You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 31

Quote

31

அமுதா படபடப்புடன் ஆல்வினின் கப்போர்ட்கள் முழுவதும் ஆராய்ந்து அந்த அறை கதவின் சாவியைத் தேடினாள். அருள்ராஜிடம் இருப்பது போல அந்த அறை கதவிற்கு ஆல்வினிடம் மற்றொரு சாவி இருக்கும் என்று அவளுக்குத் தெரியும். அவன் ஒரு முறை அதனை அவனுடைய கப்போர்டில் வைத்ததை எதேச்சையாக கவனித்திருக்கிறாள்.

வேக வேகமாக அதனைத் தேடிப் பார்த்தாள். அவன் பொருட்களை எல்லாம் அனாயாசமாக களைத்துப் போட்டுத் தேடினாள். அப்போதைக்கு சாவி கிடைத்தால் போதுமென்று இருந்தது அவளுக்கு.

அவன் துணிகளைக் களைத்துத் தள்ளிய போது அடியில் இரகசிய உள்கதவு ஒன்று தென்பட்டது. இதுவரையில் அவள் அதனைப் பார்த்ததில்லை. பெரும்பாலும் அவன் துணிகளையும் கப்போர்ட்களையும் அவன் தொட விடமாட்டான். அது அவனுக்குப் பிடிக்காத செயல்.

அமுதாவின் சந்தேகம் அதிகமானது. அவள் சிரமப்பட்டு அந்த உள்கதவைத் தூக்கிப் பார்க்க உள்ளே ஒரு ஃபைல் கிடைத்தது. அடியில் டாலர்களில் சில பணக்கட்டுகள் கிடந்தன.

ஆனால் உள்ளே அந்த அறையின் சாவி இல்லை. அமரா என்று பெயரிட்டு இருந்த கோப்பினைத் திறந்ததும் அதில் அமிர்தாவின் படம்தான் இருந்தது. அதனை வேகமாகப் புரட்டிப் பார்த்த போது அவளுக்கு அவற்றில் உள்ள தகவல்கள் பேரதிர்ச்சியாக இருந்தன.

“ஐயோ! ஐயோ!” அப்படியே தரையில் சம்மேளம் போட்டு அமர்ந்து கொண்டு தலையில் சரமாரியாக அடித்துக் கொண்டு அழுதாள்.

அவள் அவ்விதம் உடைந்து அழுது கொண்டிருக்கும் போதே  தரைதளத்தில் மீண்டும் சத்தம் கேட்டது.

அவள் மெதுவாகக் கீழே வந்து எட்டிப் பார்த்த போது அருள்ராஜ் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அருகே இருந்த பூஜாடி ஒன்றை எடுத்துக் கொண்டவள் சத்தமில்லாமல் பின்னோடு அந்த அறைக்குள் நுழைந்து அவர் தலையில் ஓங்கி அடிக்கவும் அவர் வலி தாங்காமல் கீழே விழுந்து மயங்கிவிட்டார்.

அமுதா தன் மகள் படுக்க வைக்கப்பட்டிருந்த படுக்கைக்கு அருகில் சென்று, “அமி அமி” என்று அவளை எழுப்பிப் பார்த்தாள். அவள் விழித்துக் கொள்ளவே இல்லை.

அவளைப் பயம் பீடித்துக் கொள்ள, “அமி எழுந்திருடா” என்று சத்தமாக அழைத்து கன்னத்தில் தட்டிப் பார்த்தாள். லேசாக அவள் விழிகளைச் சுருக்கித் திறக்க முயன்றாள்.

அமுதாவிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது. அவள் பார்வை மகளை விட்டு நகர்ந்த போதுதான் கவனித்தாள். அங்கிருந்த வரைப்படங்களையும் ஆய்வுகளைப் பற்றிய குறிப்புகளையும்.

படிக்க படிக்க அவள் பதறிப் போனாள். அமராவைச் சுமந்த உடல் மட்டுமே அவள் என்ற தகவலைப் படிக்கும் போது உள்ளம் கொதித்தது. அடிவயிறெல்லாம் எரிந்தது.

எல்லாவற்றிருக்கும் மேல் அமரா என்பவள் அவள்களின் ஆராய்ச்சிக்கான சோதனை எலி. ஒரே நாளில் வரிசையாக இத்தனை அதிர்ச்சியை அவள் எவ்விதம் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.

தாள முடியாமல் அவள் தன் வாயை மூடிக் கொண்டு அழுதிருக்கும் போது பின்னிருந்து அருள்ராஜ் அவள் தலையில் தாக்கிவிட்டார். அவள் சுயநினைவு இன்றி கீழே விழுந்தாள்.

அவள் மயக்கம் தெளிந்து கண்களை விரித்துப் பார்த்த போது ஆல்வின் அவள் அருகில் அமர்ந்திருந்தான். அந்த கண்களில் அக்கறையும் பரிவும் இருந்தது.

“ஆர் யூ ஆல்ரைட்?”

அவன் கேள்வியிலும் பார்வையிலும் நெற்றிச் சுருங்கி உற்றுப் பார்த்தாள். அவ்வளவும் நடிப்பு. வஞ்சம். துரோகம்.

தேன் தடவிய குரலில் எத்தனை இனிமையாகப் பேசுகிறான். ஆனால் அவ்வளவும் பொய்!

அவள் கண்கள் பேசிய மொழியை உணர்ந்து கொண்டவன், “நான் உனக்கு நடந்த எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்றேன்” என்று கூற, 

அந்த நொடியே அவள் கொந்தளிப்புடன் அவனைத் தள்ளிவிட்டு எழுந்து கொண்டு, “நீ எதுவும் பேச வேண்டாம்… எங்கே என் பொண்ணு?” என்று கேட்டுக் கொண்டே வெளியேற பார்க்க அவள் கைகளை அழுந்த பற்றிக் கொண்டு,

“அமரா நல்லா இருக்கா… நீ வந்து அமைதியா படுத்து ரெஸ்ட் எடு” என்றான்.

“சீ… என் கையை விடுறா முதல… இனிமே ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க மாட்டேன்… உன் முகத்துல விழிக்கிறது கூட பாவம்” என்றவள் சீற்றத்துடன் சொல்ல,

“என் பக்கம் இருக்க நியாயத்தை முதல கேளு… அப்புறமா நீ என்ன வேணா முடிவெடு” என்றான்.

“நியாயமா… நீ என்னை நிமிஷத்துக்கு நிமிஷம் ஏமாத்திட்டு இருந்தியே… அதுக்கு நியாயம் சொல்ல போறியா… இல்ல உன் ஆராய்ச்சிக்காக சென்டினல் மக்களைக் கொன்னு குவிச்சியே… அதை நியாயப்படுத்தப் போறியா… இல்ல என் குழந்தைனு சொல்லி” அதற்கு மேல் பேச முடியாமல் அவள் கண்ணீர் உகுக்க,

“நான் உன்னை ஏமாத்தல… நான் உண்மையிலேயே உன்னைக் காதலிச்சேன்” என்றவன் சொன்ன மறுகணம் பளாரென்று அறைந்தவள்,

“காதலிச்சேன்னு சொன்னே உன்னைக் கொன்னுடுவேன்” என்றவள் அவனைத் தள்ளிவிட்டு வெளியே வந்தாள்.

அமரா அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கார்டூன் பார்த்து கொண்டிருக்க, “அமி கெட் அப்… லெட்ஸ் கோ” என்று அவள் கரத்தைப் பிடித்துக் கொள்ள,

“வேர்?” என்று அந்தச் சின்னவள் கேட்டுக் கொண்டே அம்மாவுடன் செல்ல தயாராக அருள்ராஜ் அவளை வழிமறித்து நின்றார்.

 அவரைப் பார்த்ததும் அமரா தன் அம்மாவின் கால்களை அச்சத்துடன் கட்டிக் கொண்டாள்.

“போறதன்னா நீ மட்டும் போடி… அமராவை எங்கேயும் கூட்டிட்டுப் போகக் கூடாது… உன்னைக் கூட்டிட்டுப் போகவும் விட மாட்டேன்” என்றவர் ஆவேசமாகச் சொல்ல,

“நீ யாரு… என் பொண்ணைக் கூட்டிட்டுப் போகக் கூடாதுன்னு சொல்ல? நான் கூட்டிட்டுப் போவேன்” என்றவள் பதில் சொல்லும் போது ஆல்வின் அமுதாவின் கரத்திலிருந்த அமராவைத் தன் புறமாக இழுத்துக் கொண்டான்.

“ஆல்வின்”

“ஒழுங்கா உள்ளே போ அமுதா”

“முடியாது… நானும் என் பொண்ணும் இந்த வீட்டுல இருக்க மாட்டோம்” என்று அவள் அமியின் கைகளைப் பிடித்து தன் புறம் இழுக்க அமரா அவர்கள் இருவரின் சண்டையின் இடையில் சிக்கிக் கொண்டு அழத் தொடங்கினாள்.

அருள்ராஜ் இடையில் வந்து, “நான் அப்பவே சொன்னேன்… இந்தப் பொம்பளைங்கள நம்பாதேன்னு கேட்டியா?” என்று ஏற்றிவிட ஆல்வினின் கோபம் அதிகரித்தது.

அமுதா எப்படியாவது அமியை அழைத்துக் கொண்டு சென்றுவிட வேண்டுமென்று பிடிவாதமாக நிற்க ஆல்வின் அவளைச் சமாளிக்க முடியாமல்  இழுத்துச் சென்று அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டான்.

“மாம்” என்று அமரா கூச்சலிட,

“அமி கம் ஹியர்” என்று ஆல்வின் அவள் கையைப் பற்றி இழுக்க,

“எனக்கு மாம் வேணும்” என்று அவள் அழத் தொடங்கிவிட்டாள்.

“மாமுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல பேபி… இப்போதைக்கு மாம் அந்த ரூம்லயே இருக்கட்டும்” என்று ஆல்வின் அவளை சமாதானப்படுத்தினான். ஆனால் அமரா சமாதனாமாகவில்லை. அவள் அழுது கொண்டே இருந்தாள்.

“ஷட் அப் அமி” என்று ஆல்வினின் மிரட்டலில் சின்னவள் மிரண்டு கப்சிப்பென்று வாயை மூடிக் கொள்ள அந்தக் கணமே அவர்கள் வீட்டில் ஒரு மயான அமைதி சூழ்ந்து கொண்டது.

அமரா விசும்பிக் கொண்டே சோஃபாவில் சாய்ந்து உறங்கிவிட ஆல்வின் அருள்ராஜிடம் பேசுவதற்காக அவர் அறைக்குச் சென்றான்.

“அவளைக் கொன்னுட்டு ஆக்ஸிடென்ட் மாதிரி செட் அப் பண்ணிடு”

“என்ன பேசுறீங்க? அமுதா என் மனைவி… அவளை போய் நான் கொல்றதா… என்னால முடியாது” என்று திட்டவட்டமாக மறுத்தான் ஆல்வின்.

“அப்போ நம்ம கனவை நம்ம மறந்துட வேண்டியதுதான்”

“இல்ல அப்படியெல்லாம் நடக்காது… நான் அமுதாக்கிட்ட பேசுறேன்… அவ நிச்சயம் என்னைப் புரிஞ்சிப்பா” என்று இருவரும் மும்முரமாக உரையாடிக் கொண்டிருந்த போது அமி விழித்துக் கொண்டாள். அவள் மெதுவாக எழுந்து மேஜை மீதிருந்த சாவியை எடுத்து அறையைத் திறந்துவிட, அமுதா தரையில் கால்களை மடித்து அழுது கொண்டிருந்தாள்.

“மாம்” என்று அமி தன் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ள அமுதாவும் அவளை அணைத்துக் கொண்டு பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அங்கே யாருமில்லை என்று அறிந்தவள் உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்க, ஆல்வினும் அருள்ராஜும் தரைத்தள அறைக்குள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். சற்று முன்பு ஆல்வின் அவளை அறையில் தள்ளிக் கதவைச் சாற்றிய போது அந்த லேபாரட்டரி அறையின் சாவி தரையில் கிடந்ததைப் பார்த்தாள்.

அவள் தேடும் போது அது கீழே விழிந்திருக்க வேண்டும். மடமடவென அந்தச் சாவியை எடுத்து வந்து மெல்ல கதவை இழுத்து மூடி அவர்களை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டாள். பின்னர் அவள் அந்த அமராவின் கோப்பு அவளுக்குத் தேவையான பணம் பாஸ்போர்ட் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தன் மகளுடன் வெளியேறிவிட்டாள்.

அங்கிருந்து நேராக அவள் தன் தோழி சாராவுக்கு அழைத்துப் பேசி அவள் விலாசத்தை வாங்கிக் கொண்டு அவளைப் பார்க்கச் சென்றாள்.

தன் தோழியிடம் நடந்த விவரங்களை எடுத்துக் கூற சாரா அதிர்ந்தாள்.

“நான் எவ்வளவோ மோசமான மனுஷங்களைப் பார்த்திருக்கேன்… ஆனா இதெல்லாம்… ஊப்ஸ்… என்னால நம்பவே முடியல” என்று கூற, அமுதாவால் எதுவும் பேச முடியவில்லை. சில நிமிடங்கள் முன்புதான் தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றி அவள் அத்தனை பெருமையாகப் பேசினாள்.

ஆனால் அடுத்த சில கணங்களில் அது சுக்குநூறாக நொறுங்கிப் போய்விட்டதை எண்ணும் போது இந்த வாழ்க்கை எத்தனை விசித்திரமானது என்று வியக்கவும் அழவுமே தோன்றியது.

சாரா அவளைத் தேற்றி அப்போதைக்கு அவளுடன் தங்க வைத்துக் கொள்ள, அவளும் வேறு வழியின்றி ஆல்வினுக்கு பயந்து அங்கே தங்கி இருந்தாள்.

ஒரு வாரம் கழிந்த பின், “எங்க டிக்கெட் கன்ஃபாரம் ஆகிடுச்சு… நாளைக்கு நானும் பாப்பாவும் சென்னைக்குக் கிளம்பறோம்” என்று சொல்ல அதிர்ந்த சாரா,

“விளையாடிட்டு இருக்கியா… நீ எங்கேயும் போக வேண்டாம்… என் கூடவே இருந்திடு” என்றாள்.

“இல்ல சாரா… என்னால உன் கூட இருக்க முடியாது… நீ என்னதான் நியாயப்படுத்தினாலும் உன் வாழ்க்கையை என்னால சரின்னு எடுத்துக்க முடியல”

”சாரி என்னால உன் தயவில இருக்க முடியாது… நம்ம ஒன்னா சந்தோஷமா இருந்த காலமெல்லாம் முடிஞ்சு போச்சு… அது திரும்ப வராது” என்று அமுதா வருத்தத்துடன் சொல்ல சாரா நிதானமாக அவளை ஏறிட்டு,

“அதுக்கு மேல உன் இஷ்டம்… ஆனா ஆல்வின் உன்னைத் தேடி வந்து உனக்கு ஏதாவது பிரச்சனை பண்ணா?” என்று கேட்டாள்.

“நம்ம பிறந்து வளர்ந்த இடத்துல நமக்கு கிடைக்கிற தைரியம் தனிதான்… சென்னைல நான் எது வந்தாலும் சமாளிச்சுப்பேன்” என்றவள் திடமாகக் கூற அதற்கு மேல் அவள் முடிவை சாரா மாற்ற முனையவில்லை.

இறுதியாக அமுதா புறப்படும் முன் அமரா கோப்பினை சாராவிடம் தந்து, “என்னைக்காவது அமிர்தா அவ வாழ்க்கையைப் பத்தியும் குடும்பத்தைப் பத்தியும் தெரிஞ்சிக்க ஆசைப்பட்ட இந்த ஃபைலை அவகிட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லு”என்று தெரிவித்துவிட்டு அடுத்த இருபது மணிநேரங்களில் விமானம் ஏறி சென்னை வந்து சேர்ந்திருந்தாள்.

அவள் வளர்ந்த ஆசிரமத்திற்குச் சென்றவள் அமராவின் பிறந்த நாளை அங்கே கொண்டாட வந்திருப்பதாகப் பொய்யுரைத்தாள்.

அமுதாவைத் தேடி சென்னைக்கு வந்த ஆல்வின் அவள் ஆசிரமத்திற்கு வந்திருப்பாள் என்று யூகித்து நேரடியாக அங்கே தேடி வந்தான்.

அவன் ஆசிரமத்து நிர்வாகியிடம் விசாரிக்க, “இப்பதான் பா கிளம்பிப் போனாங்க… ஏதோ வேலை விஷயமா யுனிவர்ஸிட்டி போகணும்னு சொன்னா… இங்கேதான் பெரம்பூர் ஸ்டேஷன் போயிருப்பா” என்று விவரங்களைத் தெரிவிக்க, ஆல்வின் உடனடியாக இரயில் நிலையத்திற்குச் சென்றான்.

காலை நேரம் என்பதால் மக்கள் திரள் திரளாக இரயிலில் ஏறியபடியும் இறங்கியபடியும் கடந்து சென்றனர். அந்தக் கூட்டத்தில் ஆல்வினால் அமுதாவைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்த சமயம், “டேட்” என்று அமரா கத்திவிட்டாள்.

தந்தையைப் பார்த்த உற்சாகத்தில் அவள் அழைத்துவிட அமுதா அவனைப் பார்த்து வெலவெலத்துப் போனாள். அதேநேராம் ஆல்வின் அவர்களை நோக்கி வேக எட்டுக்கள் வைத்து நடந்து வர அமுதா அமராவை இழுத்துக் கொண்டு அந்தக் கூட்டத்திற்குள் ஓடினாள்.

“அமுதா ஸ்டாப்” என்று ஆல்வின் அவளைப் பின்னோடு துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்துக் கொண்டே ஓடியவள் அப்போது அங்கே வந்து நின்ற இரயிலில் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஏறிவிட்டாள்.

ஆனால் முண்டியடித்து இறங்கிய கூட்டத்தில் அமராவின் கை நழுவிவிட்டது. அவள் அந்தக் கூட்டத்தில் திக்குத் தெரியாதவள் போல தன் மகளைத் தேடி அலைந்தாள். அவள் கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் தன் மக்களைப் பற்றிப் பதட்டத்துடன் விசாரித்தாள். எங்கேயும் அவளைக் காணவில்லை.

ஒரு வேளை இறங்கிய கூட்டத்துடன் அவள் தவறி இறங்கி இருப்பாளோ என்று அமுதா நடைபாதையில் இறங்கிச் சென்று மகளைத் தீவரமாகத் தேடிய போது அந்த இரயில் கிளம்பிவிட்டது.

அமுதாவிற்குப் பதட்டத்தில் ஒன்றுமே புரியவில்லை. ஒரு வேளை மகள் ஆல்வினிடம் சிக்கியிருப்பாளோ அல்லது அந்த இரயிலில்  இருப்பாளோ என்று ஏறுக்கு மாறாக யோசித்து அவள் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நின்று கொண்டிருக்கும் போது ஆல்வின் அவள் எதிரே வந்து மறித்து நின்றான்.

அவள் திக்கு முக்காடிப் போனாள். அவள் முகத்தில் தெரிந்த கலவரத்தை உற்றுக் கவனித்தவன், “அமரா எங்கே?” என்று கேட்க,

“தெரியாது” என்று அவள் பதில் கூற,

“என்னது தெரியாதா?” என்று முறைத்துக் கொண்டு நின்றான்.

“ஆமா… எங்கேயோ அவளை மிஸ் பண்ணிட்டேன்” என்றவள் கண்களில் கண்ணீர் நிரம்பிவிட,

“மிஸ் பண்ணிட்டேன்னு கூலா சொல்ற” என்றவன் கண்களில் உஷ்ணமேறியது.

“நான் எவ்வளவு டென்ஷனா இருக்கேன்னு எனக்குதான் தெரியும்… உன்கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல… என் பொண்ணை நான் தேடனும்” என்றவள் சொல்லிவிட்டு அவனைக் கடந்து செல்ல,

“எங்க அவளை விட்ட” என்று ஆல்வின் அவள் கையைப் பிடித்துத் தடுத்தான்.

அவன் புறம் கோபமாகத் திரும்பியவள், “சத்தியமா உன்கிட்ட சொல்ல மாட்டேன்டா… அவ தொலைஞ்சே போனாலும் பரவாயில்ல… உன் கைக்கு அவ கிடைக்கக் கூடாது… கிடைக்கவும் விட மாட்டேன்” என்றவள் ஆக்ரோஷமாகச் சொல்லி முடித்துவிட்டு அவன் கையை உதறிக் கொண்டு முன்னே செல்ல, ஆல்வின் வெறியானான்.

அந்தச் சமயத்தில் அவர்கள் அருகே இருந்த தண்டவாளத்தில் ஒரு இரயில் வேகமாக வந்து கொண்டிருக்க, “கிடைக்க விட மாட்டியா… உன்னை உயிரோட விட்டாத்தானே அவளை எனக்கு கிடைக்க விடமாட்ட… சாவுடி” என்று அவள் பின்னிருந்து அதிரடியாக அவளை இடித்துத் தள்ள அமுதா தடுமாறிப் போய் நடைபாதையிலிருந்து தண்டாவளத்தில் விழுந்து துண்டுத் துண்டாகச் சிதறியிருந்தாள்.

அவள்  உடல் சிதறிய காட்சியைப் பார்த்த ஆல்வின் கண்களில் இப்போதும் அதே அளவு வெறி இருந்தது.

தன் மனைவியாக அவள் தன் காதலைப் புரிந்து கொள்ளவில்லை. தன் கனவைப் புரிந்து கொள்ளவில்லை.

இந்த நொடியும் அவளைக் கொன்றதற்காக இம்மியளவும் அவன் குற்றவுணர்வு கொள்ளவில்லை. அவளுக்கு அது தேவைதான் என்று எண்ணியவன் தன் கையிலிருந்த அவள் படத்தைச் சுக்குநூறாகக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் வீசினான்.

You cannot copy content