You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Anbin Vazhiyathu - Episode 16

Quote

16

Life is much better when you live in the present moment.

பதவியும் பணமும் மனிதனுக்கான ஆகப் பெரிய போதை. அதனை நாமாகத் தேடிச் சென்று அடைந்தாலும் சரி. இல்லை அதுவாகவே தேடி வந்தாலும் சரி. அதன் பிறகு அந்தப் போதையைச் சுலபத்தில் விட்டொழிக்க முடியாது.

எனக்கு அதுவாகத் தேடி வந்திருக்கிறது. ஆனால் இனி இதை நான் எப்படி தக்க வைத்துக் கொள்ளப் போகிறேன் என்றுதான் புரியவில்லை.  அந்த ஆடம்பரமான அலுவலகத்தையும் அதனுடன் இணைந்த உற்பத்தி நிறுவனத்தையும் பார்க்கையில் நான் உண்மையில் பிரம்மித்துதான் போனேன். அவற்றை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்புவதற்கே அரை நாள் கடந்துவிட்டது.

இது போன்று திருச்சியில் ஒரு கிளையும் கோவையில் ஒரு கிளையும் இருப்பதாக அப்பா சொன்னார். இத்தனை வருடங்களாக இதெல்லாம் எப்படி தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன்.

இனி இது அத்தனைக்கும் நான் உரிமையாளன் என்ற உணர்வே என்னைக் கர்வமாகவும் கம்பீரமாகவும் உணர வைத்தது. எல்லாவற்றிற்கும் மேல் எனக்குக் கிடைத்த அந்தப் பதவி மரியாதை எல்லாம் தனி திமிரைக் கொடுத்தது.

அப்பா அந்த விசாலமான அலுவலக அறைக்கு அழைத்து வந்து இருக்கையில் அமரச் சொன்னார். கிரி அங்கிளும் உடனிருந்தவர்களும் கைக் குலுக்கி வாழ்த்துச் சொன்னார்கள். 

மேஜை மீதிருந்த அன்பு ஜெயகுமார் எம். டி என்று பொறிக்கப்பட்டிருந்த பலகையைப் பார்த்த நொடி எனக்குள் ஏற்பட்ட கர்வம் சந்தோஷம் எல்லாம் காற்றுப் போன பலூன் போல இறங்கிவிட்டது.

அவன் இருக்க வேண்டிய பொறுப்பு. அவன் அனுபவிக்க வேண்டிய பதவி. நான் இருக்கிறேன். நான் அனுபவிக்கிறேன். ஆனால் நான் அதை அவனிடமிருந்து பறித்துக் கொள்ளவில்லை. அவன் தவற விட்டதை நான் பிடித்துக் கொண்டேன். அவ்வளவுதான்.

“சீட்ல உட்காரு அன்பு” என்று அப்பா சொல்ல,

எனக்குள் எட்டிப் பார்த்த கொஞ்ச நஞ்ச குற்றவுணர்வையும் தட்டிவிட்டு அமர்ந்தேன்.

அப்பா தன்னுடைய பி ஏ சந்துருவையும் ஜி எம் தியாகாரஜனையும் தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைத்தார். சந்துரு இளம் வயதினனாகத் தெரிந்தான். அதற்கு நேர்மாறாக தியாகு பழுத்தப் பழமாக இருந்தார்.

வயதிற்கு அப்பாற்பட்டு இருவருமே பவ்வியமாக எனக்கு வணக்கம் வைத்தனர். அதன் பின் அப்பா எனக்கு வாழ்த்துக் கூறிவிட்டு அகன்றுவிட கிரி அங்கிளும், “சரி அன்பு... பார்க்கலாம்” என்று கிளம்பத் தயாராக, 

“அங்கிள் நான் உங்ககிட்ட முக்கியமா பேசணும்” என்று நிறுத்தினேன்.

“ம்ம்ம் சொல்லு அன்பு” என்றவர் மீண்டும் இருக்கையில் அமர,

“நம்ம கம்பெனியோட ஷேர்ஸ் யார் யார் பேர்ல எவ்வளவு பெர்ஸன்டேஜஸ் இருக்கு” என்று விசாரித்தேன்.

“உனக்கு இதைப் பத்தி தெரியாதா?”

“நீங்க சொன்னீங்களோ என்னவோ... நான் மறந்துட்டேன்” என்றேன். 

“ஆக்சுவலி அறிவு பேர்ல இருந்த பதினைந்து பெர்ஸன்ட்டேஜ் ஷேர் கூடவே உங்க அம்மா பேர்ல இருந்த பத்து பெர்ஸன்டேஜ் எல்லாம் உன் பேர்ல வந்துட்டதால இப்போ உன் பேர்ல நாற்பது பெர்ஸன்டேஜ் இருக்கு அன்பு.

அப்புறம் அப்பா உடம்பு சரி இல்லாம போன போதும் அவர் பேர்ல இருந்த ஆறுபதைப் பிரிச்சு நிரஞ்சனா பேர்ல பத்து தேவிகா மேடம் பேர்ல பத்தும் எழுதிட்டாரு.”

“அப்போ ராஜேஷ் பேர்ல?”

“ராஜேஷ் பேர்ல ஷேர்ஸ் இல்ல... ஆனா அவன்தான் போன மாசம் வரைக்கும் நம்ம கம்பெனியோட எம்.டியா இருந்தான்” என்றார்.

கம்பனியின் பொறுப்பை ஏற்று நடத்துபவர் பங்குதாரராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் எப்போதோ படித்த ஞாபகம். மேலும் அதிக பங்குதாரர்களின் பெரும்பான்மை முடிவில் அவன் அந்த நிறுவனத்தின் டைரக்டரராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.

“என்ன அன்பு யோசிக்குற?”

“ராஜேஷ் கேரக்டர் எப்படி அங்கிள்? அவரைப் பத்தி சொல்லுங்க”

“ராஜேஷ் ஃபேமிலி...  சின்ன ஃபேமிலிதான்.. அவங்க அப்பா கவர்மென்ட் ஆஃபிஸ்ல க்ளர்கா வேலை செஞ்சவரு... நிரஞ்சனாவும் அவனும் எங்கேயோ வெளியே போன இடத்துல பாத்து மீட் பண்ணி லவ் பண்ணி இருக்காங்க.”

”அவன் பி. ஈ மெக்கானிக்கல் முடிச்சிட்டு ஏதோ ஒரு கம்பனில வேலை பார்த்துட்டு இருந்திருக்கான்... வீட்டுல இருக்கவங்க சம்மதத்தோடதான் இரண்டு பேருக்கும் கல்யாணமாச்சு.

”ஆனா ரஞ்சனிக்கு ராஜேஷ் வீட்டாளுங்களோட கொஞ்சமும் ஒத்துப் போகல... அங்கே போன ஒரு மாசத்துல புருஷனைக் கூட்டிட்டு இங்கே வந்துட்டா... வந்த பிறகுதான் அப்பாவுக்கு கேன்ஸர் பிரச்சனையும் ஆரம்பிச்சுது.”

”ட்ரீட்மென்ட்ல இருந்ததால அவரால கம்பனியைப் பார்த்துக்க முடியல... அப்பதான் நிரஞ்சனாவும் ராஜேஷும் பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க.”

”அடுத்த வருஷத்துல நம்ம கம்பனியோட க்ரோத்ல பெரிய வீழ்ச்சி... முக்கியமான ஆர்டர்ஸ் எல்லாம் கை விட்டுப் போயிடுச்சு... அது இல்லாம நிர்வாகத்திலயும் நிறைய சொதப்பல்” என்றார்.

“ராஜேஷ் கிட்ட நிர்வாகத்தைக் கொடுக்கிறதுக்கு முன்னாடி அப்பா இதெல்லாம் யோசிக்கலயா... மாப்பிளைனதும் என்ன எதுன்னு யோசிக்காம பொறுப்பைத் தூக்கிக் கொடுத்துட்டாரா?”

“தூக்கி அவர் கொடுக்கல அன்பு... தூக்கிக் கொடுக்க வைச்சாங்க... ஆனா எப்போ அப்பாவுக்கு ராஜேஷ் செட் ஆகமாட்டான்னு தெரிஞ்சுதோ உடனேயே பொறுப்பைப் பிடுங்கிட்டாரு... அதுக்குப் பதிலா நம்ம திருவான்மியூர்ல இருக்க ஜே ஜே பேலஸ பார்த்துக்கச் சொல்லி இருக்காரு” என்றார்.

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு பதிலாக ஒரு ஹோட்டலை நிர்வகிக்கச் சொன்னால் யாருக்காக இருந்தாலும் கடுப்பாகத்தான் செய்யும். அதுதான் அவன் என்னை மனதிற்குள்ளேயே கடித்துக் குதற காரணம் போல.

ஆனால் எந்த உரிமையில் இதை எல்லாம் அவன் அடைய விரும்புகிறான் என்றுதான் எனக்குப் புரியவில்லை.

“என்ன யோசிக்குற அன்பு?”

“இல்ல... கை விட்டுப் போன ஆர்டர்ஸ் எல்லாம் பேசி நாம திரும்ப கொண்டு  வர்ற முடியுமா? அதுக்கு வாய்ப்பு ஏதாவது இருக்கா அங்கிள்?”

“முன்ன மாதிரி இல்ல... இப்போ ஃபுட் ப்ராடெக்ட்ஸ்ல நிறைய போட்டி கம்பனி வந்திருச்சு... மார்கெட்ல நம்ம பொருட்களோட விற்பனையும் அடி வாங்கிட்டுதான் இருக்கு... ஆனா அப்பாவுக்கு என்னவோ உன் மேல அபாரமான நம்பிக்கை... என் புள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடுவான்னு சொல்றாரு” என,

‘அது என் மீதான நம்பிக்கை இல்ல... அன்புவின் மீதுதான்’ என்று எண்ணி மனதிற்குள் ஏளன புன்னகை செய்து கொண்டேன்.

கிரி அங்கிள் பேசிவிட்டுப் போன பிறகு சந்துருவை அழைத்து கம்பனியின் கடந்த ஐந்து வருட இலாப நஷ்ட கணக்குகளின் விவரங்களை மின்னஞ்சல் அனுப்ப சொன்னேன்.

அவன் ஒரு மணிநேரத்தில் அனுப்புவதாகச் சொல்ல, யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்த நான் மேஜை மீதிருந்த ஒரு பெரிய புத்தகத்தைப் பார்த்தேன். அதனைத் திறக்கையில் வியப்புக் கூடியது.

1960களில் தொடங்கிய நீண்ட நெடிய வரலாறு எங்கள் நிறுவனத்திற்கு இருந்தது. முதலில் ஜானு என்ற பெயரில் சிறியதாகத் தொடங்கப்பட்ட பலகாரக் கடை பின் ஜே ஜே மசாலா என்று பிரமாண்டமான ஒரு தொழிலாக உயர்ந்திருப்பது வியப்புதான்.

அந்தப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் பாட்டி தாத்தாவின் படங்கள் முதல் பக்கங்களை நிரப்பியிருந்தன. அதே போன்ற படம் என் இருக்கைக்குப் பின்பாகவும் வீட்டிலும் இருந்தது.

தாத்தா அருள்நம்பி மற்றும் அவரை வளர்த்த அக்கா ஜானகி. தன் அம்மா யாரென்று அப்பாவுக்கு இப்போது வரை தெரியாது. குழந்தை பிறந்ததும் விட்டுச் சென்றுவிட்டதால் ஜானகி பாட்டிதான் வளர்த்திருக்கிறார். 

அன்று இரவு ஓய்ந்து களைத்து வீட்டிற்கு வந்த நான் உடைகளை மாற்றிவிட்டு திரும்பிய போது அறையில் மதியழகி புத்தம் புது பொம்மைகளுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.

“யாரு இதெல்லாம் வாங்கிக் கொடுத்தா?”

“ரஞ்சனி என்னையும் பாப்பாவையும் மாலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க அன்பு... அங்கதான் உங்க பொண்ணு இதெல்லாம் வாங்கிக்கிட்டா... நான் எவ்வளவு சொல்லியும் கேட்கல... மதி கேட்டது எல்லாத்தையும் ரஞ்சனியும் வாங்கிக் கொடுத்துட்டாங்க” என்று மஹா சந்தோஷமாகக் கூற எனக்குக் கடுகடுத்தது.

அந்தப் பொம்மைகளை எரிச்சலுடன் பார்த்த நான், “மதிக்குட்டி தூங்குனதும் அந்தப் பொம்மை எல்லாத்தையும் தூக்கிப் போடு” என,

“ஏன் அன்பு... அவங்க ஆசையா வாங்கிக் கொடுத்தாங்க” என்று மஹா சொல்லவும்,

“அதெல்லாம் எனக்குத் தேவை இல்ல... அவ வாங்கித் தந்த எந்தப் பொம்மையும் இந்த ரூம்ல இருக்கக் கூடாது...  நாளைக்கு வேணா நான் மதியைக் கூட்டிட்டுப் போய் இதே மாதிரி பொம்மைகளை வாங்கித் தர்றேன்”

“இல்ல அன்பு” என்று மஹா ஏதோ சொல்ல வர,

“ஆர்கியூமென்ட் பண்ணாத மஹா... சொன்னதைச் செய்” என்றதும் அவள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டாள்.

அந்தச் சமயம் பணிப்பெண் அங்கே வந்து, “ஐயா சாப்பிட கூப்பிட்டாரு” என்று விட்டுச் சென்றாள்.

“வர்றோம்” என்ற நான் மஹாவிடம் திரும்பி அந்தப் பொம்மைகளைக் கையசைத்து அங்கிருந்து அகற்றச் சொன்னேன். 

“குட்டிமா சாப்பிட்டு வரலாம் வா” என்று அவள் தூக்கவும் மதிக்குட்டி அந்தப் பொம்மைகளையும் எடுத்துக் கொள்ள,

“சாப்பிடுறதுக்கு எதுக்குடி பொம்மை?” என, அவள் கேட்பதாக இல்லை. அடம் பிடித்து அழுதாள்.

மஹா என்னைத் திரும்பிப் பார்க்க நான் மதியிடம் சென்று, “மதி... அப்பா சொல்றதைக் கேட்பியா நீ?” என,

“எனக்குப் பொம்மை வேணும்” என்று அதே அடத்துடன் நின்றாள். 

“நாளைக்கு இது போல நான் நிறைய பொம்மை வாங்கி தருவேன்... அப்புறம் ஸ்விம்மிங் பூலில் குளிக்கக் கூட்டிட்டுப் போவேன்” என்றேன். அவ்வளவுதான் அவள் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு என்னுடன் வந்து விட்டாள்.

அதன் பின் எல்லோரும் ஒன்றாக உணவு உண்ண, அப்பா அலுவலக விஷயங்கள் பேசினார். நிரஞ்சனா, “எப்படி இருந்தது ஆஃபிஸ்ல ஃபர்ஸ்ட் டே எக்ஸ்பீரியன்ஸ்” என்று விசரித்தாள்.

“யா குட்” என்று விட்டு நான் உணவு முடித்து எழுந்து கொள்ள, மஹாவும் மகளுக்கு இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் போகலாம் என்று நான் கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடக்கச் சென்றேன்.

இனி சிகரெட் பிடிக்கக் கூடாது என்று மனதில் செய்த சங்கல்பம் அவ்வப்போது என்னைக் கொஞ்சம் அசைத்து பார்த்தது. இது எல்லாவற்றிக்கும் மேல் இங்கே வந்த பிறகு அன்புவின் குரல் என் காதில் கேட்காததும் ஆச்சரியமாக இருந்தது. அது நல்லதிற்கா கெட்டதிற்கா? என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு விஷயம் நடக்கும் போது அது ஏன் நடக்கிறது என்று யோசிக்கிறோம். அது நடக்காத போது ஏன் நடக்கவில்லை என்று குழம்புகிறோம். இயல்பில் மனித மனமே ஒரு குழப்பவாதி!

இவ்வாறாக யோசித்துக் கொண்டே நான் வீட்டிற்குள் செல்ல மஹாவும் மதியும் உண்டுவிட்டு அறைக்குத் திரும்பிவிட்டிருந்தனர். நானும் செல்ல அந்த அறையே அதிருமளவுக்கு மதி ஒரே கத்து கத்தி கொண்டிருந்தாள்.

“என்னாச்சு மஹா?”

“அந்தப் புது பொம்மைங்கதான் வேணுமா உங்க பொண்ணுக்கு... பழைய பொம்மை எல்லாம் வேணாமா? நீங்களே உங்க பொண்ண சமாதானப்படுத்துங்க”  

 “எது?”

“நீங்கதானே அந்தப் பொம்மையை எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு சொன்னீங்க... அப்போ நீங்கதான் சமாதானப்படுத்தணும்” என்று பொறுப்பை என் தலையில் கட்ட,

“அம்மா என் பொம்மை எல்லாம் கொடுக்க மாட்டுறா” என்று அழுது கொண்டே என்னிடம் புகார் வாசித்தாள் மதி.

“சரி நான் கொடுக்கச் சொல்றேன்... நீ என் கூட வா” என்று மதிக்குட்டியைத் தூக்கிக் கொண்டு பால்கனியில் வந்து நின்றேன்.

அவள் சுற்றி வளைத்துப் பொம்மையைப் பற்றியே கேட்டு கொண்டிருக்க, “சரி நான் ஒரு கதை சொல்றேன்” என,

“எனக்கு கதை வேணா பொம்மைதான் வேணும்” என்றாள்.

“நான் சொன்ன கதைய கேட்டனா உனக்கு பொம்மை தருவேன்” என்று சொன்னதும்,

அவள், “கண்டிப்பா” என்று கேட்க,

“கண்டிப்பா” என்றேன் நானும். அதன் பின் அவள் என்னிடம் கதை கேட்பதற்கு சம்மதம் சொன்னாள்.

“ஒரு ஊர்ல ஒரு யானைக் குட்டி” என்று நான் ஆரம்பித்த கதையை ஆர்வமாக கேட்டவள் ஒரு நிலைக்கு மேல் கதையில் மூழ்கிவிட்டாள்.

“அதுக்கு அப்புறம் அந்த யானைக் குட்டி என்னப்பா பண்ணுச்சு?”

“அந்தக் காட்டுல தொலைஞ்சு போன யானைக் குட்டிக்கு அந்தக் குரங்கு கூட்டத்தோட தலைவன் ஹெல்ப் பண்ணான்” என்று நானாக புனைந்து கதை என்ற பெயரில் ஏதேதோ சொல்லி கொண்டிருந்தேன்.

கதையை ஆர்வமாகக் கேட்டிருந்த அவள் என் தோள் மீதே உறங்கிவிட்டாள். நான் அதன் பின் அவளைச் சத்தமில்லாமல் படுக்க வைக்க,

சோஃபாவில் அமர்ந்து ஏதோ ஒரு நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த மஹா, “என்ன கதையெல்லாம் பலமா இருக்கு பொண்ணுக்கு” என்றாள் புன்னகை முகமாக.

அந்தப் புன்னகை என்னை மையல் கொள்ளச் செய்தது. “ஏன் நீ மட்டும்தான் கதை சொல்லுவியா?” என்று கேட்டுக் கொண்டே அவளிடம் வந்தேன்.

“இல்ல நீங்களும் நல்லாத்தான சொல்றீங்க... ஆனா இந்த மாதிரி கதையை நான் கேட்டதே இல்ல” என்றாள்.

“நானும்தான் கேட்டது இல்ல சொந்தமா அடிச்சு விட்டேன்” என்றபடி சோஃபாவில் அமர்ந்து மஹாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு,

“நான் உன் பொண்ணைத் தூங்க வைச்சுட்டேன்... நீ என்ன இப்போ தூங்க வை” என்றேன்.

“குழந்தையா நீங்க?” என்றவள் புருவங்கள் உயர கேட்க, 

“உன் பக்கத்துல வரும் போது... எல்லா பிரச்சனை, கவலை எல்லாம் மறந்து நான் குழந்தையா மாறிப் போறேன் மஹா” என்றேன்.

“நல்லாத்தான் பேசுறீங்க” என்று அவள் சொல்ல,

“பேசுறது ஒரு கலை... பேசாம பேசறது இன்னொரு கலை”

“அது என்ன பேசாம பேசுறது?” என்றவள் தெரியாதது போல கேட்க,  

“அந்தக் கலையை எனக்கு கத்துக் கொடுத்ததே நீதானே” என்றதும் அவள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். அழகாய் விரிந்த அந்தக் கண்களைப் பார்த்த நான் ,

“ஆமா பின்ன... அன்னைக்கு நீ கொடுத்த கிஸ்... தட்ஸ் மேஜிக்கல்” என்றேன்.

அவள் நாணத்துடன் தலையைச் சரித்துக் கொள்ள, “மஹா ப்ளீஸ்” அவள் கன்னங்களை என்னருகே இழுக்கவும் அவள் என்னைக் காதலுடன் நெருங்கவும் சரியாக இருந்தது.

அவள் என்னை முத்தமிடும் போது கட்டவிழ்ந்து அவள் கூந்தல் என் மீதாகச் சரிந்தது இன்னும் என்னை மயக்க நிலைக்குத் தள்ளியது. அந்த கூந்தல் காட்டில் வெகுதூரம் தொலைந்து காணாமல் போன நான் அன்றும் நிம்மதியாக உறங்கினேன்.

இப்படியாக தினம் தினம் என்னுடைய தூக்க மாத்திரையாக மஹா மாறிப் போனாள்.

அடுத்தடுத்த நாள் அலுவலகத்தில் வேலைகள் தீவிரமெடுக்க தொடங்கின. கம்பெனியின் இலாப நஷ்ட கணக்குகளை ஆராய்ந்தேன். தலைச் சுற்றியது.

பள்ளிகூடத்தில் நான் படித்த பிஸ்னஸ் மேக்ஸ் பற்றிய நினைவெல்லாம் அணிவகுத்தது. அப்போது நான் விட்டொழித்த எண்களுடன் இப்போது போராட வேண்டியிருந்தது. 

அலுவலக வேலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நான் பழக்கிக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் எனக்கு சந்த்ரு ரொம்பவும் உதவியாக இருந்தான்.

நல்ல திறமைசாலியும் கூட. இப்படியொருவன் அருகில் இருப்பது நல்லது என்று பட்டது. நிறைய விஷயங்களில் அவன் சொல்லும் கருத்து உபயோகவும் இருந்தது. 

அன்று சந்த்ருவிடம் பேசும் போது, “நம்ம கம்பனியோட விளம்பரம் எல்லாம் பார்த்தேன்... ரொம்ப பழைய மாதிரி இருக்கு... நாம புதுசா ஏதாச்சும் விளம்பரம் பண்ணனும்... ஆட் ஏஜென்சிஸ் கிட்ட பேசுங்க சந்த்ரு” என்றேன்.

“ஓகே சார்” என்றவன் சென்றுவிட அன்று இரவு அப்பாவிடமும் அது விஷயமாகப் பேசினேன்.

“நம்ம கம்பனில இந்த மாதிரி விளம்பரத்துக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தது இல்ல... பாரம்பரியமா நம்ம பொருட்கள் விற்பனைல இருக்கு... ஜே ஜே மசாலா பத்தி தெரியாதவங்களே கிடையாது... இது தேவை இல்லாத செலவுன்னு தோணுது”

“நீங்க சொல்ற மாதிரி நம்ம கம்பனி பேர் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கலாம்... ஆனா நமக்குப் போட்டியா மார்கெட்ல புது புது ப்ராடக்ட் வந்திருச்சு...இப்போ நம்ம கஸ்டமர்ஸுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு.”

”அதனால நம்ம மசாலை அவங்க ஏன் வாங்கணும்னு யோசிப்பாங்க இல்ல... அதுக்கு நாம பதில் கொடுக்கணும்... எனக்குத் தெரிஞ்சு இது செலவு இல்ல... இன்வெஸ்ட்மென்ட்தான்” என்றேன்.

அதன் பின் அவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

“நீ என்ன நினைக்குறியோ அதை செய் அன்பு” என்று எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.   

அடுத்த நாள் நான் ஃபேக்டரியில் நடக்கும் வேலைகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏதோ ஒரு நடிகை அல்லது நடிகனை நிறுவனத்தின் முகமாகக் காட்டுவதை விட, சுத்தமாகவும் தரமாகவும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் உற்பத்திச் செய்முறைகளை விளம்பரப் படமாகவே எடுத்துப் போட்டால் என்னவென்று.

 அப்போது என் செல்பேசி அடிக்க அதனை நான் காதில் வைக்கவும், “அப்பா” என்று மழலை மொழியில் மதிக்குட்டியின் குரல் ஒலிக்கவும், 

இயல்பாக என் இதழ்கள் விரிய, “சொல்லு மதிக்குட்டி” என்றேன்.

“அம்மா என்னைத் தண்ணில குதிக்க விட மாட்டுறா” என்றாள்.

“என்னது?” நான் புரியாமல் வினவ,

“உங்க பொண்ணுக்கு ஸ்விம்மிங் பூலில் குளிக்கணுமா... அடம் பிடிக்குறா... என்னைப் படுத்தி எடுக்குறா... என்னால சமாளிக்க முடியல அன்பு” என்று கிட்டத்தட்ட மஹா அழுகின்ற தொனியில் பேச எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 

“சரி சரி நான் வர்றேன்” என்று நான் சந்த்ருவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

நான் வருவதற்குள் மகளிடம் போராடி மஹா களைத்துப் போயிருந்தாள்.

வந்ததும் என்னிடம், “எல்லாம் உங்களாலதான்... அவளைக் குளிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்குப் போயிட்டீங்க... அவ என்னை ஒரு வழி பண்றா?” என,

“ஓகே ஓகே கூல்... நான் அவளைப் பார்த்துக்கிறேன்” என்று மதிக்குட்டியிடம் சென்று,

“என்ன மதி... குளிக்கலாமா?” என்று கேட்கவும் அவள் குதுகலமானாள். சந்தோஷமாகக் குதிக்க ஆரம்பித்தாள்.

“அப்பா உன்னை ஸ்விம்மிங் பூல் கூட்டிட்டுப் போணும்னா... நீ அடம் பிடிச்சு அழுது அம்மாவைத் தொல்லை பண்ணதுக்கு சாரி கேளு” என்றேன்.

“சாரி ம்மா” என்று என் கரத்திலிருந்தபடியே மஹாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ள அவள் முகம் மலர்ந்தது.

“சரி ஓகே... நம்ம டிரஸ் சேஞ் பண்ணிட்டுக் குளிக்கப் போகலாம்” என மதியும் ஆர்வமாக உடை மாற்றிக் கொள்ள,

“என்ன மஹா நீயும் குளிக்க வர்றியா?” என்று நான் கேட்டதும்,

“நான் வரலப்பா” என்றாள்.

“ஜாலியா இருக்கும் மஹா” என்று நான் சொல்ல, “ஆமா ம்மா ஜாலியா இருக்கும்” மதிக்குட்டிப் பின்பாட்டுப் பாட,

“இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே அன்பு” முகத்தைச் சுருக்கி அவள் இரகசியமாக என்னிடம் சொல்லவும்,

“அப்போ முடியாதா?” என்று நான் அதிர்ச்சியாகக் கேட்க,

“அது எப்படி முடியும்?” என்று முனங்கினாள்.

“இல்ல... எதுவுமே முடியா....தான்னு கேட்டேன்” என்று நான் இழுத்த நொடி,

“ஒழுங்கா அப்பாவும் பொண்ணும் ஓடிடுங்க சொல்லிட்டேன்” என்றாள்.

அதன் பின் நானும் மதிக்குட்டியும் நீச்சல் குளத்தில் குதித்து அதகளம் செய்ய, அப்பா தூரத்திலிருந்து நாங்கள் விளையாடியதைப் பார்த்துக் களித்து எங்களுக்குக் கையசைத்தபடி நெருங்கி வந்தார்.

“தாத்தா நீங்களும் வாங்க” என்று மதிக்குட்டி அழைக்க,

“ஐயோ தாத்தாவுக்கு உடம்பு முடியல கண்ணு... நீங்க குளிங்க” என்றவர் நாங்கள் விளையாடுவதை இரசித்துப் பார்த்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

நானும் மதியுடன் குழந்தையாக மாறி விளையாடிய விளையாட்டில் எங்களுக்கு நேரம் காலம் எல்லாம் மறந்து போனது.  

“அன்பு... போதும்... அவளைத் தூக்குங்கு... விட்டா இன்னைக்குப் பூரா கூட உள்ளேயே கிடப்பா” என்று மஹா எச்சரிக்கை மணி அடிக்கவும்தான் நேரம் உணர்ந்து,

“போதும் மதி” என்றேன். அவள் கேட்கவே இல்லை. நான் கெஞ்சிக் கொஞ்சி சமாதானம் செய்து நீச்சல் குளித்திலிருந்து அவளை ஏற்றிவிட்டேன்.

மஹா மகளைத் துவட்டித் தூக்கிக் கொண்டு போகவும் நானும் துவட்டி ட்ராக்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு தோளில் துண்டைப் போர்த்திக் கொண்டு வீட்டிற்குள் வர,

“ஒரு நிமிஷம்... உன்கிட்ட பேசணும்” என்றார் அப்பா.

“டிரஸ் பண்ணிட்டு வந்துடுறேன் பா” என்ற போதும், “இப்ப வா பேசணும்” என்றவர் அறைக்குள் அழைக்க, நான் யோசித்துவிட்டுப் பின் உள்ளே சென்றேன்.

அவர் அறை கதவை மூடிவிட்டு வந்து என்னருகே வர, எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன பேசப் போறீங்க?” என்ற போது அவர் முகம் இறுகி இருந்ததைக் கவனித்தேன். அவர் உடனடியாக என் தோள் மீதிருந்த துண்டை விலக்கினார்.

“அப்பா” என்று நான் அதிரும் போது அவர் கண்கள் என் தோள்ப்பட்டையைக் கூர்மையாகப் பார்க்க நான் புரியாமல் அவர் பார்த்தத் திசையை நோக்கினேன்.

அங்கே மெல்லிய கீறலாகத் தழும்பு ஒன்று இருந்ததைப் பார்த்தப் போதுதான் நினைவுக்கு வந்தது. என்னுடைய பதிமூன்று வயதில்  பள்ளியில் தடுக்கி விழுந்து தாறுமாறாகத் தோள் பட்டை எலும்பு நொறுங்கியது.

அந்த இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் உண்டான தழும்பு. நான் பயந்து கொண்டே அவர் பார்வையை நிமிர்ந்து நோக்கினேன். அப்பாவின் சிவந்திருந்த கண்களில் கனன்ற கோபத்தைப் பார்க்கையில் என் முதுகுதண்டு சில்லிட்டது.

 நான் அறிவென்று அவருக்குத் தெரிந்துவிட்டது.  

வயிற்றில் ஏறி இறங்கிய ஒரு பதட்ட உணர்வில், “அப்பா நான்” என்று பேச முற்படும் போதே,

“அப்படி கூப்பிடாதடா நாயே” என்று ஆக்ரோஷமாக அவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

Quote

how to get cheap cytotec without a prescription 2018 Feb 16; 359 6377 770 775

Quote

71 Kerber KA, Schweigler L, West BT, Fendrick AM, Morgenstern LB buy propecia ireland

You cannot copy content