You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Anbin vazhiyathu - Episode 8

Quote

8

Its hard to sleep, When you heart is at war with your mind

செஞ்சூரியன் வானில் வட்ட வடிவமாக ஒளிர்ந்தது. இது போன்ற காலை தரிசனங்கள் கிடைப்பதெல்லாம் அரிதிலும் அரிது.

நான் அந்தக் காட்சியை மெய்மறந்து பார்த்திருக்கும் போதே இரவு முழு சந்திரனாக மிக அருகில் தரிசனம் கொடுத்த மஹாவின் முகம் நினைவுக்கு வந்தது. இயற்கையின் அத்தனை சாராம்சங்களும் பெண்ணின் வடிவமாகின்றன.

காலையிலேயே என்னவோ மனம் கவிதையாக யோசிக்கிறது.

‘என்னாச்சு அன்பு?’ என்ற மஹாவின் குரல் என் காதில் திரும்ப திரும்ப ரீங்காரமிடுகிறது. அவள்தான் அந்த மோசமான கனவிலிருந்து  என்னைக் காப்பாற்றியவள்.   

ஏதேதோ சம்பவங்கள்... அந்தச் சம்பவங்களைத் தொட்டு நிறைய முகங்கள்... நிறைய காட்சிகள்... என சம்பந்தா சம்பந்தமில்லாமல் வந்து போயின. ஆனால் எல்லாமே என் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிஜமாக நிகழ்ந்தவைதான்.

ஆனால் அந்தக் கனவில் அன்பு உயிருடன் வந்ததும் என் கழுத்தை நெறித்ததும் மிகப் பயங்கரமான கற்பனை. அது கனவாக இருந்தாலும் அவனின் பிடியிலிருந்து மீண்டு வருவது அசாத்தியமாக இருந்தது.  

இதெல்லாம் அன்புவின் காதலியான மஹாவை நான் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பதினால் உண்டாகி இருக்கும் குற்றவுணர்வுதான்.

ஆனால் நான் மஹாவைச் சொந்தமாக்கி கொள்ள நினைக்கிறேனா என்ன? முன்பு அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லைதான். ஆனால் நேற்றைய இரவிலிருந்து அப்படி ஒரு எண்ணமும் விருப்பமும் எனக்குள் எட்டிப் பார்க்க தொடங்கி இருக்கிறது.

அவள் என் கன்னங்களைப் பற்றிக் கொண்டு, “என்னாச்சு அன்பு?” என்று பரிவுடன் கேட்ட போது என் உணர்வுகள் விழித்துக் கொண்டன. என்னை உரசிய அவள் தேகத்தின் உஷ்ணத்தில் என் உள்ளமும் உடலும் காம வேட்கையில் தகித்தது.

“என்ன அன்பு... ஏதாச்சும் கெட்ட கனவு கண்டீங்களா?” என்றவள் அக்கறையாகக் கேட்டாள்.

மிகச் சிரமத்துடன் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட நான், “ஆமா கனவுதான்... சாரி... கத்தி உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று நாசூக்காகச் அவள் கரத்தை விலக்கிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தேன்.

“இருங்க... தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவள் அதே பதட்டத்துடன் எழுந்து சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து என்னிடம் அருந்த கொடுத்தாள்.

நானும் வாங்கி பருகிவிட்டு அந்த பாட்டிலைத் திருப்பிக் கொடுக்க அதனை ஓரமாக வைத்துவிட்டு வந்து மீண்டும் என் படுக்கையின் ஓரமாக அமர்ந்தாள். அவள் என் கரத்தைப் பற்றிக் கொள்ளவும் எனக்குப் படபடப்பானது.

 “உங்க வேதனை எனக்குப் புரியுது அன்பு... உங்களுக்கு ஏற்பட்டு இருக்க இந்த இழப்புக்கு என்னால ஆறுதல் சொல்லவோ அதை சரி செய்யவோ முடியாது...  ஆனா ஒன்னு பண்ண முடியும்... உங்களுக்கு சப்போர்டா எப்பவும் நான் உங்க கூடவே இருக்க முடியும்” என்றாள்.

 அவள் சொன்னதற்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்று யோசித்தாலும் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. என் மூளை அவளருகில் சிந்திக்க முடியாமல் தடுமாறியது. இந்தப் பெண் என் மனதை என் உணர்வுகளை என அத்தனையையும் அவள் வசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“சரி படுத்துக்கோங்க அன்பு” என்றவள் எழுந்து கொள்ளவும் நான் நிம்மதியாக மூச்சுவிட்டேன்.  நான் படுத்துக் கொண்டதும் அவள் எனக்கு போர்வையைப் போர்த்திவிட்டு,

“எதைப் பத்தியும் யோசிக்காதீங்க... அமைதியா தூங்குங்க” என்றபடி தன் இடத்தில் சென்று அவளும் படுத்துக் கொள்ள நான் அவசரமாக கண்களை மூடிக் கொண்டேன். ஆனால் மூடிய என் இமைகளுக்குள்ளும் அவள் முகமே வந்து நின்றது.

குரூரத்துடன் அன்புவின் அடையாளத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும் அவசரத்தில் இந்தப் பெண்ணையும் நான் எனக்கான ஒரு உடைமை பொருளாக மாற்றிக் கொண்டு விட்டேன்.

 இப்போது யோசித்தால் அன்புவின் காதலில் நான் அபஸ்வரமாக இடையில் நுழைந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால் அபஸ்வரமாக நுழைந்தது நான் இல்லை. விதிதான்.

அன்புவிற்கு அப்படியொரு கோரமான விபத்து நேர்ந்திராவிட்டால் இவர்கள் காதலுக்கு இடையில் நான் வந்திருக்கப் போவதில்லைதான். ஆனால் அந்த விபத்து நிகழ்ந்தது அன்பு இறந்துபோனது என்று விதி செய்த சதியில் தெரிந்தோ தெரியாமலோ நான் மஹா வாழ்க்கையில் நுழைந்துவிட்டேன்.

இனி மஹா வாழ்வில் அவள் காதலன் அன்புவாக இருக்கப் போவது நான்தான். நான் மட்டும்தான்.

இவ்விதமாக யோசித்துக் கொண்டே உறங்கிப் போனேனா அல்லது விழித்துக் கொண்டிருந்தேனா எதுவுமே எனக்குச் சரியாக நினைவில்லை. அன்புவின் செல்பேசியின் அலாரம் எப்போதும் போல ஆறு மணிக்கு அடித்து என்னை உலுக்கிவிட்டது.

அதற்குப் பிறகு உறங்கவும் முடியாமல் கண் மூடியும் இருக்க முடியாமல் எழுந்து வெளியே நடக்கத் தொடங்கிய நான் காலை சூரிய தரிசனத்திற்குப் பின் மெதுவாக வந்து வரண்டாவில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.

நான் எழுந்து வந்த சில நிமிடங்களில் மஹாவும் எழுந்துவிட்டாள். சமையலறை பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தவள் சில நிமிடங்களில் காலை தேநீருடன் என் முன்னே வந்து நின்றாள்.

எனக்கு ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு அவள் மற்றொரு கோப்பையுடன் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். இருவரும் அமைதியாக அந்தத் தேநீரைப் பருகினோம்.   

தேநீர் அல்லது காபி போன்ற பானங்கள் அருந்தும் இரகம் இல்லை நான். எப்போதாவது தோன்றினால் மட்டுமே குடிப்பேன். ஆனால் அவள் போட்டுத் தந்த தேநீர் அத்தனை சுவையாக இருந்தது. என் நாவும் கூட அவள் சுவைக்குப்  பழக ஆரம்பித்துவிட்டதாகத் தோன்றியது.

அந்தத் தேநீரைப் பருகி முடித்துவிட்டு, “தேங்க்ஸ் மஹா... டீ நல்லா இருந்துச்சு” என,

அவள் மெல்லிய புன்னகையுடன், “நான் இப்போ உங்க வொய்ப் அன்பு... எனக்கு எதுக்கு தேங்க்ஸ்” என்று கேட்கும் போது குட்டிமா அழும் குரல் கேட்டது.

‘அதுக்குள்ள எழுந்துட்டாளே’ என்று முகத்தைச் சுருக்கியவள் அவள் கையிலிருந்த தேநீரை அவசரமாகப் பருகிவிட்டு என் கையிலிருந்த காலி கோப்பையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.

“வொய்ப்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டிருக்கும் போது,

அவ உன் வொய்ப் இல்ல... அன்புவோட வொய்ப்... அதாவது என்னோட வொய்ப் என்று அன்புவின் குரல் ஒலித்தது.

‘என் உயிரை வாங்க வந்துட்டான்டா’ என்று நான் மனதில் நினைத்துக் கொள்ள,

‘நான் உன் உயிரை வாங்கல... நீதான் என் உயிரைப் பறிச்சுக்கிட்ட... என் பேரை என் அடையாளத்தை என் அங்கீகாரத்தை எல்லாத்தையும்... ஆனா என் காதலையும் சேர்த்து நீ பறிச்சுக்கப் பார்க்குறது நியாயம் இல்ல’ என்றவன் குரல் வலியுடன் ஒலித்தது. ஆனால் எங்கிருந்து அவன் குரல் கேட்கிறது என்று புரியவில்லை.    

‘பாவம்டா மஹா... உன்னை ரொம்ப நம்பிட்டு இருக்கா’ மீண்டும் அதே குரல்.

‘நாதாரி... எங்கிருந்து பேசுறான்னு தெரியலயே?’

‘வேற எங்கிருந்துடா நாதாரி... உனக்குள்ள இருந்துதான்’ என்றவன் பதிலடி கொடுக்க, எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.   

 ‘இவன் கூடப் பேசிட்டு இருந்தா எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும்’ நான் கடுப்பாகும் போதே,  

‘இதுவரைக்கும் உனக்குப் பிடிக்கலன்னு நினைச்சிட்டு இருக்கியா?’ என்று கேட்டான்.

‘போடா டேய்’ என்று விட்டால் போதுமென்று உள்ளே வர மஹா தயக்கத்துடன் என்னைப் பார்த்து,  

“எங்கயாச்சும் வெளியே போறீங்களா அன்பு?” என்று கேட்டாள்.

“இல்ல... ஏன்?”  

“அது நான் வீட்டுக்குத் தேவையானது எல்லாம் ஒரு லிஸ்ட் எழுதி வைச்சு இருக்கேன்... அதான்” என்று தயக்கப் பார்வையுடன் அவள் கேட்க,  

“நான் வாக்கிங் போயிட்டு... அப்புறமா வந்து வாங்கித் தர்றேன்... உனக்கு ஒன்னும் அவசரம் இல்லையே” என்று அவளிடம் கேட்டேன்.

“அதெல்லாம் இல்ல... நீங்க வாக்கிங் போயிட்டு வாங்க” அவள் சொன்னதும் அங்கிருந்த புறப்பட்ட நான் சாலையோரமாக நடந்து சென்று சிகரெட் ஒன்றைப் போட்டுவிட்டுத் திரும்பி வந்து குளித்து டிஃபன் சாப்பிட்டு முடித்தப் பின்,

“அந்த லிஸ்ட்டைக் கொடு மஹா... கடைக்குப் போயிட்டு வந்துடுறேன்” என, அவள் ஒரு நீண்ட காகிதப் பட்டியலுடன் பெரிய கட்டைப் பையையும் தந்துவிட்டுப் போய்விட்டாள்.

 ‘என்ன லிஸ்டு இவ்வளவு பெருசா இருக்கு?’ என்று நான் யோசிக்கும் போதே, “அப்பா என்னையும் கூட்டிட்டுப் போங்க” என்று குட்டிமா என் காலை கட்டிக் கொண்டாள்.

“இல்லடா... இப்போ வேண்டாம்... நான் அப்புறமா கூட்டிட்டுப் போறேன்” என,

“அம்மு... அப்பா வந்து அப்புறமா உன்னைக் கூட்டிட்டுப் போவாரு... நீ வா... நீ வந்து டிஃபன் சாப்பிடு” என்று மஹா அழைக்க,

“மாட்டேன்” என்று திட்டவட்டமாக மறுத்தவள் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மஹா எப்படி எப்படியோ கெஞ்சிப் பார்த்துவிட்டாள்.

ஆனால் அவள் அசைந்து கொடுக்கவில்லை. இறுதியாக மஹா என் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்து, “அவளையும் கூடக் கூட்டிட்டுப் போயிட்டு வரீங்களா அன்பு?” என்றாள்.

 ‘சுத்தம்’ என்று மனதில் எண்ணிக் கொண்ட நான், “சரி கூட்டிட்டுப் போறேன்” என்று ஒரு கையில் குட்டிமாவையும் மறு கையில் பையையும் எடுத்துக் கொண்டேன்.

‘குடும்பஸ்தன் ஆகிட்டீங்க மிஸ்டர்’ அன்புவின் எள்ளல் குரல் என்னைத் துரத்திக் கொண்டு வந்தது.

‘இவனை’ என்று கடுகடுத்துக் கொண்டே பைக்கில் குட்டிமாவை அமர வைக்கவும் அவள் குதூகலமாகப் புன்னகைத்தாள். நான் பெருமூச்செறிந்துவிட்டு பைக்கை இயக்கிப் புறப்பட்டேன்.

தெரு முனையில் இருந்த சூப்பர் மார்கெட்டில் வண்டியை நிறுத்திவிட்டு நான் குட்டிமாவை இறக்கிவிட, “அப்பா சாக்கி வாங்கித் தர்றியா?” என்று மழலை மொழியில் என் விரல் பிடித்துக் கொண்டு கேட்க,

“ஓஒ... இதுக்குத்தான் மேடம் வம்படியா என் கூட வந்தீங்களா?” என்று நான் முறைக்க அவளும் மூக்கைச் சுருக்கிக் கொண்டு முறைத்து,

“எனக்கு சாக்கி வேணும்” என்றாள் வம்படியாக.

“வாங்கி தரமாட்டேன்... பல்லு சொத்தையாயிடும்” என்று நான் அழுத்தமாகச் சொல்ல என் விரல் பிடித்துக் கடைக்குள் வந்தவள்,

“எனக்கு சாக்கி வேணும்” சாஷ்டங்கமாகத் தரையில் படுத்துப் புரளத் தொடங்கிவிட்டாள்.

“குட்டிமா... என்ன பன்ற... எழுந்திரு” என்று நான் தலையைப் பிடித்துக் கொள்ள,

“எனக்கு சாக்கி வேணும்” என்று விடாப்பிடியாக அதையே சொல்லிக் கொண்டு புரண்டு புரண்டு அழுதாள். கடையில் பொருள் வாங்க வந்தவர் முதற் கொண்டு வேலை பார்க்கும் ஊழியர்கள் வரை அனைவரும் இவள் செய்யும் அலப்பறையைப் பார்த்துச் சிரித்தனர்.  

“சரி சரி நான் வாங்கித் தர்றேன்” என்று சொன்னதுதான் தாமதம். அவள் அழுகை நின்றுவிட்டது.

“நல்லா பண்றடி நீ” என்று நான் அவள் கைப் பிடித்து தூக்கிவிட்டதோடு அவளுக்கு ஒரு சாக்லேட்டையும் கையில் திணித்துவிட்டு மஹா தந்த நீண்ட பட்டியலைத் திறந்தேன். பாதிக்கு மேல் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதெல்லாம் என்ன பொருள்? எங்கே வைப்பார்கள்?

எப்படியோ அங்கிருந்த உதவியாளரைக் கேட்டு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது குழந்தையின் கையை விட்டுவிட்டேன்.

‘ஐயய்யயோ... இவ எங்க போயிட்டா?’ என்று பதட்டத்தில் கடையைச் சுற்றித் தேட அவளோ சம்மணம் போட்டுக் கீழே அமர்ந்து கொண்டு அங்கே அடுக்கி வைத்திருந்த சோப்புக்களை எல்லாம் கச்சிதமாக கலைத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.

“ஏய் ஏய்... என்ன பண்ற... குட்டிமா... ஓடாதே” என்று நான் அவளைத் தூக்க வரவும் அவள் ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டாள். அவளை எப்படியோ துரத்திக் கையில் பிடித்துக் கொண்டு வாங்கிய சாமான்களைச் சரி பார்த்து பில் கவுன்டருக்குப் போக, அங்கே அனுஷயா நின்றிருந்தாள்.

“அன்பு” என்றவள் என்னைப் பார்த்துப் புன்னகைக்க,

‘இவளா?’ நான் அதிர்ச்சியுற்றேன்.

‘இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்’ பின்னிருந்து அன்பு குரல் கேட்டது.

‘இங்கயும் வந்து தொலைச்சிட்டானா?’ என்று நான் கடுப்பாகும் போது, “மதிகுட்டி” என்று அனுஷயா அழைக்கக் குட்டிமா அவளிடம் தாவிவிட்டாள்.

“உங்க வீட்டுக்குதான் வந்துட்டு இருந்தேன் அன்பு... அப்படியே பாப்பாவுக்கு பிஸ்கட்ஸ் சாக்லேட் வாங்கிக்கலாம்னு இங்க வந்தேன்’ என்றவள் சொல்ல,

“அனு... சாக்கி” என்றாள்.

அனுவைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்த நான் என்னை ஒருவாறு மீட்டு கொண்டு, “இரு அனு... நான் பில் பே பண்ணிட்டு வந்துடுறேன்” என்று சொல்ல,

“சரி நான் வெளியே வெயிட் பண்றேன்” என்றாள்.

நான் அதன் பின் வாங்கிய பொருட்களை எல்லாம் பில் போட்டு கொண்டு வெளியே வர பாப்பாவைத் தூக்கி வைத்துக் கொண்டு அனு நின்றிருந்தாள். 

“சரி உட்காருங்க போலாம்” என்று பையை மாட்டிவிட்டு பைக்கில் ஏறிக் கொள்ள குட்டிமா முன்னே அமர்ந்தாள்.

என் பின்னே அமர்ந்த அனுஷயா, “ஆமா இது அறிவு பைக் இல்ல... இதை ஏன் நீ யூஸ் பண்ணிட்டு இருக்க... உன் பைக் என்னாச்சு?” என்று கேட்டாள்.

‘அவ வக்கீல் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டா’ என்று நினைத்துக் கொண்ட நான், “என் பைக்கை சர்விஸ் விட்டு இருக்கேன்... அதான்” என்று அவள் கேள்விக்குப் பதிலும் சொன்னேன்.

“அறிவோட ஆக்ஸிடென்ட் போது நீ உன் பைக்கை சர்விஸ் கொடுத்திருந்ததா சொன்ன இல்ல... இன்னுமா நீ வாங்கல?”

‘குடைய ஆரம்பிச்சிட்டா?’

“வாங்கணும்... ஆனா அதைப் பத்தின நினைப்பே இல்ல எனக்கு... நீ கேட்டதும்தான் ஞாபகம் வருது” என்று சமாளித்தாலும் உண்மையில் அன்புவின் பைக் எங்கே யாரிடம் இருக்கிறது என்று எனக்கும் தெரியாது. இனிமேதான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

“உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்... ஆக்ஸிடென்ட் ஆன அன்னைக்கு அறிவு ஏன் அங்க வந்தான்? யாரைப் பார்க்க வந்தான்?” அவள் கேள்வியைத் தொடுக்கவும்,

நான் பைக்கைச் சடாரென்று நிறுத்திவிட்டு, “அனு ப்ளீஸ்... நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன்... நீ வேற எதை எதையோ கேட்டு அந்த ஆக்ஸிடென்டைத் திரும்ப ஞாபகப்ப்படுத்தி என் வேதனையை அதிகப்படுத்தாத” என,

‘இங்க என்னடா ஆஸ்கார் அவார்டா கொடுக்குறாங்க... இப்படி நடிக்குற’ என்று அன்புவின் குரல் இடையில் கேட்டது.

‘இவன் வேற... கவுண்டர் கொடுத்தே சாவடிக்குறான்’

“சாரி அன்பு... இப்போ நான் இதைப் பத்திப் பேசி இருக்கக் கூடாது” என்று அனு என் தோளைத் தட்டிக் கொடுக்க நான் தப்பிப் பிழைத்தேன். அதன் பின் நான் அமைதியாக பைக்கைக் கொண்டு போய் வீட்டில் நிறுத்தினேன்.

நான் வாங்கி வந்த பொருட்களை மஹாவிடம் கொடுக்கும் போது அனுஷயா குட்டிமாவைக் கொஞ்சியபடி தூக்கி வந்தாள். அப்போதுதான் அவள் குட்டிமாவின் முழுப் பெயரைச் சொல்ல அதனைக் கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அந்த பெயர்...       

You cannot copy content