You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathai Alla - 29

Quote

29

நிலைகுலைந்த அறை

வீரா அவன் மீதான கோபத்திலும் தங்கைகளைக் காணவில்லை என்ற தவிப்பிலும்தான் சாரதியை நோக்கி அத்தகைய வார்த்தையை உதிர்த்துவிட்டாளே ஒழிய, அந்த வார்த்தை அவனை எந்தளவிற்குத் தாக்கியிருக்கும் என்பதை உணரும் நிலையில் அவள் இல்லை.

இரவிலிருந்து அவள் மீது அவன் தேக்கி வைத்திருந்த கோபம் அவனுக்குள் கனன்று கொண்டிருக்க... அவள் இப்போது பேசிய வார்த்தை அவனுக்குள் தீமூட்டிவிட்டது. அவனின் ஈகோவை அழுத்தமாய் தூண்டிவிட்டது.

அவனுக்கே உரித்தான... தான் என்ற கர்வத்தையும் ஆணவத்தையும் சீண்டிப்பார்த்துவிட்டது. அவனின் பொறுமையின் எல்லைக் கோடுகள் தகர்ந்துபோயின. நொடிப் பொழுதில் அந்த வார்த்தைக்கான எதிர்வினையை அவள் மீது காட்டிவிட்டான்.

வீராவின் இடையை வளைத்து அவளைத் தன்புறம் இழுத்தவன் அவள் எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் கூடத் துளியளவிலும் வாய்ப்புத் தராமல் தான் நினைத்ததை அரங்கேற்றிவிட்டான்.

எல்லா ஆண்களும் பிரயோகப்படுத்தும் அதரபழைய ஆயுதம்தான். ஓர் பெண்ணை பலவீனப்படுத்த அவளை உடலளவில் காயப்படுத்துவது...

சாரதியும் அதையேதான் செய்தான். அவள் அசையவே முடியாதளவுக்காய் அவன் கரங்கள் அவளைப் பிணைத்திருந்தன. நடந்தவற்றை அவள் கிரகித்துக் கொள்ளும் முன்னரே அவன் அவள் அதரங்களை தம் இதழ்களால் மூழ்கடித்துவிட்டான் .

அவன் தந்த முத்தத்தில் காமமோ காதலோ துளியளவும் இல்ல... அவள் பேசிய வார்த்தைக்கான அவனின் பதிலடி... அவ்வளவே!

தன் கோபத்தைத் தீர்த்துக்கொண்ட மறுகணம் அவளை அவன் விலக்கித் தள்ள, அதிர்ச்சியில் அவளின் உணர்வுகள் யாவும் சிலநொடிகள் வெறுமையானது. ஆனால் சில நொடிகள்தான் அந்த மௌனமும் வெறுமையும் அவளை ஆக்கிரமித்திருந்தது.

அதன் பிறகு அவளை ஆளுமை செய்யத் தொடங்கியது அவளின் கோபம் மட்டுமே. தன் உதட்டை அழுந்தத் துடைத்தபடி... அவனை அடங்கா ஆவேசத்தோடு நெருங்கி அடிக்க கை ஒங்க, அவனின் வலிய கரம் அவள் கரத்தைப் பிடித்து விட்டது.

அவள் முகம் கோபத்தில் சிவக்க அவளின் முகபாவனைகளை ஆழ்ந்து ரசித்துக் கொண்டே,

"என்ன பேச்சு பேசுனடி நீ நேத்து... என்னையே கடுப்பேத்தி பார்க்குற... ஹ்ம்ம்... இந்த சாரதி என்ன... உங்க ஏரியால இருக்கிற லோக்கல் பசங்க மாதிரின்னு நினைச்சியா... வகுந்துருவேன்" என்று மிரட்டலாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"சார்... காபி" என்று அறை வாசிலில் முத்து வந்து நின்றான்.

அந்த நொடி அவள் கரத்தை விடுவித்து அவளை முறைத்துக் கொண்டே, "வைச்சிட்டு போ" என்று சாரதி முத்துவிற்கு பதிலுரைக்க,

முத்து உள்ளே நுழைந்து காபி கப்பை மேஜை மீது வைத்துவிட்டுச் செல்ல, அந்த சில நொடிகள் அந்த அறையே நிசப்தமானது. ஆனால் வீராவின் கோபம் அடங்கவே இல்லை.

வீரா மூச்சிறைக்க அவனை முறைத்துக் கொண்டு நிற்க, அவனோ அவளை ஏறஇறங்க பார்த்து விட்டு திறந்திருந்த கதவை மூடி தாளிட்டுவிட சென்றான். அவன் கதவை மூடும் போதே... நைட் லேம்ப் ஒன்று அவன் தலைக்கு குறியாய் வர,

அவன் சற்று விலகியதால் அது கதவின் மீது பட்டு நொறுங்கி வீழ்ந்தது. மயிரிழையில் உயிர் தப்பித்தான் என்றே சொல்ல வேண்டும். அவன் என்னவென்று உணர்வதற்கு முன்னதாகவே வீரா ரௌத்திரமாய் மாறி அந்த அறையின் பொருட்களை அவன் மீது சரமாரியாய் வீச,

"ஏ லூசு... நிறுத்துடி" என்று அவன் சொல்லியபடி அவள் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கொண்டிருந்தான்.

"பொறுக்கி... என் தங்கச்சிங்க எங்கடா? ஒழுங்கா சொல்லிடு... இல்ல என் கையாலேயே நீ செத்திருவ" என்றவள் ஆவேசமாய் கத்திக் கொண்டே சகட்டு மேனிக்கு கையில் கிடைத்தவற்றையெல்லாம் தூக்கி வீச,

"என்னை கொன்னுட்டா எப்படிறி உன் தங்கிசிங்க வருவாங்க" என்றவன் கேட்டுக் கொண்டே அவள் தாக்குதல்களை சமாளிக்க,

அது அவனுக்கு உண்மையிலேயே ரொம்பவும் சிரமமான காரியமாகத்தான் இருந்தது. அப்போது அவள் கையில் அவன் லேப்டாப் சிக்கிவிட,  "ஏ அதை கீழே போட்டுறாதடி" அவன் பதறிக் கொண்டு அதனைப் பறிக்க முற்பட,

"அப்படின்னா நீ என் தங்கச்சிங்க எங்கன்னு சொல்லு" என்றாள் ஆக்ரோஷமாக!

"வேண்டாம் வீரா... அத குடுத்திடு" என்று அவன் தன் லேப்டாப்பை சேதாரமில்லாமல் அவளிடமிருந்து காப்பற்றப் போராட, அவளும் அதனை பிடிவாதமாய் தூக்கி உடைப்பதிலேயே குறியாய் இருந்தாள்.

அவன் அதற்கு மேல் அவளை சமாளிக்க முடியாமல் அவளை லேப்டாபோடு படுக்கையில் தள்ளிவிட, அவள் சுதாரித்து எழுந்து கொள்ளும் முன்னர் தன் லேப்டாபை அவன் பலவந்தமாக பிடுங்கிவிட்டான்.

அதனை ஓரமாய் வைத்தவன் அவள் சுதாரித்து எழுந்து கொள்ளும் முன்னர் அவள் மீது பாய்ந்து அவள் கரங்களை தம் கரங்களால் அழுந்தப் பிடிக்க, அவளுக்கு மிரட்சியானது. என்ன முயற்சித்தும் அவன் பிடிக்குள் இருந்து அவளால் வெளி வர முடியவில்லை.

"உன் தங்கச்சிங்க எங்கன்னு உனக்கு தெரியணும் அவ்ளோதானே?!" என்று அவன் கோபம் பொங்க ஆவேசமாய் கேட்க,

அவனிடம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பயத்தை தாண்டி அவள் முகத்தில் ஆவலே அதிகரித்தது.

அவன் மேலும், "பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல அவங்க அட்மிஷன்காக பேசியிருந்தேன்... இன்னைக்கு வர சொல்லி இருந்தாங்க... அதான் நதியாவையும் அமலாவையும் அழைச்சிட்டு போனேன்... போதுமா?" என்றுரைக்க அவள் அவனைக் குழப்பமுற பார்த்து,

"ஸ்கூலுக்கு போயிருக்காங்களா?" என்று வியப்புற்றாள்.

"பல்பு... இப்பதான் ப்ரைட்டா எரியுது போல" என்க,

"இத முதல்லயே சொல்லித் தொலைச்சிருகலாம்ல... அதை விட்டுட்டு"

"சொல்லியிருப்பேன்... ஆனா நீ கொஞ்சநஞ்சமா பேசுன... அதான் உன்னை கடுப்பேத்திப் பார்க்கலாம்னு" என்று சொல்லிக் கோபத்தோடு அவன் கரங்கள் ரொம்பவும் இறுக்கமாய் அவளின் மணிக்கட்டுகளின் மீது அழுத்த, அவளுக்கோ நரம்புகள் துண்டிக்கும் அளவுக்காய் வலி!

"ஆஅ..." என்று அலறியவள், "கையை விடுய்யா வலிக்குது" என்றாள். அவனோ அவள் வலியை பொருட்படுத்தாமல்,

"என்னடி நினைசிட்டிருக்க உன் மனசுல... நீ பாட்டுக்கு எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைச்சுட்டிருக்க... இதெல்லாம் என்ன? உங்க அப்பன் சம்பாதிச்சதாடி"

"இப்ப எதுக்கு அந்த ஆளைப் பத்தி பேசுற... அவன் ஒழுங்கா இருந்திருந்தா நான் ஏன்டா உன்கிட்டலாம் வந்து இப்படி அசிங்கப்படுறேன்... அவன் உனக்கு மேல தறுதல "

"ஏய் என்ன திமிரா?... ஓவரா வாய் நீளுது... அதுவும் என் தயவில எனக்குக் கீழே இருக்கும் போதே" என்று சொல்லி சீற்றமாய் அவளைப் பார்க்க அவள் பார்வையிலும் அனல் தெறித்தது.

"மறந்துட்டியா... நீதான் என் தயவுல வாழ்ந்திட்டு இருக்க அன்னைக்கு மட்டும் நான் உன்னைக் கண்டுக்காம போயிருந்தேன்னு வைச்சுகோ... உன்னை ஒரு பிடி சாம்பலாக்கி சங்கு ஊதிருப்பானுங்க" என்றவள் சொல்ல சாரதியின் முகத்தில் அவனை அறியாமல் புன்னகை ஒளிர்ந்தது.

"உன்னயெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா டி"

"ஹ்ம்ம் சொல்றேன்... என் கையை உடு"

"மாட்டேன்... நீ என் ரூமை அலங்கோலப்படுத்துன இல்ல... இப்போ நான் உன்னை அலங்கோலப்படுத்தப் போறேன்" என்று சொல்லி அவன் விஷமமாய் சிரிக்க,

"வேணாம்... நான் வேணா எல்லாத்தையும் திரும்ப அடுக்கி வைச்சிடுறேன்" என்றவள் முகத்தில் லேசாய் அச்சம் படர,

"உடைச்ச பொருளெல்லாம் என்னடி கணக்கு ?"

"உனக்கு அந்த பொருளெல்லாம்தான் பெருசா... என்ன மாதிரி மனுஷன்யா நீ.. உடைஞ்ச அந்த பொருளுக்கெல்லாம் வலிக்காது... ஆனா எனக்கு வலிக்கும்... என் தங்கசிங்களுக்கு இன்னாவோ ஏதோன்னு நான் ஒரு நிமிஷம் செத்துப் பிழைச்சேன்... ஹ்ம்.. இதெல்லாம் உன்கிட்ட போய் சொல்றேன் பாரு... உனக்கெல்லாம் அது புரியாது... அண்ணன் தங்கச்சி அம்மா அப்பான்னு வாழ்ந்திருந்தா தானே என் வலி உனக்குப் புரிஞ்சிருக்கும்... பணத்தை கட்டின்னு அழற உனக்கு பாசத்தை பத்தியெல்லாம் இன்னா புரியபோது" என்றவள் இப்போது வார்த்தைகளைக் கொண்டு அவன் உணர்வுகளை சரமாரியாய் தாக்கிவிட,

இம்முறை அவன் தப்பிக்க முடியவில்லை. ஆழமாய் காயப்பட்டவன் அந்த நொடியே அவளை விட்டு விலகி நின்று படுகோபமாய்,

"ஆமான்டி... எனக்கு பணம்தான் முக்கியம்... அது மட்டும்தான் முக்கியம்... மத்த எல்லாமே எனக்கு ரெண்டா பட்சம்தான்... நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ... என் கூட இருந்தன்னா... நீயும் உன் தங்கச்சிங்களும் சந்தோஷமா பத்திரமா இருக்கலாம்... இல்லன்னு வைச்சுக்கோ... உன்னையும் உன் தங்கிச்சிங்களையும் கூறு போட்டு வித்துட்டுப் போயிடுவானுங்க... பாத்துக்கோ... அங்கே உன் பாசத்துக்கெல்லாம் மதிப்பே கிடையாது" என்று பொறிந்து தள்ளிவிட்டு அறைக் கதவை திறந்து அவன் வெளியேறிவிட்டான்.

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபடி எழுந்தம்ர்ந்தவள் மெல்ல அவள் கரத்தினை தடவி கொண்டே நிலைகுலைந்து கிடந்த அந்த அறையை நோட்டமிட்டாள். அவர்களின் உறவின் பரிதாபகரமான நிலையை அந்த அறை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

சாரதியின் அலுவலகம். சாரதி தன் இருக்கையில் அமர்ந்து ஃபைல்களை புரட்டிக் கொண்டிருக்க, அவன் மனமோ வீரா சொன்ன வார்த்தைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

கணேஷ் உள்ளே வர அனுமதி கேட்டு அவன் சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்தான். வெறும் தலையை மட்டும் அசைத்து சாரதி அனுமதி தர,

"சார்... இன்னும் நீங்க இந்த ஃபைலில செக் பண்ணி சைன் பண்ணலயா?!" என்று கேட்கவும், அப்போதே அந்தக் கோப்பையை உற்றுப் பார்த்தான்.

"வேறெதோ யோசிச்சுட்டிருந்தேன்னா... இதுல கவனம் செல்லுதவே முடியல" என்க, "கல்யாணமான உடனே... இந்த மாதரி வேலையில எல்லாம் கவனிக்க கொஞ்சம் கஷ்டம்தான் சார்" என்றான் கணேஷ் கேலியான புன்னகையோடு!

அவனை நிமிர்ந்து பார்த்த சாரதி எள்ளலாய் நகைத்து, "ஏன்? கல்யாணமானா... தலையில பெருசா கொம்பு முளைச்சிருமோ?! போ... போய் வேலையைப் பாரு" என்று உரைக்க ,

"இல்ல சார் பொதுவா" என்று கணேஷ் எதோ சொல்ல எத்தனிக்க,

"நீ ஒரு பொதுவாவும் சொல்ல வேண்டாம்... அந்த தாம்பரம் லேண்ட் ரெஜிஸ்டர் பண்ண ஏற்பாடு பண்ணு... வேற தாட்ல நான் அத மறந்தே போயிட்டேன்" என்றான்.

"ஓகே சார்" என்றவன் சொல்லிவிட்டு திரும்ப,

"கணேஷ்... ஒரு நிமிஷம்... அந்த லேண்டை வீரா பேர்ல ரெஜிஸ்டர் பண்ண ஏற்பாடு பண்ணிடு" என்க, கணேஷ் வியப்படங்காமல் ஒரு கணம் சாரதியைப் பார்த்தான். வீராவை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் சாரதி செய்ய சொன்னபோது கூட அதிலும் ஏதோ வியாபார நோக்கம் இருக்கும் என்றே எண்ணிக் கொண்டான்.

ஆனால் இப்போது அவன் சொன்னதைக் கேட்ட போது வியாபாரம் என்பதைத் தாண்டி அவள் மீது அவன் கொண்டிருந்த அதீத நம்பிக்கையே தெரிந்தது.

அரவிந்தின் வீடு!

அரவிந்தின் தமக்கை அனுஷ்யா தன் கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

"என்னன்னே தெரியல சரத்... ஒரு வாரமா லூசு மாதிரியே சுத்திட்டிருக்கான்... யார்கிட்டயும் பேச மாட்டேங்குறான்.... ட்ரிங்க்ஸ் வேற பண்றான்... அப்பாவுக்கும் உடம்பு சரியில்ல... இவனும் இப்படி இருந்தா பிசினஸ்ல இப்ப போயிட்டிருக்க பிரச்சனையை யாருதான் சமாளிக்கிறது" என்றவள் புலம்பித் தீர்க்க,

"இதுக்குதான் நான் முன்னாடியே சொன்னேன்... நமக்கு சேர வேண்டிய பங்கை அப்பவே கேட்டு வாங்குன்னு... இப்ப பார்த்தியா... எவ்ளோ பெரிய லாஸ்" என்றான் அவளின் ஆருயிர் கணவன் சரத்.

அனுஷ்யா அவனை முறைத்துப் பார்க்க,

சரத் உடனே, "கோச்சுக்காத டார்லிங்" என்று அவள் தோள்களில் கரங்களைக் கோர்த்து,

"இப்ப கூட ஒண்ணும் பிரச்சனை இல்ல... உங்க அப்பாக்கிட்ட பேசி அந்த எரிஞ்சு போன ப்ராஞ்சை தவிர சென்னையில இருக்க மத்த ப்ராஞ்ச்சசஸை என் பேர்ல இல்லன்னா... உன் பேர்ல கூட மாத்த சொல்லு... நான் பாத்துகிறேன்" என்றான்.

"நான் என்ன பேசிட்டிருகேன்... நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க" என்றவள் சீற்றமாய் அவனைப் பார்க்க,

"சரி டென்ஷனாகதே... இப்ப என்னதான் செய்யணுங்கிற... அதை சொல்லு?" என்றான் சரத்!

"அரவிந்த் கிட்ட பேசி அவன் பிரச்சனை என்னன்னு கேளுங்க சரத் அவன் லண்டன்ல நம்ம கூட இருந்த போது நல்லாதனே இருந்தான்... இங்க வந்த பிறகுதான் ... அவனுக்கு என்னாச்சுன்னே தெரியல"

"வேறென்ன... அந்த லோக்கல் பொண்ணைப் போய் பார்த்திருப்பானோ என்னவோ"

"அதுவும் தெரியலையே... அவனுக்கும் எங்களுக்கும் ரொம்ப ஏஜ் கேப்... சின்ன வயசல இருந்தே எங்ககிட்ட அவன் அவ்வளவா க்ளோசா பேசமாட்டான்.... அதான் நீங்க பேசிப் பாருங்கன்னு சொல்றேன்... உங்க கிட்ட சொன்னாலும் சொல்லுவான்"

"ஒ! ஒரு ஆணோட மனசை இன்னொரு ஆண்தான் புரிஞ்சுக்க முடியும்ங்கற"

"போய் கொஞ்சம் பேசு சரத்"

"இதுக்குதான் என்னை லண்டனல இருந்து அவசரமா வரவைச்சியா?" என்றவன் கடுப்பாய் கேட்க

"சரத்... ப்ளீஸ்" என்று அனுஷ்யா கெஞ்ச,

"சரி சரி போய் பேசித் தொலைக்கிறேன்" என்று சலித்துக் கொண்டு அரவிந்த் அறை நோக்கிப் புறப்பட்டான்.

அரவிந்த் அவன் அறையில் எந்நிலையில் இருந்தான் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சோகத்தில் மொத்தமாய் மூழ்கிப் போயிருந்தான். போதையிலும்தான்!

அரவிந்த் வீராவிடம் கடைசியாய் பேசிய பின் அவளைச் சந்திக்க எவ்வளவோ முயன்றான். ஆனால் அவளைப் பார்க்கவும் முடியவில்லை. பேசவும் முடியவில்லை.

இறுதியாக அவர்களின் பதிவுத் திருமணத்திற்கான தகவலறிந்து அதனைத் தடுக்க போனபோது, அவன் துரதிர்ஷ்டம்! அவனால் நேரத்திற்கு செல்ல முடியாமல் போனது. எதை நொந்து கொள்வான் ?

மொத்தமாய் மனமுடைந்து போனான். கோபம்... வெறி... ஏமாற்றம்... இவற்றை எல்லாம் ஒட்டு மொத்தமாய் எதிர்கொள்ளும் துணிவில்லாமல்தான் மது அருந்திக் கொண்டிருந்தான்.

அரைகுறை மயக்க நிலையோடு தரையில் கிடந்தபடி புலம்பிக் கொண்டிருந்தவனைப் பார்த்த சரத், "அரவிந்த்" என்று எழுப்ப முயன்று அவன் கன்னத்தை தட்ட, "வீராவை என்கிட்ட இருந்து பறிச்சிட்ட இல்ல.... உன்ன விடமாட்டேன் சாரதி" என்றவன் உளற, சரத் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

"இவன் போதையை எப்படியாச்சும் தெளிய வைக்கணுமே" என்று யோசித்தவன் வேலையாட்களைப் பணித்து அவனை முடிந்தளவு நிலைப்படுத்தினான். ஆனால் அதை செய்வதற்குள் சரத்திற்கு போதும் போதுமென்றாகிவிட்டது!

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content