You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Anbin Vazhiyathu - Episode 18

Quote

18

If you change the way you look at things, the things you look at change

அப்பாவிடம் தைரியமாகப் பேசிவிட்டு வந்துவிட்ட போதும் என் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று பயமாகத்தான் இருந்தது. அன்று இரவு பசிக்கவில்லை என்று நான் கீழே செல்லவில்லை.

மஹாத்தான், “என்ன பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று விடாமல் என்னை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அன்புவிற்கு பிறகு என் முகத்தைப் பார்த்து என் மனநிலையைச் சரியாகக் கணிக்கும் மற்றொரு ஜீவன் மஹா என்று தோன்றியது. அவள் மீதான அன்பும் காதலும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனது.  

‘ஆஃபிஸ் டென்ஷன்’ என்று அப்போதைக்கு ஒரு காரணம் சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.

ஆனால் நான் எதிர்பார்த்தது போல் அல்லாமல் அடுத்த நாள் அமைதியாக விடிந்தது. நான் அலுவலகம் கிளம்பிய போது அப்பா முகப்பறையில் அமர்ந்து சாவகாசமாக நாளிதழைப் பிரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்.

அவர் என்னை ஓரப்பார்வை பார்க்க, நானும் அவரை அமைதியாகப் பார்த்துவிட்டுக் கடந்தேன். முதல் முறையாக அப்பா என்னைப் புரிந்து கொண்டதாக மனதிற்குள் ஒரு சின்ன சந்தோஷம் உண்டானது.

அப்பாவும் நானும் எதுவும் பேசிக் கொள்ளாமல் அடுத்த இரண்டு நாட்களும் நகர்ந்துவிட்டன. ஆனால் அதற்கு அடுத்த நாள் அலுவலகத்தில் இருந்த போது, “வீட்டில ஒரே பிரச்சனை?” என்று மஹா அழைத்துத் தகவல் சொன்னாள்.

“என்னாச்சு?” என்று நான் கேட்க,

“நிரஞ்சனாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே பிரச்சனை... வாக்குவாதம்... ஆனா என்ன விஷயம்னு எனக்கு ஒன்னும் புரியல” என்றாள்.

ஒரு வேளை என் விஷயமாக இருக்குமோ? அப்பா என்னைப் பற்றிய உண்மையை உளறி வைத்துவிட்டால்?

பதட்டத்தில் அவசர அவசரமாக வீட்டிற்குக் கிளம்பினேன்.

நான் வருவதற்குள் அங்கே ஒரு கலவரமே நடந்து அடங்கிவிட்டிருந்தது.  நிரஞ்சனாவையும் ராஜேஷையும் அப்பா வீட்டை விட்டுப் போகச் சொல்லி விட்டதாக மஹா என்னிடம் சொன்னாள்.

“நிரஞ்சனா அம்மாவையும் காணோம்” என்று நான் கேட்க,

“அவங்களும் என் பொண்ணோடவே போறேன்னு வெளியே போயிட்டாங்க” என்றாள்.

“என்ன பிரச்சனை நடந்தது என்னன்னு எனக்கு ஒன்னுமே புரியல” என்று மஹா சொல்ல,

“சரி அப்பா எங்கே?” என்று கேட்டேன்.

“பின்னாடி தோட்டத்தில ஒரு மாதிரி கவலையா உட்கார்ந்துட்டு இருக்காரு”

“சரி நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என்று உடை மாற்றிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றேன்.

இருளுடன் அமைதியாக அவர் உருவம் கலந்திருந்தது. எனக்கு அவர் அருகே போகவும் பேசவும் தயக்கமாக இருந்த போதும் வேறு வழி இல்லாமல் மெதுவாக நான் அவர் அருகில் சென்று நிற்க,

என்னை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவர், “ஆஃபிஸ்ல இருந்து வந்துட்டியா?” என்று கேட்க,

“ஆமாம்... இப்பதான் வந்தேன்” என,

அவர் அமர்ந்திருந்த இருக்கையை அருகே காண்பித்து, “உட்காரு அன்...” என்று சொல்லி இருந்தவர், “அறிவு” என்றார்.

நான் திகைப்புடன் அவரை நோக்க, “நாம தனியா இருக்கும் போது நான் உன்னை அறிவுன்னு கூப்பிடலாம் இல்ல” என்று கேட்டார்.

எனக்கு வியப்பாக இருந்தது. என்னை ஒருவாறு சமாளித்துக் கொண்ட நான் அவர் அருகே அமர்ந்துவிட்டு, “வேண்டாம்... நீங்க என்னை அன்புன்னே கூப்பிடுங்க” என்றேன்.

அவர் என் கரத்தை அழுத்திக் கொண்டு கண்களில் கண்ணீர் திரையிட, “ஆனா நான் இப்போ அறிவுக்கிட்ட பேசணும்... அன்புகிட்ட இல்ல” என்றார்.

நான் என்ன பேசுவதென்று புரியாமல் அமைதியாக அவரை நோக்க, “என்னை மன்னிச்சுடு அறிவு... நான் உனக்குப் பெரிய அநியாயம் செஞ்சுட்டேன்” என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.

நான் பதறி, “அப்பா என்ன?” என,

“என்னை மன்னிப்பியா அறிவு” என்று குரலில் தழுதழுக்கக்  கேட்டார்.

“என்னாச்சு பா?” என்று கேட்க என் கைகளைப் பிடித்துக் கொண்டவர்,

“அப்படியொரு கேவலமான பழியை நிரஞ்சனா உன் மேல போட்ட போது நான் கண்ணை மூடிட்டு நம்பி இருக்கக் கூடாது... விசாரிச்சு இருக்கணும்... தப்பு செஞ்சுட்டேன் அறிவு... தப்பு செஞ்சுட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு தலையில் அடித்துக் கொண்டு அழ,

“என்ன பண்றீங்க நீங்க?” என்று அவர் கையைப் பிடித்துத் தடுத்தேன்.

“நான் தப்பு பண்ணிட்டேன்...  உன்கிட்ட மோசமா நடந்துக்கிட்டேன்... அட்லீஸ்ட் அன்பு சொன்ன போதாவது நான் கேட்டிருக்கணும்... கேட்கல... புத்தி கெட்டுப் போய் நடந்துக்கிட்டேன்” என்று புலம்பினார்.

“எப்பவோ நடந்து முடிஞ்ச விஷயத்துக்கு இப்ப எதுக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ணிட்டு இருக்கீங்க... அப்படி என்ன நடந்துச்சு இன்னைக்கு” என்று நான் கேட்க,

“நிரஞ்சனாவை நான் இன்னைக்குக் கூப்பிட்டுக் கேட்டேன்... அவ பொய்யா உன் மேல போட்டப் பழியை ஒத்துக்கிட்டா” என, எனக்கு அதிர்ச்சியானது.

“ஒத்துக்கிட்டாளா? உண்மையாவா?” என,

“ஆமா அன்னைக்கு உன் மேல இருந்த கோபத்துல அப்படியொரு பழியைப் போட்டுட்டாளாம்... ஆனா அதுக்காக அவ ரொம்ப மனசு வருத்தப்பட்டாளாம்... இருந்தாலும் உண்மையை ஒத்துக்க அவளுக்குப் பயமா இருந்துச்சு, மனசு வரலன்னு சொன்னா” என்றார்.

“அவ்வளவும் நடிப்பு” என்று நான் சொல்ல,

“இல்ல அறிவு... லாஸ்ட் இயர் அவளுக்கு இரண்டு தடவ மிஸ்கரேஜ் ஆகிடுச்சு... செக் பண்ணி பார்த்த போது டாக்டர் அவ யூட்டிரஸ்ல பிராப்ளம்னு சொல்லிட்டாரு...  அவளுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பு ரொம்ப கம்மியா இருக்காம்... அதுல இருந்தே அவ ரொம்ப டிப்ரஸ் ஆகிட்டா.”

”எல்லாத்துக்கும் மேல உன் மேல பொய்யா ஒரு பழியைப் போட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பினத நினைச்சு இப்பவும் கில்டியா ஃபீல் பண்றா... அதுவும் நீ செத்துப் போனதா தெரிஞ்சதுல இருந்து அவளோட கில்டி அதிகமாயிடுச்சு” என்றார். நான் எதுவும் பேசவில்லை.

உண்மையிலேயே நிரஞ்சனா மாறி இருப்பாள். குற்றவுணர்வு அடைந்திருப்பாள் என்று நான் நம்பவில்லை.

அப்பா தொடர்ந்து, “நான் செஞ்சது தப்புத்தான்னு அழுதா... ஆனா அவ செஞ்சது மன்னிக்கக் கூடிய தப்பா என்ன? ஒரு பொண்ணு இப்படியொரு பழியைப் போட அவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேணும்... என்னால அவளை மன்னிக்க முடியல.”

”இனிமே நீங்க இங்க இருக்க வேண்டாம்... தனியா போய் தங்கிக்கங்கனு சொல்லிட்டேன்... தேவிகாவும் என்கிட்ட சண்டைப் போட்டு நானும் வீட்டை விட்டு வெளியே போயிடுவன்னு சொல்லிட்டா... நான் தடுக்கல... அதுதான் உன் விருப்பம்னா போன்னு சொல்லிட்டன்”

”ஆனா ராஜேஷ் கோபமா பேசுனான்... நான் போக மாட்டேன்... எனக்கும் இந்தச் சொத்துல உரிமை இருக்குன்னு சத்தம் போட்டான்”

“ஓ அப்புறம்”

“அண்ணா நகர்ல இருக்க வீடு அப்புறம் திருவான்மியூர்ல இருக்க ஜே ஜே பேலஸ் அவங்க பேர்ல மாத்தி தரன்னு சொல்லிட்டேன்... ஆனா அதுக்குப் பதிலா... தேவிகா பேர்ல இருக்க ஷேர்ஸ் அப்புறம் நிரஞ்சனா ஷேர்ஸ் உன் பேர்ல மாத்தி தரணும்னு... அதுக்கு மேல இந்தச் சொத்துல எந்தப் பங்கும் கேட்கக் கூடாதுன்னு எழுதித் தரச் சொன்னேன்.”

”ஆனா ராஜேஷ் முடியாது... நான் கோர்ட்ல போய் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான்... எங்க வேணா போய் பார்த்துக்கோ... ஆனா இப்போதைக்கு இந்த வீட்டுல நீங்க இருக்கக் கூடாது... இந்த வீடு என் பேர்ல இருக்குன்னு சொல்லிட்டேன்.”

”முதல முரண்டு பிடிச்சான்... அப்புறம் நிரஞ்சனா அவனை கன்வின்ஸ் பண்ணிக் கூட்டிட்டுப் போயிட்டா” என்றார்.

“இப்போ இது தேவை இல்லாத பிரச்சனைன்னு எனக்குத் தோணுது... அதுவும் இல்லாம அந்த ராஜேஷ் ஏதாவது கோர்ட் கேஸ்னு இழுத்துவிட்டா.”

“அவனுக்கு அவ்வளவு தைரியமும் இல்ல... தெளிவும் இல்ல... தானா அவனே வழிக்கு வந்திருவான்” என்றார்.

நான் யோசனையுடன் அமர்ந்திருக்க அவர் என் தோள் மீது கைகளை வைத்து, “இந்தச் சொத்துக்கு எல்லாம் இனிமே நீதான் ஒரே உரிமையாளனா இருக்கணும்... நீ மஹாவோட குடும்பமா சந்தோஷமா இருக்கணும்... இனி உன் வாழ்க்கைல எந்தக் கஷ்டமும் வரக் கூடாது” என, அவரின் வார்த்தைகள் என்னை நெகிழ்த்திவிட்டன.

இருப்பினும் அவரை அலட்சியமாக நோக்கி, “அன்பு செத்துப் போயிட்டான்... அதான் நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க... இல்லனா என்கிட்ட இப்படி எல்லாம் நீங்க பேசுவீங்களா?” என்று கேட்க,

“நீ நம்பாட்டியும் நீ செத்துப் போயிட்டதா தகவல் வந்த போதே நான் மனசளவில உடைஞ்சு போயிட்டேன்தான் அறிவு...”

”எல்லாத்துக்கும் மேல உன்னைப் பத்தியும் உன் எழுத்தைப் பத்தியும் எல்லோரும் பாராட்டிப் பேசும் போது உனக்குள்ள இருந்த திறமையை ஒரு அப்பாவா நான் அங்கீகரிக்கவும் ஆதரிக்கவும் இல்லன்னு எனக்குள் ஒரு குற்றவுணர்வு குத்திக் கிழிச்சதும் உண்மை”

அப்பத்தான் உன் நாவல் ஒன்னைப் படிச்சேன்... ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன்... எப்படியொரு எழுத்து... நீ உன் எழுத்து திறமையால ரொம்ப பெரிய இடத்துக்குப் போக வேண்டியவன்.”

”ஆனா என் முட்டாள்தனத்தாலதான் நீ இப்போ இப்படியொரு சிக்கலில் மாட்டிக்கிட்டன்னு தோணுது” என்றவர் மீண்டும்,

“என்னை மன்னிச்சிடு” என்றார்.

எனக்குப் பேச்சே வரவில்லை. அதிகப்படியான சந்தோஷம் நெகிழ்ச்சி இரண்டும் என் தொண்டைக் குழியை அடைத்தது. கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

அப்பா மேலும், “நீ அன்புவா இரு... அன்புவாவே வாழு... ஆனா உனக்குள்ள இருக்க எழுத்தை நீ கொன்னுடாதே அறிவு” என்றார்.

இவ்வளவு அன்பை நான் உணர்ந்தறியாதவன். எனக்கு மூச்சு முட்டியது.

வார்த்தைகள் எதுவும் என் நாவிலிருந்து எழவில்லை. தலையைத் திருப்பி அவரை நீர் நிரம்பிய கண்களுடன் பார்த்து சம்மதமாகத் தலையை மட்டும் அசைக்க அவர் என்னை அணைத்துப் பிடித்துக் கொண்டார்.

அப்போது பின்னிருந்த மங்கிய ஒளியில் என் கண்களுக்கு அன்பு தெரிந்தான். அவன் முகத்தில் தேஜஸான புன்னகை ஒளிர்ந்தது.

அன்பின் வழியதில் வாழ்க்கையும் மனிதர்களும் முற்றிலும் வேறு மாதிரியான கோணத்தைக் காட்டினார்கள். இங்கே முழு மொத்தமாக மோசமான மனிதர்கள் என்று யாருமே இல்லை.

அன்றிலிருந்து என் வாழ்க்கையையும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் நேர்மறையாகப் பார்க்கத் தொடங்கினேன். அப்பாவின் அன்பாலும் மஹாவின் காதலாலும் என் உலகம் மேலும் அழகாகவும் பொலிவாகவும் மாறியிருந்தது.

அதன் பின் அலுவலகம் வீடு என்று என் வாழ்க்கை நிறைவாகவும் அமைதியாகவும் சென்று கொண்டிருந்தது.

நானும் மஹாவும் மதியழகியை எங்கள் வீட்டின் அருகே இருந்த பெரிய பள்ளியில் சேர்ப்பதாக முடிவெடுத்திருந்தோம். மதியழகியை நாங்கள் எங்கள் மகளாகத் தத்து எடுத்துக் கொள்வதற்குச் சட்ட ரீதியான அனைத்தையும் அனுஷயா செய்திருந்தாள்.

அது விஷயமாக நானும் மஹாவும் அனுஷயாவுடன் அரசு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. அந்த வேலைகளை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் சந்த்ரூ அழைத்திருந்தான்.

நிறுவனத்தின்  கட்டடத்தைப் புதிப்பித்துக் கட்டிக் கொண்டிருந்த நிலையில் அங்கே ஒரு கட்டடத் தொழிலாளி தவறி மாடியிலிருந்து விழுந்து விட்டதால் அந்த இடமே பரப்பாகிவிட்டதாகவும் அந்த நபரை அரசு மருந்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருப்பதாகவும் சொன்னான்.

“ஒன்னும் பிரச்சனை இல்லையே”

“ஜி எச்ல சேர்த்ததா சொன்னாங்க... ஆனா ஒன்னும் தகவல் வரல”

நான் உடனடியாக மஹாவிடம்,  “ஆஃபிஸ்ல ஒரு ஆக்ஸிடென்ட்... நான் அவசரமா ஜி எச் போகணும் மஹா... நான் கேப் புக் பண்ணி இருக்கேன்... நீயும் பாப்பாவும் அதுல வீட்டுக்குப் போயிடுங்க” என்று விட்டு அனுஷயாவைப் பார்க்க, 

“ஜி எச் போறன்னா... நானும் வரேன்... எனக்கும் அங்க ஒரு க்ளைன்டைப் பார்க்க வேண்டி இருக்கு” என்றாள்.

அதன் பின் இருவருமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். நான் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல அனுஷயா மகப்பேறுப் பிரிவுக்குச் செல்வதாகச் சொன்னாள்.

“உன் கிளைன்டைப் பார்த்துட்டு வர்றியா... வெயிட் பண்ணவா?” என்று கேட்டேன்.

“இல்ல அன்பு... நீ கிளம்பு... எனக்கு வேறு சில வேலை இருக்கு முடிச்சிட்டுப் போகணும்” என,

“சரி ஓகே” என்று விட்டு நான் செல்ல அவள் வேறு பாதையில் சென்றாள்.

 நேராக அந்தக் கட்டடத் தொழிலாளி அனுமதிக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றேன். அடிப்பட்ட நபருக்குத் துணையாகச் சில கட்டடத்  தொழிலாளிகளும் மேற்பார்வையாளரும் நின்றிருந்தனர்.

அவர்கள் என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை என்ற அவர்களின் வியப்பே காட்டிக் கொடுத்தது. அவர்கள் என்னைப் பார்த்து வணக்கம் வைக்க, “இப்போ எப்படி இருக்காரு?” என்று விசாரித்தேன்.

“கால் எலும்பு உடைஞ்சிருக்கான்... கட்டுப் போட்டிருக்காங்க... மத்தபடி பெருசா ஒன்னும் இல்ல சார்” என்று அந்த மேற்பார்வையாளர் பவ்வியமாகக் கூற,

“ஏன் இங்க கொண்டு வந்தீங்க... நம் கம்பெனி பக்கத்துல ப்ரைவட் ஹாஸ்பிட்டல் இருக்கு இல்ல... அங்க சேர்த்திருக்க வேண்டியதுதானே” என்று கேட்டேன்.

அவன் மெதுவான குரலில், “இல்ல சார்... நம்ம கம்பனி லேபருக்கு அடிப்பட்டு இருந்தா அங்க கூட்டிட்டுப் போயிருக்கலாம்... அவங்களுக்கு கம்பனி சார்பா இன்சூரன்ஸ் இருக்கு” என நான் ஆழ்ந்த பார்வையுடன், 

 “ஆக்ஸிடென்ட் நடந்தது கம்பனி ஆளா இல்லன்னாலும் ஆக்ஸிடென்ட் நடந்தது கம்பனிலணும் போது அதுக்குப் பொறுப்பு நாமதான்... அவர உடனே பிரைவட் ஹாஸ்பெட்டிலுக்கு ஷிஃப்ட் பண்ணிடுங்க” என்று பணித்தேன். பின் அடிப்பட்டுப் படுத்திருந்த நபரிடம்,  

“கவலைப்படாதீங்க... உங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கான ட்ரீட்மென்ட் செலவை கம்பனி ஏத்துக்கும்... எல்லாத்துக்கும் மேல நீங்க குணமாகுற வரைக்கும் காம்பன்சேஷனா ஒரு அமௌன்ட் கொடுக்க சொல்றேன்” என்றேன். அடிப்பட்டவரின் கண்கள் நன்றியுடன் என்னைப் பார்த்தன.

இத்தனை நேரம் அந்தப் பார்வையில் தெரிந்த கலக்கம் மறைந்திருந்தது.

அன்றாடம் உழைத்து சம்பாதிக்கும் இந்தக் கைக் கூலிகளுக்கு ஏற்படும் விபத்துக்களால் அவர்களின் வாழ்வாதாரம் எந்தளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். அவர்களிடம் ஆறுதலாகப் பேசிவிட்டு நான் சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்தேன்.

காரை எடுக்கச் சென்ற போது என் முன்னே நடந்து சென்றிருந்த பெண் தடுமாறி விழப் போகவும், “பார்த்து” என்று பின்னிருந்து தடுத்துப் பிடித்தேன். அவள் என்னைத் திரும்பி நோக்க, ‘பிரேமி’ என்று நான் அதிர்ந்தேன். அவளும் என்னை அதே அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

அவள் கன்னங்களில் அடித்தத் தடங்கள். உதடுகள் கன்றி சிவந்திருந்தன. உடலளவில் நலிந்து ஒடுங்கிக் கிடந்தாள். அவளின் உருக்குலைந்த அந்தத் தோற்றத்தைப் பார்த்து எனக்குத் தலைச் சுற்றியது.

‘பிரேமியா இது... என்னாச்சு இவளுக்கு?’ என்று எனக்கு நானே கேட்டுக் கொள்ள,

“நீங்க... அன்பு இல்ல” என்று என்னிடம் அவள் கேட்டாள்.

வேறு யாரிடமும் பொய் கூற எனக்கு குற்றவுணர்வோ தயக்கமோ ஏற்பட்டதில்லை. ஆனால் பிரேமியின் கண்களைப் பார்த்துப் பொய்யுரைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

நான் எதுவும் பதில் பேசாததில் அவள் முகம் சங்கடமாக மாறியது.  மீண்டும் திரும்பி வெளியேறும் வழியில் அவள் தடுமாற்றத்துடன் நடக்க அதிர்ச்சியிலிருந்து மீண்டு முன்னே சென்று அவளை வழிமறித்த நான்,

“எங்கே போகணும்? நான் ட்ராப் பண்றேன்” என்றேன்.

அவள் என்னை விசித்திரமாகப் பார்த்துவிட்டு, “இல்ல அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.

“நான் கார்லதான் வந்திருக்கேன்... போலாம்” என்றேன்.

அவள் என்னைப் புரியாமல் பார்க்க நான் முன்னே நடந்தேன். அவள் தயங்கி நிற்க திரும்பிப் பார்த்த நான், “வா பிரேமி” என்றுவிட்டு என் காரை எடுத்து வந்து அவள் அருகே நிறுத்த, “இல்ல” என்று ஏதோ சொல்ல வர,

“உன் வீட்டுக்குதானே போற... நான் ட்ராப் பண்றேன்... ஏறு” என்று முன் கதவைத் திறந்துவிட்டேன்.  

அவள் அமர்ந்துவிட்டு, “என்னைப் பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியுமா? அறிவு சொல்லி இருக்காரா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“ம்ம்ம்... தெரியும்” என்ற நான் காரை ஓட்டிக் கொண்டே, “என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி” என்று மெதுவாக விசாரித்தேன்.

“அறிவு என்னைப் பத்தி சொல்லி இருக்காருனா... என் தொழில் பத்தியும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே... அப்புறம் இதெல்லாம் அதுல சகஜம்தான்” என, திரும்பி அவளை வருத்தத்துடன் பார்த்தேன்.  

அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் நிரம்பியது. 

அதனை மறைத்தபடி சாலைப்புறம் பார்வையை திருப்பிக் கொண்ட நான் அவளை வீட்டில் இறக்கிவிட, “தேங்க்ஸ்” என்று இறங்கினாள்.

நான் என் கையிலிருந்த பணத்தாள்களை எடுத்து அவளிடம் நீட்டவும், “எதுக்கு வேண்டாம்” என்றாள்.

“பிடி... தேவைப்படும்” என்று அவள் கையில் அழுத்திய நான்,

“இது என்னோட விசிட்டிங் கார்ட்... உடம்பு முழுசா குணமானதும் இந்த நம்பருக்குக் கூப்பிடு” என்றேன்.

“எதுக்கு?” என்று அவள் புரியாமல் விழிக்க, “இனிமே உனக்கு இந்த புழைப்பு வேண்டாம்... இதுவரைக்கும் நீ பட்டதே போதும்... என் கம்பனில நல்ல சம்பளத்தோட உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணி தர்றேன்” என, அவள் என்னை ஆழமாகப் பார்த்தாள்.

“மறக்காம ஃபோன் பண்ணு பிரேமி” என்று சொல்லிவிட்டு நான் காரை இயக்க,

“நீங்க... நீ” என்று சந்தேகத்துடனும் குழப்பத்துடனும் என்னைப் பார்த்தாள்.

“அன்பு... தான்” என்று விட்டு காரில் கிளம்பிய என் கண்களில் கண்ணீர் மீண்டும் பெருகிவிட்டன. பிரேமியின் நிலையைப் பார்த்ததில் என் மனம் கனத்துவிட்டது.

அத்தனை சீக்கிரத்தில் அழுதுவிடாத என் விழிகள் இப்போதெல்லாம் இரக்கத்துடன் கண்ணீர் சுரக்கின்றன. நாளுக்கு நாள் என் உணர்வுகளும் மனமும் இளகிக் கொண்டே வருகிறது.

You cannot copy content