You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 3

Quote

3

ஜெய்யும் இன்ஸ்பெக்டர் ரவியும் அந்தக் குறுகலான தெருவுக்குள் நடக்க முடியாமல் நடந்து சென்றனர். சில மணி நேர மழைக்கே அந்த இடம் சேறும் சகதியுமாக மாறியிருந்தது.

பழுதடைந்த அந்தச் சுவர்களை இன்னும் அலங்கோலப்படுத்தி இருக்கும் சுவரொட்டிகள். திரும்பிய பக்கமெல்லாம் குப்பைகள் கழிவு நீர் தேக்கம் அங்கேயே விளையாடும் குழந்தைகள்… அந்தப் பாதையில் வெறுங்கால்களுடன் தண்ணீர் குடம் தூக்கிச் செல்லும் பெண்கள் என்று அவ்விடத்தைப் பார்க்கவே ஜெய்யிக்கு அசூயையாக இருக்க, எப்படி இங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று ஒரு பக்கம் அவனுக்கு வியப்பாகவும் இருந்தது.

இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மக்களின் தரம் உயர்ந்திருக்கிறது என்ற அறிக்கைக்குப் பின்னணியில் காட்டப்படாத பக்கங்கள் இது.

அரசாங்கமும் இவர்களைப் போன்ற கீழ்த்தட்டு வாழ்க்கை முறையை உயர்த்துவதற்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்த போதும் அவையெல்லாம் காகிதளவில் நின்றுவிடுகிறது. அப்படியும் சில திட்டங்கள் வந்து சேர்ந்தாலும் அவற்றிலும் முக்கால்வாசி பாகங்கள் விழுங்கப்பட்டுவிடுகின்றன.

படங்களில் காட்சிகளாகவே இது போன்ற இடங்களை அவன் பார்த்திருந்தாலும் நேரடியாக இதுதான் முதல்முறை. அவன் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவன். அவன் வேலைகள் கூட குளுகுளு ஏசி அறையில் பெரும்பாலும் கணினி திரையில் மட்டுமே.

இந்த அனுபவம் அவனுக்கு ரொம்பவும் புதிது. ஆனால் ரவிக்கு இதெல்லாம் பழகிவிட்ட காரணத்தால் அவன் மிகச் சாதாரணமாக முன்னே நடந்து சென்று கொண்டிருந்தான்.

அவர்களைக் கடந்து சென்றவர்கள் இருவரையும் விசித்திர ஜந்து போல பார்த்தனர். காவல்துறை ஆட்கள் அங்கே வருவது புதிதல்ல. இம்முறை எதற்காக வந்திருக்கிறார்கள் என்ற ஆர்வ பார்வைதான் அவர்களுடையது.

இதை எல்லாம் கண்டும் காணாதது போல் ரவி முன்னே நடக்க, ஜெய் அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை பின்னே நடந்தான். அவனுக்கு அந்தப் பாதையில் நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. தன் இரு சக்கர வாகனத்தை அந்தச் சாலையில் எடுத்து வரவும் முடியாத நிலை.

இவையெல்லாம் கமிஷனர் பாலமுருகன் அவர்களுக்காக எனும் போது இதெல்லாம் ஒரு விஷயமில்லை என்று எண்ணித் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

காவல்துறையில் அவரைப் போன்ற நியாயமும் நேர்மையான அதிகாரிகளைப் பார்ப்பது மிகவும் அரிது. அதுமட்டுமின்றி அவர் மீது அவனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. மேலும் அமராவின் வழக்கு அவருக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவனுக்கு நன்றாக தெரியும்.

அதுவும் தன்னிடம் இந்தப் பொறுப்பை அவர் தந்திருப்பதில் அவன் மனம் நெகிழ்ந்து போனான். இதனை எப்படியாவது சரியாக முடித்துவிட வேண்டுமென்ற பலநூறு முறைகள் எண்ணிக் கொண்டுதான் அவன் அங்கே வந்தது.

இந்த யோசனைகளுடன் ஜெய் நடந்து வர, ரவி அந்த குறுகலான சாலைக்குள் அமைந்த ஒரு பழைய குடியிருப்பின் மேல் தளத்தில் ஏறினான்.

வரிசைக்கட்டி இருந்த அந்த ஒண்டு குடித்தனங்களில் அமியின் வீட்டு முன்பு நின்ற ரவி, “ஆள் இல்ல… பூட்டி இருக்கு சார்” என்றான்.

அங்கிருந்த வீடுகள் எல்லாம் ஒரே மாதிரி ஒரு அறையளவு இருந்ததை ஆராய்ச்சி செய்தபடி நடந்த ஜெய் பூட்டியிருந்த கதவைப் பார்த்து, “எங்கே போயிருப்பா?” என்று கேட்க,

“இருங்க சார்… விசாரிச்சு பார்க்கிறேன்” ரவி தண்ணீர் குடம் தூக்கி வந்த பெண்ணை நிறுத்தி விசாரித்தான்.

“அமியா சார்… அவ இரண்டு வாரம் முன்னயே காலி பண்ணின்கின்னு பூட்டாளே… இன்னும் ஆரும் புச்சா குடித்தனம் வரல… அதான் பூட்டுப் போட்டு கிடக்குது”

“எங்கே போனா? ஏதாவது தெரியுமா உங்களுக்கு?”

“அது கண்ணாலம் பண்ணிக்கினு போயிடுச்சு சார்… நம்ம ஏரியா ஜனங்கதான் முன்ன நின்னு பண்ணி வைச்சாங்க… பாளையத்த அம்மன் கோவிலதான் கண்ணாலம் நடந்துச்சு” என, ஜெய் அதிர்ச்சியானான்.

“அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா” என்று ஜெய் ரவியைப் பார்க்க,

“எனக்கும் இந்த விஷயம் தெரியாது சார்” என்றான்.

மேலும் ரவி அந்தப் பெண்ணிடம் யார் என்னவென்று விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு ஜெயிடம் வந்தான்.

“இப்போ அந்தப் பொண்ணு எங்கேன்னு தெரிஞ்சுதா ரவி?”

“ம்ம்ம்” என்று தலையசைத்த ரவி, “பனந்தோப்பு இரயில்வே காலனி பக்கத்துல செட்டில்மன்ட் ஏரியா” என்றான்.

மேலும் ரவி, “அந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிகிட்டவன் பேரு தேவா… அவன் இரயில்வே ஸ்டேஷன்ல நியூஸ் பேப்பர் மேகஸின் எல்லாம் வித்திட்டு இருப்பான்… ஆனா அவனோட உண்மையான தொழிலே காலேஜ் பசங்களுக்கு கஞ்சா சப்ளை பண்றதுதான்” என்று சொன்னதும் ஜெய் அதிர்ந்து, “வாட்?” என்றான்.

“எப்படி யார் மூலமா சப்ளை பண்றான்னு எல்லாம் கண்டுபிடிக்க முடியாது சார்… இவன் பார்டிங்களுக்கு டோக்கன் மட்டும் கொடுப்பான்… ஆனா சரக்கு யார் மூலமா எப்படி பசங்க கைக்குப் போகுதுன்னு தெரியாது” என்று ரவி சொல்ல,

“என்ன? இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க… தூக்கி அவனை உள்ளே போட வேண்டியதுதானே?” என்று காட்டமாகக் கேட்டான் ஜெய்.

“அப்படி எல்லாம் போட முடியாது சார்… இதெல்லாம் வெறும் இன்ஃபர்மேஷன்… மத்தபடி அவனுக்கு எதிரா எந்த ஆதராமும் இல்லை… சரக்கும் அவன் கைல இருக்காது… அப்புறம் எப்படி அரெஸ்ட் பண்ண முடியும்? அப்படியே பண்ணாலும் அவனை வெளியே எடுத்துருவாங்க…  ஏரியால கொஞ்சம் பவர் ஃபுல்லான கை சார் அவன்” என்று ரவி விவரமாகச் சொல்லிவிட்டு,

“நேரா அமியை அந்த ஏரியால போய் பார்க்கிறது சரியா வராது… நம்ம வேற இடத்துல போய் பார்க்கலாம்” என்றான்.

சில நிமிடங்கள் யோசித்தபடி அப்படியே நின்ற ஜெய், “சரி ஒரு நிமிஷம் இருங்க… நான் சில விஷயங்கள் விசாரிச்சிட்டு வந்துடுறேன்” என்ற சொல்லிவிட்டு அங்கே குடித்தனம் இருந்த பெண்களிடம் சில கேள்விகள் கேட்டான்.

‘எத்தனை வருடமா அமி இங்கே வசிக்கிறாள்… அவள் குடும்பம் யார்? என்ன?’ இது போன்ற கேள்விகளைக் கேட்ட ஜெய் மேலும் அங்கிருந்த நிறைய பேரிடம் அமியைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டதோடு அல்லாமல் அந்த ஏரியாவில் வயது முதிர்ந்த ஒருவரிடம் சென்று அவரிடமும் தகவல் பெற்றான்.

அமியைப் பற்றி ஏன் இத்தனை ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று ரவிக்குப் புரியவில்லை. எதற்காக அவளைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற தகவல்களையும் ஜெய் அவனிடம் சொல்லவில்லை.

அங்கிருந்து புறப்பட்ட பின்னர் ரவி மெல்ல, “கமிஷனர் எதுக்கு இந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்க சொல்றாரு?” என்று கேட்டு பார்த்தான்.

“அது கான்ஃபிடென்ஷியல்” என்று ஒற்றை வரியில் பதிலளித்த ஜெய்,

“நாளைக்கு அமியை எப்படியாவது மீட் பண்ணனும் ரவி… அரேஞ்ச் பண்ணிட்டு எங்கே எப்போ வரணும்னு சொல்லுங்க” என்றவன் உடனடியாக தன் இரு சக்கர வாகனத்தில் பறந்துவிட்டான்.

 ரவிக்குக் கடுப்பாக இருந்தது. தனக்கு இருக்கும் வேலையெல்லாம் விட்டுவிட்டு காரண காரியமில்லாத விஷயத்திற்காக இவர்கள் பின்னே அலைந்து கொண்டிருக்க வேண்டுமா என்று மனதில் எழுந்த குமுறலை உள்ளூர அடக்கிக் கொண்டான்.

அங்கிருந்த கிளம்பிய ஜெய் நேராக பாலமுருகனைப் பார்க்க அவரது அலுவலகத்திற்குச் சென்றான்.

அவன் வந்த தகவலை அறிந்ததும் அவர் பரபரப்புடன் அவனை வரவழைத்து விசாரித்தார். “சொல்லுங்க ஜெய்… என்னாச்சு… அமிகிட்ட பேசுனீங்களா? அந்தப் பொண்ணு வந்திருக்காளா? அழைச்சிட்டு வந்திருக்கீங்களா?” என்று கேட்க,

“இல்ல சார்… எங்களால அந்தப் பொண்ணைப் பார்க்க முடியல… நான் அந்த ஏரியால விசாரிச்சு வரைக்கும் அமிதான் அமராவா இருக்க வாய்ப்பிருக்குன்னு தோனுது” என்றான்.

“எப்படி சொல்றீங்க ஜெய்?”

“அமியோட பாட்டிப் பேரு வசந்தா… அவங்களுக்கு ஒரே ஒரு பையன்தான்… அவன் சின்ன வயசுலேயே குடிச்சு குடிச்சு செத்துப் போயிட்டான்… ஆனா இந்தப் பாட்டி இவளைச் சொந்த பேத்தின்னு சொல்லி வளர்த்திட்டு இருந்திருக்காங்க…

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா அந்தப் பாட்டி இரயில்வே ஸ்டேஷன்ல பழம் வித்திட்டு இருந்த ஆளாம்… ரொம்ப நாள் உடம்பு சரியில்லாம படுத்தப் படுக்கையா இருந்து நாலு வருஷம் முன்னாடிதான் இறந்து போயிருக்காங்க” என்றவன் முடிக்க,

“அப்போ இந்தப் பொண்ணு அமராவா இருக்குமா ஜெய்” என்று பாலமுருகன் ஆவலுடன் கேட்க,

“நைன்ட்டி பெர்ஸன்ட் சான்ஸ் இருக்கு… டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்துட்டா முழுசா கன்பார்ம் பண்ணிடலாம்” என்றான்.

பாலமுருகனுக்கு அங்கேதான் யோசனையாக இருந்தது. ஒரு வேளை டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்க வேண்டுமென்றால் ஆல்வினிடம் அமியைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

அவர் யோசனையாக ஜெய்யைப் பார்த்து, “அந்தப் பொண்ணு கேரக்டர் எப்படி?” என்று விசாரிக்க,

“எல்லோரும் அவளைப் பத்தி ரொம்ப நல்ல மாதிரி சொல்றாங்க… அவ பெரும்பாலும் திருடின பணத்தை எல்லாம் ஏரியால இருக்க பசங்களுக்கு நல்ல துணி வாங்கி தர்றது… புக்ஸ் வாங்கி தர்றது… நல்ல சாப்பாடு வாங்கி தர்றதுன்னு செலவு பண்ணி இருக்கா… பொம்பள ராபின் ஹுட்னு சொல்லலாம்” என்று ஜெய் கிண்டலாகச் சிரித்தபடி சொல்ல பாலமுருகன் முகத்தில் புன்னகை அரும்பியது.

இத்தனை தகவல்களில் இது ஒன்றுதான் அவர் மனதிற்கு உவப்பாக இருந்தது.

“நான் அந்தப் பொண்ணுக்கிட்ட நேரடியா பேசணும் ஜெய்” என்று அவர் கேட்க,

“கண்டிப்பா சார்… நான் அந்தப் பொண்ணை அழைச்சிட்டு வரேன்” என்றான்.

“இங்கே வேண்டாம் ஜெய்… வீட்டுல மீட் பண்ற மாதிரி அரேஞ் பண்ணுங்க”

“ஓகே சார்” என்று தலையசைத்துவிட்டு வெளியே செல்ல இருந்தவன் அப்போதுதான் தான் சொல்ல மறந்த விஷயத்தை நினைவு கூர்ந்து,

“சார் இன்னொரு முக்கியமான விஷயம்” என்றான்.

“அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு… அவன் பேர் தேவா” என்று ஜெய் தேவாவின் விவரங்களையும் சொல்ல, பாலமுருகன் முகம் வெளிறியது.

தேவாவைப் பற்றி அவருக்கும் ஓரளவுக்குத் தெரியும். என்கவுன்டர் லிஸ்டில் அவன் பெயரும் இருக்கிறது.

சீர்திருத்த பள்ளியில் வளர்ந்தவன். கொலை போன்ற வழக்குகள் அவன் மீது பதிவாகாவிட்டாலும் ஆளுங்கட்சி ரவுடி தயாவின் மூளையாகச் செயல்படுபவன். திட்டங்கள் தீட்டுவதில் வல்லவன்.

சமீபமாக காவல்துறை அறிக்கையின்படி மிகவும் ஆபாத்தானவன் என்று கண்டறியப்பட்டவன். இது ஏதோ கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இருந்தது.

You cannot copy content