You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 7

Quote

7

இலண்டனிலிருந்து சில மைல்கள் தொலைவிலிருந்த காட்ஸ்வுட்டிஸில்(cotswolds) உள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நிகழ்ந்தது.

அன்று மிகவும் பரபரப்பாக நடந்தேறிய படப்பிடிப்பில் நாயகன் நாயகிக்கும் முத்தக்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது.

அந்தக் காட்சியை எடுத்து முடித்ததும் அமிர்தா ஹரீஷைத் திருப்தியின்மையுடன் பார்த்து, “இதெல்லாம் ஒரு ஷாட்டா.. நான் இந்த சீனை எவ்வளவு எமோஷன்ஸோட உணர்வுபூர்வமா எழுதி வைச்சிருந்தேன்… வேஸ்ட்… சுத்தமா ஸ்பாயில் பண்ணி வைச்சிருக்கீங்க” என்று முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள். அவன் முகம் துவண்டது.

ஒவ்வொரு முறையும் படக்குழுவினர் முன்பு அவள் இப்படி தன்னை மட்டம் தட்டுவதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற கடுப்புடன், “பேக் அப்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்தான்.

அவள் மாடியறையில் தனியே ஜன்னலில் வெளியே பார்த்தப்படி நின்றிருந்தாள்.

அவன் அவளைத் தேடிக் கொண்டு வந்து, “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அமிர்தா” என்று சொல்ல,

“வாட்?” என்றவள் அவன் முகம் பாராமல் அலட்சியமாகக் கேட்டாள்.

“கொஞ்சம் என் முகத்தைப் பார்த்து பேசுறீங்களா” என்றதும்,

அவள் கைகளைக் கட்டிக் கொண்டு அவன் புறம் திரும்பி, “என்ன விஷயம்?” என்றாள்.

“இத பாருங்க அமிர்தா…. அன்னைக்கு ஹோட்டலில் நடந்தது அப்பவே முடிஞ்சிருச்சு… அதுக்கு நான் அபாலஜய்ஸ் பண்ணிட்டேன்… உங்க கண்டிஷனை ஏத்துக்கிட்டு என் ஃப்ரண்ட்ஸையும் அனுப்பி வைச்சுட்டேன்… ஆனா நீங்க இப்பவும் அந்த விஷயத்தை மனசுல வைச்சுக்கிட்டு சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் என்னை மட்டம் தட்டிட்டு இருக்கீங்க… திஸ் இஸ் நாட் ஃபேர்” என்றவன் கோபமாக சொல்லி முடிக்க,

“அந்த ஷாட் கேவலமா இருந்துச்சு… அதைதான் நான் சொன்னேன்” என்றவள் அப்போதும் அலட்சியமாகவே பதில் தந்தாள்.

“நீங்க வேணும்டே சொல்றீங்க… அந்த ஷாட் நல்லாதான் வந்திருந்துச்சு” என்றவன் வாதம் செய்ய,

“நல்லா வந்திருந்துச்சா… நான்- ஸென்ஸ்… அது எவ்வளவு எமொஷனல் சீன் தெரியுமா… ஹீரோவும் ஹீரோயினும் மரண போராட்டத்தைக் கடந்து வந்திருக்காங்க… இனிமே சந்திக்கவே மாட்டோம்னு இருந்த அவங்க வாழ்க்கையில இந்த மீட்டிங் ஒரு பொக்கிஷம்… அப்படி ஒரு சந்திப்புல… இரண்டு பேரும் எமோஷனலா கட்டிபுடிச்சு கிஸ் பண்ணிக்கனும்…

ஆனா நீங்க எடுத்து வைச்சிருந்த சீன்ல லவ்வும் இல்ல எமோஷனும் இல்ல… திரும்பவும் சொல்றேன்… அந்த ஷாட் கேவலமாதான் இருந்துச்சு” என்றவள் அடித்துச் சொல்ல,

“சரி கேவலமா இருந்துச்சுன்னே வைச்சுப்போம்… நீங்க சொல்லுங்க… அந்த ஷாட் எப்படி இருக்கணும்” என்றான்.

“இப்பதானே சொன்னேன்”

“அந்த எமோஷனஸ் எப்படி இருக்கணும்னு எனக்கு கரெக்டா எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க”

அவனை எரிச்சலுடன் ஏறிட்டு, “சில எமோஷன்ஸ் எல்லாம் எக்ஸ்பிளையின் பண்ண முடியாது ஹரீஷ்” என,

“சாரி அமிர்தா… எனக்குப் புரியல… இன்னும் பெட்டரா எப்படி அந்த சீனைக் கொண்டு வர்றதுன்னு” என்றான்.

அவனை ஆழ்ந்து பார்த்தவள் சட்டென்று அவனை நெருங்கி வந்து அணைத்துக் கொண்டாள்.

ஹரீஷ் பேந்த பேந்த விழித்துக் கொண்டு  நிற்க, அவன் உதட்டருகே அவள் இதழ்கள் மிக நெருக்கமாக வந்ததும் அவன் பேச்சற்று போனான்.

“நீ இல்லாம… நான்” அப்படியே நிறுத்திவிட்டு அவள் அவன் கண்களை நோக்கினாள். பல நேரங்களில் வார்த்தைகளை விட உணர்வுகள் அதிகம் பேசும். அவள் கண்கள் பேசியது.

அவன் பிரமிப்புடன் அவளைப் பார்த்திருக்கும் போதே அவள் கலங்கிய விழிகளுடன் அவனை முத்தமிடுவது போல நெருங்க, அவன் தன்னை மறந்த நிலையில் நின்றான். அவன் ஆழமாக அவள் விழியின் விசையில் சிக்கிக் கொண்ட அடுத்த கணமே அவள் பின்வாங்கி கொண்டு,

“அந்த சீன் இப்படி இருக்கணும் ஹரீஷ்… படத்தைப் பார்க்கிறவங்களுக்கு அது நடிப்பா தெரியவே கூடாது… அந்தக் காட்சில இதழ்கள் சேராமலே கண்கள் வழியாக அந்த உணர்வுகளைக் கடத்தணும்… உங்களுக்கு இதுக்கு மேலயும் புரியலனா” என்று தோள்களை குலுக்க அவன் திகைப்புடன் அப்படியே நின்றுவிட்டான்.

அவள் மேலும், “ஒவ்வொரு காட்சிலயும் நீங்க அந்த கேரக்டரா நின்னு யோசிங்க ஹரீஷ்… அப்போ நான் சொல்ற எமோஷன்ஸ் உங்களுக்குப் புரியும்” என்று சொல்லிச் சென்றுவிட,

சில நொடிகளுக்கு முன்பு நிகழ்ந்தவை எல்லாம் நிஜமா கனவா என்பது போல இருந்தது அவனுக்கு.

தவிப்புடன் அவள் செல்லும் திசையைப் பார்த்திருந்தவனுக்கு அவள் கண்களில் தெரிந்த உணர்வுபூர்வமான காதலிலிருந்து வெளிவரவே முடியவில்லை. அவள் முத்தமிடவில்லை எனினும் அதனை அவன் உணர்ந்தான்.

அன்று இரவு உறங்காமல் அவன் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றி நடந்து கொண்டிருந்தான். அவனால் உறங்க முடியவில்லை. உடலை விறைக்க வைக்கும் அந்த நகரின் குளிரிலும் ஒருவிதமான உஷ்ணம் ஏறியிருந்தது அவனுக்குள்.

அவள் நினைப்பே அவன் தேகமெல்லாம் தகிக்கச் செய்தது. வாழ்க்கையில் எப்போதும் எதையாவது புதிதாகத் தேடிக் கொண்டிருக்கும் அவனுக்கு அவள் ஒரு முடிவுறா தேடலாகத் தெரிந்தாள். அந்தத் தேடலுக்குள் தொலைந்துவிட தோன்றியது அவனுக்கு.

வெகுநேரம் நடந்து விட்டு தன் அறைக்குத் திரும்பியவன் அவள் எழுதிய அந்த முத்தக் காட்சியை மீண்டும் எடுத்து படித்துப் பார்த்தான். அவன் மனக்கண் முன்பு அந்த நாயகன் இடத்தில் அவனும் நாயகியின் இடத்தில் அவளும் தெரிந்தார்கள்.

அந்தக் கற்பனை இனித்தது. அடுத்த நாள் மீண்டும் அதே முத்தக்காட்சிப் படமாக்கப்பட்டது.

தாமதமாகவே படப்பிடிப்பிற்கு வந்து சேர்ந்த அமிர்தா படமாக்கப்பட்டிருந்த அந்தக் காட்சியைத் திரையில் பார்த்து வியப்பில் ஆழ்ந்தாள்.

“எக்ஸலனட்… நான் இதைதான்… இதைதான் எக்ஸ்பெக்ட் பண்ணேன்” என்றவள் ஹரீஷைப் பார்த்து ஆச்சரியம் பொங்கச் சொல்ல,

“நிஜமாவா?” அவன் நம்பாமல் கேட்டான்.

“எஸ்”

அவன் அவளை ஆழ்ந்து பார்த்து, “ஸ்டில் உங்களவுக்கு வரல அமிர்தா… உங்க கண்ணுல இருந்த எமோஷன்ஸ் தட்ஸ் அமேஸிங்” என்று சொல்லுகையில் அவன் கண்களில் மின்னிய உணர்வை அவள் புரிந்து கொண்டாள்.

 அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு எந்தப் பதிலும் தராமல் அவ்விடம் விட்டு எழுந்துச் சென்றாள்.

“அமிர்தா” என்று அழைத்துக் கொண்டே அவன் அவள் பின்னே வர நின்று அவன் புறம் திரும்பியவள், “எனக்கு உங்களைப் பத்தி நல்லா தெரியும் ஹரீஷ்… ஸோ ப்ளீஸ் என்கிட்ட உங்க வேலையைக் காட்டாதீங்க” என,

“என்ன தெரியும்?” என்றவன் புரியாமல் கேட்டான்.

“ம்ம்ம்… நீங்க பயங்கரமான ப்ளே பாயாமே… கேள்விப்பட்டேன்” என்று அவள் சொல்லிக் கொண்டே முன்னே நடக்க,

“நான் ஒன்னும் ப்ளே பாய்லாம் கிடையாது” அவன் அவளை வழிமறித்துக் கோபத்துடன் சொல்ல,

“அப்போ மத்தவங்க சொல்றதெல்லாம் பொய்யா?” என்று அவள் அலட்சியமாகக் கேட்டாள்.

“பொய்னு சொல்ல முடியாது… ஆனா அது ஒன்னும் உண்மை இல்ல” என்றதும் அவள் ஏற இறங்க அவனை ஒருவிதமாய் பார்க்க,

“ஹே சீரியஸ்லி… நான் சில பொண்ணுங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன்.. ஆனா யாரு கூடவும் ப்ளான் பண்ணி எல்லாம் ப்ரேக் அப் பண்ணிக்கல… அதுவா நடக்கும்” என்றான்.

“அதெப்படி அதுவா நடக்கும்”

“நான் ஃபிப்த் ஸ்டேன்டட்ல ஒரு பொண்ணை லவ் பண்ணேன்”

“ஃபிப்த் ஸ்டேன்டட்லயா” அவள் கண்கள் அகல விரிய, அவனோ மிகச் சாதாரணமாக,

“ஹ்ம்ம்… ஆனா அவ அடுத்த வருஷம் டிசி வாங்கிட்டு வேற ஊர் போயிட்டா” என்றான்.

“ஓ”

“என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு சிக்ஸ்த் ஸ்டேன்டட்ல ஒரு பொண்ணை லவ் பண்ணேன்”

“சிக்ஸ்த் ஸ்டேன்டட்ல”

“ம்ம்ம்… எஸ்”

“என்ன? அவளும் டிசி வாங்கிட்டாளா?”

“இல்ல… எங்க அப்பா என்னை வேற ஸ்கூல் மாத்திட்டாரு” என்றவன் மேலும், “ஸ்கூல் லவ் எதுவும் வொர்க் அவுட் ஆகல” என்று உரைக்க,

“காலேஜ்ல வொர்க் அவுட் ஆச்சா” என்று கேட்டாள்.

“ம்ம்ம்… மூணு வொர்க் அவுட் ஆச்சு… ஆனா எதுவும் கண்டின்யூ ஆகல”

அவனைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அவள் நடக்க தொடங்க,

“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல அமிர்தா… எனக்குப் பிடிச்சிருந்தா ஐ லவ் யூ சொல்வேன்… ஆனா எதுவுமே ரிலேஷன்ஷிப்பா மாறல… எல்லாமே ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ப்ரேக் அப் ஆகிடும்” என்றான்.

“ப்ரேக் ஆப் ஆனதும் கொஞ்சங் கூட ஃபீல் பண்ணாம வேறொரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்லிடுவீங்க… அப்படிதானே” இம்முறையும் அதே கேவலமான பார்வையை அவள் பார்த்து வைக்க,

“நீங்க என்னை ரொம்ப சீப்பா நினைக்கிறீங்க… எல்லா டைமும் நானே ப்ரொபோஸ் பண்றது கிடையாது… பொண்ணுங்க நிறைய பேர் என்னைத் தேடி வந்து ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க” என்றதும் அவள் புருவங்கள் அப்படியா என்பது போல உயர்ந்தன.

“என்ன? நம்ப மாட்டீங்களா… நான் என் காலேஜ்ல எல்லாம் ஹீரோ ஃபிகர் மாதிரி… தெரியுமா?” என்றவன் பெருமையடித்துக் கொள்ள,

அவள் அதற்கு ஒரு ஏளன புன்னகையைத் தர, “ஏன்? நான் பார்க்க ஹீரோ மாதிரி இல்லயா?” என்று கேட்டான்.

“சினிமா படங்களுக்குதான் இந்த மாதிரி ஹீரோ பிம்பம் எல்லாம் தேவை… நிஜ வாழ்க்கைக்கு அதெல்லாம் தேவையில்ல… ஸ்மார்ட் ஹாண்ட்ஸம் அதெல்லாம் தாண்டி எந்த மாதிரி சூழ்நிலையிலும் நான் இருக்கேன்னு கூடவே நிற்குற ஒரு சப்போர்ட்… என்னோட உணர்வுகளை மதிக்கிற புரிஞ்சிக்கிற ஒரு நார்மல் மேன்… அது போதும்… எனக்கு இந்த ஹீரோ ஃபிகர்ல எல்லாம் நம்பிக்கை இல்ல” என்றாள்.

‘அப்படியொரு ஒரு நார்மல் மேன் உங்க வாழ்க்கையில இருக்கானா?’ என்று கேட்க எண்ணிய மனதை அடக்கிக் கொண்டான்.

இருவரும் பேசிக் கொண்டே வெகுதூரம் நடந்து வந்துவிட்டதை மிகத் தாமதமாகவே உணர்ந்தனர். ஆனால் அவர்கள் வந்து சேர்ந்த இடத்தில் எங்கும் பசுமை படர்ந்திருந்தது. இயற்கையின் எழில் கொஞ்சம் அவ்விடத்தில் சீறிக் கொண்டு பாயும் அந்த நதி பிரவாகத்தின் எல்லையில் நின்றவன்,

“வாவ்! இட்ஸ் பியூட்டிபுஃல்… ஹெவன்லியா இருக்கு” என்று வியந்து கூறினான் ஹரீஷ்.

“இதுக்கே வியந்துட்டா எப்படி… இங்கே நீங்க வியக்கவும் இரசிக்கவும் ஏகப்பட்ட இடங்கள் இருக்கு” என்றாள் அமிர்தா.

“டைம் எங்கே இருக்க போகுது… ஷெட்யூல் டைட்டா இருக்கு… ஷூட்டிங் முடிஞ்சதும் ரிட்டன் கிளம்பற மாதிரிதான் இருக்கும்… இப்பவே அம்மா எப்ப வர்ற… எப்ப வர்றன்னு கேட்டுத் துளைச்சு எடுக்கிறாங்க… அவங்க இத்தனை நாள் என்னைப் பிரிஞ்சதே இல்ல” என்றவன் வருத்தத்துடன் தெரிவிக்க,

“உங்களை மாதிரி ஒரு ஹீரோ ஃபிகருக்குள்ள இப்படியொரு அம்மா பிள்ளையா?” என்று கிண்டலுடன் கேட்டு அமிர்தா சிரிக்க, அவனும் நகைத்தான்.

எப்போது அவர்கள் இடையில் இருந்த இறுக்கம் தளர்ந்தது என்று இருவருமே உணரவில்லை. அடுத்த வந்த நாட்களில் இருவரின் நட்பின் பிணைப்பும் அதிகரித்திருந்தது.

படப்பிடிப்புத் தளங்களில் இருவரும் அதிக உற்சாகத்துடன் செயல்பட்டனர். படக்குழுவினருக்கே அது மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

அவர்கள் எதிர்பார்த்ததைவிட இரண்டு நாள் முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படக்குழு இலண்டன் பயணிக்க தயாரானது.

அப்போது அமிர்தா ஹரீஷிடம், “நீங்க அவங்க கூட இலண்டன் போக வேண்டாம் ஹரீஷ்… இங்க பக்கத்துல ஒரு பியூட்ஃபுல் பிளேஸ் இருக்கு… லேக் டிஸ்ட்ரிக்ட்… அந்த இடம் அவ்வளவு அழகா இருக்கும்… நாம நாளைக்கு அங்கே போவோம்” என்று சொன்னதில் அவன் வானத்தில் பறக்காத குறைதான்.

நீண்ட தூர அவர்களின் கார் பயணமும் முடிவுற்று இருவரும் இறங்கி அந்தப் பசுமையான வெளியில் நடக்கத் தொடங்கினர்.

நடக்க நடக்க அவன் சற்றும் எதிர்பாராத இயற்கையின் அழகை அவள் அவனுக்குக் காட்டினாள். அங்கிருந்த மலை முகட்டில் ஏறிச் செல்ல செல்ல அவன் பார்த்த காட்சிகள் அவனைத் திகைப்பில் ஆழ்த்தின. ஒரு வேளை கற்பனைகளில் வடிக்கப்படும் சொர்க்கம் நிஜத்தில் இப்படிதான் காட்சியளிக்குமோ என்று ஹரீஷிற்கு எண்ணத் தோன்றியது.

அவள் மேலும் அவன் கைகளைக் கோர்த்து கொண்டு வெகுதூரம் அழைத்துச் சென்றாள். எத்தனை தூரம் என்றெல்லாம் அவன் உணரவில்லை. ஆனால் அந்தப் பயணம் அப்படியே முடியாமல் நீள கூடாதா என்றவன் மனம் விரும்பியது.

பரந்து விரிந்திருந்த அந்த ஏரியின் காட்சியை மலை முகட்டிலிருந்து பார்க்க அத்தனை அழகாய் இருந்தது. கண்ணாடி போல சலனமில்லாத அந்தத் தெளிந்த நீரும் அதில் தெரிந்த பிம்பங்களும் அவனை ஆச்சரியத்திற்கும் அப்பாற்பட்ட நிலைக்கு இழுத்துச் சென்றது. அந்த அழகுடன் சேர்த்து அமிர்தாவின் அழகும் அவனை புது மாயை உலகத்திற்கு அழைத்துச் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தப் பசுமையான மலை முகட்டில் அமர்ந்து தாங்கள் எடுத்து வந்த உணவை உண்டு விட்டு இருவரும் தங்கள் கார் நோக்கி நடக்க தொடங்கினர். மெல்ல மெல்ல இருள் சூழ ஹரீஷின் தேகம் குளிரில் நடுக்கமுற தொடங்கவும் அமிர்தா அவன் கரத்திற்குள் இடையில் தம் கரத்தை நெருக்கமாகக் கோர்த்து கொண்டு, “கொஞ்ச தூரம்தான் போயிடலாம்” என்றாள்.

அவளின் நெருக்கமும் அந்தச் சில்லென்று வீசும் மலைக்காற்றும் அவனைச் சலனப்படுத்தியது. அத்தகைய சிலிர்ப்பும் தவிப்பும் அவளுக்குமே இருந்ததை அவனும் உணர்ந்திருந்தான்.

மேகம் கூடி மழை வருவதைப் போல தெரியவும் இருவரும் வேக நடைகளுடன் காரின் அருகே வந்து மூச்சு வாங்க நின்றனர். அந்த நொடி இருவருமே தங்களை மறந்து ஒருவர் மீது ஒருவர் லயிக்க, ஹரீஷ் அவளை அணைத்து இதழ்களில் முத்தமிட்டான். அவள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை.

ஆனால் அதன் பின் அந்தப் பயணம் முழுக்க அவள் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவனாலும் எதுவும் பேச முடியவில்லை. தான் முத்தமிட்டது சரியா தவறா என்றவன் மனம் ஒருவிதமான அல்லாட்டத்திலிருந்தது.

மௌனத்தைச் சுமந்த அவர்கள் பயணத்தின் இருவரும் ஒருவாறு தங்களை மீட்டுக் கொண்டனர்.

“நாளைக்கு இலண்டன் தமிழ் சங்கத்தில ஒரு விழா இருக்கு… நீங்களும் கலந்துக்கணும்… அங்கே உங்களுக்கு என் குடும்பத்தினரை அறிமுகப்படுத்துறன்” என்று அவள் சொல்ல அவனும் உற்சாகத்துடன் தலையசைத்தான்.

அதுதான் இலண்டனில் அவர்கள் இருவரும் சந்தித்து கொள்ள போகும் கடைசி நாள். அதன் பின் தன் மனதில் உள்ளதை அவளிடம் நேரில் சொல்ல முடியாமல் போகலாம் என்று எண்ணிய ஹரீஷ் ஒரு அழகான பூங்கொத்தை வாங்கிக் கொண்டு விழாவிற்குச் சென்றான்.

எப்போதுமில்லாமல் அவள் பட்டுடுத்தி இருந்ததைப் பார்க்க அவன் மனம் இன்னும் பரவசத்தில் திளைத்தது.

விழா முடிந்ததும் பூங்கொத்தைக் கொடுத்து தன் காதலைச் சொல்ல அவன் எண்ணியிருக்க, அதற்கு முன்னதாக அவள் தன் குடும்பத்தினர் என்று தன் மகளையும் கணவனையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

“என் பேபி ஜெனி… அன் ஹீ இஸ் மைக்கேல்… மை ஹஸ்பென்ட்” என்றவள் சொன்ன நொடியே அவன் நொறுங்கிப் போனான்.

அவன் வாழ்க்கையில் அப்படியொரு ஏமாற்றத்தை இதுவரையில் கண்டதே இல்லை. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமா அல்லது தானாகவே கற்பனை செய்து ஏமாந்து நிற்கிறோமோ என்று அவனுக்குப் புரியவில்லை.

பித்துப் பிடித்தவன் போல தன்னறையில் அமர்ந்து கொண்டு அவள் தன்னுடன் பழகிய நிகழ்வுகளை யோசித்து பார்த்தான். அவளது தமிழ் பற்றுப் பற்றியும் தாயின் உடல் நிலை பற்றியும் நண்பர்கள் பற்றியும் நிறைய பகிர்ந்து கொண்டவள் ஒரே ஒரு முறை கூட தனக்குத் திருமணமானது பற்றியோ அல்லது நான்கு வயதில் பெண் குழந்தை இருப்பது பற்றியோ ஏன் சொல்லவில்லை என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

அது மட்டுமின்றி அன்று அவன் முத்தமிட்ட போது அவள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

முத்தம் என்பது அந்த ஊரின் மிகச் சாதாரண கலாச்சாரம் என்றாலும் அவளுக்கும் அப்படிதானா என்பதைதான் அவனால் நம்பமுடியவில்லை. அவனுக்குள் நிறைய நிறைய கேள்விகள் குழப்பங்கள்.

இந்நிலையில்தான் அவன் அம்மா கீதா அவனிடம் அமராவைப் பற்றிச் சொல்லி அவனுக்குப் புது குழப்பத்தை உண்டாக்கினர். விமானம் ஏறுவதற்கு முன்பாக அமராவைப் பற்றிப் பேச அவன் அமிர்தாவின் வீட்டிற்குச் சென்றான். ஆனால் அவனுக்கு அவளைப் பார்க்க அது ஒரு சாக்குதான்.

புறப்படுவதற்கு முன்னதாக அவளை ஒரே ஒரு முறை நேரில் பார்க்க வேண்டுமென்ற நப்பாசை!

ஆனால் அவன் சென்ற போது அமிர்தா வீட்டில் இல்லை. அவள் சர்ச் சென்றிருப்பதாக அங்கிருந்த பணியாள் தெரிவித்தான். அவள் வர ஒரு மணிநேரத்திற்கு மேலாகும் என்று சொன்னதால் அவன் ஆசை நிராசையானது.

விமான நிலையத்திற்குச் செல்ல தாமதமாகிவிடும் என அவன் புறப்பட்டுவிட்டான்.

அவன் புறப்பட்ட விமானம் அடுத்த நாள் நள்ளிரவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content