You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 32

Quote

32

நல்லவனா கெட்டவனா?

அவர்கள் இருவரும் ரிஸார்ட்டில் இருந்து புறப்பட்ட சமயம் கார் பஞ்சர். ஏற்கனவே நேரமாகிவிட்டதென்று கடுப்பில் அவனிருக்க, அந்த நேரம் பார்த்து அவன் கார் வேறு அவனைப் பழிவாங்கி விட்டது.

வீரா காரின் மீது சாய்வாய் நின்று கொண்டிருக்க, சாரதியோ தீவிரமாய் ஸ்டெப்னி மாற்றும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் புலம்பிக் கொண்டே!

 “ச்சே! என்ன நேரமோ? ஆபீசுக்கு வேற லேட்டாகுது” அவன் இவ்விதம் சொன்ன மறுகணமே அவள்,

“வீட்ல கம்னு இருந்திருந்தா... இப்படியெல்லாம் நடந்திருக்காதுல்ல... ஒழுங்கா டைமுக்கு ஆபீஸாச்சும் போயிருக்கலாம்” என்று குத்தலாய் உரைத்தாள்.

“பேசாதடி... எல்லாம் உன்னாலதான்... உன்னைய யாருடி என் கூட கிளம்பி வரச் சொன்னது”

“பார்றா! சும்மா போறவள... வான்னு கூப்பிட்டுட்டு... இப்போ யார் வர சொன்னதுன்னு கேட்குற... நல்ல கதையா இருக்கே”

“நான் கூப்பிட்டா... நீ உடனே கிளம்பி என் கூட வந்துடுவியா?”

“நீ புருஷனா கூப்பிட்டிருந்தா சத்தியமா வந்திருக்க மாட்டேன்... ஆனா நீ என் முதலாளியா கூப்பிட்டியா... அதான் கிளம்பி வந்துட்டேன்” அவள் எகத்தாளமாய் பதிலளிக்க,

“மேடம் அப்போ டிரைவராத்தானே வந்தீங்க... அப்போ இந்த வேலையெல்லாம் நீங்கதான் செய்யணும்” என்று சொல்லி நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“செஞ்சுட்டா போச்சு... ஆனா என்ன? ஒரு ரெண்டு மூணு மணி நேரமாகும்... பரவாயில்லையா சார்” என்றவள் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல,

அவன் அதிரிச்சியோடும் கோபத்தோடும் அவளைப் பார்க்க,

அவள் மேலும், “நீ வேணா உள்ள போய் உட்காரு... நான் பண்ணிட்டு கூப்பிடுறேன்”  என்றாள்.

“வேணாம் தாயே! நானே பண்ணிக்கிறேன்... நீ உன் திருவாயை மூடிட்டு கம்னு நில்லு... போதும்” என்றான்.

அவன் என்னத்தான் அவளிடம் வாய்சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், அவன் செய்யும் வேலையிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தான். எந்தவித தடுமாற்றமுமின்றி அவன் துரிதமாய் அந்த வேலையைச்  செய்து முடிக்க,

அப்போது அவர்களைக் கடந்து சென்ற இருவர், “இது எதோ புது பீஸ் போல... ஆள் செமயா இருக்கு”  என்று வீராவைப் பார்த்து உரைத்தனர்.

சாரதியின் காதில் அவர்கள் வார்த்தைகள் விழவும் அவன் மறுநொடியே அவர்களைச் சீற்றமாய்  திரும்பிப் பார்த்து முறைக்க, அவன் பார்வையை உணர்ந்து அந்த இருவரும் விரைவாக அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

வீரா அசட்டையான புன்னகையோடு,   “அவனுங்கள ஏன்யா முறைக்கிற... உன் லட்சணத்ததானே சொல்லிட்டுப் போறானுங்க” என்றாள்.

சாரதி கோபம் கொப்பளிக்க அவளைப் பார்க்கவும்,  “இப்ப ஏன் என்னை முறைக்கிற? அவனவன் ஒழுக்கமா இருந்தாலே என்ன ரேட்டுன்னு கேட்பான்... இதுல நான் வேற உன் கூட வந்திருக்கேன்... இன்னமும் பேசுவானுங்க இதுக்கு மேலையும் பேசுவானுங்க... அதுவுமில்லாம அவனுங்களுக்கு என்ன தெரியுமா?  நம்ம கையெழுத்துப் போட்டு கல்யாணம் பண்ணது” என்று சாதாரணமாய் அவள் சொல்லவும்,

கோபத்தில் அவன் முகம் சிவக்க, விழிகள் அனலைக் கக்கியது. ஆனால் அவளோ இதற்கெல்லாம் தான் அசரமாட்டேன் என்பது போல்,

“சாருக்கு பிபி தாறு மாறா ஏறுதோ... ப்ச்... இதுக்குதான்... நான் அப்பவே சொன்னேன்... நீதான் கேட்காம பிடிவாதமா என்னைக் கல்யாணம் பண்ணக்கிட்ட” என்றாள்.

 “ஓ! இதான் நோண்டி நொங்கெடுக்குறதாடி என் பொண்டாட்டி?” சாரதி உடனடியாய் தன் கோபத்தை மறைத்து அவளைப் பார்த்து  புன்னகை ததும்ப கேட்டான்.

அவள் குழப்பமாய் அவன் முகமாற்றத்தைப் பார்க்க அவனே மேலும்,

 “நீ செய்றத செய் பொண்டாட்டி... ஆனா நான் பதிலுக்கு பதில் திருப்பி செஞ்சேன்னா... நீ என்ன ஆவன்னு கொஞ்சம் யோசிச்சிட்டு செய்” என்றவன் பார்வை அவளை ஆழமாய் ஊடுருவ, அவனின் கூரிய விழிகளின் தாக்குதலில் அவள் கொஞ்சம் அரண்டுதான் போனாள்.

‘சொன்ன மாதிரி செஞ்சிடுவானோ?! வீரா கொஞ்சம் அடக்கிவாசி...  ஆள் செம காண்டல இருக்கான்’ என்றவள் தனக்குத் தானே எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டாள். அதேநேரம் அவன் பார்வையின் தீவிரத்தில் சற்றே நிலைகுலைந்தவள்,

‘இன்னா  கண்ணுடா?... கொஞ்ச நேரம் பார்த்தாலே நமக்கு இப்படி கிறுகிறுன்னு வருது... வீரா ஸ்டெடி’ என்று அவள் சொல்லிக் கொள்ள,

அப்போதும் அவள் பேச்சைக் கேட்காமல் அவள் உள்ளம் அவனிடத்தில் மொத்தமாய்  நழுவிக் கொண்டிருந்தது.  அதனைப் பிடித்து நிறுத்திவைக்க அவள் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்க

 நல்ல வேளையாக அப்போது பார்த்து ஒரு குரல், “சார்” என்று சாரதியை பின்னோடிருந்து அழைத்து அவன் கவனத்தை திசைத் திருப்பியது.                

 ‘தப்பிச்சேன்டா சாமி’ என்றவள் நிம்மதி பெருமூச்செறிய, சாரதி அந்த நபரின் புறம் திரும்பி நின்றான்.

அவரோ தயக்கத்தோடு,  “சாரி சார்... நான்தான் உங்க காரை பஞ்சர் பண்ண சொன்னேன்” என்று தெரிவிக்க சாரதியின் புருவங்கள் நெறிந்தன.

வீராவோ, ‘யாருடா இவன்... ? சிங்கத்தோட வாயிலேயே வந்து தலையை வுடுறான்... ஏற்கனவே கடுப்புல இருக்கான்... அதே கடுப்போடு இவன் மேல பாஞ்சி பிராண்ட போறான் போலயே” என்று எண்ணிக் கொண்டே அந்த நபரை எட்டிப் பார்த்தாள்.

ஆனால் சாரதி கோபம் கொள்ளாமல் அவர் முகத்தை ஆழ்ந்து பார்த்து யோசிக்க அந்த நபர் மேலும், “நான் வர்றதுக்குள்ள நீங்க போயிட்டீங்கன்னா... அதான் வேற வழி தெரியல” என்று அவர் மேலும் தன்னிலையை எடுத்துரைக்க,

“ஏன் என்னை நீங்க பார்க்கணும்?” என்று சாரதி அந்த நபரைப் பார்த்து பொறுமையாகவே வினவ,

 ‘அவன் பஞ்சர் பண்ணிட்டேன்னு சொல்றான்... இவன் என்னடான்னா ஒரு பஞ்ச் கூட பண்ணாம பவ்யமா யாருன்னு கேட்கிறான்’ என்று  வீரா ஆச்சர்யமாய் அவர்கள் இருவரையும்  கவனித்துக்  கொண்டிருந்தாள்.

அந்த நபர் ஏதோ சொல்ல எத்தனிப்பதற்கு முன்னதாக சாரதி முந்திக்கொண்டு, “நீங்க அந்த லாயர் தானே?!” என்று கேட்டான்.

“ஆமா சார்... உங்களை வேற எங்கேயும் பார்க்க முடியல” என்று அந்த நபர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாரதியின் கோபம் சரசரவென ஏறி உச்ச நிலையை அடைந்திருக்க,

“ஹலோ மிஸ்டர்... ஒரு தடவை சொன்னா புரியாதா... சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டு... புரிஞ்சுக்கோங்க...  நான் எவளையும் பார்க்க விரும்பல” என்று இடம் பொருள் ஏவல் எதுவும் யோசிக்காமல் கத்திவிட்டான். ‘எவ அவ?’ என்று வீரா யோசிக்கும் போது,

“என்னதான் இருந்தாலும் அவங்க உங்களுக்கு அம்மா” என்று அந்த நபர் உரைக்க, “அம்மா வா” வியப்புற்று வாயைப் பிளந்தாள் வீரா.

“எவளும் எனக்கு அம்மாவும் இல்ல... ஒண்ணும் இல்ல... இந்த மாதிரியெல்லாம் லூசுத்தனமா பண்ணி... இனிமே என்னை மீட் பண்ண எதாச்சும் முயற்சி பண்ணீங்க... என் ரியாக்க்ஷன் வேற மாதிரி இருக்கும்... சொல்லிட்டேன்” என்று அழுத்தமாய் எச்சரித்துவிட்டு தன காரின் ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர,

“நான் ஒட்டுறேன்” என்றாள் வீரா.

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்... ஆல்ரெடி லேட்டாயிடுச்சு... வந்து உட்காரு” என்று சொல்லி அந்த நபர் பேசுவதை துளியளவும் காதில் வாங்காமல் சாரதி காரை இயக்கினான்.

“சார் சார் ஒரே நிமிஷம்... மேடம் அவங்க சொத்தையெல்லாம் உங்க பேர்ல மாத்தணும்னுதான் உங்கள பார்க்கணும்னே சொல்றாங்க” என்று அந்த நபர் சொல்ல, அப்போது காரை ஸ்டார்ட்  செய்த சாரதி பட்டென அதனை அணைத்துவிட்டு அந்த நபரை அதிர்ச்சியாய் பார்த்தான்.

சாரதி முகவாயைத் தடவி யோசித்தபடி அவரைக் குழப்பமாய் பார்க்க, அவர் உடனே தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து நீட்ட  அவனும் பதிலேதும் பேசாமல் அதனை பெற்றுக் கொண்டான்.

‘அடபாவி... சொத்துன்னதும் பயபுள்ள ஆஃப் ஆயிடுச்சு’ என்று அவள் எண்ணிக் கொள்ள, அப்போது சாரதியோ காரை இயக்கியபிடி தீவிரமான சிந்தனையில்  மூழ்கிவிட்டான்.

வீரா அப்போது பதட்டமாய் காருக்குள் எதையோ தேடியபடி சுற்றும் முற்றும் பார்க்க  சாரதி துணுக்குற்று, “என்ன? எதையாச்சும் மிஸ் பண்ணிட்டியா? வண்டியெல்லாம் திருப்ப முடியாது... டைம் ஆயிடுச்சு” என்றான்.

“அதில்ல... இங்க சாரதி சாரதின்னு ஒரு மானஸ்தன் இருந்தான்... அவனைத்தான் தேடினிகீறேன்... நீ பார்த்த?!” என்று அவனைக் கேள்விக்குறியாய் பார்த்தாள்.

“உனக்கு கொழுப்பு கொஞ்ச நஞ்சம் இல்லடி... உடம்பு முழுக்க இருக்கு”

“பின்ன இன்னாய்யா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு அம்மா இல்ல ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டு... சொத்துனதும் படார்ன்னு ஆஃப் ஆயிட்ட... என்ன மாதிரி ஆளுய்யா நீ?” என்றவள் கேட்க,

அவன் அவள் சொல்வதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளமால் புன்னகை செய்தான்.

“தானா வர்றதை எவனாச்சும் வேணான்னு சொல்வானா?”

“அந்த அம்மா உன்னை சின்ன வயசுலையே வுட்டுட்டு போயிட்டு...  இன்னைக்கு வந்து சொத்து தர்றேன்னா... நீ ஏன்யா அத வாங்கணும்... என்னவோ உன்கிட்ட பணமே இல்லாத மாதிரி அல்பமா நடந்துகீற” என்றவள் கேட்க,

“என்ன பேசுற? பணமெல்லாம் எவ்ளோ வந்தாலும் பத்தாது... அன்ட் சின்ன வயசுல நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம்...  இந்த சொத்து அந்த அம்மா எனக்கு கொடுக்குற கம்பன்சேஷனா இருந்துட்டுப்  போட்டுமே” என்றான்.

“உனக்கு எல்லாமே பணம்தானா... இந்த வெட்கம் மானம் ரோஷம் இதெல்லாம் இல்லையாய்யா“ அவனை படுக்கேவலமாய் பார்த்து அந்தக் கேள்வியை அவள் கேட்க  அவன் சத்தமாய் சிரித்துவிட்டு,

“அதெல்லாம் வைச்சுக்கிட்டு... ஹ்ம்ம்... தம்புடிக்கு பிரயோஜனம் இல்ல... நமக்கு காரியம் ஆகணும்னா காலையும் பிடிக்கணும்... சம் டைம்ஸ் கழுத்தையும் பிடிக்கணும்... அப்படிதான் இருப்பான்... பக்கா பிசினஸ்மேன் “ என்றவன் சொல்ல அவள் முகத்தை சுளித்துக் கொண்டாள்.

“அப்ப இந்த தன்மானம்... இதெல்லாம் நீ அடமானம் வைச்சுட்டேன்னு சொல்லு”

“சேச்சே! அதெல்லாம் நான் வைச்சுக்குறதே இல்ல” என்று சாதாரணமாய் அவன் பதிலளிக்க,

 “அப்போ பணத்துக்காக எத வேணாலும் பண்ணலாம்னு சொல்லுவியா?”  என்று அவனைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள் .

“எஸ்” என்று கூலாக பதிலளித்து அவன் தோள்களைக் குலுக்க,

“அப்போ  பிராத்தல் கூட பண்ணலாம்... அப்படிதானே?!” என்று தீவிரமாய் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“அதெல்லாம் செய்றவங்க சௌகரியத்தைப்  பொறுத்தது...  நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்...இன்னும் கேட்டா இன்னைக்கு அந்த தொழில் செஞ்சவங்கதான் நம்ம நாட்டுல பெரும்புள்ளிங்க” என்றான்.

அவன் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனவளுக்கு அதற்கு மேல் அவனிடம் விவாதம் செய்ய விருப்பமில்லை. அவன் எண்ணத்தை மாற்ற முடியும் என்றும் தோன்றவில்லை. அவன் முகத்தைக் கூட பார்க்க விருப்பமின்றி அசூயையாய் உணர்ந்தவள் தன்  பார்வையை அவனிடமிருந்து வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

அதேநேரம் தாங்க முடியாத கடுப்போடு, ‘ச்சே! இவனை போய் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லவன்னு நினைச்சேன் பாரு... என் மூளைய பினாயில் ஊத்திதான் கழுவணும்’ என்று எண்ணி புலம்பிக் கொண்டாள்.

நாட்கள் நகர்ந்து செல்ல அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வியும் குழப்பமும் அவளுக்குள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனதென்றே சொல்ல வேண்டும்.

முக்கியமாய் அவன் அவள் தங்கைகளோடு உரையாடும்போது மட்டும், ‘ரொம்ப நல்லவன்’ என்று தோன்றுமளவுக்காய் அவன் நடந்து கொண்டான்.

பலநேரங்களில் ‘அவனா இவன்?’ என்று அவளை வியக்கவும் வைத்தான். அன்று நதியாவும் அமலாவும் பள்ளிக்கு பரபரப்பாய் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நதியா கடிகரத்தைப் பார்த்துவிட்டு, “போச்சு! பஸ்சு போயிருக்கும்... எல்லாம் இந்த அம்முவாலதான்... தூங்கு மூஞ்சி” என்று உரைக்க,

“பாரு க்கா... இவ லேட் பண்ணிட்டு என் மேல பழி போடுறா?” என்று அம்மு வீராவிடம் புகார் சொல்ல,

“ரெண்டு பேருமே சரியில்ல... இன்னைக்கு ஒரு நாள் நடந்து போங்க... அப்பத்தான் புத்திவரும்” என்றாள்.

“அக்கா” என்று நதியாவும் அமலாவும் வீராவைத் தவிப்போடு  பார்க்க,

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நான் டிராப் பண்றேன்... வெயிட் பண்ணுங்க” என்று சாரதி சொல்லிக் கொண்டே படிகெட்டில் இறங்கி வந்தான்.

“தேவையில்ல... நடந்து போங்கடி ... அப்பத்தான் ரெண்டு பேருக்கும் புத்திவரும்... அடுத்த தடவை பஸ்சை மிஸ் பண்ண மாட்டீங்க” என்றவள்  அவனை முறைத்தபடி தன் தங்கைகளிடம் சொல்ல,

 “நீ கொஞ்சம் அடங்குறியா... நடந்தெல்லாம் போக வேண்டாம்... நீங்க வெயிட் பண்ணுங்க... நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவை உண்ண ஆரம்பிக்க  வீராவோ பார்வையாலேயே தங்கைகள் இருவரையும் வறுத்தெடுத்தாள்.

அவர்களோ, “இன்னைக்கு ஒரே நாளைக்கு மட்டும் க்கா ... நாளைல இருந்து இப்படி பண்ண மாட்டோம்... சீக்கிரம் எழுந்து கிளம்பிடுறோம்” என்று அவளிடம் கெஞ்ச,

அவர்கள் மெதுவாகவே சொன்னாலும் சாரதி காதில் அந்த வார்த்தைகள் விழ உணவை உண்டு முடித்து எழுந்தவன்,

“இனிமே பஸ்சுக்காக எல்லாம் சீக்கிரம் எழுந்து புறப்படவேண்டாம்... நான் ரெண்டு பேருக்கும் சைக்கிள் வாங்கித் தர்றேன்” என்று சொல்லிக்கொண்டே அவர்கள் முன்னே வந்து நிற்க,

“ஐ!!” என்று சந்தோஷத்தில் பிரகாசித்த இரு சகோதரிகளின் முகமும் வீராவின் கண்ணசைவைப் பார்த்த மாத்திரத்தில் ஸ்வரம் இறங்கி,

“ஐ..யோ... அதெல்லாம் வேணாம் மாமா” என்று மாற்றிப் பேசினர்.

“நான் வாங்கித் தருவேன்” என்று தீர்க்கமாய் உரைத்தவன் வீராவைப் பார்த்து விரல்களை அசைத்து சமிஞ்சையால் ஏதோ உரைத்தான்.

அவள் அவன் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியாமல் திருதிருவென்று விழித்தபடி, “எனக்கு ஒண்ணும் புரியல” என்றுசொல்ல,

சாரதி உடனே, “உங்க அக்காவுக்கு கணக்குப் பாடமே சுத்தமா வாராது போல” என்று கேலியாய் அவள் தங்கைகளிடம் சொல்லிச் சிரித்தான்.

“அதெல்லாம் அக்காவுக்கு... எந்த பாடமுமே சுத்தமா வராது... ரொம்ப குஷ்டம்” என்று அமலா சொல்ல அவர்கள் மூவரும் மீண்டும்  வீராவைப் பார்த்து எள்ளிநகைத்தனர் .

வீரா கோபமாய் தங்கைகளை முறைக்க அவர்கள் இருவரும் பட்டென தங்கள் சிரிப்பை விழுங்க,

சாரதி உடனே, “இப்ப எதுக்கு அவங்கள முறைக்கிற... உண்மையதானே சொன்னாங்க” என்று கேட்டான்.

அவள் கோபம் மேலும் அதிகரிக்க, “அம்மு நதி... உங்க ரெண்டு பேருக்கும் டைமாச்சு... சொல்லிட்டேன்” என்று அவள் பார்வையை  தங்கைகளிடம் திருப்பிக் கொண்டாள்.

அவன் தன் வாட்சைப் பார்த்துவிட்டு, “போலாம்” என்க,

அவர்கள் இருவரும்  வீராவிடம் விடைபெற்றுக் கொண்டுவிட்டு முன்னே சென்றனர். சாரதி அவர்கள் செல்வதைப் பார்த்துவிட்டு,

“ஒரு சின்ன கணக்கு கூட புரியாதா உனக்கு?” என்று அவளைப் பார்த்து கேட்டான்.

 “இன்னா கணக்குன்னு புரியிற மாதிரி சொன்னா புரியும்... சும்மா காத்துலேயே படம் வரைஞ்சா... எவனுக்குப் புரியுமா?”

“புரியிற மாதிரிதானே... சொல்லிட்டா போச்சு” என்றவன் அவள் காதோரம் நெருங்கினான்.

அவளின் இதயத் துடிப்பு சட்டென்று உயர அவனோ ஹஸ்கி குரலில் மெலிதாக,

“இன்னையோட அந்த மூணு நாள் முடிஞ்சு ரெண்டு நாள் ஆயிடுச்சு... அப்போ இன்னைக்கு அஞ்சு” என்றவன்  நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்து,

“ஸோ...  ஆல் இஸ் வெல்”  என்று ராகமாய் சொல்லி விஷமமாய் அவளைப் பார்த்து புன்னகத்துவிட்டு சென்றான்.  அவளோ பேயறைந்ததைப் போல ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட  அவனோ அப்போது தங்கைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.

அவளோ சலிப்போடு சோபாவில் அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டு,  ‘இவன் அடங்கவே மாட்டான் போலயே... கோட்டையெல்லாம் அழிச்சிட்டு திருப்பியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறான்...கடவுளே?! இன்னைக்கு எப்படி சமாளிக்க’ என்று பீதி கலந்த உணர்வோடு யோசித்து யோசித்து பித்து பிடித்த நிலையில் இருந்தாள்.

அப்போது மேஜையில் இருந்த தொலைப்பேசி ஒலித்து அவள் அச்சத்தை அதிகரிக்க, அவனாகத்தான் இருக்கும் என்று கணித்து உடனடியாய் சமையலறையில் இருந்த முத்துவை அழைத்து அதனை ஏற்க சொன்னாள்.

அதோடு அவன் தன்னை பற்றிக் கேட்டால் குளிக்கப் போயிருப்பதாக பொய்யுரைக்க சொல்ல,

“ஐயோ! சார் திட்டுவாரும்மா” என்றான் அவன்.

“ப்ச்... அதெல்லாம் அவருக்குத் தெரியாது ண்ணா... நீங்க சும்மா சொல்லுங்க” என்றாள்.

பின் முத்து அந்த அழைப்பை ஏற்று பேசிவிட்டு வீராவிடம்,  “சார் இல்ல... யாரோ உங்க ஃப்ரெண்ட் மலராம்மா” என்க,

அவள் முகம் பளிச்சென்று பிரகாசிக்க முத்துவிடம் இருந்து ரிசீவரை பெற்றுக் கொண்டு பேசினாள்.

“ஏ! மலரு” என்றவள் ஆர்வமாய் அழைக்க,

“எங்க இருக்க வீரா நீ? உன் ஏரியால இருக்கிறவங்க எல்லாம் உன்னைப் பத்தி இன்னானுவோ சொல்றாங்க...  காது கொடுத்து கேட்க  முடியல... அதுவும்  நீ எவன் கூடவோ போயிட்ட... அப்படி இப்படின்னு” என்றவள் தொடர்ச்சியாய் பேசி முடித்தாள்.

வீரா சிரித்துவிட்டு, “அவைங்க சொல்றதெல்லாம் பெருசா எடுத்துக்காத... லூசு பசங்க... அப்படித்தான் எதனாச்சும் உளருவானுங்க” என்க,

“அதெல்லாம் சரி... இப்ப நீ எங்க இருக்க?” என்று மலர் மீண்டும் அழுத்தமாய் அதே கேள்வியை கேட்டாள்.

“அது... நான்” என்று வீரா நடந்தவற்றை எப்படி சொல்வது என தடுமாறவும்,

“என்னாச்சு வீரா? உண்மைய சொல்லு... எதாச்சும் பிரச்சனையா?” என்று மலர் வினவச் சிலநொடிகள் வீரா அப்படியே மௌனமாகிவிட்டாள்.

“வீரா” என்று மீண்டும் மலர் அழைக்க, “ஆமா... உனக்கு எப்படி டீ  இந்த நம்பர் தெரியும்?” என்று வீரா பதில் கேள்வி எழுப்பினாள்.

“அது அது வந்து... உன் ஏரியால” என்று மலர் பதிலளிக்க முடியாமல் திணற, “சுகுமார் கிட்ட இருந்து வாங்கினியோ?!” என்றாள் வீரா.

“ஹ்ம்ம்... ஆமா ஆமா... அவனேதான்... அவன்  பேர மறந்துட்டேன்”

“நீ பொய் சொல்ற... சுகுமாருக்கு இந்த நம்பர் தெரியாது”

மலர் குரல் வெளியே வராமல் திக்கி நின்றது.

 “யார் மலர்  உன்னை இப்படியெல்லாம் என்கிட்ட கேட்க சொன்னது?” என்று வீரா அடுத்த கேள்வி கேட்க,

“யாரும் இல்லயே... நான்தான் கேட்டேன்” என்று மலர் பதட்டமாய் மறுதலித்தாள்.

“பொய்... உனக்கு இப்படியெல்லாம் பேச வராது”

“ப்ச் இல்லடி... நான்தான்”

“அந்த அரவிந்த் லூசு பக்கத்துல இருக்கானோ?” வீரா தீர்க்கமாய் கேட்டாள்.

“ஏ! வீரமாகாளி” என்று அரவிந்த் எதிர்புறத்தில் சத்தமிட,

“செருப்பு பிஞ்சிடும்... வீரமாக்காளின்னு கூப்பிட்டன்னா”  என்று பதிலுக்கு வீராவும் குரலை உயர்த்தினாள்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content