து கிடக்க,

“நீங்க வாங்க… கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரலாம்” என்று ராஜி அழைத்தாள்.

“இல்ல… நான் வரல… இங்கேயே இருக்கேன்” என்று அமுதா அஞ்சி மறுக்க,

“ஒன்னும் பயம் இல்ல… நீங்க என் கூட வாங்க” என்று கட்டாயப்படுத்தி அமுதாவை வெளியே அழைத்துச் செல்ல, கையுடன் தன்னுடைய புகைப்பட கருவியை எடுத்து சென்றாள்.

அந்த மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக தங்கள் உணவுகளை பகிர்ந்து உண்பதைப் பார்த்தாள். அவர்களுக்குக் கூட கடவுள் வழிப்பாடு இருந்தது. சிவப்பு வண்ணம் சாயம் பூசிய அந்தக் கல்லை அவர்கள் எல்லோரும் வணங்குகிறார்கள். அருகே நிறைய வில் அம்புகள் குவிந்து கிடந்ததைப் பார்த்தாள். யாரும் கவனிக்காத சமயங்களில் அவற்றை எல்லாம் படம் பிடித்து கொண்டாள்.

அவர்கள் வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள் என்று தோன்றியது.

அமுதா இவ்வாறாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டு வர அம்மனிதர்கள் அவளை வேண்டா வெறுப்பாகக் காண்பதும் புரிந்தது.

ஒட்டுமொத்தமாக ஒரு நூறு பேருக்குள்ளாகவே வசிக்கிறார்கள் என்பதைக் கணித்த அமுதா ராஜியிடம், “இவங்க இவ்வளவு பேர்தான் இருக்காங்களா?” என்று வினவ,

“நான் வந்த சில வருஷத்துல இங்கே ஒரு மோசமான நோய் கொத்துக் கொத்தா பரவி நிறைய பேர் இறந்துட்டாங்க…  ஆனா அது இயற்கையா வந்த நோய் இல்ல… யாரோ செஞ்ச சதி… இந்தத் தீவை அபகரிக்க இப்படி நிறைய கொலை முயற்சி நடக்கும்… இன்னைக்கு நேத்து இல்ல.”

”இது காலம் காலமாக நடந்திட்டு இருக்கு… அப்படி ஒவ்வொரு முறையும் நூறு இருநூறு பேருக்கு மேல இறந்து போயிடுவாங்க… அதனால கூட்டத்தோட எண்ணிக்கை வருஷா வருஷம் குறைஞ்சிட்டே வருது…”

”எப்போ எது நடக்கும்னு இந்தத் தீவு மக்கள் ஒவ்வொரு நிமிஷமும் பயந்துதான் வாழ்ந்திட்டு இருக்காங்க… அந்தப் பயம்தான் இவங்களை எல்லாம் மூர்க்கமா மாத்திடுச்சு… அதான் நாகரிகமா ட்ரஸ் போட்டுட்டு இருக்க யாரைப் பார்த்தாலும் அவங்களுக்குக் கொன்னுடணும்னு வெறி வர காரணமும் கூட” ராஜி பேசிக் கொண்டிருக்கும் போதே அமுதாவை நோக்கி ஒரு அம்பு விர்ரென பாய்ந்து வந்தது.

ராஜி சுதாரித்து அவளைத் தள்ளிவிட்டதில் அமுதா மயிரிழையில் உயிர் தப்பிவிட்டாள். தூரத்தில் அந்தக் கூட்டத்தில் ஒருவன் அவர்களை வெறியோடு பார்க்க ராஜி அவனிடம் சென்று சண்டையிட்டாள்.

இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம் நிகழ்ந்தது.

அந்தச் சந்தரப்பத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க எண்ணமிட்ட அமுதா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்தக் காட்டுப்பாதையில் ஓடத் துவங்கிய மாத்திரத்தில் எதிரே வந்த ஆஜானுபாகுவான மனிதன் மீது மோதி தரையில் வீழ்ந்தாள்.

அவனுக்கு அங்கிருந்த மரங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. அப்படியொரு உறுதியான உடல் அமைப்பு.

அமுதா தரையில் கிடந்தபடி நடுக்கத்துடன் அவரை நோக்கும் போது  ராஜி அங்கே வந்துவிட்டிருந்தாள். ஒருவாறு நிலைமையைச் சமாளித்து அவள் கைப் பிடித்துக் குடிசைக்குள் அழைத்து வந்துவிட அமுதா அச்சத்துடன் கால்களை மடித்து ஒரு ஓரமாக ஒண்டிக் கொண்டாள்.

“ரொம்ப பயந்துட்டியா” என்றவள் அங்கிருந்த பனை ஓலையில் அவளுக்கு தண்ணீர் பருக எடுத்து வந்து கொடுக்க அதனைக் குடித்துவிட்டு அமுதா தன்னைத்தானே ஒருவாறு ஆசுவாசப்படுத்தி கொண்டு நிமிர்ந்து,

“யார் அவரு… பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு” என்று கேட்க,

“அவர்தான் மொலாஸா” என்றாள் ராஜி. அமுதாவிற்குப் பொறையேற,

“ஐய்யய்யோ! அவரையா நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று வினவிய மறுகணமே தான் அவ்விதம் கேட்டிருக்க கூடாதோ என்று ராஜியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க அவளோ இவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள். 

“இல்ல கொஞ்சம் வயசான மாதிரி இருக்காரு… அதான் சொன்னேன்” என்று அமுதா சமாளிக்க மெல்லிய புன்னகையுடன் அவளை நோக்கிய ராஜி,

“கொஞ்சம் வயசான மாதிரியா… அவருக்கு நூறு நூத்து ஐம்பது வயசு இருக்கும்… ஆனா கரக்டா எனக்கு கணக்கு தெரியாது… இங்கே இருக்க எல்லோருமே அவர் சந்ததி… அவர் சந்ததிக்கு சந்ததின்னு போயிட்டே இருக்கு… எனக்கே முதல ஆச்சரியம்தான்.”

”நம்ப முடியல… ஆனா அவங்களைப் பத்திக் கொஞ்சம் கொஞ்சமா புரிய இது உண்மைதானு தெரிஞ்சிக்கிட்டேன்… இன்னுமும் கூட மொலாஸா இளமையாதான் இருக்காரு” என்று முடிக்க அமுதா அதிசயித்துவிட்டாள்.

“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே” என்று அமுதா தயக்கத்துடன் ஆரம்பிக்க,

“கேளுங்க” என்று புன்னகையுடன் சொன்னாள் ராஜி.

“எப்படி அவ்வளவு வயசு வித்தியாசத்துல நீங்க கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்து இருக்கீங்க”

ராஜி சிரித்துவிட்டு, “இங்கே யாரும் அவங்க வயசை எழுதி வைக்கிறது இல்ல… யாருக்கும் அவங்க வயசும் தெரியாது… இன்னும் கேட்டா உடம்புதான் அவங்க வயசை இளமையைப் பிரதிபலிக்குது… அப்படி பார்த்தா மொலாஸாவோட தோற்றத்துக்கு அதிகபட்சம்  நாற்பது வயசுதான் இருக்கும்… அது கூட அவர் உடல் பலத்தைப் பார்க்கும் போது இன்னும் கம்மியாதான் தெரியும்” என்றாள்.

“நீங்க சொல்றது சரிதான்… ஆனா அப்ப கூட” என்று அமுதா இழுக்க, 

“எனக்கு வயசு முக்கியமா படல… என் மக மொலாஸாவோட வாரிசு… அவரை மாதிரியே அவளும் ரொம்ப வருஷம் இளமையோட வாழ முடிஞ்சா அது நல்ல விஷயம்தானே.”

”அதனாலதான் என் பொண்ணுக்கு அமிர்தான்னு பேர் வைச்சேன்… அவ அசுரர்களும் அமரர்களும் கடைஞ்ச போது வந்த தேவ பிரசாதம் மாதிரி… இளமையோட நீடூழி வாழப் போறவ” என்றாள்.

பின்னர் இரவு நேரத்தில் ராஜி சொன்னதை எல்லாம் சிந்தித்து பார்த்த அமுதாவின் கண்களில் புது நம்பிக்கை ஒளி மின்னியது.

ராஜி சொன்ன ஒவ்வொன்றும் இயற்கையின் உண்மை. இந்தப் பூமியில் ஜீவராசிகள் தங்கள் ஜீன்களை அடுத்த சந்ததிகளுக்குக் கடத்துவதையே தன்னுடைய தலையாய கடமையாகக் கொண்டுள்ளன. அதுவும் ஒவ்வொரு ஜீவராசியும் தன் இணையைத் தேர்ந்தேடுக்கும் முறைதான் அடுத்த வரும் சந்ததிகள் ஆரோக்கியமாக அமைய காரணமாக உள்ளது.

அதுதான் இயற்கை தேர்வு செய்யும் முறை(natural selection theory).

ராஜி சொன்னது போல அமிர்தா ஓர் அற்புத படைப்புதான். கற்காலத்திற்கும் தற்காலத்திற்குமான பாலம்.

அதாவது அதிபுத்திசாலித்தனத்திற்கும் திடமான உடல் உறுதிக்கும் பிறந்த ஒரு அதிசய இணை. 

முதல் முறை பார்த்த போதே ஏதோ ஒன்று அவளிடம் சிறப்பாக இருக்கிறது என்று அமுதாவின் மூளை கணித்தது. இப்போது அதற்கான காரணமும் தெள்ளத்தெளிவாக விளங்கி விட்டது.

இங்கிருந்து செல்வதற்கு முன்பாக இவர்களின் மரபணு மாதிரிக்களை நிச்சயமாக எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்ற விபரீத முடிவை எடுத்த அமுதா இதற்காக விரைவில் வருந்த போகிறாள்.

 தன் மரணம் வரை குற்றவுணர்வில் புழுங்கப் போகிறாள்.

You cannot copy content