You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 29

Quote

29

திருமணம் முடிந்த கையோடு சென்னையில் அமுதா வளர்ந்த ஆசிரமத்திற்குச் சென்று வரலாம் என்று ஆல்வின் இந்தியா அழைத்து வந்த போது அவளுக்கு அப்படியொரு ஆனந்தம். ஆனால் அடுத்த நாள் அவன் போர்ட் ப்ளேயர் செல்வதற்கான பயணச்சீட்டைக் காட்ட, அவள் அதிர்ச்சியானாள்.

சென்ட்டினல் தீவு மக்களிடம் இருந்து அவள் உயிருடன் தப்பி வந்ததை இப்போது நினைத்தாலும் அவளுக்குக் குலை நடுங்கியது.  இருப்பினும் ஆல்வின் அந்தமான் தீவுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தெரிவித்த போது அவளுக்கு மறுக்க மனம் வரவில்லை. எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் உடன் சென்றாள்.

ஆனால் அங்கே சென்றதும் அவன் சென்ட்டில் தீவிற்குச் செல்ல வேண்டுமென்று பிடிவாதமாக நிற்க, அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“வேண்டாம் ஆல்வின் … அங்கே போனா நம்ம உயிரோட திரும்பி வர முடியாது” என்றவள் அச்சத்துடன் தெரிவிக்க,

“நீ போயிட்டுத் திரும்பி வந்த இல்ல” என்று அவன் திருப்பி கேட்க,

“அது ஏதோ கடவுள் புண்ணியத்தால நடந்தது… ஆக்சுவலி நான் அங்கிருந்த சில நாட்களில் என் கூட சகஜமா பழகுன சிலர் உண்டு… என்கிட்ட இயல்பா நடந்துக்கிட்டாங்க…  ஃபோட்டோஸ் எடுத்துக்கிட்டாங்க… நானும் கொஞ்சம் அசட்டுத் தைரியத்துல சிலரோட சேம்பிள்ஸ் கலெக்ட் பண்ணேன்…”

”ஆனா அந்த சில பேரை தவிர நிறைய பேருக்கு என்னை பிடிக்கல… என்னைக் கொன்னுடணும்னு தீவிரமா இருந்தாங்க… நான் அங்க இருக்கிறதே அவங்களுக்குப் பிடிக்கல… நிறைய முறை என்னைக் கொல்ல முயற்சியும் செஞ்சாங்க… அது அவங்க தப்பு இல்ல… நாகரிகமாக வாழுற மனுஷங்க மேல அவங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் காரணம்”

”எனக்கு ராஜி மட்டும் உதவலன்னா… நான் அந்தத் தீவிலேயே சமாதியாகி இருப்பேன்… ராஜிதான் என்னைக் காப்பாத்தி ஒரு படகுல அனுப்பி விட்டா… இரண்டு நாள் கடலுக்கு நடுவுல மாட்டிக்கிட்டுத் திக்கு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்… சுத்திலும் தண்ணி… சாப்பாடு இல்ல… குடிக்கத் தண்ணி இல்ல”

”தற்கொலை பண்ணிக்கிற மனநிலைக்குப் போயிட்டேன்… அப்பதான் அந்த வழியா போன கப்பலில் இருந்தவங்க என்னைக் காப்பாத்தி கரைச் சேர்த்தாங்க… இட்ஸ் அ ட்ரேஜிக் எக்ஸ்பீரிய்ன்ஸ்” என்றவள் நடந்ததை விவரிக்க, ஆல்வின் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அமுதா சொல்வதை வைத்து பார்த்த போது அங்கே தனியே செல்வது ஆபத்து என்று அவனுக்கும் புரிந்தது.

முன்னேற்பாடுகள் இன்றி தன்னந்தனியாக அங்கே போய் சிக்கிக் கொண்டு உயிரை விடுவது புத்திசாலித்தனமான காரியம் இல்லையென்று எண்ணிய ஆல்வின் அமுதாவின் பேச்சைக் கேட்டு தன் திட்டத்தை அப்போதைக்கு நிறுத்தி வைத்தான்.

இருவரும் மீண்டும் கனடா திரும்பிவிட்டதில் அமுதாவின் மனம் நிம்மதி பெற்றது. ஆனால் உண்மையான விபரீதம் அதற்கு பிறகுதான் அரங்கேற காத்திருந்தது.

ஒரு மாதம் ஆல்வின் மிகத் தீவிரமாகத் திட்டமிட்டான். தன்னுடைய இலட்சியத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வதென்று முடிவெடுத்தவன் அந்தத் தீவிலிருந்து அமிர்தாவைக் கொண்டு வருவதற்காக சர்வதேச குற்றவாளி கும்பல் ஒன்றைத் தொடர்பு கொண்டான்.

நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவது அவர்களுக்குத் தண்ணிப்பட்ட பாடு. நாடு, மதம், இனமெல்லாம் தாண்டி பணத்திற்காக எப்பேர்ப்பட்ட கொடூரங்களையும் செய்ய துணிந்தவர்கள்.

ஆல்வின் அவர்களை தன் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அதெல்லாம்  அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை. மரபணு வழியாக உருவாகும் நோய்களுக்காக கண்டுபிடித்த சில அரிய வகை பார்மூலாக்களைத் திருடி தனியார் பார்மாஸிட்டிகள் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தொகைக்கு விலைபேசி விற்று லாபம் ஈட்டியிருக்கிறான்.

தன்னுடைய இலட்சியத்தில் வெற்றி பெற பணத்தை ஈட்டுவதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தான். அந்தப் பாதை நியாயமா அநியாயமா என்ற பாகுபாடுகளை எப்போதும் அவன் வகுத்து கொண்டதில்லை.

தற்சமயம் அமிர்தா என்கிற பொக்கிஷத்தை அடைவதே அவனின் நோக்கமாக இருந்தது. 

அதேநேரம் அமுதாவிற்கு இம்மியளவு கூட தன் திட்டம் கசியாத அளவிற்குப் பார்த்துக் கொண்டான். பணி நிமித்தமாக பிரேசில் செல்வதாகக் கச்சிதமாக ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றிவிட்டு அந்தமான் தீவிற்கு வந்தான்.

அதற்கு பின் அந்தக் கும்பலையும் சுற்றுலா பயணிகள் போல வேடமிட்டு அங்கே வர வைத்தான். சில நாட்கள் அந்தத் தீவைப் பற்றிய முழு விவரங்களையும் ஆராய்ந்து சேகரித்தவர்கள் அவர்களைத் தாக்குவதற்கான ஒரு ரகசிய திட்டத்தைத் தீட்டினர்.

 தங்களுக்குத் தேவையான அனைத்து நவீனரக ஆயுதங்களையும் வரவழைத்துக் கொண்டனர். இறுதியாக அவர்கள் செல்வதற்கான ஒரு பெரிய கப்பலையும் ஏற்பாடு செய்து அன்றைய நடுநிசி இரவில் சென்ட்டினலினரைத் தாக்கக் கிளம்பினர்.

அந்த இரவு அத்தனை பயங்கரமாக இருக்க போகிறது என்று ஆராவாரமில்லாமல் முன்னும் பின்னுமாக அலைந்து கொண்டிருந்த அக்கடலலைகளுக்குத் தெரியவில்லை.

நெருப்பினைப் பயன்படுத்த தெரியாத சென்டினல் தீவு மக்கள்   இரவுகளில் பெரும்பாலும் தங்கள் குடில்களை விட்டு வெளிவருவதில்லை. ஆபத்தான விலங்குகள் விஷப் பாம்புகள் பூச்சிகள் தாக்க கூடும் என்று முன்னெச்சரிக்கையுடன் அந்தி சாய்வதற்கு சில நிமிடங்கள் முன்பாகவே அவர்கள் தங்கள் குடில்களுக்குள் பதுங்கிவிடுவர்.

 ஆனால் அந்த விஷ ஜந்துகளை விடவும் மிகக் கொடிய விலங்கு ஒன்று அவர்கள் தீவினைத் தாக்க வந்து கொண்டிருந்ததை அவர்கள் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த இருளடர்ந்த இரவில் ஆல்வினும் அந்தப் பயங்கர கும்பலும் தீவின் எல்லைக்கு சில அடிகள் முன்பாகவே தங்கள் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு, கைகளில் நவீன ஆயுதங்கள் மற்றும் டார்ச்கள் சகிதம் கடலில் குதித்து முன்னேறினர்.

ஆல்வின் மட்டும் அமிர்தாவுடன் அவர்கள் திரும்புவார்கள் என்று கப்பலில் காத்திருந்தான்.

அதேசமயம் சென்ட்டினல் தீவு மக்கள் எல்லோரும் அரண்டு போயிருந்தனர். துளி கூட வெளிச்சம் இல்லாத அந்த இருளுக்குள் ராஜிக்குப் பிரசவ வலி உண்டாகிவிட்டது அவர்களை ரொம்பவும் கவலை கொள்ள வைத்திருந்தது. அவளோ தனது இரண்டாவது குழந்தையைப் பிரசவிக்கக் காத்திருந்தாள்.

 அமிர்தாவோ அம்மாவின் அழுகையைக் கேட்டு மிரண்டு போயிருந்தாள்.பெரும்பாலான அவர்கள் தீவுப் பெண்கள் பிரசவத்தினால் உயிரை நீத்திருக்கின்றனர். அதுவும் இது போன்ற இரவு நேரங்களில் ஒரு பெண் பிரசவிப்பது பாதுக்காப்பானதாகவும் இருக்காது.

ஆதலால் மொத்த கூட்டமும் மொலஸாவின் குடில் வாயிலில் திரண்டிருந்தது. அப்போது காட்டிற்குள் யாரோ வரும் அரவம் கேட்க,  முதலில் என்ன நிகழ்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.

அந்தச் சத்தத்தை வைத்தே வருவது நாகரிக மனிதர்கள்தான் என்று அறிந்த சென்டினல் தீவினர் கைகளில் வில் அம்புகள் கற்கள் போன்ற தங்கள் ஆயுதங்களை எடுத்து தயார் நிலையில் வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒரு பயங்கர ஆயுதம் அவர்கள் மீது குண்டு மாரியாகப் பொழிந்தது.

சக்தி வாய்ந்தவன் எப்போதும் தன்னை விடவும் எளியவன் மீதுதான் தன் பலத்தைக் காட்ட விழைகிறான். எதிர்பாராத தாக்குதலும் அந்தக் கொடிய இருளும் சென்ட்டினல் தீவு மக்களுக்கு அவர்கள் வீரத்தையும் எதிர்ப்பையும் காட்டுவதற்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

இருப்பினும் அவர்கள் வலிமையுடனும் ஒற்றமையுடனும் எதிர்த்து நின்று போராடினார்கள். ஆனால் வரலாற்றின் எந்தப் பக்கங்களைப் புரட்டினாலும் விதி நல்லவனை விட வல்லவனுக்குத்தான் சாதகமாக அமைந்திருக்கிறது. இன்றும் அதே நிலைதான்.

சென்ட்டினல் தீவினர் அதர்மத்தின் வழியாக வீழ்த்தப்ட்டனர். பலரும் காடுகளுக்குள் ஓடி தங்கள் உயிரைக் காப்பாற்ற முற்பட்ட போதும் குண்டுகள் பாய்ந்த வேகத்தில் ஒரு உயிர் கூட தப்பிப் பிழைக்க முடியவில்லை.

மொலாஸா சத்தம் வந்த திசையை வைத்து தன்னுடைய அம்புகளை செலுத்தவும் அது எதிராளி கூட்டத்திலிருந்து ஒருவனை வீழ்த்தியது. அடுத்த நொடி மின்னலென பாய்ந்த குண்டு நூற்றாண்டுகளாக வாழ்ந்த அந்த அசாத்திய மனிதனைத் தாக்கி, அவரை உயிரற்ற நிலையில் மண்ணில் சாய்த்துவிட்டது.

மொலாஸாவின் இறப்பை அறிந்தவர்கள் வெறி கொண்டு அந்தக் கும்பலைத் தாக்க முன் வந்த போது குண்டுகள் பாய்ந்து வந்த வீரியத்தில் பலரும் குற்றியுயிரும் குலையியுருமாகத் தரையில் சரிந்தனர்.

அதன் பின் ஆல்வினின் ஆட்கள் சரசரவென அவர்கள் குடில்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். அப்போது உள்ளிருந்து வீலென்ற ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. ராஜி ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். தொப்புள் கொடி கூட அறுப்படாத அந்தச் சின்னஞ்சிறு குருத்தினை அந்தக் குடிலின் மூத்த பெண் தன் கரங்களில் ஏந்தினாள்.

அப்போது திடீரென்று கண்களைக் கூசும் ஒரு வெளிச்சம் அவர்கள் குடிலை ஆக்கிரமிக்க, எல்லோரும் அரண்டுவிட்டனர். அவர்கள் உள்ளே அமிர்தாவை தேடினர். அவளது புகைப்படத்தை அவர்கள் பார்த்திருந்த காரணத்தால் அவளை அடையாளம் காண்பது அவர்களுக்கு அத்தனை சிரமமான காரியமாக இல்லை.

 அந்தக் கணம் அங்கு சூழ்ந்திருந்த பெண்களையும் சுதாரிக்க விடாமல் ராஜி உட்பட அனைவரையும் ஈவு இரக்கமின்றிச் சுட்டு தள்ளிவிட, அமிர்தா விதிர்விதிர்த்துப் போனாள்.

கண் முன்பாகவே மடிந்து விழுந்த தன் இனத்து மக்களை கண்டு அவள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் போதே ஒருவன் அவள் கையைப் பற்றித் தரதரவென இழுத்துக் கொண்டுச் சென்றான்.

அவளுக்கு நடப்பது இன்னதென்று புரியவே சில நிமிடங்கள் பிடித்தன. அவர்கள் குடிலின் வாயிலுக்கு வர அவர்கள் கைகளிலிருந்த டார்ச்சின் வெளிச்சத்தில் இரத்தமும் சதையுமாகச் சிதறிக் கிடந்த உடல்களைப் பார்க்க நேர்ந்தது. அக்கணமே அவள் துடித்துடித்துப் போனாள்.

அந்த உடல்களை அவளின் தந்தையும் இருந்தது அவளுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. தலை சுழன்றது. அப்போது தூரத்திலிருந்து ஒரு அழுகுரல். இத்தனை மரணங்களுக்கு இடையில் ஜனித்த ஒற்றை உயிரின் அவல குரல். அபய குரல்.

அமிர்தாவின் பலத்தை விழித்துக் கொள்ள செய்த குரல். அந்த நொடியே தன் கரத்தைப் பற்றி இருந்தவனின் கைகளைக் கடித்துவிட்டு அவள் அந்தக் காட்டுப் பாதையில் அசாத்திய வேகத்துடன் ஓடத் தொடங்கினாள்.

அந்தக் கூட்டத்தினர் யாராலும் அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பழக்கமில்லாத யாராலும் அந்த அடர்ந்த காட்டிற்குள் அத்தனை வேகமாகவும் நேர்த்தியாகவும் ஓடுவதும் இயலாத காரியம்தான்.

அவள் எங்கேயோ ஓடி ஒளிந்திருக்க கூடும் என்று எண்ணி அவர்கள் மெதுவாக அவளைத் தேடி நடந்து வரும் பொழுது விர்ரென பாய்ந்து வந்த அம்பு ஒருவன் கழுத்தைத் துளைத்து உள் இறங்கியது.

அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் மிரட்சியுற்ற மறுகணம் அடுத்தடுத்து வந்த அம்புகள் ஒவ்வொருவரின் உயிராகப் பறித்துவிட்டது. இத்தகைய வேகத்துடன் துல்லியமாகத் தாக்குவது அமிர்தா என்ற சின்னஞ்சிறுமி என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

ஆனால் அவள்தான் தனியாளாக அந்தத் தாக்குதலைச் செய்தாள்.

யானை காதினில் புகுந்த எறும்பு போல அவர்களுக்கு அவள் ஆட்டம் காட்டினாள். இருளுக்குள் மறைந்து கொண்டு அவர்கள் நெற்றியில் கட்டியிருந்த டார்ச்களின் வெளிச்சத்தை வைத்தே அவர்களை சரியாகக் குறிப் பார்த்து தாக்கினாள்.

அவர்கள் பத்து பேரில் இறுதியாக எஞ்சியது மூவர்தான். அவர்கள் வாழ்வில் இதுவரையில் கண்டிராத மிகப் பெரிய சவாலாக அமிர்தா இருந்தாள். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்ட போது மீண்டும் கூரிய அம்பு ஒன்று அவர்கள் கூட்டாளி ஒருவனின் கண்களைத் துளைத்துச் சென்றது.

அந்தக் காட்சியைப் பார்த்து மிரண்டவன் அம்பு வந்த திசையில் சரமாரியாகச் சுட்டுத் தள்ளிவிட, அமிர்தா அமர்ந்திருந்த மரத்தின் மீது அந்தக் குண்டு துளைக்க அது லேசாக அவள் இடது காலினை உரசியதில் அவள் தரையில் பொத்தென்று விழுந்து விட்டாள்.

விழுந்த வேகத்தில் தலையில் காயம்ப்பட்டு அவள் மயக்க நிலைக்குச் சென்றுவிட அந்தச் சத்தம் கேட்டு வெறியுடன் நெருங்கிய இருவரும் அவளைக் கொன்றுவிட்டதாக எண்ணி அருகில் வந்து பார்த்தனர். 

ஆனால் அவள் உயிருடன் இருந்தாள். அவள் நாசியிலிருந்து மூச்சு காற்று வந்து கொண்டிருந்தது. கால்களில் இரத்தம் வழிந்தோடி கொண்டிருக்க, அவள் கைகளிலிருந்த வில் அம்பினைப் பிடுங்கி எறிந்துவிட்டு அவர்கள் அவளைக் கப்பலுக்குத் தூக்கிச் சென்றனர்.

மயக்க நிலையிலும் அவளின் காதுகளில் துல்லியமாக தன் தங்கையின் அழுகுரல் கேட்டது. அநாதரவாக அந்தச் சின்னஞ்சிறு உயிரை விட்டுச் செல்லக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகதான் அவள் துணிவுடன் அந்தக் கொடூரர்களை எதிர்த்துப் போராடினாள். ஆனால் அவள் தோற்றுவிட்டாள். அவளது முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனது.

எங்கே தன்னை இழுத்துச் செல்கிறார்கள்? தன்னை மட்டும் ஏன் அவர்கள் சுட்டுத் தள்ளவில்லை? இதற்கான பதில்கள் எதுவும் தெரியாமல் அவர்கள் அவளை இழுத்துச் செல்வதை இயலாமையுடன் எதிர்கொள்ள முடியாமல் சென்றாள்.

அவளுடைய ஒட்டுமொத்த உலகமும் அந்தச் சிறு தீவுதான். இதுவரையில் அவள் பாதங்களை அத்தீவின் கடற்பகுதியைத் தாண்டியதில்லை.

இப்போது அவள் அந்தக் கடலின் மீது பயணித்துக் கொண்டிருக்கிறாள். காயத்துடன் வந்த அமிர்தாவைப் பார்த்த நடந்தவற்றை விசாரித்தறிந்த ஆல்வின் வியப்பானான்.

அதேநேரம் தங்கள் கூட்டாளிகளை இழந்தவிட்ட இருவரும் அமிர்தாவின் மீது அதீத வஞ்சத்துடன் இருந்ததை ஆல்வின் உணர்ந்திருக்கவில்லை.

ஆல்வினைப் பொறுத்தவரை அமிர்தா ஒரு அரிய புதையல். அவளை எப்படியாவது காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்று எண்ணி அவள் காயங்களுக்கு மருந்திட்டான்.

அதேநேரம் அவர்கள் இருவரும் மிதமிஞ்சிய குடி போதையில் தங்கள் நண்பர்களின் இழப்பைக் குறித்துப் புலம்பித் தீர்த்தனர். போயும் போயும் ஒரு சின்ன பெண் இப்படியெல்லாம் செய்து விட்டதில் அவர்களின் ஈகோ பலமாக அடிவாங்கி இருந்தது.

இருவரும் அமிர்தா படுக்க வைக்கப்பட்டிருந்த மருத்துவ அறைக்குச் சென்றனர்.

ஆல்வின் அமிர்தாவைக் கண்காணித்துக் கொண்டிருப்பதை எச்சரிக்கையுடன் எட்டிப் பார்த்தவர்கள் அவன் அங்கிருந்து அகல போகும் சமயத்திற்காக காத்திருந்து அன்றைய இரவே அவளின் மீதான தங்கள் வஞ்சத்தையும் வக்கிரத்தையும் தீர்த்துக் கொள்ள முற்பட்டனர்.

அவர்கள் ஏற்றியிருந்த போதையுடன் சேர்த்து அப்படியொரு வன்மமும் வஞ்சமும் அவர்களுக்குள் விஷமாக ஏறியிருந்ததில் அவள் வயதும் உடலும் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை.

குடிபோதையிலும் வெறியிலும் அவளைக் கொடூரமாகச் சிதைத்து கடலுக்குள் தூக்கி வீசிவிட்டனர்.

ஆல்வின் விடிந்து வெகுதாமதமாகவே இந்த விஷயத்தை அவன் அறிய நேர்ந்தது. அறையில் வந்து பார்த்த போது அமிர்தா அங்கே இல்லை. அவள் படுத்திருந்த இடமெல்லாம் இரத்தத் துளிகளாக சிதறியிருந்தன. என்ன நடந்தது என அவன் யூகிப்பதற்கு முன்னதாக அந்த இருவரும் துளியும் குற்றவுணர்வு இல்லாமல் நாங்கள்தான் அவளை பலாத்காரம் செய்து கடலில் தூக்கி வீசிவிட்டதாகச் சொல்ல, ஆல்வின் நிலைகுலைந்து போனான்.

அவன் யாருக்காக எதற்காக இத்தனையும் செய்தானோ அது ஒன்றுமே இல்லாமல் போனது.

அந்தக் கணமே கோபமேற ஆல்வின் அவர்கள் இருவரையும் தன் கைத் துப்பாக்கியில் சுட்டு வீழ்த்திவிட்டான்.

உயிர்களை காவு வாங்குவதைத் தவிர காட்டு மிராண்டித்தனங்களும் போர்களும் எதையும் சாதித்துவிடுவதில்லை.

அந்த மோசமான அத்தியாயம் அத்துடன் முடிவடைந்த போதும் ஆல்வினின் நம்பிக்கை முடிந்துவிடவில்லை. அமிர்தாவின் இரத்த துளிகளைச் சேகரித்தவன் அவளைப் போன்றதொரு பிரதியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினான். ஆதலால் அவளின் மரபணுக்களின் கட்டமைப்பைப் பிரதி எடுத்தவன் அதன் மூலமாக ஒரு செயற்கை கருவை உருவாக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் ஒருவாறு வெற்றியும் பெற்றான்.

ஒரு வருட போராட்டத்திற்கு பின் அவன் முயற்சிக்கு பலன் கிட்டியது. ஆனால் இந்த இடைபட்ட காலகட்டத்தில் அமுதாவுடனான அவனின் நெருக்கம் குறைந்து போனது. எப்போதும் அவனும் அவன் சித்தப்பாவும் ஏதோ ஒரு இரகசிய சம்பாஷனை செய்து கொண்டிருப்பதும் புதையலைப் பூதம் காப்பது போல தரைத்தள அறையில் இரவும் பகலும் அடைந்து கிடப்பதும் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது.

நாளுக்கு நாள் அந்த உறவின் மீதான பிடிப்பு அமுதாவிற்கு தளர்ந்து போனது. ஒரு வகையில் வெறுத்தும் போனது. அந்த நிலைக்கு அவள் தள்ளப்பட்ட சமயத்தில்தான் மீண்டும் ஆல்வினுக்கு அவள் தேவை வேண்டியிருந்தது. அதவாது அவன் உருவாக்கிய செயற்கை கருவை சுமப்பதற்கான ஒரு பெண் உடல்.

ஆல்வின் தனக்கு இயற்கையாகக் குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொல்லி நம்ப வைத்தவன் ஐ வி எஃப் முறைப்படி அவளைக் குழந்தைப் பெற்றுக் கொள்ள சம்மதிக்க வைத்தான்.

அவளுக்கும் அவர்கள் உறவில் ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சுமுகமாகிவிடும் என்று முட்டாள்தனமாக அவன் சொன்னதை எல்லாம் நம்பினாள். ஆனால் அதற்கு பின்னணியில் நிகழ்ந்த மிகப் பயங்கரமான சூழ்ச்சியை அவள் அறிந்திருக்கவில்லை.

You cannot copy content