You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 12

Quote

12

சாரதிக்கே சாரதி

சுகுமார் தயக்கத்தோடு வீராவின் வீட்டின் வாசலில் போய் நின்று தேடலாய் பார்வையை சுழற்ற, அவள் உள்ளே இருந்தபடியே அவன் வருகையைக் கவனித்தவள்,

"அன்னைக்கு  என்னை அந்த துரத்து துரத்தின... இப்ப நீ இன்னாதுக்கு என் வூட்டு வாசல்ல வந்து நிற்கிற" என்று கேட்கவும் அவன் முகம் சுருங்கிப் போனது.

"ப்ச்... அன்னைக்கு இருந்த கோபத்தில ஏதோ இரண்டு வார்த்தை பேசிட்டேன்... அது இன்னாத்துக்கு இப்போ... அதை வுடு... நான் வேற ஒரு முக்கியமான விஷயமா உன்கிட்ட பேசணும் " என்று சுகுமார் ஆர்வமாய் பேச ஆரம்பிக்க, அவனை ஏற இறங்க குழப்பமாய் பார்த்தவள்,

"உன் பேச்சே ஒண்ணும் சரியில்லையே... இன்னா மேட்டரு?" என்று கேட்டு வாசல் புறம் வந்து அவன் முன்னே நின்றாள்.

"அன்னைக்கு நாம ஒருத்தனைக் காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்தோம் இல்ல" என்று சுகுமார் ஆரம்பிக்க,

"ஆமா... அவனுக்கு என்ன?" என்றவளின் முகம் யோசனைக் குறியாய் மாறியது.

"எனக்கு அவன் ஃபோன் பண்ணி பேசினான் வீரா" ஆச்சர்யத்தோடு  சுகுமார் உரைக்க, "பண்ணி" புருவங்கள் சுருங்கினாள்.

"நாம அவனை அன்னைக்கு காப்பாத்தினதுக்கு... அவனும் பதிலுக்கு ஏதாவது நமக்கு செய்யணும் னு ஆசைபடுறானாம்... அதான் நேர்ல வாங்கன்னு கூப்பிட்டான்"

"மெய்யாலுமா?!"

"ஆமா வீரா... அட்ரெஸ் கூட கொடுத்துக்கிறான்... வா நாம போய் பார்த்துக்கின்னு வந்திடலாம்" என்றவன் ஆர்வமாய் உரைக்க வீரா நம்பாமல் பார்த்தாள்.

"ஏதாச்சும் வில்லங்கமா இருக்கப் போவுதுய்யா... அவசரப்படாதே" என்றவள் சொல்ல சுகுமார் மறுப்பாய் தலையசைத்து,

"அதெல்லாம் ஒரு வில்லங்கமும் இல்ல" என்க,

"ப்ச்... அதெப்படி சொல்ற?! நம்மளதான் அந்த ஆள் பார்க்கவேயில்லையே... அப்புறம் எப்படி அந்த ஆளுக்கு  நம்மள தெரியும்" அவள் குழப்பமுற கேட்டாள்.

"என் ஃபோனை நீ அவன் கார்லதான் வுட்டுக்கிற... அதை வைச்சுதான் எனக்கு ஃபோன் பண்ணிக்கினான்" என்றான் சுகுமார்!

"ஓ!" என்றபடி வீரா லேசாய் தெளிவுபெற,

"வா வீரா! இரண்டு பேரும் பார்த்துக்கினு வந்திருவோம்...  சொல்ல முடியாது... ஏதாச்சும் நல்ல அமௌன்ட் தேரும்... அப்படியே என் ஃபோனையும்  வாங்கினு வந்துக்கலாம்... இன்னா சொல்ற?!" வெகு ஆர்வமாய் அவன் கேட்கவும், அவள் ஆழ்ந்த யோசனையோடு மௌனமானாள்.

"இன்னாத்துக்கு இப்ப யோசிக்கிற...  அன்னைக்கு எம்மா ரிஸ்க் எடுத்து அந்த ஆளை நாம காப்பாத்துக்கினோம்" என்றதும்,

"எது? நாம காப்பாத்துனுமோ?!" அவனைக் கூர்மையாய் பார்த்துக் கேட்டாள்.

"சரி... நாம இல்ல... நீதான்... ஆனா நான் உன் கூடதானே இருந்தேன்"

"கிழிச்ச... உட்டா நீ என்னை விட்டு ஓடி போயிருப்ப" என்றவள் சொல்ல முகம் சுணங்கியவன்,

"என்ன வீரா?  இப்படி பேசுற... நாம என்ன... அப்படியா பழகிக்கினோம்" என்றான்.

"பார்றா!" என்று அவனை வீரா எகத்தாளமாய் பார்த்து சிரிக்க,

"இப்ப இன்னா சொல்ற... வர்றியா இல்லியா?!" பொறுமையிழந்து கேட்டான் சுகுமார்!

அவள் தாடையை தடவிக் கொண்டு, "வர்றேன்... ஆனா" என்றவள் இழுக்க, "இன்னாத்துக்கு இப்ப இவ்வளவு யோசிக்கிற... இப்ப இருக்கிற நிலைமையில உனக்கும் காசு வேணும்தானே!" என்று கேட்டான்.

"ப்ச் வேணும்தான்"

"அப்புறம் என்ன?"

"இல்ல... பொம்பளன்னாலே எல்லாருக்கும் ஒரு இளக்காரம்தான்... இதுல நான்தான் அந்த ஆளைக் காப்பாத்தினன்னு சொன்னா... அவன் நம்புவானா? கப்ஸா உடுறோம்னு நினைக்க மாட்டான்"

சுகுமாரும் அவள் சொன்னதைப் பற்றி தீவிரமாய் யோசித்துவிட்டு,

"ஏ வீரா... நீ பேசாம... அன்னைக்கு மீட்டிங்காக போட்டிருந்த கெட்டப்பிலயே வந்திரேன்... நானும் உன்னை வீரான்னுதான் அந்த ஆளுகிட்ட சொன்னேன்" என்க, "அப்படிங்கிற" அவள் யோசனைகுறியோடு வினவ,

"ஆமா... தலைவரே கண்டுபிடிக்கல... இவன் இன்ன... அசால்ட்டு" என்று சுகுமார் சொல்ல வீராவுக்கும் அதுதான் சரியென்று பட்டது. ஆதலால் அவளும் ஆண் வேடத்தில் சாரதியின் வீட்டிற்கு செல்லத் தயாரானாள்.

அடுத்த நாள் சுகுமாரும் வீராவும் சாரதியைப் பார்க்க அவன் பங்களாவிற்கு வந்திருந்தனர். வெளிப்புற சுவற்றில் தங்க நிற பலகையில் 'சாரதி இல்லம்' என்று எழுதியிருக்க, சுகுமாரும் வீராவும் அந்த பங்களாவின் பிரமாண்டத்தைப் பார்த்து சில நொடிகள் வியந்து அங்கேயே நின்றுவிட்டனர். 

அப்போது வீரா, "சத்தியமா இந்த பங்களாதானா சுகுமாரு?" என்று வியப்பு அடங்காமல் கேட்டாள்.

"இந்த பங்களாதான்" என்றவன் உறுதிப்படுத்த அதற்குள் காவலாளி அவர்களின் விவரங்களைக் கேட்டறிந்தான். பின்னர் அவர்களை உள்ளே விடச் சொல்லி சாரதியிடம் இருந்து  உத்தரவு வரவும், வாயிற் கதவை திறந்து அவர்களை அனுமதித்தான். இருவரும் அந்த வீட்டின் முழு கட்டமைப்பைப் பார்த்து பிரமித்தபடியே உள்ளே நடக்க,

"ரொம்ப வாய பிளாக்காதே... ஈ உள்ளே போயிட போகுது" என்று வீரா சுகுமார் முகபாவனைப் பார்த்து நக்கலடித்து  சிரித்துக் கொண்டே நடந்தாள்.

அவள் சொல்வதைக் கவனியாதவனாய் அந்த பங்களாவை தன் பார்வையாலேயே விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டு வந்தவன்,

"எம்மா பெரிய பங்களா ... தோட்டம்... நீச்சல் குளம்... யம்மா... இன்னா வாழ்கைடா... ப்ச்... நாமெல்லாம் வாழ்றது பேரு வாழ்கையா... வாழ்ந்தா இப்படி வாழணும்" என்றவன் சொல்லி முடிக்க வீராவின் முகம் கோபமாய் மாறியது.

"நீயே இன்னாத்துக்கு நம்மள குறைச்சு பேசிக்கிற... எங்க இருந்தா என்ன? நம்ம நிம்மதியா சந்தோஷமா வாழுறோம்ல... அது மேட்டரு" என்றவள் சொல்ல,

"நீ என்ன சொன்னாலும் சரி... ஹை கிளாஸ் ஹை கிளாஸ்தான்... லோ கிளாஸ் லோ கிளாஸ்தான்" என்றான் சுகுமார் ஏக்கப்பெருமூச்செறிந்து!

இவ்விதம் பேசிக் கொண்டே அந்த வீட்டின் நுழைவாயிலை கடந்து உள்ளே வந்தவர்கள் முகப்பறையின் நடுவில் நின்று அந்த வீட்டை மொத்தமாய் அளவெடுப்பது போல் சுற்றிப் பார்த்தனர். இருவருக்குமே கொஞ்சம் தலைசுற்றிதான் போனது அந்த வீட்டின் ஆடம்பர தோற்றத்தைப் பார்த்து!

அந்த நொடி படிக்கெட்டில் ஸ்டிக்கை ஊன்றியபடி இறங்கி வந்த சாரதி அவர்களை நோக்கி, "வாங்க உட்காருங்க" என்று உபசரணையாய் அழைக்க, வீரா சுகுமாரின் பார்வை அப்போதே சாரதியின் புறம் திரும்பியது.

சாரதி முன்னே நடந்து வர பின்னோடு கணேஷும் அவனிடம் சில தகவல்களை சொல்லிக் கொண்டே நடந்து வந்தான். இருளில் அன்று அவன் மயக்கத்தில் கிடந்த போது அவள் பார்த்த முகம்!

ஆனால் அன்றைய தினம் அந்தளவுக்கு ஆழமாய் அவன் முகம் அவள் நினைவில் பதியவில்லை. இன்றுதான் அவனை நிதானித்து தெளிவாய் பார்த்தாள். அவள் வாழ்கையையே முற்றிலுமாய் மாற்றப் போகும் அவனை!

ஸ்டிக்கின் உதவியோடு நடந்து வந்தாலும் அவன் நடையிலிருந்து கம்பீரமும் நிமர்வும் கொஞ்சமும் குறையவில்லை. அதுவும் அவனின் மிடுக்கான தோரணையும் கட்டுடலான தேகமும் பெண்களை இயல்பாகவே கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது எனும் போது வீரா மட்டும் விதிவிலக்கா என்ன?

சராசரியான பெண்களின் ஆசாபாசங்களை உணர்வுகளைக் கொண்டவள்தானே அவளும்! லேசாய் அவள் மனமும் நிலைதடுமாற,

"ஆளு சும்மா செமயா இருக்கான்" என்று சற்றே பொறாமை தொனியில் சுகுமார் அவள் காதோடு உரைக்கவும் வீரா சுதாரித்துக் கொண்டாள்.

அதற்குள் சாரதியும் படியிறங்கி வந்திருந்தான். அவனுக்கும் அவர்களின் தோற்றத்தையும் வயதையும் பார்த்து அளவில்லாத ஆச்சர்யம்! இவர்கள் செய்த செயலுக்கும் இவர்களுக்குமே சம்பந்தமில்லை என்ற எண்ணத்தோடு இருவரையும் பார்த்தவன்,

"உங்க இரண்டு பேர்ல சுகுமார் யாரு? வீரா யாரு?" என்று சந்தேகித்து கேள்வி எழுப்ப சுகுமார் முகமலர்ந்து,

"நான்தான் சார் சுகுமாரு... இவ வீரா சே! இவன் வீரா" என்று பதட்டத்தோடு அறிமுகம் செய்ய வீரா சுகுமாரைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள்.

சாரதி முறுவலித்து, "நான் சாரதி" என்று இயல்பாய் தன் கரத்தை நீட்ட இருவருமே வியப்படைந்தனர்.

 புரட்சியாளர்கள் என்னதான் இந்த சமூகத்தில் சமுத்துவத்தைப் பற்றி பேசினாலும் மேல்தட்டு மக்கள் அடித்தட்டு மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்ப்பது இன்றும் மாறாது ஒன்று!

அப்படியிருக்க சாரதி அவர்களிடம் கைகுலுக்க இயல்பாய்  தன் கரத்தை நீட்டவும் அவர்கள் தட்டுத்தடுமாறி சற்று யோசித்தனர்.

சாரதி தன் முறுவல் மாறாமல் சுகுமாரிடம் கரத்தை நீட்டிக் கொண்டு காத்திருக்க வீரா சுகுமாரிடம், "யோவ் கை கொடுய்யா" என்று மெலிதாய் உரைக்க, சுகுமார் வியர்த்து சில்லிட்டிருந்த தன் கரத்தை சட்டையில் அழுந்த துடைத்துக் கொண்டு சாரதியிடம் கை குலுக்கினான்.

வீராவிடமும் சாரதி தன் கரத்தைக் குலுக்க அந்த நொடி அவனின்  உணர்வுகள் வேறெதோ சொல்லியது. அவன் மூளை ஒன்றையும் பார்வை ஒன்றையும் முரண்பட்டு சொல்ல அவன் சந்தேகமாய் அவள் தோற்றத்தை ஊடுருவிப் பார்த்தான்.

வீரா ஒருவாறு அவன் எண்ணத்தைக் கணித்து கொண்டவள்,

"பரவாயில்ல சார்... இவ்வளவு சீக்கிரம் நல்லாயிட்டீங்க... அன்னைக்கு நீங்க இருந்த நிலைமை பார்த்து பிழைச்சுக்குவீங்களான்னு சந்தேகமா இருந்துச்சு" அவள் கணீரென ஆண் குரலில் பேசிய விதத்தில் சாரதிக்கு அவன் சந்தேகம் அர்த்தமற்றது என்று தோன்ற அந்த சந்தேகத்தை ஒதுக்கி வைத்து இயல்பு நிலைக்குத் திரும்பினான்.

சாரதி இருவரையும் பார்த்து புன்னகைத்து, "சரி வாங்க... உட்கார்ந்து பேசுவோம்" என்று சோபாவில் அமர போனவன் அங்கிருந்து டீபாயில் அவன் ஸ்டிக் இடிப்பட்டுத் தடுமாற,

"பாத்து சார்" என்று அவன் கரத்தைப் பற்றி கொண்டாள் வீரா!

கணேஷிற்கு இந்த காட்சியைப் பார்த்ததும் தன் பாஸ் வீராவை என்ன சொல்லப் போகிறாரோ என்று அச்சம் ஏற்பட்டிருக்க, சாரதிக்கு அந்த நொடி கோபமோ வீம்போ தலைதூக்கவில்லை.

மாறாய் யாரென்றே தெரியாத தான் தடுமாறி விழப் போனதும் பதறிக் கொண்டு தாங்கி கொள்ள வந்த வீராவின் குணநலனைப் பார்த்து அவனுக்கு மரியாதையே பிறந்தது.

"தேங்க்ஸ்... நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லியபடி அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, வீரா விலகி வந்து நின்றாள். கணேஷ் ஆச்சர்யம் குறையாமல் சாரதியைப் பார்க்க,

அவன் அமர்ந்து விட்டு தயக்கமாய் நின்றிருந்தவர்களை,

"ஏன் இப்படி நிற்கிறீங்க? உட்காருங்க" என்றான்.

ஆனால் வீராவும் சுகுமாரும் தயங்கியபடி, "இருக்கட்டும் சார் பரவாயில்ல" என்க,

"இப்ப நீங்க உட்காரலன்னா... நானும் எழுந்து நின்னுக்குவேன்.... பரவாயில்லையா?!" என்றவன் இறுக்கமாய் கேட்கவும் இருவரும் உடனடியாய் சோபாவின் முனையில் சற்றே தயக்கமாய் அமர்ந்து கொண்டனர்.

அந்த வீடும் அந்த வீட்டின் ஆடம்பரதன்மையும் என்னவென்று சொல்ல முடியாத பதட்டத்தை அவர்களுக்குப் புகுத்தியிருக்க, சாரதியும் அவர்களின் எண்ணங்களை ஒருவாறு கணித்து கொண்டான்.

"ஏன் இப்படி இரண்டு பேரும் சங்கோஜப்படுறீங்க? கொஞ்சம் நார்மலா இருங்க" என்றவன் சொல்ல,

"எங்களுக்கு இப்படியெல்லாம் பார்த்தே பழக்கமில்ல சார்? அதுவும் இந்த வூடு... நீங்க... அல்லாத்தையும் பார்த்ததும் கொஞ்சம் மெர்ஸலாயிட்டோம்" என்று மனதில் உள்ளதை சுகுமார் அப்படியே வெளிப்படுத்த,

சாரதி முறுவலித்து அவன் பேச்சைக் கேட்டு கொண்டிருந்தான். அதே நேரம் சாரதியின் பார்வை வீராவை நோக்க அவளோ அங்கே மாட்டியிருந்த சாரதியின் கம்பீரமான புகைப்படத்தைப் புருவங்கள் நெறிய பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவும் அவன் தோற்றத்தில்  தனித்து ஆளுமை செய்த அவனின் கூரிய பார்வையில் அவள் காந்தமாய் ஈர்க்கப்பட்டிருக்க,

'என்ன கண்ணுய்யா !!' மனதிற்குள் சொல்லி வியந்து கொண்டவளுக்கு என்னதான் ஆணின் ரூபத்தில் இருந்தாலும் அவளின் பெண்மை அவளையும் மீறி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதே நேரம் சாரதி கோபமாக, "முத்த்த்த்த்து" என்று சமையல்காரனை தன் கணீர் குரலில் மிரட்டலாய் அழைக்க, அந்த நொடி வீராவின் எண்ணங்கள் அதிர்ச்சியில் தடம் புரண்டன. முத்து திணறி அடித்துக் கொண்டு அவன் முன்னே வந்து நிற்க,

"வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்கன்னு தெரியல... காபி கூட போட்டுக் கொண்டு வராம... அப்படி என்ன கிழிச்சிட்டிருக்க உள்ள... வந்தவங்களுக்கு காபி கொடுத்துட்டு டிபன் ரெடி பண்ணு" என்று சாரதி சீற்றமாய் பேசி முத்துவை மிரட்டிய விதத்தில் வீராவுக்கு அவன் மீது கொண்டிருந்த அபிப்பிராயம் லேசாய் தாழ்ந்து போனது.

வீரா அப்போது சாரதியிடம், "அதல்லாம் இன்னாத்துக்கு சார்... வேணாம்... நாங்க கிளம்பறோம்" என்க,

"நோ... நீங்க இரண்டு பேரும் இருந்து சாப்பிட்டுதான் போகணும்" என்று அதிகாரமாய் உரைத்தான். அவனின் வார்த்தைகளை மறுத்துப் பேச முடியாமல் வீராவும் சுகுமாரும் தயங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

"சரி... நீங்க இரண்டு பேரும் என்ன பண்றீங்க?  உங்க ஃபேமிலி மெம்பர்ஸ்... இதைப் பத்தியெல்லாம் சொல்லுங்களேன்" என்று சாரதி ஆர்வமாய் வினவ,

"இன்னாத்த ஃபேமிலி... சின்ன வயசிலயே அம்மா ஓடி போச்சு... அப்பன் என்னை உட்டு வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கின்னு போயிட்டான்... என் ஆயாதான் என்னை வளர்த்துச்சு... அப்புறம் அதுவும் ஒருநாள் செத்துப் போச்சு... இப்போ ஏதோ கிடைக்கிற வேலையில வர காசுல துன்னுக்குனு கிடக்கிறேன்... அப்படியே போவுது" என்று சுகுமார் சலித்துக் கொண்டு அவன் வாழ்கையைப் பற்றி சொல்லவும்,

சாரதிக்கு அப்போது அவனின் இளமைக் காலம் கண் முன்னே நிழலாடியது. சாரதி பின்னர் வீராவைப் பார்த்து, "நீ வீரா" என்று கேட்க,

"எங்க வூட்ல... நான் இரண்டு தங்கசிங்க... அவ்வளவுதான்" என்று சுருக்கமாய் அவள் சொல்லி முடிக்க, "அப்பா அம்மா இல்லையா?!" என்று சாரதி தயக்கமாய் கேட்டான்.

வீராவின் விழிகள் அந்த நொடியே கண்ணீரைத் தேக்கிவிட பட்டென துடைத்துக் கொண்டவள்,

"அ.. ம்.. மா... இருந்துச்சு... மூணு மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்ஸிடென்ட்ல செத்துப் போச்சு" என்று வேதனை நிரம்ப சொல்லிக் கொண்டிருந்தவள் மேலும்,

"அப்... ****" அந்த வார்த்தையை சொல்ல பிடிக்காமல் நிறுத்திக் கொண்டவள் பின் அவளை அறியாமல் ஒரு இழிவான சொல்லை வாய்க்குள்ளேயே முனகினாள்.

அவள் வாயசைவை உணர்ந்து அதிர்ச்சியான சாரதி, "என்ன?" என்று கேட்கவும், "அது... அம்மா செத்ததும் அந்த மனுஷன் சொல்லிக்காம கொள்ளிக்காம எங்கேயோ போயிட்டாரு" என்று சமாளித்துவிட்டாள்.

வீரா சொல்ல முடியாததை எல்லாம் அவள் விழிகள் அப்பட்டமாய் பிரதபலிக்க அவள் வெகுசாமர்த்தியமாய் தலையைக் குனிந்து தன் முகத்தை மறைத்துக் கொள்ள, ஏனோ சாரதிக்கு அவனின் வாழ்கை துயரங்களோடு அவர்கள் வாழ்கையையும் ஓப்பிட்டுப் பார்க்க தோன்றியது. அதனாலேயே அவன் மனதின் ஓரத்தில் அவர்களின் மீது கரிசனம் பிறந்துவிட்டது.

அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போது முத்து காபியை எடுத்து வந்தவன் பின் உணவும் தயாரித்து எடுத்து வந்தான். வீராவும் சுகுமாரும் மறுதலித்தும் சாரதி விடாமல் அவர்களை சாப்பிட அமர வைத்தவன் அவர்களோடு பேச்சு கொடுத்துக் கொண்டே அவனும் உணவருந்தினான்.

"ஏன் சுகுமார்?... பேசாம நீ டீ நகர்ல இருக்க என்னோட சாரதி டெக்ஸ்டைல் ஷாப்ல வேலைக்கு சேர்ந்துறியா?" என்றவன் கேட்க,

சுகுமாருக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.

அவன் வீராவைப் பார்க்க, அவளும் பதில் பேச முடியாமல் வியப்புற்றிருக்க, சாரதி மேலும், "என்ன சுகுமார் ஒகேதானே?!" என்று கேட்டான்.

"சார்! அந்த கடை உங்கள்தா?!" என்று சுகுமார் அதிசயித்துக் கேட்கவும்  கணேஷ் அவனிடம்,

"அது தெரியாமலா இவ்வளவு நேரம் சார்கிட்ட பேசிட்டிருந்தீங்க" என்றான். 

"சத்தியமா தெரியாது சார்" என்று சுகுமார் சொல்ல,

"அதெல்லாம் பரவாயில்ல... சுகுமார்... நீ வேலைக்கு சேர்ந்துக்கிறியா?" என்றதும் சுகுமார் வியப்போடு,

"நான் என்னவோ நினைச்சு இங்கே வந்தேன் சார்... ஆனா நீங்க அதுக்குமேல செஞ்சிட்டீங்க... தேங்க்ஸ் சார்" என்றான்.

"நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்... அன்னைக்கு அத்தனை ரவுடிங்களுக்கு மத்தியில உங்க உயிரைப் பணயம் வைச்சு என்னை காப்பாத்தியிருக்கீங்க... அதுவும் நான் யார் என்னன்னு தெரியாம பிரதிபலன் எதிர்பார்க்காம... இன்னைக்கு காலகட்டத்தில அதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம்... அதுக்கு பணமா கொடுக்கிறதை விட வேலையா கொடுத்தா உங்களுக்கு பயன்படும்னு யோசிச்சுதான்... இப்ப உங்க தேவையும் அதுதானே!" என்றவன் விவரமாய் சொல்ல சுகுமார் நெகிழ்ச்சியோடு,

"அன்னைக்கு நான் எதுவுமே செய்யல சார்... எல்லாம் வீராதான்" என்றவன் அவள் புறம் கைகாட்டினான். சாரதி அப்போது வீராவின் புறம் திரும்பி யோசித்தவன்,

"உனக்கு சம்மதம்னா... நீ என் பெர்ஸனல் டிரைவரா வேலைக்கு சேர்ந்திரு" என்றவன் சொல்ல,

அத்தனை நேரம் வியப்புக் குறியோடு இருந்த... சுகுமார் வீராவின் முகங்கள் இப்போது அதிர்ச்சிக் குறியோடு மாறியது. அப்போது சாரதி உணவு முடித்து கைகளை அலம்பிக் கொண்டே,

"ஒண்ணும் யோசிக்காதே வீரா... நல்ல ஸேலரி தர்றேன்... உன்னை மாதிரி ஒரு தைரியசாலியான துருதுருப்பான ஆள்... என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சாரதி தன் முடிவை வீராவிடம் அழுத்தமாய் புரிய வைக்க,

"வீராவால?!" என்று சுகுமார் ஏதோ பேச வந்த சமயம் வீரா இடைமறித்து, "சரிங்க சார்... நான் செய்றேன்" என்று தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு சிறியதாய் ஒரு மரகட்டை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்ட உயிரை காப்பாற்றிக் கொண்டுவிட மாட்டோமா என்று தோன்றுமில்லையா?

அந்த நிலையில்தான் இப்போது வீராவும் இருந்தாள். அப்படியிருக்க அதுவாகத் தேடி வரும் வாய்பை அவள் எந்த காரணம் சொல்லியும் தட்டிக்கழிக்க விரும்பவில்லை.

அதுவும் அவள் மனதை பாதித்த விஷயங்கள் இந்த சமூகத்தில் பெண்ணாய் வலம் வருவதை விடவும் ஆணாய் வலம் வருவது பாதுகாப்பு என்ற ஒரு எண்ணம் அழுத்தமாய் அவளுக்குள் பதிவாகியிருக்க,

அவள் எடுத்த அந்த முடிவினால் வரப் போகும் எந்தவித எதிர்வினை பற்றியும் அவள் அப்போது யோசிக்கும் நிலையில் இல்லை. அவள் வாழ்கையையே புரட்டிபோட போகும் அந்த முடிவை நொடி நேரத்தில் எடுத்து விட்டாள் என்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

இன்று சாரதிக்கு ஓட்டுநராக பணிபுரியப் போகிறவள் நாளடைவில் அவன் பாதையையும் மாற்றப் போகிறவளாய் மாறப் போகிறாள்.

சாரதி அவளை ஓட்டுநராய் வேலைக்கு சேர்ந்து கொள்ள சொன்னதற்கு, வீரா கொஞ்சமும் யோசிக்காமல் தன் சம்மதத்தை தெரிவித்ததை என்னவென்று விவரிப்பது?

உச்சபட்ச முட்டாள்தனமென்றா அல்லது அசட்டுத் துணிச்சலென்றா? அவள் செய்கையில் கிட்டத்தட்ட இரண்டுமே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் 'அவளாக' இருப்பதாலேயே இழிவாய் பார்க்கும் இந்த சமூகத்தில் அவனாக தான் மாறினால் என்ன என்ற அசட்டுத் துணிச்சல்!

முழுமையாக ஆணாய் மாறி நிற்கும் போதுதான் அவள் சமாளிக்க வேண்டிய சவால்கள் இன்னும் அதிகம் என்பதை உணராத அவளின் உச்சகட்ட முட்டாள்தனம்!

அவள் கடந்து வந்த பாதை அவளுக்குப் போதித்த பாடங்கள் அது!

இந்த சமூகத்தின் வக்கிரமான ஒரு பாதி, பெண்ணினங்களை வெறும் சதைபிண்டமாகவே பார்க்கும் போது அவளும் என்ன செய்வாள்? 

பிணந்தின்னும் கழுகுகளாக அவளைச் சுற்றி வரும் சில வக்கிரமான  வன்மம் நிறைந்த பார்வைகளில் இருந்து தப்பிக் கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாகவே அவள் அந்த வேலையைப் பார்த்தாள். அவளுக்குத் தேவையான பணமும் பாதுகாப்பும் ஒரு சேர கிடைக்கப் போகிறதெனும் போது வேறெதையும் அவள் மூளை சிந்திக்கவில்லை.

ஆனால் அவள் முடிவைக் கேட்ட சுகுமாருக்கோ அடங்காத அதிர்ச்சி! அந்த வேலையில் நடைமுறையில் இருக்கும் இடர்களை ஒரு ஆணாய் அவனுக்கு தெரிந்தளவுக்கு  அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவனுக்கு ஏற்பட்ட பதட்டத்தில் பாதியளவு கூட அவளுக்கில்லை. யோசித்துதான் அவள் இந்த முடிவை எடுத்தாளா என்றவன் நம்ப முடியாமல் வாயடைத்துப் போய் அவளையே பார்த்திருந்தான்.

அவள் எதையும் செய்யக் கூடியவள்தான். ஆண் வேடமிட்டு ஆண்கள் கூட்டம் நிரம்பிய அவையில் அசாதாரணமாய் அமர்ந்து கொண்டு அவள் செய்த அலப்பறையாகட்டும்!

தலைவரை அவள் சமாளித்த விதமாகட்டும்!

யார் என்னவென்று தெரியாதவனைக் காப்பாற்ற அதிபயங்கரமான ரவுடிகளுக்கு இடையில் அவள் கையாண்ட யுக்தியாகட்டும்! எல்லாமே சரிதான்!

ஆனால் இப்போது அவள் செய்ய நினைப்பது முற்றிலும் யதார்த்தத்திற்கு அப்பாற்ப்பட்ட விஷயமாயிற்றே!

அவன் எப்படி அவற்றையெல்லாம் அவளிடம் சொல்லி புரிய வைப்பதென தவிப்பில் கிடக்க, சாரதி தன் பேச்சு வார்த்தைகளை முடித்து இறுதிகட்டத்திற்கு வந்தவன் கணேஷிடம் சொல்லி இருவருக்கும் ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுக்கச் சொல்லியிருந்தான்.

முதலில் பணம் வாங்க இருவரும் தயங்க, பின்னர்  சாரதியின் கட்டளையின் பேரில் அதனைப் பெற்றுக் கொண்டனர்.

ஒரே நாளில் சாரதியின் செயல்பாடுகள் வீராவை கொஞ்சம் மூச்சு முட்ட வைத்துவிட்டது.

உபசரித்த விதத்தில்... வேலையாளை மிரட்டிய விதத்தில்... கேட்காமலே அவர்கள் இருவருக்கும் வேலை கொடுத்த விதத்தில்... இப்போது பணம் கொடுத்து வழியனுப்புவதில் முடிய அவன் அவளை மொத்தமாய் பிரமிப்பில் ஆழ்த்தினான்.

அதே நேரம் நடப்பவையெல்லாம் கனவாகி விடுமோ என்ற லேசான அச்சமும் அவளுக்குள்!

ஆனால் எல்லாம் நல்ல விதமாக நடந்தேறி இருவரும் அங்கிருந்து புறப்பட்டு விட, சாரதி ஆழ்ந்த சிந்தனையோடு மௌனமாய் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தான்.

"சார்" என்று பின்னோடு நின்று கணேஷ் அழைக்க, "ஹ்ம்ம்ம்" என்றான் சிரத்தையின்றி!

"சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்... அந்த பசங்களுக்கு பணம் கொடுத்தவரைக்கும் ஒகே... ஆனால் வேலை கொடுத்ததெல்லாம்... அதுவும் டிரைவர் வேலை... லோக்கல் பசங்க... ரொம்ப ரிஸ்க்" என்று கணேஷ் தன் எண்ணத்தை தயங்கித் தயங்கி உரைக்க,

சாரதியின் பார்வை அவனைக் கூர்மையாய் தாக்கியது.

"அப்போ என் டெசிஷன் தப்புன்னு சொல்ல வர்றியோ?!" ஒற்றை புருவத்தை ஏற்றி அவன் எகத்தாளமாய் கேட்ட விதத்தில் கணேஷ் விதிர்விதிர்த்தான்.

"அய்யோ சார்... நான் அப்படி சொல்லல... உங்கள காப்பாத்தின பசங்கன்னு நீங்க கொஞ்சம் இமோஷ்னலா முடிவெடுத்துட்டீங்களோன்னு தோணுச்சு... அதான்" என்றவன் பதட்டத்தோடு ஆரம்பித்து தயக்கத்தோடு முடிக்க,

சாரதி எள்ளலாய் ஒரு பார்வை பார்த்து புன்னகைத்தவன், "இமோஷ்னலா இந்த சாரதி முடிவெடுக்கிறதா... நெவர் அட் ஆல்?!" என்றவன் சொல்லிவிட்டு கணேஷை ஆழ்ந்து பார்த்தவன்,

"ஏன் கணேஷ்?... நீ சொன்னியே... இந்த லோக்கல் பசங்க... இவங்க இரண்டு பேரும்... என்னை அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு பதிலா எங்கேயாச்சும் கூட்டிட்டுப் போய்... என் பர்ஸல இருக்கிற பணம்... கார்ட் அன்ட்... நான் போட்டிருந்த சையின் மோதிரத்தை எல்லாம் உருவி நடுரோட்ல விட்டுட்டுப் போயிருந்தா... ஆர் எல்ஸ் என்னை கொன்னு தூக்கிப் போட்டு காரோட எஸ்கேப் ஆயிருந்தா" என்றவன் வெகு இயல்பாக சொல்ல, கணேஷிற்கு உள்ளூர நடுங்கியது அவற்றை எல்லாம் கேட்ட மாத்திரத்தில்!

அவன் பதறிக் கொண்டு, "சார்" என்க,

"என்ன கணேஷ்? இப்படியெல்லாம் செஞ்சிருக்க முடியாதா?" என்று கூர்மையான பார்வையோடு கேட்டான் சாரதி!

"செஞ்சிருக்கலாம்" என்று கணேஷ் தயக்கமாய் சொல்ல, "ஏன் செய்யல?" அடுத்த கேள்வியை சாரதி கேட்க,

"அது" என்று பதில் சொல்ல முடியாமல் திணறினான் கணேஷ்!

"கணேஷ்... வாய்ப்பு கிடைச்சும் ஒருத்தன் தப்பு செய்யலன்னு வைச்சுக்கோ... அவன் முட்டாள்... இல்லன்னா ரொம்ப நல்லவன்... என்னைப் பொறுத்த வரை இவங்க இரண்டு பேரும் நிச்சயம் முட்டாள் இல்ல... நல்லவனுங்க... இந்த மாதிரி நல்லவனுங்க எல்லாம் கிடைக்கிறது ரொம்ப ரேர்... கொடுக்குற சம்பளத்துக்கு நாணயமா வேலை பார்ப்பாங்க... இவங்கள மாதிரி ஆட்களைக் கூட வைச்சிருக்கிறது நமக்கு சேஃப்டி... நமக்கெதிரா போக மாட்டாங்க... அதே நேரத்தில ஒரு பிரச்சனைன்னா விட்டுட்டு ஓடவும் மாட்டாங்க... நம்ம மேல விழற அடியை முன்ன நின்னு அவங்க வாங்குவங்க... ஷார்டா சொல்லனும்னா சீப் அன் பெஸ்ட்... தட்ஸ் இட்... நத்திங் இமோஷ்னல் ஹியர்... எவ்ரித்திங் இஸ் பிஸினஸ்" என்றவன் முடிக்க,

'அதானே' என்று கணேஷ் மனதில் எண்ணிக் கொண்டு மௌனமாய் நின்றான். அவன் எப்போதும் எந்நிலையிலும் வியாபாரிதான்!

அதுவும் மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வது போல் காட்டி... தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் கை தேர்ந்த வியாபாரி!

அவன் மூளையைக் கூட அவன் அவ்விதம் சிந்திக்க வைத்தே பழக்க்கப்படுத்தியிருக்கிறான். அது ஒரு நாளும் மனிதத்தோடும் மனிததன்மையோடும் சிந்திப்பதெல்லாம் சாத்தியமே இல்லை!

இங்கே நிலவரம் இப்படியிருக்க அங்கிருந்த புறப்பட்ட மறுகணமே சுகுமார் வீராவிடம், "ஏன் வீரா இப்படி பண்ண? உனக்கு என்ன பைத்தியமா?!" என்றவன் பல்லைக் கடித்து கொண்டே கேட்க,

"நீ ஒண்ணியும் பேச வோணாம்... கம்முன்னு வா" என்றவனை அடக்கிவிட்டு முன்னே நடந்தாள். அவன் அவளிடம் பேச எத்தனிக்கும் போதெல்லாம் அவன் சொல்வதைக் கேட்காமல் அவனை அவள் அடக்கிக் கொண்டே வர, அவளிடம் பேசுவது வீணென்று தன் முயற்சியை கைவிட்டவன் வீட்டை அடைந்ததும் அவளிடம்,

"வேணா வீரா! இப்ப கூட ஒண்ணும் பிரச்சனையில்ல... அந்த ஆள்கிட்ட உண்மையை சொல்லி வேறெதாச்சும் வேலை கேட்டுக்கலாம்... லூசாட்டம் பண்ணாதே" என்றவன் சொல்ல,

"உண்மை சொல்றேன்ன.. வாய கீச்சிருவேன்... உனக்கு கொடுத்த வேலையை மட்டும் நீ செய்... என் வேலையை எப்படி செய்யணும்னு எனக்குத் தெரியும்" என்று சீற்றமாய் முறைத்துக் கொண்டு அவள் சொல்லவும்,

"சொல்றத கேளு வீரா... மாட்டினா உனக்கு சங்குதான்" என்றவன் இறங்கிய தொனியில் எச்சரிக்க,

வீரா இறுகிய பார்வையோடு, "ஏய்... இப்ப  நான் இன்னா கொலை குத்தமா பண்ண போறேன்... ஒவரா பேசுற... அல்லாம் எனக்குத் தெரியும்... என்னைக் கடுப்பேத்தாம ஒழுங்கா போயிரு சொல்லிட்டேன்" என்றாள்.

"உனக்கு புத்தி சொன்னதுக்கு"

"செருப்பாலயே அடிச்சிக்கணும்... அதானே... போய் நல்லா அடிச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு அவள் தன் வீட்டிற்குள் நுழைய,

அவர்கள் இருவரின் உரையாடல்கள் நதியா அமலாவின் காதிலும் விழுந்தது. அதே நேரம் அக்காவைப் பார்த்ததில் இருவரும் குதுகலத்தோடு,

"அய்!! அக்கா வந்திருச்சு" என்று ஆர்வமாய் ஓடி வர, வீரா அவர்களை கவனியாதவளாய் உள்ளே நுழைந்தாள். 

நதியாவும் அமலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, "இன்னாச்சு" என்று கேட்டுக் கொண்டு உதட்டை பிதுக்கிக் கொள்ள,

வீராவோ சுவற்றோரம் யோசனையோடு சாய்ந்தமர்ந்து கொண்டாள். அவளைப் பொறுத்த வரை ஒரு முடிவை எடுத்த பின் அது குறித்து விவாதங்கள் செய்வது வீண்!

இப்போதைக்கு அவளின் எண்ணமெல்லாம் தான் ஏற்றுக் கொண்ட வேலையை எப்படி செய்யப் போகிறோம் என்பதுதான்!

அப்போது அமலா, "யக்கோவ்" என்று அவள் தோள்களைக் குலுக்கிவிட தங்கைகளை நிமிர்ந்து பார்த்தவள், "இன்னாங்கடி" என்று சிரத்தையின்றி கேட்டாள்.

"ஆமா... அந்த அரை லூசு ஏன் உன்னான்ட சண்டை போட்டுக்குன்னு போறான்... இன்னா பிரச்சனை உங்க இரண்டு பேருக்கும்" என்று நதியா கேட்க,

அமலாவும் அவளோடு சேர்ந்து கொண்டு, "நீ முதல்ல இன்னாத்துக்கு க்கா அவன் கூட போன" என்று கேள்வி எழுப்பினாள்.

வீரா இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, "முதல்ல இரண்டு பேரும் உட்காருங்க... மேட்டர் இன்னான்னு சொல்றேன்" என்க, அமலாவும் நதியாவும் தன் தமக்கையின் அருகில் அமைதியாய் அமர்ந்தனர்.

வீரா விபத்து நடந்த கதையில் ஆரம்பித்து இன்று சாரதியை சந்தித்துப் பேசிய வரை ஒன்று விடாமல் முழுவதுமாய் கூறி முடித்துவிட்டு தன் தங்கைகளை ஏறிட்டுப் பார்க்க, அவர்கள் இருவரும் அதிர்ச்சியே ரூபமாய் அவளைப் பார்த்திருந்தனர்.

"இன்னாத்துக்குடி இப்படி பார்க்குறீங்க... எதுனாச்சும் சொல்லுங்கடி" என்று வீரா அச்சம் மேலிட கேட்க,

அமலா முதலில் இயல்புநிலைக்கு வந்து, "உனக்கு தில்லுன்னா தில்லு க்கா" என்றாள் வியப்போடு!

"அதல்லாம் சரிதான்... ஆனா டிரைவர் வேலைக்கு ஆம்பள வேஷத்துல... எப்படி க்கா?" என்று நதியா குழப்பமுற வினவ,

"தெரியல நதி... ஒத்துக்கணும்னு தோணுச்சு... ஒத்துக்கிட்டேன்" என்றாள் வீரா யோசனையோடு!

"இருந்தாலும் இது ரொம்ப ரிஸ்க்கு க்கா" என்று நதியா சொல்ல,

"ரிஸ்கெல்லாம் அக்காவுக்கு ரஸ்கு சாப்பிடுற மாறி" என்றாள் அம்மு.

"பிரச்சனை என்னன்னு புரியாம நீ லூசாட்டம் பேசாத அம்மு" என்று நதியா கோபப்பட, "நான் ஒண்ணும் லூசட்டம் பேசல... நீதான் லூசாட்டம் பேசுற" என்று அம்மு பதிலடி கொடுத்தாள்.

"நீ கொஞ்சம் வாய மூடுறியா? நான் அக்காகிட்ட பேசணும் " நதியா முறைக்க, "நீ மூடு வாயை" என்று அமலா பதிலுக்கு முறைத்தாள்.

"அய்யோ! இரண்டு பேரும் கொஞ்சம் வாய மூடுறீங்களா?!" வீரா கோபமாய் தன் தங்கைகளை முறைக்க அவர்கள் இருவரும் அப்போது சமிஞ்சையாலயே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து  உதட்டை சுழித்துக் கொண்டனர்.

அந்த இடம் நிசப்தமாய் மாற வீரா நதியாவிடம் திரும்பி, "சரி இப்ப... நீ இன்னாதான் சொல்ல வர்ற?" என்று தீவிரமான முகப்பாவனையோடு கேட்க, "நீ எடுத்துக்குன்ன முடிவு ரொம்ப ரிஸ்குக்ன்னு தோணுது" என்று நதியா தயக்கத்தோடு உரைத்தாள்.

வீரா பெருமூச்செறிந்து தன் தங்கையை ஆழ்நது பார்த்தவள்,

"ரிஸ்கில்லாத வேலைன்னு எதனாச்சும் இருக்கா நதி" என்றவள் கேட்க, "அக்கா" என்று நதியா பேச எத்தனிக்க அவளை கையமர்த்திவிட்டு வீரா மேலும் தொடர்ந்தாள்.

"உனக்கு தெரியாது நதி... கூட்டிப் பெருக்க வூட்டு வேலைக்கு போனா கூட ரிஸ்க்குதான்... இன்னும் கேட்டா பொம்பளயா பொறப்பு எடுத்து... வாழ்றதே ரிஸ்குதான்... அம்மா அடிக்கடி ஒரு வார்த்தை  சொல்லும்... ஞாபகம் இருக்கா... விளக்கமாத்துக்கு புடவையை கட்டினா கூட... வுட மாட்டானுங்க... பேமானி பசங்க... அதான்! புடவையைக் கட்டிக்கின்னாதானே பின்னாடியே வருவானுங்க...  பேன்ட் சட்டையை போட்டுக்குன்னா... எவனும் நம்மள திரும்பிக் கூட பார்க்க மாட்டான்ல"

இறுக்கத்தோடும் கோபத்தோடு அவள் வார்த்தைகளை அழுத்தமாய் உச்சரிக்க, நதியாவும் அமலாவும் தன் தமக்கையை விழி எடுக்காமல் பார்த்திருந்தனர்.

வீரா கம்மிய குரலில், "அன்னைக்கு கமலா க்கா என்னை வேலைக்கு கூட்டின்னு போன இடத்தில ஒரு விஷயம் நடந்துச்சு... நான் உங்ககிட்ட சொல்லல"

"இன்னாதுக்கா?" இருவரும் அதிர்ந்து கேட்க,

"அந்த ஓனரம்மாவோட பையன்... பரதேசி... கன்னாபின்னான்னு பேசிக்கின்னு என் பக்கத்தில வந்து மேலே எல்லாம் கை வைச்சு... எனக்கு அப்படியே அசிங்கமா போச்சு.... அவன் மூஞ்சிலயே ஒரு குத்து குத்துனேன்... மூக்கு பிளந்துக்குன்னு ரத்தம் வந்திருச்சு... அதுக்கு அந்த வீட்டம்மா... அவன் பையன் செஞ்ச தப்பைக் கேட்காம நான்தான் தப்பு செஞ்சேன்னு இன்னா பேச்சு பேசிச்சு தெரியுமா" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் உதடுகள் நடுங்க மெல்ல தன்னிலைப்படுத்திக் கொண்டவள் மேலும் தொடர்ந்தாள்.

"அதுமட்டுமில்ல... இன்டர்வியூ போன இடத்தில எல்லாம் லோ கிளாசுன்னா மேலே இருந்து கீழ வரைக்கும் ஒரு பார்வை பார்க்குறானுங்க பாரு... அப்பெல்லாம் ஏன்டா பொம்பளயா பிறந்து தொலைச்சோம்னு எனக்கு பத்திக்கின்னு வரும்... அதான் அந்த ஆளு டிரைவர் வேலைக்குக் கூப்பிட்டதும் உடனே சரின்னு சொல்லிக்கினே" என்றாள்.

"சரிக்கா... போற இடத்தில உனக்கு எதனாச்சும் பிரச்சனை வந்தா" நதியா பதட்டத்தோடு வினவ, வீரா ஆவேசமானாள்.

"பிரச்சனை எங்கதான்டி வர்ல... ஹ்ம்ம்... சொந்த ஊட்ல படுத்திருக்கும் போதே... பெத்த..." என்றவள் மேலே பேச முடியாமல் உடைந்து அழ,

"அக்கா" என்று அமலாவும் நதியாவும் சேர்ந்து அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டனர். அந்த நொடி அவர்களுக்குமே கண்ணீர் பெருகிற்று.

"நீ இன்னா செய்யணும்னு நினைக்கிறியோ அதை செய் க்கா... ஆனா அழ மட்டும் செய்யாதக்கா... எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக்குது" என்று நதியா அழுது கொண்டே சொல்ல,

"ஆமா க்கா... அழாதக்கா" என்றாள் அமலா.

வீரா தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, "இல்ல நான் அழல" என்று உரைத்தவள் ஒரு வித யோசனையோடு மௌனமாய் அமர்ந்திருக்க,

"இன்னும் என்னக்கா யோசிக்கிற? வேற எதனாச்சும் பிரச்சனையா?" என்று நதியா வினவ,

"ஹ்ம்ம்... டிரைவிங் லைசன்ஸ்... இன்னும் பத்து நாள்ல லைசன்ஸோட வந்து வேலைக்கு சேர்ந்துக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்... ஆனா எப்படி லைசென்ஸ் வாங்குறது... அதுவும் வீராங்கிற பேர்ல... அதான் ஓரே குழப்பமா இருக்கு" என்றாள் வீரா!

"இது பெரிய பிரச்சனையாச்சே க்கா" என்று நதியா சொல்ல,

"அது எனக்குத் தெரியாதா? ... எதனாச்சும் யோசனை சொல்வீங்களா?" என்று வீரா கேட்க,

மூவரும் தீவிரமாய் விதவிதமான பாவனையில் யோசிக்க ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் மௌனமாய் கடந்து விட, அப்போது நதியா அவசரமாய் எழுந்து, கையில் ஒரு கார்டை எடுத்துக் கொண்டு வந்து நீட்டினாள். அதை பார்த்ததும் வீரா ஆவேசமாக அதனைத் தூர எறிந்துவிட்டு,

"இது இன்னாத்துக்குடி என் கையில கொண்டாந்து கொடுக்குற... தூக்கிக் குப்பையில போடு" என்றாள். அவள் தூக்கியெறிந்தது வீரய்யனின் லைசென்ஸ்தான்!

"அய்யோ க்கா... அந்த ஆள விடு... அந்த லைசென்ஸ் நமக்கு உதவும்"

"அதெப்படிறி?"

"அந்த லைசென்ஸ்சை ஸ்கேன் பண்ணி கம்பூயூட்டர்ல போட்டு... அதுல இருக்கிற போட்டோ... வருஷத்தை மட்டும் மாத்தி அதை ப்ரின்ட் அவுட் எடுத்து லேமினேட் பண்ணி வைச்சுக்கோ... அவ்வளவு சீக்கிரம் எவனும் கண்டுபிடிக்க முடியாது" என்றுரைக்க வீரா குழப்பமாக,

"நீ சொல்றது சரியா வருமா நதி?" என்றாள்.

"கம்பூயூட்டர்ல அல்லாமே செய்யலாக்கா... அன்னைக்கு கம்பூயூட்டர் கிளாஸ்ல புதுசா ஏதோ சொல்லித் தர்றேன்னு... போட்டோஷாப் சாஃப்ட் வேர் வைச்சு சொல்லி கொடுத்தாரு"

"அது சரி... இதை யாருடி பண்றது?" வீரா குழப்பமாய் கேட்க,

"நான் பண்ணிக் கொடுக்குறேன் க்கா... ஃப்ரெண்ட் வீட்ல கம்பூயூட்டர் ஸ்கேனர்லாம் இருக்கு... அங்க போய் பண்ணிக்கலாம்... நீ கவலைப் படாதே... அப்புறம் அதை லைசன்ஸ் கார்டா மாத்துறதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல"

வீரா அவள் சொல்வதைக் கேட்டு பூரித்துப் போனவள் கண்ணீர் மல்க தன் தங்கையை அருகில் அழைத்து, "நதி... நீ என்ன மாதிரி இல்லாம நல்லா படிச்சு அம்மா ஆசைப்பட்ட மாதிரி பெருசா வருவடி" என்று அவள் முகவாயைத் தடவி பெருமிதமாய் நெற்றியில் முத்தமிட்டாள்.

அமலா புன்னகைததும்ப, "நீ எங்கேயோ போயிட்டக்கா" என்று அவளும் சேர்ந்து நதியாவைப் புகழ, அப்போதைக்கான அந்த பிரச்சனைக்கு விடை கிட்டிய திருப்தியில் வீரா பெருமூச்செறிந்தாள்.

"அக்கா இன்னொரு மேட்டர்" என்று நதியா உரைக்க,

"இன்னாடி?" என்று கேட்டாள் வீரா.

"நீ எதுக்கும் ஒரு ஒரிஜ்னல் லைசென்ஸை எடுத்து வைச்சுக்கோ க்கா" என்றவள் சொல்ல வீரா குறும்பாகத் தலையசத்துவிட்டு,

"எவ்வளவோ செய்றோம்... இதை செய்ய மாட்டோமா?!" என்று விஜய் குரலில் தோரணையோடு பேச மூவரும் சிரித்துக் கொண்டனர்.

அதன் பிறகு சாரதி கொடுத்த பணத்தை வீரா நதியாவிடம் கொடுத்து, "வீட்டு ஒனரம்மாவுக்கும்... கமலா க்காவுக்கு கொடுக்க வேண்டிய காசையெல்லாம் கொடுத்திட்டு மிச்சத்தை பத்திரமா எடுத்து வை" என்றதும் அமலா தன் தமக்கையின் தோளை சுரண்டி,

"அக்கா" என்றழைத்தவள் மேலும்

"உனக்கு வேலை கிடைச்சதுக்கு எனக்கு ஒண்ணும் இல்லையா?!" என்று கேட்டாள்.

"உனக்கு இன்னா வேணும்னு சொல்லு அம்மு"

"பிரியாணி சாப்பிடலாமா?!" அமலா ஏக்கமாய் கேட்க,

நதியா முறைப்போடு, "இப்ப நாம இருக்கிற நிலைமையில காசு செலவு பண்ணி பிரியாணி துன்னே ஆவனுமா?" என்க, அமலாவின் முகம் சுருங்கிப் போனது.

"வாய மூடு நதி... கஷ்டம் நஷ்டமெல்லாம் எப்பவும் வந்துன்னுதான் இருக்கும்... அதுக்காக சின்ன சின்ன ஆசையைக் கூட அனுபவிக்காம... அப்புறம் என்னத்துக்கு அந்த துட்டு... நீ வா அம்மு... நாம கடைக்குப் போய் வாங்கின்னு வரலாம்... நதிக்கு கிடையாது" என்றதும் அமலா புன்னகையோடு, "ஒகே ஒகே" என்றாள்.

"அக்கா" என்று நதியா இழுக்க வீராவும் அமலாவும் அவளைப் பார்த்து நக்கலடித்து சிரித்தனர். இதைப் போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் அவர்கள்  வாழ்கையில் நடந்த துயரங்களை அவ்வப்போது மறக்கடித்துவிடுகிறது.

அன்று வீரா வேலைக்கு முதல் நாள் செல்லப் போகின்ற காரணத்தால் ரொம்பவும் பதட்டமாய் காணப்பட்டாள். தொண்டைக் குழியிலிருந்து வயிறு வரை ஜிவ்வென்று ஒரு உணர்வு மேலும் கீழுமாய் இறங்க,

எத்தனையாவது முறையாக என்று தெரியாது. கண்ணாடியில் அவள் உடையை சரி பார்த்துக் கொண்டு நின்றாள். அவளின் உடலமைப்பைக் காட்டாத வண்ணம் சற்றே லூசான முழுக்கை சட்டை. சட்டையின் முழங்கையை சில ஜான்கள் மடித்துவிட்டவள், கழுத்து ஒட்டியது போல ஒரு டீஷர்ட்டை உள்ளே அணிந்திருந்தாள். அவள் ஓட்டியிருந்த மீசையை உருத்து பார்த்தவள், எந்த வகையிலாவது தான் பெண்ணாக தெரிகிறோமா என ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தாள்.

"டேன் டன் டேன் டன் டேன் டன் டாடடாடைன்.... டேன் டன் டேன் டன் டேன் டன் டாடடாடைன்.... "

பின்னிருந்து அமலாவும் நதியாவும் தன் வாயலேயே இசையமைக்க, "இன்னாங்கடி பண்றீங்க?" வீரா கடுப்பாய் திரும்பினாள்.

"அவ்வை சண்முகி பட மீயூசிக் க்கா... கமல் ஆள்மாறாட்டம் பண்ற சீன் வரும் போது இப்படிதான் மீயூசிக் போடுவாங்க... மறந்திட்டியா?!" என்று அமலா சொல்ல

மீண்டும் அவர்கள் இருவரும் "டேன் டன் டேன் டன் டேன் டன் டாடடாடன்.... டேன் டன் டேன் டன் டேன் டன் டாடடாடன்" என்க,

"சீ நிறுத்துங்கடி" என்று கோபமானாள்.

வீரா மேலும், "இங்க எனக்கு அந்த சாரதியை நினைச்சா அல்லு உடுது... நீங்க இன்னடான்னா காமெடி பண்றீங்களாடி" என்றவள் முறைக்க,

"இன்னாத்துக்குக்கா டென்ஷன்... நீ எல்லாம் அசால்ட்டு பண்ணிடுவ" என்று நதியா சொல்லவும்,

"யூ ஒய் வொர்ரி... சாரதி ஒன்லி வொர்ரி" என்றாள் அமலா.

"ஏன்டி?" என்று வீரா புரியாமல் கேட்க,

"நீ டிரைவ் பண்ணி அந்த மனுஷன் பாவம்... அந்த பரிசுத்த ஆவியை கடவுள் ஆசிர்வதிப்பாராக... காட் பிளஸ் ஹிம்" என்று அமலா சிலுவையைக் கையால் வரைந்து மேலே கை காண்பிக்க, "அடிங்க" என்று வீரா அமலாவை முறைத்துவிட்டு, மீண்டும் திரும்பி தன் உடையை சரிபார்த்தாள்.

"திரும்பியும் முதல்ல இருந்தா" என்று நதியாவும் அமலாவும் வெறுத்துப் போய் தலையிலடித்துக் கொள்ள, வீரா அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் நடை, உடை, பாவனையெல்லாம் துளியளவும் சந்தேகமில்லாமல் ஒரு ஆணைப் போலவே இருக்கிறதா என்று செய்கையில் செய்து பார்த்துக் கொண்டாள்.

வீரா நடிப்பில் கைதேர்ந்தவள்தான். ஆனால் அது எந்தளவுக்கு சாரதியிடம் செல்லுபடியாகப் போகிறதென்பதுதான் இனி வரும் பதிவுகளின் உச்சபட்ச சுவாரஸ்யமே!

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content