You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 9

Quote

9

தேவா தம் கண்களை துடைத்து கொண்டு, “அமி” என்று அழைத்தபடி அவள் அருகில் மண்டியிட்டான். ஆனால் அவளோ அவனை திரும்பி கூட பார்க்கவில்லை.

“உன்னை எங்க எல்லாம் தேடிக்குனேன் தெரிமாடீ? நீ எங்க போனியோ என்னவோன்னு ரொம்ப பயந்துபூட்டேன்” என்றவன் வேதனையுடன் உரைக்க, அவனை அருவருக்கத்தக்க பார்வையுடன் நோக்கியவள்,

“இன்னாத்துக்கு தேடுனே… எங்கியோ ஒழிஞ்சி பூட்டேன்னு நிம்மதியா இருக்க வேண்டியதுதானே” என்று கேட்டாள்.

“இன்னா அமி இப்படி பேசுற?” என்றவன் அவள் கையை பிடிக்க அவள் உதறி தள்ளினாள்.

“நான் இராத்திரி அப்படி நடந்துக்குன்னு இருக்க கூடாது… ஏதோ புத்திக்கெட்டு போய் பண்ணிட்டேன்… என்னை மன்னிச்சுடு அமி” என்றவன் கெஞ்ச அவள் அவனை சீற்றத்துடன் பார்த்தாள்.

அவள் பார்வையிலிருந்த ஆழமான வலியை உணர்ந்தவன், 

“சரி… நீ என்னை மன்னிக்க வேணாம்… தண்டிச்சிரு… நீ இன்னா சொல்றியோ அதை நான் கேட்குறேன்” என,

“ஹ்ம்ம்… போய் அந்த கடலுல குதி” என்றவள் பட்டென்று உரைக்கவும் அவன், “அமி…ஈஈ” என்று அதிர்ந்தான்.

“நான் இன்னா சொன்னாலும் செய்வ இல்ல… போய் குதி போ” என்றாள்.

“செத்துருவேன்டி… பாவி”

“சாவு… செத்து தொலை… நானும் உன் பின்னாடியே குதிச்சு சாவுறேன்… சை… என்ன எழவு வாழ்க்கை இது” என்றவள் தம் கால்களில்  முகத்தை புதைத்து கொண்டு அழ,

“அமி… அழுவாத” என்றவன் ஆதரவாக அவள் தோளை தொட,

“தொடாதே… தொட்ட… கொன்னுடுவேன்” என்றவள் சீற்றமாக நிமிர்ந்து அவனை தள்ளிவிட,

“என்னை புரிஞ்சிக்கோடி… சத்தியமா நான் சரக்கடிச்சிட்டு வரணும்னு எல்லாம் நினைக்கல… தயா அண்ணன்தான் குடிக்க சொல்லுச்சு… அது கூட ஒரே ஒரு கிளாஸ்தான் குடிச்சேன்” என்று அவன் விளக்கம் கூற,

“நீ வெறும் சரக்கு குடிச்சிருந்தா பிரச்சனை இல்ல… ஆனா உங்க அண்ணன் உனக்கு பவுடர் கலந்த சரக்கு இல்ல குடுத்துக்கீறான்” என்றவள் சொன்ன நொடி அவன் அதிர்ந்து பார்த்தான்.

“அண்ணன் இன்னாத்துக்கு எனக்கு பவுடர் கலந்த சரக்கை தரணும்” என்றவன் சந்தேகமாக வினவ,

“உன்னையும் என்னையும் பிரிக்கத்தான்… வேற இன்னாத்துக்கு” என்றாள்.

அப்போதே அவனுக்கு நடந்தவை எல்லாம் ஒரளவு புரிந்து போனது. அவன் பைக் இயங்காதது தொடங்கி காரில் வேணியை ஏற்றியது வரை…

அதுவுமில்லாமல் சற்று முன் தயா அமியை தரைகுறைவான வாரத்தைகளால் நிந்தித்ததை எண்ணும் போதே அவன் உள்ளம் கொதித்தது. அமியை தன்னிடமிருந்து பிரிக்க இத்தனை கீழ்தனமாக இறங்கி இருக்கிறானா?

தேவா யோசனையுடன் அவளை பார்த்து, “ஆமா… உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” என்று கேட்க,

“நான் காலையில கோபத்துல வூட்டை விட்டு வெளியே வந்த போது வேணி என்னை பார்த்து பேசிச்சு… நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டுச்சு” என்று அமி சொல்லவும் அவனுக்கு பதட்டமானது.

“இன்னா சொன்னா அவ… என்னை பத்தி தப்பா எதும் சொன்னாளா?”

“நீ அம்ம்மா போதையிலும் அமியை தவிர வேற எவளையும் தொட மாட்டேன்னு சொன்னியாமே” என்று கூறி அவள் ஆழமாக அவனை பார்த்து வைக்க, அவன் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

“ஆனா அதுக்காக எல்லாம் நீ இராத்திரி என்கிட்ட நடந்துக்கிட்டதை என்னால மன்னிக்க முடியாது… மனுஷன் மாதிரியாடா நடந்துக்கிட்ட” என்றவள் அவனை சீறலாக கேட்க,

“இல்ல அமி… அந்த போதையில என்ன செய்றேன்னு எனக்கே தெரியல” என்றான்.

அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அந்த எழவைத்தானேடா நீ விற்குற… அதை அடிச்சிட்டு நீ புத்திக்கெட்டு நடந்துக்குன மாதிரி… எவன் எவன் எவ வூட்டு குடியை கெடுக்கிறானா… யாருக்கு தெரியும்

படுபாவி பசங்க… பச்ச புள்ளைங்கள கூட வுட மாட்றானுங்க… உனக்கு அதை பத்தி எல்லாம் இன்னா கவலை… உனக்கு சரக்கை வித்து காசு பார்க்கணும்… த்தூ… இதெல்லாம் ஒரு பொழைப்பு” என்றவள் கோபமாக பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தன.

அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தான். எதிரே இருந்த கடலலைகள் பொங்கியது போல அவன் மனமும் ஆவேசமாக பொங்கி கொண்டிருந்தது.

இதுநாள் வரை இப்படி ஒரு கோணத்தில் அவன் யோசித்ததே இல்லை.

கண்களில் கண்ணீருடன் அவள் புறம் திரும்பி, “உஹும்… செத்தாலும் இனிமே இந்த கஞ்சா விற்குற வேலையை நான் செய்ய மாட்டேன்… உன் மேல சத்தியமா செய்ய மாட்டேன்டி” என்றவன் அவள் தலையிலடித்து சத்தியம் செய்ய, அவள் கண்களிலும் கண்ணீர் நிரம்பிவிட்டது.

மேலும் அவள் கைகளை பற்றி கொண்டவன் கெஞ்சலாக, “வா அமி நம்ம வூட்டுக்கு போலாம்” என, அவள் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டாள்.

     இருவரும் மௌனமாக அந்த மணலில் நடக்க தேவா அவள் கையை பற்றி கொண்டு, “இன்னும் என்னான்ட உனக்கு கோபமா” என்று கேட்க, இல்லையென்பது போல தலையசைத்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

இருவரும் மௌனமாக அந்த மணலில் நடந்து கொண்டிருக்க இரவின் இருள் அந்த இடம் முழுக்க பரவியிருந்தது.

தேவா பைக்கை நெருங்கவும் அமி அவனிடம், “ஏதாவது ஹோட்டலுக்கு போடா… சாப்பிட்டு போலாம்… நீயும் காலையில இருந்து எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட” என,

“சரி” என்றவன் தன் வண்டியை இயக்கி ஒரு உணவகத்தின் முன்னே நிறுத்தினான்.

இருவரும் அதன் பின் உண்டு முடித்து வீட்டை அடைய ரொம்பவும் தாமதமாகிவிட்டது.    

அவர்கள் பூட்டை திறந்து உள்ளே சென்ற சமயத்தில் மாஸ் அடித்து பிடித்து அங்கே வந்து மூச்சு வாங்க நின்று,

“அண்ணா அண்ணா” என்று பதட்டத்துடன் தேவாவை அழைத்தான்.

“இன்னாத்துக்கு இப்படி ஓடியாற… இன்னா விசயம்” என்று கேட்க,

“உன்னை எங்க எல்லாம் ண்ணா தேடுறது… போன் பண்ணாலும் சுச் ஆப் னு வந்துச்சு… உன் பைக்கை பார்த்ததும் அது பின்னாலயே ஓடியாறேன்” என்றவன் மூச்சு வாங்கி கொண்டே பேச,

“அப்படி இன்னாடா நீ தலை தெறிக்க ஓடியாறளவுக்கான மேட்டரு” என்று கேட்டான் தேவா. 

“அது… அது வந்து ண்ணா… நம்ம தயா அண்ணன் இல்ல… அவரு அண்ணியை போட்டு தள்ள ஆளுங்களை அனுப்பிட்டாரு? இதை பத்தி சொல்லாலம்னுதான்” என்று அவன் தட்டுதடுமாறி தான் சொல்ல நினைத்ததை சொல்லி முடிக்க,

அதிர்ந்த தேவா குளியலறைக்குள் சென்ற அமியை எட்டி பார்த்துவிட்டு, “நீ இப்படி வா” என்று அவனை தனியே அழைத்து நடந்தவற்றை விசாரித்து அறிந்து கொண்டான்.

“உன்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சா தயா அண்ணன் என்னை கொன்னு போட்டிரும்… அண்ணியை பார்த்துக்கோ… நான் போறேன்” என்றவன் அங்கிருந்து அகன்றுவிட தேவாவின் முகம் வெளிறி போனது.

தயாவின் மீது அளவில்லா கோபம் பொங்கிய போதும் இது கோபப்படுவதற்கான நேரமில்லை என்று தேவா அமைதியாக யோசித்தான். பின் என்ன செய்ய வேண்டுமென்று மனதிற்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்தவன் அறைக்குள் நுழைந்து வேக வேகமாக ஒரு பையை எடுத்து இருவரின் துணி மணிகளையும் அதில் நிரப்பினான்.

 குளித்து முடித்து இரவு உடைக்கு மாறியிருந்தவள் அவன் செய்கைகளை பார்த்து, “இன்னாத்துக்கு பையில துணியெல்லாம் அடுக்கிற” என்று கேட்டாள்.

“சொல்றேன்… நீ முதல சுடிதார் போட்டுன்னு வா… கிளம்புவோம்” என்று தேவா சொல்ல,

“இன்னேத்திக்கி எங்க போறோம்” என்று கேட்டாள்.

“சொல்றதை செய்றியா?” என்று அவன் அலமாரியிலிருந்த  உண்டியலை எடுத்து உடைத்து அதிலிருந்த பணத்தையும் சீராக துடைத்து எடுத்து கொண்டான்.

ஏதோ பிரச்சனை என்று புரிய அவள் அதன் பின் கேள்வி எதுவும் கேட்காமல் உடை மாற்றி கொண்டு வந்தாள். அந்த நொடியே அவள் கரத்தை பிடித்து கொண்டு வெளியே இழுத்து சென்றான்.

“இந்த இராத்திரி நேரத்துல எங்கடா போறோம்” என்றவள் கேட்க,

“இனிமே நாம இங்கே இருக்க கூடாது அமி” என்றவன் கதவை பூட்டிவிட்டு அவளை பைக்கில் ஏற சொன்னான்.

அமிக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தும் அவன் சொன்னதற்காக பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

அந்த வண்டி விர்ரென காற்றில் பறந்தது.

அமி அவன் தோள் மீது கை வைத்து, “இன்னான்னு சொல்லி தொலையேன்டா… எதுனா பிரச்சனையா” என்று கேட்க, அவன் தான் கோபத்தில் தயாவின் சட்டையை பிடித்தது தொடங்கி அவன் இவளை கொல்ல ஆட்களை அனுப்பியது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அவள் நடுநடுங்கி போனாள். “பிரச்சனையை நான்தான் பெருசாக்கி வுட்டேனா தேவா” என்று அவள் கவலையுடன் கேட்க,

“தப்பான வழில போக கூடாதுன்னு முடிவு பண்ணியாச்சு… இனிமே அதுக்காக நாம போராடிதான் ஆவணும்” என்று அவன் சொல்ல,

“ஆனா எது நடந்தாலும் செத்து போயிட கூடாது தேவா… வாழணும்… நம்ம நல்லா வாழனும் தேவா” என்றவளின் அச்சம் அவள் குரலில் அப்பட்டமாக தெரிய,

“இந்த தேவாவை மீறி உனக்கு எதுவும் நடக்காது… நீ பயப்படாதே” என, அவன் இடையை அவள் இறுக பூட்டி கொண்டு முதுகில் சாய்ந்தாள்.

 என்ன நடந்தாலும் அவன் பார்த்து கொள்வான் என்று நம்பிக்கையுடன்!

*****

ஹரீஷ் தன் வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க, கீதா வந்து கதவை திறந்தார்.

“உனக்காகதான்டா காத்திட்டிருந்தேன்… என்னடா ப்ளைட் லேட்டா?” என்றவர் பரிவுடன் விசாரித்து கொண்டே அவன் கையிலிருந்த பெட்டியை வாங்க போக,

“இருக்கட்டும் மா நானே எடுத்துட்டு வரேன்” என்றவன் உள்ளே நுழைந்தபடி, “நான் வந்ததும் கால் பண்ண மாட்டேனா… எதுக்கு தூங்காம முழிச்சிட்டு இருக்கீங்க” என்று கேட்க,

“படுத்தேன்டா… ஆனா தூக்கமே வரல… நீ இப்ப வந்துருவ அப்ப வந்துருவன்னு டைமை பார்த்துக்கிட்டே அப்படியே ஓடி போச்சு” என்றவர் கூற,

“சரிம்மா… நீங்க போய் படுங்க… எனக்கும் டையர்டா இருக்கு… நானும் போய் படுக்கிறேன்” என்றவன் அவர் முகத்தை பார்த்து கூட பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்.

கீதாவின் முகம் வாடிப்போனது.

எங்கே போனாலும் எந்நேரத்திற்கு வந்தாலும் ஹரீஷ் உற்சாகத்துடன் அவரிடம் பேசிவிட்டு, “லவ் யூ மா” என்று கட்டியணைத்த பின்புதான் உறங்கவே செல்வான். அது அவனுக்கு ஒரு பழக்கமாகவே மாறியிருந்தது.

“உன் பொண்டாட்டி வந்த பிறகும் இதே போல லவ் யூ மா னு எல்லாம் சொல்லுவியாடா” என்றவர் மகனிடம் கேட்ட போது, “நீங்கதான் மா எப்பவுமே என்னோட ஃபர்ஸ்ட் லவ்” என்று அவன் சொன்னது இப்போதும் அவர் மனதில் அழியாத நினைவாக பதிவாகியிருந்தது.

ஆனால் இந்த சில வாரங்களாக மகனை பார்க்காமல் அவனின் உற்சாகமான பேச்சுக்களை கேட்காமல் அவர் எந்தளவு தவித்து போயிருந்தார் என்று அவருக்குதான் தெரியும்.

அதனால்தான் இரவெல்லாம் உறங்காமல் அவன் வரும் வரை காத்திருந்து அவனிடம் பேசிவிட்டு படுக்க வேண்டுமென்று நினைத்தார். ஆனால் அவனோ முகம் கூட பாராமல் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டது பெருத்த ஏமாற்றத்தை தந்தது.  

மூடிய கதவை பார்த்து பெருமூச்சுவிட்டவர், ‘ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்ததால டையர்டா இருப்பான்… காலையில பேசுவான்’ என்று தனக்குத்தானே சமாதானம் கூறி கொண்டு அறைக்கு செல்ல எத்தனித்த போது ஹரீஷின் கரம் பின்னிருந்து அவரை அணைத்து கொண்டு,

“நான் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்… லவ் யூ மா… குட் நைட்”  என்று சொல்லி அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.

கீதா நெகிழ்ச்சியுடன் அவன் புறம் திரும்பி அணைத்து கொண்டு, “குட் நைட் டா கண்ணா… போ… போய்  படுத்துக்கோ” என,

அவன் அறைக்குள் சென்றுவிட்டான். கீதா தன் கண்களிலினோரம் ஒதுங்கிய நீரை துடைத்து கொண்டே அறைக்குள் நுழைய பாலமுருகன் எழுந்து அமர்ந்திருந்தார்.

கீதாவை பார்த்து, “என்ன அம்மாவும் புள்ளையும் கொஞ்சி முடிச்சிட்டீங்களா?” என்று நக்கல் சிரிப்புடன் கேட்க,

“அதுல உங்களுக்கு என்ன கடுப்பு” என்று கேட்டபடி கதவை மூடியவர்,

“நீங்க தூங்கிட்டு இருந்தீங்கன்னு நினைச்சேன்” என்று கேட்க,

“தூங்கிட்டுதான் இருந்தேன்… காலிங் பெல் சத்தம் கேட்டுதான் எழுந்தேன்” என்றார்.

“வெளியே வந்து ஹரீஷ் கிட்ட பேசி இருக்கலாம் இல்ல”

“எதுக்கு… எல்லாம் காலையில பார்த்து பேசுனா போச்சு” என்றவர் போர்வையை இழுத்து மூடி கொண்டு படுத்துவிட்டார்.

‘பையன் வரான்னு முழிச்சிட்டு இருந்திட்டு… அப்புறம் அவன் மேல பாசமே இல்லாத மாதிரி சீனை போட வேண்டியது’ என்று முனங்கி கொண்டே கீதா படுத்து கொள்ள,

“இப்ப என்ன சொன்ன?” என்றவர் திரும்பி படுக்க,

“நான் சொன்னது கேட்டிருச்சு இல்ல… அப்புறம் என்ன?” என்று கடுப்பாக முகத்தை வைத்து கொண்டு கேட்டார் கீதா.

“அவன் மேல பாசம் இல்லன்னு… நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா… அவனோட பொறுப்பில்லாத நடவடிக்கையை பார்த்து கொஞ்சம் கோபம்… அவ்வளவுதான்” என்றார்.

“அவன் இப்போ முன்ன மாதிரி இல்ல… மாறிட்டாங்க” என்று சொன்ன கீதாவின் மண்டைக்குள் அமிர்தாவின் நினைப்பு வந்து கொஞ்சம் குற்றவுணர்வை கொடுத்தாலும் அதனை அவர் ஒதுக்கி வைத்துவிட்டு பேச,

“எனக்கும் தெரியுது… அதான் அவனுக்கு கல்யாணம் பேசி முடிச்சிரலாம்னு” என்றவர் இழுக்க,

“நானும் அதாங்க நினைச்சேன்… பண்ணிருலாங்க” என்று கீதா ஆர்வமானார்.

“என் கூட போலிஸ் ட்ரைனிங்ல இருந்த சரத்தோட பொண்ணு… நல்லா படிச்சிருக்கா… பார்க்கவும் அழகா இருப்பா… நான் எப்ப அவங்க வீட்டுக்கு போனாலும் ரொம்ப பணிவா என்கிட்ட பேசுவா” என்றவர் சொல்லி கொண்டே போக ஆச்சரியத்துடன் எழுந்து அமர்ந்து கொண்ட கீதா,

“பொண்ணே பார்த்திட்டீங்களா?” என்று கேட்க,

“ம்ம்ம் ஆமா… உன் பையனுக்கு பிடிச்சா பேசி முடிச்சிரலாம்… என் ரிடையர்மென்ட் பங்கஷனுக்கு சரத்கிட்ட அவன் பொண்ணை கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன்” என்றதும் கீதா அதிசயித்து போனார்.

கீதாவின் மனதிலும் மகனின் திருமண விஷயத்தை பற்றி பேச வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும் கணவர் என்ன சொல்வாரோ என்று தயங்கி கொண்டிருந்தார். இப்போது அவரே இந்தளவு இறங்கி வந்தது அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தது.

“சரி சரி… மத்ததெல்லாம் காலையில பேசிக்கலாம்… படு” என்றவர் புரண்டு படுத்து கொள்ள, கீதா உறங்கா நிலையில் உற்சாகத்தில் திளைத்திருந்தார்.

அப்போது பாலமுருகனின் கைபேசி அந்த இரவு நேர அமைதியை குலைத்தபடி ரீங்காரமிட்டது.

அவர் எழுந்து தன் கைபேசியை எடுத்து பார்க்க ஜெய்தான் அழைத்திருந்தான். எப்போதும் அவன் இது போன்ற நள்ளிரவு நேரங்களில் அழைக்க மாட்டானே என்ற கேள்வியுடன் அழைப்பை ஏற்று பேசியவரின் புருவங்கள் நெரிந்தன.

இத்தனை வருட அவரின் தேடல் ஒரு முடிவுக்கு வந்திருந்த நெகிழ்ச்சியில் அப்படியே சிலையாக நின்றுவிட்டார்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content