You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 23

Quote

23

வியப்புற்றான்

இருள் சூழ்ந்திருக்க, அந்த பங்களாவின் வெளிப்புற தோட்டத்தின் மின்விளக்குகள் வெளிச்சத்தை சரிவிகிதமாய் பரப்பி அந்த இடம் முழுக்கவும் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.

சாரதி நடந்து கொண்டே பேசியில் யாரிடமோ தீவிரமாய் அளவளாவிக் கொண்டிருக்க, வீரா கையைப் பிசைந்தபடி அவன் பின்னோடு தயக்கமாய் வந்து நின்றாள்.

அவளைப் பார்த்தவன் புருவத்தை மேலுயர்த்தி என்னவென்று சமிஞ்சையால் கேட்க, "சார்! வூட்டுக்குப் போணும்... தங்கச்சிங்க தனியா இருப்பாங்க" என்றாள்.

அவனோ அவள் சொன்னதை சரியாகக் கூட கவனியாமல் அலட்சியமாய் தலையசைத்துவிட்டு மீண்டும் பேசியில் தன் உரையாடலைத் தொடர,

அவளுக்குக் கடுப்பானது.

'என் டென்ஷன் புரியாம இவன் வேற...  ஃபோனைத் தூக்கி காதுல வைச்சுக்கின்னு பேசினேகீறான்' அவள் புலம்பி கொண்டே மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ள,

அவன் தன் உரையாடலை முடித்து தன் செல்லை பாக்கெட்டில் நுழைத்தபடி, "என்ன சொன்ன?" என்று கேட்டான்.

"அது வந்து சார்! வூட்டுக்குப் போகணும்" என்றவள் தயக்கத்தோடு சொல்ல, "நாளைக்குக் காலையில போயிக்கலாம்" என்றான்.

"சார்ர்ர்ர்" என்று அவள் அதிர்ச்சியோடு விளிக்க,

அவளை நேர்கொண்டு பார்த்தவன், "என்ன?" என்றான்.

"இல்ல சார்! தங்கச்சிங்க தனியா இருப்பாங்க" என்று குரலைத் தாழ்த்தியபடி உரைத்தாள்.

"தனியா இருந்தா என்ன? அவங்கதான் நீயில்லன்னாலும் சமாளிச்சுப்பாங்களே... விடு... காலையில போயிக்கலாம்" என்று சர்வசாதாரணமாய் சொல்லிவிட்டு அவளைக் கடந்து சென்றான்.

'இவன் இன்னா... நம்ம பிட்டை நமக்கே ஓட்டிட்டுப் போறான்'என்று யோசித்தவள் அவன் பின்னோடு ஓடி சென்று, "சார்" என்றழைக்க,

அவளைக் கேள்வியாய் பார்த்தான். 

"வூட்டுக்கு போணும்... நான் வேணா பஸ்ல போயிக்கிறேன்" என்றவள் தீர்க்கமாய் உரைக்க,

"பஸ்ல போறியா? நாம எங்க இருக்கோம்னு தெரியுமா?" என்று கேட்க அவள் புரியாமல் விழித்தான்.

"தாம்பரம் தாண்டி செங்கல்பட்டு... ஈச்சாங்கரையில... நீ இப்போ கிளம்பனாலும் பஸ் கிடைச்சு வீட்டுக்குப் போய் சேர விடிஞ்சிரும்" என்றவன் சொல்ல,

"சொல்லாம கொள்ளாம இன்னாத்துக்கு சார் என்னை இம்மா தூரம் கூட்டின்னு வந்த" என்றவள் கோபமாக  கேட்க அவன் பார்வை அவள் மீது தீவிரமாய் பாய்ந்தது.

அவள் உடனே இறங்கிய குரலில், "இல்ல... என்னை பத்தி ஆபீஸ்லயே தெரிஞ்சிதுல... அங்கேயே என்னை நிற்க வைச்சு கேட்டிருக்கலாமே" என்க, அவன் கரத்தைக் கட்டி கொண்டு,

"கேட்டிருப்பேன்.... ஆனா நீ என்னல்லாம் தில்லாலங்கடி வேலை பண்ணியிருக்க... ஏன் என்கிட்ட நடிச்சன்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா?" என்றவன் மேலும்,

"அதான் கணேஷை விட்டு உன் லைசென்ஸ் காப்பியை வெரிஃபை பண்ண சொன்னேன்.. அப்புறம் உன் கூட வந்தானே சுகுமாரு... அவனை விசாரிச்சு நீ சொன்னதுல எவ்வளவு உண்மை பொய்யுன்னு தெரிஞ்சுகிட்டேன்.. அப்புறம்  நீ அந்த அரவிந்த்கிட்ட பேசிட்டிருந்தியா... அதான் எனக்கெதிரா எதாச்சும் உளவு வேலை பார்க்குறியோன்னு கொஞ்சம் டௌட்"

"சார்" என்றவள் அதிர்ச்சியடைய,

அவளைக் கையமர்த்தியவன், "இரு முழுசா சொல்லிடுறேன்... எனக்கு டௌட் வந்தாலும் உன்னை அப்படி என்னால யோசிச்சு பார்க்க முடியல...  அதான் உன் சரித்திரம் பூகோளம்னு எல்லாத்தையும் ஆராய வேண்டியதா போச்சு... நீ கொடுத்த லைசென்ஸ் அன்ட் நீ போட்ட வேஷத்தைத் தவிர உன்கிட்ட வேறெந்த பொய்யும் இல்லன்னு தெரிஞ்சுகிட்டேன்... மத்தபடி உன் அம்மா அப்பா தங்கசிங்களைப் பத்தி நீ சொன்னதெல்லாம் உண்மைதான்" என்க,

அவனை வியப்புக்குறியோடு பார்த்தவள், "இதெல்லாம் எப்போ சார் விசாரிச்சிக்கினே?" என்றாள்.

"ஹ்ம்ம்... கார்ல ஏறுனதும் கணேஷுக்கு மெசெஜ் அனுப்பிட்டேன்... அவன் தாம்பரத்துல லேண்ட் பார்த்து முடிக்கும் போது...  எனக்குக் கால் பண்ணி உன்னைப் பத்தின எல்லா டீடைல்ஸையும்  சொல்லிட்டான்"

"என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கின்னு அப்பாலையும் ஏன் சார் என்னை இங்க கூட்டின்னு வந்த"

தன் கரங்களைக் கட்டி கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

"கிட்டதட்ட இரண்டு மாசமா நீ என்னை முட்டாளாக்கியிருக்கன்னா உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்!... அதுவும் நீ என்கூட இருக்கும் போதெல்லாம் வெரைட்டி வெரைட்டியா ரியாக்ஷன் கொடுப்ப... அப்பவே உன் மேல எனக்கு கொஞ்சம் கொஞ்சம் டௌட்லாம் வந்துச்சு... ஆனா அப்ப கூட நீ ஒரு பொண்ணா இருப்பன்னு சத்தியமா எதிர்பார்க்கல... என்ன நடிப்பு... என்ன தில்லு... அதான் உன் தில்லு எவ்வளவு தூரம்தான் போகுது பார்க்கலாம்னுதான் இங்க கூட்டிட்டு வந்தேன்...  அப்ப கூட நீ மசியல... நான் உன் பேரை சொன்ன பிறகு கூட நீ கல்லு மாதிரி நல்ல திடமா நின்னிட்டிருந்த"

"அய்யோ போ சார்... நான் ரொம்ப பயந்துட்டேன்"

"நீ பயந்திட்ட....?" எகத்தாளமாய் சிரித்தவன்,

"அதனாலதான் என்னை அடிக்க அந்த ஃபிளவர் வாஷை தூக்குனியா? அது இருந்த வெயிட்டுக்கு நீ மட்டும் என் மேல அதைத் தூக்கிப் போட்டிருந்த... நான் பரலோகம் போயிருப்பேன்... நீ ஜெயிலுக்குப் போயிருப்ப"

"அடிக்கணும்னெல்லாம் தூக்கல... ஒரு ஜாக்கிரதைக்கு தான் தூக்கிக்கினேன்"

"இவ்வளவு தைரியம் இருக்கு இல்ல... அப்புறம் எதுக்கு உனக்கு இந்த ஆம்பள வேஷம்...  பொண்ணாவே இருந்து சமாளிக்க வேண்டியதுதானே.. அதை விட்டுட்டு வேண்டாத வேலையெல்லாம் பண்ணி... இதுல நீ பொண்ணுன்னு தெரியாம நான் போய் உன்கிட்ட" என்றவன் சங்கடமாய் தலையிலடித்துக் கொள்ள, அவளும் பதில் பேசாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டாள். அவன் எதைக் குறித்து சங்கடப்படுகிறான் என்று அவளுக்குமே புரிந்தது.

"ஆனா உனக்கு இருக்கு பாரு தில்லு" என்றவன் சொல்லி அவளை ஆழ்ந்து பார்க்க,

"அதெல்லாம் இல்ல சார்... எனக்கு சத்தியமா நீ அதை வாங்கின்னு வர சொன்னதுக்கு எனக்கு அல்லு வுட்றுச்சு" என்றாள்.

அவன் முகத்தில் சொல்லவொண்ணா தவிப்பு சூழ அவமானமாய் முகத்தை திருப்பிக் கொண்டு, "அதான் என்னை பார்க்கிறப்ப எல்லாம் வாய்க்குள்ளேயே திட்டிட்டு இருந்தியா?" என்று கேட்டான்.

"ம்ஹும் இல்ல சார்" என்று உடனடியாய் அவள் மறுப்பு தெரிவிக்க,

"பொய் சொல்லாதே... கேடி... போலி லைசென்ஸ் வைச்சுக்கிட்டு வண்டி ஓட்டிருக்க... நீ என்னைக்காச்சும் போலீஸ்கிட்ட சிக்கியிருக்கணும்... ஏழு எட்டு வருஷம் உள்ளே தள்ளியிருப்பாங்க" என்றான் கோபம் அடங்காமல்!

"என்கிட்ட ஒரிஜினலும் இருக்கு... கணேஷ் சார்கிட்ட கொடுத்த காபிதான் போலி!" என்றவள் தலைகவிழ்ந்தபடி சொல்லவும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"கணேஷுக்கு இருக்கு நாளைக்கு... போலிக்கும் ஒரிஜனலுக்கு கூட வித்தியாசம் தெரியல... இடியட்"  என்றான்.

"பாவம் சார் அவரு... தப்பெல்லாம் என் பேர்லதான்" என்று அவள் பரிந்து பேசவும் அவன் பார்வை மீண்டும் அவள் புறம் கோபமாய் திரும்பியது.

"கோச்சுக்காதீங்க சார்! செஞ்சதெல்லாம் தப்புதான்... இனிமே இந்த மாதிரி தப்பு செய்ய மாட்டேன்... வேலையை விட்டு போன்னு மட்டும் சொல்லிடாதீங்க... அப்பாலிக்கி திரும்பியும் முதலில் இருந்து கண்டவன்கிட்ட எல்லாம் வேலைக்குப் போய் நிக்கணும்" இவ்விதம் சொல்லி அவனை அவள் கெஞ்சலாய் பார்க்க,

"அப்போ டிரைவர் வேலையையே கன்டின்யூ பண்ண போறியா?" என்று கேட்டு அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான்.

"ஏன் சார்? பொண்ணுன்னா... டிரைவர் வேலை பார்க்கக் கூடாதா?"

"அத பத்தி இல்ல... நீ எதோ பிசிஏ படிச்சிட்டிருந்தியாமே... உங்க அம்மா டெத்துக்கப்புறம் படிப்பை நிறுத்திட்டேன்னு கேள்விப்பட்டேன்... பேசாம நீ படிப்பை கன்டினியூ பண்ணு... உன் படிப்புக்கு ஆகுற செலவை நான் பாத்துக்கிறேன்" என்றதும் அவளுக்குப் புரையேறிவிட்டது.

"அய்யோ சார்! எனக்கு படிப்பெல்லாம் சுத்தமா வராது... நானே எங்க அம்மாவோட விளக்கமாத்து அடிக்கு பயந்துக்கின்னுதான் படிச்சேன்... படிச்சேன்னு சொல்ல முடியாது... படிக்கிற மாதிரி நடிச்சேன்" என்று சொல்ல அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

"அப்போ உனக்கு படிப்பை விட நடிப்பு நல்லா வரும்னு சொல்லு"

"இப்ப சொன்னீங்களே அது வாஸ்தவம்" என்றவள் சொல்ல மீண்டும் சாரதி சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் நடக்க,

"சார் சார் வூட்டுக்கு போணும்னு சொன்னேனே" என்றாள் மீண்டும்!

"நானும் காலையிலனு சொன்னேன் இல்ல... ஃபோன் பண்ணி சொல்லிடு" என்றவன் அலட்சியமாய் உரைத்துவிட்டு படியேறி செல்லப் போனவன்,

அவள் புறம் திரும்பி, "ஆமா! கேட்கணும்னு நினைச்சேன்... அரவிந்துக்கு உன்னை எப்படித் தெரியும்?" என்றான்.

"அவன் ஒரு அரை லூசு சார்... ஒரு தடவை அவங்க காலேஜுக்கு ஒரு காம்பட்டீஷனுக்கு போயிக்கினேன்... அங்கே என்னைப் பார்த்தவன்தான்... அன்னையில இருந்து என் பின்னாடியே சுத்தினிருக்கான்... லூசு" என்றவள் சொல்லச் சொல்ல அவன் தீவிரமான யோசனைக்குள் நின்றான்.

'அப்போ சைமன் விசாரிச்சு சொன்ன அந்த லோக்கல் பொண்ணு இவளா?!' என்ற எண்ணம்தான் அவன் மனதிற்குள் சுழன்றது.

"இன்னா சார் யோசிக்கிற?" என்றவள் அவன் முகம்பாவனையை புரிந்து விசாரிக்கவும் அவளைக் குழப்பமாய் ஏறிட்டவன்,

"அதில்ல.. அவன் லவ்வை நீ ஏன் ஒத்துக்கல?" என்று ஆழமாய் அவளைப் பார்த்தபடி வினவினான்.

"அய்யோ சார்! லவ் கிவ்வுன்னா எங்கம்மா என்னை புளந்து கட்டிடும்... ஒரு தடவை இந்த எருமை லவ்வை சொல்றேனு என்னை எங்க அம்மாகிட்ட மாட்டு வுட்டு போயிட்டான்... செம அடி... உதடு கீஞ்சி ரத்தமெல்லாம் வந்திருச்சு"

அவள் சொல்வதை முறுவலித்துக் கேட்டு கொண்டிருந்தவன் படிக்கெட்டில் ஏறிக் கொண்டே, "இப்ப தான் உங்க அம்மா இல்லையே... அப்புறம் என்ன? பேசாம அவனுக்கு ஒகே சொல்லிடு... உன் லைஃபும் ஸெட்டில்ட்" என்றான்.

"அம்மா இல்லதான்... ஆனா அம்மா என்கிட்ட சொல்லி இருக்கு... பணக்கார பசங்களை எல்லாம் நம்பாதே... லவ் பண்றேன்னு ஆரம்பிச்சு காரியத்தை முடிச்சிக்குன்னு கழட்டி வுட்டிருவானுங்க" என்றவள் சொல்லிக் கொண்டே அவன் பின்னோடு நடக்க,

அவள் புறம் திரும்பி நின்றவன் "நீ தப்பா புரிஞ்சிட்டிருக்க... அரவிந்த் அப்படிப்பட்ட ஆளு இல்ல... அவன் உன்னை சின்ஸியராதான் லவ் பண்றான்" என்றான்.

"போ சார்... எனக்கு அவனைக் கண்டாலே பிடிக்கல... கடுப்பாவுது"

"லூசு மாதிரி பேசாதே... அவன் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா உனக்கு... எனக்கிருக்க மாதிரி பத்து மடங்கு சொத்து... மங்களம் சில்க்ஸ் ஓனரோட ஒரே பையன்"

அவள் முகம் அதிர்ச்சியும் ஆச்சர்யத்தையும் மாறி மாறி பிரதிபலித்த அதே நேரம், "ஆமா சார்! செம பெரிய கடை... அன்னைக்கு டிவில பார்த்தேன்... பத்திக்கின்னு எரிஞ்சிட்டிருந்துது... அப்பவே கேட்கணும்னு நினைச்சேன்... அந்த கடை எப்படி சார் பத்திக்கிச்சு?" என்றவள் அந்த சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்க, அவன் தன் எண்ணங்களை மறைத்துக் கொண்டு,

"என்னை கேட்டா... எனக்கெப்படி தெரியும்?" என்றான். அவள் மீண்டும் யோசனைக்குறியோடு,

"அந்த அரவிந்தோட அப்பாதான் அந்த கடைக்கு ஒனரா?!" அவள் வியப்புக்குறியோடு கேட்டாள்.

"பின்ன... இது தெரியாம நீ பாட்டுக்கு அவனை வேண்டாங்கிற".

"இப்பவும் எனக்கு அவன் வேண்டாம்தான் சார்" என்று அவள் சொல்லவும் சாரதி அதிசயத்துப் பார்த்தான்.

அவள் மேலும், "அவன் எவ்வளவு பெரிய ஆளா கூட இருந்தாதான்  என்ன சார்? எனக்கு அவனைப் பிடிக்க வோணாமா... அப்படியே அவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என் தங்கச்சிங்களை அவன் கூட வைச்சு பார்த்துக்குவான்னு எனக்கு நம்பிக்கையில்ல" என்றவள் தீர்க்கமாய் சொல்லி முடிக்க அவன் வியப்புற்றான்.

அவளோ அவன் பார்வையைப் பார்த்து துணுக்குற்று, "இன்னாத்துக்கு சார் என்னை அப்படி பார்க்குற?" என்க,

அவன் எளக்காரமாய் புன்னகையித்து, "இப்படியெல்லாம் நீ யோசிச்சிட்டிருந்த... ரொம்ப கஷ்டம்" என்றான்.

"கஷ்டபட்டாலும் பரவாயில்ல சார்... எவன் என் தங்கச்சிங்கள பொண்ணு மாதிரி பாத்துக்குவான்னு நம்பிக்கை வருதோ அவனைதான் நான் கட்டிக்குவேன்... இல்லன்னா நான் கல்யாணமே பண்ணிக்கமாட்டேன்" என்றவள் சொல்லவும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

"நீ இப்படி இருந்தன்னா... கடைசியா சொன்ன பார்த்தியா... அதான் நடக்கும்" என்றான். அவளோ அவன் கவனிக்காதது போது உதட்டை சுளித்துக் கொண்டுவிட, அவனோ படியேறி தன் அறைக்கு செல்லப் பார்த்தான்.

மீண்டும், "சார்"  என்றவள் அழைக்க,

"என்ன?" என்று திரும்பினான்.

"வூட்டுக்கு போவே முடியாதா?" என்றவள் கேட்கவும் அவனின் முறைப்பான பார்வைதான் அவளுக்குப் பதிலாய் வந்தது.

அவளோ அதன் பின் தங்கைகளைப் பற்றிய கவலையோடு தன் வீட்டருகில் இருந்த கடையின் தொலைபேசிக்கு அழைக்க, அது அடித்துக் கொண்டே இருந்தது. யாரும் ஏற்கவில்லை. வெகுநேரம் முயற்சித்து அலுத்துப் போனவள் சுகுமாருக்கு அழைக்க, அவனும்  வேலையில் இருப்பதாக பதிலளித்தான்.

வீட்டிற்கு சென்றதும் சுகுமாரை அவளின் பேசிக்கு அழைக்கச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு மனதில் ஒருவித கலக்கம் சூழ்ந்து கொண்டது. 

அதை சாரதியிடம் தெரிவிக்கலாம் என்று  எண்ணியவள் அவன் லேப்டாப்பில் வேலையில் மூழ்கியிருப்பதைப் பார்த்து தயக்கத்தோடு மௌனமாகிவிட்டாள்.

இரவு உணவு முடிந்ததும் அவளை படுத்துக் கொள்ள சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குள் புகுந்துவிட, அவள் சோபாவில் அமர்ந்தபடி பேசியை அருகிலிருந்த மேஜை மீது வைத்துவிட்டு சுகுமார் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தாள்.

"சே! தங்கச்சிங்களுக்கு ஒரு ஃபோன் வாங்கிக் கொடுத்திருந்தா இந்த தொல்லையே இல்ல... வீட்டுக்கு போனதும் முதல் வேலையா ஒரு ஃபோன் வாங்கணும்"  இவ்வாறாக தனக்குத் தானே புலம்பிக் கொண்டவள் நேரம் கடந்து செல்ல கண்களை சுழற்றிக் கொண்டு அப்படியே சோபாவிலிருந்த தலகாணியை தலைக்குக் கொடுத்துவிட்டு உறங்கிப் போனாள்.

சாரதியோ மும்மரமாய் வேலை செய்து கொண்டே அருகிலிருந்த பாட்டிலில் தண்ணீரைப் பருக எத்தனிக்க, அது காலியாக இருக்கவும் வெளியே எழுந்து வந்தான்.

அங்கே வீராவின் கைப்பேசி மேஜை மீது அலறிக் கொண்டிருந்தது. ஆனால் அவளோ அதனை உணராதவளாய் ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்தாள்.

யோசனையாய் பேசியையும்  அவளையும் மாறி மாறி பார்த்தவன்,

பின் அவளைத் தொந்தரவு செய்யாமல் அந்த அழைப்பை தானே ஏற்றுக் காதில் வைத்தான்.

"ஃபோனை எடுக்க இவ்வளவு நேரமாடி உனக்கு... என் தூக்கத்தைக் கெடுத்துட்டு நீ மட்டும் நிம்மதியா தூங்குற போல" ஆவேசமாய் ஒரு ஆண் குரல் படபடவெனப் பொறிய அது அரவிந்தின் குரல் என்பதை சாரதி மூளை கேட்ட மாத்திரத்தில் கண்டறிந்து கொண்டது.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content