You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 18

Quote

18

மனகலக்கம்

வீரா அச்ச உணர்வோடு சாரதியிடமிருந்து பின்வாங்கிக் கொண்டிருக்க அவனோ முறைப்பான பார்வையோடு,

"நானும் உன்னை முதல் நாள்ல இருந்து பார்க்குறேன்... உன் பேச்சே சரியில்ல... வாய்க்குள்ளேயே ஏதோ முனகுற... நக்கலா பேசுற... என்ன திமிரா?" என்று அதட்டினான்.

அவள் மிரட்சியுற்று, "அய்யோ! அப்படி அல்லாம் இல்ல சார்" என்க,

"இல்ல?!" என்று அவன் அவளை விழிகளை சுருக்கி கேள்வியாய் பார்த்தான். அவள் பதிலுரைக்க முடியாமல் திருதிருவென முழித்துக் கொண்டு நிற்க,

சாரதி அவளை விடுவதாக இல்லை!

"எதுவாயிருந்தாலும் என் கண்ணைப் பார்த்து நேருக்கு நேரா சொல்லு" என்க, அவளுக்குப் பதட்டம் அதிகரித்தது.

"சார்! நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணியும் இல்ல சார்" என்று வீரா திட்டவட்டமாய் மறுக்கவும் அவளை ஏற இறங்க நம்பாமல் பார்த்தவன்,

"இத பாரு வீரா... உன் நக்கலு நையாண்டியெல்லாம் இங்க வைச்சுக்காதே... உனக்கு என்னைப் பத்தி இன்னும் சரியா தெரியல... போனா போகுது... சின்ன பையன்னு பார்க்குறேன்" என்றவன் சற்று இடைவெளிவிட்டு மேலும் தொடர்ந்தான்.

"எனக்கான பெர்சனல் ஸ்பேஸ்ல யார் தலையிட்டாலும் எனக்குப் பிடிக்காது... அன்ட் நான் இப்ப்ப்ப்படிதான்... உனக்கு விருப்பமிருந்தா என்கிட்ட வேலை செய்... இல்லாட்டி போயிட்டே இரு" என்றவன் அதிதீவிரமாய் சொல்லி முடிக்க, அவள் பதிலின்றி நின்றாள்.

அவள் இதயம் படபடவெனத் துடிக்க வியர்த்துவடிய அவனை ஏறிட்டவள் மெலிதான குரலில், "சரி சார்... நான் இனிமே எதுவும் பேச மாட்டேன்" என்றாள்.

அப்போதும் அவன் பார்வையின் தீவிரம் குறைந்தபாடில்லை. அவன் அவளைக் கூர்ந்து பார்கக, அவனிடமிருந்து தப்பிக்க எண்ணமிட்டவள் உடனடியாய் தலையில் கைவைத்துக் கொண்டு,

"அய்யோ சார்... விஜி க்கா பாவம்!... வெளியே வந்து காத்தினிருபபாங்க... நான் போய் அவங்கள இட்டினு வந்துறேன்" என்று சொல்லிவிட்டு அவன் மேலே எதுவும் பேசுவதற்கு முன்னதாக, கிடைத்த சிறு இடைவெளியில் தப்பித்தால் போதுமென்று அந்த அறையை விட்டு ஓடியே போய்விட்டாள்.

'இவன் பயப்படுறானா... இல்ல நடிக்கிறானா?!' சாரதி குழப்பமாய் வீராவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, அவளிடம் தன்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது என்றளவில் அவன் மூளை அறிவுறுத்திக் கொண்டிருக்க அவன் மனமோ வீராவின் தன்னலமற்ற அக்கறையிற்கும் அன்பிற்கும் கொஞ்சம் கொஞ்சமாய் அடிமைப்பட்டுக்  கொண்டிருந்தது. ஆதலாலேயே அவனால் அவளைப் பற்றி யூகிக்க முடியவில்லை.

அதுவும் ஒரு பெண் தன்னை ஆண் வேடத்தில் வந்து ஏமாற்றக்கூடும் என்ற கோணத்தில் அவனால் யோசிக்கக் கூட முடியவில்லை என்பதுதான் உண்மை!

அதே போல் வீராவிற்கும் சாரதியின் பழக்கவழக்கங்கள் செயல்பாடுகளில் வெறுப்பும் கோபமும் இருந்தாலும் அவனை முழுமையாய் தவறான கண்ணோட்டத்தில் அவளால் பார்க்க முடியவில்லை. அவன் மீது என்னவென்று சொல்ல முடியாத மரியாதையும் ஈர்ப்பும் அவளுக்குள் இருந்தது.

ஆதலாலேயே அவன் மதுஅருந்திவிட்டு கார் ஓட்டுகிறேன் என்ற போது அவளால் அதனை அத்தனை சுலபமாய் ஏற்க முடியாமல் அவளும் அவன் உடன் சென்றாள். ஆனால் அதுவே அவளுக்கு வினையாய் முடிந்தது.

வீரா அன்று இரவும் வீட்டிற்கு வராதது அங்கிருந்த குடித்தனவாசிகள் பலருக்கும் புரளி பேச ஒரு அருமையான விஷயம் கிடைத்தது போல் இருந்தது.

அங்கிருந்தவர்கள் வீராவிடம் அவள் செய்யும் வேலை குறித்து விதவிதமாய் கேள்விகள் எழுப்ப,

அவள் உண்மையும் சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருந்தாள். அவள் சொல்லும் பொய்யோ உண்மையோ? இரண்டுமே அவளுக்கு எதிராய் முடிந்துவிடலாம். அப்படியே அவள் உண்மையே சொன்னாலும் யார் அதை நம்புவார்கள்?!

வீரா தன் வேலை குறித்து பதில் சொல்ல முடியாத நிலையில் தத்தளிக்க, அங்கு வசிப்பவர்கள் இதுதான் வாய்ப்பு என்று அவள் மீது சிற்சில அருவருப்பான கதைகளைப் புனைந்து அந்த ஏரியா முழுக்கவும் உலாவவிட்டனர்.

சரியான துணையில்லாமல் வாழ்கையோடு போராடிக் கொண்டிருக்கும் வீரா மாதிரியான பெண்களுக்கு இந்த சமூகம் செய்யும் கைம்மாறு அது!

ஆண்களின் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டு இத்தகைய பெண்கள் அவதியுறுவது போதாதென்று, பல பெண்களின் அவதூறான பேச்சுக்களுக்கும் பலியாக நேரிடுவதுதான் கொடுமையிலும் கொடுமை!

பெண்களே பெண்களின் வளர்ச்சிக்கும் சுதந்திரத்துக்கும் எதிரிகள் என்பது நாம் யாரும் மறுக்க முடியாத கசப்பான உண்மை!

அதே சூழ்நிலைதான் வீராவிற்கும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவள் ஒழுக்கமாகவே இருந்தாலும் சுற்றியுள்ளவள் அவளை ஒழுக்கங்கெட்டவளாக சித்திரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதற்காகவெல்லாம் அவள் யாரிடமும் தன் செயலுக்காக விளக்கமளிக்க விரும்பவில்லை.  

அப்படி சுற்றத்தாரின் வார்த்தைகளை ஒதுக்கினாலும் அவர்கள் அவளை விட்டுவைப்பதாகவும் இல்லை. நதியா சுற்றியுள்ளவர்கள் பேசுவதைப் பற்றியெல்லாம் சொல்லும் போது அலட்சியபடுத்திய வீரா,

அன்று தன் தங்கைகள் விசும்பி விசும்பி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த போதே பிரச்சனையின் தீவரத்தை உணர்ந்தாள்.

"என்னாச்சு அம்மு? இப்படியே அழுதிட்டிருந்தா என்னதான்டி அர்த்தம்?" என்று வீரா கோபமாய் கேட்க அமலாவின் அழுகையோ நின்றபாடில்லை.

வீரா நதியாவின் புறம் திரும்ப, அவளும் அழுதுவடிந்து கொண்டிருந்தாள்.

"நதி நீயாச்சும் சொல்லுடி" என்று வீரா கேட்க,

"அப்பவே சொன்னேன்... இந்த வேலையும்  வேணாம் ஒண்ணியும் வேணாம்னு... நீ கேட்டுக்கினியா?" என்றாள் கோபமாக!

"இப்ப இன்னாச்சு அதை முதல்ல சொல்லு"

"தப்பு தப்பா பேசிறாங்க க்கா"

"அதான் எப்பவும் நடக்குதே... இப்ப என்னடி புதுசா?"

"அய்யோ க்கா... உனக்கு எப்படி சொல்லுவேன்" என்றவள் தவிப்புற,

வீரா அப்போது அமலாவின் முகத்தை நிமிர்த்தி, "என்னாச்சு அம்மு? அக்காக்கிட்ட நீயாச்சும் சொல்லேன்" என்று கெஞ்சலாய் கேட்டாள்.

அமலா விசும்பிக் கொண்டே தன் தமக்கையை ஏறிட்டவள், "அந்த எதிர் வீட்டு மாடியில இருக்க பசங்க" என்றவள் ஆரம்பிக்க,

"யாரு? அந்த பேச்சுலர் பசங்களா?" என்று கேட்டாள்.

"ஹ்ம்ம்... அதே பன்னாடைங்கதான்... இன்னைக்கு நானும் நதிக்காவும் ஸ்கூல்ல இருந்து வரும் போது வழிமறிச்சு கலட்டா பண்ணானுங்க க்கா" என்று சொல்லி தேம்ப வீரா அவளை ஆழ்ந்து பார்த்தாள்.

அமலா மேலும், "அவனுங்க... உங்க க்காவுக்கு என்ன ரேட்டு... உங்க இரண்டு பேருக்கும் என்ன ரேட்டுன்னு கேட்டு ரொம்ப அசிங்கமா பேசினானுங்க" என்று சொல்லி வீராவின் மேல் சாய்ந்து கொண்டு அழ,

அவளுக்கு அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி சப்தநாடிகளும் ஒடுங்கிப் போனது. ஒற்றைத் துளி கண்ணீர் அவளின் விழியை விட்டு இறங்க, சுதாரித்து அதனை துடைத்துக் கொண்டவள் அழுது கொண்டிருந்த அமலாவை விலக்கி,

"அவ்வளவு திமிரா அவனுங்களுக்கு... நீ வா... அவனுங்க யாருன்னு காட்டு" என்று தன் கரத்தில் விளக்கமாறை எடுத்துக் கொண்டாள்.

"அக்கா வேணா க்கா எதுனாச்சும் பிரச்சனை ஆவப்போது" என்று நதியா பதற,

"வான்னு சொன்னேன்" என்று அமலாவின் கரத்தைப் பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு செல்ல நதியா எவ்வளவோ தன் தமக்கையை தடுத்தும் அவள் கேட்கவில்லை.

"நீ கம்முன்னு இங்கேயே இரு" என்று நதியாவை அதட்டு போட்டுவிட்டு வீரா விறுவிறுவென சென்று எதிர்வீட்டு மாடியேற,

"வேணாக்கா போயிரலாம் க்கா" என்று அமலா அஞ்ச, வீரா விடுவதாக இல்லை.

"யாருடி?" என்று வீரா அவ்விடம் சென்று நிற்க,

"அதோ... அந்த கருப்பு சட்டையும் அவன் பக்கத்துல நிற்கிறான் பாரு... அந்த கோழிமுட்டை கண்ணு... அவனும்தான்" என்று சுட்டிக் காட்டினாள் அமலா.

"சரி நீ வீட்டுக்கு போ" என்று வீரா அவளை அனுப்ப, "அக்கா" என்று அமலா அங்கேயே தயங்கி நின்றாள்.

"போடி" வீரா அழுத்தமாய் சொல்லி அவளை அனுப்பியவள் விளக்குமாறை பின்னோடு மறைத்து வைத்துக் கொண்டு அவர்கள் அறையின் வாசலில் வந்து நின்றாள்.

அந்த அறையில் உள்ள மூவரும் அவளை ஆச்சர்யமாய் பார்க்க அதில் ஒருவன், "பரவாயில்லடா...  தங்கிச்சிங்க கிட்ட சொன்னதைக் கேட்டு வீராவே வந்திருக்கா" என்றவன் அவளை அசடு வழியப் பார்க்க,

"வா வீரா... உள்ளே வா" என்று ஆர்வம் பொங்க அழைத்தான் ஒருவன்!

"தங்கச்சிங்க கிட்ட என்ன கேட்டீங்க?" நின்ற இடத்திலிருந்தபடி வீரா வினவ,

"நீ உள்ளே வா... எல்லாம் பார்த்து பேசிக்கலாம்"

"இன்னா பேசணும்?!”

"நிறைய பேசணும்... அதுவும் உன்னை மாதிரி சோக்கான பிகருக்கு இன்னா ரேட்டு வோணா தரலாம்" என்றவன் அவளைப் பார்வையாலேயே தீண்ட, மற்ற இருவர்களின் பார்வையும் கூட அவளை விழுங்கிவிடக் காத்திருந்தது.

வீரா ஆக்ரோஷமாய், "அடி செருப்பால... பொறுக்கி... புறம்போக்கு... நீங்க இன்னாடா தர்றது... நான் தர்றேன்டா உங்களுக்கு" என்று அவர்கள் மூவரையும் விளக்கமாறால் விலாசித் தள்ள,

மூவரூம் அவள் ரௌத்திரமாய் அடித்த அடியில் சில விநாடிகள் திக்குமுக்காடினர்.

ஆனால் சில விநாடிகளில் அவர்கள் சுதாரித்துக் கொண்டு வீராவின் கரத்திலிருந்த விளக்கமாறை பறித்துக் கொண்டு அவளைக் கீழே தள்ளிவிட, அவள் தரையில் சென்று வீழ்ந்தாள்.

"எவ்வளவு திமிரு இருந்தா எங்க இடத்துக்கே வந்து எங்களை அடிப்ப"

"பெரிய கலியுக கண்ணகி இவ"

"ஏன்டி... உன்னைப் பத்திதான்... இந்த ஊரே நாருதே... இன்னாத்துக்கு ஒவரா சீன் போடுற... என்ன? ஹைக்கிளாசுங்க கூப்பிட்டதான் போவியா... நாங்கெல்லாம் கூப்பிட்டா வரமாட்டியோ"

இவ்வாறாக அவர்கள் மூவரும் மாறி மாறிப் பேச, "செருப்பு பிஞ்சிரும்" என்றபடி கோபமாக கத்திக் கொண்டே அவள் எழுந்து நின்றாள்.

அந்த சமயம், "என்னடா பொம்பள புள்ளகிட்ட பிரச்சனை?" என்று கணீரென்று ஒரு குரல் ஒலிக்க,

அந்த மூவரும், "இந்த ஆளு ஏன்டா இப்போ வந்தான்" என்று அச்சத்தோடு தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டனர்.

அந்த குரலுக்குரிய ஐம்பது வயது மதிக்கத்தக்க முதியவர், "என்னம்மா? என்ன பிரச்சனை?" என்று வீராவிடம் அக்கறையாய் வினவ,

"இவனுங்க என் தங்கச்சிங்ககிட்ட தப்பு தப்பா பேசி வம்பு இழுக்கிறானுங்க" என்று வீரா எழுந்து நின்று அந்த பெரியவரிடம் தெரிவித்தபடி தன் கரத்தில் பட்ட இரத்த காயத்தை துடைத்துக் கொண்டாள்.

அந்த பெரியவர் உக்கிரமாகி, "இன்னாங்கடா பொழப்பு இதெல்லாம்... உங்களுக்கெல்லாம் போய் வீடு கொடுத்தேன் பாரு... என்னை செருப்பாலேயே அடிக்கணும்" என்று கோபமாய் கடிந்து கொண்டார்.

"இல்ல ஐயா இந்த பொண்ணுதான்" என்று ஒருவன் ஆரம்பிக்க,

"வாய மூடுங்கடா... உங்களைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது... ஆளையும் மூஞ்சிங்களையும் பாரு... இனிமே இந்த மாதிரி பொம்பள புள்ளங்ககிட்ட வம்பு பண்ணீங்க...  அப்பவே உங்க தட்டுமுட்டு சாமானெல்லாம் வெளியே போட்றுவேன் ஜாக்கிரதை" என்று அவர் எச்சரிக்க மூவரும் பீதி கலந்த பார்வை பார்த்துக் கொண்டனர்.

அந்த பெரியவர் வீராவைப் பார்த்து, "இவனுங்க ஏதாவது பிரச்சனை பண்ணானுங்கன்னா என்கிட்ட சொல்லும்மா" என்றதும் வீரா அவர்கள் மூவரையும் முறைத்தபடி அவரிடம் சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நடந்து சென்றாள்.

அதன் பின்னர் அந்த பெரியவர் மூவரையும் பார்த்து, "வாடகை எங்கடா?" என்று கேட்க அவர்களில் ஒருவன் உள்ளே சென்று பவ்வியமாய் பணத்தை  எடுத்து வந்து நீட்ட, அவர் மீண்டும் பார்வையாலேயே அவர்களை எச்சரித்துவிட்டுக் கீழே சென்றவர்,

வீரா வாசல் கேட்டை தாண்டுவதைப் பார்த்து, "ஏ பொண்ணு நில்லும்மா" என்றார்.

வீரா நின்று அவரைப் புரியாமல் திரும்பி நோக்க, "ஆமா... லாரில அடிப்பட்டுச்சே... அந்த சொர்ணத்தோட பொண்ணுதானே நீ!" என்று கேட்க,

"ஹ்ம்ம்" என்று வேதனையோடு வீரா ஆமோதிக்க அவர் முகத்திலும் வருத்தம் குடியேறியது.

"ப்ச் பாவம்... உங்க அம்மா எங்க வீட்டுல கூட வேலை செஞ்சது... ஹ்ம்ம்... இப்படியெல்லாம் ஆகியிருக்க வேண்டாம்" என்றவர் பெருமூச்செறிய, அவள் எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாய் நின்றாள்.

அவர் மேலும், "ஆமா உன் குடிகார அப்பன்  வேலைக்குப் போறானா இல்லையா?!" என்றவர் மேலும் வினவ, அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

"அந்த ஆளு எங்கேயோ போய் தொலைஞ்சிட்டான்... செத்தானா இருக்கானான்னு கூடத் தெரியல" என்றவளின் பார்வை அனலை கக்கியது. 

"அடப்பாவமே! நீ என்னம்மா பண்ற" அவர் இரக்கமாய் கேட்க,

"வேலைக்குப் போறேன்" என்றாள்.

"அப்படியா?!" அவர் முகத்தில் வியப்புக்குறி தென்பட,

"சரி சார்... நான் கிளம்பறேன்" என்றவள் செல்ல பார்க்க,

"இரும்மா!" என்றவர் மீண்டும் அழைக்க அவள் தயக்கமாய் ஏறிட்டாள்.

"இந்த ஏரியாவே கலீஜு... பொறுக்கிப் பசங்க ரவுடிப் பசங்களா இருக்கானுங்க... நீ இங்கே இருந்தா இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் வந்துக்குன்னுதான் இருக்கும்" என்றவர் சொல்ல அவள் சலிப்போடு,

"வேற எங்க சார் போறது... பிறந்ததுல இருந்து இங்கதான் வளர்ந்துக்கினேன்... எனக்கு வேற எந்த இடமும் தெரியாது" என்க,

"பேசாம நான் ஒண்ணு சொல்றேன் கேட்குறியா?!" என்றார்.

"இன்னா சார்?"

"எனக்கு வில்லிவாக்கத்தில ஒரு வீடு இருக்கு... அங்க வந்து இருந்துக்கோயேன்... நல்ல வசதியா காத்தோட்டோமா... இந்த மாதிரி கலீஜெல்லாம் அங்கே கிடையாது... உனக்கு தேவையான அல்லாத்தையும் நான் செஞ்சு தர்றேன்" என்று சொல்லி அவள் தோள் மீது அவர் தன் கரத்தை அழுந்தப் பிடிக்க,

அந்த தொடுகையிலும் பார்வையிலும் இருந்த வக்கிரம் வீராவை நிலைகுலைய வைத்தது. உள்ளுக்குள் அவளுக்கு கோபம் வெறியாய் ஏற அவரின் கையை ஆவேசமாய் தட்டிவிட்டு,

"த்தூ... பெரிய மனுஷனாயா நீயெல்லாம்" என்று கேட்டு செல்லப் பார்க்க,

"ஏய்! நான் சொல்றதைப் பொறாமையா கேளும்மா" என்று அவளின் கரத்தை பிடித்துக் கொண்டார். எரிகுழம்பமாய் அவள் தேகமெல்லாம் தகிக்க கரத்தை உதறியவள் அவரின் கன்னத்தில் அறைந்துவிட, அவர் அதிர்ந்து போனார்.

வீரா துரிதமாய் அங்கிருந்து செல்லப் பார்க்க, "அடிச்சிட்டா போற.... நீ என்னை எதிர்த்துக்குன்னு இந்த ஏரியால எப்படி இருக்கேன்னு பார்க்குறேன்டி"  என்று கோபாவேசமாய்  அந்த ஆள் அவளை நோக்கிக் கத்த,

"போயா கிழட்டுக் குரங்கு" என்று சொல்லிவிட்டு தன் வீட்டை அடைந்தவள், வேகவேகமாய் கதவைத் தாளிட்டுக் கொண்டு அப்படியே தரையில் சரிந்து மூச்சுவாங்கினாள்.

அவள் முகத்தில் பிரதிபலித்த படபடப்பைப் பார்த்த அமலாவும் நதியாவும், "இன்னாக்கா ஆச்சு?" என்று அச்சத்தோடு வினவ,

அவள் பதில் பேசாமல் சிலையாய் சமைந்திருந்தாள்.

"என்னாச்சு க்கா சொல்லுக்கா" என்று அவர்கள் இருவரும் மேலும் பதறினர். 

தங்கைகளின் முகத்தை பார்த்தவள், "நம்மள யாரும் நிம்மதியா வாழவே விடமாட்டானுங்க போல" என்றவள் வேதனையோடு சொல்ல,

"என்னாச்சு க்கா" என்று நதியாவும் அமலாவும் வீராவின் கரத்தைப் பற்றிக் கொண்டனர்.

"நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?"

"சொல்லுக்கா" என்று இருவரும் ஒரு சேரக் கேட்டனர்.

"நம்ம மூணு பேரும்... பேசாம தூக்கு போட்டு தொங்கிடலாம்" அவள் தீவிரமாய் சொல்ல, "அக்க்க்க்க்கா" என்று அமலாவும் நதியாவும் அதிர்ந்தனர்.

"ஏன்டி கத்துறீங்க? பயமா இருக்கா?"

"அக்கா" இறங்கிய தொனியில் அழைத்து இருவரும் அவளைத் தவிப்பாய் பார்த்தனர்.

"இந்த கேவலமான உலகத்துல பொம்பள ஜென்மமா வாழ்றதை விட சாவுறது எவ்வளவோ மேல்"

"என்னக்கா பேசுற?"

"நிஜமாதான் சொல்றேன் போய் அம்மா புடவையை எடுத்துக்கின்னு வாங்க... மூணு பேரும் தொங்கிரலாம்"

"வேணா க்கா இப்படியெல்லாம் பேசாதே... பயமா இருக்கு"

"இவன் இதைச் சொல்லிட்டான்... அவன் அதைச் சொல்லிட்டான்.. எவன் எப்போ என்ன பண்ணிடுவான்னு... நிமிஷத்துக்கு நிமிஷம் பயந்து பயந்து வாழ்றதுக்கு சாவுறது மேலு பாரு”

"நீயா க்கா இப்படி பேசுற"

"பின்ன... நீங்க இரண்டு பேரும் கண்ட பரரதேசிக்கெல்லாம் பயந்துக்கின்னு அழுதிக்கின்னு கிடக்குறீங்களே"

"அக்கா"

"இதப் பாருங்கடி...  ஒண்ணு  எல்லாத்தையும் தைரியமா சமாளிக்கணும்... இல்ல... சாவணும்... இன்னா சொல்றீங்க?! " என்று வீரா தீர்க்கமாய் கேட்க இருவரும் யோசனையாய் அவளைப் பார்த்தனர்.

வீரா மேலும், "ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க... இப்ப நாம இருக்குற நிலைமைக்கு எல்லாத்தையும் தில்லா சமாளிக்கப் பழகணும்டி... இல்ல... சமாளிச்சே ஆகணும்... நமக்கு வேறவழியும் இல்ல" என்றவள் அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

அமலாவும் நதியாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து தங்கள் மனஎண்ணங்களை பரிமாறிக் கொண்டு,

"இல்ல க்கா... இனிமே நாங்க அழ மாட்டோம்... எல்லாத்தையும் தில்லா சமாளிக்கிறோம்" என்று நதியா சொல்ல,

அமலாவும், "ஆமா க்கா... இனிமே எவனாச்சும் கலாட்டா பண்ணட்டும் அவன் மூஞ்சி கீஞ்செல்லாம் உடைச்சு டாராக்கிடுறோம்" என்றாள்.

"நிஜமா?!" என்று வீரா கேட்டு கண்ணீரோடு முறுவலிக்கவும்,

இருவரும், "சத்தியமா க்கா" என்று  தன் தமக்கையின் கைகளை அவர்கள் கரத்தோடு சேர்த்துக் கொண்டனர். வீராவும் அவர்களை அணைத்துக் கொண்டு அவளுக்கு அவளே ஆறுதல் தேடிக் கொண்டாள். 

வீராவிற்கு உறுதியாக தெரிந்துவிட்டது. இந்த சமுதாயத்தில் சரியான ஆதரவில்லாத பெண்கள் வாழ நிறைய போராட வேண்டியிருக்கும் என்று!

அதற்காகவே தன் தங்கைகளிடம் அவ்விதம் பேசி அவர்களின்  மனதைரியத்தைக் கூட்டினாள். ஆனாலும் அவர்களை நோக்கி என்னென்ன பிரச்சனைகள் வர போகிறதென எண்ணும் போதே அவளுக்குத் தலை சுழன்றது. உள்ளூர அச்சம் ஏகபோகமாய்  பரவிக் கொண்டிருந்தது. அவளின் அந்த மனகலக்கம் சாரதியின் பார்வையிலிருந்தும் தப்பிக்கவில்லை.

"என்ன பிரச்சனை உனக்கு?" என்று சாரதி காரை ஓட்டிக் கொண்டிருந்த வீராவிடம் வினவ,

"என்னயா சார் கேட்குறீங்க?" என்று சொல்லிக் குழப்பமுற பார்த்தாள்.

"உன்னைதான்... இரண்டு நாளே முகமே சரியில்லை"

'இவனுக்கு எப்படி தெரிஞ்சுது?!' என்றெண்ணத்தோடு வீரா மௌனமாய் இருக்க, அவன் மேலும் அவளையே நோக்கியபடி,

"அதிகபிரசிங்கத்தனமா ஏதாச்சும் உளறிட்டிருப்ப... இப்ப ஏன் இப்படி மௌன சாமியார் மாதிரி வந்துட்டிருக்க" என்றான்.

"இல்ல சார்... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல" என்றவள் சமாளிக்க,

அவன் அவளை நம்ப முடியாமல் ஒரு பார்வை பார்த்தவன் கார் அலுவலகத்தில் நிற்கவும், அவன் மேலும் அவளை குழப்பமாய் தன் பார்வையாலேயே ஆராய்ந்துவிட்டு அகன்றான்.

'இவனுக்கு என்னதான் பிரச்சனை... நாம பேசினாலும் கடுப்பாவுறான்... பேசலனாலும் ஏன் பேசலன்னு கேட்டு உயிரை எடுக்குறான்' என்று புலம்பிக் கொண்டாள் வீரா!

அதே நேரம் சாரதி தன் அலுவலக அறையில் நுழைந்ததிலிருந்து கணேஷிடம் முக்கியமான ஒரு ரகசியப் பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்தான்.

"நாளைக்கு மட்டும் நான் நினைக்கிற மாதிரி எல்லாம் நடந்திடுச்சு... அந்த அரவிந்த் அலறி அடிச்சிகிட்டு சென்னைக்கு வருவான்" என்று சாரதி வெறியோடு சொல்ல,

"சார்! இதுல நமக்கும் ரிஸ்க் இருக்கு" என்று கணேஷ் பதட்டமானான்.

"எந்த ரிஸ்கும் இல்ல... நான் எல்லாத்தையும் பக்கவா ப்ளான்  பண்ணியிருக்கேன்" என்றவன் தன் கைகடிகாரத்தைப் பார்த்து,

"இன்னும் பதினெட்டு மணிநேரம்தான்... இந்த சாரதி யாருன்னு அந்த அரவிந்துக்கு நான் ஒரு டீஸர் காட்டுறேன்... ஹியர் த கேம் ஸ்டார்ட்ஸ்" என்று சொல்லிய சாரதியின் இதழ்களில் வஞ்சமான புன்னகை இழையோட  கண்களில் அத்தனை வெறி!

அரவிந்த் மட்டும் இப்போது சாரதி கண்முன்னே இருந்திருந்தால் அவனின் கோபத்தின் உஷ்ணத்தில் கருகிப் போயிருப்பான். அதற்கு பதிலாகத்தான் அடுத்த நாள் விடியற் காலையில் மங்களம் சில்க்ஸ் கட்டுக்கடங்கா தீயில் எரிந்து கொண்டிருந்ததோ என்னவோ?!

இவர்கள் தொடங்கிய இந்த பழிதீர்க்கும் விளையாட்டில் சேதமும் நஷ்டமும் இருபக்கமும் அபரிமிதமாய் இருக்கப் போகிறது. 

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content