You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 22

Quote

22

தற்காப்பு

சாரதி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்  கால் மீது கால் போட்டுக் கொண்டு சிகரெட்டைப் புகைக்க, அவளோ அசைவின்றி அவனை நிமிர்ந்து நோக்க தயங்கிக் கொண்டு தலைகவிழ்ந்து நின்றிருந்தாள்.

'எப்படி தெரிஞ்சிருக்கும்?' என்ற எண்ணியவளுக்கு அப்போது அரவிந்தின் நினைவுதான் வந்தது.

'அல்லாம் அவனாலதான்.... பேமானி என் உசுர எடுக்கவே வந்தான் போல.... நல்லாவே இருக்கமாட்டான்... நாதாரி!" என்று மனதார அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

சாரதி அவளையே உருத்துப் பார்த்து, "ஆமா! நீ மைண்ட் வாய்ஸ்லயேதான் பேசுவியா... எப்போதான் நீ உன் சொந்த வாய்ஸ்ல பேசுவ" என்றவன் கிண்டலாய் கேட்க,

அவளோ அவன் கணிப்புத் திறனை எண்ணி சற்றே மிரண்டு அவனை நிமிர்ந்து நோக்க, அவன் ஓர் ஏளனப் புன்னகையோடு அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த பார்வையின் தாக்கம் அவளை மொத்தமாய் நிலைகுலையச் செய்தது.

'இவன் நம்மள வெச்சு செய்யப் போறான் போலயே.. வீரா நீ செத்த' என்று உள்ளூர அவள் மனம் தாறுமாறாய் படபடத்துக் கொண்டிருந்தது.

அவள் மௌனமாய் இருப்பதைப் பார்த்து, "என்ன டார்லிங்? பேசவே மாட்டேங்குற... உன் சொந்த வாய்ஸ் எப்படித்தான் இருக்கும்னு நான் கேட்க வேணாமா?" என்று நமட்டு சிரிப்போடு அவன் கேட்க,

'டார்லிங்காஆஅ!!!'  உச்சபட்ச அதிர்ச்சியானது அவளுக்கு!

எச்சிலைக் கூட்டி விழுங்க அது கூட அவள் தொண்டைக் குழிக்குள் செல்லாமல் அப்படியே திக்கி நின்றது. அவள் பதட்டத்தை ஆரத்தீர ரசித்துக் கொண்டிருந்தவன், அவளை விடுவதாக இல்லை.

"கமான் வீரா! உன் குரலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே.... பேசு" என்று சொல்லி அவள் நிலைமை புரியாமல் அவன் மேலும் அவளை நக்கலடிக்க,

வேறு சூழ்நிலையாக இருந்திருந்தால் அவன் பேசிய தோரணைக்கு அவள் சிரித்திருப்பாள். ஆனால் இப்பொழுது அழுகை அழுகையாக வந்தது. விழிகள் சிவந்து கண்ணீர் உள்ளேயே தேங்கி நின்றது. பார்வை மங்கிவிட,

ம்ஹும்! அவன் முன்னிலையில் அழுதுவிடவேக் கூடாது. அதுவே தன் பலவீனத்தைக் காட்டி கொடுத்துவிடும் என்று தீர்க்கமாய் எண்ணிக் கொண்டவள் அந்த கண்ணீர் துளிகளை பிரயாத்தனப்பட்டு அவனிடமிருந்து மறைத்துக் கொண்டாள்.

அதோடு அவள் தன்னைத்தானே  ஆசுவாசப்படுத்திக் கொண்டு, 'வீரா ஆல் இஸ் வெல்... ஆல் இஸ் வெல்' என்றபடி மனதை திடப்படுத்திக் கொள்ள,

"இப்போ பேசுவியா மாட்டியா?!" விளையாட்டுத்தனம் மறைந்து அவன் குரலில் கோபம் தொனித்தது. அவனை பயத்தோடு நிமிர்ந்து பார்த்தாளே ஒழிய அப்போதும் அவளுக்குப் பேச்சு வரவில்லை.

அதிர்ச்சியில் தொண்டை அடைத்து வார்த்தைகள் வெளிவராமல் அவளைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்தது. அவள் உணர்வுகள் புரியாமல் அவன் பொறுமையிழந்து,

"ஏ!!! பேசுடி" என்று சீற்றத்தோடு எழுந்து நிற்கவும்,

அவளுக்கு அண்டசராசரமே நடுங்கியது போலிருந்தது. அந்த நொடியே அவள் தன் சொந்தக் குரலில், "சார்" என்று பதறித் துடித்து பின்வாங்கினாள்.

அவன் கரங்களைக் கட்டி கொண்டு கோபம் இறங்கி அவளை அளவெடுத்துப் பார்த்தவன்,

"உன்கிட்ட ஏதோ ஓட்டாம நிக்குதேனு ஆரம்பத்திலேயே எனக்கு தோணுச்சு" என்று சொல்லிய மறுநொடியே அவள் சற்றும் எதிர்பாராமல் எட்டி அவள் ஒட்டுமீசையை அவன் பிரித்து எடுத்தான்.

"ஆஅ..." என்று அவள் கதற  அதனை தூக்கியெறிந்தவன்,

"இப்ப எதுக்கு ஒட்டு மீசையை எடுத்ததுக்குப் போய் ஒரிஜினல் மீசையை எடுத்த மாதிரி கத்துற" என்று அவன் அதட்ட, அவள் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

அவன் பார்வை இப்போது இன்னும் ஆழமாய் அவளைப் பார்த்து, "ஆமா! இது ஓரிஜினல் முடிதானா?!" என்று சந்தேகமாய் கேட்க,

"அய்யோ சார்!!" என்று இன்னும் பின்னோடு சென்று படுக்கையில் இடித்து அதன் மீது சாய்ந்த விழப் போக உடனடியாய் சாரதி அவள் கரத்தை கெட்டியாய் விழாமல் பிடித்துக் கொண்டான்.

அதோடு அவளை அவன் முன்புறம் இழுத்துவிட, அவள் நின்ற மறுறணம் அவன் கரத்தை உதறிக் கொண்டு நகர்ந்து சென்று நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்து கொண்டாள்.

அவள் செய்கையைப் பார்த்தவன் தலையிலடித்துக் கொண்டு, "சே! ஏசி ஆன் பண்ணவே மறந்துட்டேன் பாரேன்... வெயிட் எ செகண்ட்" என்று சொல்லி அவன் ஏசி ஸ்விட்சை போடப் போக,  அவன் செய்கையும் நடவடிக்கையும் அவளுக்கு ரொம்பவே விசித்திரமாய் இருந்தது.

அதே சமயம் அவள் மூளை அப்போதே இயங்கத் தொடங்கியது. அவள் உடனடியாய் அவனிடமிருந்து தப்பிக்க எண்ணி கதவருகே சென்று அதனைத் திறக்க முற்பட்டாள்.

அவன் அவள் செய்கையைக் கவனித்து அலட்சியமாய்,

"அது ஆட்டோமெட்டிக்னு முதல்லயே உன்கிட்ட நான் சொல்லல... ஸோ  டோன்ட் வேஸ்ட் யுவர் எனர்ஜி... இட்ஸ் ஆன் மை கன்டிரோல்... நான் திறந்திடு சீசேன்னு சொன்னா மட்டும்தான் திறக்கும்" என்று வெகுஇயல்பாய் சொல்லிக் கொண்டே ஏசியை ஆன் செய்து விட்டு வந்தான்.

அவன் சொன்னது உண்மைதான். அந்த கதவு அவளின் முயற்சிக்கு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. அவள் தவிப்போடு கதவில் சாய்ந்து கொண்டு நின்றுவிட,

அவன் அந்த அறையின் படுக்கையில் அமர்ந்து கொண்டு, "அதை விடு... நீ வா... வந்து உட்கரு" என்று அழைக்க அவள் முகம் இருளடர்ந்து போனது.

அவள் பதறிக் கொண்டு, "ம்ஹும்" என்று அவசரமாய் தலையசைத்து மறுக்க,

"எனக்கு இந்த மாதிரி பார்மாலிட்டீஸ் எல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல... வா உட்காரு" என்றவன் மீண்டும் அழைக்கவும் அவளுக்கு பதட்டம் கூடியது.

அதிர்ச்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டு அவள் கதவருகிலேயே நிற்க,

"இப்ப நான் உன்னை என்ன பண்ணிட போறேன்னு அங்கேயே நிற்கிற... ஏன்? என் கூட ஒரே ரூம்ல ஒண்ணா நீ இருந்ததேயில்லயா... இல்ல நைட் டேன்னு பார்க்காம நீ என் கூட ட்ராவல் பண்ணதில்லையா... இப்ப மட்டும் புதுசா என்ன வந்துச்சு?" என்றவன் அழுத்தமாய் கேட்க அவள் பதிலின்றி மௌனமாகவே நின்றாள்.

அவளின் அந்த அமைதியில் சற்றே கடுப்பானவன் எழுந்து அந்த அறை கப்போர்டில் வைக்கப்பட்டிருந்த விஸ்கி பாட்டிலை எடுக்க அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

"சார்... வேணா சார்" என்றவள் பதட்டத்தோடு குரல் கொடுக்க,

"ஏன் ?" என்று கேட்டு அவள் புறம் திரும்பினான்.

"சார்! குடிக்காதீங்க சார்... எனக்கு பக்குன்னு இருக்கு" என்க,

"அன்னைக்கு ரிஸார்ட்ல நான் குடிக்கும் போது நீ என் பக்கத்துலதானே இருந்த... அப்போ இல்லையா... பக்குன்னு" என்றவன் கிண்டலாய் கேட்க,

"சாரி சார்... நான் பொய் சொன்னது தப்புதான்... ஆனா நான் வேணும்னே செய்யல" என்று அவள் மூச்சைப்பிடித்துக் கொண்டு பேச,

"நீ சொன்னது வெறும் பொய்யா?!" என்று கேட்டபடி கிளாஸில் விஸ்கியை ஊற்றிப் பருக ஆரம்பித்தான்.

"சார்ர்ர்ர்ர்" என்றவள் தவிப்போடு  அவனைப் பார்க்க, 

"செஞ்சதெல்லாம் ஃப்ராடு வேலை... சரியான ஃப்ராடு... பொய்யின்னு ஈஸியா முடிக்கலாம்னு பார்க்குறியோ?!" என்று கேட்டு தீவிரமாய் முறைத்துக் கொண்டு அவள் எதிரே வந்து நின்றான்.

"நான் ஒண்ணியும் ஃப்ராடு வேலையெல்லாம் பண்ணல"

அவன் அப்படி சொன்னதும் அவளுக்கும் கோபம் தலைத்தூக்கிற்று.

"அப்படியா?! சரி... உன் லைசென்ஸை எடு பார்ப்போம்" என்றவன் கை நீட்டி கேட்க, "அது" என்று தடுமாறினாள்.

"லைசென்ஸை எடுன்னு சொன்னேன்" அவன் முறைப்பாய் கேட்க,

"அய்யோ சார்! நான் அல்லாமே உன்கிட்ட சொல்றேன்... ஆனா வூட்டுக்கு போய் பேசிக்கலாமே... இங்க வோணாம்" என்றவள் தவிப்புற அவன் முகத்தில் எந்தவித மாறுதலும் இல்லை.

"இங்கதான் பேசணும்... இல்லன்னா போலீஸ் ஸ்டேஷன்லதான்... எப்படி வசதி?" என்றவன் சொல்ல அவள் பதறிக் கொண்டு,

"இன்னாத்துக்கு? நான் அவ்வளவு பெரிய தப்பெல்லாம் ஒண்ணும் பண்ணல" என்றாள்.

"பெருசா சின்னதாங்கிறதெல்லாம் அவங்க முடிவு பண்ணிப்பாங்க... நீ வந்தா மட்டும் போதும்" என்றான்.

"சார்... நான் சொல்றதை" என்றவள் பேச ஆரம்பிக்கும் போதே,

அவன் தன் ஒற்றைக் கரத்தை கதவில் ஊன்றி மற்றொரு கையால் கிளாஸிலிருந்து ரம்மை வாயில் ஊற்றிக் கொண்டே, "ஹ்ம்ம் சொல்லு" என்றவன் கிறக்கமாய் அவளை நெருங்கி நின்று பார்வையிட,

"சார் வேணாம் சார்... தள்ளி நில்லுங்க" என்றவள் தவிப்பாய் கதவோடு ஒண்டிக் கொண்டு அவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.

"ஏன் இப்போ டென்ஷாகுற? இதான் நான் ஃபர்ஸ்ட் டைம் உன்னை நெருங்கி நிற்கிறேனா? இதுவரைக்கும் என் கை உன் மேல பட்டதேயில்லையா? ஹ்ம்ம்" என்று புருவங்களை உயர்த்திக் கேட்டான்.

"அய்யோ! நான் இதுக்காகதான் சார் ஆம்பள வேஷமே போட்டுக்கினே" என்றவள் ஆவேசமாய் கத்திவிட,

"எதுக்காக?" என்று கேட்டபடி அவன் விலகி நின்று அவளைக் கூர்மையாய் பார்க்க,

"நான் வேலை தேடி போன இடத்துல... வேலை பார்த்த இடத்துல அல்லாம்  என்னைத் தப்பாவே பார்த்தானுங்க... அம்மா அப்பா இல்லன்னாலே அல்லாருக்கும் ஒரு எளக்காரம் பாரு...  வேலியில்லாத பயிருல்ல... அதான் எவன் வோணா மேயலாம்னு நினைப்பு”

"அல்லாருக்கும் நான் உடம்பாதான் சார் தெரிஞ்சேன்... உயிரோடு இருக்கிற மனுஷியா தெரியல... எப்படான்னு காத்தினிருக்கானுங்க... பிணந்தின்னி கழுகுங்க மாறி... முடியல சார்"

"இதுல என்னை நம்பி இரண்டு தங்கச்சிங்க வேற...அதுவும் நல்லா படிக்கிற பசங்க சார்... என்னையும் காப்பாத்திக்கணும்... அவங்களையும் படிக்க வைக்கணும்னு நினைச்சேன்... ஆனா சத்தியமா உங்களை ஏமாத்தணும்னு அல்லாம் இந்த வேஷத்தைப் போட்டுக்கல... என்னை காப்பாத்திக்கணும்னுதான் போட்டுக்கினே" என்று உணர்ச்சி பொங்க பேசியவள் இறுதியாய் கையெடுத்துக் கும்பிட்டு,

"அது தப்புன்னா... என்னை மன்னிச்சிடுங்க" என்றாள்.

அவள் பேசி முடித்ததும் அந்த அறை முற்றிலும் நிசப்தமாய் மாறிவிட அவள் தலையை நிமிர்த்தி சன்னமான குரலில்,

"நான் போயிடுறேன் சார்... கதவை மட்டும் திறந்து விடுங்க" என்று கெஞ்சலாய் கேட்டாள்.

"திறந்துவிடலன்னா"

அவன் எகத்தாளமாய் கேட்க அதிர்ந்த  பார்வையோடு அவனைப் பார்த்தவள் மீண்டும் மௌனமாய் தலையைப் பிடித்து கொண்டு நிற்க,

"என்ன சைலன்ட்டாயிட்ட?" என்று கேட்டான்.

அவள் தன் விழிநீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்வையிட, அப்போது அருகாமையில் இருந்த மேஜையில் கண்ணாடியிலான அழகிய பூஜாடி ஒன்று அவள் கண்ணில்பட்டது.

அதன் ரசிக்கும்படியான அழகைத் தாண்டி அவளுக்கு அது தற்காத்து கொள்ளும் ஆயுதமாகவே காட்சியளிக்க, வேகமாக அதனை எட்டி கையிலெடுத்துக் கொண்டாள்.

சாரதி அவள் செய்கையைப் பார்த்து புன்னகை ததும்ப,

"ஒ!! அத வைச்சு என்னை அடிக்கப் போறியா?!" என்று கேட்க,

"ஆமா... நீங்க என்கிட்ட தப்பா கிப்பா நடந்துக்குனீங்க... கண்டிப்பா அடிச்சிருவேன்" என்று அவனிடம் எச்சரிக்கை விடுத்தாள்.

அவன் தன் சிரிப்பைப் பிரயத்தனப்பட்டு கட்டுபடுத்திக் கொண்டு,

"இது ஒண்ணும் விளையாட்டில்ல... உன்னை அப்புறம் கொலை கேஸில தூக்கி உள்ள போட்டுருவாங்க... பார்த்துக்கோ" என்க,

"அதல்லாம் பரவாயில்லை" என்றாள் தீவிரமான பார்வையோடு!

"அப்புறம் உன் தங்கசிங்களோட நிலைமை" என்றவன் கேட்கவும் அவளின் ஆவேசமெல்லாம் லேசாய் அடங்க,

"ஒழுங்கா... அதை கீழே வை" என்றான் சாரதி அதட்டலாக!

"மாட்டேன்... என் தங்கச்சிங்க ஒண்ணும் கோழைங்க இல்ல... நான் இல்லன்னாலும் அவங்க சமாளிச்சுப்பாங்க" என்க, "ஹ்ம்ம்ம்" என்றவன் அவளை மெச்சிய பார்வை பார்த்து முறுவலித்தான்.

அவளுக்கோ பயத்தில் கைகள் நடுங்க, அப்போதும் அசறாமல் அந்த ஜாடியைக் கையில் உறுதியாய் பிடித்துக் கொண்டு நின்றாள்.

சாரதி அலட்சியப் பார்வையோடு, "சரி சரி .. நீ பெரிய டெரர் பீசுதான்... நான் ஒத்துக்குறேன்... ஆனா அதை கீழே வைச்சிரு... அது ரொம்ப காஸ்ட்லி பீஸ்... உடைஞ்சுதுன்னா திரும்ப வராது"  என்றான்.

"அதல்லாம் வைக்க முடியாது... என் கற்பு போனா மட்டும் திரும்ப வருமா?" என்றவள் முறைப்பாய் கேட்க, அவள்  சொன்னதைக் கேட்ட நொடி அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

'நான் இப்போ இன்னா சொல்லிட்டேன்னு இவன் இப்படி சிரிக்கிறான்' என்று எண்ணியபடி அவனை அவள் புரியாமல் வெறித்துப் பார்க்க,

அவன் சிரித்து சிரித்து தன் விழியில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு, "சத்தியமா உன் கூட என்னால முடியல... எப்படி இப்படி டைமிங்ல காமெடி பண்ற" என்று கேட்டான்.

'காமெடி பண்றேனா?!' அவள் புருவங்கள் சுருங்க அவனைப் பார்க்க,

"ஆமா... நான் உன்னை ரேப் பண்ண  போறேன்னு முடிவே பண்ணிட்டியா?" என்று கேட்க அவள் குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.

அவன் சிரித்துக் கொண்டே,

"அந்த மாதிரியான நான்சென்ஸ் வேலையெல்லாம் நான் பண்ணமாட்டேன்...  பார்க்குற பொண்ணுங்ககிட்ட எல்லாம் செக்ஸை தேடுற சீப்பான ஆள் நானில்ல... செக்ஸ்... என்  டென்ஷனுக்கிடையில ஸ்டிரெஸ் ரிலிஃப்... தட்ஸ் இட்... அன்ட் அதல்லாம் தாண்டி..." என்று இடைவெளிவிட்டு மீண்டும் சிரித்தவன்,

"உன்னை என்னால பொண்ணாவே பார்க்க முடியல வீரா... அப்புறம்தானே மத்ததெல்லாம்... ஹ்ம்ம்ம்" என்று சொல்லி அவன் அவளைப் பார்த்து ஏளனமாய் சிரிக்க, அவள் புருவங்கள் நெறிந்தன.

அவனை விழி இடுங்கப் பார்த்தவளுக்கு அவன் சொன்ன வார்த்தை சற்றே கடுப்பாகவும் கோபமாகவும் இருந்தது.

அவன் முறுவலித்து, "அத இப்பையாச்சும் கீழே வைக்கலாமே!" என்றவன் சொல்ல அப்போதும் அவள் கொஞ்சம் சந்தேகம் நீங்காமல் அவனைப் பார்த்துக் கொண்டே வைக்க,

அவன் பதட்டத்தோடு "அம்மா தாயே! உன் கற்புக்கு எந்த பங்கமும் வராது... அதை பத்திரமா கீழே வைக்கிறியா... இட்ஸ் மோர் பிரஷ்சியஸ் பாஃர் மீ... உன் கற்பு உனக்கு எப்படியோ எனக்கு அது அப்படி" என்றான்.

அந்த ஜாடியை அப்போதுதான் உற்று கவனித்தாள். அது அழகாய் மின்னி ஒளிர்ந்து கொண்டிருக்க, அது நிச்சயம் விலையுயர்ந்த பொருளாகத்தான் இருக்கும் என்பது புரிந்தது. ஆனால் அதைத் தன் கற்போடு பொருத்திப் பார்க்குமளவுக்கா ?

இந்த கேள்வி அவள் மனதில் எழ அவனுக்கு உணர்வுகளை விட உயிரற்ற பொருட்கள் மீதுதான் காதல் போலும் என்றெண்ணிக் கொண்டாள். ஆனால் இப்படியானவன்தான் ஒருநாள் அவளின் காதலுக்காகவும் கற்பிற்காகவும் எல்லாவற்றையும் துச்சமாய் தூக்கியெறியவும் துணியப் போகிறான்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content