You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Anbin Vazhiyathu - Episode 9

Quote

9

Better to be slapped with the truth and than kissed with a lie

மதியழகி. திரும்ப திரும்ப இந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்துக் கொண்டேன்.

மஹாவின் மகள் பெயர் மதியழகி. இந்தப் பெயரை அன்புவிடம் நான்தான் சொன்னேன்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன்பு இருக்கலாம்.   

அன்று நான் ஜன்னலோரமாக சிகரெட்டைப் புகைத்தபடி யோசித்துக் கொண்டிருக்க,

“எப்பப்பாரு சிகரெட்டு... கேன்ஸர் வந்து சாகப் போறடா டேய்”  என்றபடி உடை மாற்றிக் கொண்டே அன்பு கடுப்புடன் சொல்ல,

“கேன்ஸர்தானே... வந்தா வருது... செத்தா சாவுறேன்... உனக்கு என்ன?” என்று விட்டு கண்டும் காணாமல் புகைத்துக் கொண்டே மீண்டும் என் யோசனையைத் தொடர்ந்தேன்.

“அந்த சிகரெட்டை ஓரம் போடு” என்று அன்பு தடாலடியாக வந்து என் வாயிலிருந்த சிகரெட்டை அணைத்துக் கீழே போட்டு, “உன்னை அப்படி எல்லாம் சாக விட முடியாது” என்றான்.

“எதுக்கு? என் கூடவே இருந்து சாக அடிக்கணுமா உனக்கு?” என்று நான் எகத்தாளமாகக் கேட்க,

“ஆமான்டா அப்படிதான்னு வைச்சுக்கோ” என்றவன் சிரித்துக் கொண்டே நான் அமர்ந்திருந்த ஜன்னலுக்கு அருகே வந்து சாய்ந்து நின்று,

“டேய் நான் மஹாவைப் பத்தி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா” என்றவன் ஆர்வமாக ஏதோ சொல்ல ஆரம்பித்தான். 

“உன் மஹா புராணத்தை ஆரம்பிக்காத... நான் சத்தியமா கேட்குற மூட்ல இல்ல”  

“டேய் கேளுடா”

“என்னை டைவர்ட் பண்ணாதே... நான் கதைல வர ஒரு சீனைப் பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்” என்று மீண்டும் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொள்ள அன்பு என் கையிலிருந்த அந்த சிகரட்டையும் பிடுங்கிப் போட்டான்.  

“டேய்” என்று நான் அவனிடம் சீற,

“சரி நீ எதுவும் கேட்க வேண்டாம்... எனக்கு நீ ஒரு நல்ல தமிழ் பேரா சொல்லு... உன்னை டிஸ்டர்ப் பண்ணாம போயிடுறேன்” என்றான்.

“தமிழ் பேரா? யாருக்கு?”

“அது ஒரு குட்டிப் பொண்ணுக்கு”

“யார் அந்தக் குட்டிப் பொண்ணு” 

“அதான் நீ கேட்க மாட்டேன்னுட்டு இல்ல... நீ பேரை மட்டும் சொல்லு”

“சரி... என்ன லெட்டர்ல வேணும்?”

“இதபத்தி நான் யோசிக்கவே இல்லயே” என்றவன் ஒரு நொடி யோசித்துவிட்டு நிமிர்ந்து, “எம்... ஏ... இந்த இரண்டு லெட்டரும் சேர்ந்த மாதிரி” என்றான்.

“ஃபர்ஸ்ட் லெட்டர் எம் லயா?” என்று நான் கேட்கவும்,

“ஆமா” என்றான்.

“ம்ம்ம்... எம்ல தமிழ் பேர் னா... மா மு மே... மை... ஆ... மைவிழி” என்றேன்.

“இதுல ஏ... லெட்டர் வரவே இல்லையே”

நான் சில நொடிகள் தீவிரமாக யோசித்த பின், “ம்ம்ம்... ஒரு பேர் இருக்கு... நீ சொன்ன எம்மும் வரும்... ஏவும் வரும்” என அன்பு ஆர்வமாக, “என்ன பேருடா?” என்று கேட்டான்.

“மதியழகி... பேர் எப்படி?” என்று நான் சொன்னதும் அவன் முகத்தில் அத்தனை பிரகாசம்.

“தேங்க்ஸ்டா அறிவு” என்று பொங்கிய சந்தோஷத்தில் அன்பு அப்படியே என்னைக் கட்டியணைத்துக் கொண்டான்.

இன்றும் அந்த நாளை என்னால் மறக்க முடியாது. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த போது மதிக்கு இரண்டு வயதாவது இருக்கும். எல்லாவற்றிற்கும் மேல் அன்பு மஹாவைப் பார்த்துப் பழகிக் கிட்டத்தட்ட ஒன்று ஒன்றரை வருடங்களுக்குள்ளாகதான் இருக்கும். எப்படி யோசித்துப் பார்த்தாலும் மதியழகி என்பவள் புரியாத ஒரு குழப்பமாக இருந்தாள்.

சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கும் கதையில் இடைப்பட்ட சில காகிதங்கள் மட்டும் கிழிந்திருந்தது போன்ற உணர்வு. 

நான் இவ்வாறாக யோசித்துக் கொண்டிருக்கும் போது அனுஷயா, “டேய் அன்பு... அன்பு” என்று என்னை உலுக்கவும்தான் நான் சுயநினைவு பெற்று அவள் புறம் திரும்பினேன்.

“என்ன அன்பு... நான் கூப்பிட்டுட்டே இருக்கேன்... நீ எங்கேயோ பார்த்துட்டு இருக்க”

“இல்ல... அது நான் வேறெதோ யோசிச்சிட்டு இருந்தேன்”

“எனக்குப் புரியுது... நீ ரொம்ப அப்செட்டா இருக்கன்னு... ஆனா இதைப் பத்தி நான் உன்கிட்ட பேசித்தான் ஆகணும்”

“என்ன?”

“அதான்... அறிவோட ஆக்ஸிடென்ட் கேஸ்” என்றவள் சொல்ல நான் அவளைப் பார்த்து, “ம்ம்ம்” என்றேன். என்ன சொல்லப் போகிறாள் என்று எனக்குத் திக்திக்கென்று இருந்தது.

“ஆக்சுவலி... டிரைவர் மாட்டிட்டான்... ஆக்ஸிடென்டா இருந்தாலும் இது முழுக்க முழுக்க டிரைவரோட தப்புனாலதான் நடந்திருக்கு.... கேஸ் க்ளியரா இருக்கு... நீ இந்த டாகுமென்ட்ஸ்ல எல்லாம் சைன் போட்டனா மேல ப்ரோசீட் பண்ணலாம்” என்று தன் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்தாள். அவற்றை எல்லாம் வாங்கிப் பார்த்து அதற்கு நான் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க,

“ஆ... அன்பு... உன்னோட ஐடி கார்ட் காபி ஏதாவது கொடேன்” என்றவள் மேலும் கேட்க,  

“இப்பவே வேணுமா அனு... நான் அப்புறமா வேணா ஆஃபீஸ் வந்து கொடுக்குறேனே” என்றேன். 

“இதுக்குன்னு எதுக்கு நீ ஆஃபிஸ் வந்துட்டு... நீ பொறுமையா எடுத்துக் கொடு... நான் வெயிட் பண்றேன்” இவள் இன்று என்னை ஒரு வழி செய்யாமல் போகமாட்டாள் போல என்று யோசிக்கும் போதே, மஹா தேநீர் கோப்பையை எடுத்து வந்து அனுவிடம் கொடுத்தாள்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அன்புவின் பர்ஸ் அவன் உடலுடன் சிதைந்துவிட்டதாக அந்தப் பிணவறை ஊழியன் சொன்னது நினைவுக்கு வந்தது.

அவனுடைய பர்ஸில் கொஞ்சம் பணம் டெபிட் கார்ட் ட்ரைவிங் லைஸன்ஸ் தவிர வேறெதுவும் இருந்ததில்லை. அதுவும் கூட கலர் ஜெராக்ஸ் லைஸன்ஸ லேமினேட் செய்துதான் வைத்திருப்பான். ஒரிஜினல்கள் எல்லாம் அவனுடைய பைல்களில்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அலமாரிகளில் தேடினேன். ஃபைல் கிடைக்கவில்லை.  

‘எங்கே வைத்திருப்பான் எங்கே வைத்திருப்பான்?’ என்று எங்கெங்கோ தேடிவிட்டு ஓய்ந்து அமர்கையில் சிவா தன் வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுத்த அன்புவின் லேப்டாப் பை நினைவுக்கு வந்தது.

அதனை எடுத்து திறந்த போது அவனின் மடிக்கணினியுடன் அத்தனை ஐடி ப்ரூப்கள் மற்றும் மதிப்பெண் தாள்களின் அசல்கள் நகல்கள் அடங்கிய ஃபைல் ஒன்றுவிடாமல் உள்ளே இருந்தன.

‘தப்பிச்சேன் டா சாமி’ அதிலிருந்து இரண்டு நகல்களை எடுத்து சென்று அனுவிடம் கொடுக்க,

“இது போதும்” என்றவள் அதனைத் தன் பையில் வைத்துக் கொண்டபடி மஹாவைப் பார்த்தவள்,

“சீக்கிரம் உங்க மேரேஜ் செர்டிபிக்கேட் வந்துடும்... அப்புறமா நீ கேட்ட மாதிரி மதியழகியை நீயும் அன்புவும் லீகலா அடாப்ட் பண்ண மாதிரி ஒரு டாகுமென்ட் ரெடி பண்ணிடலாம்” என்றாள்.

‘அடாப்ஷனா?’ இவள் என்ன சொல்ல வருகிறாள் என்ற குழப்பத்துடன் நிற்க மஹா என்னைப் பார்த்து, “பாப்பாவை இந்த வருஷம் ஸ்கூலில் சேர்க்கணும் இல்லையா... அதான்” என்றாள்.

இவர்கள் பேசிக் கொள்வது எதுவும் விளங்கவில்லை. நான் இதில் எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட அனு எழுந்து நின்று,

“சரி... நான் கிளம்பறேன் அன்பு... என்னை நீ கொஞ்சம் பஸ் ஸ்டான்ட்ல டிராப் பண்ணிடுறியா?” என,

“ம்ம்ம் சரி” என்று நான் வாயிலுக்குச் செல்ல,

“பை மதிக்குட்டி” என்று கொஞ்சியவள், “பை மஹா” என்று விடைபெற்றுக் கொண்டு வந்து பைக்கில் ஏறினாள்.

நான் அவளிடம் எதுவும் பேச்சுக் கொடுக்கக் கூடாது என்று அமைதியாக ஓட்டிக் கொண்டு வர அவளும் அதிசயமாக தன் திருவாயை மூடிக் கொண்டு வந்தாள். அவளுக்கு ஏதாவது சந்தேகம் வந்திருக்குமோ என்று எனக்கு உள்ளுர தடத்தடத்தது.

அவளைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கியதும் என் முகத்தை இரக்கத்துடன் பார்த்தவள், “என்னவோ உன்னை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு அன்பு... நீ இந்த இழப்புல இருந்து சீக்கிரமா கடந்து வரணும்” என்று வருத்தத்துடன் சொன்னாள்.

‘அவளுக்குச் சந்தேகம் வரல’ என்று எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்ததில், “ம்ம்ம்” என்று மெல்லிய தலையசைப்புடன் அவளைப் பார்க்க,

“அப்புறம் நீ கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ண பிறகு கிரி சாரைக் கூப்பிட்டு பேசு... அவர் உன்னை நேர்ல பார்த்து ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னாரு” என,

“சரி” என்றேன்.

அதன் பின் அவள் செல்ல வேண்டிய பேருந்து வந்ததும் அங்கிருந்து புறப்பட்டுவிட பைக்கில் திரும்பிய எனக்கு மீண்டும் மதியழகியைப் பற்றிய யோசனை வந்தது. அனு சொன்னது போல அடாப்ஷன் ப்ரோசீஜர் செய்ய வேண்டுமென்றால் மதி மஹாவின் மகள் இல்லையா?

ஆனால் மதிக்கு மஹாவின் முக ஜாடை இருந்தது. ஒரு வேளை இவர்கள் இருவருக்கும் இடையில் நெருங்கிய உறவு இருக்கலாம்.

அன்று அன்பு என்னிடம் இதைப் பற்றிதான் ஏதோ சொல்ல வந்திருக்கிறான். நான்தான் கேட்காமல் விட்டிருக்கிறேன்.

அடுத்த வந்த வாரத்தில் அன்புவின் பைக்கை இரவல் வாங்கிச் சென்ற அவன் நண்பன் கணேஷ் அதனைத் திருப்பிக் கொண்டு வந்து தந்துவிட்டுத் துக்கம் விசாரித்துவிட்டுச் சென்றிருந்தான்.

அன்று அன்பு தன் பைக்கை எடுத்துச் சென்றிருந்தால் அப்படியொரு கோரமான விபத்து அவனுக்கு நிகழ்ந்திருக்காது. யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் உடனடியாக உதவி செய்யும் அவனது நற்குணம்தான் அவன் உயிரைக் காவு வாங்கிவிட்டதோ என்று தோன்றியது.

எப்படியோ பைக் பிரச்சனை முடிந்திருந்தது. அதன் பிறகு அன்புவின் வேலை விஷயத்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசனை வந்தது. அது விஷயமாக அவன் லேப்டாப்பை இயக்கினேன். இருவரும் பொதுவான கணினி பயன்படுத்திய காலத்திலிருந்து எப்போதும் எங்கள் கடவுச் சொல்கள் எங்களுடைய பிறந்த நாள்தான்.

என்னுடைய வங்கி அட்டையை அவனும் அவனுடையதை நானும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொள்வது வழக்கம் என்பதால் எனக்கு அதிலும் பெரிதாகச் சிக்கல்கள் எதுவும் உருவாகவில்லை. அன்புவின் கார்ட் தொலைந்துவிட்டதாகச் சொல்லி புது கார்ட் ஒன்றும் வங்கியில் அப்ளை செய்து வாங்கிவிட்டேன்.

அன்று வராண்டாவில் அமர்ந்தபடி அன்புவின் லேப்டாப்பை இயக்கி அவன் அனுப்பிய மின்னஞல்கள் மற்றும் அவனுக்கு வந்த மின்னஞ்சல்கள் அனைத்தையும் நிதானமாகத் திறந்து ஒன்று ஒன்றாக படித்தேன். பெரும்பாலும் எல்லாமே அலுவலகம் சம்பந்தப்பட்டதாக இருந்தது.

 அதிலும் மிக முக்கியமானதாக அவன் இறப்பதற்கு இரண்டு வாரம் முன்பு அவன் வேலை செய்த நிறுவனத்திற்கு ரெசிக்னேஷன் அனுப்பியிருக்கிறான். ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவன் தெரிந்தே செய்திருப்பானா?

அந்த யோசனையில் நான் அமர்ந்திருக்கும் போது செல்பேசி அடித்து என் சிந்தையைக் கலைக்க எடுத்துப் பார்த்தேன். கிரி அங்கிள் பெயர் ஒளிரவும் அழைப்பை ஏற்றேன்.

“சொல்லுங்க அங்கிள்”

“இன்னைக்கு நீ ஃப்ரீயா இருக்கியா அன்பு? வீட்டுக்கு வந்து உன்னைப் பார்த்துக் கொஞ்சம் முக்கியமா பேசணும்” என்று சொல்ல அன்று அனு சொன்னது நினைவுக்கு வந்தது. என்ன சொல்லப் போகிறார்? என்று லேசான பதட்டம் எட்டிப் பார்த்தது.  

“ஆமா போன வாரம் அனு வந்த அன்னைக்கே நீங்க ஏதோ பேசணும்னு சொன்னா... நான் வீட்டுலதான் இருக்கேன்... வாங்க அங்கிள்” என்றேன்.

“ஓகே... ஒரு லெவனோ கிளாக் போல வரேன்” என்று அழைப்பைத் துண்டிக்க மடிக்கணினியைப் பார்த்தேன். நேரம் மணி பத்து இருபது என்று காட்டியது.

‘சரி அவர் வர்றதுக்குள்ள குளிச்சிட்டு வந்துடுவோம்’ என்றபடி மடிக்கணினியை மடக்கி எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல, மதிக்குட்டி முகப்பறை சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு டிவியில் ரைம்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அமர்ந்திருக்கும் விதத்தைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு அறை கதவைத் திறக்க, உள்ளே மஹா குளித்துவிட்டு ஈரத்துடன் உடலை அரைகுறையாக மறைத்தபடி நின்றிருந்தாள்.

அந்த நொடியே திகைத்து மீண்டு பின் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, “சாரி” என்று கதவை மூடிய பிறகும் என் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது. பெண்களின் நிர்வாணம் எனக்குப் புதிதல்ல.   

பெண்ணுடல்கள் இயற்கையின் ஆச்சரியங்களில் ஒன்று. அது தரும் போதை அலாதியானது. அதிலும் இளம் பெண்கள் அழகான ஓவியங்கள். அவர்களுள் மஹா பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட ஓவிய பாவையாகத் தோன்றினாள்.

 ஒரு நொடிதான் எனினும் பல கணங்களின் அமைதியைச் சீர்குலைக்கும் அழகல்லவோ அது.

அவளை அப்படி பார்த்த மாத்திரத்தில் கல்மிஷமாக ஏதேதோ சிந்தனைகள் மனதில் புகுந்து கட்டுப்பாட்டில் இருந்த என் உணர்வுகள் மீது கல்லெறிந்தன.

நான் என்னை மெது மெதுவாக சமன்படுத்திக் கொண்டிருக்கையில் அறை கதவு திறக்கப்பட்டது. ஈரக்கூந்தலில் துண்டைக் கட்டிக் கொண்டு கதவைத் திறந்து விட்டவளின் பொன்னிற தேகத்தை ஊதா நிற சுடிதார் கச்சிதமாக மூடி மறைத்திருந்தது.

“சாரி மஹா... நீ உள்ளே ட்ரஸ் பண்ணிட்டு இருக்கேன்னு தெரியாம” என்று தயங்கியபடி அவளிடம் சொல்ல,  

என்னைப் பார்த்தும் பார்க்காமலும் சங்கடமாகத் தலை தாழ்த்திக் கொண்டு நாணியவள் வெள்ளை நிறத் துப்பட்டாவை எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொண்டு, “நீங்கதானே... பரவாயில்ல” என்று மெலிதாகப்  புன்னகைத்தாள். அவளது செந்தாமரை இதழ்கள் அழகாய் மலர்ந்தன.   

 அவளின் அந்த நாணமும் புன்னகையும் எனக்குள் போதையேற்ற அறையை விட்டு வெளியே செல்ல போனவள் முன் நான் கரத்தைக் குறுக்கே நீட்டித் தடுத்து, “அப்போ பரவாயில்லயா?” என்று கேட்டேன் கல்மிஷமான பார்வையுடன்.  

அவள் புருவத்தைச் சுருக்கி என்னைப் பார்த்தாள். இன்னும் அவள் நெற்றியிலும் வளைவான கழுத்தோரங்களிலும் நீர்திவலைகள் வழிந்தோட கிறக்கத்துடன் அவற்றை பார்த்துக் கொண்டே,   

“உன்கிட்டதான் கேட்குறேன்... பரவாயில்லயா?” என்று சீண்டலாகக் கேட்டேன்.

“நான்... நீங்க சாரி கேட்டதுக்குதான் பரவாயில்லன்னு சொன்னேன்” என்றாள் உள்ளே போன குரலில். அவள் பதட்டமும் நாணமும் இன்னும் இன்னும் என்னை உசுப்பிவிட்டது.

“நீ அப்படி சொல்லல... நீங்கதானே... பரவாயில்லன்னு சொன்ன” என்ற நான் அவளைப் பார்வையால் அங்கம் அங்கமாக அளக்கவும் அவள் முகம் சிவந்தது.

“நீங்க என் ஹஸ்பென்ட் அந்த நோட்ல சாதாரணமா சொன்னேன்... பரவாயில்லன்னு” என்றவள் சொன்ன நொடி,

 “அப்போ நான் பார்த்தா பரவாயில்லன்னுதானே அர்த்தம்” என்று கேட்டதும் அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவளின் அந்த மௌனத்தில் தனி இரசனை இருந்தது எனக்கு.

நான் நின்றபடி பின்னிருந்த அறை கதவையைத் தள்ளி மூடிவிட்டுத் தாபத்துடன் அவளை நெருங்க, “வெளியே குட்டிமா இருக்கா அன்பு” என்று பதறி விலகப் பார்த்தாள். ஆனால் நான் விடவில்லை.

 “ஒன்னும் பிரச்சனை இல்ல... அவ சமத்தா ரைம்ஸ் பார்த்துட்டு இருக்கா” என்றபடி அவளை இடையோடு வளைத்து அருகில் இழுத்து, “ஒரே ஒரு கிஸ் மட்டும் பண்ணிட்டு விட்டுடுறேன்” என்றேன்.   

மறுப்பேதும் சொல்லாமல் அவள் விழிகள் மூடிக் கொள்ள என் உள்ளம் துள்ளியது. அவளை முத்தமிட்டு விட வேண்டும் என்ற அவசரத்தில் அவள் அதரங்களை என் அதரங்கள் தொட்ட கணம்,

‘அவ என் லவர்டா’ என்ற அன்புவின் குரல் என் செவிப்பறையில் அறைந்தது. அந்த நொடியே நான் மிரண்டு மஹாவின் மீதான என் பிடியை உதறிவிட்டு விலகி வந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கே  யாரும் இல்லை.

அது எனக்குள் எப்போதும் கேட்கும் அன்புவின் குரல். ஆனால் அந்தக் குரலிலிருந்த ஆவேசம் என் தாப உணர்வை அடித்துச் சிதறடித்தது.

ஏமாற்றத்துடன் விழிகளைத் திறந்த மஹா என்ன ஏதென்று புரியாமல் என்னை நோக்க நான் உடனடியாக, “மதிக்குட்டி அழற மாதிரி கேட்டுச்சு” என்று என் பதட்டத்தை மறைத்துக் கொண்டு சமாளித்தேன்.

அவசரமாகக் கதவைத் திறந்துச் சென்றவள் மீண்டும் என்னிடம் திரும்பி, “அவ அழ எல்லாம் இல்ல... டிவி பார்த்துட்டுதான் இருக்கா” என,

“இல்ல எனக்கு அப்படி கேட்டுச்சு” என்றதும் மஹா என்னை வித்தியாசமாகப் பார்த்தாள். அவள் என்ன நினைத்துக் கொண்டாளோ?

அவளது கூர்மையான விழிகளைத் தவிர்க்க எண்ணி, “ஐயோ நான் மறந்தே போயிட்டேன்... கிரி அங்கிள் வரன்னு சொன்னாரு... நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்று அவசர அவசரமாகத் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டேன்.

உடைகளைக் களைந்து ஷவரில் நனைந்ததும் மனம் கொஞ்சம் சமன்பட்டது. என் பதட்டமும் குறைந்ததும் குளித்து முடித்து உடைமாற்றி அறையை விட்டு வெளியே வர கிரி அங்கிள் சோஃபாவில் அமர்ந்திருந்தார்.

“எப்போ வந்தீங்க அங்கிள்” என்று நான் புன்னகை முகமாகக் கேட்டபடி நடந்த போது காலில் பென்சில்கள் தென்பட்டன.

மதிக்குட்டி டிவி பார்ப்பதை விட்டுவிட்டு காகிதத்தில் வரைவதாகச் சொல்லிக் கொண்டு வண்ண பென்சில்களைத் தரை முழுவதுமாகக் கிறுக்கியதோடு வழி எல்லாம் இறைத்து வைத்திருந்தாள்.

“மஹா இங்க பாரு... இவ என்ன பண்ணி வைச்சு இருக்கான்னு” என்று குரல் கொடுத்துக் கொண்டே கீழே கிடந்த பென்சில்களை எல்லாம் எடுத்தேன்.

“வீட்டுல குழந்தைங்க இருந்தாலே இதெல்லாமே சகஜம்தானே  அன்பு... ஹரி வளர வரைக்கும் எங்க வீடும் இப்படிதான் இருக்கும்” என்று கிரி அங்கிள் தன் மகன் புராணத்தைப் பேச, அவற்றை கேட்டுக் கொண்டே அந்த இடத்தைச் சுத்தம் செய்தேன்.

“நான் வரையணும்” என்று மதிகுட்டி அடம் பிடிக்க ஆரம்பிக்க,

“நீ வரைஞ்ச வரைக்கும் போதும்மா தாயே” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்த மஹா அங்கிள் குடிக்க ப்ளேக் டீயைத் தந்துவிட்டு,

“என்னடி பண்ணி வைச்சு இருக்க?” என்று மகளையும் அதட்டி உள்ளே தூக்கிச் சென்றாள்.

நான் அருகே இருந்த சோஃபாவில் அமர அவர் தேநீரைப் பருகாமல் ஓரமாக வைத்துவிட்டு என்னை யோசனையாகப் பார்த்தார்.

“என்ன விஷயம் அங்கிள்? சொல்லுங்க” என்று நான் கேட்க,

“நீ எப்போ உங்க அப்பா வீட்டுக்கு வரப் போற அன்பு?” என்றதும் நான் அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் அவரைப் பார்த்தேன்.

“என்ன அன்பு யோசிக்குற? இது உன் முடிவுதானே?”

 ‘எது... அந்த வீட்டுக்குப் போவது என்னுடைய முடிவா? செத்தாலும் அந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய முடிவு... ஆனா அன்பு என்னை அவமானப்படுத்திய அந்த வீட்டிற்கு மீண்டும் திரும்பிப் போவது என்று முடிவெடுத்தானா?’

என்னால் நம்ப முடியவில்லை.

You cannot copy content